
தமிழர்கள் நட்டாற்றில் ஏதிலிகளாகத் தனித்துவிடப்பட்டுப் பதினைந்து ஆண்டுகள் கடந்தாயிற்று. இன்னமும் வெவ்வேறு வடிவங்களிற் தொடரும் தமிழர்களின் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளானவை தமிழர்தேசத்தின் நிலவுகையை வலுக்குன்றச் செய்வதில் தொடர்ச்சியான வெற்றிகளையீட்டி வருகின்றன. தமிழர்தேச அரசமைக்கும் உரிமைப் போராட்டமானது, அதற்குத் தலைமையேற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவிற்குப் பின்னர் முன்கொண்டு செல்லப்படாமல் முடங்கிக் கிடக்கும் நிலையில், தமிழர் தம்மை ஒரு தேசமாகத் தக்கவைத்துக்கொள்ளவியலும் என்பதிற் கூட நம்பிக்கையற்றவர்களாகக் காலம் போக்கி வருகின்றனர். தமிழர்தேசம் என்ற நாடற்ற தேசமானது தேச ஒடுக்குமுறையினை எதிர்கொள்ள முடியாமற் திணறிக் கிடக்கும் இடர்மிகு நிலையில், உலகளாவிய பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கொரோனாப் பெருந்தொற்று, பொருண்மிய நெருக்கடி, போதைப்பொருட் பயன்பாடு போன்ற உலகந்தழுவிய பொதுவான சிக்கல்கள் கூட மாந்தர்கள் அனைவரையும் ஒரேயளவிலும் ஒரே விதத்திலும் தான் பாதிக்கின்றது என்று யாரும் பேதைமையாகக் கருத்துச் சொல்ல மாட்டார்கள். கொரோனோப் பெருந்தொற்றானது தொற்றக்கூடிய வாய்ப்பு, மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு, தொற்றுகளின் பாதிப்புகளிலிருந்து விடுபடத் தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் என இவையொவ்வொன்றும் எல்லா வாழ்நிலைப் பின்னணிகளைக் கொண்டவர்கட்கும் ஒரேயளவினதாக இருந்திருக்காது என்பதை யாவரும் அறிவர். இன்னும் சொல்லப்போனால், கொரோனாப் பெருந்தொற்றின் போது ஏற்பட்ட சமூக முடக்கத்தால் உறுதியானதும், போதுமானதுமான ஊதியம் பெறும் ஊழியர்கள் வீட்டிலிருந்தவாறே குடும்பத்துடன் களிப்புறுமாறு போதுமான நேரம் வாய்க்கப்பெற்றவர்களாகப் பணியாற்றினார்களே தவிர, அன்றாடங் காய்ச்சிகள் மற்றும் நாள் கூலிகள் பட்ட அவலத்தினை அவர்கள் பட்டறிந்திரார்கள். கொரோனாப் பெருந்தொற்றானது ஏழ்மையிலிருந்தவர்களைப் பட்டினிபோட்டு வாட்டி வதைத்ததைப் போல, பணவசதி உடையோரையும் உறுதியான வருமானவழி கொண்டோரையும் பாடாய்ப்படுத்தவில்லை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இப்படியாக, உலகந்தழுவிய முதன்மைச் சிக்கலாக உருவெடுத்திருக்கும் போதைப்பொருட் பயன்பாடு பற்றியும் அது ஈழத்தமிழர்களைப் பாதிக்குமாற்றினையுமே நாம் இந்தப் பத்தியில் விளக்க விழைகின்றோம்.
முதலாளித்துவ சந்தைப் பொருண்மியத்தின் இலாபவெறியானது எல்லை கடந்து, உலகமயமாகியுள்ள நிலையில், மக்கள் மிகைநுகர்வுப் பண்பாட்டினுள் இழுத்து விழுத்தப்பட்டுத் தமது தேவைகளை மக்கள் தேவையில்லாமற் கூட்டிவிட்டு, அவற்றை நிறைவுசெய்ய இயலாமல் ஓய்வொழிச்சலின்றி மன இறுக்கத்துடன் அலைந்து திரிகின்றனர். முதலாளித்துவ சந்தைப் பொருண்மிய நலன்கட்காக உழைக்கும் மக்களின் வாழ்நிலை கேள்விக்குறியாக்கப்பட்டு, செய்வதறியாது தத்தளிக்கும் நிலையில் பல்வேறுபட்ட வாழ்நிலை கொண்ட உழைக்கும் மக்கள் திண்டாடி வருகின்றனர். நீடித்துவரும் இந்த நெருக்கடி நிலையின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு மக்கள் தாம் இனியும் இதுபோல் வாழ்ந்திடவியலாது என்று உறுதிபூண்டு, புரட்சிகர மாற்றங்கட்காகத் திரள்வதைத் தடுக்குமாறு ஊடகங்கள் அடங்கலான தமது கருத்தியல் அடியாட்கள் மூலம் ஆளும் வர்க்கங்களும் அவர்களின் சந்தை நலன்கட்கு இசைபவர்களும் கருத்தேற்றம் செய்து வருகின்றனர். இதனால் தம்மைச் சூழநிகழ்வன பற்றிய புரிதலில்லாமலும், இவ்வுலகப் போக்கின் இன்றைய மெய்நிலையை உணராமலும், தாம் எங்கே செல்கின்றோம் என்றே தெரியாமலும், பண்டங்களை நுகரும் பிண்டங்களாகத் தமது வாழ்வைக் குறிக்கோளின்றித் தொடர்பவர்களாக உலகந்தழுவி உழைக்கும் மக்கள் மாறிவருகின்றனர் என்பது கண்கூடு. இவற்றின் விளைவாக, ஓய்வின்றி அலையும் மாந்த வாழ்வில், உறவுகளின் பிணைப்புகள் தளர்ந்து போகின்றன; சமூக வாஞ்சை அற்றுப் போகின்றது; உறுதியின்மையும் பாதுகாப்பின்மையும் வாழ்வில் தொடர்கின்றன; எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது; ஒவ்வொரு நாளும் மலர்வும் புலர்வும் புலம்பல்களிலேயே கழிகின்றது. வரம்புமீறுகின்ற செலவீனங்களைச் சமாளிக்கவியலாமல் இரந்து கடன் வாங்கும் இழிநிலைக்கு நடுத்தர மக்களின் வாழ்நிலை கூடத் தள்ளப்பட்டுள்ளது.

இவ்வுலக மெய்நிலைகளை ஏற்றுக்கொள்ள விரும்பாமல், மெய்நிலைகளிலிருந்து தப்பித்தற் போக்கை (escapism) மாந்த மனங்கள் நாடுகின்றன. இவ்வாறு தன்னிலையையும் மெய்நிலைகளையும் (realities) மறக்கச் செய்து இவ்வுலக மெய்நிலைகளிலிருந்து தமது மனங்களைத் தப்பிக்கச் செய்யும் பதார்த்தங்களாகப் போதைப்பொருள்கள் இருக்கின்றன. எனவே, இத்தகைய போதைப்பொருள் நாட்டமுற்று சிலநாளடைவில் அதற்கு அடிமையாகி அதிலிருந்து மீளமுடியா நிலைக்குச் சென்று வாழ்வைத் தொலைப்பது என்பது குறிப்பாக இளையோரைப் பற்றிப் படரும் உயிர்க்கொல்லிச் சிக்கலாக உருவெடுத்து வருகிறது. இந்தச் சிக்கல்கள் அனைத்தும் மூன்றாமுலக நாடுகள் என்ற வரம்பையும் தாண்டி உலகந்தழுவி உலகெங்கிலுமுள்ள உழைக்கும் மக்களை வாட்டி வதைத்தாலும், அனைத்து மக்கட் குமுகாயங்களையும் (சமூகம்) அது பாதிக்குமளவு ஒரேயளவில் இருப்பதில்லை என்பதை நாம் ஈண்டு மனங்கொள்ள வேண்டும்.
போதைப்பொருட் பயன்பாடும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களும் கொரோனாப் பெருந்தொற்றின் பின்னர் உலகந்தழுவி அதிகரித்துள்ளன. வேலைவாய்ப்பற்றும் வருமானமற்றும் முடங்கிக் கிடப்பதால் ஏற்படும் மனவழுத்தம், பணமீட்டக் குறுக்குவழிகளை நாட வேண்டிய உந்துதல்கள் என்பன கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரித்ததன் விளைவாகப் போதைப்பொருட் பயன்பாடு உலகெங்கிலும் அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் இந்தப் போதைப்பொருட் பயன்பாடு என்ற சிக்கலை எல்லா அரசுகளும் ஒரேபோல கையாளுவதில்லை; ஒரே போல நடவடிக்கைகள் எடுப்பதில்லை; ஒரே போல அணுகுவதில்லை. மேற்குலக நாடுகளைப் பொறுத்தளவில், மதுப்பழக்கத்திற்கு ஆட்பட்டுக் களியாட்ட வாழ்வில் மூழ்கித் திளைத்து, அந்தந்த நாடுகளின் ஆளும்வர்க்க நலன்கட்குக் கேடான புரட்சிகர முனைப்புகளில் ஈடுபாடு காட்டவிழையாத மக்கட் கூட்டத்தை உருவாக்குவதிலேயே அதிக ஈடுபாடு காட்டும் போக்கு உண்டு. அதேவேளை, பெருங்கேடு விளைவிக்குமளவிற்கான ஆபத்தான போதைப்பொருட் பயன்பாடானது குற்றச்செயல்களை அதிகரிக்கும் என்பதோடு பாரிய சுகாதாரக் கேடுகளையும் ஏற்படுத்தும் என்பதால், ஈற்றில் மருத்துவ மற்றும் சுகாதாரச் செலவீனங்கள் அதிகரிகப்பது அந்த நாடுகளின் அரசுகளிற்குப் (welfare states) பெருந் தலைவலியாக அமையும். எனவே, மிகவும் சிக்கலான போதைப்பொருள்களானவை எல்லைமீறிய பயன்பாட்டிற்கு வராமற் பார்த்துக்கொள்வர்.
ஆனால், ஒரு நாட்டிற்குள் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கட் கூட்டமானது ஒடுக்கும் அரசினை எதிர்த்துப் போராடும் வலுவுடன் இருந்துவிடக் கூடாது என்பதற்காக, ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை, குறிப்பாக இளையோர்களை, உடலாலும் உளத்தாலும் வலுவற்றவர்களாக்கி, நலிவற்றவர்களாக்கி, அவர்களைப் புரட்சிப் போராட்டங்களில் ஈடுபாடில்லாதவர்களாக்கி, அந்தப் போராடும் மக்களை போரிடும் ஆற்றலற்ற அடிமைகளாக மாற்றும் முனைப்பானது ஒடுக்கும் அரசுகளிடம் இருக்கும். எனவே, இப்படியாக ஒடுக்கும் அரசுகளிடம் ஒடுக்குண்டு கிடக்கும் நாடற்ற போராடும் தேசங்களினை மென்மேலும் வலுவிழக்கச் செய்யும் முனைப்பில் ஒடுக்கும் அரசுகளானவை போதைப்பொருட் பயன்பாட்டை இளையோர்களிடம் மலினமான மற்றும் சூழ்ச்சியான வழிகளில் பரவலடையச் செய்யும் அல்லது சமூக பொருண்மியக் காரணிகள் அடங்கலான வேறு பல காரணங்களால் இயல்பாக அதிகரிக்கும் போதைப்பொருட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் அக்கறையற்றுக் கண்டுங்காணாமலும் இருக்கும்.
தேசங்களினதும் தேசிய இனங்களினதும் சிறைக்கூடமான இந்தியா என்ற நிலத்துண்டத்தில் ஒடுக்குண்டு இருக்க மாட்டோம் என்று உறுதிபூண்டு தமது தேச அரசுகளை (Nation States) நிறுவும் விடுதலை வேட்கையோடு ஒடுக்கும் இந்திய அரசிற்கு எதிராகப் போராடும் காசுமீர் தேசிய இனத்தவர்களும், சீக்கிய இனத்தவர்களும், மணிப்பூர் மக்களும் எங்ஙனம் இந்திய நிலத்துண்டத்திலேயே கூடுதலான போதைப்பொருட் பயன்பாடு நிலவும் மக்களாகச் சீரழிந்துள்ளார்கள் என்ற தேடலில் இந்தியா என்ற ஒடுக்கும் அரசின் சூழ்ச்சியான இழிவேலைகளே பின்னணிக் காரணங்களாக இருக்கின்றன என்று அந்தப் போரிடும் மக்களிடத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் சான்றோர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். எனினும் எந்தவொரு புறக்காரணமும் அகக் காரணங்களினூடாகத் தான் செயற்படவியலும் என்ற இயங்கியலின் நியதிக்கமைய, போதைப்பொருட் பயன்பாடு அதிகரித்தமைக்கான அகக் காரணிகள் தொடர்பாகவும் தெரிந்து தெளிதல் வேண்டியதாகின்றது. தொடர்ச்சியான போரின் பாதிப்புகளாலும், போதைப்பொருள்கள் எளிதாகக் கடத்தப்பட்டு உள்ளே வருவதற்கான நில அமைவிடத்தாலும், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வழிமாறிச் சென்றவர்கள் தமது போராட்டகால வலையமைப்பைப் பயன்படுத்திப் போதைப்பொருட் கடத்தலில் ஈடுபடுவதாலும், போரின் வாழ்விற்குள் ஏற்பட்ட உளச் சிதைவுகள், நிலையற்ற வாழ்வு, உறுதியற்ற எதிர்காலம் போன்றவற்றாலும் போதைப்பொருட் பயன்பாடு இந்தப் பகுதிகளில் அதிகளவில் அச்சுறுத்தும் விடயமாகிவிட்டமையை நாம் ஈண்டு நோக்க வேண்டும்.

15.6 மில்லியன் மக்கள்தொகை கொண்ட காசுமீரில் நாளொன்றிற்கு 43,000 பேர் ஊசி வழியாகப் போதைப்பொருள்களை உள்ளெடுக்கின்றனர். காசுமீரில் 1.5 மில்லியன் பேர் போதைப்பொருள்கட்கு அடிமையாகியுள்ளனர். 5 இலட்சத்து 34,000 ஆண்களும் 8,000 பெண்களும் ஓப்பியம் வகைப் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதாகவும் 1 இலட்சத்து 60,000 ஆண்களும் 8,000 பெண்களும் போதைமயக்கந்தரும் பதார்த்தங்களைக் குளிகைகளாகவும் ஊசிமூலம் திரவ நிலையிலும் உள்ளெடுக்கின்றார்கள் எனவும், இவை தவிர 1 இலட்சத்து 8,000 ஆண்களும் 36,000 பெண்களும் கஞ்சாவிற்கு அடிமையாகவுள்ளதாகவும் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பிலான நடுவண் அரசின் அமைச்சு வெளியிட்ட ஆய்வறிக்கையிற் குறிப்பிடப்பட்டுள்ளது. 15 முதல் 30 அகவை வரையிலான இளையோரே போதைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் என்றே அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கற்றார், கல்லாதார், வேலையில்லாதார், பட்டப்படிப்புப் படித்தோர், நல்ல தொழிலில் உள்ளோர் என குமுகாயத்தின் பல படிநிலைகளிலும் உள்ளோர் இந்தப் போதைப்பொருள்கட்கு அடிமையாகியுள்ளனர். காசுமீரிய தேச விடுதலைக்காகப் போராடிய எழுச்சிமிகு மக்கள் இன்று போதைப்பொருட் பயன்பாட்டினால் ஏற்படும் அத்தனை சீர்கேடுகளில் இருந்தும் தம்மை விடுவித்துக்கொள்ள இயலாமற் திண்டாடி வருகின்றனர்.

சீக்கிய மக்களின் தாயகமான காலித்தான் என்ற அவர்களின் தேசவிடுதலைக்காக 1980 களின் தொடக்கத்திலிருந்து 1995 வரை மறவழியில் வீரியத்துடன் போராடி வந்த சீக்கிய மக்கள் வாழும் இன்றைய பஞ்சாப்பே (இந்தியாவிற்குள் ஒடுக்குண்டு மாநிலமாக) இந்தியா என்ற நிலத்துண்டத்தில் அதிகளவான போதைப்பொருட் பயன்பாடு நிலவும் மாநிலமாக இருக்கின்றது. 1984 களில் இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்திப் (GDP) பங்களிப்பில் முதலிடத்திலிருந்த பஞ்சாப்பானது இன்று 16 ஆவது இடத்திலிருந்து இன்னும் கீழ்ச் சென்றுகொண்டிருக்கின்றது. பசுமைப் புரட்சி என்ற பெயரில் மண்ணின் மக்களின் தற்சார்புநிலையிலிருந்த வேளாண்மையைப் பெருந்தேசிய நிறுவனங்களிற் தங்கியிருக்கவைத்து உழவர்களை ஓட்டாண்டிகளாக்கிய திட்டத்தாலும் மற்றும் பஞ்சாப்பில் நிலவிய போர்ச்சூழலாலும் தமது தாயக விடுதலைக்காகப் போராடிய சீக்கிய மக்களின் மீதான இந்திய அதிகார வர்க்கத்தின் வன்மத்தாலும் தொழிற்துறைகள் எதுவும் பஞ்சாப்பில் நிறுவப்படாமலும், இருந்த நிறுவனங்களும் வெளியேறியமையாலும் நிலவிய பொருண்மிய வீழ்ச்சி என்பனவும் இவ்வாறு பஞ்சாப்பின் பொருண்மியம் மிகத்தாழ்நிலைக்குச் செல்வதற்கான காரணங்களில் முகாமையானவையாக இருந்தாலும், இந்தச் சரிவிலிருந்து மீண்டெழக் கூடிய ஆற்றலின்றித் தொடர்ந்தும் பஞ்சாப் பொருண்மியத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் வீழ்ந்துகொண்டே செல்வதற்கு அதிகரித்துவரும் போதைப்பொருட் பயன்பாடே காரணம் என்று சீக்கிய ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய மக்கள்தொகையில் 1-1.5 விழுக்காட்டினராக இருந்த சீக்கியர்கள் இந்தியாவின் பிரித்தானிய இராணுவத்தில் 20% ஆகவும், இன்றைய இந்தியாவின் மக்கள்தொகையில் 1.7% ஆக இருக்கும் சீக்கியர்கள் இந்திய இராணுவத்தில் 8% ஆகவும் இன்னமும் இருக்கிறார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரும்பங்கெடுத்தும் அதன் பின்பாகத் தமது தேசவிடுதலைப் போராட்டமான காலித்தான் விடுதலைப் போராட்டத்தில் தீரத்துடன் போராடிய மறத்திற்குப் பேர்போன சீக்கியர்கள் இன்று போதைப்பொருள்கட்கு அடிமையாகித் தமது சொந்தப் பெருமையிழந்து வருகின்றார்கள். இதையிட்டுப் புலம்பெயர்ந்த சீக்கியர்கள் (கனடாவில் மட்டும் 8 இலட்சத்திற்கும் கூடுதலான சீக்கியர்கள் வாழ்கின்றனர்) தமது கவலைகளை வெளிப்படுத்தி வருவதோடு இதன் பின்னணியில் இந்தியாவின் இனவழிப்புச் சூழ்ச்சிகள் இருக்கின்றன என்று ஆணித்தரமாகக் கூறிவருகின்றனர். விடுதலைக்காகத் தம்மை ஒறுத்துத் தற்கொடைத் தாக்குதல்களை எந்நேரமும் நடத்த அணியமாகவிருந்த காசுமீரிய மக்கள் இன்று தமது நிலவுரிமையை ஓரளவு உறுதிசெய்யும் சிறப்பு அதிகாரமான 370 A நீக்கப்பட்ட பின்பு கூட பதிலிற்கு எந்தவொரு குறிப்பிடும் படியான தாக்குதல்களையும் செய்யாமற் போர்க்குணம் குன்றியோராக மாறிவருகின்றனர். காசுமீரில் இளையோர் போதைப்பொருள்கட்கு அடிமையாகிப் போர்க்குணமிழந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோராக மாற்றப்பட்டு வருவதாகக் காசுமீரிய பேராசிரியர்கள் சிலர் வெளிப்படையாகப் பொதுவெளியிற் பேசிவருகின்றனர். இவ்வாறு பஞ்சாப்பிலும் காசுமீரிலும் போதைப்பொருட் பயன்பாடு விரவிக்கிடக்கின்றமையின் பின்னால் இந்தியாவின் இனவழிப்புச் சூழ்ச்சிகள் இல்லாமலில்லை. அதேநேரத்தில், நாம் ஏலவே குறிப்பிட்டவாறு புறக்காரணிகள் செயற்பட இடமளிக்கும் அகக்காரணிகளையும் ஆராய வேண்டும்.

பஞ்சாப் மற்றும் காசுமீர் ஆகிய பகுதிகளில் கூடுதலான அளவில் புழக்கத்திலிருக்கும் போதைப்பொருள் கெரோயின் ஆகும். உலகில் கிடைக்கும் கெரோயினில் 80% ஆப்கானித்தானிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆப்கானித்தான், பாகித்தான், ஈரான், தாய்லாந்து, மியான்மார், லாவோஸ் போன்ற நாடுகளிலிருந்தே உலகம் முழுவதும் கெரோயின் கடத்தப்படுகின்றது. ஆப்கானித்தானிற்கும் பாகித்தானிற்கும் மிக அண்மையில் பஞ்சாப் மற்றும் காசுமீர் ஆகிய பகுதிகள் அமைந்திருப்பதால் இப்பகுதிகளிற்குக் கெரோயின் கடத்தப்படுதல் எளிதாகின்றது. பஞ்சாப்பிற்கும் பாகித்தானிற்கும் 553 கிலோமீற்றர் எல்லையுள்ளது. இந்த எல்லையினூடாக ஆளில்லாத வானூர்திகளைக் (drone) கூடப் பயன்படுத்திப் போதைப்பொருள்கள் கடத்தப்படுகின்றன. போதைப்பொருளின் விலையைப் பொறுத்தவரை, ஆப்கானித்தானிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கின்றது என்பதைப் பொறுத்தே விலை கூறப்படுகின்றது. ஆப்கானித்தானிலிருந்து பாகித்தானூடாக காசுமீர் மற்றும் பஞ்சாப்பிற்கு நேரடியாகக் கெரோயின் கடத்தப்படுவதால் அதன் விலையானது இந்தப் பகுதிகளில் இந்தியாவின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகவுள்ளது. அதாவது இந்தியாவின் ஏனைய பகுதிகளில் கெரோயின் விற்கப்படும் விலையின் 1/5 பங்கு விலையே பஞ்சாப்பில் கெரோயினிற்குச் செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால், இந்தப் பகுதிகளில் போதைப்பொருள் எளிதாகவும் ஒப்பீட்டளவில் மலிவாகவும் கிடைக்கின்றது. அத்துடன் இந்தப் பகுதிகளிலுள்ள போராளிக் குழுக்களே தமது அமைப்புகளைக் கட்டியெழுப்பிச் சுடுகலன்களைக் கொள்வனவு செய்வதற்குத் தேவைப்படும் பொருண்மிய வலுவைப் பெற்றுக்கொள்வதற்காகப் போதைப்பொருள் கடத்தலில், அதாவது போதைப் பயங்கரவாதத்தில் (Narco- terrorism), ஈடுபடுவதாக இந்தியாவின் பாதுகாப்புத் தரப்புத் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகின்றது.
தமது போராட்ட இயக்கத்தை வலுப்படுத்தும் பொருண்மிய மூலமாகப் போதைக் கடத்தல்களில் காசுமீர் மற்றும் பஞ்சாப்பிலுள்ள போராளிக் குழுக்கள் ஈடுபடுகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை என்றாலும், அவர்கள் தமது மண்ணில் தமது மக்களிற்கு அந்தப் போதைப்பொருள்கள் கிடைக்காத வண்ணம் இந்தியாவின் வேறுபகுதிகளிற்கே போதைப்பொருள்களைக் கடத்துகின்றனர். பஞ்சாப்பில் மறவழியில் காலித்தான் விடுதலையை முன்னெடுக்கத் தலைமைதாங்கியதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு அண்மையில் கைதான போராளி அம்ரித்பால் சிங் என்பவர் துபாயிலிருந்து தாயகம் திரும்பித் தனது போராட்ட நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும்போது, முதற்கட்டமாக, போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து இளையோரை மீட்டெடுக்கும் மறுவாழ்வு நடுவங்களையே (Rehabilitation Centres) அமைத்தார் என்றும், போதைப்பொருளிலிருந்து இளையோர்களை மீட்டெடுத்து விடுதலை நோக்கி அணிதிரட்டுவதிலேயே அவர் தனது பரப்புரைகளின் பெரும்பகுதியைப் பயன்படுத்தினார் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, பஞ்சாப்பிலும் காசுமீரிலும் தமது மக்களின் விடுதலைக்காகத் தம்மை ஒறுத்துப் போராட முன்வந்து நிற்கும் போராளிகள் தமது மண்ணில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு வருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதும் எப்பாடுபட்டேனும் போதைப்பொருள் கிடைப்பனவைத் (availability) தமது மண்ணில் ஒழிக்கவே செய்வர் என்பதும் மனச்சான்றுள்ள எல்லோராலும் புரிந்துகொள்ளக்கூடிய விடயமே. இருப்பினும், தடம்மாறி இந்தியச் சூழ்ச்சியில் வீழ்ந்து இந்திய அரசின் அடிவருடிகளாகிப் போன முன்னாள் போராளிகளும் இந்நாள் குமுகாயச் சீர்கேடர்களுமாகிய சிலரால் தமது அன்றையகாலப் போராட்ட வலையமைப்புகளைப் பயன்படுத்திப் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாகவும் அதனை உளவு அமைப்புகளும் பாதுகாப்புத் தரப்பும் கண்டுங்காணாதும் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போரினால் ஏற்பட்ட நிலையில்லா வாழ்வு கொடுத்த நீண்டகால அவலங்களால் உளச்சிதைவுக்கு உள்ளான பலர் எதிர்காலம் குறித்த அக்கறையும் நம்பிக்கையுமற்று இந்தப் போதைப்பொருள்கட்கு அடிமைகளாக மாறுகின்றனர். காசுமீரும் பஞ்சாப்பும் வேலைவாய்ப்பு விடயத்தில் எப்போதும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளாக இருப்பதால், ஏழ்மையிலிருந்து விடுபட எளிதான வழிமுறையாகப் பலர் போதைக்கடத்தல்களில் ஈடுபடத் தொடங்குகின்றார்கள்.
போதைப்பொருட் பயன்பாடு என்பது வெறுமனே உடல்நலக்கேடுகளுடனும் அதனால் ஏற்படும் சாவுகளுடனும் மட்டும் மட்டுப்படுவதில்லை. இன்பம் துய்க்கலாமென்றும், நண்பர்களுக்காகவென்றும், புதிதாக எதையாவது முயற்சித்துப் பார்க்க வேண்டுமென்ற முறையற்ற சிந்தையாலும் முதலில் போதைப்பொருள்களை உள்ளெடுப்பவர்களுக்கு அது இன்பப் போதைதரும் பொருளாக சில கிழமைகளே இருக்கும். அதன் பின்னர் அந்தப் போதைப்பொருளைப் பயன்படுத்தாவிட்டால் உடல்வலி, பசியின்மை, இயங்கமுடியாத தன்மை போன்றன ஏற்பட்டு, அந்தப் போதைப்பொருளைப் பயன்படுத்தினால் மட்டுமே உடல்வலியின்றி ஓரளவிற்கு இயல்பாக இயங்க முடியும் என்ற நிலை உருவாகும். போதைப்பொருளைப் பெற்றுக்கொள்ள களவு, கொள்ளை என எந்த நிலைக்கும் போதைக்கு அடிமையானவர்கள் இறங்குவர். இவ்வாறானவர்கள் போதைப்பொருள் கிடைப்பனவு இல்லையென்றால் தம்மை மாய்த்துக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள். இதனால், போதைக்கு அடிமையானவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். போதைப்பொருள் கிடைக்குமென்றால் கொலை செய்வதற்கும் தயங்கமாட்டார்கள். தவிர, போதைப்பொருள்களுடன் தொடர்புடைய ஏனைய குமுகாயச் சீர்கேடுகளும் பல்கிப் பெருகுகின்றன. முறைதவறிய பாலுறவுகள் (incest) (தந்தை-மகள், தமையன் – தங்கை, தமக்கை – தம்பி) போன்ற சீர்கேடுகளுக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே நிலவும் பாலியல் வன்கொடுமைகட்கும் போதைப்பொருட் பயன்பாடுகளே முதன்மைக் காரணமென்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் போதைப்பொருள்களை உள்ளெடுக்கப் பயன்படுத்தும் ஊசியைப் பலரும் பகிர்ந்துகொள்வதால் HIV, Hepatitis B, C போன்ற தொற்றுநோய்கள் விரைவாகப் பரவுகின்றன. Hepatitis நோயினால் ஈரல் முழுமையாகச் செயலிழந்து இறப்பு நேர்கின்றது. இப்படியொரு நோயினால் இந்தப் போதைப்பொருள்கட்கு அடிமையானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே பெரும்பாலும் தெரியவருவதில்லை.
ஒரு சிக்கல் உலகந்தழுவியதென்றாலும் அந்தச் சிக்கல் எல்லோரையும் ஒரேயளவிலும் ஒரே விதத்திலும் பாதிப்பதில்லை என்று மேற்போந்த பத்திகளில் தெளிவுபடுத்தினோம். எனவே, ஈழத்தில் தமிழ்த்தேசிய இனமானது உலகந்தழுவிய சிக்கல்களில் தனக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதிலிருந்து மீள எவ்வாறான முனைப்புகளில் இறங்க வேண்டுமென்றும் ஆய்ந்தறிவதற்குத் தம்மைப் போல வாழ்நிலைச் சூழலையும் வரலாற்றுக் கோலங்களையும் கொண்ட ஏனைய மக்கட் கூட்டத்தாரிடமிருந்து படிப்பினைகளைப் பெற வேண்டும். அந்த வகையிற்றான், தேச ஒடுக்குமுறைக்குள்ளாகி அதிலிருந்து விடுபட்டுத் தேச அரசமைக்கும் வரலாற்றின் வழியில் போரிடும் தேசிய இனங்களான காசுமீரியர் மற்றும் சீக்கியர்களிடத்தில் இந்தப் போதைப்பொருட் பயன்படும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்களும் எங்ஙனம் பரவலடைந்து வருகின்றன என அந்தச் சிக்கலின் பின்னாலுள்ள அக மற்றும் புறக் காரணிகளை ஆய்ந்து பார்த்துத் தெரிந்து தெளிந்தோம். நில அமைவிடத்திலும் பண்பாட்டுப் புரிதல்களிலும் வேறுபாடுகள் நிலவினாலும் விடுதலைக்காகக் கூடுதலான விலைகொடுத்த மக்கள் என்ற அடிப்படையிலும், மறவழிப் போராட்டத்தை வாழ்வியலாகக் கொண்ட மக்கள் என்ற அடிப்படையிலும், இந்தியாவால் ஒடுக்கப்படும் மற்றும் வஞ்சிக்கப்படும் மக்கள் என்ற அடிப்படையிலும், இன்னும் பலவாறும் நாம் காசுமீரிய மற்றும் சீக்கிய தேசிய இனத்தாருடன் ஒப்புநோக்கும் சமூக வாழ்வியலைக் கொண்டுள்ளோம் என்ற புரிதலுடன் அவர்களிடமிருந்து பல படிப்பினைகளைத் தமிழ்த்தேசிய இனத்தார் பெற்றுக்கொள்ளவியலும். இருப்பினும், வேறுபட்ட சில புறநிலைகள் மற்றும் அகக்காரணிகள் ஆகியவற்றையும் ஈண்டு நோக்கி ஈழத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருட் பயன்பாடு பற்றி நாம் தெரிந்து தெளிதல் வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் போதைப்பொருள் கிடைப்பனவு (availability) தமிழீழப் பகுதிகளில் இருந்திருக்கவில்லை. 1995 களின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையின் நகரப் பகுதிகளில் ஊக்கமருந்து போல பயன்படுத்தும் போதைகலந்த பாக்குப் போன்ற குறைந்தளவு வீரியங்கொண்ட போதைப்பொருள்கள் மிகவும் புறக்கணிக்கத்தக்க அளவிற் பயன்பாட்டிலிருந்தது. போரின் பின்னரான காலத்தில் மதுப்பழக்கமும் புகைப்பழக்கமும் இளையோரிடத்தில் அதிகரிக்கத் தொடங்கியமையை மதுவிற்பனை தொடர்பான புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன. தமக்கான தலைமையையும் இழந்து நாடற்ற, தேச அரசற்ற இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ வேண்டிய சூழலிற்குள் மீண்டும் தள்ளப்பட்ட ஈழத்தமிழ்க் குமுகாயத்தில் ஏற்படும் பிறழ்ச்சிகள் மற்றும் சீர்கேடுகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றிலிருந்து விடுபடச் செய்யும் செயற்றிட்டங்களை முன்னெடுக்குமளவிற்குச் சமூகவாஞ்சையும் துணிவும்கொண்ட செயற்பாட்டாளர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழர்களிடத்தில் எழவேயில்லை.
இந்தவேளையில், ஒரு கட்டுக்குலைந்த குமுகாயமாக ஈழத்தமிழ்க் குமுகாயம் சீரழியத் தொடங்கியது. இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ்வதால் ஏற்படும் அனைத்து இன்னல்களும் ஈழத்தமிழர்கள் வாழ்வில் இயல்பாக்கப்பட்டன. முறையான வேலையின்மை, போரின் இழப்புகளாலும் அதன் பின்னாலான பாதுகாப்பு நோக்கிலும் பொருண்மியத் தேடலிலும் ஏற்பட்ட புலம்பெயர்வுகள் என்பன குடும்ப உறவுகளில் இடைவெளிகளையும் சில இடங்களிற் பிரிவினைகளையும் ஏற்படுத்தின. நிலையற்ற வாழ்வும் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வும் ஒரு சாராரிடம் மிகைத் தன்னல உணர்வையும், இன்னொரு சாராரிடம் தமது மெய்நிலையை உணராமல் தன்னிலை மறந்து இல்லாத அவ்வுலகத்தில் மூழ்கும் (தப்பித்தல் மனநிலை- escapism) முனைப்பையும் உருவாக்கியது. இதன் விளைவாகத்தான், ஓரளவு அறிவுத் தெளிவுடையோரும் எக்காலத்தொனி, யெகோவாவின் சாட்சியம், பெந்தகோத்து போன்ற கிறித்தவ சபைகளின் மதமாற்றக் கும்பல்களிடமும், அம்மா பகவான், சீரடி பாபா மற்றும் பல இந்துத்துவ கும்பல்களிடமும், மற்றும் இசுலாமிய மதமாற்றக் கும்பல்களிடமும் தம்மை ஒப்புக்கொடுக்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டனர். உளவியல் ஆற்றுப்படுத்தல் என்பது தமக்கு நேர்ந்த விரும்பத்தகாத மெய்நிலையை ஏற்றுக்கொள்ளும் உளநிலையை ஏற்படுத்தி எதிர்காலம் பற்றிய நம்பிக்கைக் கீற்றுகளை மனங்களிற் பதிப்பதேயாகும். ஆனால், இந்த மதக் கும்பல்கள் செய்வதென்னவென்றால், இவ்வுலக மெய்நிலைகளை ஏற்றுக்கொள்ள விடாமற் தன்னிலை மயக்கத்திற்குள் மக்களை ஆழ்த்தி, இல்லாத அவ்வுலகக் கனவுகளிற்குள் மக்களைத் தள்ளிவிடும் மடைமாற்றலே என்பதை ஐயந்திரிபறப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, உளச்சிதைவுக்குள்ளான மக்கள் தன்னிலை மயக்கத்தைத் தரும் மதக் கும்பல்களிடமும் போதைக் கும்பல்களிடமும் அகப்படும் கேடான சூழல் 2009 இன் இறுதிகளிலேயே ஏற்படத் தொடங்கிவிட்டது.

இதன் தொடர்ச்சியாக வளரிளம் பருவத்தில் (adolescence) இருக்கும் உணர்வுவயப்பட்ட தன்மைகளாலும், குடும்ப அமைப்புகளில் உள்ளூர அமைந்திருந்த குழந்தைகள் பாதுகாப்புப் பொறிமுறையானது வலுக்குன்றிப் போனதாலும், தமிழினத்தை வழிப்படுத்தும் முறையான அமைப்பு வடிவம் இல்லாமற் போனதாலும் இளையோர்களிடத்தில் மதுப்பழக்கமும் புகைப்பழக்கமும் அதிகமாகி அவர்களிடத்தில் இயல்பிற்கு மாறான நடத்தைக் கோலங்களும், குமுகாயப் பிறழ்ச்சியான நடத்தைகளும் ஏற்படத் தொடங்கின. இந்த நேரத்திலேயே, போதைப்பொருள்கள் தமிழீழப் பகுதிகளெங்கும் பரவலடையச் செய்யப்பட்டன. சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களுடன் ஏற்பட்ட தொடர்புகள் மூலமே தொடக்கத்தில் இந்தப் போதைப்பொருள்கள் இளையோரிடத்திற் புழங்கலாயின. இராணுவப் புலனாய்வாளர்களின் தொடர்புகளுடன் இயங்கிய வாள்வெட்டுக் கும்பல்களே இந்தப் போதைப்பொருட் பயன்பாட்டைப் பள்ளிமாணவர்களிடத்திற் பரவலாக்கினர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டுக் கடற்கரையோரங்களில் இருந்து கஞ்சா (KG- கேரளா கஞ்சா) மன்னார் முதல் வெற்றிலைக்கேணி வரையான 273 கடல்மைல் நீளக்கடற்கரையோரம் வழியாக இலங்கைத்தீவின் வடக்குப் பகுதிக்குக் கடத்தப்படுதல் அதிகரித்தது. விரைந்து பணமீட்டும் முனைப்புக் கொண்ட ஈழத்தைச் சேர்ந்த சிலர் கடத்தல் முகவர்களாகி இந்தக் கஞ்சாக் கடத்தலில் ஈடுபடலாயினர். இலங்கைத்தீவின் அமைவிடம் சார்ந்து வடக்கிற்கே அதிகளவான போதைப்பொருள்கள் கடலால் கடத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்படியாகக் கடத்தலிற்கு எளிதான அமைவிடங்களில் போதைப்பொருட் பயன்பாடு அதிகரித்துக் காணப்படும் என்ற அமைவிடம் சார்ந்த உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து பெருமளவில் அடிக்கடி இந்த கஞ்சாக் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தமிழ்நாட்டுக் கடற்கரையோரமான தொண்டி எனும் இடத்தில் வாழும் இசுலாமியர்கள் மன்னார் மற்றும் கற்பிட்டிப் பகுதியில் வசிக்கும் ஈழத்தமிழ் இசுலாமியர்களுடன் மணவுறவால் கிடைத்த நெருக்கத்தைப் பயன்படுத்திப் பெருமளவிற்குக் கஞ்சாக் கடத்தலில் ஈடுபடுவதாக 2014 ஆம் ஆண்டு நம்பகத்தகுந்த தகவல்கள் கிடைத்தன. அத்துடன், வேறும் சில ஈழத்தமிழர்களும் பணமீட்டும் முனைப்பில் இத்தகைய கஞ்சாக் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும், இப்படியாக இலங்கைத்தீவின் வடபகுதிக்குக் கடத்தப்படும் கஞ்சாவானது தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கே கூடுதலானளவு கடத்தப்பட்டது என்பதையும் நாம் ஈண்டு நோக்க வேண்டும். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் என்பன மாணவப் பருவத்தில் ஏற்பட்டால் அவர்கள் அடுத்த கட்டமாகக் கஞ்சாப் பழக்கத்திற்கும் ஆளாவார்கள். ஆனாலும் கஞ்சாவை உள்ளெடுக்கும் முறை மற்றும் அதனால் ஏற்படும் நரம்பு மண்டலத் தாக்கங்கள் என்பன மிகக் குறுகிய காலத்தில் பாரிய சமூகச் சீர்கேடுகளைக் கெரோயின் போன்ற ஏனைய போதைப்பொருள்களின் அளவிற்கு உடனடியாக ஏற்படுத்திவிடுகிறது என்று சொல்வதற்கில்லை. கெரோயின் போன்ற குருதிநாளங்கள் வழியாக ஊசி மூலம் உள்ளெடுக்கப்படும் போதைப்பொருள்கட்கு அடிமையானவர்கள் அத்தகைய போதைப்பொருளினால் உடல்நலிவுற்று இறப்பதோடு மட்டுமல்லாமல், ஊசிகளைப் பயன்படுத்துவதனால் ஏற்படும் தொற்றுக்களான HIV, Hepatitis B, C என்பனவற்றைப் பரவலடையச் செய்து இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கப்படவும் காரணமாகின்றனர். இத்தகைய கெரோயின் போன்ற போதைப்பொருட் பயன்பாடானது கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்திலேயே அதிகரித்திருக்கிறது.

இந்தக் கெரோயினிற்கு அடிமையானவர்கள் அந்தப் போதைப்பொருள் இல்லாமல் இயங்கவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு அவதியுறுவதுடன் அதனைப் பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு கீழான குற்றச்செயல்களிலும் ஈடுபடலாகிறார்கள். ஏழ்மையில் உழலும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கூட இந்தப் போதைப்பொருளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப் படுகிறார்கள். அண்மையில் இத்தகைய போதைப்பொருளிற்கு அடிமையான ஒருவர் அந்தப் போதைப்பொருள் கிடைக்காமல் உடல்வலியால் அவதிப்பட்டவாறு தனது குடும்பத்தாரிடம் போதைப்பொருள் வாங்கப் பணங்கொடுக்குமாறு கெஞ்சி அழுத செய்தி வெளிவந்தது. இப்படியாகப் போதைப்பொருள் வாங்க வீட்டிலும் வெளியிலும் கொள்ளையிலும் பணப்பறிப்பிலும் ஈடுபடும் செயல்கள் ஈழத்தில் அதிகமாகி வருகின்றன. முறைதவறிய பாலியல் (incest) வன்கொடுமை மற்றும் குடும்ப வன்முறை (domestic violence) என்பன போதைப்பொருளுக்கு அடிமையானவர்களால் நித்தமும் அதிகரித்து வருகின்றன. எல்லைமீறிய பாலியல் நாட்டம் அல்லது இல்வாழ்வில் நாட்டமின்மை என்பன போதைக்கு அடிமையானவர்களின் வாழ்வாகிப் போகிறது. இதனால் குமுகாயக் குற்றங்கள் எல்லை மீறி அதிகரித்து வருகின்றன.
அண்மையில் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் ஆய்வுகூட வசதி செய்யப்பட்டு ICE (Crystal Methamphetamine) எனும் போதைப்பொருளானது உற்பத்தி செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் போதைப்பொருள் உற்பத்திக்கூடத்தைக் கணவன் மற்றும் மனைவி ஆகியோரே இணைந்து நடத்திவந்துள்ளனர். மனைவி ஒரு மருத்துவத்தாதி என்பதும் கணவர் இராணுவப் புலனாய்வாளர்களால் இயக்கப்பட்டு வந்த “ஆவா” குழுவில் முகாமையானவர் என்றும் தெரிய வந்துள்ளது. வீரியங்கூடிய ICE போன்ற போதைப்பொருளை உற்பத்தி செய்யும் அளவிற்கு யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் அச்சுறுத்தல் எல்லை கடந்து செல்கின்றது என்பதை நாம் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன், இந்தப் போதைப்பொருள்கட்கு அடிமையாகிய நிலையிலிருந்து மீளவிரும்புபவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வசதிகளும் வடக்குப் பகுதிகளில் இல்லாமலே இருக்கின்றது. கந்தக்காடு மறுவாழ்வு நடுவத்திற்குச் (Rehabilitation Centre) சென்றே இவ்வாறான மறுவாழ்வு உதவிகளைப் பெற வேண்டியுள்ளது. போதைப்பொருள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து மறுவாழ்விற்கு வழிசெய்யும் முன்னெடுப்புகளை யாழ்ப்பாணத்தில் “மாற்றம்” என்ற அறக்கட்டளை மூலமாக மேற்கொண்டு வரும் அருட்தந்தை முனைவர் வின்சன்ட் பெட்றிக் அவர்கள் (முதியவர்) மீது மூன்று தடவைகள் கொலைமுயற்சியானது போதைக்கடத்தல்காரர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்திலுள்ள புகழ்பூத்த பள்ளிக்கூடங்களில் போதைப் பாக்குகளும் பாலியல் நாட்டங்கொள்ளத் தூண்டும் போதைக் குளிகைகளும் பள்ளிக்கூட மாணவர்கள் மூலமாகவே கழிப்பறைகளில் வைத்துக் கைமாற்றப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிடுமளவிற்கு அனைவராலும் அறியப்பட்ட மருத்துவர் ஒருவரின் மகள் போதைப்பொருளிற்கு அடிமையாகி மீளமுடியாதவாறு தனது இறுதிநாள்களை எண்ணிக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்திகளானவை நிலைமை கட்டுமீறிச் சென்றுகொண்டிருக்கும் இடுக்கண்ணின் வீரியத்தை உணர்த்துவதற்கே இப்பத்தியிற் சொல்லப்படுகின்றது.
போதைப்பொருள்களைக் குருதி நாளங்கள் வழியாக உள்ளெடுப்பவர்களால் பரவும் நோய்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் கூட சரியாக இல்லாத அளவிற்கு மருத்துவம் சார்ந்து பதிவுசெய்யப்படாத இறப்புகள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பிட்ட சில வாழ்நிலைப் பின்னணிகளைக் கொண்டவர்களிடத்திலே தான் இத்தகைய போதைப்பொருட் பயன்பாடும் அதனால் ஏற்படும் குமுகாயச் சீர்கேடுகளும் நிகழ்கின்றன என்று கூறிவிட்டுக் கடந்து செல்ல முடியாதவாறு, கற்றோர், கல்லாதோர், பெரிய பதவிகளில் உள்ளோர், பல்கலைக்கழக மாணவர், பள்ளிக்கூட மாணவர், ஆண், பெண், வெளிநாட்டுக் காசில் ஒய்யாரமாக வாழ்வோர், ஏழ்மையில் உழல்வோர் எனப் பல்வேறு வாழ்நிலைகளிலுள்ளவர்களும் ஈழத்தில் போதைப்பொருட் பயன்பாட்டிற்கு ஆளாகியிருக்கின்றனர். நாம் எதிர்பார்க்கும் எல்லைகளைக் கடந்து பாரிய அச்சுறுத்தலாகப் போதைப்பொருட் பயன்பாடும் அதனுடன் தொடர்புடைய குமுகாயச் சீர்கேடுகளும், குற்றச்செயல்களும் ஈழத்தில் அதிகரித்து வருகின்றன. போதைப் பாக்குகள், போதைமயக்கம் தரும் குளிகைகள், பாலியல் நாட்டத்தைக் கூட்டும் குளிகைகள் என்பனவும் பள்ளிக்கூட மாணவர்களிடத்தில் பரவலாகிறது. இத்தகைய போதைப்பொருள்கள் தமிழ்நாட்டிலும் ஊரெங்கிலும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. போதைப்பொருள்கட்கு அடிமையானவர்கள் தமிழ்நாட்டிலும் அதிகமாகி வருகின்றனர். கஞ்சா, போதை குளிகைகள், மெத், LSD போன்ற போதைப்பொருள்களே தமிழ்நாட்டில் அதிகம் புழக்கத்திற்கு வருகின்றன. சாமியார்களின் ஆன்மீகத் தொடர்புடையோரிடம் இத்தகைய போதைப்பொருட் பயன்பாடு (சிவபானம் எனும் கஞ்சா, குண்டலீன ஆற்றலை அடையும் படிமுறைகளை எளிமைப்படுத்த LSD) அதிகமிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
போதைப்பொருட் பயன்பாட்டால் தமிழ்க் குமுகாயம் சீரழிந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்ற உணர்வு ஆளும் இந்திய நடுவண் மற்றும் தமிழ்நாட்டு அரசாங்கங்களிடம் துளியளவேனும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆளும் தற்போதைய தமிழ்நாட்டு அரசாங்கத்தில் முகாமையானவர்கட்குப் போதைக்கடத்தல் வலைப்பின்னல்களுடன் ஒட்டான உறவு இருப்பதான குற்றச்சாட்டுகளும், அதனைத் தொடர்ந்த கைதுகள் பற்றிய செய்திகளையும் ஊடகங்களின் வாயிலாக அறிகிறோம். உண்மையில், தமிழ்க்குமுகாயம் எக்கேடு கெட்டும் சீரழிந்து போகட்டும் என்றே போதைப்பொருள் விடயத்தில் இந்த அரசாங்கங்கள் எண்ணும். ஆனால், போதைப்பொருட் கடத்தல்கள் மூலம் ஈட்டப்படும் பணமானது போராளிக்குழுக்கள் தம்மைக் கட்டமைக்கவோ அல்லது இந்திய அரசிற்கு எதிரான மத அடிப்படைவாத மற்றும் தீவிரவாதக் குழுக்கள் பலம்பெறவோ பயன்பட்டுவிடக் கூடாது என்பதை மனத்திற்கொண்டே இந்திய நடுவண் மற்றும் தமிழ்நாட்டு அரசுகளானவை போதைப்பொருட் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
இந்தநிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டிப்பதற்காக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை ஒடுக்கும் இந்திய நரபலி அரசு கூறிவருகிறது. விடுதலைப் புலிகளை மீளக்கட்டியமைக்கப் போதைப்பொருட் கடத்தலில் தமிழ்நாட்டிலிருந்து புலிகள் ஈடுபட்டு வருவதாக அடிப்படையற்ற நாலாந்தரப் பொய்யை இந்திய அரசு புனைந்து தமிழீழ விடுதலைக்குக் களங்கம் கற்பிக்க முனைகிறது. இதற்கான சூழ்ச்சி வலைப்பின்னலும் இந்தியாவாலே பின்னப்படுகிறது. டெல்கிக்குக் காவடியெடுத்துத் தமிழீழ விடுதலையை முன்னெடுக்கப்போவதாகக் காலங்காலமாகச் சொல்லித் திரிந்த பல்வேறு போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக இணைந்துகொண்ட, தடம்மாறி இந்தியாவின் அடிவருடிகளாக மாறிப்போன ஒரு சில முன்னைநாள் போராளிகளும் இத்தகைய போதைக்கடத்தல்களை மேற்கொள்ள உளவமைப்புகளால் இசைவளிக்கப்பட்டுள்ளார்கள் என்று நம்பகத்தன்மை மிகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன. காசுமீரிலும் பஞ்சாப்பிலும் இத்தகைய குற்றச்சாட்டுகளை சமூக வாஞ்சை கொண்டோர் ஒடுக்கும் இந்திய அரசின் மீது தொடர்ச்சியாகச் சுமத்துகின்றனர் என்பதை மீண்டும் மீண்டும் மனங்கொள்ளுமாறு நினைவுறுத்திக் கொள்கிறோம்.
இன்னுமொரு விடயம் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகின்றது. அதாவது, இலங்கைத்தீவின் வடக்குப் பகுதியில் அதிகரிக்கும் போதைப்பொருட் பயன்பாடு குறித்து சிங்களத் தரப்புகள் பேசும்போது, தென்னிந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குக் கடத்தல்கள் நடைபெறுவதே காரணம் என்று மொட்டையாகக் கருத்துக்கூறிவிட்டுக் கடந்து செல்கிறார்கள். உண்மையில் கஞ்சாவே தமிழ்நாட்டிலிருந்து அதிகம் கடத்தப்படுகின்றது. மிகக் குறைந்த அளவில் அங்கொன்று இங்கொன்றாக ICE, போதைக் குளிகைகள் என்பனவும் தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் கெரோயின் என்ற சொல்லானது போதைக்கடத்தல் தொடர்பான வலைப்பின்னல்களில் கையாளப்படுவதில்லை என்றும் அதனை ஒத்த அனைத்துப் போதைப்பொருள்களையும் (வெள்ளைநிறத் தூள்) Brown Sugar (Street name) என்றே போதைக்கடத்தல் வலையமைப்பில் அழைப்பர் என்றும் அறியக்கிடைக்கின்றது. இந்த Brown Sugar ஆனது தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்படும் வாய்ப்பு 1 விழுக்காட்டிலும் குறைவே எனப் போதைக்குற்றங்கள், கடத்தல் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடக நண்பர் ஒருவர் தெரிவித்தார். ஆனால், தற்போது ஈழத்தை மிகவும் அச்சுறுத்தி வரும் போதைப்பொருளாக கெரோயினே இருக்கின்றது. தரங்குறைந்த கெரோயினை ஈயத்தாளில் வைத்து எரிப்பதால் மேலெழும் புகையை மூச்செடுப்பதன் மூலமாகவும் தரங்கூடிய கெரோயினை ஒருவகைத் திரவத்தைக் கலந்து ஊசி மூலம் குருதிநாளங்களினூடாகவும் உள்ளெடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வகை கெரோயின்கள் தமிழ்நாட்டின் கடற்கரை வழியாக இலங்கைத்தீவின் வடபகுதிக்குக் கடத்தப்படுவதில்லை. மாறாக, அவை தென்னிலங்கையிலிருந்தே கடத்தப்படுகின்றன. கெரோயின் ஆப்கானித்தானில் உற்பத்தியாகிக் கிழக்கு ஆபிரிக்கா வழியாக மாலைதீவு சென்று இலங்கை வருவதாகவும் கொழும்புத் துறைமுகத்தினூடாக உலகின் பல பகுதிகளுக்கும் கடத்தப்படுவதாகவும் போதைக்கடத்தல் வலையமைப்புகள் குறித்து ஆய்வுசெய்வோர் குறிப்பிடுகின்றனர்.
தென்னிலங்கையிலும் பார்க்க யாழ்ப்பாணத்தில் கெரோயினின் விலை கூடுதலாக இருப்பதானது தென்னிலங்கையிலிருந்தே கெரோயின் வகைப் போதைப்பொருள்கள் வடக்குக் கிழக்கிற்குக் கடத்தப்படுகின்றமைக்கான சான்றாக அமைகின்றது. அத்துடன் கொக்கேன் என்ற போதைப்பொருள் தமிழ்நாட்டில் எங்கும் கைப்பற்றப்பட்டதுமில்லை, கடத்தப்பட்டதாகவோ அல்லது பயன்படுத்தப்பட்டதாகவோ எந்தத் தகவலும் இல்லை. பிரேசில் நாட்டிலிருந்து உற்பத்தியாகிக் கொழும்பு வழியாகக் கொக்கேன் போதைப்பொருளும் யாழ்ப்பாணத்தில் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே, மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட யாழ்ப்பாணத்திற்குத் தெற்கிலிருந்து எங்ஙனம் இத்தகைய கேடிலும் கேடான அச்சுறுத்தும் வகைப் போதைப்பொருள்கள் எடுத்துவரப்படுகின்றன என்பதற்குச் சிங்களத் தரப்புப் பதிலளிக்காமல் தமிழ்நாட்டின் தலையில் இந்த விடயத்தைப் போட்டுவிட்டுத் தப்பிக்கப் பார்க்கின்றது.
தமிழ்க்குமுகாயத்தின் அகக்காரணிகள் ஒருபுறமிருக்க சிங்கள பௌத்த பேரினவாத அரசும் இந்திய ஒடுக்கும் அரசும் ஈழத்தில் தலைவிரித்தாடும் அச்சுறுத்தும் போதைப்பொருட் சிக்கலின் பின்னாலிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். காலித்தான் என்ற தமது தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய சீக்கிய தேசிய இனமக்களின் வரலாற்றை இந்நேரத்தில் மனங்கொள்ள வேண்டும். எம்மைப்போலவே சீக்கியர்களும் மறத்தினை வாழ்வியலாகக் கொண்டவர்கள். காலனியர்காலத்தில் தமிழர்களாகிய நாம் மறவழி மறந்து போய்ப் பின்னர் தமிழீழ மறவழிப் போரால் புறநானூற்று வரலாற்றைப் புதுப்பித்தோம். ஆனால் சீக்கியர்கள் என்றுமே மறமே வாழ்வென்று வாழ்பவர்கள். சீக்கியர்களும் எம்மைப்போல இந்தியாவால் வஞ்சிக்கப்பட்டவர்கள். 1984 இல் வீறுகொண்ட சீக்கியர்களின் தேச விடுதலைப் போராட்டமானது 1995 இல் இந்திய இராணுவத்தால் முற்றிலுமாக நசுக்கப்படும் வரையிலான 12 ஆண்டு காலப்பகுதியில் 40,000 இற்கு மேற்பட்ட சீக்கிய மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். எமது நூலகத்தை சிங்களக் கொடுங்கோலர்கள் எரித்தது போல சீக்கியர்களின் 20,000 இற்கு மேற்பட்ட புனித நூல்கள் இந்தியக் கொடுங்கோலர்களால் எரிக்கப்பட்டன. நித்தமும் 1 இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு உணவளிக்கும் அவர்களின் பொற்கோவிலும் எறிகணைகளாலும் குண்டுகளாலும் தகர்க்கப்பட்டது. அந்தக் கோவிலில் வைத்து 5,000 வரையான சீக்கியப் போராளிகளும் பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

இந்திய நரபலிப் படைகள் ஈழமண்ணில் ஆடிய வெறியாட்டத்திற்குத் தமிழர்கள் பதிலடி கொடுத்தது போலவே, தமது பொற்கோவில் மீது தாக்குதல் தொடுத்து இனவெறியாட்டம் ஆடிய இந்தியாவிற்குப் பதிலடி கொடுக்க அன்றைய பிரதமர் இந்திராகாந்தியை அவரது மெய்க்காப்பாளர்களாகவிருந்த சீக்கியர்கள் இருவர் சுட்டுக்கொன்றார்கள். “ஆலமரம் ஒன்று சரிந்தால் அதன் கீழுள்ளவை நசுங்கத்தான் செய்யும்” என்று ஏளனமாகக் கூறிவிட்டு டெல்கியில் சீக்கிய மக்கள் மீது ராஜீவ்காந்தி இனப்படுகொலையை நடத்தினான். குழந்தைகள் உயிருடன் எரிக்கப்பட்டனர்; பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள்; தேடித் தேடிச் சீக்கிய ஆண்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்; 10,000 வரையான சீக்கியர்கள் வெறும் 4 நாள்களில் இந்தியக் கொடுங்கோலர்களால் திட்டமிடப்பட்ட சீக்கியர்கட்கெதிரான இன வன்முறையிற் கொல்லப்பட்டார்கள். எமக்கு நடந்த “கருப்பு சூலை” அவர்களுக்கு 1984 இல் டெல்கியில் நடந்தது. டெல்கியில் சீக்கியர்கட்கெதிரான இனவெறியாட்டத்தின் பின்பாக எம்மைப் போலவே அவர்களும் உலகெங்கும் புலம்பெயர்ந்தார்கள். எம்மைப் போன்ற மக்கள்தொகையிலேயே அவர்களின் புலம்பெயர்ந்தோரும் இருக்கின்றார்கள். இந்திய நிலத்துண்டத்திலேயே கூடுதலானளவு போதைப்பொருள்கள் தொடர்பான குற்றங்கள் நடைபெறும் மாநிலமாகச் சீக்கியர்களின் பஞ்சாப் மாறிப்போனது. “இனி சீக்கியர்களால் எதுவும் செய்ய முடியாது, அவர்களுடைய இளைய தலைமுறை போதைப்பொருள்கட்கு முழுமையாக அடிமையாகி விட்டது. புலம்பெயர்ந்த சீக்கியர்களும் தலைமுறை மாற்றத்திற்கு ஆளாகிவிட்டார்கள். சீக்கியர்களை இராணுவத்தில் சேர்த்து இந்தியப் பற்றை விதைக்கிறோம். சீக்கியப் பெண்கள் விலை மாதர்களாக அலைகிறார்கள். காலித்தான் விடுதலைப் போராட்டம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது” என்று 1995 முதல் கொக்கரித்து வந்த இந்தியக் கொடுங்கோலர்கட்கு கடந்த சில ஆண்டுகளாக வேறொரு செய்தியைச் சீக்கிய மக்கள் சொல்லத் தொடங்கியுள்ளனர்.
இலண்டனிலுள்ள இந்தியத் தூதரகத்தில் காலித்தான் கொடியைப் பறக்க விட்டுள்ளார்கள் சீக்கியர்கள்; இந்தியத் தூதரகம் சீக்கியர்களால் முற்றுகையிடப்பட்டு அடித்து நொருக்கப்பட்டுள்ளது; விடுதலைப் போராட்டத்திற்கு அணிதிரட்டிய சீக்கிய மதகுருவை கனடாவில் வைத்துக் கொன்ற இந்தியாவிற்கு எதிராக உலகெங்கும் கண்டனக் குரல்கள் ஒலிக்கின்றன; பஞ்சாப்பில் காவல்நிலையம் முற்றுகையிடப்படுகிறது; தாம் பிரிந்துசெல்வதற்கான பொதுவாக்கெடுப்பைச் சீக்கியர்கள் கோருகின்றார்கள்; வரலாறு காணாத மாபெரும் உழவர் போராட்டத்தை டெல்கியில் நடத்தி சீக்கிய தேசிய இனவெழுச்சி மீளெழுச்சி கொள்கின்றது; விடுதலைக்கென கருவியேந்திய சீக்கியப் புரட்சியாளர்களின் பின் மக்கள் மீண்டும் அணிவகுக்கின்றார்கள்.
ஆம் இவை தான் நீங்கள் ஏடுகளில் காணக்கிடைக்கும் அண்மைச் செய்திகள். அவர்களும் விடுதலைப் போராட்டத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான முதற்படியாகப் போதையிலிருந்து இளையோரை விடுவிக்கும் மறுவாழ்வு நடுவங்களைத்தான் (Rehabilitation Centres) அமைத்தார்கள். விடுதலைக்காகப் போராட வந்தவர்கள் போதைப்பொருள்கட்கு எதிராகத்தான் போராட வேண்டியிருந்தது. அந்தப் போராட்டம் இன்னமும் தான் தொடர்கிறது. ஆனால் தொடங்கிய வேகத்திலேயே அவர்களின் விடுதலைப் போராட்ட முனைப்பும் மீளெழுச்சி கொள்கின்றது. சீக்கியர்கள் விடுதலைக்காகக் கொடுத்த விலையிலும் தமிழர்கள் தமது தேச விடுதலைக்காகக் கொடுத்த விலை பன்மடங்கு கூடுதலானது. ஒப்பிடுதற்கரிய போரியல் வெற்றிகளையும் பாரிய ஈகங்களையும் அவர்களைக் காட்டிலும் பன்மடங்கு கூடுதலாகத் தமிழர்கள் நாம் எமது விடுதலைக்காகச் செய்திருக்கின்றோம். எமது ஆற்றல் வளங்கட்குக் கூடுதலாக எம்மை ஒறுத்து எமது விடுதலைக்காகப் போராடியிருக்கின்றோம். இருந்துமென்ன? இப்போது போதைப்பொருள்கட்கு எதிராகப் போராட வேண்டியிருக்கின்றது. பரவாயில்லை, அதிலிருந்து தொடங்குவோம். சீக்கியர்களைப் போல நாமும் மீளெழுச்சி கொள்வோம். இல்லையில்லை……. அவர்களிலும் வீரியமாக நாம் மீளெழுச்சி கொள்வோம். அவர்கட்குக் குருநாணக் துணைநிற்பதாக அவர்கள் நம்புகிறார்கள். எமது மக்கட்குத் துயிலுமில்லங்கள் துணைநிற்கும். காசுமீர் மக்களும் சீக்கியர்களைப் போல மீண்டெழ வேண்டும். போதையிலிருந்து விடுபட்டுக் காசுமீரிய மக்களும் விடுதலைப் பரணி பாடியவாறே ஒடுக்கும் இந்திய அரசிற்கு எதிராக வெற்றிச் சங்கு ஊதட்டும். தேச அரசமைக்கும் தேசிய இனங்களின் வரலாற்றுப் போக்கை எந்தவொரு ஒடுக்கும் அரசினாலும் முற்றிலுமாகத் தடுத்து நிறுத்திட இயலாது என்ற வரலாற்றின் செய்தியைத் தமிழர்கள் நாம் மறுபடியும் மறுபடியும் போகுமிடங்களிலெல்லாம் சொல்லிக் கொள்வோம். செயல்வினையாற்றுவோம்.
-முத்துச்செழியன்-
2024.07.14
Be the first to comment