காகம் வெறும் இணையமல்ல எதிர்கால தமிழ்த் தேசிய சிந்தனைப்பள்ளி

அன்பார்ந்த தமிழ்மக்களே!

தமிழ்த் தேசிய உறுதிமொழியைக் கேட்க இந்த இணைப்பில் செல்லவும் – தமிழ்த் தேசிய உறுதிமொழி

தமிழ்த்தேசியக் கருத்தியலைப் பேசும் அமைப்புகளோ, கட்சிகளோ, தனி நபர்களோ தமிழீழம் தான் தமிழருக்கான தீர்வு என்பதை நம்பினால் மட்டுமே அவர்கள் தமிழ்த் தேசியத்தைப் பற்றிப் பேச முடியும். தமிழீழத் தனியரசு அமைப்பதே ஈழத் தமிழரிற்குத் தீர்வு என்பதை ஏற்க முடியாத எவரும் தொடர்ந்து எம்மோடு பயணிக்கத் தகுதியற்றவர்கள்.

காகம் இணையம் அண்மையில் தமிழ்த்தேசிய உறுதிமொழியை வெளியிட்டது.

இது குறித்துப் பல உறவுகள் தமது திறனாய்வுகளை மின்னஞ்சல், முகநூல் மற்றும் எமது நட்பு வட்டங்களினூடாகச் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்த் தேசிய உறுதிமொழியின் விளக்கவுரை மற்றும் அதன் நோக்கத்தைத் தெளிவுபடுத்துவதன் மூலம் எல்லாக் கேள்விகளுக்குமான பதிலை வழங்க முடியும் என்று காகம் நம்புகிறது.

ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வு, “தமிழீழம்“ ஒன்றாக மட்டும் தான் இருக்கமுடியும் என்பதில் காகம் உறுதியாக உள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு இன்றைய அரசியல் களத்தில் இல்லாத இந்த நிலையில் பல தரப்பட்ட அமைப்புக்களும் தங்களைத் தமிழீழம் நோக்கிய சிந்தை உடையவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்புகின்றார்கள்.

உண்மையாகவே தமிழ்த்தேசியக் கருத்தியலை மனதில் நிறுத்திச் செயற்படும் எல்லா அமைப்புகளையும் கட்சிகளையும் ஒருமைப்பாட்டுடன் அணுகித் தமிழீழம் நோக்கிய பயணத்தை வலுவாக்க வேண்டும் என்றும் காகம் விரும்புகின்றது. இதே நேரத்தில், தேசிய இனவிடுதலை பற்றிய பார்வையற்ற இறக்குமதி செய்யப்பட்ட காலாவதியான குறுக்கல்வாத மற்றும் திரிபுவாதக் கொள்கைகளுடன் தங்களைத் தமிழ்த் தேசியவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் போலிகளும் ஆங்காங்காங்கே தங்கள் செயற்பாடுகளை விரிவாக்கம் செய்கின்றனர். அவர்களை அடையாளங்கண்டு விலகி நடக்க வேண்டும்; மிஞ்சிப் போனால் எதிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் காகம் உறுதியாக இருக்கிறது..

காகம் வெளியிட்ட தமிழ்த்தேசிய உறுதி மொழியானது வெறுமனே ஒரு அமைப்பு சார்ந்த உறுதி மொழியல்ல. தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எல்லோருக்குமான உறுதிமொழியிது. மொழி, அரசியல், பொருண்மியம் மற்றும் தனிநபர் பழக்கவழக்கங்களில் இருந்து ஒரு தமிழன், தமிழருக்கான விடுதலைக் கருத்தியலான தமிழ்த்தேசியத்தை எப்படியெல்லாம் நேசிக்க வேண்டும் என்பதை இந்த உறுதி மொழி அடையாளங் காட்டுகின்றது.

இந்த உறுதி மொழியானது சடங்கிற்கான உறுதி மொழியல்ல. அன்றாட வாழ்விற்கான உறுதி மொழி. நாள்தோறும் ஒவ்வொரு தமிழனும் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி.

“ஒட்டு மொத்த இனமும் ஒரே கொள்கையில் வளர்ந்தவர்கள்” என்று அடுத்த தலைமுறைக்கான பாடத்தை எடுத்துச் செல்ல தமிழ்த்தேசியர்களிற்குப் பொதுவான ஒரு உறுதி மொழி தேவைப்படுகிறது என்பதன் அடிப்படையிலேயே காகம் இதனை உருவாக்கியுள்ளது.

தமிழ்த்தேசியத்தை நேசிப்பவர்கள் இந்தத் தமிழ்த்தேசிய உறுதிமொழியில் உடன்பாடில்லை என  ஏதாவதொன்றைச் சுட்டிக்காட்டினால் அதற்கான விளக்கத்தைக் காகம் உறுதியாகத் தரும்.

கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்

காகம்

02-07-2017

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*