கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக வெளிவருகின்ற கதையளப்புகளும் அறிவார்ந்த அரசியல் உரையாடலின் வெற்றிடமும்- பாகம்- 4 –

சீனாவின் புவிசார் அரசியல் நிலைவரம் என்ன?

தொழில்மயமாக்கத்தின் பின்னர் எண்ணெய் வளமானது நாடுகளின் பொருண்மியத்திற்கான மூல வளமாகியது.  உலகெங்கிலும் மக்கள் நுகரும் பொருள்களில் பெரும்பாலானவை சீனாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறன. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களெல்லாம் தமது உற்பத்திக்கூடங்களைச் சீனாவிலேயே அமைக்கின்றார்கள். மலிவானதும், வினைத்திறன்மிக்கதுமான தொழிற்சந்தையாக சீனாவே இருந்து வருகின்றது. உலகப் பெருநிறுவனங்களின் உற்பத்திகள் மற்றும் சீனாவின் நிறுவனங்களின் உற்பத்திகளென உற்பத்திகளின் நாடாகச் சீனா திகழ்ந்து வருவதால், உற்பத்திக்குத் தேவையான மிகப் பெரும் ஆற்றல் வளம் (எண்ணெய் வளம்) சீனாவிற்குத் தேவைப்படுகிறது.

இந்த எண்ணெய்வளத்தின் பெரும்பகுதியை வளைகுடா நாடுகளிலிருந்தே சீனா இறக்குமதி மூலம் பெற்றுக்கொள்கிறது. எனவே, வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய்வளத்தைச் சீனாவிற்குக் கொண்டுவந்து சேர்க்கும் வழித்தடமானது சீனாவிற்கு மிகவும் முதன்மையானதாக இருக்கின்றது.

சீனாவானது வளைகுடா நாடுகளில் எண்ணெய் வளத்தைக் கொள்வனவு செய்து, வளைகுடாவிலிருந்து வெளியேறும் ஒரே வழித்தடமான கோமர்சு நீரிணையைக் கடந்து, இந்து மாகடலின் (தமிழராகிய நாம் தமிழர் பெருங்கடலென வரலாற்றின் வழி சொல்ல வேண்டும்) அரபிக்கடலூடாவும் வங்காள விரிகுடாக் கடலூடாகவும் பயணப்பட்டு, பின்பு இந்து மாகடலிலிருந்து தென்சீனக் கடலிற்குள் நுழையும் ஒரேயொரு வழித்தடமாக‌ இருக்கும் மலாக்கா நீரிணையூடாகச் சீனாவை வந்தடைகிறது.

அதேபோல, தனது உற்பத்திப் பொருள்களை ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பியச் சந்தைகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய மிகப்பெரிய தேவை சீனாவிற்கு உண்டு. எனவே, சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்குப் பயணிக்கும் கடல் வழியானது சீனாவின் பொருண்மிய இருப்பிற்கு இன்றியமையாதது.

அதாவது சீனாவிலிருந்து புறப்படும் கப்பல்களானவை தென்சீனக் கடலினூடாகப் பயணித்து இந்து மாகடலிற்குள் நுழையச் சீனாவிற்கு இருக்கும் ஒரே வழியான மலாக்கா நீரிணையைக் கடந்து இந்து மாகடலில் பயணப்பட்டு, பின்னர் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்லும் சுயஸ் கால்வாயிற்கு வழிவிடும் ஒரே வழியான பாப்– அல் மண்டெப் (Bab el- Mandeb) நீரிணையூடாகச் செங்கடலில் பயணித்து, சுயஸ் கால்வாயைக் கடந்து ஐரோப்பாவை அடைகின்றன.

எனவே, சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கான வணிக வழித்தடத்தில் மலாக்கா நீரிணை, பாப்- அல் மண்டெப் நீரிணை மற்றும் சுயஸ் கால்வாய் போன்ற மாற்றுத் தெரிவுகள் சொல்லும்படியற்ற வணிகவழித்தடத்தின் புவிசார் முதன்மை அமைவிடங்கள் இருக்கின்றன. இந்தப் வழித்தடத்தில் தங்குதடையின்றிப் பயணப்படுவதை சீனா உறுதிப்படுத்தத் தன்னாலான அனைத்தையும் செய்தாக வேண்டும்.

சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்லும் வணிகவழித்தடத்தைக் கீழ்வரும் வரைபடம் தெளிவாகக் காட்டுகிறது.

மேலும், சீனாவின் கடல்வழி வணிக வழித்தடத்தில் அமைந்திருக்கும் புவிசார் முதன்மை அமைவிடங்கள் பற்றியும் அவற்றிற்கு மாற்று இல்லையென்றளவில் அந்த முதன்மை அமைவிடங்களில் முற்றுமுழுதாகத் தங்கியிருக்க வேண்டிய சூழமைவுகளையும் விளங்கிக்கொள்ள அவற்றின் அமைவிடம் சார்ந்த அறிவைப் பெறுவதை நோக்காகக் கொண்டு அவை தொடர்பான சுருங்கக்கூறும் விளக்கங்கள் கீழ்வருமாறு தரப்படுகின்றன.

கோமர்சு நீரிணை (Strait of Hormuz)

உலகின் 40% கச்சா எண்ணெய் வளைகுடா நாடுகளிலிருந்தே பெறப்படுகிறது. உலகின் 35% கடல் வழி கச்சா எண்ணெய் ஏற்றுமதியானது கோர்மசு நீரிணை (Strait of Hormus) மூலமே இந்தியா, யப்பான், சீனா, தென்கொரியா போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

சியா முசுலிம் நாடான ஈரானுக்கும் சன்னி முசுலிம் நாடுகளான சவுதி அரேபியா, பஃரேன், கட்டார் மற்றும் ஓமான் போன்ற நாடுகளுக்கிடையிலும் இந்த கோர்மசு நீரிணையூடான கடல்வழி அமைந்துள்ளதால், அந்தக் கடல்வழியில் தடங்கலை ஏற்படுத்த இயலும் தன்னுடைய இயலுமையைக் கூறி ஈரான் மற்றைய அரபு நாடுகளை மிரட்டியே வருகிறது. அவ்வாறு ஒரு தடங்கல் இந்தக் குறித்த கடல்வழியில் நேரின் ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் வரத்து இல்லாமல் போவதுடன் வளைகுடா (நடுக்கிழக்கு) நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி மிகப்பெருமளவில் சரிந்து போகும்.

தனது கச்சாய் எண்ணெய் இறக்குமதியில் 18% இனை இந்த கோர்மசு நீரிணையைத் தனது கடல்வழியாகப் பயன்படுத்தி அமெரிக்கா மேற்கொள்கின்றது. இதனாலேயே அமெரிக்கா தனது வலிமைவாய்ந்த கடற்படையை பஃரேனில் நிறுத்தியுள்ளது. கோர்மசு நீரிணை மூலமான தடங்கலற்ற கப்பற் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே அமெரிக்கா இங்கு நிலை கொண்டுள்ளது. இந்தக் கடல்வழியில் ஏதேனும் தடங்கல் ஏற்படின் உலகின் பெருமளவான தொழிற்துறைகள் முடங்கிவிடும் என்பதுடன் கச்சா எண்ணெயின் விலை உச்சமாகும். ஏனெனில், இதற்கான மாற்றுக் கடல்வழி ஆயிரக்கணக்கான மைல் தொலைவு அதிகமாகிவிடும்.

பாப்– அல் மண்டெப் (Bab el- Mandeb)

பாப்–அல் மண்டாப் நீரிணையானது ஆபிரிக்காவையும் மத்திய கிழக்கையும் இணைக்கிறது. இந்த நீரிணையானது யேமன் என்ற வளைகுடா நாட்டிற்கும் எரித்திரியா மற்றும் டியிபோட்டி ஆகிய ஆபிரிக்க நாடுகளிற்குமிடையிலும் அமைந்துள்ளது. ஆசியாவிலிருந்து சுயஸ்கால்வாய் வழியாக ஐரோப்பாவிற்குப் பயணிப்பதற்கு இந்த நீரிணையைக் கடந்தே பயணித்தாக வேண்டும். இதுவே எரித்திரியா தனிநாடாக அமைவதற்கு வழிகோலிய புவிசார் அரசியல் அடைவிற்கு வித்திட்டது.

இந்த நீரிணையூடாக உலகின் 18% திரவ இயற்கை எரிவாயு (Liquid Natural Gas) மற்றும் 4% கச்சா எண்ணெய் ஆகியன போக்குவரத்துச் செய்யப்படுகின்றன. இதனூடாகவே பேர்சியன் வளைகுடாவின் இயற்கை எரிவாயு மற்றும் பெற்றோலியப் பொருள்கள் ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவிற்குச் செல்கின்றன. அத்துடன், சீனாவினது உற்பத்திப் பொருள்கள் அனைத்தும் இதனூடாகவே ஐரோப்பாவை அடைகின்றன.

பாப்–அல் மண்டாப் நீணையினூடான போக்குவரத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய அமைவிடத்தில் டிஜிபோட்டி என்ற நாடே அமைந்துள்ளது. அதனால், அமெரிக்கா டியிபோட்டியில் (Djibouti) “லெமொனியர் (Camp Lemonnier)” என்ற மிகப் பெரும் இராணுவ முகாமை அமைத்து நிலைகொண்டுள்ளது. இதுவே ஆபிரிக்காவிலுள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய இராணுவத்தளமாகும். சீனாவின் ஏற்றுமதி வணிகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கவல்ல இந்த நீரிணையினூடான தன்னுடைய வணிகக் கப்பல்களின் தங்குதடையற்ற பயணத்தை உறுதிப்படுத்த டிஜிபோட்டியில் சீனாவும் கடற்படைத்தளம் அமைத்துள்ளது. சீனாவிற்கு வெளியே சீனாவினால் அமைக்கப்பட்ட முதலாவது கடற்படைத் தளம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பிரான்சும் இராணுவத்தளத்தை ஏற்கனவே அமைத்துள்ளது.

சுயஸ் கால்வாய் (Suez Canal)

சுயஸ் கால்வாய் 1869 இல் அமைக்கப்படுவதற்கு முன்னர், ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்குமிடையிலான பயணம் என்பது ஆபிரிக்காவைச் சுற்றிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லாமலே இருந்தது. சுயஸ்கால்வாயினூடாகப் பயணிப்பதன் மூலம் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்குமிடையிலான கடற்பயணத் தொலைவானது 9000 கி.மீ வரை குறைக்கப்படுகிறது. 193 கி.மீ நீளமான இந்த சுயஸ் கால்வாயானது செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைப்பதனால், ஆசிய- ஐரோப்பாவிற்கிடையிலான போக்குவரத்திற்கான மிகக் குறுந்தொலைவு வழித்தடமாகவும் அதற்கு மாற்றுவழி வேறேதுமில்லை என்ற புவிசார் நிலையில் அமைந்துள்ளது.

எகிப்து நாட்டில் அமைந்திருக்கும் சுயஸ்கால்வாயிற்கு ஆசியாவிலிருந்து செல்வதானால் மிக ஒடுங்கிய செங்கடலினூடாகவே பயணப்பட வேண்டியுள்ளதால், இந்தச் செங்கடலின் வழித்தடத்திலுள்ள நாடுகள் புவிசார்நிலையப் பெறுதியைப் பெறுகின்றன. எரித்திரியா தனிநாடாகியமைக்குச் செங்கடலில் அதன் அமைவிடம் முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது. சுயஸ் கால்வாய்க்கு அண்மித்ததாக இஸ்ரேல் அமைந்திருப்பது அதனது வலிமைக்கு உரம்சேர்க்கும் முதன்மைக் காரணமாக அமைகின்றது.

உலகின் கடல் வணிகத்தின் முதுகெலும்பாக இருக்கின்ற இந்த சுயஸ் கால்வாயினூடாக நாளொன்றிற்கு 50 மிகப்பெரிய வணிகப் கப்பல்கள் பயணிக்கின்றன. இந்தக் கால்வாயினை மூடி உலகத்தை அச்சுறுத்தும் வல்லமையை எகிப்து உள்ளிட்ட வழித்தட நாடுகள் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக, “அமைதிக் காலத்திலேயோ அல்லது போர்க் காலத்திலேயோ இந்த சுயஸ் கால்வாயினூடான பயணத்திற்கு நாடுகள் வேறுபாடின்றி அனைத்துக் கப்பல்களும் பயணிக்க இசைவளிக்கப்பட‌ வேண்டும்”  என்ற உடன்பாடு கொன்ஸ்ரன்ரிநோபல் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது. இதனால் சுயஸ் கால்வாயினூடான போக்குவரத்தில் தடைகள் ஏற்படுமா என சீனா உள்ளிட்ட எந்தவொரு நாடும் கலக்கமடைவதில்லை.

மலாக்கா நீரிணை (Malacca Strait)

550 மைல் நீளமான மலாக்கா நீரிணையானது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுக்கும் மலேசிய குடாநாட்டிற்கும் இடையே இருக்கும் மிகவும் ஒடுக்கமான நீரிணையாகும். இந்துமாகடலையும் பசுபிக்மாகடலையும் இணைக்கும் மிகக் குறும் வழித்தடமாகவும் வளைகுடா நாடுகளிலிருந்து (நடுக்கிழக்கு நாடுகள்) எண்ணெய் வளத்தை ஏற்றி வருவதற்குச் சீனாவிற்கு இருக்கும் ஒரேயொரு வழித்தடமாகவும் மலாக்கா நீரிணை இருப்பதால் உலகின் கடல் வழித்தடங்களில் மிகவும் முதன்மை வாய்ந்ததாக இது கருதப்படுகிறது. உலகின் 40% ஆன வணிகமும் உலகின் 20% ஆன எண்ணெய் வணிகமும் இந்த மலாக்கா நீரிணையூடாகவே நடைபெறுகின்றது. 70%- 80% வரையிலான சீனா மற்றும் யப்பானின் எண்ணெய் இறக்குமதி இந்த மலாக்கா நீரிணையூடாகவே நடைபெறுகின்றது. மலாக்கா நீரிணையூடாக வரும் கச்சா எண்ணெய் சிங்கப்பூர் மற்றும் மலேசியத் துறைமுக முனையங்களில் (Terminals) இறக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு ஆசியச் சந்தைக்குப் பெற்றோலியப் பொருள்களாகத் தென்சீனக்கடல் (South China Sea) மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்த மலாக்கா நீரிணையின் வாய்ப்பகுதியில் சிங்கப்பூர் அமைந்திருப்பதானது, அந்த நாட்டிற்கு மிகப்பெரிய வணிக நன்மைகளைக் கொடுப்பதோடு, சிங்கப்பூர் துறைமுகமானது உலக வணிகத்தில் மிக முதன்மையான ஒன்றென்ற உயர்நிலைக்குக் காரணமாக அமைகின்றது.

சீனாவானது மலாக்கா நீரிணை குறித்து மிகுந்த உயிர்த் துடிப்புக் கொள்கின்றது. ஏனெனில், தொழிற்துறையில் பருத்து நிற்கும் சீனாவிற்கு மலாக்கா நீரிணையூடான போக்குவரத்தில் ஏதேனும் தடங்கல் நேரின் அது அதற்கு மிகப் பெரும் ஆற்றல் நெருக்கடியைக் கொடுக்கும். அத்துடன், மலாக்கா நீரிணையில் சீனப் போக்குவரத்திற்கு ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால், சீனாவின் ஏற்றுமதிப் பொருள்களானவை தென்சீனக் கடலைத் தாண்ட முடியாத நிலை ஏற்படும்.

எல்லைச் சிக்கலாகச் சொல்லப்பட்டு 1962 இல் நடந்தேறிய சீன- இந்தியப் போரிற்கான மெய்க் காரணமே சீனாவின் மலாக்கா நீரிணையூடான கப்பற் போக்குவரத்தில் ஏற்பட்ட குறுக்கீடுகள் தான்.

சீனாவின் அமைவிடம் காரணமாக, இந்து மாகடலில் அதனால் மேலாண்மை செலுத்த முடியாது என்பது தெளிவான உண்மையெனினும் தான் முகங்கொடுக்கக் கூடிய அச்சுறுத்தல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள சீனா படாதபாடு பட வேண்டியிருக்கிறது. இதனால் சீனாவானது இந்துமாகடலில் உள்ள துறைமுகங்களின் வளர்ச்சிப் பணிகளைச் செய்வதில் முழு மூச்சாக இறங்கியுள்ளது. இதற்கான வாய்ப்பு எங்கு கிடைக்கிலும் அங்கு ஒரு ஒப்பந்தத்தைப் போட்டு வேலையைத் தொட‌ங்கி விடுகிறது சீனா. அந்தமான் தீவுக் கூட்டத்திற்கு மிக அருகாமையிலுள்ள மியான்மாருக்குச் சொந்தமான கொகோ தீவானது கண்காணிப்புத்தளம் அமைப்பதற்காகச் சீனாவுக்கு 1994 ஆம் ஆண்டில் குத்தகைக்கு வழங்கப்பட்டது.

எனினும் நார்கடோம் தீவு எனப்படும் அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்திலுள்ள தீவில் இருக்கும் இந்தியாவின் மிக வலுவான ராடர் நிலையத்தினால் (Radar Station) இந்தப் பகுதியில் சீனாவினால் செய்யக்கூடிய ஒவ்வொரு சிறிய நகர்வுகளையும் துல்லியமாகக் கண்காணிக்க இந்தியாவுக்கு இயலுமானதாயிருப்பது இந்தியாவின் சீனாவை மேவிய இந்துமா கடல் மேலாண்மையை உறுதிப்படுத்துகிறது.

572 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமான இந்தியாவிற்குச் சொந்தமாக்கப்பட்ட அந்தமான் நிக்கோபாரானது மலாக்கா நீரிணையை மிக நெருங்கியவாறு அமைந்துள்ளது. இந்தத் தீவுக் கூட்டமானது ஆண்டுக்கு 60,000 இற்கு மேற்பட்ட வணிகக் கப்பல்கள் செல்லும் வங்காள விரிகுடாக் கடலில் (Bay of Bengal) இந்திய மேலாண்மையை உறுதிப்படுத்த இந்தியாவிற்கு உதவுகின்றது. இப்படியாகத் தென்கிழக்காசியாவிலும் தனது புவிசார் ஆளுகையை ஏற்படுத்த வல்லதாய் அமைந்திருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் முப்படைகளையும் உள்ளடக்கிய பாரிய படைத்தளத்தை இந்தியா அமைத்து வைத்துள்ளது. இதனாலும் மற்றும் 7517 கிலோ மீற்றர் நீளமான இந்தியாவின் கடல் எல்லையினாலும் (Coastal Line) அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இந்துமாகடலின் பேராளுமையாக இந்தியா வளர்ந்த நிலையிலிருக்கிறது.

சீசெல்சு, அகலேகா மற்றும் மொரிசியசுத் தீவுகளில் தனது கடற்படைத் தளத்தை அமைப்பதற்கான இணக்கப் பேச்சுகளை முடித்துக்கொண்டு நடவடிக்கையில் இறங்கிவிட்டது இந்தியா. ஏலவே மடகசுகாரில் தனது கண்காணிப்புத் தளத்தை அமைத்துள்ள இந்தியா, இந்துமாகடலில் நடைபெறுவனவற்றை உற்றுநோக்கி வருகின்றது.

எனினும், மியான்மார், பங்காளதேசு, இலங்கைத்தீவு, மாலைதீவு, மொரிசியசு, சீசெல்சு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் தனது கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் தனது கடல்வழிப் போக்குவரத்தை வளப்படுத்த வரும் வாய்ப்புகளைச் சீனா பயன்படுத்தியே வருகின்றது.

இருந்தபோதும், மலாக்கா நீரிணையூடான கடல்வழிக்கு மாற்று வழியாகப் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திலிருந்து தரைவழி மற்றும் தொடர்வண்டிப் பாதை (Railway Route) வழியாகச் சீனாவின் தெற்கு சின்சியாங் தொடர்வண்டித்தடத்தை (Southern Xinjiang Railway) அடையக் கூடிய CPEC (China- Pakistan Economic Corridor) என்கின்ற திட்டமானது கட்டுமானப் பணிகளில் துரித வேகம் எடுத்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான 62 பில்லியன் அமெரிக்க டொலர் செலவை முழுவதுமாகச் சீனாவே ஏற்றுள்ளது. உண்மையில், வளைகுடா நாடுகளிலிருந்து ஆண்டொன்றிற்கு 600 மில்லியன் மெட்ரிக்தொன் எடையுடைய எண்ணெய்வளத்தை இறக்குமதி செய்யும் சீனாவிற்கு மலாக்கா நீரிணையூடான கடல்வழிப் போக்குவரத்தைத் தவிர வேறெந்த வழியும் ஒரு துளியளவேனும் பொருத்தமான தெரிவாக அமையாது. ஆனாலும், தனக்குக் கடற்போக்குவரத்தில் ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால், அதனைப் பேரம்பேசல்களின் மூலம் தீர்த்துவைக்கும் வரையில் குடிமூழ்கிப் போகாமல் தாக்குப் பிடிக்கவல்ல ஒரு ஏற்பாடாகப் பாகிஸ்தானினூடாக அமைக்கும் தொடர்வண்டித்தடம் ஓரளவிற்கு அமையலாம். அதைத் தாண்டி அதை ஒரு மாற்றுவழித்தடம் என்று சொல்வது மிகவும் வேடிக்கையானதொன்றே.

தொகுத்துக் கூறின், சீனா தலையால் நடந்தாலும் இந்துமாகடலில் மலாக்கா நீரிணையைக் கடக்காமல் அதனால் வணிகமாற்ற முடியாது என்ற நிலையே சீனாவின் புவிசார் நிலை. இவ்வாறாகவே, சீனாவின் புவிசார் அமைவிடமானது மிக மிக வலுவீனமானதொன்றாகும். அதனால், தனது கடல் வணிக வழியில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைக் குறைக்க, சீனாவானது படாதபாடு பட வேண்டியுள்ளது. அப்படியான, சீனாவின் முயற்சிகளை சீனாவின் மேலாதிக்கம் என நம்புவது உலகின் வரைபடம் ஒழுங்காகத் தெரியாததன் விளைவே. வெறுமனே, கண்காணிப்புத்தளம் அமைக்க வேண்டியதேவை எல்லாம் 1980 களின் உலக அறிவியற் போக்காக இருந்ததே தவிர, இன்று செய்மதிகளின் தகவல் திரட்டுகள் வந்த பின்பாக கண்காணிப்புத்தளம் அமைப்பது எல்லாம் புவிசார் அரசியலைப் புரட்டிப்போட்டு விடாது என்பதைத் தெளிந்து தெரிந்துகொள்ள வேண்டும். இதைத் தாண்டி, “இலங்கை இந்துசமுத்திரத்தின் முத்து” என்று ஆறாம் வகுப்புப் பாடநூலில் இருந்ததை மனப்பாடம் செய்துவிட்டு இன்றும் கூறி வருவதென்பது கவலைதரும் விடயமே.

தொடரும்………………………….

-களநிலைவர ஆய்வு நடுவம்-

குறிப்பு: கீழ்வரும் வினாக்களிற்கான விடைகள் அடுத்தடுத்து வரும் தொடர்களாக வெளிவரும்.

சீனப்பூச்சாண்டி அரசியலின் பின்னணி என்ன?

சிறிலங்காவை இந்தக் கடன்பொறியிலிருந்து காப்பாற்றப்போவது யார்?

இந்தியாவின் “சீனப்பூச்சாண்டி” பரப்புரையும் ஈழத்தமிழர் அதனை எதிர்கொள்ள வேண்டிய தேவையும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*