
கடந்த 2 மாதங்களாக தமிழீழ மண்ணில் நடந்தேறி வருவன கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு ஆர்முடுக்கிவிடப்பட்டதையும் அதன் தீவிரத்தன்மை முழுவீச்சுப்பெற்று வருவதையுமே காட்டுகின்றன. ஆனாலும் இவை பற்றிய முழுமைப்பாங்கான பார்வையும் இவற்றிற்கெதிரான சரியான அரசியலை முன்னிறுத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய தெளிவுமின்மையும் ஆற்றல்வளமின்மையுமே தமிழர்களிடத்தில் தென்படுகின்றன. ஊடக வெளிச்சங்கள் பேசும் திசையில் நிகழ்வுகளின் பின்னால் ஓடிக் களைத்து அடுத்த நிகழ்வு ஊடக வெளிச்சத்துக்குள் வர அதன் பின்னாலும் ஓடிக் களைத்து… ஓடிக் களைத்து ஓடிக் களைத்து உதிரி அரசியல் முன்னெடுப்புகளைச் செய்தால் அலைச்சல்கள் அதிகமாகிச் சலுப்புற்று நடப்பன நடக்கட்டும் என்ற ஒதுங்குநிலைக்கே போக நேரும். தவிர, முன்னர் நிகழ்ந்த நிகழ்வின் இன்றைய தொடர்நிலை என்னவென்பதுமறிய நேரங்கிடைக்காமல் அடுத்த நிகழ்வின் பின்னால் ஓட ஆளில்லை என்று அலுத்துக் கிடப்பதே தமிழர் தாயகப்பகுதியில் நடைபெறும் போராட்டப் போக்காக இருக்கிறது.
தமிழர்களின் புரட்சிகர விடுதலை அமைப்பானது உயிர்ப்புடன் இருக்கும் வரைக்கும் நடைபெறுவன குறித்த சரியான புலனாய்வு செய்து, அதன் வழி அவற்றை எதிர்கொள்ளும் சரியான அரசியலை முன்னிறுத்தி, நடவடிக்கைகளில் இறங்கி வேலை செய்யும் வழக்கமே தமிழீழ தாயகப் பகுதிகளில் நிலவிவந்தது. ஆனால் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பான சூழலில் இத்தகைய அணுகுமுறையில் மக்கள் நலன்சார்ந்து மக்களுடன் நின்று போராடக் கூடிய விடுதலை அறம் எந்தவொரு வாக்குப் பொறுக்கும் கும்பல்களுக்குமில்லை. தமக்கிடையேயான வாக்குப் பொறுக்கும் போட்டியில் அங்கங்கே விடுமுறை நாள்களில் கூடி ஊடகங்கள் போராட்ட முலாமிட்ட நிகழ்வினைப் பதிவு செய்த பின்பு கலைந்து செல்லும் ஒரு வித பிறழ்வான அதாவது வாக்குப் பொறுக்கிகள் தம்மை விளம்பரப்படுத்துவதற்கு அப்பால் எதுவும் நடைபெறுவதாக இல்லை. இத்தகைய கையறுச் சூழலில் தமிழ்மக்கள் தத்தளிக்கையில் ஊடகங்கள் பாரிய சமூகப் பொறுப்பைக் கையிலெடுத்து நடைபெறுவன குறித்த மெய்ந்நிலைகளை மக்கள் உணரும் படியாகத் தெளிவூட்டி மக்களையும் மக்களமைப்புகளையும் வழிநடத்திச் செல்ல வேண்டும்.
எடுத்துக்காட்டாகச் சொன்னால், வெடுக்குநாறி மலையில் தமிழர்களின் வழிபாட்டுரிமை தொல்பொருளியல் திணைக்களத்தின் வல்வளைப்பால் மறுக்கப்பட்டமை சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரபரப்பான செய்தியாகியது. ஆனால், இந்நிகழ்வு இடம்பெறுவதற்குச் சில கிழமைகளுக்கு முன்பு நாயாறு செம்மலையில் அமைந்துள்ள குருகந்தை ராச மகா விகாரைக்கு நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சியானது சிறீலங்காவின் நில அளவைத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட இருந்தபோது, ஊர் மக்கள் ஒன்று திரண்டு காட்டிய கடுமையான எதிர்ப்பினால் அந்த முயற்சியைத் தற்காலிகமாகவேனும் தடுக்க முடிந்திருக்கிறது. அதே நாள்களில் மட்டக்களப்பு உன்னிச்சைப் பகுதியிலுள்ள கள்ளிக்குளத்தை வன்கவரும் முயற்சியை சிறிலங்கா அரச இயந்திரத்தின் வனவள பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. அத்துடன், திருகோணமலை சம்பூர்ப் பகுதியிலுள்ள இலக்கந்தைப் பகுதியை வன்கவரும் முயற்சியும் நடைபெறுகிறது. இவ்வாறாகத் தமிழர் தாயகப் பகுதியில் நடந்தேறி வரும் வல்வளைப்புகளைத் தனித்தனி நிகழ்வுகளாக நோக்கிச் சில நாள்களுக்குப் பரபரப்பாகப் பேசிவிட்டு அடுத்தடுத்த நிகழ்வுகளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கவே ஊடகங்களாலும் மக்களாலும் இயலுகிறது. மகிந்த ஆட்சிக் காலத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான அரசிதழ் அறிவிப்பில் வடக்குக் கிழக்கிணைந்த தமிழர்களின் தாயகநிலப்பகுதியில் 99 இடங்கள் தொல்பொருட்கள் சட்டத்தின் கீழ் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 48 இடங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலும் 19 இடங்கள் வவுனியா மாவட்டத்திலும் உள்ளன. அந்த அரசிதழ் அறிவிப்பினை வைத்தே தொல்பொருளியல் திணைக்களம் தற்போது தனது வல்வளைப்பு வேட்டையாடி வருகிறது.
இவற்றில் பரணவிதாரன காலத்து உத்தியான புதைத்து வைத்ததை அகழ்ந்து எடுத்து வரலாற்றுத் திரிபு செய்யும் உத்தியும் இனி வரும் நாள்களில் நடந்தேறத்தான் போகின்றது. இவை குறித்துச் சற்று அகலப்பார்வையும் எமக்குத் தேவைப்படுகிறது. அதாவது, தமிழர் தாயகப் பகுதிகளில் பல இடங்களில் நேர்மையான தொல்பொருள் ஆய்வு செய்தால் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை பௌத்தமும் அவ்வப்போது செழித்து வந்திருக்கிறது என்பது புலப்படும். தமிழர்களின் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்தக் காவியமாகவே இருக்கிறது. தமிழ்த் தேசியக் காப்பியமென இன்று பெருமை சூட்டப்படும் சிலப்பதிகாரமும் தமிழர்களின் பௌத்த நெறி பற்றிச் சான்று கூறுகிறது. மாகாயன பௌத்தத்தைத் தமிழர்களே வளர்த்தார்கள். தேரவாத பௌத்தர்களான சிங்களவர்கள் மகாயன பௌத்தத்தைத் தமது பரம எதிரிகளாகவே பார்த்தார்கள். இதன்வழி கி.பி. 14 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகத் தமிழகத்திலும், ஈழத்திலும் காணக்கிடைக்கும் பௌத்தச் சிற்பங்களும், தொல்லியல் சின்னங்களும் தமிழருக்கே உரிமையானவை என்பதினைக் கருத்திற்கொண்டு தமிழர்கள் தங்கள் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்தல் தொடர்பான அறிவினை வளர்த்துக் கொள்ளுதலும் இன்றியமையாதது. இது தொடர்பான முழுமையான அறிவைப் பெறாமல் பௌத்த சின்னங்கள் தமிழர் தாயகப் பகுதியில் காணக்கிடைத்தால் அதுகண்டு பதறாமல் அது தமிழர்களால் வளர்க்கப்பட்டும் அவ்வப்போது பேணப்பட்டும் வந்த மகாயன பௌத்தத்தின் வரலாற்று எச்சங்கள் என உறுதிபடக் கூறி தேரவாத சிங்கள பௌத்த வரலாற்றுத் திரிபு நரபலியாளர்களிடமிருந்து தமிழர் வரலாற்றைக் காக்க வேண்டிய கடமையைப் பல்கலைக்கழக சமூகங்களும் அறிவர்களும் செய்ய வேண்டும்.
மற்றும் இரண்டு கிழமைகளுக்கு முன்னர், நாயாற்று இறங்குதுறையில் சட்டத்திற்கு புறம்பாக கடற்றொழிலில் ஈடுபட முனைந்த சிங்களக் கடற்றொழிலாளர்களைத் தடுத்த அந்த நெய்தல் நிலத்தின் மரபுவழித் தமிழ் கடற்றொழிலாளார்களின் வாடிகள், விசைப் படகுகள் மற்றும் மீன்பிடிக் கருவிகள் தீக்கிரையாக்கப்பட்டன. அதற்குச் சில நாள்களின் முன்னர் வடமராட்சி கிழக்குக் கடற்கரையிலும் கடலட்டை பிடிக்க வந்த சிங்கள வல்வளைப்பாளர்கள் அதே வெறியாட்டத்தை ஆடியுள்ளார்கள்.
1993 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இராணுவத்தின் பயன்பாட்டில் உயர்பாதுகாப்பு வலையமாக இருந்த மன்னாரிலுள்ள சதோச கட்டிடத்தில் பாரிய மாந்தப் புதைகுழி அகழும் பணிகள் இடை நிறுத்தி இடை நிறுத்தியென்றாலும் நடந்து வருகிறது. இப்போதைக்கு 90 இற்கும் மேற்பட்ட மாந்தர்களின் உடல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் கடுமையான சித்திரவதைகளின் மூலம் கொல்லப்பட்ட உடல்களின் எச்சங்களென முதற்கட்ட ஆய்விலேயே கூறப்படுகின்றன. இந்த அகழ்வுப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது ஊடகர்களோ செல்ல முடியாதெனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பௌத்த பாளி பல்கலைக்கழக மாணவர்களான பிக்குகள் மட்டுமே அந்தப் பகுதிக்குச் செல்ல இசைவளிக்கப்பட்டுள்ளது. பிக்குகளின் கற்கைநெறிக்கும் இந்த மாந்தப் புதைகுழிக்கும் என்ன தொடர்பு எனப் பாராளுமன்றில் குந்தியிருக்கும் எம்மவர்கள் யாருமே கேட்கவில்லை.
யாழ்ப்பாணக் கோட்டையானது இராணுவத்திற்கே உரித்தானது என சிறிலங்காவின் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கா சென்ற கிழமை கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து வரலாற்று முதன்மைவாய்ந்த இந்தப் பகுதியும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
இப்படியாகக் கடந்த சில கிழமைகளுக்குள் எண்ணற்ற வலி தரும் செய்திகள் அங்கொன்று இங்கொன்றாகச் செய்தித்தாள்களில் வெறுமனே நிகழ்வுகளாக விரவிக்கிடக்கின்றன.
செய்தித்தாள்கள் பாமரர்களின் பல்கலைக்கழகம் எனலாம். ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் வேறெங்கு சென்றும் படிப்பதில்லை. எனவே நடந்தேறுவன பற்றிச் செய்தியறிக்கையிடுகையில் நிகழ்வுகளாக மட்டும் விடயங்களை அறிக்கையிடாமல், அவற்றின் அரசியல் பின்னணி, அவற்றின் ஊற்றுவாய் இழையோடியுள்ள முறை, இதையொத்த முன்னர் பதிவாகிய நிகழ்வுகள், அவற்றிற்கிடையிலான ஒப்பாய்வு மற்றும் இவையெல்லாவற்றையும் கருத்திலெடுத்து நடைபெறப் போவதை எச்சரிக்கும் வகையிலான ஒரு வகை எதிர்வுகூறல் என்பனவெல்லாம் அடங்கலாக நிகழ்வுகளை அறிக்கையிடுவதன் மூலமே ஒரு விடயம் குறித்து மக்களிடம் தேவையான தெளிவூட்டல்களை ஏற்படுத்த முடியுமென்பதுடன் இவை குறித்த சரியான அரசியலை முன்வைத்து மக்களை ஒரு போராட்ட ஆற்றல்களாக அணியப்படுத்த இயலும்.
1957 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் மூலம் டி.எஸ். சேனநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் தாயகங்களில் சிங்களக் குடியேற்றமானது இடைவிடாது தொடர்ச்சியாக நடந்தேறியே வருகின்றது. வடக்கு– கிழக்குத் தமிழர்தாயகத்தின் நிலத்தொடர்ச்சியைச் சிதைப்பதற்காக எல்லைப் பகுதிகளை சிங்களமயமாக்கி சிங்கள இடமாக்க, சிறிலங்காவின் தொல்லியல் துறை, மீள்குடியேற்ற அமைச்சு, மகாவலி அமைச்சு, புத்தசாசன அமைச்சு, சிறிலங்காவின் வனத்துறை, பெருந்தெருக்கள் அமைச்சு, ஊர்காவற்படை மற்றும் முப்படைகள் இணைந்து செயலாற்றுகின்றன. இவ்வாறு ஒட்டுமொத்த சிறிலங்காவின் அரச இயந்திரத்தின் அமைப்பு முறையே கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக எப்போதுமே மேற்கொள்ளத்தக்கவாறே அமைந்துள்ளது.
பொருண்மிய அபிவிருத்தி அமைச்சு, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, வேளாண் அமைச்சு, ஊரக பொருளியல் அலுவல்கள் அமைச்சு ஆகியன அடங்கலான எல்லா மட்டங்களிலும் தமிழர்களின் பொருண்மியத்தைத் தமிழர்களிடம் இருந்து பறித்தல் என்பதை உறுதிப்படுத்தத் தக்கவாறான தொடர்ச்சியான செயற்பாடுகள் இடம்பெற்றே வருகின்றன.
எனிலும் மேற்குலகின் நலன்கட்கான நல்லாட்சி என்ற போர்வையில் கொண்டுவரப்பட்ட தற்போதுள்ள அரசு ஆட்சிக் கட்டிலில் ஏறிய பின்பு மந்த கதியில் ஆனாலும் தொடர்ச்சியாக நடந்தேறி வந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளானவை தற்போது ஆர்முடுக்கப்பட்டு விட்டமையை கடந்த சில கிழமைகளாக நடந்தேறி வரும் நிகழ்வுகள் துலாம்பரமாகக் காட்டுகின்றன.
தமது சொற்கேட்டு ஆடிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஏதோவொரு அரசியற் தீர்வொன்றை அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் ஏதோவொரு வகையில் கொண்டு வரலாம் என்ற நகைப்பிற்கிடமான சிந்தையில் முற்றுமுழுதாக மேற்கின் நிகழ்ச்சி நிரலில் பயணிக்கத் தொடங்கிய பின்னர், இந்தியாவிற்கு கூட்டமைப்பின் மீது வெறுப்புணர்வு ஏற்பட்டது. தமிழர்களிற்கு இலங்கைத்தீவில் சிக்கல்கள் இருந்துகொண்டேயிருக்க வேண்டும் என்பதுடன் அவர்கள் தம்மிடம் வந்து முறைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு. ஏனெனில் சிறிலங்கா மீதான தனது மேலாதிக்கத்தைப் பேண தமிழர்களின் சிக்கல்கள் முதன்மையான ஒரு சாட்டாக இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் மேற்கிற்கோ தமது “Vision 2025” என்ற திட்டத்திற்காக ஒரு உப்புச் சப்பற்ற ஒரு தீர்வையென்றாலும் கையறு நிலையிலிருக்கும் தமிழர்களுக்கு வழங்கி அதனைத் தமிழரின் அரசியற் பேராளர்கள் (பிரதிநிதிகள்) மூலமாகத் தமிழர்களை ஏற்க வைத்துத் தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தைக் காயடித்துத் தமது சந்தைக்கான நிலையான அமைதியை ஏற்படுத்தும் திட்டமிருக்கிறது.
எனவே மேற்கின் விருப்பினை நிறைவேற்றும் தரகர்களாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செயற்படுவதனால் சினமடைந்த இந்தியா விக்கினேஸ்வரனை முன்னிலைப்படுத்திக் கூட்டமைப்பை ஓரங்கட்டித் தான் எதிர்பார்க்கும் வேலையைச் செய்யத் திடமாக வேலை செய்கிறது. தமிழர் தாயகப் பகுதிகளிலிருக்கும் ஊடக நிறுவனங்களின் தலைமைகளும் ஊடகர்களும் இந்தியத் தூதரகத்துடன் ஒட்டான உறவுகளை எப்போதும் வைத்திருக்கிறார்கள். எனவே அவர்களின் எழுத்துகள் யாரை முன்னிலைப்படுத்துவதாக அமையும் எனச் சொல்வது எளிது.
ஒரு குறிப்பிட்ட அரசியற் கட்சியைச் சார்ந்தவரால் நடத்தப்படும் செய்தித்தாளானது பரிந்துரை இதழியலை (Advocacy Journalism) முன்னெடுத்துத் தனது கட்சிக்கான துண்டறிக்கையாகச் செய்தித்தாளை வெளியிட்டாலும் கூட அதனால் தனித்து நின்று ஏனைய ஊடகங்களுடன் போட்டியிட்டு வெல்ல முடியாத நிலையே காணப்படுகிறது. ஏனெனில் ஏனைய ஊடகங்கள் பல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வீழ்த்தும் அணிக்கே பரிந்துரை இதழியலை நிகழ்த்துகிறது.
அத்துடன் பெருமளவான இணையத்தளங்களோ இழிநிலை இதழியலையே (Yellow Journalism) முன்னெடுப்பனவாக இருக்கின்றன. எனவே, பரிந்துரை இதழியலைச் செய்யும் அச்சு ஊடகங்களிற்கு நடுவிலும் இழிநிலை இதழியலைச் செய்யும் இணையத்தளங்களிற்கு நடுவிலும் நின்று புரட்சி இதழியலும் (Revolutionary Journalism) புலனாய்வு இதழியலும் (Investigative Journalism) செய்து மக்களை அரசியற் தெளிவூட்டி நிகழ்வுகளின் பின்பு அலைந்து திரிந்து சோர்வுற்றுக் கிடக்காமல் சரியான அரசியலை முன்வைத்து மக்களை அணியப்படுத்திப் பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் மூலம் சிங்கள தேரவாத பௌத்த அரச இயந்திரத்தின் அத்தனை கட்டமைப்புகளினதும் இடுப்பைத் தமிழர் தாயக மண்ணில் வைத்து உடைப்பதில் பங்களிக்க முனையும் காக்கையின் (www.kaakam.com) வேட்கைக்கு ஆதரவு நல்கித் தமிழ்த்தேசியக் கருத்தியல் கொண்டு பல தளங்களில் காக்கையில் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து, உசாவிப் பகிருமாறு தமிழீழ விடுதலையை வேண்டும் வாசகர்கள் உரிமையுடன் வேண்டப்படுகிறீர்கள்.
-காக்கை-
2018-08-28
Be the first to comment