இந்தியாவின் வெளியுறவிற்கு விழுந்த அடுத்த இடி; மாலைதீவு 2.0 ஆக இந்தியாவிற்குத் தலையிடியை ஏற்படுத்திய வங்காளதேசத்தின் மக்கள் போராட்டம் -முத்துச்செழியன்-

அலைகடலென மக்கள் திரண்டு வங்காளதேசத்தில் நடத்திய மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வங்காளதேசத்தின் தலைமை அமைச்சராகத் (Prime Minister) தொடர்ந்து 15 ஆண்டுகட்கும் மேலாகப் பதவிவகித்து வந்த சேக் கசினா அவர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடி இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்துள்ளார். அரசுப் பணியில் கொண்டுவரப்பட்ட இடவொதுக்கீடானது (Job Quota) இளையோர்களிடத்தில் ஏற்படுத்திய வெறுப்புணர்வே இந்தப் போராட்டத்திற்கான உடனடிக் காரணமாக இருந்தாலும், இந்தப் போராட்டத்தின் அடிப்படை மற்றும் முதன்மைக் காரணிகளானவை தெற்காசிய நாடுகளின் புவிசார் அரசியலுடன் நெருங்கிய தொடர்புடையன என்பதை நாம் ஈண்டு நோக்க வேண்டும். சேக் கசினா என்பவரின் அரசியற் பின்னணி என்ன? அவர் யாருடன் ஒட்டான உறவுகளைக் கொண்டிருந்தார்? யாருடைய நலன்கட்காக அவர் பாடாற்றினார்? அவருடைய அரசியற் பொருண்மியக் கொள்கை எத்தகையது? அவரை ஆட்சியில் நீடிக்கச் செய்ய வேண்டிய தேவை யாருக்கிருந்தது? போன்ற வினாக்கட்கு விடை தேடாமல் அண்மையில் வங்காளதேசத்தில் நடந்தேறிய மக்கள் போராட்டத்தைப் புரிய வேண்டிய விதத்திற் புரிந்துகொள்ளவியலாது.

விடுதலைபெற்ற வங்காளதேசத்தின் முதலாவது தலைமை அமைச்சரும் வங்காளதேச விடுதலைக்குக் காரணமானவர் என்றும் கூறிக்கொள்ளப்படுகின்ற சேக்முஜிபுர் ரகுமான் அவர்களின் மகளே சேக் கசினாஆவார். உண்மையில், வங்காளதேச விடுதலைக்குக் காரணமானவர் சேக்முஜிபுர் ரகுமான் அவர்கள் தானா? என்பதே வரலாற்றின் விளைபொருளை மட்டும் நோக்காமல் அதன் இயங்கியலை முறையாக நோக்குபவர்கட்கு எழும் ஐயுறவான வினாவாகும். பிரித்தானிய காலனியர்களினதும் அவர்களோடு ஒட்டிப் பிழைத்தோரினதும் சந்தை நலன்கட்காகத் தேசிய இனங்களினதும் தேசங்களினதும் நிலவுகையைக் கணக்கிலெடுக்காமல் மத அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தியா மற்றும் பாகித்தான் ஆகிய நாடுகளில் தேசங்களானவை தேச அரசமைக்கும் வரலாற்றுப்போக்கை எவராலும் வரலாறு நெடுகிலும் தடுத்துவிட இயலாது என்பதை இங்கு அழுத்திக் கூற முனைகிறோம். அந்த வகையிலே, கிழக்குப் பாகித்தானாக இருந்த வங்காளதேசமானது வரலாற்றின்வழி தனக்கான தேச அரசை அமைத்தது.

உருதுமொழியே ஒட்டுமொத்த பாகித்தானிற்குமான ஒரே அலுவல்மொழியென மேற்குப் பாகித்தானானது (இன்றைய பாகித்தான்) தனது உருதுமொழியை வங்காளமொழியைத் தம் மொழியாகக்கொண்ட கிழக்குப் பாகித்தான் (இன்றைய வங்காளதேசம்) மக்கள் மீது திணித்தபோது 1952 இல் மாபெரும் மொழிப்போராட்டம் வெடித்தது. வங்காளி மக்களின் மொழிப்பற்றானது வங்காளதேசப் பற்றாகவும் அதுவே வங்காளதேச அரசமைக்கும் விடுதலை வேட்கையாகவும் வரலாற்றின் வழி வளர்ச்சி கண்டது. வங்காளிகளின் இந்த எழுச்சியானது வங்காளதேசக் கனவை முனைப்புறுத்துபவர்களின் பின்னால் அவர்களை அணிதிரளச் செய்தது. அந்த வகையில் 1970 களின் தொடக்கத்தில் மாபெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றுக்கொண்ட சேக்முஜிபுர் ரகுமான் தலைமைதாங்கிய “அவாமி லீக்” கட்சியின் வெற்றியை மேற்குப் பாகித்தானானது ஏற்கமறுத்தபோது வங்காளதேசத்தின் தனியரசமைக்கும் விடுதலைப் போராட்டமானது வீறுகொண்டெழுந்தது.

1952 இல் போராடிய மொழிப் போராட்ட இயக்கத்தினால் விழிப்புப்பெற்ற மக்கள், மாணவர்கள், இளையோர், உழவர், ஏனைய உழைக்கும் மக்கள், அன்றைய பாகித்தானின் இராணுவத்திலிருந்த வங்காளிகள் எனப் பலதரப்பினரும் இணைந்து “முக்தி பாகினி” என்ற பெயரில் அணிசேர்ந்த விடுதலை அமைப்பானது குருதி சிந்திப் பெற்றதே வங்காளதேச விடுதலையாகும். இதில் மக்களை எழுச்சிகொள்ளச் செய்வதில் முதன்மைப் பங்காற்றிய அரசியற் தலைவரே சேக்முஜிபுர் ரகுமான் ஆவார் என்பதோடு அவர் ஒரு விடுதலைப் போராளியல்லர் என்பதையும் நாம் தெளிவுறத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரே மொழிபேசும் மக்களே தமது தாயகநிலம், தொடர்ந்தேர்ச்சியான‌ வரலாறு, ஒத்த பொருண்மிய வாழ்வு, அவற்றின் கூட்டால் வரும் “நாம் ஒருவர்” என்ற மனநிலை என்பனவற்றால் ஒருதேசமாக அரசியற் கட்டுறுதி பெறுகிறார்கள் என்பதும் தேசங்களின் வரலாற்று வளர்ச்சியே தேச அரசமைத்தல் என்ற அரசியல் முனைப்பென்பதையும் நாம் ஈண்டு மனங்கொள்ள வரலாற்றில் நடந்தேறிய விடுதலைப் போராட்டமே வங்காளதேச விடுதலைப் போராட்டம் என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். தேசங்களையும் தேசிய இனங்களையும் சிறைப்படுத்தி இந்து என்ற கட்டமைக்கப்பட்ட மதத்தை வைத்துச் சந்தையை ஒரேயினதாகக் கட்டமைக்கும் இந்தியாவானது, மதத்தை வைத்து நாடமைக்கவியலாதென்றும் மொழியே தேசமொன்றின் அடிப்படையலகென்றும் வரலாற்று வகுப்பெடுக்கும் வங்காளதேச விடுதலைக்கு உடன்நின்றதான வரலாற்றின் முரண்நகையை நாம் இங்கு மனங்கொள்ள வேண்டும்.

வங்காளதேச விடுதலைப் போராட்டத்தின் நயன்மைக்காக (legitimacy) இந்தியாவானது வங்காளதேசத்துடன் துணைநிற்கவில்லை என்றும் மாறாக பாகித்தானைப் பிளவுபடுத்தி வலுக்குன்றச் செய்யும் நோக்கில் மட்டுமே இந்தியாவானது இந்த விடயத்திற் தலையிட்டிருக்குமென்றும் அரசியலில் பாலர் வகுப்புப் பயின்றவர்கள் கூட நன்கு புரிந்துகொள்வர். இவ்வாறாக, இந்திய நலன்களைப் பட்டெறியக் கூடிய வங்காளதேசத்தின் தலைவராக சேக்முஜிபுர் ரகுமான் அவர்களையே இந்தியா தொடக்கத்திலேயே கண்டடைந்தது. வங்காளதேச விடுதலைப் போராட்டத்திற்கான தளங்களானவை இந்திய எல்லைக்குள் இருந்தால், எந்நேரமும் வங்காளதேசத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலுமென்று இந்தியாவானது கணக்குப்போட்டுச் செயற்பட்டபோது, இயன்றவரை வங்காளதேச விடுதலைப் போராட்டத் தளங்களை வங்காள எல்லைக்குள் அமைக்கும் முனைப்பையே வங்காளதேச விடுதலைப் போராளிகள் கொண்டிருந்தனர். எனவே, விடுதலைப் போராளிகள் மீது ஐயுறவு கொண்டிருந்த இந்தியாவானது சேக்முஜிபுர் ரகுமான் போன்ற அரசியற் தலைவர்களை முன்னிலைப்படுத்துவதே தமது நலன்கட்கு நன்மை பயக்கும் என்று முடிவெடுத்துக் காய்நகர்த்தியது.

உயிரீகங்கள் செய்து குருதி சிந்திப் பெற்ற வங்காளதேச விடுதலையின் பின்னர் அதனது முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்ற சேக் ரகுமான் அவர்களும் அவரது குடும்பத்தினரும் ஊழலில் ஊறிக்கிடந்ததுடன், போராடிய மக்கள் ஏழ்மையில் உழன்றபோது இவர்களோ ஒய்யாரமாக வாழத் தொடங்கினர். வறுமையையே வாழ்வாகக்கொண்ட வங்காளதேச மக்கட்குக் கிடைக்க வேண்டிய உதவிப்பொருள்களைக் கூட சேக்கின் குடும்பத்தினர் களவாடிக் கொண்டனர். இந்திய நலன்கட்காக இறைமையுள்ள வங்காளதேச அரசை வெறும் பண்பாட்டு அரசு எனும் நிலைக்குத் தரமிறக்குமாற்றை சேக் முஜிபுரின் ஆளுந்தரமானது வெளிப்படுத்தியது. இதனால், தேசப்பற்றும் அரசியற்தெளிவுமுடையோர் சேக் முஜிபுரின் மீது வெறுப்படைந்தனர். இந்த நிலையைப் பயன்படுத்திப் புரட்சிகர முனைப்புக் கொண்டோர் வங்காளதேசத்தின் ஆட்சியதிகாரத்தை அடைந்துவிடக் கூடாது என்ற வல்லாண்மையாளர்களின் சூழ்ச்சிகரமான முனைப்பானது இராணுவத் தரப்பிலிருந்த ஆட்சியதிகாரம் மீது வேட்கைகொண்டோர் கைக்கு வங்காளதேசத்தின் ஆட்சிக்கட்டில் வருவதற்கு வழியமைத்துக் கொடுத்தது.

வங்காளதேசத்தின் ஆற்றுநீர் உரிமை முதல் அத்தனை உரிமைச் சிக்கல்களிலும் இந்திய நலன்கட்காக இந்தியாவின் சொற்பேச்சுக் கேட்டு நடந்துவந்த சேக்முஜிபுரினை இந்தியாவின் அடிவருடியாகவே மக்கள் பார்த்தனர். இன்று 50 ஆண்டுகள் கழித்து வங்காளதேசத்தின் தலைமகனாகக் குறிப்பிடப்பட்டு வந்த சேக்முஜிபுரின் சிலையானது மக்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டிருப்பதானது இந்தியப் பித்து (Indomania) முற்றிப்போய் ஒடுக்கும் இந்தியாவின் நலன்கட்கு இசைந்து ஒழுகுபவர்கட்கு வரலாற்றில் மண்ணின் மக்கள் எத்தகைய ஒறுப்பை (retribution) வழங்குவார்கள் என்பதற்கான வரலாற்றுப் பாடமாக அமைகின்றது என்பதை இவ்விடம் நினைவூட்ட விரும்புகின்றோம்.

9 மாதகால மறவழிப்போராட்டத்தின் பின்பாக 1971.12.16 அன்று விடுதலைபெற்றுத் தனிநாடான வங்காளதேசத்தின் முதலாவது தலைமை அமைச்சரும் இந்தியாவின் நலன்கட்காகத் தொண்டாற்றியவருமான சேக்முஜிபுர் ரகுமான் அவர்கள் அவரின் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து 1975.08.15 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை நடந்தபோது ஐரோப்பாவிற்குச் சுற்றுலா சென்றிருந்த சேக் முஜிபுரின் இரு மகள்களும் (சேக் கசினாவும் அவரது உடன்பிறந்தவரும்) மருமகனும் உயிர்தப்பியதன் பின்னர் அப்போதைய இந்தியாவின் தலைமை அமைச்சரான இந்திராகாந்தியால் அரசியற் தஞ்சம் வழங்கப்பட்டனர். 2024.08.05 அன்று தலைமை அமைச்சர் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சேக் கசினா 1975 ஆம் ஆண்டிலிருந்து 1981 ஆம் ஆண்டுவரை புதுடெல்கியிலே அரசியற் தஞ்சம்பெற்று வாழ்ந்து வந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பின்னர் சேக் கசினா இந்தியாவிலிருந்தபோதே அவரது தந்தை தலைமைதாங்கிய “அவாமி லீக்” கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு 1981 ஆம் ஆண்டு வங்காளதேசம் திரும்பினார்.

1975 இல் தொடங்கிய இராணுவ ஆட்சி 1990 இல் முடிவிற்கு வந்ததைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு தலைமை அமைச்சராக “அவாமி லீக்” என்ற தனது குடும்பக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட சேக் கசினா அவர்கள் தலைமை அமைச்சராகத் தெரிவாகி 2001 ஆம் ஆண்டு தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்தார். இந்தியாவுடன் இவரிற்கிருந்த ஒட்டான உறவைப் பயன்படுத்தி கங்கை ஆற்றுநீரினை வங்காளதேசத்திற்குப் பகிர்ந்து வழங்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டு வங்காளதேசத்தின் உரிமைகளை இந்தியாவுடன் அமைதியாகப் பேசி நிலைநாட்டியவராகத் தன்னைத் தானே சேக் கசினா அவர்கள் தம்பட்டம் அடித்துக்கொண்டார். ஆனால், இந்தியாவுடனான வங்காளதேசத்தின் எல்லைச் சிக்கல், ஆற்றுநீர் உரிமை தொடர்பான விடயங்கள் மற்றும் வங்காளதேசத்தின் இறையாண்மையை மதிக்காத இந்தியாவின் அத்துமீறல்கள் என்பன தீர்க்கப்படாத சிக்கல்களாகவே தொடர்ந்தன. ஆனாலும், ஏழ்மையில் உழலும் வங்காளதேசத்தினரின் தலையெழுத்தை மாற்றுவதற்குத் தான் பாடாற்றுவதாகப் பாசாங்கு செய்த சேக் கசினாஅவர்கள் 2009 ஆம் ஆண்டு மீண்டும் தலைமை அமைச்சராகப் பதவியேறி 2024 வரை பதவிதொடர்ந்தார்.

சேக் கசினாவின் இந்த 15 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் வங்காளதேசமானது வெளியாரின் வேட்டைக்காடாகியது; கொரோனாப் பெருந்தொற்றின் உலகளாவிய பாதிப்பானது வங்காளதேசத்தை ஏழ்மையில் உழலச் செய்தது; வேலைவாய்ப்பின்மை வங்காளதேசத்தின் சிக்கல்களில் தலையாய சிக்கலாகியது; காலநிலை மாற்றத்தின் விளைவான இயற்கைப் பேரிடர்கள் வங்காளதேசத்தினை ஆட்டிப்படைத்தன; இந்தியாவின் ஒப்புதலைப் பெற்று சீனாவினது உட்கட்டுமானத் திட்டங்களும் சேக் கசினாவால் முன்னெடுக்கப்பட்டது; உலக வல்லாண்மையாளர்களின் முதலீடுகளைக் காட்டி நாடு முன்னேற்றப் பாதையிற் செல்வதாக வணிகச் சுட்டிகள் சிலவற்றைக் காட்டி சேக் கசினா தம்பட்டமடித்து வந்தார். உட்கட்டுமானத் திட்டங்களை விலைமனுக்கோரிப் பெறுவதென்றால் சீனாவை விட யாரும் தெரிவாக மாட்டார்கள் என்ற நிலையைக் கருத்திற்கொண்டு 12 பெருந்தெருக்களுடைய கட்டுமானம், 21 பாலங்கள் அமைத்தல், 27 மின்னாற்றல் நிலையங்களை அமைத்தல் போன்ற வணிக நோக்கிற்குள் மட்டுப்படுத்திவிடக் கூடிய திட்டங்களே சேக் கசினாவால் சீனாவிற்கு வழங்கப்பட்டன. ஆனால், புவிசார் அரசியலில் சீனாவிற்கு உகந்ததாக அமையக்கூடியவாறான திட்டங்கள் சேக் கசினாவால் மறுக்கப்பட்டே வந்தன. ஆனால், இந்தியாவுடன் சேக் கசினா கொண்டிருந்த ஒட்டான உறவானது இந்தியாவின் வணிக மற்றும் புவிசார் நலன்கட்கான நாடாக வங்காளதேசத்தை மாற்றியது. ஆனால், எல்லைச் சிக்கல், ஆற்றுநீர் உரிமைச் சிக்கல் போன்ற பல சிக்கல்களை இந்தியாவுடன் கொண்டிருந்த வங்காளதேச மக்கட்கு சேக் கசினாவின் மட்டுமீறிய இந்தியச் சார்பு எரிச்சலை ஏற்படுத்தியது.

வங்காளதேசத்தின் அமைவிடமே இந்தியாவுடன் தொடர்ச்சியாகப் பிணக்குகளைக் கொண்டிருக்க வேண்டிய சூழலை இயல்பாகவே ஏற்படுத்துகின்றது. உண்மையில், 54 ஆறுகளிலிருந்து நீரைப் பெறும் உரிமை வங்காளதேசத்திற்கு இருக்கின்றது. மேற்குவங்காளம், அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய இந்தியாவிற்குள் மாநிலங்களாகச் சிறைப்பட்டிருக்கும் தேசங்களை இந்தியாவானது வங்காளதேசத்துடனான எல்லையாகக் கொண்டுள்ளது. மிக நீளமான இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான இந்த எல்லையானது 4096 கிலோமீற்றர் நீளமுடையது. இந்தியாவின் ஒடுக்குமுறைக்கெதிராக விடுதலைபெறும் வேட்கையுடன் போராடும் அசாம், மணிப்பூர், நாகலாந்து, மிசோரம், திரிபுரா, மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட இயக்கங்களானவை தமது விடுதலைப் போராட்ட வழங்கல்கட்கான பின்தளமாக வங்காளதேசத்தைப் பயன்படுத்துமாறே வங்காளதேசத்தின் அமைவிடச் சூழமைவுள்ளது. ஆனால் இந்தப் போராளிகளை வேட்டையாடிக் கைதுசெய்து இந்தியாவிற்குப் பிடித்துக்கொடுப்பதில் சேக் கசினா அவர்கள் முன்னின்று உழைத்தார். இந்தியாவிற்கு எதிராகப் போராடும் எல்லா அமைப்புகளையும் அவற்றிற்குத் துணைநிற்கும் வங்காளதேச ஆதரவுத் தளங்களையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்பதில் சேக் கசினா அவர்கள் முன்னின்றார். வங்காளதேசத்தினை இந்தியாவின் திரிபுரா மாநிலத்துடன் இணைக்கும் தொடர்வண்டி வழித்தடங்கள், இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவிற்குச் செல்லக்கூடிய விரைவுப் பேருந்து வசதிகள் என இந்தியாவின் ஒரு மாநிலம் போல வங்காளதேசம் சேக் கசினா காலத்தில் மாற்றங்கண்டு வந்தது. ஏறத்தாள 2000 மெகாவாட் மின்னலகு அளவுள்ள மின்சாரத்தை வங்காளதேசமானது இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்கின்றது. இந்தியாவின் சிலிகுரியிலிருந்து வங்காளதேசத்தின் பார்வதிபூரிற்கு எரிபொருளை குழாய்வழியாக எடுத்துச் செல்லும் திட்டமானது முனைப்புறுகின்றது.

Marico, Emami, Dabur, Asian Paints, Tata Motors என இந்தியாவின் பெருநிறுவனங்கள் வங்காளதேசத்தில் பெருவணிகமாற்றுகின்றன. இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையில் விரிவான பொருண்மியக் கூட்டு ஒப்பந்தமானது (CEPA) சேக் கசினா காலத்தில் கைச்சாத்தானது; சுதந்திர வர்த்தக ஒப்பந்தமும் (FTA) கைச்சாத்தானது. அமெரிக்க டொலர்களில் தங்குநிலையைக் குறைப்பது என்ற போர்வையில் இந்திய நாணயமானது இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்குமான வணிக நடவடிக்கைகளின் போதான பணப்பரிமாற்றத்திற் பயன்படுத்தப்படுமளவிற்கு வங்காளதேசத்தில் இந்தியச் செல்வாக்கானது சேக் கசினாவின் காலத்தில் மிகுந்திருக்கின்றது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் வணிக மேலாண்மைக்கு உறுதுணையாக அமையவல்ல‌ BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) என்ற புவிசார் குழுவாக்கத்தில் (geopolitical grouping) வங்காளதேசமானது முதன்மைப் பங்கு வகிக்கின்றது. இவ்வாறாக, இந்தியாவுடன் ஒட்டியுறவாடிய சேக்முஜிபுர் ரகுமானின் மகளான சேக் கசினா அவர்களும் “அவாமி லீக்” என்ற அவர்களது குடும்பக் கட்சியும் இந்திய நலன்கட்காகப் பாடாற்றுவதில் தமக்குவமை இல்லாதவர்கள் என்பதை நாம் இங்கு ஈண்டு நோக்க வேண்டும்.

வங்காளதேசத்தின் ஆற்றுநீர் உரிமையை மறுக்கும் இந்தியாவின் போக்கு, இந்தியாவுடனான எல்லைச் சிக்கல் மற்றும் வங்காளதேசத்தினைத் தனது ஒரு மாநிலம் போல மேலாண்மை செய்ய நினைக்கும் இந்தியாவின் மெத்தனப்போக்கு, இந்தியாவில் இசுலாமியர்கள் மோடி அரசால் மிகக் கொடூரமாக இழிவுபடுத்தப்படுகின்றமை, வங்காளமொழிக்கு மிஞ்சியதாக இந்தியைக் கட்டமைத்தல் போன்ற இந்தியாவின் சேட்டைகளால் வங்காளதேசத்தின் மக்களிடத்தில் இந்தியா மீதான வெறுப்பானது அதிகரித்துவரும் அரசியற் சூழலில், இந்தியாவுடன் ஒட்டியுறவாடி இந்தியாவின் நலன்கட்காக இயங்கும் சேக் கசினா மீதும் “அவாமி லீக்”என்ற அவரது குடும்பக் கட்சி மீதும் வங்காளதேச மக்கட்கு வெறுப்பு மேலிடத் தொடங்கியது. இதனால், சேக் கசினா ஆட்சி மீது மாணவர்கள், உழவர்கள் என பலரும் வெறுப்புக் கொண்டார்கள். இந்நிலையில் மக்களின் விருப்பையும் தேவைகளையும் கணக்கிலெடுக்காமல் தான் நினைத்ததை நடத்திக் காட்டும் முனைப்பில் அதிகாரவெறிகொண்டு சேக் கசினா செயற்படலானார்; எதிர்க்கட்சிகளை இரும்புக்கரங்கொண்டு ஒடுக்கினார்; குறைந்துவரும் தனது கட்சியின் செல்வாக்கை உயர்த்த அதிகாரத்தை முறையற்றுப் பயன்படுத்தலானார். தொடர்ச்சியாக ஆட்சியில் 15 ஆண்டுகளாகத் தலைமை அமைச்சராகவிருந்த பின்பாக 2024 இல் நடந்த தேர்தலில், சேக் கசினா அதிகாரமுறைகேடுகளில் ஈடுபட்டு நேர்மையற்ற தேர்தலை நடத்துவதாகக் குற்றஞ்சாட்டி, வங்காளதேச தேசியக் கட்சியென்ற (BNP) முகாமையான எதிர்க்கட்சியானது தேர்தற் புறக்கணிப்பில் ஈடுபட்டது; தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டது. இதனால், 2024 இல் நடைபெற்ற தேர்தலில் வெறும் 40% வாக்குகளே பதிவாகின. இந்தத் தேர்தலில் 76 அகவையுடைய சேக் கசினா அவர்கள் 2/3 தொகுதிகளில் வெற்றியைப் பெற்று மீண்டும் தலைமை அமைச்சராகப் பதவியைத் தொடர்ந்தார். சேக் கசீனா அவர்கள் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்ட செய்தி உலகெங்கிலும் பரவியதால் மேற்குலக நாடுகளில் சிலவும் அமெரிக்காவும் நேர்மையான தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டுமென்ற தொனிப்பட சேக் கசீனாவின் தேர்தல் வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்தனர். ஆனால், வங்காளதேசத்தில் சீனச்செல்வாக்கை மட்டுப்படுத்த சேக் கசீனாவினை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்ற இந்தியாவின் வலியுறுத்தலாலும் சேக் கசீனாவிற்குப் பன்னாட்டுத் தளத்தில் இந்தியா கொடுக்கும் ஆதரவாலும் சேக் கசீனா உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராகவே இருந்தார்.

அதாவது, எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏற்றும், சேக் கசினா மீதான வெறுப்பாலும் 60% ஆன மக்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதையே இந்தத் தேர்தலின் முடிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். தான் மக்களால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தன்மீதும் தனது கட்சியான “அவாமி லீக்” மீதும் மக்கள் மனக்குறையும் வெறுப்பும் அடைந்து வருகின்றார்கள் என்பதை நன்கு புரிந்துகொண்ட சேக் கசினா அவர்கள் தன்னையும் தனது கட்சியையும் பாதுகாக்கும் பொருட்டுத் தலைமை அமைச்சரென்ற அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். இந்தியாவில் மோடியும் அவரது இந்துத்துவக் கும்பலும் விரும்புவது போலவே, சேக் கசீனாவும் எதிர்க்கட்சியற்ற ஒரு கட்சி ஆட்சியை வங்காளதேசத்தில் கொண்டுவருவதற்கு முனைந்தார். இதன் தொடர்ச்சியாக, வங்காளதேச விடுதலைக்கு உழைத்த வீரர்களது குடும்பங்களிற்கும் அவர்களது தலைமுறைக்கும் அரச வேலைவாய்ப்பில் 33% இடவொதுக்கீடு (Job Quota) வழங்குவது என்ற திட்டத்தை சேக் கசினா கொண்டுவந்தார். வங்காளதேசத்தின் விடுதலையை தனது வெற்றியாகக் குத்தகைக்கு எடுத்த “அவாமி லீக்” என்ற கட்சியின் நீண்டகால உறுப்பினர்களே இவ்வாறு விடுதலைப் போராட்டத்திற்கு உழைத்தவர்கள் என அடையாளப்படுத்தப்படுவதால், அவர்கள் பயனடையுமாறு, அதாவது தனது கட்சியின் ஆதரவாளர்கள் பெருமளவில் பயன்படுமாறு இந்த அரச பணியில் இடவொதுக்கீடு என்ற திட்டத்தைத் தனது கட்சியின் எதிர்கால வளர்ச்சியை மனங்கொண்டு சேக் கசினா கொண்டுவந்தார். ஆனால், இது தொடர்பில் போராடும் மாணவர்கள் உச்சநீதிமன்றை அணுகிய போது, 33% ஆகவிருந்த இந்தக் குறிப்பிட்ட இடவொதுக்கீடானது 5% ஆகக் குறைக்கப்படுவதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

தற்போதைய‌ அரசுமீதுள்ள வெறுப்பாலும், வேலைவாய்ப்பின்மையால் ஏற்படும் உறுதியற்ற எதிர்காலம் தொடர்பிலான அச்சத்தாலும் கொதித்துப்போயிருந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஓரவஞ்சனையான இடவொதுக்கீட்டால் மேலும் கொதிப்படைந்ததால், தெருவிற்கு வந்து அதனை எதிர்த்துப் போராடத் தொடங்கினர். இந்த ஆண்டு யூலை மாதம் தொடங்கிய மாணவர்களின் அமைதிவழிப் போராட்டமானது, இந்த இடவொதுக்கீட்டினை இல்லாதாக்குமாறு கோரியே இடம்பெற்றது. ஆனால், மாணவர்களினது கோரிக்கையைச் செவிமடுக்காது அரச படைகளையும் தனது ஆதரவுக் குழுக்களையும் பயன்படுத்தி மாணவர்களை வன்முறையால் ஒடுக்கும் எண்ணத்துடன் அதிகாரவெறி பிடித்து ஆடிய சேக் கசீனா அவர்கள் மாணவர்கள் சுட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப்படும் போது அவர்கள் மாணவர்கள் அல்ல தீவிரவாதிகள் என்று மடைமாற்றியதோடு மாணவர்கள் செத்து மடிவதை வேடிக்கை பார்த்தார். 200 இற்கு மேற்பட்ட மாணவர்கள் (இதில் 32 பேர் சிறுவர்கள்) இந்த அரச வன்முறையினால் கொல்லப்பட்டனர்; 11,000 வரையானோர் சிறைப்படுத்தப்பட்டனர்; கண்ட இடத்திற் சுடும் ஊரடங்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது. இந்தப் பாகுபாடான இடவொதுக்கீட்டை நிறுத்த வேண்டுமெனவும், அரச வன்முறையால் கொல்லப்பட்ட 200 இற்கும் மேற்பட்டவர்களிற்கு நீதிகோரியும், இதற்கு அரசு பொறுப்பெடுத்து மக்களிடம் மன்னிப்புக்கேட்கக் கோரியும், இந்த அறப்போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை உடனே விடுதலை செய்யுமாறு கோரியும் மாணவர்கள் போராட்டத்தை ஒத்திவைத்தனர். ஆனால் சேக் கசினாவின் அரசானது மெத்தனப் போக்குடன் மாணவர்களின் கோரிக்கையைச் செவிமடுக்காமல் அசட்டை செய்தது.

இதனால் ஒத்திவைக்கப்பட்ட போராட்டமானது வீறுகொண்டெழுந்தது. மாணவர்களின் நயன்மையான அமைதிவழிப் போராட்டத்தை வன்முறைகொண்டு அரசானது ஒடுக்கிய விதத்தால் வெகுண்டெழுந்த மக்கள் திரளால் மாணவர் போராட்டமாகத் தொடங்கிய இந்தப் போராட்டமானது அனைத்துத் தரப்பு மக்களும் பங்கெடுத்த மக்கள் போராட்டமாக மாறியது. தொடக்கத்தில் பாகுபாடான இடவொதுக்கீட்டைத் திரும்பப்பெறுமாறு மாணவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது சேக் கசீனாவைப் பதவிவிலகுமாறு கோரித் தீவிர மாற்றங்கண்டது. அரச பணியில் இடவொதுக்கீடு என்ற போராட்டத்திற்கான உடனடிக் காரணமானது சேக் கசீனா அரசின் மீதான மக்களின் நீண்டகால வெறுப்பால் மேலும் தீவிரங்கொண்டது. அரச படைகளையும் தனது ஆதரவுக் கும்பல்கலையும் போராடும் மக்கள் மீது ஏவிவிட்டு வன்முறையைக் கட்டவிழ்ப்பதன் மூலம் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்ற முனைப்புடன் சேக் கசீனா அதிகார வெறியாட்டம் ஆடினார். ஏற்கனவே கொல்லப்பட்ட 200 பேரிற்குப் பொறுப்புச் சொல்லாத கசீனாவின் அரசானது கடந்த 2 நாள்களில் மேலும் 100 பேரைக் கொன்றது. ஆனால், மக்கள் போராட்டத்தின் தீவிரத்தையும் அதன் பின்னாலுள்ள அறத்தையும் நயன்மையையும் கண்ணுற்ற வங்காளதேச இராணுவத்தினரில் கணிசமானோர் போராட்டக்காரரிற்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்துவதில்லை என மனமாற்றங்கொண்டனர். இதனால் நிலைமை தனது கையை விட்டு மட்டுமீறிப் போவதை உணர்ந்த சேக் கசீனா அவர்கள் தனக்கு மிகவும் பிடித்தமான இந்தியாவிற்கு 2024.08.05 அன்று இராணுவத்திற்குச் சொந்தமான உலங்குவானூர்தியில் தப்பியோடினார்.

இதனால், வங்காளதேச இராணுவமானது இடைக்கால ஆட்சியைப் பெறுப்பெடுப்பதாகவும் நாட்டை அமைதிநிலைக்குக் கொண்டுவரப்போவதாகவும் வங்காளதேசத்தின் இராணுவத் தளபதி ஜெனரல் வேக்கர் உஸ் சமான் தெரிவித்துள்ளார். வங்காளதேசத்தில் இராணுவ ஆட்சி தொடர்வதை மேற்குலக நாடுகள் தமக்கு உவப்பான சூழலாகக் கருதமாட்டார்கள். அத்துடன் முகாமையான எதிர்க்கட்சியின் தலைவரும், முறைகேடற்ற தேர்தல் நடைபெற்றால் வெற்றிபெறும் வாய்ப்புள்ளவருமான‌ முன்னாள் தலைமை அமைச்சர் கலீடா சியா என்பவர் இந்தியாவின் தலையீடுகள் குறித்து அடிக்கடி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருபவர் என்பதோடு, சேக் கசீனாவை இந்தியாவின் அடிவருடி என்று குற்றஞ்சாட்டியும் வந்தார். நிலைமை இவ்வாறிருக்கையில், உலகப் பொருண்மியச் சூழலாலும், முதலிடும் ஆற்றலாலும் சீனாவானது தனது செல்வாக்கை வங்காளதேசத்தில் அதிகரிக்கும் வாய்ப்பே கூடுதலாகக் காணப்படும்போது, இந்தியாவிற்கு உவப்பான ஒரேயொரு தெரிவாகவிருந்த சேக் கசீனா அவர்கள் மக்கள் போராட்டத்தால் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார். இந்தியா அன்பளிப்பாக வழங்கிய நோயாளர் காவு வண்டியில் ஒட்டப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை தடிகளாலும் பொல்லுகளாலும் மக்கள் அடித்துச் சேதப்படுத்தியமை, இந்தியாவின் அன்புக்குரியவர் என்று பார்க்கப்படும் சேக்முஜிபுர் ரகுமானின் சிலை அடித்து உடைக்கப்பட்டமை, சேக் கசீனாவின் மட்டுமீறிய இந்தியச் சார்புநிலைக்கெதிரான முழக்கங்கள் என்பவை போராடும் வங்காளதேச மக்கள் இந்தியாவின் மீதுகொண்டுள்ள வெறுப்புணர்வையே காட்டுகின்றது. எனவே, வங்காளதேசத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் மக்கள் போராட்டமானது அடிப்படையில் இந்தியாவின் மேலாதிக்க மெத்தனப்போக்கிற்கு எதிரானது என்பதை விடுதலைக்காகப் போராடும் அனைவரும் மனங்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே, சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் மாலைதீவில் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளையிட்டு இந்தியா கவலையடைந்ததுடன் கேவலப்பட்டும் போயுள்ளது. சீனாவிற்கு மிகவும் ஒட்டானவராகவிருந்த மக்கள் தேசிய பேராயக் கட்சியைச் (People’s National Congress Party) சேர்ந்த மாலைதீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா ஜமீன் என்பவர் பணமுறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கையூட்டுகள் பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்ட பின்னர் மாலைதீவு சனநாயகக் கட்சியைச் (Maldivian Democratic Party) சேர்ந்த இப்ராகிம் மொகமட் சோலி (Solih) என்பவர் மாலைதீவின் அதிபராக 2018 இல் பதவியேற்றமை இந்தியாவிற்கு மிக உவப்பானதாகவே இருந்தது. பேரிடர் நேரத்தில் மீட்புப் பணிகளிற்காகப் பயன்படுத்த உகந்தவையென 2 உலங்குவானூர்திகளையும் 1 வானூர்தியையும் மாலைதீவிற்கு இந்தியா வழங்கிவிட்டு அது தொடர்பான பயிற்சி வழங்குவது என்ற போர்வையில் மருத்துவ அணியைச் சேர்ந்தவர்கள் அடங்கலாக 88 இந்திய இராணுவத்தினர் வெறும் 5 இலட்சத்திற்குச் சற்றுக் கூடுதலான மக்கள்தொகை கொண்ட மாலைதீவில் நிரந்தரமாக நிலைகொள்ள வைக்கப்பட்டனர். சுற்றுலாத்துறையையே பெருமளவிற்கு நம்பியிருக்கும் மாலைதீவின் சுற்றுலாத்துறை சார்ந்த விடுதிகள், உணவகங்கள், மற்றும் தங்ககங்கள் என்பன இந்தியாவிற்குச் சொந்தமானவையாகவே இருக்கின்றன‌.

இப்ராகிம் மொகமட் சோலி மாலைதீவின் அதிபராகவிருந்த காலத்தில் (2018- 2023) சீனாவின் செல்வாக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு மாலைதீவானது இந்தியாவின் சுற்றுலா விடுதி போல மாறுமளவிற்குக் கண்மூடித்தனமான இந்தியப் பற்றாளராக இப்ராகிம் மொகமட் சோலி இருந்தார். நரேந்திரமோடி அரசும் அவரது இந்துத்துவக் கும்பல்களும் இசுலாமியர்கள் மீது காட்டும் வெறுப்புணர்வு, இந்தியை மாலைதீவில் திணிக்கும் முயற்சி, பண்பாட்டு ஊடுருவல்கள் அடங்கலான இந்தியாவின் மட்டுமீறிய மேலாதிக்கத்தால் மாலைதீவு மக்கட்கு இந்தியாவின் மீது வெறுப்பு ஏற்பட்டது. இதனை மனங்கொண்டே, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கிய 7 பேரும் இந்தியாவின் மேலாதிக்கத்திற்கெதிராகவே பரப்புரை செய்தும் அதனைத் தேர்தல் அறிக்கைகளில் வெளிப்படுத்தியும் வந்தனர். தற்போது மாலைதீவு அதிபராகவிருக்கும் சீனச்சார்புடைய மொகமட் மொய்சு அவர்கள் இன்னுமொரு படி மேற்சென்று மாலைதீவில் தங்கியிருக்கும் இந்திய இராணுவத்தினரைத் தான் அதிபராகப் பதவியேற்றவுடன் விரட்டியடிப்பேன் என்று தனது தேர்தற் பரப்புரைகளில் கூறி வந்தார். தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளரும் அன்றைய அதிபராகவிருந்த இப்ராகிம் மொகமட் சோலியை இந்திய அடிவருடி என்றே கடிந்து வந்தனர் என்பதை நாம் ஈண்டு நோக்க வேண்டும்.

தேர்தல் முடிவாக 54% வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற மக்கள் தேசிய பேராயக் கட்சியைச் சேர்ந்த மொகமட் மொய்சு அவர்கள் மாலைதீவின் அதிபராக 2023 ஆம் ஆண்டு நவம்பரில் பதவியேற்றார். தான் பதவியேற்றவுடன் மாலைதீவில் தங்கியிருக்கும் இந்திய இராணுவத்தை மறுபேச்சின்றி வெளியேறுமாறு கட்டளையிட்டார். சாக்குப்போக்குச் சொல்லி இந்திய இராணுவம் மாலைதீவை விட்டு வெளியேறாமல் இருந்த போது, 2024.03.15 இற்கு முன்னர் மாலைதீவை விட்டு இந்தியா வெளியேற வேண்டுமென அதிபர் மொகமட் மொய்சு அவர்கள் காலக்கேட்டையும் விதித்தார். இந்தக் காலக்கேட்டை இந்தியா தனக்கு ஏற்பட்ட வெட்கக் கேடாகவே கருதியது. அத்துடன் மாலைதீவின் அமைச்சர்கள் சிலர் நரேந்திர மோடியை மிகவும் தரக்குறைவாகச் சாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுமிருந்தனர். இதனால் மிகவும் வெறுப்படைந்த இந்தியாவானது மாலைதீவிற்குச் சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டுமென்று பரப்புரை செய்தது. அத்துடன், மாலைதீவுக்கு மாற்றாக இந்தியாவின் லக்சதீபை கடற்கரைசார்ந்த உலகின் மிகவும் மகிழ்வான சுற்றுலாத்தளமாக மாற்றப்போவதாக இந்தியா வாயடித்தது.

இந்தியர்களிலேயே மாலைதீவின் முதன்மை வருமான மூலமான சுற்றுலாத்துறை தங்கியுள்ளதென்றும், அதனை வீழ்த்தி மாலைதீவிற்குப் பாடம் புகட்டப்போவதாகவும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் இந்தியாவின் வெளியலுவல்கள் அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இறுமாந்திருந்தனர். மாந்தநேய உதவிகள், பேரிடர்கால உதவிகள் போன்ற உதவிகளை மாலைதீவிற்கு வழங்கவும் மாலைதீவின் வளர்ச்சித் திட்டங்களில் முதலிடவுமே இந்தியாவானது விரும்புகின்றது என்று கூறி மாலைதீவு மக்களின் காதில் பூச்சுற்றிய இந்தியாவானது இப்போது மாலைதீவின் சுற்றுலாத்துறையை வீழ்த்தி அதனை வலுக்குன்றச் செய்யப்போவதாகக் கங்கணங்கட்டி நிற்பதென்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளினதும் நடைமுறைகளினதும் படுதோல்வியையே தெட்டத்தெளிவாகக் காட்டிநிற்கின்றது. 5 இலட்சம் மக்கள்தொகை கொண்ட மாலைதீவின் மக்களே இந்தியாவிற்கு வெட்கக்கேட்டை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு இந்தியா தொடர்பான மிகை மதிப்பீட்டிலிருந்து ஈழத்தமிழர் அரசியற் தரப்புகள் வெளிவர வேண்டுமென்று இவ்விடம் நினைவூட்ட விரும்புகின்றோம்.

“இந்தியாவே வெளியேறு” என்று மாலைதீவு மக்கள் எழுப்பிய முழக்கத்தை ஒத்ததே “சேக் கசீனாவே வெளியேறு” என்று வங்காளதேச மக்கள் எழுப்பிய முழக்கம் என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.

வெறுப்பிற்குரிய அஜித் டோவாலே! வெறுப்பிற்குரிய முனைவர் ஜெய்சங்கர் அவர்களே!

உங்களது வெளியுறவுகளின் நிலை சந்தி சிரிக்கின்றது. வங்காளதேசத்தில் நடந்த மக்கள் போராட்டமானது உங்களைப் பொறுத்தளவில் “மாலைதீவு 2.0” தான் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இந்தியாவைப் பற்றிய மிகை மதிப்பீட்டிலிருந்து தமிழர்கள் வெளிவந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கட்டிய நிழலுரு வெடித்துச் சிதறுகிறது. இந்தியாவால் ஒடுக்குண்டு கிடக்கும் விடுதலை வேட்கை கொண்ட மக்கள் வருகின்ற நாள்களில் உங்களிற்கு நல்ல பாடம் கற்றுத்தருவார்கள். இது உறுதி….

-முத்துச்செழியன்-

2024.08.06

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*