
குருதியையும் சதையையும் கொட்டிக் கட்டியெழுப்பிய தமிழர்தேசத்தின் அத்தனை கட்டமைப்புகளையும் கண்டுகொள்ளாமல், அரசியல் சாணக்கியம், புவிசார் அரசியல், சட்ட நகர்வு போன்ற மாயவார்த்தைகளால் முலாமிடப்பட்டு வெறும் அப்புக்காத்தர்களின் தொழிலாக மாற்றப்பட்டிருக்கிறது தமிழர்களின் அரசியற்போராட்டம்.
2009 தமிழின அழிப்பிற்கு பின்னர் கடந்த 10 ஆண்டுகளிற்குள் சிறிலங்காவில் மூன்றாவது சனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழர்களின் அரசியற் பரப்பில் என்னென்ன அரசியல் மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன என்று பார்த்தால் விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டிருந்த அரசியற் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டிருக்கின்றமை மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. விடுதலைப்புலிகளின் பின்புலத்தால் உருவாக்கப்பட்ட அரசியற் கட்டமைப்புகள், பொருண்மியக் கட்டமைப்புகள், சமூகக் கட்டமைப்புகள் அத்தனையும் அழிக்கப்பட வேண்டும் அல்லது அதன் நோக்கம் திசைமாற்றப்பட வேண்டும் என்ற இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகளின் திட்டத்திற்கு ஏற்றாற்போல் அந்தச் சூழ்ச்சித் திட்டத்திற்குள் விழுந்த கசேந்திரகுமார் அணி 2010 இல் முதலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைத்து இந்திய மற்றும் சிறிலங்கா அரசின் திட்டத்திற்கு நம்பிக்கையை அளித்தது. தனது சொந்தக் கட்சியின் நலனுக்காக மட்டுமே வரட்டுவாதங்களை முன்வைத்த கசேந்திரகுமார், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்தபடிநேர்மையாக 2009 மே மாதமளவிலேயே சிறிலங்கா அரசின் இன அழிப்புக்கு எதிராகக் குரல்கொடுக்காமல் 2010 சிறிலங்கா பாராளுமன்ற தேர்தல் வரை பொறுத்திருந்து தேர்தல் காலத்தில் த.தே.கூட்டமைப்புக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதுடன் தானும் பிரிந்து சென்றது குறித்து இன்றளவிலும் கசேந்திரகுமார் மீதான ஐயுறவு மக்களுக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதே நேரத்தில் த.தே.கூட்டமைப்பின் தலைமை மாற்றாரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர்களின் கட்டளைகளுக்கிசைந்து கூட்டமைப்பின் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்து வேறு விதமான பாதையை உருவாக்கி இன்றளவிலும் பயணித்துக் கொண்டிருக்கிறது. கசேந்திரகுமாரின் பிரிவும் விக்கினேசுவரனின் வருகையும் சுரேசின் திடீரென கோலோச்சிய தன்முனைப்பும் இந்திய சிறிலங்கா அரசுகளின் திட்டமிடலின் படியே தான் நிகழ்தது என்பதற்குப் பின்னர் நடைபெற்ற பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டலாம்.
இந்தியா மற்றும் சிறிலங்காவைப் பொறுத்தவரை கசேந்திரகுமார் ஒரு பகடைக்காய். புலம்பெயர் நாடுகளில் கசேந்திரகுமார் பெரும் அரசியல் அறிவாளியாகக் காட்டப்பட்டு தாயகத்தில் கசேந்திரகுமாரால் நிகழ்த்தப்பட்ட த.தே.கூட்டமைப்பின் உடைப்பை நயன்மைப்படுத்துவதற்கான (நியாயப்படுத்துவதற்கான) அத்தனை ஏற்பாடுகளையும் இந்திய புலனாய்வுத்துறை வெற்றிகரமாக தனது ஊடக அடியாட்கள் மூலமாக நிறைவேற்றியது. கசேந்திரகுமாருக்காக புலம்பெயர் நாடுகளில் பெருமெடுப்பில் பரப்புரைகளை மேற்கொண்ட அமைப்பின் தலைமைகள் டெல்லியுடன் மிக நெருக்கமாக இருந்தன என்பதற்கப்பால் டெல்லி வந்து கட்டளைகளைப் பெற்றுச் சென்றனர் என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும். இது பற்றியெல்லாம் கசேந்திரகுமார் கருத்திலெடுக்கும் நிலையில் இருக்கவில்லை. ஏனெனில் அவருக்குத் தனது குடும்பச் சொத்தான அகில இலங்கை தமிழ்க் காங்கிரசுக்கும் அவர்களது நீண்டகாலப் போட்டியாளராகிய தமிழரசுக் கட்சிக்குமிடையிலான மேலாண்மைப் போட்டியில் தான் வென்றுவிட வேண்டுமென்ற முனைப்பே இருந்தது. அதனை மறைத்து அவர் பேசிய அரசியலிற்குள் ஏமாற்றப்பட்ட தமிழிளையோர் ஏராளம்.
மேற்படி அரசியலின் தொடர் முயற்சியாக கடந்த வடமாகாணசபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பின் முடிவினை மாற்றி இந்தியா தான்விரும்பிய ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பண்ணியது. விக்கினேசுவரனின் இந்திய உறவு பற்றி விரிவாக காகத்தில் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கிறது. விக்கினேசுவரனை வைத்து த.தே.கூட்டமைப்பினை மீண்டும் சிதைக்கும் நடவடிக்கையில் இந்தியா முழுமையாகச் செயற்பட்டது. இந்த வேலைத்திட்டத்திலும் கசேந்திரகுமார் மற்றும் சில புலம்பெயர் குழுக்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டனர். தமிழ் மக்கள் ஏங்கிக்கிடந்த எழுச்சியை விக்கினேசுவரனை மீட்பராக காட்டுவதற்குப் பயன்படுத்தியதானது சூழ்ச்சியாளர்களின் வெற்றியாக அமைந்தது. விக்கினேசுவரின் இந்திய அடிமைத்தனத்தை மறைப்பதற்குக் கசேந்திரகுமாரை வெற்றிகரமாக இந்திய அரசும் சிறிலங்கா அரசும் பயன்படுத்தியது. முடிவில் த.தே.கூட்டமைப்பைப் பிளந்து இரண்டாக்கிய இந்தியம் பிளந்ததை மீண்டும் பிளந்து பல புதிய அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைமைகளையும் உருவாக்கி ஒரு போதும் தமிழர்கள் ஓரணியில் நிற்க முடியாதவாறு உசுப்பேற்றல்களையும் அவரவர்களுக்கான தனித்தனிப் பணிகளையும் வழங்கியிருக்கிறது.
அரசியல் அடிப்படையில் பல கட்சிச் செயற்பாடுகளினால் ஏற்படக்கூடிய தேக்கநிலையையும் குழப்பங்களையும் தவிர்ப்பதற்காகவே இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் விடுதலைப்புலிகளினால் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கட்சி மற்றும் தனிநபர் நலன்கட்கு அப்பால் தமிழினத்திற்காக ஒன்றுபட்டு நிற்கவேண்டிய கட்டாயத்தை உணர்த்தியே அந்தக் கூட்டமைப்பு இயலுமானவரை சரிவர ஒழுங்கமைக்கபட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பானது சிறிலங்காவின் தேர்தல் அரசியலில் இன்றியமையாத தாக்கத்தைச் செலுத்தவல்ல ஒன்றாகக் காணப்பட்டதன் காரணமாக அதைச் சிறிகச் சிறுகச் சிதைத்து அதன் செல்வாக்கை இல்லாது செய்யும் வேலைகளைத் திட்டமிட்டவாறு எதிரி செய்துவருவது கண்கூடாகத் தெரிகிறது.
த.தே.கூட்டமைப்பில் சுமந்திரனின் செல்வாக்கை உருவாக்கி சுமந்திரன் த.தே.கூட்டமைப்பை தனது அரசியற் செல்வாக்கிற்காகப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதற்கு முழுமையான காரணம் கசேந்திரகுமார்தான் என்பதை 2009ற்கு பிறகு கசேந்திரகுமார் செயற்பட்ட விதத்தை அட்டவணைப்படுத்திப் பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும்.
எதிரியின் அரசியல் நகர்வவை சரிவரப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் மக்களை அணிதிரட்ட முடியாத தமிழ் அரசியல் தலைமைகள் இனிவரும் காலங்களில் தமிழரின் அரசியலை முன்னோக்கி நகர்த்துவார்கள் என்பதில் துளியளவும் நம்பிக்கையில்லை.
அரசியற்காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்து சென்றவர்களைவிட பொருளியல் நலன்கட்காகப் புலம்பெயர்ந்து சென்றவர்கள்தான் அதிகம் என்பதாலும், பொருளியல் காரணங்களிற்காக புலம்பெயர்ந்து சென்றவர்களின் ஆளுகைக்குட்பட்டுத்தான் இன்று புலம்பெயர் அமைப்புகள் காணப்படுகின்றன என்பதாலும் இனி ஒருபோதும் அவ் அமைப்புகள் தமிழீழ விடுதலை நோக்கி நகர்வதற்கான முன்னெடுப்புகளைச் செய்யாது. பெரும் பொருண்மிய பலத்தோடு காணப்படும் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் ,இந்தியா மற்றும் இலங்கையில் உற்பத்திப் பொருண்மியத்திலும் தமிழர் தாயகத்தில் வீண் செலவுகளை ஏற்படுத்தும் முதலீடுகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். தமிழர் தாயகம் தனது உற்பத்தி எதிலும் முன்னர் சிறிலங்காவில் தங்கியிருக்கவில்லை. மாறாக இன்று குடிநீர் போத்தலுக்காகக் கூட தமிழர்தாயகம் சிறிலங்காவில் தங்கியிருக்க வேண்டிய மோசமான நிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முழுமையான காரணம் தமிழீழ விடுதலை குறித்த எந்தவொரு அக்கறையுமற்ற தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுமே.

தமிழீழ விடுதலையின் தேவை குறித்த எந்தவொரு கருத்துருவாக்கமும் புதிய தலைமுறைகளிடம் செய்யப்படாமலே காலம் நகர்ந்துவருகிறது. நாளுக்கு நாள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தொழினுட்பத்தின் மூலம் உலகத்தின் ஒடுக்கப்படும் இடங்களிலெல்லாம் புரட்சிகள் துளிர்விட்டபடி இருக்கின்றன. ஆனால் தமிழினம் மாத்திரம் எந்தவொரு மாற்றமும் இன்றி சிங்களத்தின் கால்களை நக்கியபடி காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் என்றுமில்லாத அளவிற்கு சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல், சலுகைகளிற்காக மதமாற்றங்கள், தமிழர் பாரம்பரிய இடங்கள் மீதான வன்கவர்வுகள், இசுலாமிய அடிப்படைவாதம், இந்தியாவின் இந்துத்துவ அரசியல் ஆட்டம் என அடக்குமுறைகள் கொடிகட்டிப்பறக்கின்றன. தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழங்கங்களைக் கேள்விக்குட்படுத்தும் தமிழ் அப்புக்காத்தர்கள் தமிழினத்தின் மீதான வன்முறைகளுக்கு எதிராகப் பாரிய சட்ட போராட்டங்களைக்கூட முன்னெடுக்கவில்லை. தமிழ் அரசியல்கைதிகள் விடயம் வெறும் தேர்கால அரசியலுக்காக மாத்திரமே பயன்படும் மிக இழிவான நிலையில் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இனிவரும் காலங்களில் எப்படி தமிழீழத்தின் விடுதலை குறித்தான பயணத்திற்கு மக்களை அணிதிரட்டுவது? எந்தப் புள்ளியிலிருந்து மீண்டும் மக்களை விடுதலை நோக்கி அணியப்படுத்துவது?

இந்தியத்திடம் சிக்கிநிற்கும் நிகழ்கால அரசியல்வாதிகளும் புலம்பெயர் அமைப்புகளின் தலைமைகளும் மக்களால் புறக்கணிக்கப்பட்டு புரட்சிகரமான மக்கள் போராட்டங்களை ஒழுங்கமைக்கக் கூடிய தலைமை உருவாக்கப்பட்டால் மாத்திரமே தமிழீழ விடுதலையை நோக்கி மெல்ல நகர்தலாவது நடைபெறும். புகழ்வெளிச்சத்தில் உலாவரும் தமிழ் அரசியல் பத்தி எழுத்தாளர்கள் கூட கடந்த சில ஆண்டுகளாக இந்தியத்தின் ஒலிபெருக்கிகளாகவே இருந்துவருகின்றமை தமிழர்களுக்குச் சாபக்கேடே.
யாழ்ப்பாணம் இந்தியத்தின் வாயில் போன்று காணப்படும் அளவிற்கு யாழ்ப்பாணத்தில் இந்தியத்தின் மேலாதிக்கம் பெருகிக்கிடக்கிறது. யாழ்ப்பாணத் தலைமைகளை (புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தமிழ் அரசியல் வாதிகள்) தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இந்திய அரசு தான் நினைப்பதைத் தமிழினத்தின் மீது நாசுக்காகத் திணித்துவருகிறது. புலம்பெயர் அமைப்புகளில் தமிழீழ மாவட்டங்களை உள்ளடக்கிய பொதுக் குழு உருவாக்கப்பட்டு அதன் மூலம் முடிவுகள் எடுக்கப்படல் வேண்டும். அதேபோல் இங்குள்ள அரசியற் தலைமகளிடமும் இந்தநிலை உருவாக்கப்படல் வேண்டும். தமிழீழ மக்களின் நலனிற்கே முதன்மையளிக்கும் வகையில் ஒவ்வொரு நகர்வுகளும் இருத்தல் வேண்டும். தமிழீழத்தின் தற்சார்புப் பொருண்மிய வளர்ச்சிக்கு முதன்மையளிக்கும் வகையில் முதலீடுகளும் கருத்துருவாக்கங்களும் செய்யப்படல் வேண்டும்.
இனிமேலும் கடந்த நூற்றாண்டு அரசியல்வாதிகளையும் நிகழ்கால புலம்பெயர் அமைப்புகளின் தலைமைகளையும் நம்பியிராது மக்கள் திரட்சி உருவாகி, தலைமைகளை மாற்றி புதிய புரட்சிகர நகர்வுகள் மேற்கொள்ளாதவிடத்து தமிழர்களின் அரசியல் தவிப்பு நிலையில்தான் தொடரப்போகிறது.
கற்பகம்
17-08-2009
Be the first to comment