
“பொருண்மியம் அரசியலைத் தீர்மானிக்கும். அரசியல் ஏனையவற்றையெல்லாம் தீர்மானிக்கும்” என்ற அரசறிவியலின் அடிப்படையை உள்வாங்கியவர்களாக “இதில் அரசியல் இல்லை” என்பது எல்லாவற்றிலும் பார்க்க நுண்ணரசியல் என்பதனையும், “இவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்” என்று சொல்வது அவருடைய அரசியல் பின்னணியை மறைப்பதற்கான அரசியல் என்பதனையும், “இப்போதைய அரசியலை மட்டும் பார்” என்பது அப்போதைய அரசியலையும் இனிவரப்போகும் அரசியலையும் மறைப்பதற்கானது என்பதனையும், தனிமாந்த குணவியல்புகளும் மனமாறுதல்களும் அரசியல் தலைமையைத் தீர்மானிக்கவல்லன என்று நம்புவதானது ஆளும் அதிகார வர்க்கங்களினாலும் உலக வல்லாண்மையாளர்களாலும் பின்னப்படும் சூழ்ச்சிவலையைப் பேசாப்பொருளாக்கி விட வல்லதென உணராமை அரசியல் வரட்சியின் பாற்பட்டதென்பதனையும், உலக வல்லாண்மையாளர்களாலும் அடக்குமுறை அரச பயங்கரவாதத்தினாலும் பின்னப்படும் சூழ்ச்சிவலையை உணர்ந்தவர்கள் என்று தம்பட்டமடிப்போர் அவற்றை உணர்த்தவெனப் பாடுபடுவதாகச் சொல்வோர் அதனைக் கையாளப்போவதாகவும் சொல்லிக்கொள்வது அவர்களது கையாலாகாத்தனதை மறைக்கும் அரசியல் என்பதனையும், மக்களது வெறுப்புணர்வு கொதிப்புணர்வாய் பீறிட்டு எழுகையில் அதனை அடக்குமுறை அரச பயங்கரவாதத்திற்கும் அதன் ஊன்றுகோல்களான இந்திய, மேற்குலகச் சூழ்ச்சிக்காரர்களிற்கும் எதிராக ஒழுங்குசெய்து மக்கள்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லாமல் அதனைத் தமது வாக்கு வேட்டைப் போட்டியாளர்களாக நிற்கும் இன்னொரு பாராளுமன்ற அரசியல் கட்சி மீது திருப்பி விடுவதில் உள்ள கேவலமான பக்கத்தை மறைப்பதில் மடைமாற்று அரசியல் இருக்கின்றது என்பதனையும், ஒருவரது வர்க்கப் பின்னணி, அவரது வாழ்நிலைச் சூழல், மண்ணோடியைந்த அவரது உணர்வுகள், இதுகால வரையிலும் அவர் உள்வாங்கிய அரசியல், அடக்குமுறைக்கு எதிராக அவர் ஆற்றிய எதிர்வினைகள், அரச அதிகாரத்துடன் அவருக்கிருந்த உறவு, அவர் வந்த வழி, அவரை வரச்செய்த வழி, அவரைப் போகச் செய்யும் வழி, அவர் போகப் போகும் வழி போன்றவை எதுவெனவும் அறியாமல் அவரது தலைமையை ஏற்றுக்கொள்வதைத் தமது அரசியல் வழியாகச் சொல்லிக்கொள்பவர்களின் அரசியல் வங்குரோத்துத்தனத்தை மூடிமறைக்கவே புவிசார் அரசியல் குறித்த சொற்பொழிவுகள் பயன்படுகின்றன என்பதனையும், தமது இருப்புக்காக எடுக்கும் முடிவுகளை தமிழர் இருப்புக்காக எடுக்கும் முடிவுகளாகச் சொல்லி நம்பவைப்பதில் அவர்கள் எடுக்கும் முயற்சியினை இந்திய அரச பயங்கரவாதத்தின் தேசிய இனங்களினை அழித்தொழிக்கும் அரசியலை, இந்தியாவைப் புனித பூமியாக நினைக்கும், தமது சாம்பலை காசியில் கரைக்க விரும்பும் எம் மக்களின் அரசியல் வரட்சியைப் போக்க முயலாமை பாராளுமன்ற அரசியலின் இயலாமை என்பதைச் சொல்லிவிட்டால் அவர்களது இருப்பும் இருக்காதென்ற புவிசார் அரசியலறிவு அவர்களிடம் நிரம்பவே இருக்கின்றது என்பதனையும், பதாகைகள் மூலமும் ஒலிவாங்கி மூலமும் ஒலிபெருக்கி மூலமும் முகநூல் சொட்டைப் பதிவுகள் மூலமும் செய்யப்படும் பாராளுமன்ற கட்சி அரசியலுக்கு புரட்சிச் சாயம் பூசி, அந்தச் சாயம் வெளுக்கும் போதெல்லாம் மீள சாயம் பூச, விடுமுறை நாள்களில் போராட்ட ஏற்பாடுகளைச் செய்து, அதனைப் புரட்சிதானென அடித்துக்கூறி, தமது இருப்பைக் காக்கும் சில்லறைத்தனம் புரட்சி அல்ல, அது முதிர்ச்சிக்கு முந்திய புரட்சி என்ற இடுக்கண் எனவும் அதுவே உண்மையான புரட்சி உருவாகாமையை உறுதிப்படுத்த அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு உதவும் வகையினது என்பதனையும், ஒரு இனத்தினுடைய அரசியலை ஜெனீவாவிலும் முகநூலிலும் பேசுபொருளாக்கி விட்டு, அதனை அரசியல் வேலைத் திட்டம் என்று சொல்லிக்கொள்ளலாம் என்பதை அரசியல் வேலைத்திட்டம் என்றாக்கி, தம்மை நிலைப்படுத்தத் துடிப்பது பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பயன்படும் என்பதையும் சிலர் கண்டிலர் என்பதனையும், கூட்டமைப்புக்கு மாற்று புலிகள் போன்ற ஒரு புரட்சிகர விடுதலை இயக்கமே அன்றி வேறெதுவுமில்லை என்ற உண்மையைக் கூட இதுவரை சொல்லாமலும் புலிகளை நெஞ்சில் தாங்கி வேலை செய்வதாய் சிறார்களை மட்டுமல்லாது பல முதியவர்களையும் மூத்த ஊடகர்களையும் கூட நம்பவைத்தமை தொடர்ந்து வரும் ஏமாற்றங்களுக்குள் இன்னுமொரு ஏமாற்றமாய் அமையப்போவது என்பதனையும் புரிந்தவர்களாக எம்மவர்கள் இருக்கிறார்கள் என்பது ஐயுறவே.
இதனை ஐயந்திரிபற எடுத்தியம்ப வல்ல புரட்சிகர ஊடகங்களின் இன்மையும், இருப்பினும் அது சொல்ல வரும் விடயத்தை விளங்கிக்கொள்ளும் ஆற்றலின்மையால் வாய்க்கு வந்தபடி நொடிக்கொரு அரசியல் பேசும், அதனைக் கூட வீறாப்பாகப் பேசும், பேசியதற்காகவே எதையாவது செய்யவேண்டுமென்று செய்துவிட்டு விடுதலைக்கான வேலைத்திட்டம் எனவும் பரப்புரை செய்யக் கிடைத்த முகநூலே தஞ்சமென அதனுள்ளே வாழும் தேர்தல் தவக்கைகளும் தமிழ்த்தேசியக் கருத்துவெளியை பிணவாடை வீசும் பிணக்குழி ஆக்கிவிட்டனரே.

நாம் யார்? (தன்னாட்சி உரிமைக்குரித்தான மரபுவழித் தமிழ்த்தேசிய இனமாகவிருந்து தமிழீழதேசமாக அரசியற் கட்டுறுதி பெற்றவர்கள்) எமது எதிரி/ எதிரிகள் யார்? (பௌத்த சிங்கள பேரினவாதம், இந்திய அரச பயங்கரவாதம் மற்றும் தேசிய இன விடுதலையை மறுதலித்து தமது சந்தை நலனைப் பேணும் உலக வல்லாண்மையாளர்கள்) எமது நட்பு ஆற்றல்கள் யார்? (அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் தேசிய இனங்கள்) எமது வலுவெது? (தாய்த் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும் எமது சேமிப்புச் சக்தி என்பது). எமது அரசியல் இலக்கு என்ன? (தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தன்னாட்சி உரிமை) எமது தமிழீழ தேசக் கோட்பாட்டின் மீதான அச்சுறுத்தல்கள் எவை? (தமிழர் தாயக நிலப்பரப்பில் தனித்தேசிய இனமாக தமது இயங்காற்றலை அதிகரிக்காத, மத அடிப்படைவாதம் மூலம் தமிழர்களின் நிலங்களை வன்கவர்ந்து தம்முடைய எதிரி சிங்கள பௌத்த பேரினவாதம் என்பதை மறந்து/ மறக்கடித்து இனவழிப்பிற்கு உள்ளாகி நிற்கும் தமிழர்களை எதிரிகளாகத் திரித்து அரசியல் செய்யும் இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் அகமுரண்கள்). எமது அரசியல் வாஞ்சையை அடைவதற்கான வேலைத் திட்டம் என்ன? அதற்கு வழிவகை செய்யும் கருத்தியல் எது? (தமிழ்த் தேசியக் கருத்தியலைச் சிந்தையில் கொண்டு தமிழர்களை ஓரணியில் திரட்டி, எவருக்கும் பகடைக்காயாகாமலே எமது தலைவிதியைத் தீர்மானிக்கும் ஆற்றல் எமது மக்களிடம் உண்டு என்பதனை மனதில் நிறுத்தி அரச பயங்கரவாதத்திற்கெதிராக அவர்களுக்குப் புரியும் மொழியில் அவர்களின் ஆளும் வர்க்க நலன்கள் கேடாகும் வண்ணம் முனைப்புடன் போராடுவதை உறுதிசெய்து, செயலுத்திகளையும் மூல உத்திகளையும் வகுத்தல்). எமது உடனடிச் சிக்கல்கள் எவை? அவை குறித்த பார்வைகள் என்ன? (காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியற் கைதிகள், நிலப்பறிப்பு, இராணுவமயமாக்கம், மக்கள் வாழ்நிலையின் ஒவ்வொரு விடயத்திலும் இராணுவத்தின் தலையீடு போன்றவற்றை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டம்) போன்ற வினாக்களுக்கான பதில்கள் என்னவென்றறியாமல், அகமுரணைத் தீட்டி, கூர்மையடையச் செய்து, அடிப்படை எதிரியை மறந்து, தமது அறிவிலி அரசியலுக்கு ஒத்தோடும் மனநிலை படைத்தவரை அவர் உறவாடிக் கெடுக்க வந்தாரா? இல்லை ஊடுருவி அழிக்க வந்தாரா?இல்லை கருத்தூட்டிச் சிதைக்க வந்தாரா? இல்லை நம்பவைத்துக் கழுத்தறுக்க வந்தாரா? இல்லை பழைய குருடி கதவைத் திறடி என்றாற்போல காங்கிரசு எதிர் தமிழரசு என்ற பழைய கள்ளை புதிய பிளாவில் ஊற்றிக்கொடுத்து மயக்க நிலையில் மக்களை வைத்து தமது குடும்பச் சொத்தை (மூதாதையர் கட்சி) காப்பாற்ற வந்தாரா? இல்லை, சொல்வதைச் செய்தால் பிரேமானந்தா சீடர்கள் விடுதலை ஆவார்கள் என்ற நப்பாசையில் வந்தாரா? என எதுவுமே பாராமல் அவர்களுக்காகத் தமிழீழம் எங்கும் கொடிபிடித்து, வெளிநாடெங்கும் குடைபிடித்து, தமிழீழக் காவலன் விருது கொடுத்துப் புகழ்சூட்டும் அளவுக்கு எல்லைதாண்டிப் பயணிப்பது இனக்கொலைக்கு ஒப்பானதல்லவா?
இவையெல்லாம் இந்த மண்ணிற்காய்த் தமது இளமைகளைச் சருகாக்கிக் கழுத்திலே நஞ்சு மாலையுடன் உறையும் பனியும் இரவும் பகலும் பாராது உறுதிகொண்டு களமாடி, தமது இன்னுயிர்களை ஈகம் செய்த ஆயிரமாயிரம் மாவீரர்களுக்கும் போராடிய போராளிகளுக்கும் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த மக்களுக்கும் இவற்றிற்கெல்லாம் வழிகாட்டி உருவாக்கிய நாற்பது ஆண்டுகளாக மண்ணில் நின்றே அத்தனை அடக்குமுறைகளுக்கும் அடிபணியாமல் வழிநடத்திய எமது வரலாற்றுத் தலைவனுக்கும் செய்யும் இரண்டகங்களல்லவா?
இனப்படுகொலைக்கு உள்ளாகி, குற்றுயிரும் குலை உயிருமாய் வெந்து, நொந்து பரிதவித்துக்கிடக்கும் ஒரு தேசிய இனத்தின் அரசியல் எப்படிப் புரட்சிகரமாகவும் சரியான செல்நெறியிலும் கட்டியமைப்பது என்ற விடுதலை அறம் குறித்த எந்தப் பார்வையுமற்ற சிறுமைகள் எமது தேசிய இன அரசியலைப் பொழுதுபோக்குப் பதிவுகளுக்கான கருப்பொருட்களாக மாற்றியமைப்பதானது அவர்களது தரத்தைக் கோடிட்டுக் காட்டி, அவற்றைத் தடைசெய்வதன் தேவையையும் உணர்த்தவில்லையா?
ஒரு இனத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய அரசியற் தெளிவை இனவிடுதலைக்காகப் போராடவேண்டிய மக்களிடத்தே ஏற்படுத்த விடாமல் தமது கொச்சைப் புரிதல்களிலிருந்து நொடிக்கு நொடி வரும் அரசியலைக் குரங்கின் கைப்பூமாலை போல இவர்களுக்குக் கிடைத்த இணையத்தைப் பயன்படுத்திச் செய்வது இன்று இந்த இனம் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாகிவிட்டது.

தீர்வுப்பொதி வரும்வரை உயிர்ப்புடன் நானிருக்க, ஊன்றுகோலாய் சுமந்திரன் இருப்பார் என்று அரசியல் செய்யும் சம்மந்தன் ஐயா ஒரு பத்து நிமிடங்கள்தானும் உண்மையைப் பேசிவிடக்கூடாதா? அதில், பௌத்த சிங்கள பேரினவாதம் ஒரு துரும்பைத்தானும் தமிழர்களுக்குக் கொடுக்க அணியமாயில்லை எனவும், தமிழ்த் தேசிய இன விடுதலையின் முதன்மை எதிரி இந்தியா என்னும் தேசிய இனங்களின் சிறைக்கூடம் எனவும், உலகம் எம்மைப் பகடைக்காயாய் பயன்படுத்தும் அல்லது அழிப்பதற்கு முற்படும் என்பதனையும், புலிகள் போன்ற புரட்சிகர இயக்கமின்றித் தமிழர்களுக்கு விடிவில்லை எனவும், காலங்கடத்துவதே அன்றி வேறெந்த வழியுமில்லாது கையாலாகாத்தனத்தில் உள்ளேன் எனவும், தமிழரை ஓரணியில் வைத்திருப்பதற்குக் கூட இனி என்னால் முடியாது என்பதையும் (தமிழரை துண்டுதுண்டாக்கும் இந்தியாவின் சித்து விளையாட்டு எவ்வளவு உண்டு என்பதையும்) வெளிப்படையாக சுருக்கமாகத் தன்னும் கூறுவாரா? அதனுடன் சேர்த்து தம்பி கஜேந்திரகுமாரும் குஞ்சுபொரிக்கவில்லையென கோழியைக் கலைத்துவிடடு அதன்மேல் தான் ஏறி அமர்ந்து கூழ்முட்டை நாற்றத்துடன் மாற்றுடை இல்லாமல் ஓடத்தான் கூட்டமைப்பு எதிர் அரசியலைச் செய்கின்றார் என்ற அவருக்கு நன்கு தெரிந்த உண்மையையும் சேர்த்து சொல்லிவிடுவாரா சம்மந்தன் ஐயா?
குளவிக்குக் கூடுகட்ட இடமில்லாமல் பீரங்கிக் குழாய்க்குள் போய் கூடு கட்டிய கதையாய் பாராளுமன்ற அரசியலுக்கு மாற்றுவழி தேடும் போகாத வழிக்குப் பொய்யாக வழி சொல்லும் வரும் போதே மூத்தவர்களாய் ஊடகத்துக்குள் வந்த அறிஞர் பெருமக்கள் தமிழ் மக்களைத் தவறான கருத்தூட்டங்களுக்கு உள்ளாக்கி, இன்னுமொரு இனக்கொலைக்கு உள்ளாக்கப்கோகிறார்கள் என்பதனையும் மறக்காமல் சொல்லிவிடுங்கள். இப்படி நீங்கள் பத்து நிமிடங்கள் உண்மை பேசினால் 1956களில் இருந்து நீங்கள் இதுகால வரைக்கும் செய்த அரசியலில் இதுதான் பொருளுள்ள அரசியலாய் இருக்கும்.
பள்ளிக்கூடக் காலத்தில் எனக்குத் தான் பெறுபேறு அதிகம், நான் தான் ஓராம் பிள்ளை என்று நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் புத்தகப்பைச் சிறார் போல அறிவில் நான் தான் கெட்டிக்காரன் என்று தோரணையாக வலம் வரும் பேச்சாளர் வழக்கறிஞர் சுமந்திரன் அவர்களைப் பார்க்க முகநூலிலும் போகுமிடங்களிலும் நீங்கள் எங்கு படித்தீர்கள் என்று கேட்கையில், இன்ன புகழ்பூத்த பள்ளிக்கூடத்தில் கணிதம்/உயிரியல் படித்தோம் என்று சொல்லுவதையே பெருமையாக நினைக்கும் நகைப்பிற்கிடமான இளவட்டங்கள் தான் நினைவுகளில் வந்து போகின்றார்கள். ஐயா சுமந்திரன் அவர்கள் நீதிமன்றில் வழக்காடுகையில் தொடர்ச்சியாக வழக்காடியதால் பழக்கப்பட்ட நீதவான் தான் கேட்கும் தீர்ப்பை வழங்குவார் என்றாற் போல அடிக்கடி மேற்குலக இராசதந்திரிகளைப் பார்த்துப் பேசி, அவர்களுக்குப் பழக்கமானவராக தமது முகப்பெறுமதியை அதிகரித்து, நல்ல தீர்ப்பு நகலுடன் சம்மந்தன் ஐயாவிடம் வந்து, கெட்டிக்காரன் விருது வாங்க முற்பட்டார். ஆனால், இப்போது தமிழர்களுக்குத் தீர்ப்புச் சொல்லும் நீதவானாய் மாறிவிட்டதால் இப்போதெல்லாம் தமிழர்கள் இவரது பேச்சைக் கேட்கையில் எமது “குற்றம்” என்று எவற்றையெல்லாம் அடுக்கி, தீர்ப்புச்சொல்லப் போகின்றாரோ என்று பதறிய வண்ணம் உள்ளார்கள்.
சம்மந்தன் ஐயாவிடம் கேட்பது போல சுமந்திரனிடம் பத்துநிமிடங்கள் உண்மை பேசுங்கள் என்று கேட்டுப் பயனில்லை. நீங்கள் யாருக்காகப் பேசுகிறீர்கள்? உங்களை யார் பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்கள்? அனுப்பி வைத்தவர்களின் அரசியல் வாஞ்சை என்ன? என்பன பற்றி ஐந்து மணித்துளிகளேனும் சிந்திக்க மாட்டீர்களா? பாலத்தீனத்தில் கனரக பீரங்கி வாகனத்திற்கு சிறுவர்கள் கல்லெறிந்தது போல எமது சிறுவர்கள் கையில் கற்கள் கிடைத்தால் உங்களின் மீதுதான் வீசுவார்கள் போல நிலைமை இருக்கிறது. இதில் எமது கவலையெல்லாம் உங்கள் மீது கல்லெறி படப்போகின்றதே என்பதல்ல. சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக வீசப்படவேண்டிய கற்கள் வழிமாறி வீணாய்ப் போக உங்களது பேச்சும் செயலும் காரணங்களாய் இருக்கின்றன என்பதுதான்.
ஒரு விடயம் குறித்த அல்லது ஒரு நபர் குறித்த தொடர்ச்சியான தகவல் திரட்டல்கள், திரட்டப்பட்ட தகவல்களைத் தொடர்ச்சியாகச் செம்மையாக்குதல், அவற்றின் பின்னணிக் காரணங்களை ஆய்வுக்குட்படுத்தல், அதன் போக்குகளைத் துணிதல், அது குறித்து ஆய்வுக்குட்படுத்துதல், அவற்றின் உண்மைத்தன்மைகளை மறு ஆய்வுக்குட்படுத்துதல், அதன் பின்னர் தீர்மானகரமான முடிவுகளுக்கு வருதல், அவற்றிற்கான அடிப்படைக் காரணிகளை அரசியற் பெறுதியுடன் விளங்கிக்கொள்ளுதல் என்றவாறு விடயங்களை அணுகிப்பழகாமல் அரசியல் முதிர்ச்சியின்றி எழுந்தமானமாக நீங்கள் பேசும் அடிப்படையற்ற அரசியல் பனைமரத்தின் நிழலில் பலகாரம் சுடப்போகும் கதையாய் தான் போய் முடியப்போகிறது. கற்றுக்குட்டிகளெல்லாம் கற்றறிந்தவர்களெனின், அது பாசாங்கு அல்லவா?
ஆம்பிளையில்லை பாம்படிக்க, அடியடி மச்சாள் புறப்படலையிலை என்டானாம் என்ற கதையாக அல்லவா இன்றைய தமிழ்த்தேசியத்தின் கருத்தூடகங்கள் உள்ளன. இதையெல்லாம் பார்த்து விடயமறிந்தவர்கள் மனம் நொந்து சாகிறார்களே அதுவாவது உங்களுக்குத் தெரிகிறதா? தாக்கத்தில் பங்கெடுக்காமல் இருப்பினும் தாக்கவேகத்தைக் கூட்டும் நேர் ஊக்கிகளாகத் தன்னும் இருப்பீர்கள் என்று பார்த்தால் நீங்களோ தாக்க வேகத்தைக் குறைக்கும் மறை ஊக்கிகளாக மாறிவிட்டதுமல்லாமல் தாக்கத்தொடரில் வேறு இடம்பெற்றதாக நினைக்கின்றீர்களே. உக்கிரமான தாக்கங்களையெல்லாம் ஏற்படுத்தவல்ல தாக்குதிறன் மிகுந்த எத்தனையோ பேர் இன்னுமிருக்கின்றனர். அவர்கள் சீறிப்பாய்கையில் உங்களில் பலரும் நீங்கள் நம்பும் பலரும் மண்குதிர் என்பது தெரிந்துபோகும்.
வலி நிறைந்த மனச்சுமையுடன் மறவன்.
06-08-2017
Be the first to comment