உங்களை மன்னித்து அருளலாம் – திரு-

எங்கள் கனவு சுதந்திர வாழ்வு
உங்கள் ஆசை அகண்ட வேலி

வேலியை அகட்டும் வேலைக்கான
கூலியாய் எம்மை நினைத்தன் பொருட்டு
கனவின் கைகளில் ஆயுதம் கொடுத்தீர்
ஒன்றை ஒன்பதாய் பிரித்தீர்
இருந்தும்
கனவின் தினவை கண்களில் ஏந்தியோர்
சொந்தக் கால்களில் நடக்கத் தொடங்கினர்,

புராணகாலப் பொழுதில் இருந்தே
உமக்கு நாம் தான்
போரும் புகைச்சலும்

கடல் தாண்டி நீவிர்
கதியால் போட வந்தவேளை
மீண்டுமொருமுறை
எங்கள் பூஞ்சோலை
உங்கள் வானரங்களால் பிய்த்தெறியப்பட்டது
அந்தப் பூக்களை தொடுத்தே நாங்கள் ஏவியோன் கழுத்தில்
மாலையை ஏற்றினோம்
சிதைதலின் வலி எத்தகையதென்பதின் நினைவூட்டல் அது,

அதன் பின் காலம் சுழன்று
நிழலின் பின்னே
நிசமாய் அரசு நிகழ்ந்தது

எத்தனை உயிர்களின்
எத்துணை வலிகளின்
எத்தனை ஆண்டுக் கனவது
திடுமென
கந்தகப் புகையாய் கடற்கரையொன்றில்
கரைந்து போனதன்
காரியம் மிக்க காரணப் பொருளாய்
நீரும் இருந்தீர்,

ஐந்தொகை இன்னும்
சமப்படவில்லை

வெள்ளையன் கட்டிய
உங்களின் தேசம்
சுள்ளி சுள்ளியாய் உடையும் வேளையில்
எங்கள் குழந்தைகள்
பெரிய மனதுடன்
உங்களை மன்னித்து அருளலாம்

அதுவரை..
– திரு-

20-10-2019

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*