பொது எதிரியை நோக்கி ஒன்று சேருவோம் – காகம்

01 ஜனவரி 2017

காகம் இணையம்

அன்பார்ந்த தமிழ்மக்களே!

வணக்கம்.

ஆங்கிலப் புத்தாண்டு நாளன்று வெளியாகும் காகம் இணையத்தினுடாக‌ உங்களைத் தொடர்புகொள்வதில் பெருமகிழ்வடைகிறோம்.

இலங்கைத்தீவில் இன்று தமித்த்தேசிய இனமானது இடியப்பச் சிக்கலான அரசியல் பொறிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய இனத்தில், வாசிப்பற்ற இளம் சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஒடுக்கும் சிறிலங்கா அரசானது பாரிய அளவிலான அரச வளங்களைச் செலவளித்துவருகிறது. இப்படிப்படியான தேவை ஏன் சிறிலங்கா அரசிற்குத் தேவையாகின்றது என்பதற்கு விடையிறுக்க முன்னர், எமது நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கைத் தீவில் தமிழ்த்தேசிய இன மக்கள் பின்வரும் சமூகங்களாக‌ வாழ்கின்றனர்;

  • சைவ மற்றும் கிறித்தவ மதத்தைப் பின்பற்றும் ஈழத் தமிழர்கள்
  • இசுலாமிய மதத்தைப் பின்பற்றும் ஈழத் தமிழர்கள்
  • மலையகத் தமிழர்கள்

இந்த மூன்று சமூகங்களும் தமக்குள் ஒன்று சேர்ந்து தமது அரசியல் வேணவாக்களை அடைந்துவிடக் கூடாது என்பதை ஒடுக்கும் சிறிலங்கா அரசு மாத்திரமல்ல ஒடுக்கும் இந்திய அரசும் விரும்புகிறது.

புத்தளம் முதல் வடகிழக்கோடு அம்பாறை வரை விரிந்து கிடக்கும் தமிழ்மக்களின் தாயக‌நிலத்தின் அரசியல் இருப்புத்தான், மலையகத் தமிழ் மக்களினதும் உரிமைக்கும் குரல் கொடுக்கக் கூடியதாக அமையும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழ் மக்கள், இன்று தமிழர் தாயகத்தின் பல இடங்களில் எண்ணிக்கைச் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பாரிய அளவிலான மாற்றங்களைச் சிறிலங்கா அரசு ஏற்படுத்திவிட்டது. இதே பாணியிலான வன்கவர்வைச் சிறிலங்கா அரசானது தற்போது வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொண்டு வருகின்றது.

இந்த சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறையையும் வன்கவர்வையும் எதிர்த்து நிற்பதற்குத் தமிழ்மக்களுக்குத் தடையாக இருப்பது எது?

இந்தக் கேள்விக்கான‌ பதில் மிக எளிதானது. அதாவது கட்சிகளாகக் குழுப்பிரிந்து பிளவடைந்து காணப்படுதல்.

வடக்கு கிழக்கில் முதன்மையாகக் காணப்படும் பிளவுகள்: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள்,டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி ஆதரவாளர்கள், விஜயகலாவின் ஜ.தே.கட்சி ஆதரவாளர்கள், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் ஆதரவாளர்கள், அங்கஜனின் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள், ரவுப் ஹக்கீம் ஆதரவாளர்கள், ரிஷாட் பதியுதீன் ஆதரவாளர்கள், ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள், இன்னும் வேறு சில தென்னிலங்கைக் கட்சி ஆதரவாளர்கள்.

மேலே குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் பெயரில் பிளவடைந்து நிற்கும் தமிழினமானது பொது எதிரியை வெல்வதற்கான எந்தவொரு பயனுள்ள‌ வேலைத்திட்டங்களும் இன்றி ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

பதவிப் பித்தில், மக்களைத் திசைதிருப்பி, முன்னெடுக்கப்பட வேண்டியவற்றை மேலும் சிக்கலாக்கி, சிறிலங்கா அரசிடம் தமிழர்களை மீளா அடிமையாக்கும் வேலைகளே இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.

நாம் ஏன் தனிச்சிறப்பானவர்கள்?

இந்த நிலத்தில் வாழும் தமிழர்களுக்கு என்றொரு மரபார்ந்த‌ அறிவியல், கலை, இலக்கியம், அரசியல், பொருண்மியம், மருத்துவம் என எல்லாமே காணப்படுகிறது.

மற்றைய தேசத்து இஸ்லாமியர்கள் போலல்லாது, ஈழத்துத் தமிழ் இஸ்லாமியர்களுக்கு என்று தனித்தன்மையான உடை, உணவுப் பழக்கவழக்கம், இலக்கியம் என்பன காணப்பட்டன.

ஏன் பொது எதிரியை நோக்கி ஒன்று திரளவேண்டும்?

சிறிலங்கா அரசானது இஸ்ரேலிய மற்றும் இந்திய அரசுகளின் வழிகாட்டலின்படி, தமிழ்த்தேசிய மக்களைக் கட்சி, மத அடிப்படையில் பிளவடையச் செய்வதில் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டிருக்கின்றது.

இந்தப் பிளவுகளைச் சாக்காக வைத்துத் தமிழர்தாயக நிலப்பரப்புகளான‌ புத்தளம், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழ்மக்களை எண்ணிக்கைச் சிறுபான்மையினராக மாற்றிவிட்டார்கள்.

புத்தளம், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட‌ சிங்களக் குடியேற்றங்களானவை, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் குடியேற்றங்களை ஒத்தது.

இஸ்ரேஸ் இலங்கைத்தீவில் அறிமுகப்படுத்திய குடியேற்ற மாதிரிகள்:

(i) மாவட்ட எல்லைகளை மாற்றுதல்

(ii) ஆறுகளை அண்டிய குடியேற்றங்களைக் கொண்டுவருதல் (மகாவலி திட்டம்)

(iii) தமது எதிரியைக் குழுக்களாக உடைத்து அவர்களிடம் இருந்து நிலங்களை வாங்கிக் குடியேற்றுதல்.

தவிர:

தமக்கெனப் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டிருந்த ஈழத்துத் தமிழ் இஸ்லாமியர்களுக்குள், இறக்குமதி செய்யப்பட்ட அரேபிய ஈர்ப்புகளைத் திணித்து அவர்களை மற்றைய தமிழ் மக்களிடத்தில் இருந்து அயன்மைப்படுத்தித் தமது தேவைகளை நிறைவேற்றுவதிலும் இஸ்ரேலிய அமைப்புகள் தீவிரமாக வேலை செய்து வந்தன.

இப்படியாகத் தமிழ்மக்களைக் கட்சி அரசிய‌லுக்கூடாகப் பிரித்து அந்த வாக்குப் பொறுக்கும் அரசியலில் கவனம் செலுத்துமாறு மடைமாற்றிவிட்டுத் தமிழர் தாயகம் மீதான தமது வன்கவர்வை எந்தவொரு தடையுமின்றி ஒடுக்கும் சிறிலங்கா அரசு செய்துவருகிறது.

பொது எதிரியை நோக்கி எப்படி ஒன்று சேர்வது? “காகத்தின்” பங்கு எப்படியாயிருக்கும்?

பொது எதிரி நோக்கி ஒன்று சேர்வதற்கு, ஈழத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் அறிவியல், பொருண்மியம், கலை, இலக்கியம், வாழ்வியல், அரசியல் என்பவற்றை மிக ஆழமாகத் தேட வேண்டும். அதன் மூலம் ஈழத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் மண் விடுதலை பற்றிய தேவையும் அக்கறையும் உணரப்படும். ஈழத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் இளம் சமுதாயமானது சரியான தெளிவுடன் வளருமிடத்து, பொது எதிரி நோக்கி ஒன்று சேர்ந்து மண்ணை விடுதலை பெறச் செய்வதென்பது இயலுமானதொன்றே.

“காகம்” இணையத்தைப் பொறுத்தவரை, கட்சி அரசியல்களை மறுத்துத் தமிழ்த் தேசிய விடுதலை பற்றிய கருத்துவாக்கத்திற்கே முன்னுரிமை கொடுக்கும்.

ஈழத்தில் தமிழ்த் தேசிய இனமானது தமது அறிவியல், பொருண்மியம், கலை, இலக்கியம், வாழ்வியல், அரசியல் என்பவற்றை மிக ஆழமாகத் தேட வேண்டும். அதனூடாக ஒன்றிணைந்த சமுகத்தையும் விடுதலைக்கான கருத்துருவாக்கத்தையும் உருவாக்க முடியும் என்று “காகம்” முழுமையாக நம்புகிறது.

“காகம்” இணையமானது, இன்று எமது இனம் முகம் கொடுக்கும் முதன்மையான சிக்கல்களை மிக நுணுக்கமாக அணுகி அதை மக்களுக்கு வெளிப்படுத்தும். தவிர நாம் கண்டுகொள்ள‌ வேண்டிய எம்மைச் சுற்றி நடந்தேறுவனவற்றையும் மக்களிடம் கொண்டுவந்து சேர்ப்போம் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறோம்.

ஒன்றாகச் சேருவோம் ஒன்றிற்காகச் சேருவோம்!

நன்றி

காகம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*