கலை இலக்கியப் போலிகளும் கூலிகளும்: வெந்து நொந்து கொண்டிருக்கும் ஈழத்தின் படைப்புத்தளம் -செல்வி-

படைப்புவெளியின் அசைவியக்கத்தில் காலத்துக்குக் காலம் கலையும் இலக்கியங்களும் மக்களுடைய வாழ்க்கையைப் பதிவுசெய்தல் என்னும் அழகியல் வழியான படைப்புத்தளத்தைக் கொண்டிருந்தன. தொடக்க‌ காலங்களில் மாந்தர்களுடைய சொந்தப் புகழ்பாடுதலும், மேட்டிமைப்பாங்கினைத் துதித்தலும், தற்புகழ்ச்சியும் என ஒரு குறுகிய வெளியில் பரந்த கலை இலக்கியப் படைப்புகள் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மக்களுடைய சமூக அசைவைச் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்ட போது கலைகள் மக்கள் குறித்த சமூகப் பார்வையினை அடித்தளமாகக் கொண்டு எழத்தொடங்கின. “மக்கள் ஆற்றலே மாபெரும் ஆற்றல்” என்ற கருத்துருவாக்கங்களுக்குள் கலைகள், இலக்கியங்கள் என படைப்புவெளியானது பார்வை மாற்றங் கண்டது. மக்களை மையமாகக் கொண்ட அரசியலும் அரசியல் கட்டமைப்புகளும் படைப்புகளிலும் மக்களை மையமாக்கவேண்டிய தேவைப்பாட்டை உறுதிப்படுத்தின. மக்கள் தமது உரிமைகளைப் பற்றியும் விடுதலையைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பித்த புள்ளியிலிருந்து குரலற்றவர்களின் உரிமைக் குரலாக மக்களுக்கான கலை உருவாகத் தொடங்கியது. மக்களைத் திரட்டி, அவர்களை ஓரணியில் அணியமாக்கி, மக்களை அரசியல்மயப்படுத்துவதற்கும் அவர்களது வாழ்வியலை அவர்களே தீர்மானித்துக் கொள்வதற்குமான அரசியல் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் புரட்சிகர ஆற்றல்கள் கலைகளை ஊடகமாக்கிக்கொண்டன. பலஸ்தீனப் போராட்டம், சீனப் புரட்சி, வியட்னாமின் விடுதலை என கலைகளும் இலக்கியங்களும் துப்பாக்கிகளின் சூட்டுவலுவுக்கு இணையாக ஈடுகொடுத்திருக்கின்றன. மாந்த வாழ்வின் இயங்கியலால் நிறைக்கப்பட்டிருந்த படைப்புவெளி, சமூக இயங்கியல் வெளியாக மாற்றம் பெற்றது. ஆளும் அதிகார வர்க்கங்களுக்கு எதிரானதாகவும், சில சோரம் போகும் படைப்பாளிகளினால் ஆளும் அதிகார வர்க்கங்களின் முரண் கருத்துருவாக்கங்களை பரப்புரை செய்யும் இரண்டகராகவும், சமூக நிலையில் படைப்புத்தளம் இரண்டாகப் பிளவடைந்தது. ஆளும் வர்க்கத்தினர் தங்களது ஒடுக்குமுறைகளினை மறைப்பதற்கும் தங்களது அதிகார வன்முறையை மறைமுகமாக நயன்மைப் (நியாய) படுத்துவதற்காகவும் சமூகத்திலிருக்கும் புகழ்விரும்பிகளை தங்கள் கலை இலக்கியக் கூலிகளாக நியமித்துள்ளது. அரசும் அதன் படைப்பாளிக் கூலிகளும் மக்களுக்கான கலை என்ற போர்வையில் அதிகாரத்திற்கான கலைகளைப் படைக்கும் இலக்கிய கழிவரசியலைச் செய்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற புரட்சிகர ஆற்றல்கள் ஆளும் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்களுக்காக கருவியேந்தி மறவழிப்போர் செய்தார்கள். மக்களின் குரலும் அதிகாரத்திற்கு எதிராகச் சூளுரைக்குமளவிற்கு உலகமெங்கும் ஓங்கி ஒலித்தது. படைப்பும் படைப்புவெளியும் விடுதலை என்ற ஒற்றைப் புள்ளியிலிருந்து எழுந்தது. ஆனால் முள்ளிவாய்க்காலின் கரையில் விடுதலைப் போராட்டத்தின் சுடுகலன்கள் பேசாநிலைக்குச் சென்றுவிட மக்கள் குரலற்றவர்களாக்கப்பட்டனர். இன அழிப்பின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புத் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் படைப்பு வெளிகள் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான அரசியலைப் பேச வேண்டிய கட்டத்தில் இருக்கின்றன. ஆனால் படைப்புவெளியினைக் களியாட்டங்களும், காதலும், காமமும் நிரப்பிவிட விடுதலையின் வீச்சம் வெளியற்றதாகிவிடும் நிலையில் வந்துவிட்டது. சொந்த அரசியல் காழ்ப்புணர்வுகளின் பாற்பட்டும், ஆளும் வர்க்கத்திற்குக் கேடாகாதவாறு படைப்புகள் இருத்தலை உறுதிசெய்தும், தம்முடைய சொந்த இருப்புகளை முதன்மையாகக் கொண்டும் படைப்புகளைப் படைக்கும் படைப்பாளிகள் பெருகியிருக்கின்றனர்.

தனது சமூகம் சார்ந்த அக அரசியலைப் பேசாது வெளியார்களின் கருத்தியல்களிலிருந்து தோன்றும் முரண் அரசியலைப் பேசுகிறார்கள். எதிர்ப்பு அரசியல் என்பது புகழ்வெளிச்சமடைவதற்கான எளிதான‌ வழி என்பது இலக்கியப்போலிகளுக்குத் தெரியும். அந்த இலக்கியப்போலிகளை இலக்கியக் கூலிகளாக்க அவர்களின் புகழ்வெளிச்சமடையும் அவாவினைப் பயன்படுத்தலாம் என்பதனை நன்குணரும் அதிகார வர்க்கம் அவர்களுக்குத் தேவையான வழங்கல்களை நிறைவுசெய்வதனூடாக தம் பக்கம் வைத்துக்கொள்கிறார்கள். உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலிருந்தும் மண்ணில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலங்களையும் மக்களின் முதன்மைச் சிக்கல்களையும்   புரிந்துகொள்ளாது, தாம் புலம்பெயர்ந்து தற்காலிகமாக நிலைகொண்டுள்ள புலத்தின் வாழ்வியல் கோலங்களை முதன்மைப்படுத்தியும், தமிழின அடையாளங்களையும் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியத்திற்கு முதன்மையான அச்சுறுத்தலாக இருக்கும் இந்துத்துவ மைய தமிழ்ச்சினிமாவின் நகல்களைப் படைப்பதே சிறந்தது என எண்ணி, தம் இனத்தினை அழிக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் புரட்சியாளர்களால் வெறுத்தொதுக்கப்படும் படைப்புக்களையும் பிறமொழி கலந்து, தொன்மங்கள் பற்றிய புரிதல்கள் இன்றி படைக்கப்படும் படைப்புகள் இலக்கியம் என்ற வடிவில் எம்மக்களிடம் போய்ச் சேருகையில் அவை வெறும் புகழுக்காகவும் பெயருக்காகவும் இனத்தை அடகுவைக்கும் படைப்புகள் என்பதில் ஐயத்திற்கிடமில்லை. இத்தகைய ஒரு இக்கட்டான சூழலில் புரட்சிகர ஆற்றல்கட்கு மக்களின் அரசியலைப் பேச வேண்டிய படைப்புகளைப் படைக்கவும், அதேவேளை இவ்வகையான படைப்புகளை எதிர்க்கவும் வேண்டியிருக்கும் இரட்டைச்சுமையைச் சுமக்கவேண்டிய நிலை இருக்கிறது.

கலை கலைக்காகவே என்ற நிலையினின்றும் கலை மக்களுக்கானது என்ற கருத்துருவாக்கம் உருவாகி பல ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று இப்பத்தியினை இது தொடர்பாக படைப்பதற்கான சூழல் என்ன? மக்கள் விடுதலையைப் பேசும் புரட்சிகர ஆற்றல்கள் இன்று பேசாநிலையிலிருப்பதால் கலை இலக்கியமும் அவர்களின் கைகளில் இல்லை. மீளவும் மக்கள் தமது சமூகத்தை, தமது அரசியலைத் தாமே படைப்பவர்களாக வேண்டும். புரட்சிகர ஆற்றல்கள் ஒதுங்கியிருக்காது, மறவழிப்போராட்டம் தானே பேசாநிலையிலுள்ளது மொழி அல்லவே என்ற உண்மையை உணர்ந்து மொழியைக் கையிலெடுக்கவேண்டிய தேவை உள்ளது. ஒரு இனத்தின் இருப்பிற்கும் அழிவுக்கும் அடித்தளமாக இருக்கும் மொழியின் இருத்தலினை உறுதிசெய்வது அம்மொழியின் இயங்குதிறனே. மொழி என்னும் கருவியைக் கையிலெடுக்கவேண்டிய தருணம் இது. ஆனால் போராட்ட வடிவத்தினை முன்னெடுக்காது வெறுமனே விடுதலையை வரிகளில் பேசிக்கொண்டிருப்பதால் விடுதலையின் பொருள் சோர்வுற்றுப்போய்விடக் கூடிய இடுக்கண்ணும் நிகழக்கூடிய வாய்ப்புள்ளது. ஈழத்தின் படைப்புவெளியை அதன் அரசியல் சார்ந்து பின்வரும் வகைப்பாடுகளினுள் நோக்க முடியும்.

  1. கலை இலக்கியத்தினால் 2009 இற்கு முன்னர் எவ்வகையான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன?
  2. கலை இலக்கியத்தின் வெளி மறவழிப் போராட்டம் பேசாநிலையடைந்த காலத்துக்கும் இன்றைய காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் எவ்வாறு நிரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது?
  3. கலை இலக்கியத்தின் படைப்புக்கள் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கப்போகின்றன? விடுதலைக்கான படைப்புக்களாகவா அல்லது அடிமைத்தனத்தின் பதிவுகளாகவா?

படைப்புவெளியின் வடிவங்களையும் உள்ளடக்கங்களையும் அவை படைக்கப்படும் வெளியின் சூழல் தான் தீர்மானிக்கின்றது. மக்களுடைய வாழ்வியலை அழகியலுக்காகவும் கலைக்காகவும் பதிவுசெய்த காலத்தினை, விடுதலைப்போராட்டமும் அதன் அரசியலும் இன்னொரு தளத்திற்கு எடுத்துச்சென்றன. எல்லாப் புரட்சிகர விடுதலை இயக்கங்களைப் போல தமிழீழத்தின் புரட்சியை ஒரு பக்கத்தால் சுடுகலன்களின் முனைகள் எழுதிக்கொண்டிருக்க இன்னொரு பக்கத்தால் மறவழிப் போரினைக் கூர்மைப்படுத்தவும் வீரியமாக்கவுமென படைப்புவெளியும் விடுதலையின் பக்கங்களை எழுதிக்கொண்டிருந்தது.  சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக “ஆரோ பொடியள் போராடுகிறார்களாம்” என்ற கூற்றைப் பொய்ப்பித்து எங்களுக்காக எங்கள் பொடியங்கள் போராடுகிறார்கள் என்று கூறும் மக்கள்மைய அரசியலைப் படைப்புவெளி ஊடறுத்தது. போராட்டத்தின் தேவையையும் விடுதலை உணர்வையும் மக்கள்திரளிடம் அவர்களது வீட்டு அடுப்படி வரை கொண்டு சென்றன புரட்சிப் பாடல்கள். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடூரத்தையும் அரச பயங்கரவாதங்களின் கோர முகங்களையும் தெருவெளி அரங்குகள் மக்களின் கண்முன்னே காட்டின. அதிகாரத்தின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடி வீரச்சாவை அடைந்தவர்களின் விடுதலை வேட்கைகள் பாடல்களாகவும் ஆற்றுகைகளாகவும் கவிகளாகவும் ஒவ்வொரு தமிழனையும் தொட்டுச் சென்றன. மக்களை ஓரணியில் அணிதிரட்டவும், அவர்களை எழுச்சி கொள்ளவும், எழுச்சிகொண்டு எதிரிக்கு எதிராகச் சூளுரைக்கவும் படைப்புவெளிகள் விடுதலையின் முழக்கத்திற்கானதாய் ஒலித்தன. இனத்தினதும் இன விடுதலையினதும் நோக்கங்கள், அரசியல் நிலைப்பாடுகள், கொள்கைகள் மக்களுக்குப் புரியாத வாய்ப்பாடுகளாகவே எப்போதும் இருக்கும். ஆனால் அந்த வாய்ப்பாடுகளும் படைப்புகளின் வழி எளிதாக‌ மக்களிடம் சென்று சேர்ந்தன. விளைவாக‌, எமது விடுதலைக்கான வழி எதிரியை வெற்றியடைவது என்பது ஓயாத அலைகளாய் புலிகள் பாய்ந்து, வெற்றி முழக்கங்கள் தமிழீழத்தின் மூலை முடுக்கெங்கும் முழங்கின; தானும் தன் படிப்பும் வேலையும் உண்டு என்ற தன்னலப்பொம்மைகளில் பலரின் கைகளில் கூட சுடுகலன்களைத் தூக்க வைத்தது; வீட்டிலே உறங்கிக் கிடப்பவனை எள்ளிநகையாடி, போர்க்களம் புக வைத்தது; போர்க்களத்தின் மெய்ந்நிலைகளை மறத்தின் பதிவுகளாக்கியது “நிதர்சனம்” தொலைக்காட்சி.

மக்களோடு மக்களாக மக்களின் அவலங்களை மட்டுமே பேசிய கலைகளும் இலக்கியங்களும், முள்ளிவாய்க்காலில் மக்களோடு மக்களாகப் புதைந்துவிட்டதோ என்று ஐயுறுமளவிற்கு முள்ளிவாய்க்கால் என்ற குறிகாட்டியின் பின்வந்த படைப்புவெளிகள் சிலும்பல்களாயின. ஆளும் அதிகார வர்க்கத்தின் கைகளில் மக்களுடைய படைப்புகளும் சிக்கிக்கொண்டன. ஒரு காலத்தில் புரட்சியில் அணியமாகியிருந்தவர்களில் சிலர், பின்னாளில் வந்த வழிமாறி, நெறிபிறழ்ந்து தமது தன்னிருப்புக்களுக்காக விடுதலைப்போராட்டத்தை விலைபேசும் படைப்புகளை உருவாக்கத் தொடங்கினர். புலி எதிர்ப்பு அரசியல் எனும் புலிக் காழ்ப்புணர்வு இலக்கியங்களும் படைப்புகளும் புலிகளினதும் அவர்களது கொள்கைகளில் முதன்மையானதுமான தமிழ்த்தேசியத்தின் இருப்பைப் பொதுவெளியில் சின்னாபின்னப்படுத்தத் தொடங்கின. அரசியல் அறிவிலிகளாய் நின்ற மேடையேறும் ஆர்வமுடைய சில இளைஞர்களை ஒன்றுதிரட்டி, அவர்களைத் தமது புலி எதிர்ப்பு, தமிழ்த்தேசிய மறுப்பு, இன நல்லிணக்கம் போன்ற கருத்துருவாக்கங்களை எழுதுவதற்கான கூலி எழுதுகோல்களாகப் பயன்படுத்தி விடுதலையைக் கருக்கும் நஞ்சினை அவர்களுக்குப் பணமாகவும் போதையாகவும் ஊட்டிக்கொண்டிருக்கும் புலி எதிர்ப்பு அரம்பர்களின் கையில் படைப்புவெளி பதறிக்கொண்டிருக்கிறது. மக்களோடு நின்று மக்களின் விடுதலை வேட்கைகளைப் படைப்பாக்க வேண்டிய இலக்கியர்களும் படைப்பாளிகளும் தமது புகழடையும் வாஞ்சைக்கும் பொருண்மியத் தேவைக்குமாக இலக்கியப்போலிகளாகவும் படைப்புப்போலிகளாகவும் இருந்தமையை வரலாறு அறியத்தரும் என்பதை அறியாமல் இருப்பது முரண்நகையே.

தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதன் கொள்கைகளும் தமிழ்த்தேசியம் சார்ந்து இன்று முன்னிற்கின்ற வலுவான விடயங்கள். அவற்றைப் பற்றிய விடயங்களும் அதைப்பேசுவோரும் மிக அதிகம். குறிப்பிட்ட படைப்பாளியும் அதனைப்பேசும் போது, அவனுடைய அரசியல் அறிவின்மை அவனை ஊடக வெளிச்சத்தினுள் கொண்டுவரமாட்டாது. ஆனால் புலி எதிர்ப்பினைப் பேசும்போது, புறநடையொன்று எளிதாக‌ ஊடக வெளிச்சத்தினுள் வந்துவிடுவது இயல்பு. அந்த ஊடக வெளிச்சத்திற்காக விடுதலை எதிர்ப்பினைச் செய்பவர்களின் கூட்டாக, கூலிகளாக மாறிவிட்ட சில படைப்பாளிகளின் செயற்பாடுகளையும் அவற்றின் தொடர்ச்சியையும் அந்த ஊடக வெளிச்சங்களும், அவர்களிற்கு வெளியிலிருந்து வரும் வருவாயும் உறுதிப்படுத்தி விட, எதிர்ப்பு அரசியல் படைப்புகள் குவிந்துகொண்டிருக்கின்றன. ஏற்கனவே போராட்டத்தினால் வந்த இழப்புகளினால் மனமுறிவிலிருக்கும் மக்களுக்குப் போர் என்ற சொல்லை விட நல்லிணக்கம் என்ற சொல் தற்காலிக மன அமைதியைக் கொடுக்கலாம். மக்களிடையே இந்த எதிர்ப்பு அரசியல் என்னும் கிருமி எளிதாகச் சென்றடைந்துவிடுவதற்கான முதன்மைக் காரணி ஊடகமாகும். இணையப் பயன்பாடு ஊடக வேலையை எளிதாக்கி விட, கருத்தியல் போட்டிக்கான முரண் விடயங்கள் மக்களிடம் எளிதில் சென்றடைய, புகழ்விரும்பிகளின் விருப்பமும் எளிதில் நிறைவேறிவிடுகின்றது. இவர்களின் படைப்புகள் அழிக்கப்பட வேண்டியவை. சங்ககால பாடல்கள் இன்று வரலாற்றுச் சான்றுகளாக இருப்பது போல ஆளும் வர்க்கத்திற்கு சார்பான புலி எதிர்ப்புப் படைப்புகளும் நாளை வரலாறுகளாகக் கூடிய அச்சுறுத்தல் இருக்கிறது. புரட்சிகர ஆற்றல்கள் இந்தப் படைப்புகள் குறித்துத் தமது கண்களை விழிப்பாக வைத்திருக்க வேண்டியது தட்டிக்கழிக்கமுடியாததாகின்றது.

சமூக வலைத்தளங்கள் பல பதிவர்களை உருவாக்கிவிட, அவர்களது வட்டங்களில் அவர்கள் எளிதாக‌ எழுத்தாளர்கள் என்றோ படைப்பாளிகள் என்றோ எளிதாக‌ முத்திரை குத்தப்பட்டுவிடுகின்றனர். நடுத்தர வர்க்கத்திடமும் நடுத்தர மேல் வர்க்கத்தினரின் கைகளிலும் இருக்கும் படைப்புவெளி, அவர்களது வாழ்வியலைப் பதிவுசெய்வதாக மட்டும் அமைந்துவிடுகின்றது. போர்க்காலத்தில் சிறுவர்களாகவும் பதின்ம அகவைகளிலும் இருந்தோர், போரின் அரசியலையும் அதன்போதான சமூக அசைவியக்கங்களையும் படைக்கவேண்டியவர்கள். ஆனால் அவர்கள் சமூகத்திலிருந்து தம்மை நோக்காது, தம்மிலிருந்து சமூகத்தை நோக்குவதால் அவர்களது படைப்புகள் வெறுமனே நனவிடை தோய்தல்களாக முடங்கிப்போய்விடுகின்றன. போர்ச் சூழலில் வாழ்ந்த அவர்களின் பதிவுகள் சமூகம் தொடர்பான வெறும் நினைவுப் பகிர்வுகளாக இருக்கின்றனவே தவிர, சமூக அரசியலைப் பேசுபவையாக இல்லை. போர் தின்று வாழ்ந்த அடிமட்ட உழைக்கும் மக்களிடமிருந்து வரும் படைப்புகளால் மட்டுமே எமது கடந்தகால அரசியலைச் சரியாகப் பேச முடியும். நந்திக்கடலில் அரை உயிராய் தப்பிப்பிழைத்தவனுக்கு நனவிடைதோயும் தேவை வராது. அவன் தன்னையும் தன்சார்ந்த மக்களினையும் அவர்களின் இழப்புகளையும் ஈடுகட்டுவதற்கு எங்கோ ஒரு மூலையில் உழைத்துக்கொண்டிருப்பான். மூக்குமுட்ட சாப்பிட்டு விட்டு, ஏப்பமிடுவதற்கு பதில் போரினுள் வாழ்ந்தோம் என்று இராணுவம் வர முதலே புலம்பெயர்ந்த ஒருவர் பதிவைத் தட்டிவிடுவது போல அவனால் அவற்றை மீள நினைக்கவே முடியாது.

உள்ளடக்கங்களில் ஒரு அக்கறையான மக்கள் அவலம் பேசப்படாதது ஒரு புறம் இருக்க, இக்காலத்தின் படைப்புகளில் மொழி குறித்த அக்கறையும் இருப்பதில்லை. ஆங்கில மொழியினதும் சமசுக்கிருதத்தின் பயன்பாடும் அள்ளித் தெளிக்கப்பட்டுப் படைப்புகள் என்று வெளியிடப்படுகின்றன. மொழித் தூய்மையற்ற இலக்கியங்கள் இலக்கியங்களாகவும் அவற்றை எழுதுபவர்கள் இலக்கியர்களாகவும் கொண்டாடப்படும் கேவலம் ஈழத் தமிழரிடம் மட்டுமே நிகழக்கூடியது. தனது சமூகம் குறித்த பார்வைப் பிறழ்வின் காரணமாக அதன் பேசுபொருளில் ஆழம் இல்லாதுவிடினும், மொழியின் செழுமைக்கான இலக்கியமாக என்றாலும் படைக்கலாம். அதுவுமில்லாது இலக்கியம் என்றும் முற்போக்கு என்றும் பெண்ணுடலைப் பேசுபொருளாக்குகிறார்கள். அதனுள் இருக்கும் அரசியலையாவது பேசும் படைப்பினைப் படைக்கிறார்களா எனில் அதுவும் இல்லை. சமூக வலைத்தளங்களின் பயன்பாடு இத்தகைய படைப்புகளைக் கொண்டாடும் ஊடகங்களில் முதன்மை பெறுகிறது. விருப்புகளுக்காகவும் பகிர்வுகளுக்காகவும் நான்கைந்து செம்மறிகள் பின்தொடர இலக்கியம் என்ற போர்வையில் காமம் சொட்டும் பதிவுகள் முகநூலில் முன்வரிசையிலிருக்கின்றன. இனத்தின் சாபக்கேடுகள் இவர்கள் தான். இனம் குறித்த ஆழமான பார்வையும் அறிவும் உடையவர்களில் பலரை போர் காவு கொள்ள, சிலர் தமது அடையாளங்களை மறைக்க வேண்டியவர்களாக ஒதுங்கிக்கொள்ள மூடர்களின் கூடமாக மாறிவிட்டது ஈழத்தின் படைப்புவெளி.

இலக்கியப்போலிகளின் கூடரமாகிவிட்ட ஈழத்துப் படைப்புத்தளத்தில் இயங்குவோர் குழு அரசியலைச் செய்யும் சிறுமதியாளர்களாகவும் இருக்கின்றனர். சமூகத்தின் அரசியலும் அதன் இயங்கியலும் தெரிந்தவன் மட்டுமே படைப்புத்தளத்தை ஆண்ட காலம் போய், இன்று அரசியல் அறிவிலிகள் படைப்புத்தளத்தில் பெருகிவிட்டது மட்டுமல்லாது, படைப்புத்தளத்தில் கிடைக்கும் ஊடகவெளிச்சத்தினைப் பிடியாகக் கொண்டு அவர்கள் அரசியல் வெளியினையும் அறிவிலிகளின் கூடமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். தமது அறிவிலித்தனத்தை உணர்ந்து அதனைத் திருத்திக்கொள்ளக் கொடுக்கப்படும் வாய்ப்புக்களையும் தட்டிக்கழித்து, சமிபாடடையப் பாட்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அன்றாடம் உழைத்து உண்ணும் மக்களின் வலிகளின் சுவடு கூட அறியாதவர்களான நடுத்தர, மேல்தட்டு இளைஞர்களின் பொழுதுபோக்கிற்கான கூடாரமாக மாறிக்கொண்டிருக்கும் படைப்புத்தளம் எமது அடையாளங்கள் என்றும் தொன்மங்கள் என்றும் அறிவியல் அறிவில்லாது மேலோட்டமாகப் பதிவுசெய்யும் பதிவுகள் எம் அடையாளங்களை அழிக்கும் அல்லது மறைத்து மறக்கடிக்கும் அரசியலின் வடிவங்களாகவும் இருக்கக்கூடும்.

இவ்வாறாக அரசியல் மடைமாற்றம் செய்யும் நோக்கினை முதன்மையாகக் கொண்டிருக்கும் படைப்புவெளியை எம் மக்களின் விடுதலையை, அவலங்களை, அரசியலைப் பேசும் படைப்புவெளிகளாக எவ்வாறு மாற்றப்போகிறோம்? மக்களுடன் நேருக்கு நேர் சென்று அவர்களுக்கு விடுதலை தொடர்பான அறிவியலைப் புகட்ட வேண்டிய தேவை இருந்த காலத்தில், அரங்கானது மக்களின் மனங்களையும் அவர்களது தெருவரை சென்று தட்டியது. புரட்சிப் பாடல்கள் அடுப்படி வரை சென்று மக்களை விழிப்படைய வைத்தது.

புலிகளின் குரலும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் தன்னாட்சியுரிமையையும் விடுதலையையும் பேசுபொருளாகக் கொண்டு மக்களை அரசியல்மயப்படுத்தின. புரட்சி முழக்கங்களும், புரட்சிகர அரசியற் பரப்புரைகளும் இளைஞர்களை முன்னரங்கிற்கு அனுப்பியது. மக்களை ஒரே குரலில் விடுதலையைச் சொல்ல வைத்தது அரங்க வெளி. ஆனால், இன்றைய சமூகத்தளம் மாறிவிட்டது. அது தொழினுட்பம் சார்ந்தும் பொருண்மியம் சார்ந்தும் தன்னை இன்னொரு தளத்திற்கு இட்டுச்சென்றிருக்கிறது. இவ்வாறான சூழலில், மக்களை அரசியல்மயப்படுத்துவதற்காக அவர்களிடம் கருத்தாக்கங்களைக் கொண்டுசெல்வதற்கான ஊடகமாக படைப்புவெளி இருக்கவேண்டும்.

மக்களை ஒரு அணியில் அணியமாக்குவதற்கு நேரம், செலவு, தரம் என்ற முத்தளத்தில் பொருந்தி வரும் வழியைப் பயன்படுத்துவதே அறிவார்ந்ததாகும். தொழினுட்பம் சார்ந்த படைப்புவெளிகள் எளிதாக‌ மக்களிடம் செல்லக்கூடிய வழிகள் ஏராளம் இருக்கின்றன. அரசியல் கருத்தாக்கங்களை ஆவணப்படங்களாகவோ குறும்படங்களாகவோ மக்களிடத்தே கொண்டு செல்வதும் வெகு மக்களிற்கு அதைப் பகிர்வதும் எளிதாதொன்று. மின்சாரம் இல்லாத காலத்தில் தெருவிளக்குகளின் அடியில் அரசியலைப் பேசிய அரங்கு போல இன்று பேச முடியாது. அதற்கான வலுவையும் கால மாற்றத்துடன் போட்டிபோட்டிக்கொண்டு தன்னை வலுப்படுத்தாமல் இருந்ததனால் கலைக்கானதாக மட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியிருக்கிறது.

ஆனால் இலக்கியத்திற்குப் பாரிய பங்கு இருக்கின்றது. அது இன்னமும் செயல் வீச்சுடன் சமூகப் பெறுமதியுடன் இருக்கக்கூடிய படைப்புக்களைத் தன்னுள்ளே வைத்திருக்கிறது. ஆனால் அது புரட்சிகர ஆற்றல்களின் கைகளுக்கு மீண்டும் வரவேண்டும். இலக்கியப்போலிகளை மக்கள் இனங்கண்டு புறந்தள்ளக்கூடியவாறு மக்களின் சமூகப் பெறுமதியை அவர்களுக்கே உணர்த்துவதாய் அவர்களின் இலக்கியங்கள் இருத்தல் முதன்மையானது. இந்திய மற்றும் மேற்குலகத்தின் கூட்டுச் சூழ்ச்சிகளையும் அவற்றின் கருத்துருவாக்கங்களினால் வரும் படைப்புகளையும் தூக்கி எறிபவர்களாக மக்கள் மாறவேண்டும். அவர்களை மாற்றும் பொறுப்பும் படைப்புத்தளத்தின் வன்மையிலேயே தங்கியிருக்கிறது. மக்களுடைய பார்வைகள் அவர்களை அறியாமலேயே மடைமாற்றம் செய்யப்படும் நயவஞ்சக அதிகாரத்தின் முகத்திரைகளைக் கிழிப்பனவாக படைப்புகள் எழ வேண்டும். சிறீலங்கா ஆடும் நிழற்பாவைக்கூத்தின் பாவையாளனாக இருக்கும் இந்தியாவின் சூழ்ச்சித் திட்டங்கள் அம்மணமாக்கப்படும் காத்திரமான பதிவுகள் படைப்புவெளியை அதிரச்செய்ய வேண்டும்.

எமது விடுதலைக் கருத்தியலை மடைமாற்றம் செய்யும் பிற்போக்காற்றல்கள் தமது கருத்துருவாக்க ஊடகங்களாக எவற்றையெல்லாம் நம்பியிருக்கிறதோ, அவை எமக்கும் வயப்படும். சொற் கோர்வைகளை விடுத்து, சிறு சிறு காண்பியப்பதிவுகளை மக்களிடையே பகிரும்போது எளிதில் அவை மக்களைச் சென்றடையும்.

ஒடுக்கும் சிங்களப் பேரினவாதத்தின் அதிகார வெறிக்குப் பலியாகிப்போன எங்கள் கதைகள் முடிந்துவிடவில்லை. இன்னும் வரப்போகும் ஆண்டுகளிற்கும் அது வரலாறாகிவிட்டது. மாந்த வாழ்வியலைப் பதிவு செய்வது கலைகளும் இலக்கியங்களும் என்பார்கள். எமது வாழ்வியல் என்பது விடுதலைக்கான எங்கள் போராட்டம் தானே. அந்த வாழ்வியல் போராட்டங்களும் அதன் அரசியலும் மட்டுமே எங்கள் படைப்புவெளியை நிரப்பவேண்டியவை. மறத்தின் கதைகளும் இழப்புகளின் வலிகளும் வெற்றியின் மகிழ்வும் அதன் அரசியலும் அறிந்தவர்களாக எமது படைப்புகளைப் படைப்போமாக இருந்தால் இனி வரப்போகும் விடுதலைக்கான நீட்சியின் மீள்தொடக்கம் அதுவாகத்தானிருக்கும். இலக்கியமும் கலையும் அரசியல் அல்ல. ஆனால் அவை படைக்கப்படும் விதத்தில் அரசியற் பெறுதியை அடைந்துவிடும். எமது படைப்புவெளியானது வெறுமனே படைப்புகளாக இருக்கப்போகின்றதா அல்லது அரசியற் பெறுதியைப் பெறப்போகின்றதா?

-செல்வி-

2017.08.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*