அதிகார போதையில் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள்

குருதியையும் சதையையும் கொட்டி விடுதலைக்காய்ப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் அரசியலை, அதிகார போதைக்காகவும் தத்தமது சொந்த கட்சி அடையாளங்களுக்காகவும் நாறடித்து, நாற்றமெடுக்க வைத்துள்ளனர் அதிகார போதையில் அலையும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள். தமிழரசுக்கட்சி, அகில இலங்ககை தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

தமிழினத்தின் மீது சிங்கள அரசு இனப்படுகொலை நிகழ்த்தி வெறும் ஆறு மாதங்களேயாயிருந்த நிலையில், விடுதலைப்புலிகளால் சீரமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட கூட்டமைப்பு என்ற அரசியற் கட்டமைப்பை உடைத்து வெறும் கதிரைக்காக ஆசைப்பட்டுத் தனது பரம்பரைக் கட்சியை மீள் உருவாக்கம் செய்ய வெளியேறிய கஜேந்திரகுமார், வெளியேற்றம் தொடர்பில் மக்களுக்குக் கூறிய காரணம் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கையில் இருந்து தவறுகிறது” என்பதேயாகும். அந்தத் தேர்தலில் மக்களால் முற்றுமுழுதாகப் புறக்கணிக்கப்பட்ட கஜேந்திரகுமார், தொடர்ந்து வந்த தேர்தல்களை அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகப் புறக்கணிக்கச் சொல்லி மக்களிடம் தெரிவித்து வந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் “ஒற்றையாட்சியை எதிர்க்கிறோம்” என்பதை வெளிப்படுத்தும் முகமாக மாகாணசபைத் தேர்தலையும் புறக்கணிக்கும் படி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், “ஒற்றையாட்சியை ஆதரிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதால்” அதற்கு எதிர்ப்புக் காட்டும் முகமாகத் தமக்கு வாக்களிக்கும் படி மறுபடியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அணி சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வந்து நிற்கிறது.

“ஒரு நாடு இரு தேச கொள்கைக்கும், ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கும் என்ன தொடர்பு?” என்று கேட்டால் யாரிடமும் பதிலில்லை.

ஒற்றையாட்சியை எதிர்க்கும் நீங்கள், அரசியல் அமைப்பின் 6ம் திருத்தச்சட்டம் குறித்து ஏன் பேச மறுக்கிறீர்கள் என்று கேட்டால் அதற்கும் பதிலில்லை.

எல்லாம் மக்களை ஏமாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றி எஞ்சிக்கிடக்கும் வாழ்வை அரச சலுகைகளோடு வாழ்ந்துவிட்டுப் போக நினைக்கும் அரசியல் போதையையே தவிர வேறெதுவுமில்லை.

2009 இன அழிப்பிற்குப் பிற்பாடு மாவீரர் எழுச்சி நாள் உள்ளிட்ட எந்தவொரு நிகழ்விற்கும் மக்களோடு நின்று நினைவேந்தல் செய்ய முன்வராமல், தமது கட்சி அலுவலகத்திற்குள் முடங்கிக் கிடந்தது மாத்திரமல்லாமல், நவம்பர் 27ற்குப் பதிலாக வேறொரு நாளொன்றை மாவீர்களுக்குப் பொதுவான மாவீரர்நாளாக உருவாக்க வேண்டும்  என்று அறிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 2017ம் ஆண்டில் மாவீர் எழுச்சி நிகழ்வுகளின் போது மக்களோடு இணைந்த பொழுதே அது ஏதோ ஒரு அரசியல் இலாபத்தை ஈட்டுவதற்கான செயற்பாடுதான் என்று மக்கள் ஊகிக்கக் கூடிய நிலையில் தான் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற கட்டமைப்பை உடைத்து, அந்தப் பேரவை இந்தப் பேரவை என்று மக்களைத் திசைதிருப்பி, அதன் உச்சக் காட்சியாக‌ வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனைத் தமிழினத் தலைவராக அறிவித்து, மிக முறைகேடான‌ அரசியல் பித்தலாட்டங்களை ஆடிவிட்டு, இன்று இன்னுமொரு புதிய பேரவை ஒன்றை உருவாக்கி அதற்கும் தமது சைக்கிள் சின்னத்தையே சின்னமாக அறிவித்து அரசியல் செய்யும், மிகக் கேவலாமன அரசியற் பண்பாடொன்றைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த இனத்திற்குக் காட்டியிருக்கிறார். தமது பரம்பரைக் கட்சியைக் கட்டியெழுப்புவதை விடுத்து,  தமிழ்த்தேசிய விடுதலைமேல்  உண்மையான பற்றிருந்திருந்தால் 2009 முதல் 2017 வரையிலான இடைப்பட்ட காலத்தில் மக்கள் மயப்படுத்திய தமிழ்த்தேசியத்திற்கான கட்சியொன்றைப் பதிவுசெய்து, சின்னத்தையும் கொள்கையையும் மக்களுக்கு அறிமுகம் செய்து மக்களை மாற்றம் நோக்கி நகர்த்தியிருக்கலாம்.

அல்லது த.தே.கூட்டமைப்பிற்குள் இருந்தபடி ஆளுமையைக் கட்டியெழுப்பி மக்கள் செல்வாக்கை அதிகரித்து அதனூடாகத் தமிழ்த்தேசியத்தின் பெரும் ஆற்றலாகத் த.தே.கூட்டமைப்பைஆற்றலாகத் தொடர்ச்சியாக வழிநடத்தியிருக்கலாம்,  மாறாக தமிழின விரோத செயற்பாடுகளை முன்னெடுத்த “அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசை” தமிழினின விடுதலைக்கான கட்சிபோல் அடையாளம் காட்ட நினைப்பது பெரும் சூழ்ச்சியே . 

அது போக சரியான முறையில் மக்களை வழிநடத்தி அரசியல் இலக்கை அடைவதற்கான வழித்தடத்தைச் செப்பனிட வேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று பதவிக்காகத் தெருக்களில் கைகலப்பில் ஈடுபடுகிறது.

அரசியல் அறிவோ, தொலைநோக்குச் சிந்தையோ, நிருவாகத் திறமையோ இல்லாமல், வெறுமனே அகவையையும், கட்சியின் உறுப்புரிமைக் காலத்தையும், தலைமைக்கு உவப்பாக இருக்கக்கூடிய தன்மையையும் மாத்திரமே கருத்திற்கொண்டு வேட்பாளர்களை மக்கள் தலைவர்களாக நிறுத்தும் இந்திய அரசியல் முறையை ஈழத்தமிழர்களிடத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது தமிழரசுக் கட்சியும் இன்றைய த.தே.கூட்டமைப்பும்.

சிங்களதேசத்திற்கும் இந்திய வல்லாதிக்கத்துக்கும் என்றுமே அடிமையாக இருந்து தமிழீழ விடுதலைக்குப் பெரும் முட்டுக்கட்டடையாக இருந்துவரும் சங்கரி இன்று தமிழ்த் தேசியம் பேசுமளவிற்கு ஈழத் தமிழர்களின் அரசியல் கையாலாகத் தனத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இப்படிச் சென்ற‌ நூற்றாண்டு அரசியல்வாதிகளால் வெட்கக்கேட்டுடன் குழம்பிக்கிடப்பது ஈழத்தமிழர்களின் விடுதலை அரசியல் களம் மட்டுமல்லாது இளைஞர்களும்தான்.

இளைஞர்கள் ஒரு பகுதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் பெரும் புரட்சியாளராகவும் இன்னொரு பகுதி சுமந்திரனைப் பெரும் அறிவாளியாகவும் மேலும் சிலர் கட்சிகளின் வெறிபிடித்த ஆதரவாளர்களாகவும் மாறியிருக்கிறார்கள். இத்தனை பேரையும் அமைதியாகவும் நிதானமாவும் அவதானித்துக் கொண்டு பொறுமையோடு விடுதலை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எல்லாத் தரப்பினரையும் நிராகரித்தால், விமர்சித்தால் யார் பின்னால்தான் செய்வது என்ற கேள்வி தவிர்க்கப்பட முடியாததே.

ஏற்கனவே காகத்தின் பல பதிவுகளில் இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறோம். நீங்கள் நம்பும் அரசியல்வாதிகளிடம் கேள்விகளைக் கேளுங்கள்.

  1. 6ம் திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதை வெளிப்படையாக அறிவிக்கச் சொல்லுங்கள்.
  2. சிறையில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பில் உங்கள் நிலைப்பாடென்ன மற்றும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை சிங்கள அரசு நிராகரித்துவரும் நிலையில் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையென்ன என்பதை கேளுங்கள்.
  3. திட்டமிடப்பட்ட சிங்கள, முஸ்லீம் குடியேற்றங்கள் மற்றும் பொருண்மியக் கட்டமைப்புகளின் அழிப்புப் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன என்பதைச் சொல்லச் சொல்லுங்கள்.
  4. ஊழலற்ற நிருவாகக் கட்டமைப்பை உருவாக்கும் திட்ட முன்மொழிவை மற்றும் அதிகாரிகளின் பொறுப்புகள், அதிகாரம் அடக்கிய கோப்பை மக்கள் முன்னிலையில் வைக்கச் சொல்லுங்கள்.
  5. வடக்கு, கிழக்கில் அடுத்த 5 ஆண்டுகளிற்கான பொருண்மியக் கட்டமைப்புகளுக்கான திட்டம் என்னவென்பதை வெளிப்படையாகக் கூறச் சொல்லுங்கள்.
  6. வடக்கு, கிழக்கில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகள் தொடர்பான திட்டம் என்னவென்பதைச் சொல்லச் சொல்லுங்கள்.

ஆகக் குறைந்தது மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த 6 கேள்விகளுக்குமாவது நீங்கள் நம்பும் அரசியல்வாதியிடம் பதில் இருக்கிறதா என்றுபாருங்கள்.

விடுதலைக்கான அரசியலுக்குச் சிறந்த திட்டமிடல் வேண்டும். அந்தத் திட்டமிடலால் தான் மக்களைச் சரியான கட்டமைப்புக்குள் அணியப்படுத்த‌ முடியும். வெறுமனே காழ்ப்புணர்சி அரசியலும் “நான் சரி அவன் பிழை” என்ற அரசியலும் தமிழீழ மக்களுக்கு ஒருபோதும் நன்மை விளைவிக்கப்போவதில்லை. மாறாக, சிங்கள மற்றும் இந்திய ஒடுக்குமுறை அரசுகட்குத் தமிழீழ மக்களைப் பிரித்தாள உதவும்.

கதிர்

17-12-2017

படங்கள்: இணையம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*