
சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னிலை மாந்த உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டவாளரும் பல நாடுகளில் பணி புரிந்த பட்டறிவும் கொண்டவர் ஒருவருடன், தமிழர் வாழ்வும் இருப்பும் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தேன். புலம்பெயர்ந்த தமிழர் பற்றியும் இஸ்ரேலியர் பற்றியும் கதை வந்தது. புலம்பெயர்ந்த இஸ்ரேலியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெற்ற விடயமும் எம் கலந்துரையாடலில் இணைந்தது. அவர்களின் மோசமான தன்னலக் கொள்கைகளே மற்றவர்களைச் சீற்றமடைய வைத்தன. இந்நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு, இஸ்ரேலியர்கள் தெருவில் போகும்போது, எண்ணையைக் கொதிக்க வைத்து அவர்கள் மீது ஊற்றும் அளவிற்கு யூதர்கள் மீது வெறுப்பு இருந்தது. இதேபோல் ஈழத்தமிழர்களுக்கும் நடக்கலாம். எம்மவர்களின் செயற்பாடுகளும் மிக மோசமான தன் நலன்கள் வயப்பட்டது என்றார்.
எது எப்படியோ தன் நலன்கள் பல வகைப்பட்டன. நாடற்றவர்களாகப் பல்வேறு நாடுகளிலும், வகைதொகையின்றிய சிக்கல்களையும் வன்மங்களையம் கடந்து அவர்களுக்கு என ஓர் நாட்டை இஸ்ரேலியர்கள் பெற்றிருக்கின்றனர். அவர்களின் கடுமையான உழைப்பும் இனம் சார்ந்த சிந்தை, வரலாற்று எச்சங்களை மறவாமல் அடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தும் செயற்பாடுகள் போன்றவற்றை, பல வகையான பொதுத்தன்மை வாய்ந்த தன்னலன்களாகவும் நாம் காணலாம். தமது வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால், குடும்பத்தில் அகவை முதிர்ந்தவர் ஒருவர் இரவிரவாகப் பின்னல் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, இளைய தலைமுறையினருக்குத் தமது மரபார்ந்த கதைகள், வரலாற்றுக் கதைகள் என்பனவற்றைக் கதை கதையாகக் கூறிக்கொண்டிருப்பாராம். திருமணங்கள் களியாட்ட நிகழ்வுகளின் செலவுகளை மட்டுப்படுத்தித் தமது நாட்டுக் கட்டமைப்புக்கான செயற்பாடுகளுக்குக் கொடுப்பதை அவர்கள் வழக்கமாக்கி வைத்திருந்தனர். மதக்கொள்கை மூட நம்பிக்கைகள் என்பன அவர்களிடத்தில் இருந்தாலும் இவர்கள் யாரிடமும் கடன் பெற்று வைத்திருக்கவில்லை. சரியோ பிழையோ தமக்கானதை, தம்முடையதைத் தமதாக்கி வைத்திருக்கின்றனர். அரசியல், பொருண்மிய பண்பாட்டு கட்டமைப்பு என்ற விடயத்தில் அவர்களின் கட்டமைப்பு என்பது மிக மிக உறுதியானதும் தெளிவானதுமாகும்.
துரத்தியடிக்கப்பட்டு நாடு நாடாக ஏதிலிகளாகத் திரிந்தவர்களின்; மோசமான சித்திரவதைகள் மற்றும் இன அழிப்புக்களுக்குள்ளானவர்களின்; இன்றைய வெற்றி என்பது எண்ணிப் பார்க்க முடியாதளவிற்கு எங்கும் வியாபித்துள்ளது. உலகில் பல பாகங்களில் அறிவியல் துறைகளாகட்டும், வேறு எத்துறைகளாகட்டும், அவர்களின் பங்கும் பணிகளும் கனதியானவை. வந்த இடம் மேலானது என்ற மாயைகளில், போலித்தனங்களில் வீழ்ந்து தம்மை அழிக்காமலும், தொலைக்காமலும், தமது மரபினைச் சிதைய விடாது காத்து, உறுதியை விடாது கடுமையான உழைப்பின் மூலம் தம்மை நிலைநிறுத்திக் கொண்டதோடு, தமது நாட்டையும் உலக வரைபடத்தில் நிலைக்கச் செய்து விட்டனர். வல்லாதிக்கங்களின் பொச்சாப்புகளுக்கு மயங்கி வீழாது, அவர்களையும் நுணுக்கமாகக் கையாண்டே வெற்றியடைந்துள்ளார்கள். வீழ்த்தப்பட்டவர்களுக்கு அடக்கு, ஒடுக்கு முறைகளுக்குள்ளாக்கப்பட்ட இனத்தவர்களுக்கு இவர்களின் வாழ்வியல் நல்ல எடுத்துக்காட்டே!.
உலகின் மிகத் தொன்மமான மொழி, எட்டுத் திக்கும் கட்டியாண்ட இனம் எனக் கூறி எம்மில் பலர், சிலிர்த்துக் கொள்ளத் தயங்கினாலும், பல ஆய்வுகளும் வரலாறுகளும் நிமிர்ந்து நிற்கும் கட்டிடக் கலைகளும் தமிழினத்தின் சிறப்பைப் பறைசாற்றி நிற்கின்றன. நாடுகாண் பயணங்களை மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணிகள், ஆய்வுகளில் ஈடுபடும் வெளிநாட்டு அறிஞர்கள் தமிழினத்தின் சிறப்புகள் பற்றி எழுதி வருகின்றனர். ஆனால் எமது அருமை பெருமைகளை நாம் அறிந்துள்ளோமா? திக்குத் திக்காகப் பரந்து விரிந்து வாழ்கின்றோம். ஆனால் எமக்கான இருப்பிற்கான தேசம் என்று ஒன்று உள்ளதா? இல்லையே. அதற்கான காரணிகள் என்ன? ஏன் இந்நிலைக்குத் தள்ளபட்டுள்ளோம்? ஏன் என எமக்குள் கூட்டிணைவான கேள்விகளும் இல்லை; பதில்களும் தெரியவில்லை. இப்படிக் கேள்விகள் தொடுக்கப்பட்டுச் சரியான பதில்களும் செயற்பாடுகளும் இஸ்ரேலியர்களைப் போல் இருந்திருக்குமேயானால், எமக்கும் ஓர் நாடு இருந்திருக்கலாம். முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் நாதியற்று, துள்ளத் துடிக்கக் கொன்றொழிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். உலகத் தமிழர்களை நோக்கிய பொதுக் கேள்விகளாகவே இவை இருக்கலாம்.

ஆனால் தொடர்ச்சியான இன அடக்குமுறைகளுக்கும் அழிவுகளுக்கும் முகங்கொடுத்த ஈழத்தமிழினம், அதற்கெதிரான மறப்போராட்டத்தினை மிக வெற்றிகரமாக நடத்தியது. வெல்ல முடியாது விழி பிதுங்கி நின்ற சிங்களத்திற்குக் கைகொடுத்து அழிவினை வழி நடத்தியது வல்லாதிக்கங்களும் பிராந்திய நுண்ணாதிக்கங்களும் தான். இவையொன்றும் வரலாற்றுப் புராணப்பதிவுகள் அல்ல. எமது கண்களின் முன்னால் நடந்த கோரங்கள். போர்ப் பின்னடைவின் பின்னர் மிக மோசமான வாழ்வியலை ஈழத்தமிழினம் எதிர்கொண்டிருக்கின்றது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்ற வரையறைகள் கடந்த ஊருக்கு ஒரு சிக்கலாகத் தமிழர் பிரதேசங்கள் தோறும் வகை தொகையான சிக்கல்கள் பூதாகாரமாக நின்று அச்சமூட்டுகின்றன. ஒரு நேரத்து உணவின்றி வாடும் பல வயிறுகள், வாழ வழியின்றித் தற்கொலை செய்து கொள்ளும் உறவுகள், தமிழீழமே இறுதி முடிவு என இளமைக்கால இனிமைகளைப் புறந்தள்ளிவிட்டுத் தாயக விடுதலைக்காகப் போராடிய போராளிகளின் அவல வாழ்வு என நீண்டுபோகும் சிக்கல்களுக்கு என்ன தீர்வு?
தீர்வுகளுக்கான தேடலும் வழிகளும் பொறிமுறைகளைப் பாதுகாப்பாக நகர்த்தும் அக புறச் சூழல்களும் அதற்கான பொருண்மிய வலுவும் யாரிடம் உள்ளன எனில் அது புலம்பெயர்ந்த தமிழர்களிடமே உள்ளன. ஆனால் இன அழிப்பினைக் கடந்து எட்டாவது ஆண்டினைத் தொட்டு நிற்கும் இவ்வேளையில் என்ன நடக்கிறது? சில அன்புள்ளங் கொண்டவர்கள் இருப்பதில் கிள்ளிக் கொடுத்த பணத்தில் கோழி வளர்ப்பும், முச்சக்கர வண்டிகள் தவிர சிறைகளில் உள்ளவர்களுக்கு வழக்குச் செலவுகள் எனவும், சிற்சில இடங்களில் பள்ளிக்கூடங்கள், வீடுகள் எனத் திருத்த வேலைகள் நடந்துள்ளன. எந்தப் பொதுக் கட்டமைப்புகளும் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி சார்ந்தோர் ஊடாகவும் அவர்கள் கைகாட்டும் சிலருக்கும் உதவிகள் போய்ச் சேருகின்றன. சமூகத்தின் ஊனக் கண்களுக்கென இருக்கும்; அளவீடுகளான இவர் நமர் பிறர் என சாதி, வர்க்க, பிரதேச எல்லைகளைக் கடந்து உதவிகள் போவது குதிரைக்கொம்பு என்றே கூறலாம். இது இவ்வாறிருக்கப் புலம்பெயர்ந்த தேசங்களிலிருந்து சில கருத்துகள் அண்மைகாலமாக வெளிவருகின்றன. அதாவது தாம் இஸ்ரேலியர்களுகொப்பானவர்கள் எனப் பொருள்பட, எழுதியும் பேசியும் வருவதைக் காணும் போது நகைக்காமலிருக்க முடியவில்லை. இத்தனை துன்பங்களை, துயரங்களைக் கண்ட பிறகும் கொஞ்சமாவது தற்திறனாய்வு, மீளாய்வு என எதற்கும் தங்களை உட்படுத்தாது வானில் இருந்து இறங்கி வந்ததற்கொப்பான கதையளப்புகளைச் செய்து கொண்டிருப்பதைக் கேள்விக்குட்படுத்தாதிருக்க முடியவில்லை. நாடுகடந்து பலருக்குப் பீறிட்ட தாயக தாகத்தையும், வீம்பு வீரர்களின் உடைமைகளையும் காத்து, மண் மீட்பிற்கான போரில் உயிரிழப்பு, உடைமையிழப்புகளைத் தாங்கி, கண்ணீருடன் வாழும் தமிழினத்தின் எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டாவிட்டாலும் பரவாயில்லை அவர்களின் வயிற்றெரிச்சலையும் துன்பியலையும் அதிகப்படுத்தும் செயல்களைப் புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானவர்கள் செய்வதைக் காணக்கூடியனவாகவுள்ளன.
வியப்பான விடயம் என்னவெனில், கோவில்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வர்ணம் தீட்டுவதும், குடமுழுக்குச் (கும்பாபிசேகம்) செய்வதும், அன்னதானம் செய்வதும் ஆயிரக்கணக்கான கொளுக்கட்டை மோதக நேர்த்திகள் எனவும், வெளிநாட்டக்கு வந்து சேரந்தால் ஒரு நேர்த்தி வீசா விடைத்தால் மறு நேர்த்தி எனவும் களியாட்ட விடயங்களுக்குக் கொடுக்கும் முதன்மைக்குக் கிஞ்சித்தும் குறைவில்லை. (எங்கேயாவது மாட்டுப் பட்டால் சிறைவாசம் அது வேறு)கண் முன் தெரியும் பட்டினி தெரியாமல், கண்ணுக்குத் தெரியாத ஒன்றுக்காகப் பகட்டுக்காகச் செய்யும் செயற்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தும் போக்கும் துணிவும் மாற்றுக் கருத்துகளும் தற்போதைய சூழலில் இல்லை என்றே கூறலாம். ஏனெனில் இவர்களின் பொருண்மியக் கட்டுகள் ஒரு புறம், நிறுவனமயப்பட்ட வைதீகப் பண்பாட்டுவியல் மறு புறம். இவை தான் களத்தில் பலரை வாய் திறக்க விடுவதில்லை. சிலர் தமக்குள் பொருமிக் கொண்டிருப்பதைத் தவிர வேறென்ன செய்து விட முடியும்?
தமிழீழத்திற்கான மறவழிப் போராட்டப் பின்னடைவிற்குப் பின்னர், நாம் கற்றறிந்த பாடமும் கண்டு கொண்ட காட்சிகளும், தமிழர்களுக்கான தனிப்பாங்கான வரலாற்று வழித்தடத்தை நேரமைக்காவிட்டால் விடுதலை என்ற இலக்கும், ஈழம் என்ற கனவும் கலைந்து போகும் என்பதே வெள்ளிடை மலை. கிடைத்திருக்கும் இடைவெளியில், தமிழ்த்தேசிய விடுதலை என்ற பூட்கை, தொன்மம் சார்ந்த தமிழர்களின் வாழ்வியலின் அடிப்படைகளிலும், தற்போதைய சூழ் நிலைககளின் செல்நெறிகளின் அடிப்டைகளிலிருந்தும் கலந்தெடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு, மீட்டுருவாக்கம் செய்யப்ட வேண்டிய தேவை ஒன்று இருக்கிறது என்பது, உலகத்தமிழரிடையே தற்போதைய பேசு பொருளாக இருக்கின்றது. அதனை முன்னெடுக்க வேண்டிய பங்கும் பணியும் மட்டுமல்ல தளமும், புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருப்பது நலம் பயக்கும் என ஒரு கருத்தும் இருக்கின்றது. ஏனெனில் அதற்கான ஒன்றிணைப்பிற்குப் பொருண்மிய வலு இன்றியமையாதது. அதை ஒரு வரலாற்றுக் கடமையாகக் கொள்ள வேண்டியதும் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளில் ஒன்று என எண்ணுவதில் தவறு இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் இவ்விடயத்தில் எவ்வித நாட்டங்களையும் காட்டாமல் “பழைய மொந்தையில் புதிய கள்” என்ற இரீதியில் அமைந்த செயற்பாடுகளே மேலோங்கி வருகின்றன என்பதனை வருத்தத்துடன் குறிப்பிட்டேயாக வேண்டும்.
பெயர்ந்த இடத்தின் பழக்க வழக்கங்களை எளிதில் சிக்கென பிடித்துக் கொள்ளும் இயல்பினைக் கொண்டிருப்பதோடு, தாம் தமிழர்களாக இந்துக்களாக வாழத் தலைப்படும் நிலையினையே காணக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் அடையாளம் என்பது தற்போது இந்துத்துவ அடையாளம் என்ற அளவிற்குச் சீர்கெட்டுப்போய்க் கொண்டிருக்கின்றது. ஏட்டிக்கு போட்டியாக ஊருக்கு ஒரு கோவில் என்பது போல் புற்றீசல்கள் போல் புலம்பெயர் தேசங்கள் எங்கும் கோயில்கள் அமைப்பதும், அதற்குப் பணத்தினை வாரி வழங்கித் தேர் என்றும் திருவிழா என்று நடத்துவதும், அதில் யார் பெரியவர் சிறியவர் என்ற கோதாவில் இறங்குவதுமான சிறு பிள்ளைத்தனமான விளையாட்டுகள் நடந்தேறி வருகின்றன. அது மட்டுமல்ல இந்துத்துவா தமது அரசியல் பொருண்மிய பண்பாட்டு இலக்கினை அடைவதற்காகப் பல தெய்வங்களைக் காலத்திற்குக் காலம் களமிறக்கி விடுவது வழக்கம். அதை உள்வாங்கி இவர்கள் நடத்தும் நாடகங்கள் பல மடங்காகப் பெருகி வருகின்றன.

கேரள மக்களில் பெரும்பாலானவர்கள் திரும்பியே பார்க்காத ஐயப்பன் கோயிலுக்கு விண்ணூர்தி ஏறிப் பறப்பது தான் இம்மாதத்திற்கான புலம்பெயர் தேச மக்களின் நிகழ்ச்சி நிரல். மகர ஜோதி என்பது ஜயப்பன் கோயில் நிருவாகத்தின் மொள்ளமாரித்தனம் என்பது கையுங் களவுமாகப் பிடிக்கப்பட்டு, வெளிப்படியாக அறிவிக்கப்பட்டுப் பல ஆண்டுகளாகி விட்டன. ஆனால், சொந்தப் புத்தி இல்லாமல் சொன்ன புத்தியும் கேளாமல் செயற்படும் இவர்களைப் போய் என்னவென்பது எப்படி நோவது? விஜய் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் தான் கதி எனப் பழகிப் போய், அதில் வருவதைப் போல் உடுப்பதும், விடிந்தவுடன் கிரக பலன் பார்த்து விட்டுப் பணி தொடங்கும் பண்பாடுகளில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஆபத்திலிருந்து காப்பதே பெரிய கடமையாக இருக்கும் போல் தெரிகிறது.
தாம் வாழ்வது மேலைத்தைய நாடு என்கிறார்கள். வாழ்வு முறை உயர்வானது எனப் பீற்றிக்கொள்ளும் இவர்கள் நடந்து கொள்ளுவது தான் சின்னத்தனமாக இருக்கின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது. மண்மூடிப் போக வேண்டிய பிற்போக்கான எண்ணங்களும் செயற்பாடுகளும் களத்தை விடப் புலத்திலே மிக வேகமாக வளர்ந்து வருகின்றன என்பதனைக் காணக்கூடியனவாக இருக்கின்றன. புலத்திலிருந்து களம் நோக்கிய அவர்களின் பார்வைகளும் செயல்களும் கூட மாற்றங்களுக்கான ஏதுவான நிலைகளைக் கொண்டனவாக இல்லை என்பதைக் கூறித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. இன நலன்கள் பின் தள்ளப்பட்டுத் தன் நலன்கட்காக எதையும் செய்யும் நிலை தலை தூக்கி வருகின்றமை ஊன்றி நோக்கப்பாலது.
போர்க்கால சூழலில் கவனிப்பாரற்றுக் கிடந்த வீடுகளில் இடம் பெயர்ந்தவர்கள் குடியேறி வாழ்ந்து வந்தார்கள். வெளிநாடுகளில் சிலர் தமது வீட்டைக் காத்துத் தருமாறு கோரிக்கை விடுத்தபோது பலர் காவலுக்காய் அவ்வீடுகளில் குடியேறினார்கள். போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிப் பேச்சுக்கள் தொடங்கிய காலகட்டத்தில் பலர் நாட்டுக்குப் போய் செய்த முதற் பணி தமது வீடுகளில் குடியிருந்தோரை அகற்றியமையே. அவ்வளவு காலமும் யார் எவர் என அடி நுனி கேட்காதவர்கள் பிறகு எல்லா அடி முடிகளையம் தேடிக் குடி பெயர்த்தார்கள். அது போக, போர்ப் பின்னடைவிற்குப் பின்னர், தமது வீட்டை விட்டு வெளியேறுமாறு கலைத்துக் களைத்துப் போனவர்கள் தற்போது சட்டத்தை நாடி, வெற்றிகண்டு மாட மாளிகைகள் கட்டிப் பூட்டி வைத்து விட்டு வந்துள்ளார்கள். அவர்களில் பலரின் அடுத்த தலைமுறை, திரும்பி நாட்டுக்குப் போக விரும்பாதவர்கள்; தமிழ் தெரியாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. (இவர்களில் பலர் புலம்பெயர் நாடுகளில் பெரிய சமூக சேவைகளில் இருப்பவர்கள் எனக் காட்டிக் கொள்பவர்கள்)
அண்மையில் வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாங்களில் தங்கி இருப்பவர்களிடத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது. முகாம் வாழ்வில் இருந்து விடுபட்டாலும், அவர்களில் முப்பத்தையாயிரம் பேருக்கு சொந்தக் காணியோ வீடோ எதுவுமில்லா நிலையே இருப்பது தெரிய வந்துள்ளது. இப்படியான நிலையில் போர்ச்சூழலைக் காரணங்காட்டிப் புலம்பெயர்ந்த பலர், அங்கு காணிகளை, வீடுகளைச் சும்மா வைத்துக் கொண்டு இருப்பது என்பது மாந்தநேயமற்ற செயலாகும் என்பதை யாரும் எண்ணிப்பார்க்காமலிருப்பது ஏன் எனத் தெரியவில்லை.
பலர் இப்படி இருக்க இன்னும் சிலர் செய்யும் சித்து விளையாட்டுகள் இன்னொரு வகையாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறிப்பாகச் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களை இலக்கு வைத்து உதவுவதாகக் கூறி, அவர்களின் குடும்பத்துடன் உரையாடி மனைவியரை இந்தியா போன்ற நாடுகளுக்கு அழைத்துத் தமது இச்சைகளை தீர்த்துக் கொள்வதும், போரால் பாதிக்கபட்டுத் தப்பி வந்த பெண்களை, தமிழ் நாட்டு முகாம்களிலிருப்பவர்களைப் பணத்தை கொடுத்துத் தவறான வழிக்குக் கொண்டு செல்வதும் எமது விரல்களைக் கொண்டு, கண்களைக் குத்திக் கொள்ளும் செயலுக்கு ஒப்பானதாகும். துணை நடிகைகளின் காலடியில் இலட்சக்கணக்காக பணத்தினைக் கொட்டிக் குவிப்பதும், குளிரில் நடுங்கி உழைத்த பணத்தில் ஒய்யாரம் காண்பதும் தனிப்பட்ட சிக்கல்களாக இருக்கலாம். ஆனால் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலாக, வேலிகளாக இருக்க வேண்டியவர்களே பயிரை மேயும் கேடு கெட்ட தனங்களைத் தொடராதீர்கள்! என வெளிசத்திற்கு வராத உண்மை தெரிந்த எம்மில் பலர் எச்சரிக்கை செய்யும் அளவிற்கு நிகழ்வுகள் தொடருகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளில் இளைஞர்கள் மட்டுமல்ல அறுபது அகவைக்கு மேற்பட்டவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வளைத்தளங்களில் உலா வரும் இவர்கள் தற்போது இதையொத்த நடவடிக்கைகளை ஈழத்திலும் மேற்கொள்ளுகின்றனர். போரோய்விற்குப் பின்னர் தமிழர் தாயகத்தில் இடம் பெறும் பல சமூகப் பிறழ்வுகளுக்கு அரச புலனாய்வுத் துறையினரும் தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள மக்களுமே காரணி எனப் பலர் பேசி வருவது கண்கூடு. ஆனால் இப்படியான எம்மவர்கள் அரங்கேற்றும் நிகழ்வுகள் பற்றிப் பலர் அறிந்தும் ஏனோ வாளா இருக்கின்றனர்.
நடந்து வந்த பாதைகளை மறக்காமல் இருப்பதற்கும், சிதைக்கப்பட்ட வழிகளைச் சீரமைப்பதற்குமான மேன்மை கொண்ட செயற்பாடுகளை வெளியில் தேட முடியாது. அது எமக்குள் தான் என்ற எண்ணங்கள் மேலிட வேண்டும் என்பதற்காவே சில நடப்புகளை இங்கு தொட்டுக்காட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவை திறனாய்வுகளல்ல; கவலையுடனான குமுறல் அவ்வளவு தான். இன்றைய சூழ்நிலையில் எம்முன்னே பல கடமைகளும் செயற்பாடுகளும் காத்துக் கொண்டிருக்கின்றன. வளமும் அதற்கான களமும் இருக்கும் போது அவை முறையாகத் தமிழரின் தனித்தன்மையான வாழ்வியலுக்கான செயல்களாக முகிழ்ந்து, தமிழிழீத்திற்கான விடுதலை வழித்தடத்தைச் செப்பனிட வேண்டும். தன்னலம் என்பது இஸ்ரேலியர்களிடமும் இருந்தது. ஆனால், அவர்களின் தன்னலம் இனத்தினைக் காக்கப் பொது வடிவம் எடுத்தது. மரபு சார்ந்த வரலாற்றினை மறவாத்தன்மைகள் அவர்களிடமிருந்தன. அவர்கள் அதைச் சிறிதேனும் விட்டுக்கொடுக்கவில்லை. அவற்றைக் காப்பதினூடாகவே தமது இருப்பைத் தமக்கான தாயகத்தை வென்றார்கள். நாம் அவர்கள விடப் பல வழிகளிலும் மூத்தவர்கள். ஆனால் இன்று தொலை நோக்கற்ற பார்வைகளாலும் ஒற்றுமையின்மைகளாலும், மற்றவர்களைக் கண்மூடித்தனமாக ஏன் எதற்கு எப்படி எனக் கேளாமல் பின் தொடர்ந்ததனாலேயே வீழ்ந்தோம்; வீழ்ந்து கொண்டுமிருக்கிறோம். நாமும் வாழ வேண்டும்; நம் இனமும் வாழ வேண்டும். அது தான் புது வழி!. அதைக் காண நாம் புறப்பட வேண்டும்!
கொற்றவை
08-01-2017
Be the first to comment