
ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுவழி உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும் என வரையறுக்கப்படுவதற்கு அச்சொட்டான எடுத்துக்காட்டாக இலங்கைத்தீவில் தமிழ்த் தேசிய இனமாக தேசமாக இருக்கின்றது. இதனடிப்படையில் தேசங்களிற்கே உரித்தான தன்னாட்சி அடிப்படையில் தனது தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை ஈழத்தமிழர்களுக்குண்டு. ஆனால், மகாவம்சம் போன்ற புனையப்பட்ட வரலாற்றுப் புரட்டுகளின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தினால் இன ஒடுக்கலிற்கும் இனவழிப்பிற்கும் தொடர்ச்சியாக உள்ளாகி வந்த ஈழத்தமிழர், இந்த அடக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கு மேற்கொண்ட அறப்போராட்டங்கள் சிங்களக் கொடுங்கோலர்களால் ஆயுதமுனையில் நசுக்கப்பட்டதால், ஆயுதந்தாங்கி வீரம் செறிந்த மக்கள்மயப்பட்ட மறப்போரினை முள்ளிவாய்க்கால் அவலம் வரை முனைப்புடன் முன்னெடுத்தனர்.
கரந்தடி அமைப்பாகத் தோன்றிய தமிழரின் மறப்போர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரனால் படைத்துறை அடிப்படையில் ஒரு மரபுவழிப் படையாகவும் நிருவாக அடிப்படையில் தமிழீழ நடைமுறையரசாகவும் வளர்த்தெடுக்கப்பட்டது. வரிகளில் வடிக்கமுடியாத ஈகங்களாலும் வீரமிகு போராற்றலாலும் உலகத் தமிழர்களின் நெஞ்சுகளையும் ஏனையோரின் புருவங்களையும் நிமிரச் செய்த ஈழத்தமிழரின் மறவழிப்போரானது, ஐம்பதாயிரம் போராளிகளையும் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களையும் இழந்து ஈற்றில் போராட்டம் அரசியல் அடிப்படையில் தொடங்கிய இடத்திற்கே திரும்பப் பின்னடைவானது.
ஒப்பற்ற ஈகங்களால் முன்னெடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டமானது, தனது இயங்கு ஆற்றலால் வீச்சுப்பெற்று தமிழீழம் கோரிப் பேரறிவிப்புச் செய்யும் இறுதித்தறுவாயில் பயணித்தபோதும் இந்திய மேற்குலகக் கூட்டுச் சூழ்ச்சியால் அழித்தொழிக்கப்பட்டுத் தமிழர்கள் நட்டாற்றில் ஏதிலிகளாக விடப்பட்டுள்ளார்கள். சிங்கள பௌத்த பேரினவெறி அரசின் கொட்டத்தை அடக்கி அதனைத் தமிழரின் மறத்தின் முன்பு மண்டியிடச் செய்து தன்னாட்சியடிப்படையில் தனித்தமிழீழம் அமைக்க ஈழத்தமிழரால் முடியும் என்று பலமுறை களமுனையில் நிரூபித்துக் காட்டியும், ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டமானது இத்தகைய அவலநிலைக்கு வந்தமைக்கு, பன்னாட்டு வல்லாண்மையாளர்களும் அவர்களைத் தனது பிராந்தியத்தில் வைத்து தனது மேலாண்மைக்கு ஊறு நேராதவாறு கையாளும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவும் தான் காரணம் என்பது இனியும் விளக்கித்தான் விளங்கவைக்க வேண்டும் என்பதில்லை. எனினும், மக்களின் மறதியையும் அவர்களின் அரசியல் வரட்சியையும் தமக்கான பிழைப்புவாதமாகப் பயன்படுத்துபவர்கள், மீண்டும் ஈழத்தமிழரை ஒரு மீளாத்துயரில் தள்ளிவிட்டு மீண்டும் ஒரு இரங்கற்பா எழுதித் தமது எழுத்துலக ஆளுமையை அவர்களது கிந்திய மேலாளர்களுக்குக் காட்டி அவர்களது வாயால் வாயார வாழ்த்து வாங்க வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பது புலப்பட்டு வரும் சூழமைவில் இந்தியா ஈழத்தமிழரிற்கு என்னவெல்லாம் செய்தது என்று சுருங்கக் கூறி இன்னதுதான் செய்யும் என்று கட்டியம் கூறுவதாக இப்பத்தி வரையப்பட வேண்டியது இனியும் தட்டிக்கழிக்க முடியாத கடமையென உணர்ந்து இப்பத்தி வரையப்படுகின்றது.
ஆங்கிலேயர்களால் சந்தையாக உருவாக்கப்பட்டுப் பார்ப்பன ஆதிக்க வர்க்கத்திடம் கையளிக்கப்பட்ட இந்தியா என்கிற தேசிய இனங்களின் சிறைக்கூடமானது, 29 மொழிவாரி மாநிலங்களையும் 7 ஒன்றியப் பகுதிகளையும் அரசியல் அரங்கில் இன்னும் மாநிலம் என்றளவில் வெளியே வராத தேசிய இனங்களின் வாழிடங்கள் என 3.287 மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பளவையுடையதாக உலகின் ஏழாவது பெரிய நாடாகவும் 1.2 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட உலகில் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கூடிய நாடாகவும் திகழ்கின்றது. இந்த இந்தியாவின் ஆட்சி 1947-08-15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து கிந்திப் பிராமண ஆதிக்கத்திடம் கைமாறியபோது, இந்தியாவின் முதல் மந்திரியாக காஸ்மீரிய பண்டிட் என்ற பிராமணிய ஆதிக்க குலத்தைச் சேர்ந்த சவர்கல்லால் நேரு பதவியேற்றார். எனவே, சவர்கல்லால் நேருவே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். இந்தியாவின் இராணுவத்தை மிக வலுவானதாகக் கட்டியெழுப்பி அதன் மூலம் அண்டை நாடுகளை வெறும் பண்பாட்டு அரசுகளாகவும் இந்தியாவின் தயவிலேயே தமது தலைவிதிகளைத் தீர்மானிப்பனவாகவும் பேணி, தன்னை ஒரு உலகின் வல்லரசாகக் கட்டியெழுப்புவதனை தனது வெளியுறவின் மூலக்கொள்கையாக வகுத்தார் சவர்கல்லால் நேரு. 1964-05-27 அன்று அவர் இறக்கும் வரைக்கும் முதல் மந்திரியாக இருந்த சவர்கல்லால் நேரு, குறைந்தது தெற்காசியாவிலாவது இந்தியா ஒரு நாட்டாமையாகத் திகழ வேண்டுமென முடிவெடுத்து அயல் நாடுகளின் அலுவல்களை அணுகி வந்தார். எனவே வல்லரசுக் கனவுடன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வகுத்தார் சவர்கல்லால் நேரு என ஒற்றை வரியில் கூறலாம்.

சவர்கல்லால் நேருவின் இறப்பின் பின் முதல் மந்திரியாகப் பதவியேற்ற லால்பகதூர் சாத்திரியின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தார் நேருவின் மகளான இந்திராகாந்தி. இக்காலத்திலேயே, இலங்கைத்தீவில் தமிழர்களின் இன விழுக்காட்டைக் குறைத்து அவர்களது அரசியல் பேரம் பேசல்களை மேலும் குறைப்பதற்காக, 1 மில்லியனாக இருந்த மலையகத் தமிழர்களை 1/2 மில்லியனாகக் குறைக்கும் சிறிமா- சாத்திரி ஒப்பந்ததம் 1965 இல் கைச்சாத்தாகியது. இதுவே, சிறிலங்காவின் அரசுடன் கைகோர்த்துப் பயணிக்கும் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைக்கான முதலாவது சட்டச் சான்றாகியது. லால்பகதூர் சாஸ்திரி காலமானதைத் தொடர்ந்து இந்திராகாந்தி 1966 இல் முதல் மந்திரியாகப் பதவியேற்றார். பன்னாட்டு உறவுகளில் மேலாண்மையே தீர்மானிக்கும் ஆற்றல் என்பதை முழுமையாக உள்வாங்கி இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வலுவாக அடித்தளமிட்டு வகுத்ததின் முதன்மைப் பங்கை இந்திரா காந்தியே வகுத்தார். இவரால் வகுக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கையின் படிம வளர்ச்சியாகவே இற்றைவரை இந்தியா கடைப்பிடிக்கும் வெளியுறவுக் கொள்கை அமைகின்றது. அண்டை நாடுகளின் செயற்பாடுகளைக் கண்காணித்துத் தகவல்களைச் சேகரித்து, அவற்றைப் பகுப்பாய்ந்து இந்தியாவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தத் தேவையான நாசகாரச் சூழ்ச்சிகளை அண்டை நாடுகளில் அரங்கேற்றுவதற்காக 1968 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு (RAW) என்றழைக்கப்படும் வெளியகப் புலனாய்வு அமைப்பைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் நிறுவினார் இந்திராகாந்தி.
1970 களின் முற்பகுதியில், தனது அண்டை நாடான பாகிஸ்தானில், மேற்குப் பாகிஸ்தானுக்கும் கிழக்குப் பாகிஸ்தானிக்குமிடையே நிலவிய பகைமையைக் கூர்மைப்படுத்தியதோடு, தமது தேச விடுதலைக்காகப் போராடிய கிழக்கு பாகிஸ்தானின் வங்கதேச போராளிகளுக்கு RAW மூலம் இராணுவப் பயிற்சியளித்தும் இந்திய இராணுவத்தை மேற்குப் பாகிஸ்தானுக்கு எதிராகப் போரில் ஈடுபடுத்தியும் பங்களதேஸ் என்ற நாடு அமையக் காரணமாகினார் இந்திரா காந்தி. உண்மையில், வங்காளதேச விடுதலைப் போராட்ட எழுச்சியைத் தனது மேலாதிக்கத்திற்கான நல்வாய்ப்பாகப் பயன்படுத்திப் பாகிஸ்தானை வலுக்குன்றச் செய்வதே இந்தியாவின் நோக்கம் என்பதோடு, வங்காளதேச விடுதலையின் பின்னர் அந்த நாட்டின் ஆட்சியதிகாரமானது புரட்சிகர ஆற்றல்களின் கைகளுக்குச் செல்லாமல், இந்தியாவின் தயவிலேயே வங்காளதேசம் இருக்க வேண்டுமென்ற வல்லாதிக்க நோக்கிலேயே இந்திராகாந்தி வங்காளதேசத்துடனான வெளியுறவுக்கொள்கையை அணுகி வந்தார். சீக்கியர்களின் தாயகமான பஞ்சாப் பகுதியை காலிஸ்தான் என்ற தனிநாடாக்குவதற்காகப் போராடிய காலிஸ்தான் விடுதலைப் போராட்டத்தைச் சிதைக்கப் போராளிகளும் அதன் தலைமையும் தங்கியிருந்த பொற்கோயிலுக்குள் இராணுவத்தை அனுப்பினார் இந்திரா காந்தி.
சிறிலங்காவில் ஜே.வி.பி என்ற இடதுசாரிய கிளர்ச்சி இயக்கத்தினால் ஆட்சியைப் பிடிக்க 1971 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஏற்பட்ட கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கிய சிறிலங்காவின் முதல் மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்காவிற்குத் தூணாக நின்று இந்தியாவின் வான்படையை அனுப்பிப் புரட்சிகர இளைஞர்களைக் கொன்றொழிப்பதற்குத் துணைநின்றார் இந்திரா காந்தி.

இந்திராகாந்தி தனது செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குதற்காகவும், நாட்டில் நிலவும் தனக்கு உவப்பில்லாத சூழலில் தேர்தலைச் சந்திக்க விரும்பாததால் தேர்தலைத் தள்ளிப்போடும் நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமைகளைப் பறிக்கும் விதத்திலும் 1975-06-25 முதல் 1977-03-21 வரையான 21 மாத காலத்திற்கு நெருக்கடி நிலை – அவசரகால அறிவிப்புச் செய்தார். இவ்வாறாக மேலாதிக்க வெறியும் வல்லாண்மை வெறியும் கொண்ட இந்திராகாந்தியையே தாயுள்ளம் கொண்ட அன்னை இந்திராகாந்தி என இன்றும் குறிப்பிடும் தமிழ்த் தலைவர்கள், தமிழர் அரசியலில் நிலைத்திருப்பது தமிழர்களுக்குச் சாபக்கேடே.
இவ்வாறாக, 1977 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி அதிகாரத்திலிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க இந்திராகாந்தியுடன் ஒட்டான உறவுகளைக் கொண்டிருந்ததோடு இந்தியாவுக்குச் சார்பான வெளியுறவுக் கொள்கையையே பின்பற்றினார். ஆனால், 1978 ஆம் ஆண்டு சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபராகிய ஜெயவர்த்தனவோ திறந்த பொருண்மியக் கொள்கையைக் கடைப்பிடித்த அதேவேளையில் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதற்கு முற்பட்டார். சோவியத் சார்பான அணுகுமுறையைக் கொண்டிருந்த இந்தியாவுக்கு அமெரிக்காவுடன் ஜெயவர்த்தன நெருங்கிச் செல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. குறிப்பாக இந்துமாகடல் பகுதியில் அது தமது மேலாண்மையைப் பாதிப்பதாக அமையும் எனவும் இந்திராகாந்தியின் இந்திய அரசு கருதியது. அதனால், இலங்கைத்தீவின் தேசிய இனச்சிக்கலைச் சிறிலங்கா மீதான தனது மேலாண்மையை நிலைநாட்டும் வாய்ப்பாகப் பயன்படுத்துவததென முடிவெடுத்தது இந்திரா தலைமையிலான இந்திய அரசு.
1983 ஆம் ஆண்டு சிங்கள அரசினால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட கருப்பு சூலை இனவன்முறையினால், லட்சக்கணக்கான தமிழர்கள் ஏதிலிகளாகத் தமிழ்நாட்டுக்குத் தப்பிச் சென்றார்கள். அத்துடன், தமிழர்கள் சிறிலங்காவில் கொன்றொழிக்கப்படுவதால் கொதித்துப் போன தமிழ்நாட்டு மக்கள் உணர்வெழுச்சியுடன் பாரிய போராட்டங்களைச் செய்தனர். ஆனால் இவற்றையெல்லாம், சிறிலங்காவின் மீதான தனது மேலாண்மையைச் செலுத்தவல்ல பொன்னான வாய்ப்பாகக் கருதிய இந்திராவின் இந்திய அரசானது, தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பது போலவும் ஈழத்தமிழர்களைக் காப்பது போலவும் பாசாங்கு செய்தவாறு தனது மேலாண்மைக் கனவுடன் காலடி எடுத்து வைத்தது.

தனது அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகவிருந்த நரசிம்மராவினை சிறிலங்காவின் அரச தலைவரான ஜே.ஆர். ஜெயவர்த்தனவைச் சந்திக்க அனுப்பி வைத்தார் இந்திராகாந்தி. ரஸ்சிய- அமெரிக்க பனிப்போர் உச்சத்தில் இருந்தது இக்கால கட்டத்திலேயாகும். ஜே.ஆர் அரசாங்கத்தின் எல்லைமீறிய அமெரிக்க சார்பு நிலையைப் பார்த்துச் சினமடைந்த இந்தியா, தனது புவிசார் நலன்கள், பொருண்மிய ஒத்துழைப்பு, சிறிலங்காவின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் என்பவை தனது நலனுக்கு எதிராக இல்லாமலிருப்பதை உறுதிப்படுத்தல் போன்றவற்றைச் சிந்தையில் கொண்டு, ஈழப்போராளிக் குழுக்களைப் பயிற்றுவித்து ஆயுதங்களும் நிதியுதவியுமளித்து போராளிக்குழுக்களை ஏவிவிட்டுத் தனது கூலிப்படையாகப் பயன்படுத்துவதன் மூலம், அமெரிக்கச் சார்பு ஜே.ஆரின் அரசாங்கத்திற்கு கீழிலிருந்து ஒரு அழுத்தத்தை உருவாக்கி, விலக்குப் பிடிக்க வருவது போல தலையிட்டுத் தனது சிறிலங்கா மீதான மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதெனக் கங்கணங்கட்டிச் செயற்பட்டது. தனது இந்த மேலாண்மை செலுத்தும் வன்வளைப்பு நடவடிக்கைகளைத் தமிழர்கள் மீதான நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அணுகுமுறை போன்ற அரசறிவியலுக்குப் பொருந்தாத சொற்றொடர்களுக்குள் ஒளித்த இந்திராகாந்தி தமிழர்களை முட்டாள்களாக்குவதில் வெற்றி கண்டார். இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களுக்கு அவர்களது தாயகநிலப்பரப்புகளை சிங்களத்திடம் இருந்து மீட்டுத் தனிநாடாக்கிக் கொடுத்தால் தமிழ்நாடும் தனிநாடாகி இந்திய ஒருமைப்பாட்டுக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதைச் சிந்தையில் கொண்டு மிகவும் சிரத்தையுடனே தனது மேலாதிக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்தார் இந்திராகாந்தி. எனவே விடுதலைப் போராளிகள் தாமகவே போராடிப் பெறப்போகும் ஈழம் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு உகந்ததாக இருக்காது எனக் கருதிய இந்திராகாந்தி, தமிழ்மிதவாதத் தலைமைகள் மற்றும் ரெலோ போன்ற அமைப்பினரைத் தமக்குச் சார்பானோராக்கி அவர்களுக்கு ஒரு அரைகுறைத் தீர்வு மூலம் பொறுப்பினைக் கொடுப்பதன் மூலம் தமிழர்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தை நசுக்கி, தனது பிராந்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதை நோக்காகக் கொண்டு காய்நகர்த்தினார்.
தனது மேலாதிக்க நலன்கட்காக, சீக்கிய மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அழித்தொழித்த இந்திராகாந்தி, அதற்கான எதிர்வினையாக சீக்கிய இனத்தைச் சேர்ந்த அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களால் 1984-10-30 அன்று சுட்டுக்கொல்லப்பட்டதுடன், அவரின் மகனான இராசீவ்காந்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். ஒன்றுபட்ட இலங்கைத்தீவில் தமிழர்களது சிக்கலைக் கையாளுதல் என்ற நோக்கோடு இந்தியாவின் சிறிலங்காவின் மீதான மேலாண்மையை உறுதிப்படுத்துவதற்காக, 1985 ஆம் ஆண்டு யூலை மாதம் சிறிலங்காவின் அதிபர் ஜே.ஆரினை டெல்லிக்கு அழைத்துப் பேசினார் இராசீவ்காந்தி. விளைவாக, போராளிக்குழுக்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்தியாவின் ஒருங்கிணைப்பில் யூலை மாதம் திம்புவில் பேசவைப்பது என்று முடிவெடுக்கப்பட்டுத் திப்புப் பேச்சுகள் நடைபெற்றன. ஈழத் தமிழர்களைத் தனியானதொரு தேசிய இனமாகவேனும் ஏற்றுக்கொள்ளமுடியாது என சிங்களபேரினவாதம் அறிவிப்பதற்கு இந்தியாவால் களம் அமைத்துக் கொடுத்த பேச்சு மேடையாகவே திம்புப் பேச்சுகள் அமைந்தன.

தொடர்ச்சியாக ஈழ விடுதலைப் போராளி இயக்கங்களை தனது நலன்கட்காகப் பயன்படுத்தும் நோக்கோடு செயற்பட்டு வந்த இந்தியாவிற்குச் செருப்பால் அடிப்பது போல அதனது மேலாதிக்கத்தை நிறுவும் கூலிப்படையாகச் செயற்பட்டுத் தடம் மாறிப் பயணித்த ரெலோ இயக்கம் விடுதலைப் புலிகளின் தெளிவான முடிவால் தடை செய்யப்பட்டது. இதனால், ரெலோவிற்குப் பதிலாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினை தமிழர் விரோத இந்திய மேலாதிக்க நலன்கட்காகப் பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்து இராசீவ்காந்தி செயலாற்றினார். இவ்வாறாக தமிழின விடுதலையை நெஞ்சில் தாங்கிப் போராடிய விடுதலை இயக்கங்கள், இந்தியாவின் நரபலி சூழ்ச்சிக்கு ஆட்பட்டுத் தடம் மாறி ஈற்றில் தாம் எதற்காகப் போராடினார்களோ அதற்கெதிராகவே செயற்படும்படியாக்கி விட்டது தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா.
தமிழீழ தாயகத்தில் தனித்து நின்று மக்களோடு மக்களாகப் போராடும் விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் விடுதலை நடவடிக்கை (Operation Liberation) என்ற பெயரில் வடமாரட்சியை நோக்கி ஜே.ஆர். தலைமையிலான சிங்களப் படை 1987 ஆம் ஆண்டு மே மாதம் படையெடுத்தது. பட்டினி போட்டுப் பணிய வைக்க நினைத்த சிங்கள அரசுக்குத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பாடம் கற்பித்தனர். இதனைத் தனது மேலாதிக்கத்திற்கான நல்வாய்ப்பாகப் பயன்படுத்தும் நோக்கில் இந்தியா, 1987-06-04 அன்று பூமாலைநடவடிக்கை என்ற பெயரில் தனது வான்படை மூலம் தமிழ் மக்களிற்கு உணவுப் பொட்டலங்களை வழங்கியது. ஈற்றில் கரும்புலி கப்டன் மில்லர் நெல்லியடிப் படைத்தளம் மீது 1987-07-05 அன்று நடத்திய தாக்குதலுடன் கிலி கொண்ட ஜே.ஆர் தலைமையிலான சிங்கள அரசு இலங்கை– இந்திய ஒப்பந்தத்திற்கு இசைந்து அதன் மூலம் தமிழரின் தமிழீழக் கோரிக்கையைத் தவிடு பொடியாக்கக் களத்தில் இறங்கியது.
இந்நிலையில், 1987-07-19 அன்று, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்களை டெல்லிக்கு பேசுவதற்கு அழைத்தார் இராசீவ்காந்தி. டெல்லி சென்ற விடுதலைப் புலிகளின் பேச்சுக் குழுவை அசோகா விடுதியில் தொலைத் தொடர்புகள் எல்லாம் துண்டிக்கப்பட்ட நிலையில் மிரட்டும் பாணியில் வீட்டுக்காவலில் வைப்பது போல வைத்துப் பேசிப் பணியவைக்க முயன்றது இராசீவின் இந்திய அரசு. எவ்வளவு முயன்றும் சிறிலங்கா- இந்திய ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்க மறுக்க, ஈற்றில் கனவான் ஒப்பந்தம் என்ற பெயரில் எழுத்தில் இல்லாத ஒரு ஏமாற்று ஒப்பந்தத்தில் சில போலி உறுதிமொழிகளை வழங்கி, ஒப்பந்தம் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்குமிடையில் கைச்சாத்தாவது குழம்பாத வண்ணம் சூழ்ச்சி செய்தது இராசீவின் இந்திய அரசு.

1987-07-29 அன்று இலங்கை– இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஈழத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த ஒப்பந்தத்தில் தமிழர்கள் ஒரு தரப்பாகவேனும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இந்திய மேலாதிக்க விரிவுக் கனவுடன் ராஜீவ் காந்தியும் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழிக்கும் நோக்குடன் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
ஒப்பந்தம் கைச்சாத்திட்டு அடுத்த நாளே இந்திய வல்லாதிக்க அரசுப் படை இந்திய அமைதிப் படை எனும் பெயரில் தமிழீழ மண்ணில் காலடி எடுத்து வைத்தது. யாழ்ப்பாணத்தைப் புலிகளிடமிருந்து கைப்பற்றும் நடவடிக்கைக்கு “பவன் நடவடிக்கை” எனப் பெயரும் சூட்டியிருந்தது. இந்தியாவின் வருகையால் ஏற்பட்ட ஆபத்தை நன்குணர்ந்த மேதகு பிரபாகரன் அவர்கள் 1987-08-04 அன்று சுதுமலையில் மக்களைச் சந்தித்து வரலாற்றுப் புகழ்மிக்க சுதுமலைப் பேரறிவிப்பைச் செய்தார். “போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் தமிழீழம் மீட்கும் தனது போராட்ட இலட்சியத்தில் மாற்றம் இல்லை” எனத் தமிழ் மக்களிற்கு மேதகு பிரபாகரன் உறுதியளித்தார். கடலில் பயணம் செய்த 12 வேங்கைகளை ஒப்பந்தத்தைக் கணக்கெடுக்காமல் 1987-08-13 அன்று சிறீலங்காக் கடற்படை கைதுசெய்ய, அதனை மெத்தனப் போக்குடன் இந்தியா ஏளனத்துடன் பார்த்திருக்க, அந்தப் பன்னிரெண்டு புலிமறவர்களும் சயனைட் அருந்தித் தாம் வரிந்த இலட்சியத்தின் படி வீர காவியமானார்கள்.
இந்தியாவின் காந்தியம் என்கின்ற போலியான முகத்திரையைக் கிழித்து, அதன் ஆதிக்க வெறிக் கொடுங்கோன்மையை உலகிற்கு உணர்த்தி, தமிழின விடுதலையின் முதன்மை எதிரி இந்தியாவே என்று புரியவைக்கும் படியாக, யாழ். அரசியல் துறை பொறுப்பாளராகவிருந்த லெப்.கேணல் திலீபன் 1987-09-26 அன்று முதல் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் 265 மணி நேரம் உண்ணாநோன்பிருந்து “மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலை வெளிப்பாட்டுடன் ஈகச் செம்மல் ஆனார்.

விடுதலைப் புலிகளைப் பணிய வைக்க முடியாது என்று புரிந்துகொண்ட இந்தியப் படை 1987-10-10 அன்று விடுதலைப் புலிகளிற்கெதிராகப் போரைப் பேரறிவிப்புச் செய்து தமிழரிற்கெதிரான போரினை நடத்தியது. ஈழமுரசு, முரசொலி, நிதர்சனம் போன்ற ஊடகங்களை அடித்தொழித்து தனது தமிழர்கள் மீதான வன்கொடுமை பற்றிய செய்திகள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டது இந்தியக் கொலை வெறிப் படை. மக்களுடன் மக்களாக நின்று தீரத்துடன் போராடிய விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிப் பெரு நிலப்பரப்பை நோக்கி நகர்ந்தனர். தமிழ் மக்களை வகைதொகையின்றிக் கொன்றும் அகவை வேறுபாடின்றித் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியும் தனது உண்மையான பிணந்தின்னி முகத்தைக் கோர வெறியுடன் தமிழர்களுக்குக் காட்டியது இந்தியப்படை.
1988 இல் தேர்தல் நடத்தி வரதராஜப்பெருமாளை முதலமைச்சராக்கிய இந்தியா, தனக்குக் கூலிப்படையாக இருப்பதற்குத் தமிழ்த்தேசிய இராணுவம் என்ற பெயரில் ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கித் தமிழின விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முனைந்தது. ரணசிங்க பிரேமதாச சிங்கள அரச அதிபராக 1989 சனவரி மாதம் பதவியேற்றதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளினுடன் பேச்சுகளை நடத்தி இந்தியப் படையை இலங்கையை விட்டு அகற்ற முனைப்புடன் செயற்பட்டார். இந்தியாவின் ஆட்சிக் கட்டிலில் ஏற்பட்ட மாற்றத்தாலும், உலகின் 4 ஆவது வலுவான இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் மயப்பட்ட போராட்டத்தினால் வாங்கிய அடியாலும் 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இந்தியப்படை தமிழினம் மீதான தனது கொலைவெறியாட்டத்தை ஆடிவிட்டு இலங்கைத்தீவை விட்டகன்றது. இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்குப் பதிலடியாக வரலாறு 1991-05-21 அன்று ராஜீவ்காந்தி சாவு என்ற செய்தியாகத் தமிழ் மண்ணில் வைத்துப் பதிந்தது. இதைக் காரணமாகக் காட்டி, விடுதலைப் புலிகளைத் தடை செய்த இந்தியா, தமிழ்நாட்டில் எழுந்த புரட்சிகர அமைப்புகளை நெருக்கடிக்கு உள்ளாக்கி அடாவடி செய்தது. தமிழ்நாட்டில் தமிழர்கள் கிலி கொள்ளும் படியாக அத்தனை நடவடிக்கைகளையும் இந்திய வல்லாதிக்கம் செய்தது. இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை இந்தியா தடை செய்ய, தனது பின் தளமான தமிழ்நாட்டை இழந்து தமிழீழ மக்களின் மறவழிப் போராட்டமானது எவரின் உதவியுமின்றித் தனித்து விடப்பட்டது.
இந்த 1990 களின் முற்பகுதியில் மேல்நிலை வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்து அமெரிக்கத் தலைமையில் ஒருதுருவ உலக ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது. புவிசார் போர்த்தந்திர மோதல்கள் முடிவுக்கு வந்து, அமெரிக்க மேலாண்மை நிலைநாட்டப்படுவது நடந்தேறத் தொடங்கியது. உலகமயமாக்கல் கொள்கைகள் நீக்கமற எங்கும் நுழைந்தது. முதலீட்டு விரிவாக்கம் மற்றும் சந்தை விரிவாக்கம் என்ற கோணத்தில் உலக ஒழுங்கு நிலைநாட்டப்படலாயிற்று. இதனால் முதலீட்டுக்குத் தேவையான பாதுகாப்பு, தொழிலுக்குத் தேவைப்படுகின்ற அமைதி, அவற்றை உறுதி செய்யும் அரசமைப்பு மற்றும் சட்ட திட்டங்கள் என்றவாறு வெளியுறவுகள் மாறி வந்த சூழலில், தெற்காசியப் பிராந்தியத்தில் மேலாண்மை செலுத்தி வந்த இந்திய அரசின் அணுகுமுறைகளிலும் மாற்றங்கள் கட்டாயமாகின. தலையீடுகள், மோதல்கள், தூண்டிவிடுதல் என்பதற்குப் பதிலாக மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டல், பொருண்மிய ஒத்துழைப்பு, உதவி என்று அணுகுமுறை மாறியது. சந்தை வாய்ப்பை அதிகப்படுத்த போர் தவிர்க்க முடியாததாயின் தொழினுட்ப உதவி என்னும் பெயரில் ஆயுதங்கள் வழங்கல், இராசதந்திர நகர்வு எனும் பெயரில் அமைதிவழிப் பேச்சுகள் என்ற போர்வையில் கழுத்தறுப்புகள் என்பன நடந்தேறத் தொடங்கின.
உலகமயமாக்கலால் கொழுத்துவந்த இந்திய தரகு முதலாளிகளின் பெருகி வந்த முதலீடுகளுக்கு முதலீட்டுக் களம் விரிவடைய வேண்டி இருந்தது. இந்திய ஆளும் வர்க்கமாகிய தரகு முதலாளிகளின் நலன்கட்கு உகந்ததாக வெளியுறவு விடயங்கள் மாற்றலிற்குள்ளாகின. சவர்கல்லால் நேருவின் அணி சேராக் கொள்கை, இந்திராகாந்தியின் ரசிய ஆதரவுக் கொள்கை போன்ற இந்திய மேலாண்மை நலனிற்கான பித்தலாட்டங்கள் இல்லாது போய், வெளிப்படையான அமெரிக்க ஆதரவுக்கொள்கையை தனது தரகு முதலாளிகளின் நலன்கட்காகப் பேரறிவிப்புச் செய்தது இந்தியா. அந்தக் காலப்பகுதியிலேயே மற்றுமொரு வெளிப்படையான இந்தியச் சூழ்ச்சி நடந்தேறியது. 1993-01-16 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்து கொண்டிருந்த வேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சூழ்ச்சியினால் வங்கக்கடலில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகள் கைது செய்யப்பட இருந்த நிலையில், தாம் வரித்த கொள்கையின் படி இந்தியப் பகையின் கையில் சிக்காது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் 1998 இல் கைச்சாத்தான, இந்திய- சிறிலங்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (ISLFTA) 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர், இந்தியாவின் பொருண்மிய நடவடிக்கைகள் சிறிலங்காவில் விரிவடைந்தே சென்றன. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இரு நாட்டின் வர்த்தகம் 600 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 3000 மில்லியன் அமெரிக்க டொலராக (ஐந்து மடங்காக) மாறியது. இதனால், தனது மூலதனம் மற்றும் முதலீட்டுக்கான பாதுகாப்பும் தொழிலுக்கான அமைதியும் சிறிலங்காவில் நிலவ வேண்டிய தேவை இந்தியத் தரகு முதலாளிகளிற்கு இருந்தமையால், அதுவே சிறிலங்கா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையுமானது. நில மீட்புப் போரில் பாரிய வெற்றியீட்டிய வண்ணம், 2000 ஆம் ஆண்டு மே மாதம், யாழ் குடாநாட்டை நோக்கி முன்னேறிய தமிழீழ விடுதலைப் புலிகள், அங்கு நிலைகொண்டிருந்த 40,000 சிறிலங்காப்படைகளைச் சுற்றிவளைத்து முற்றுகையிட்டார்கள். சிறிலங்கா அரசின் இராணுவ இயந்திரம் சுக்குநூறாகித் தமிழீழம் மலரும் பொன்னான வாய்ப்பாகியிருந்தது அக்காலம். உடனே செய்மதிகள் மூலம் உளவுபார்த்து விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை அறிந்து சிறிலங்கா வான்படைக்குத் தெரியப்படுத்தியதோடு, புலிகளின் நிலைகளின் மீது வான்குண்டுத்தாக்குதல்களைத் தொடுப்பதற்கான வழிகாட்டல்களை வழங்க இந்திய வான்படைத் தளபதி டிப்னிஸை சிறிலங்காவுக்கு விரைந்து அனுப்பிவைத்தது இந்தியா. அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்காப் படைகள் மீதான முற்றுகையை விலக்காது விட்டால், 40,000 சிறிலங்காப் படையினரை மீட்கும் மனிதாபிமானத் தலையீடு செய்வதற்கு இந்திய வான்படையும் கப்பற்படையும் அணியமாக இருப்பதாக அறிவித்த வாஜ்பாயின் இந்திய அரசு, தமிழர்களை மிரட்டி சிறிலங்காவைக் காப்பாற்றியது.

பின்னர், 2001-07-24 அன்று கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தைத் தகர்த்த விடுதலைப் புலிகள் 375 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேற்பட்ட பொருண்மிய அழிவை சிங்களத்திற்கு ஏற்படுத்திச் சிங்களக் கொட்டத்தை முடக்கிப் போட்டனர். இக்காலப் பகுதியில், சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான வணிகம் பெருகி வந்தமையாலும், இந்தியத் தரகு முதலாளிகளின் முதலீடுகள் சிறிலங்காவில் இக்காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்டு இலாபத்திற்காகக் காத்திருந்தமையாலும், இந்தப் பாரிய பொருண்மிய முடக்கத்திலிருந்து சிறிலங்காவைப் பாதுகாத்து, தனது தரகு முதலாளிகளின் வர்க்க நலன்கள் பாதிப்பிற்குட்படாத வண்ணம் பேண வேண்டிய தேவை கருதி, இந்தியா தன்னாலான அத்தனை உதவிகளையும் சிறிலங்காவிற்குச் செய்தது. தொடர்ச்சியாக, தனது தொழிலுக்கான பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்யும் உடனடி நோக்கத்துடன், விடுதலைப் புலிகளையும் சிறிலங்கா அரசையும் அமைதிப் பேச்சில் ஈடுபடுத்த திரைமறைவில் நின்று வேலை செய்தது இந்திய அரசு. நோர்வேயிலிருந்து சிறிலங்கா வரும் தூதுவர்கள், போகும் வழியில் இந்தியா சென்ற பின்பே தமது நாட்டிற்குத் திரும்புவதை வாடிக்கையாக வைத்திருந்தமையைச் சுட்டிக்காட்டுவதிலிருந்து, இந்தியா இது குறித்து எத்தகைய திரைமறைவுப் பங்காற்றியது என்பதை விளக்கச் செய்ய முடியும்.
TATA வின் Taj விடுதிகள், வாதாவால தேயிலை நிறுவனம், tata infotech, VSNL ஆகியன சிறிலங்காவில் தமது வணிகத்தை செய்கின்றன. TATA Steel நிறுவனத்தின் கிளையாக Lanka Special Steels Ltd இயங்குகின்றது. உந்துருளி மற்றும் மகிழுந்து விற்பனையில் Ashok Leyland, Maruthi, Bajaj போன்ற இந்தியத் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் கொடிகட்டிப் பறக்கின்றார்கள். அத்துடன் Lanka Ashok Leyland என்ற பேருந்திற்கான உடலம் கட்டும் நிறுவனத்தை சிறிலங்காவில் நடத்துகின்றது Ashok Leyland. TATA Motors அனைத்து விதமான வண்டிகளுக்குமான உதிரிப்பாகங்கள் விற்பனையை சிறிலங்காவில் செய்கின்றது. CEAT, Radial Tyres போன்றனவை தமது துறையில் கோலோச்சுகின்றன.
Indian Oil Corporation இன் துணை நிறுவனமான Lanka IOC 199 பெற்றோல் விற்பனை நிலையங்களை சிறிலங்காவில் நடத்தி வருகின்றது. அத்துடன் அது மசகு எண்ணெய் உற்பத்தி ஆலையையும் நடத்தி வருகின்றது. இலங்கை போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறையானது ஏறத்தாள முற்றிலும் என்று சொல்லக் கூடிய அளவில் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் (NHAI) கொடுக்கப்பட்டுள்ளது.
Ultratech, Gujarat Ambuja, Birla போன்ற நிறுவனங்கள் சீமெந்துத்துறையில் சிறிலங்காவில் வணிகமாற்றுகின்றன. Ma Foi Management Consultants, NIIT போன்ற வழிகாட்டல் மற்றும் கல்வி வழங்கும் நிறுவனங்களும் தமது வருமானத்தை அதிகமாக சிறிலங்காவில் ஈட்டி வருகின்றன. Asian Paints என்ற இந்திய நிறுவனம் அதன் விற்பனையில் சிறிலங்காவில் முன்னிலை வகிக்கிறது. Shri Ishar Group, Gujarat Glass, Motherson Electrical Wires Lanka Pvt. Ltd, Nilkamal Plastics, Optech Limited, Bengal Waterproof ltd, Mahindra British Telecom, Ansal Housing & Construction ltd, Kedar Metals Pvt Ltd, Ceylon Glass Company யினை வாங்கி Piramal Glass என்ற பெயரிலும், Larsen and Toubro போன்ற இந்தியாவின் நூற்றுக்கணக்கான வணிக நிலையங்கள் சிறிலங்காவில் இயங்குகின்றன.

இந்தியாவின் Airtel நிறுவனம் 2008ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் அதாவது கிளிநொச்சியை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றிய முதல் கிழமையில் தனது சேவையைத் தொடங்கியது. தமது தொழிலிற்குப் பாதுகாப்பான சூழல் இருக்கின்றதா என்று கூடத் தெரியாத நிலையில், இப்படி விரைந்து இந்த இக்கட்டான காலப்பகுதியில் Airtel செயற்பட தொடங்கியமைக்கு பல காரணங்கள் இல்லாமலிருக்காது. சிறிலங்கா தனது கொலைவெறிப் போரில் வெற்றி பெற 1800 கோடி ரூபாய்கள் போர்ச் செலவாக Airtel இனால் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஏனெனில் சில மாதங்களில் தமிழீழ நிலப்பரப்பும் தனக்கான சந்தையைகாகப் போகின்றது என்பதைக் கணித்தே இனவழிப்பிற்கு Airtel துணை நின்றிருக்கின்றது. அத்துடன், தொடர்பாடல் துறையில் சிறிலங்காவுக்குப் பல தொழினுட்ப உதவிகளையும் வழங்கி அதன் மூலம் பல பெறுமதியான தகவல்களையும் கண்காணித்துத் திரட்டிக் கொடுத்தது. இவ்வாறு இந்திய மேலாதிக்கத்தின் பங்கே தமிழினவழிப்பில் முதன்மைப் பங்காற்றியது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருண்மிய மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) கைச்சாத்திடப்படும் தறுவாயில் உள்ளது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானால் இந்தியாவின் தரகு முதலாளிகள் சிறிலங்காவில் தமது சேவைத்துறை வணிகமாற்ற ஓடோடி வருவார்கள்.
இந்திய அரசின் மேலாதிக்கமானது அதனது தரகு அதிகாரவர்க்க முதலாளிகளின் நலன்கட்கானதாகும். இந்த ஆளும்வர்க்க நலன்கட்கு எதிராக எந்த ஆட்சியும் ஒரு போதும் செயற்படாது.

சிங்கள இராணுவத்திற்குப் பயிற்சி கொடுத்து, உளவு பார்த்துக் கொடுத்து, போர்க்கருவிகளைக் கொடுத்து, தமிழர்கள் தரப்பில் பிளவுகளைத் தனது உளவு அமைப்பின் மூலம் ஏற்படுத்தி, தொழினுட்ப உதவிகள் செய்து, போரை நடத்துவதற்குத் திட்டந்தீட்டிக் கொடுத்து, தமிழீழத்திற்கான பொருள் வரத்தைத் தடுத்தும், விடுதலைப் புலிகளின் கடல் நடமாட்டங்களையும் வழங்கல்களையும் முடக்கியும் இன்னும் எல்லாவிதமான உதவிகளையும் சிங்களச் அரசிற்கு செய்து அதற்கு உறுதுணையாக நின்று ஈழத்தமிழர்கள் மீதான இனவழிப்புப் போரை முன்னின்று நடத்தியது இந்திய அரசு. ஐ.நாவின் தூதுவர்களில் ஒருவரான விஜய்நம்பியார் என்ற இந்தியரைப் பயன்படுத்திச் சரணடைவு நாடகத்தை அரங்கேற்றியதே இந்திய உளவுத்துறை தான். விஜய்நம்பியாரின் தம்பியான சதீஸ்நம்பியார் என்பவரே சிறிலங்கா இராணுவத்திற்கான ஊதியம் பெற்ற இராணுவ வழிகாட்டியாகப் பணியாற்றினார்.
இந்நிலையில், இந்திய மேலாதிக்க எதிர்ப்பு, ஈழத் தமிழ்த் தேசத்தின் தன்னாட்சி உரிமை என்கின்ற கோணத்தில் ஈழச் சிக்கலைத் தமிழ்நாட்டு மக்களிடம் எடுத்துச் செல்லாமல், “அப்பாவிகள் கொல்லப்படுகின்றார்கள், தொப்புள் கொடி உறவுகள் கொல்லப்படுகின்றார்கள், மனிதாபிமானம், கருணை” போன்ற அரசியல் நீக்கம் செய்த சொல்லாடல்கள் மூலம் தமது அரசியல் பரப்புரைகளைச் செய்து ஒரு கழிவிரக்க அரசியல் என்ற இந்திய அரசால் விதிக்கப்பட்ட கோட்டைத் தாண்டாமல் நின்று கொண்டார்கள் தமிழ்நாட்டிலிருந்த பெரும்பாலான ஈழ ஆதரவுத் தலைவர்கள்.

இறுதிக்கட்டத்தில் தமிழர்களின் மீதான இனவழிப்புப் போர் உச்சக்கட்டத்தை அடைந்த போது, விரைவாகப் புலிகளை ஒழிப்பது, போருக்குப் பிந்தைய கட்டுமானப் பணிகளில் இந்தியத் தரகு முதலாளிகளுக்குக் கிடைக்கும் பங்கு போன்றவை தொடர்பாகப் பேசுவதற்கு முகர்ஜி, சிவசங்கர் மேனன், நாராயணன் போன்றோர் சிறிலங்கா விரைந்தபோதெல்லாம், தமது போராட்டங்களுக்கும் அழுத்தங்களுக்கும் அஞ்சி இந்திய அரசு சிறிலங்காவுடன் போர் நிறுத்தம் பற்றிப் பேசுவதற்குச் செல்கின்றது என்று கூறி ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாள்களாக்கினர் தமிழ்நாட்டு ஆட்சிக்கட்டிலில் இருந்தோரும் அவர்களுக்குச் சற்றும் குறைவில்லாத வெளியிலிருந்த ஈழ ஆதரவுத் தலைவர்களும்.
பா.ஜ..க வோ காங்கிரசோ இல்லை வேறு எந்த முற்போக்கு, பிற்போக்கு அணிகளோ ஆட்சி அமைத்தாலும், ஈழம் தொடர்பான இந்திய அரசின் கொள்கை மாறாது. ஏனெனில், இலங்கை மீது மேலாதிக்கம் செய்வது என்ற இந்திய ஆளும் வர்க்கங்களின் கொள்கைதான் இந்திய அரசின் சிறிலங்கா மீதான உறவுகளைத் தீர்மானிக்கும் கொள்கைகளாக இருக்கின்றன.
தனிநபர்களின் குணவியல்புகளும் அவர்களின் அறவுணர்ச்சியும் அரசின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் என்று சொல்பவர்கள் ஒன்றில் அடிமுட்டாளாக இருக்க வேண்டும். இல்லையெனில், ஒரு இனத்தையே முட்டாளாக்க நினைக்கும் நயவஞ்சகர்களாக இருக்க வேண்டும்.
மக்களின் வாழ்வியலிலிருந்து நுகர்வுப் பண்பாடு வரை பன்னாட்டு நிறுவனங்களாலும் அவற்றின் தரகு முதலாளிகளாலும் தீர்மானிக்கப்பட இயலும் இன்றைய உலக ஒழுங்கில், ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் சில தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கமைய இருக்கின்றது என்று கூறுவதைப் போன்ற பித்தலாட்டம் தமிழர்களின் அரசியலில் இன்றும் நடந்தேறுகின்றது.
ஒரு நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளினைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுவது அந்த நாட்டின் ஆளும் வர்க்கத்தின் நலன்கள் தான். எனவே, ஈழத்தமிழனை இலங்கை இந்துவாக்கினால் தமிழினச் சிக்கலிற்குத் தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்பவர்களைக் கண்டால் தமிழர்கள் தொலைவிற்கு விலகுவது நல்லது.
நாயுடன் படுத்தவன் உண்ணியுடன் தான் எழுந்திருக்க முடியும். உளவுத்துறையுடனும் இந்தி அதிகாரவர்க்கங்களுடனும் சல்லாபிப்பதை இராசதந்திரம் செய்வதாக நினைப்போர், பாதி வழியில் தமது தடம் மாறிய பயணங்களை நிறுத்த முடியாமல் தம்மை நயன்மைப்படுத்த (நியாயப்படுத்த) சப்பைக் கட்டுக்கட்டி, ஈற்றில் தமிழின விடுதலைக்காக உண்மையாகப் போராடுபவர்களால் இரண்டகம் செய்தோராக அடையாளப்படுத்தப்படுவர்.
எனவே, இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களான மூலதனத் திரட்சி, சந்தை விரிவாக்கம் மற்றும் பிராந்திய மேலாதிக்கம் என்பவற்றின் அடிப்படையிலானது தான் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள். இதற்கு, தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இந்தியா என்ற பாரிய சந்தை இருக்க வேண்டியதும், அண்டை நாடுகள் மீதான மேலாதிக்கத்தை அது பேண வேண்டியதும் அதற்குத் தேவையாகின்றது. எனவே, தனது பிராந்தியத்தில் ஒரு தேசிய இனம் விடுதலையடைவது தனது ஆளும் வர்க்க நலன்கட்குக் கேடாக அமையும் என்பதால், தனது பிராந்தியத்தில் நடைபெறும் நடைபெறப்போகும் எந்தவொரு தேசிய இன விடுதலைப் போரையும் அழிப்பதற்கு இந்தியா தன்னாலியன்ற அனைத்தையும் செய்தேயாகும்.
தமிழ்நாட்டில் தமிழர்களது தாயகநிலங்களை அழிவுத் திட்டங்களுக்காகப் பன்னாட்டு முதலாளிகளுக்குப் பட்டா போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்திய அரசை எதிர்க்கும் போராட்டங்களைத் தமிழ்நாட்டுத் தேசிய விடுதலையை நோக்கி தமிழர்கள் வீச்சுடன் முன்னெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை சென்ற கிழமை தமிழர் மரபுகளை அழிக்க முனைந்த இந்திய அரசிற்கு எதிராக உலகிலேயே பெரிய அறவழி மக்கள் புரட்சி தமிழ்நாட்டில் வெடித்தமை எடுத்தியம்புகின்றது. ஏலவே, வட- கிழக்கு மாநிலங்களிலும் காஸ்மீரிலும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. தமிழர்களின் புறநானூற்று வீரமும் இனி வருங்காலத்தில் வெளிப்பட, இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடம் துண்டு துண்டாக உடைந்து தாய்த் தமிழ் நாடும், தமிழீழத் திருநாடும் இந்த உலக வரைபடத்தில் நாடுகளாக இடம்பெற வல்ல வாய்ப்புகள் இருக்கின்றனவே. எனவே, இதற்கான இயங்காற்றலை உலகத் தமிழர் என்ற ஒருமித்த கோட்பாடு மூலம் தமிழ்நாடு மற்றும் தமிழீழத் தமிழர்கள் உருவாக்க வேண்டியது சிறுகணமும் தாமதிக்காமல் விரைந்து முன்னெடுக்க வேண்டிய கட்டாயக் கடமையாகும்.
பி.கு : சிறிலங்கா அரசானது தனது இயலாமையினால் தமிழீழத்தை ஏற்க நேரினும் இந்திய அரசு அதை ஏற்கொள்ளாது என்பதை கருத்திற் கொள்க (டேவிட் ஐயா)
தம்பியன் தமிழீழம்
2017-01-27
Be the first to comment