சிறப்பு நேர்காணல் – மனம் திறக்கிறார் மாவை!

கேள்வி 1: 

75 அகவையிலுள்ள நீங்கள் தமிழர் அரசியலில் முதுபெரும் அரசியல்வாதியாக இருக்கிறீர்கள். உங்களுடைய அரசியல் பயணம் உங்களுடைய மாணவப்பருவத்திலேயே தந்தை செல்வாவுடன் ஆரம்பித்திருக்கிறது. 1961 இல் நிகழ்ந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் உங்களைப் போல அன்றைய இளைஞர்கள் எப்படியான பங்கு வகித்திருந்தார்கள்? யார் யாருக்கெல்லாம் அந்தப் போராட்டம் அரசியலின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது? அவர்களில் எவரெவர் பின்னர் புரட்சிகர மறவழிப்போராட்டத்திற்கு வந்தார்கள்? அறவழிப்போராட்ட காலத்தில் உங்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்கள் யாராக இருந்தார்கள்? பின்னர் அவர்கள் மீதான உங்கள் கருத்துவேற்றுமைகள் எவ்வாறு இருந்தது என்பதை மீளநினைவூட்டி இன்றைய இளைய தலைமுறைக்கு எமது அரசியல் வரலாறு புரிந்துகொள்ளத்தக்க விதத்தில் பதில் கூறுங்களேன் ஐயா.

பதில்: மாவை ஐயா

நான் சிறுவனாக இருந்த காலத்தில் தந்தை செல்வா அவர்கள் காங்கேசன்துறைத் தொகுதியில் தேர்தலில் நின்றபோது தேர்தல் காலத்தில் அவரைப் பார்த்திருக்கிறேன். நான் மாணவனாக இருந்த போது குறிப்பாக 2 விடயங்கள் எனது மனதைப் பாதித்திருந்தன.

  • 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் 5 ஆம் தேதி பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த போது சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம். அந்த நேரத்தில் நாங்கள் சிறுபிள்ளையாக வீமன்காமம் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த போது நான் செய்திகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அது பற்றி விபரங்கள் தெரியாது. ஆனால் தந்தை செல்வாவும் 200 தொண்டர்களும் தமிழரசுக் கட்சி சார்பிலே தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்திற்கு முன்பாக காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பித்தமை தொடர்பில் அந்நேரத்தில் ஆசிரியர்கள், மற்றும் எங்களிற்கு மூத்த வகுப்பில் இருப்பவர்கள் பேசியதை ஓரளவுக்குக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு அடுத்த நாள் (1956 ஆம் ஆண்டு யூன் மாதம் 5 ஆம் தேதிக்கு அடுத்த நாள்) நாங்கள் கல்வி கற்ற பாடசாலையில் ஆசிரியராகவிருந்த திரு.அரசரட்ணம் அவர்கள் அந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றிவிட்டு புகைவண்டி மூலமாக மாவிட்டபுரம் புகைவண்டி நிலையத்திற்கு வந்து இறங்கி நடந்தே எமது பாடசாலைக்கு வந்தார். அப்பொழுது ஏற்கனவே, இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சிங்களவர்கள் இரத்தம் சிந்தத் தாக்கினார்கள் என்ற செய்தி எங்கள் பாடசாலையில் ஓரளவுக்குப் பரவிவிட்டது. அதனால் வகுப்புகளே நடைபெறாத நிலைமை அன்று இருந்தது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எல்லாம் அது பேசப்பட்டிருந்தது. ஆனபடியால் எங்களுக்கு அதில் ஒரு ஈர்ப்பு இருந்தது. எமது பாடசாலை பேராசிரியர் வித்தியானாந்தன் அவர்களுடைய பாடசாலை. அரசரட்ணம் ஆசிரியர் வந்தபொழுது அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் ஒரு பெரிய கூட்டமாகவே நாங்கள் எல்லோரும் கூடி விட்டோம். நாம் அதில் அரசரட்ணம் ஆசிரியர் பக்கத்திலேயே போய் நின்று கொண்டோம். அவர் அந்தப் போராட்டத்தைப் பற்றி பேசினார். அப்பொழுதுதான் அந்தப் போராட்டம் என்னவென்பது தெளிவாகத் தெரிந்தது. அதாவது தமிழிற்குச் சமவுரிமை கோரியும் தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்தும் தந்தை செல்வநாயகம் தலைமையில் பாராளுமன்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பண்டாரநாயக்காவினால் ஏவிவிடப்பட்ட சிங்களக் காடையர்களினால் மூங்கில் தடிகளால் அடித்தும் கற்கள் வீசியும் தாக்கப்பட்டார்கள். குறிப்பாகத் திரு.அமிர்தலிங்கம் அவர்களின் தலை பிளந்து இரத்தம் சிந்தியதைப் பற்றியும் அவர் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் போராட்டம் தான் சிறுபராயத்தில் எங்கள் மனதில் பதிந்த முதன்மையான செய்தி.

அதன் பிறகு எங்கள் வீடுகளில், வெளியில் கேள்விப்பட்ட செய்திகள் இருக்கின்றன. அதாவது, திரு.அமிர்தலிங்கம் அவர்களின் தலை உடைக்கப்பட்டு இரத்தம் சிந்திய நிலையில் கட்டுப்போட்டுக்கொண்டு அவர் பாராளுமன்றம் போய்ப் பேச முயற்சித்த போது, பண்டாரநாயக்கா “I see the honorable wounds of war” என்று கேலியாகப் பதிலளித்தார் எனக் கேள்விப்பட்டோம். இது எங்களின் உரிமைப் போர் என அதற்கு திரு.அமிர்தலிங்கம் அவர்கள் பதிலுரைத்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் இவற்றையெல்லாம் பாராளுமன்றப் பதிவேடுகளில் படித்தோம். திரு.அரசரட்ணம் ஆசிரியர் அவர்கள் சொன்ன விடயங்கள் எல்லாம் பின்னர் பாராளுமன்றப் பதிவேடுகளில் படித்திருந்தேன் (நான் பாராளுமன்றத்திற்குச் செல்லும் முன்பே).

எனது சிறு வயதைப் பற்றிச் சொல்லுவதானால், நான் மூன்றாம், நாலாம் வகுப்புப் படிக்கும் போது தான் இந்தத் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதும் சமவுரிமைக்கான போராட்டம் ஆரம்பித்தது. சேற்றுக் கால்கள் பதிந்த நசனல் அணிந்திருந்த ஆசிரியர் வந்திருந்த தோற்றமும் அவர் எங்களிற்கு உரையாற்றியதும் தான் முதன்முறையாக எங்கள் சிறுவயதில் மனதில் பதிந்து எம்மை இவற்றில் நாட்டம் கொள்ள வைத்தது.

  • இரண்டாவதாக, 1958 இல் நடந்த கலவரத்தைக் குறிப்பிட வேண்டும். அப்போடு நாங்கள் கொஞ்சம் வளர்ந்திருந்தோம். ஓரிரு வயதுகள் கூடி இருந்தது. அப்போது எனக்கு 14 வயது என்று நினைக்கின்றேன். அப்போது இது மிகவும் பரபரப்பான செய்தி. நான் படித்த வீமன்காமம் பாடசாலையில் வகுப்புகள் கூட நடைபெறவில்லை. இந்தக் கலவரத்திலே ஆயிரக்கணக்கான எமது மக்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டு, பெண்கள் எல்லாம் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்றும் அவர்கள் வெளிநாட்டுத் தூதரகங்களால் கப்பலில் அனுப்பி வைக்கப்படுகின்றார்கள் என்ற செய்தி எமக்குக் கிடைத்தது. அப்பொழுது திரு.சச்சிதானந்தம் ஆசிரியர் (தந்தை செல்வாவுடன் மிக நெருக்கமாக வேலை செய்தவர்) மற்றும் திரு.அரசரட்ணம் ஆசிரியர் ஆகியோர் காங்கேசன்துறையில் கப்பலில் வந்திறங்கிய பாதிக்கப்பட்ட எமது மக்களிற்கு நீராகாரம் கொடுக்குமாறு கூறியிருந்தார்கள். அப்பொழுது மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலைச் சுற்றியிருந்த செவ்விளநீர் மரங்களில் நாமே ஏறி இளநீர்க் குலைகளை வெட்டிக்கொண்டு அப்போது மிகவும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த “பினோ” என்று சொல்லப்படுகின்ற ஒருவகைப் பாணத்தைக் கடாரத்தில் எடுத்துக்கொண்டு சென்று கொடுத்தோம். அப்பொழுது பாதிக்கப்பட்ட மக்கள் வந்த நிலைமை இன்றும் எனக்கு மனதில் இருக்கின்றது. பெண்கள் சட்டைகள் கிழிக்கப்பட்ட நிலையில் இரத்தக் காயங்களுடனும் தலையில் கட்டுகளுடனும் ஆண்கள் கட்டிய வேட்டியுடனும் வந்திருந்தது என அந்த நிலைமையைப் பார்த்தமை தான் அடுத்த இரண்டு ஆண்டிற்குள் எனது இதயத்தை மிக மோசமாகப் பாதித்தது. அப்பொழுது தான், தந்தை செல்வா மற்றும் திரு.அமிர்தலிங்கம் ஆகியோரின் உரைகளைத் தேடி சைக்கிளில் சென்று நாம் கேட்கின்ற காலம். அப்படியாகத் தான் 1958 இற்குப் பின்னர் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நான் பங்குபற்றினேன். அப்போது St.Johns, St.Patricks கல்லூரிகளில் உயர் வகுப்புகளில் படித்த மாணவர்கள் எங்கள் பாடசாலைக்கு வந்து நாங்கள் ஏன் இந்தப்போராட்டத்திற்கு வர வேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் காங்கேசன்துறையிலிருந்து ஒரு பேரணியாகச் சென்று சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றியிருக்கிறோம். பின்னர் சில நாட்கள் தொடர்ச்சியாக சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றியிருக்கிறோம்.

இவையே அரசியலில் என்னைத் தூண்டிய நிகழ்வுகளும் போராட்டத்தில் பங்குபற்றிய ஆரம்ப நிகழ்வுகளுமாக நான் குறிப்பிடலாம். அதன் பின்னர் 1968 என்று நினைக்கின்றேன். அப்போது சிறிமாவின் காலத்தில் லியகொல்ல என்பவர் கல்வி அமைச்சராக இருந்தார். அவருடைய காலத்தில் எங்களுடைய புத்தூர் மற்றும் ஆவரங்கால் பகுதிகளில் வைரமுத்து என்று ஒருவர் பௌத்த சங்கத்தில் ஏதோவொரு பொறுப்பில் இருந்தார். இந்தப் பகுதிகளில் இவர் மூலமாக அப்போது பௌத்த பாடசாலைகள் தொடங்கப்பட்டது. எங்களுடைய சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களை அந்தப் பாடசாலையில் இணைத்து பௌத்த மதத்தவர்களாக மாற்றியதாக எங்களிற்குத் தகவல் வந்தது. அப்பொழுது இரண்டு விடயங்கள் எமக்குத் தெரிந்தன.

1) பௌத்த மதத்திற்கு எங்கள் சைவசமயத்தைச் சேர்ந்தவர்களை மாற்றுகிறார்கள் என்ற செய்தியும்

2) அப்பொழுது பாடசாலைகளில் “சுயவன்சன”, “சுயசுயவன” போன்ற அதிர்ட இலாபச் சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்கள் அதனை விற்க வேண்டும் என்று சொல்லப்பட்டதற்கு எதிராக மூத்த மாணவர்களின் ஆதரவோடு நாங்கள் கிளர்ந்திருந்தோம். அப்பொழுது தான் நாங்கள் “ஈழத்தமிழ் இளைஞர் மாணவர் அமைப்பு” என்று ஒரு அமைப்பை கொக்குவில் ஞானோதயா வித்தியாசாலையிலே இளைஞர்கள் மற்றும் மாணவர்களை அழைத்து இந்தப் போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுத் தொடங்கியிருந்தோம். அப்பொழுது “கேசை” என்ற வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் தலைவராகவும், நான் செயலாளராகவும், பரமசாமி பொருளாளராகவும் மற்றும் மைக்கல் தம்பிநாயகம் ஆகியோர் பொறுப்பில் இருந்தோம். அப்படி இளைஞர்கள் மற்றும் மாணவர்களைத் திரட்டி ஒரு அமைப்பை உருவாக்கி லியகொல்லவின் செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் பெரும் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். அப்பொழுது திரு.சுந்தரலிங்கம் அவர்கள் பொலிஸ் SP ஆக இருந்தார்.

அவரது அனுமதி பெற்று ஊர்வலங்களை நடத்துவதனால் அவரை நன்றாகத் தெரியும். அந்த இயக்கம் தான் ஆரம்பத்தில் எந்தவொரு கட்சித் தொடர்பும் இல்லாமல் ஆரம்பித்த முதலாவது இயக்கம். இந்த இயக்கத்தில் நாங்கள் நிர்வாகிகளாக இருந்து போராட்டங்களை முன்னெடுத்துப் பலதடவை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்தக் காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியினரும் இளைஞர்களும் எம்முடன் தொடர்பில் இருந்தார்கள். பல்கலைக்கழக அனுமதி உயர்புள்ளி அடிப்படையில் Merit முறையில் வழங்கப்படும் போது அதிக புள்ளிகளைப் பெற்று எமது தமிழ் மாணவர்கள் கூடுதலாகத் தெரிவு செய்யப்படுவதற்கு எதிராக தரப்படுத்தல் (Standardization) என்ற முறையைக் கொண்டு வந்து தமிழ்மாணவர்கள் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் அதிகமாக சிங்கள மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பது நிகழ்ந்தது. இந்தத் தரப்படுத்தலிற்கெதிரான போராட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்களாக அப்போதிருந்த சத்தியசீலன், அரியரத்தினம் போன்றோர்கள் முன்னின்றமை நினைவிலிருக்கிறது. அவர்கள் எங்களை ஆதரிக்க அந்தப் போராட்டங்களில் எல்லாம் நாங்கள் கலந்துகொண்டிருந்தோம். நடேஸ்வராக் கல்லூரியில் கல்வியை முடித்த பின்னர் தொழினுட்பக் கல்லூரிக்கு நான் சென்றிருந்த காலம் அது. அப்பொழுதுதான் போராட்டங்கள் ஊடாக வடக்கு, கிழக்கிலுள்ள இளம் சமூகத்தோடு அதிகளவான நெருக்கங்கள் இருந்தது.

அந்தக் காலத்திலே யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இருக்கின்ற Greence House இற்குத் தான் பொலிஸ் எங்களைக் கைது செய்து கொண்டு சென்று விசாரிப்பார்கள். அந்தக் காலத்தில் அன்றைக்கே விட்டு விடுவார்கள். அந்தக் காரணங்களால் தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோர் நாங்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அக்கறை கொண்டு ஒரு செய்தி அனுப்பியதால், இரண்டாம் குறுக்குத்தெருவில் இருந்த தமிழரசுக் கட்சி அலுவலகத்திற்குச் சென்று நாம் அவர்களைச் சந்தித்தோம். அப்போது எங்களை ஏன் கைது செய்தார்கள்? விசாரணையில் என்ன நடந்தது? என்ன விசாரித்தார்கள்? என்றெல்லாம் அக்கறையோடு எம்மைக் கேட்டார்கள். இதுவே முதலாவதாக நாம் அவர்களைச் சந்தித்துப் பேசியது. இதற்கு முன்னர், 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நாம் பங்குபற்றிய போது அவர்களைக் கண்டிருக்கிறோம். 1968- 1971 ஆம் ஆண்டு காலப்பகுதி தான் நாம் அறவழிப் போராட்டப் பாதையில் தொடர்புபட்டிருந்தோம். இந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் வாழுமிடங்களில் எல்லாம் இளைஞர்களோடு அறிமுகமாகி அவர்களுடன் இணைந்து போராட்டப் பாதையில் நாம் இருந்தோம்.

1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டமே நாங்கள் பங்குபற்றிய முதலாவது போராட்டம். பின்பு 1972 இனைக் குறிப்பிடலாம். நாங்கள் மாணவர் அமைப்பில் இருந்த காலத்தில் இளைஞர்கள், மாணவர்களோடு தொடர்புகொண்டு அவர்கள் மத்தியில் விடயங்களைப் பேசும் ஒருவனாக அவர்கள் மத்தியில் நான் இருந்ததால்….

1972 மே மாதம் 22 ஆம் தேதி சிறிமாவால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிற்கு எதிராக தமிழர்களுடைய அரசியல் உரிமைகள் தொடர்பான பிரேரணைகள் முன்வைக்கப்பட்ட போது அவை ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டதால் போராட்டங்களை நடத்த வேண்டும் என என்னைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் பலர் கேட்டுக் கொண்டனர். அப்போது அவர்களுடன் இணைந்து போராடத் தொடங்கினோம். 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு எதிராக நாங்கள் இளைஞர் அமைப்புகள் போராட்டங்கள் நடத்திக் கைதுசெய்யப்பட்டோம். 1973 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி வடக்கு-கிழக்கு முழுவதிலும் 1972 அரசியலமைப்பிற்கு எதிராகப் போராடினோம் (இதற்கு 10 ஆண்டுகளின் முன்பு சத்தியாக்கிரகப் போராட்டக் காலத்தில் நான் வடக்கு-கிழக்கு முழுவதற்கும் சென்றிருக்கின்றேன்). 1972 ஆம் ஆண்டு காலப் பகுதியில் போராட்டங்கள் காரணமாக அரசியல் ரீதியில் தமிழரசுக் கட்சியுடன் இணைய வேண்டிய காலமாக இருந்தது. 1972 அரசியலமைப்பிற்கு எதிராக 1973 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போராடிய போது என்னை இராணுவமும் பொலிசும் வந்து கைது செய்தது.

48 இளைஞர்கள் என்னுடன் கைதுசெய்யப்பட்டனர். நான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். இரண்டரை ஆண்டுகளில் என்னைப் பலமுறை கைதுசெய்தார்கள். வெளியில் வந்தால் நாங்கள் சில நாட்கள் தான் வெளியில் இருப்போம். 10 ஆண்டுகளில் 11 தடவை கைதுசெய்யப்பட்டு கூட்டிப் பார்த்தால்..2 ஆண்டு.. பின்னர் 6 மாதம்… 1 ஆண்டு… அப்படியாக 7 ஆண்டுகள் சிறையில் இருந்தேன். நாலாம் மாடியில் விசாரணையின் போது மயங்கிவிழும் வரை சித்திரவதை செய்தார்கள். சிறையில் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்த சிங்களக் கைதிகள் எங்களைத் தாக்கிய சந்தர்ப்பங்கள் உண்டு. அப்படி நாங்கள் சிறை மீண்டு பேருந்து, புகைவண்டியில் வருகின்ற போது, பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எங்களை இடைமறித்து வரவேற்புக்கொடுத்து அழைத்து வருவார்கள். வீடுகளிலும் அதேபோல நிகழ்வுகள் நடந்தன. Dr. N.M.பெரேரா யாழ்ப்பாணம் வரும்போது அதை எதிர்த்துப் போராடி கைதானோம். 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு எதிரான போராட்டங்களில் பல இடங்களில் குண்டுவெடிப்புகளும் நடைபெற்றது. அதை நாங்கள் நேரடியாகக் கையாளாமல் (சிரிக்கிறார்) விட்டாலும் அந்த நிகழ்வுகள் பற்றி எல்லாம் எம்மிடம் விசாரிக்கின்ற பொழுது என்னுடைய உரைகள் அந்த இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியது என்றுதான் சொல்லப்பட்டது. இவை தான் எனது ஆரம்ப காலங்களில் அரசியலில் ஈடுபடத் தூண்டியவையும் அகிம்சை வழியில் போராடிய சந்தர்ப்பங்களாகவும் அமைந்தன. அப்பொழுது நிகழ்ந்த குண்டு வெடிப்புகளின் போது அது குறித்து நான் விசாரணைக்குட்படுத்தப்பட்டமை போன்றதைத் தொடர்ந்தும் நாங்கள் தீவிரமாக மக்களிடத்திலும் இளைஞர்கள் மத்தியிலும் வேலை செய்துகொண்டிருந்தோம்.

கேள்வி 2: 

நீங்கள் அரசியல் கைதியாக 7 ஆண்டுகளாக சிங்கள கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டிருந்தீர்கள். அக்காலத்தில் உங்களுடன் சிறையில் இருந்தவர்கள் யார்? அக்காலத்தில் உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது? தமிழ் அரசியல் கைதியாக நீண்டகாலம் சிறையில் இருந்தவராக, இன்று சிறைப்பட்டிருக்கும் விடுதலைக்காகப் போராடிய இளைஞர்களின் நிலை குறித்து எப்படிப் பார்க்கிறீர்கள்?? சிறைப்பட்ட வலி தெரிந்த நீங்கள், அவர்கள் விடுதலை குறித்து வாக்குச் சேகரிக்கும் பாராளுமன்ற அரசியல்வாதியாக இல்லாமல் அந்நாள் தமிழ் அரசியல் கைதியாகப் பதிலளியுங்கள்.

பதில்: மாவை ஐயா

இன்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் அதிகளவாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் அல்லது வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டமையினால் கைதுசெய்யப்பட்டதாக அறிகிறோம். நாங்கள் அப்படியானதொரு பாரிய ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. அந்தக் காலத்தில் சிறைகளிலும் நாலாம் மாடியிலும் மிக மோசமாக நாங்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருந்தோம். அதேவேளை 7 சிறைகளில் மாறி மாறி அடைக்கப்பட்டிருந்தோம். சிறைச்சாலைக்குள்ளேயே நாங்கள் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தி இருக்கின்றோம். 21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நாங்கள் இறக்கின்ற தறுவாயிற்கு வந்து விட்டோம் என்று தந்தை செல்வா தலையிட்டார். ஆனாலும் நாங்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கின்றோம் என்று சொன்னோம். 1976 ஆம் ஆண்டு மூன்றாவது அணிசேரா நாடுகளின் மாநாடு இலங்கையில் நடைபெற்றது. அப்பொழுது நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். எங்களுடைய அரசியல் சிக்கல்களை அவர்கள் அறிந்துகொள்ள சிறைக்குள் இருக்கும் நாங்களும் துணைநிற்க வேண்டும் என்று நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். எமது நிலை கண்டு தந்தை செல்வா கூட அந்தப் போராட்டத்தைத் தவிர்க்க முயற்சித்தார். இறுதியாக அந்த மாநாடு முடிந்த காலகட்டத்தில் தான் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது. சிறைக்குள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எமது மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு பலாத்காரமாக மூக்கின் வழியால் உணவினை ஊட்டி விட்டார்கள். நல்லவேளை நான் சிறைக்குள் இருந்தும் யோகாசனம் செய்கின்ற பழக்கம் இருக்கின்ற படியால் நான் தலைகீழாக நின்ற போது மயக்கமடைந்து விட்டதால் மருத்துவர், பொலிசார் எல்லாம் காவலுக்கு வைக்கப்பட்டிருந்தனர். அதனால் பலவந்தமாக மூக்கினால் உணவினை ஊட்டும் அந்த நடவடிக்கையில் இருந்து நான் தப்பியிருந்தேன். பலருக்கு அப்படிப் பலாத்காரமாக உணவை ஊட்டியிருந்தார்கள். இதனால் உணவை உட்கொண்டு அந்தப் போராட்டத்தை நடத்த வேண்டும் எனச் சிந்திக்காமல் 5 பேரை நியமித்து இருந்தோம். நாங்கள் ஏதாவது மயக்க நிலையில் பேச முடியாது இருந்தால், அவர்கள் தான் எங்கள் சார்பில் பேச வேண்டும் என்று கூறி அவர்களிடம் தந்தை செல்வாக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்து அனுப்பியிருந்தோம். திரு.காசியானந்தன் மற்றும் திரு.வண்ணை ஆனந்தன் என எல்லோரும் சேர்ந்து அவ்வாறு முடிவெடுத்திருந்தோம். அணிசேரா மாநாடு நடந்துகொண்டிருக்கும் காலத்தில் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கு மறுத்து விட்டோம். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அதிகாரிகள் எங்களைத் தடுப்பில் வைத்து விசாரித்தார்கள். அதில் தசநாயக்கா என்பவர் தலைமையில் ஒரு குழு எங்களை அடிக்கடி வந்து சந்தித்தார்கள்.  “போராட்டத்தை நிறுத்துங்கள். நாம் உங்களை விடுதலை செய்வோம்” என்று சிறிமாவோ கூறியபோது நாம் அதனை ஏற்காது சிறைக்குள்ளே இருந்து போராடினோம். தந்தை செல்வாவும் “நீங்கள் இந்த உண்ணாநோன்பைக் கைவிட வேண்டும். நிலைத்து நின்று போராட வேண்டும்” என்று சொன்ன வசனங்கள் எல்லாம் எனக்கு இன்றும் நினைவிலிருக்கின்றது. அந்தக் காலத்துச் சுதந்திரன் பத்திரிகையைப் பார்த்தால் தெரியும். அப்படியான வசனங்கள், எங்களது உண்ணாவிரதத்தை நிறுத்த எடுத்த முயற்சிகள் என அதில் இருக்கும். நாலாம் மாடியில் இரத்தம் வந்து மயங்கும் வரை அடித்து எம்மை மிக மோசமாகச் சித்திரவதை செய்தார்கள். சிறைக்குள்ளும் மிக மோசமாக நடத்தப்பட்டோம். அப்படியிருந்தும் நாம் ஒருபோதும் இந்தப் போராட்டப் பாதையிலிருந்து விடுபடவில்லை. வேறு வேலைக்குப் போகவில்லை. முழுக் காலமும் இந்தப் போராட்டப் பாதையிலேயே வாழ்ந்திருக்கிறோம். நான் விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்குப் பின்னர் அந்த இளைஞர்களைப் பலமுறை சிறைகளில் சந்தித்திருக்கிறேன். இப்பொழுது ஒரு வகையில் 76 இளைஞர்கள் சிறைகளில் இருக்கிறார்கள். அதைவிட சிலர் கூட இருப்பதாகவும் உண்டு. நேற்றிரவும் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள். இப்பொழுது சிறையில் இருக்கும் இளைஞர்களின் பின்னணியும் நாங்கள் சிறையில் இருந்த பின்னணியும் வேறானது.

இருந்தாலும், சிறைகளில் பட்ட துன்பங்கள், சித்திரவதைகள் என்பனவற்றை அனுபவித்த நாம் எங்களை விட ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடிய அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று JVP யினர் நடத்திய போராட்டத்தைப்போல் அல்லாமல் எங்களுடைய தமிழர் தாயகத்தில் எம்மக்களுடைய விடிவுக்கான சனநாயகப் போராட்டங்கள் அடக்கப்பட்டு இராணுவ அடக்குமுறைகள் மெலெழுந்த நிலையில், ஆட்சிகள் அந்த இராணுவ அடக்குமுறைக்குப் பின்னணியில் இருந்ததால் இந்த இளைஞர்கள் உலகில் நடந்த பல போராட்டங்களைப் போல (ஐரிசு நாட்டுப் போராட்டத்தை நான் மிகவும் படித்தேன், சிறையிலிருக்கும் போதும் படித்தேன்) அந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் சேர்ந்து போராடியதை நான் எப்பொழுதும் நியாயப்படுத்துவேன். எப்பொழுதும் அதை நியாயப்படுத்தித்தான் நான் பேசுவேன். அவர்களோடு நாங்கள் ஆதரவாக இருந்திருக்கிறோம். நேரடியாக ஆயுதம் தூக்கி நாம் போராடவில்லையென்றாலும், திரு.பிரபாகரன் அவர்கள் போராளிகளுடன் எங்களை வந்து சந்திக்கும் ஒருவராக இருந்திருக்கிறார் (நாங்கள் இப்பொழுது இருக்கும் வீட்டிற்குப் பக்கத்தில் தான் முன்னர் இருந்த வீடு இருந்தது. எங்களது நான்கு வீடுகளில் அழிக்கப்பட்ட இரண்டு இடத்திலும் திரு.பிரபாகரன் அவர்கள் எம்மைச் சந்திக்க வருவதுண்டு). இருந்தபொழுதும், நாங்கள் ஆயுதம் ஏந்துபவர்களாக இருக்கவில்லை. ஆனால் அந்தப் போராட்டத்தை எப்போதும் ஆதரித்து வந்துள்ளோம். அதை நான் வெளிப்படையாகப் பேச விரும்புகின்றேன். அதைவிட எமது இளைஞர் அமைப்பினுடைய வரலாற்றுக் காலத்திலேயே நிலங்கள் சிங்களக் குடியேற்றங்களினால் அபகரிக்கப்படும் போது அதற்கு எதிராகப் போராடியிருக்கிறோம். எடுத்துக்காட்டாக, திருகோணமலையிலே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிங்களவர்களால் அபகரிக்கப்படும் நிலையில் இருந்த 10 ஆம் கட்டை, உவர்மலை போன்ற பிரதேசங்களில் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடினோம். இந்தத் தொடர்ச்சியான போராட்டங்களால் HSC என்று சொல்லப்படுகின்ற உயர்தரப் பரீட்சையை நாம் எழுத இயலாமல் போனது. அப்படி 150 இளைஞர்கள் நாங்கள் இப்படிப் பாதிப்புகளுடன் போராடினோம். அதேவழியில், எங்களுடைய விசுவமடு, உடையார்கட்டு, முத்தையன்கட்டு, அக்கராயன் போன்றவற்றில் வவுனியாவில் திரு.இராஜசுந்தரம் போன்றவர்களால் குடியேற்றப்பட்டதில் நாம் முன்னின்று செயற்பட்டோம். அந்தக் காலத்தில் எங்கள் ஆயுதப் போராட்டம் வளர்ச்சியடைந்தது எமக்குத் தெரியும். அந்த இயக்கங்களிற்கு நாங்கள் ஆதரவாக இருந்திருக்கின்றோம். திரு.பிரபாகரன் அவர்கள் மீது நான் மிகுந்த நம்பிக்கையும் அவர் என்மீது அதேபோல் நம்பிக்கையும் கொண்டிருந்தோம். வரலாற்றில் எல்லாவற்றையும் நாம் பேச வேண்டிய அவசியம் இருக்கின்றது. தேவைப்பட்டால் நான் பேசுவேன். அப்படி நாங்கள் மானசீக உணர்வுகளோடு அவர்களைப் பலமுறை சந்தித்திருக்கிறோம். எங்களுடைய வீடுகளில் அவர்கள் புழங்கியிருக்கிறார்கள். என்னுடைய மனைவியினுடைய வீடு அதற்கு ஒரு முதன்மையான இடமாக இருந்தது. போராளிகளில் குறிப்பாக திரு.பிரபாகரன் அவர்கள் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ சந்திக்கின்ற இடமாக அது இருந்தது. அப்படியிருந்தாலும், நாங்கள் மிகக் கவனமாகவும், நிதானமாகவும் அந்தப் போராட்டத்தை ஆதரித்திருக்கிறோம். அது வரலாற்றில் முக்கிய கடமையாக எங்களிற்கு இருந்தது.  2002 ஆம் ஆண்டில் போர் ஓய்விற்கு வந்த போது, நாங்கள் விடுதலைக் கூட்டணியாக, தமிழரசுக் கட்சியாக “நாங்கள் பேச வரவில்லை. விடுதலைப் புலிகளோடு பேச்சு நடத்தி இனப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். அவர்களுடன் தான் பேச வேண்டும்” என்று வெளிப்படையாக அறிவித்து இருந்தோம். அதில் நான் முதன்மையான பங்கு வகித்திருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும்.

சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் காலத்திலும் விடுதலைப் புலிகளிற்கு ஆதரவாகவே இருந்தார்கள்.

பின்னர், 2009 இல் போரின் உச்சநிலையில் பெண் போராளிகள் எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டார்கள்…போராளிகள் நடத்தப்பட்ட முறையை நாம் அறிவோம். அந்த இளைஞர்கள் மோசமாகக் கொல்லப்பட்டதை நாம் அறிவோம். இராணுவம் நடந்துகொண்ட முறைகளை எவரும் நியாயப்படுத்த முடியாது. போரின் போது, பாதுகாப்பு வலயங்களைப் பிரகடணப்படுத்தி அங்கு பாதுகாப்பாகச் செல்லுமாறு மக்களிற்குச் சொல்லிவிட்டு அங்கு குண்டு வீசி மக்களைக் கொன்றதை எவரும் நியாயப்படுத்த முடியாது. அப்பொழுது, Thermobaric Bomb, Phosporus குண்டுகள் என்பன போராளிகள், பொதுமக்கள் மத்தியில் வீசப்பட்டு அதனால் அவர்கள் மயக்கமடைந்து, மரணமடைந்து இருக்கும் நிலைமையை டெல்லியிலே திரு.சம்பந்தன் அவர்கள் தலைமையில் சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டிச் சொல்லியிருக்கிறோம். நான் ஏன் இவற்றையெல்லாம் சொல்லுகின்றேன் என்றால், அவ்வளவு கொடிய போரிற்குள் நின்று போராடிய இளைஞர்கள் இன்று சிறைப்பட்டிருக்கிறார்கள். எங்களின் சனநாயக ரீதியிலான போராட்டங்களும் அவர்களுடைய போராட்டத்தை ஆதரித்தன. நாங்கள் ஆயுதம் தூக்கிப் போராடவில்லையானாலும், உலக வரலாற்றில் ஆயுதம் எடுத்துப் போராடிப் பல நாடுகளிற்கு விடுதலை கிடைத்திருக்கின்றது, அவர்கள் விடுதலை பெற்றிருக்கிறார்கள் என்பதால் இந்த இளைஞர்கள் மீது நான் மிகுந்த அனுதாபங்களை நான் கொண்டிருப்பதற்கு எனக்கு இயல்பாகவே நியாயங்கள் இருந்தன. நேற்று இரவு கூட அங்கிருந்து இளைஞர்கள் தங்களுடைய விடுதலை பற்றி என்னுடன் பேசினார்கள். நான் நேரடியாக அங்கு வர இருப்பதாகச் சொல்லியிருக்கிறேன். ஆனால் இந்த அரசாங்கம் ஞானசாரதேரரை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார்கள். நாம் பொதுமன்னிப்பு என்று சொல்லவில்லை.

அரசியல் ரீதியாக அரசாங்கமே தமிழீழ விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி சர்வதேசமே அவர்களை ஏற்றுக்கொண்டு பேச்சுகளை நடத்திய நிகழ்ச்சிகளிலிருந்து இந்த இளைஞர்களை அவர்கள் அரசியல் கைதிகள் இல்லையென்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களை இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் எமது திட்டவட்டமான கருத்து.

அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கின்றேன். கைகளை இழந்தவர்கள், கால்களை இழந்தவர்கள், கண்களை இழந்தவர்கள் என அவர்களின் நிகழ்ச்சிகளில் அதிகமாகப் பங்குபற்றும் வாய்ப்பு எனக்குத் தரப்பட்டது. அதில் கலந்துகொண்டிருக்கிறேன். சிறையில்வாடும் இந்த இளைஞர்களை விட, 12,600 இளைஞர்கள் போரிலே கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள். நல்லிணக்கம் வடக்கு-கிழக்கை கட்டியெழுப்பல் என்ற எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி, தமிழ், சிங்கள், முஸ்லிம்கள் இருக்கின்ற பாராளுமன்றக் குழுவில் நான் தலைவராக இருக்கின்றேன். அங்கே அந்தக் குழுவில் நான் எடுத்த முயற்சியின் பயனாக அந்தப் 12,600 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு, அவர்களிற்கு விடியலை ஏற்படுத்தக் கூடிய வாழ்வாதாரம், கல்வியைப் பெற்றுத் தந்தால் அதற்கான தொழில், அப்படியல்லாவிட்டால் தொழிற்பயிற்சிகளை அளித்து அவர்களிற்கான வேலைவாய்ப்பை உருவாக்கல் என இந்த முறை வரவு- செலவுத் திட்டத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்களுடைய பிரேரணை என்பதை நான் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

இரண்டாவதாக, அதைவிட முக்கியமாக சிறையிலிருக்கும் இந்தப் போராளிகளின் நிலையை நீங்கள் கேட்ட போது இன்னுமொரு விடயத்தை நான் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். எங்களுடைய போரால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணங்களில் 90,000 இற்கும் அதிகமான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இன்று நிற்கதியாக நிற்கின்றார்கள். அந்தக் குடும்பங்களைப் பற்றி சமூகவியல் பார்வையுடன் அந்தப் பெண்களின் குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கிருக்கின்றது. விடுதலைக்காகப் போராடி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை சமூக ரீதியில், சனநாயக ரீதியில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அக்கறைகாட்டி பேச்சுகளை நடத்தி உருவாக்கிய தீர்மானம் தான் வரவு- செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

பெண்கள் விடயத்தில் அவர்களுடைய புது வாழ்விற்காக, அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக, தொழில்துறைகளிற்காக, மாற்றுத்திறனாளிகள் அவர்களின் வேலைவாய்ப்பு, சமூக நீரோட்டத்தில் அவர்களை இணைக்கும் வேலைத்திட்டம் என இம்முறை மட்டும் 2150 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது எங்களுடைய முயற்சி. இதனை யாரும் மறுக்க முடியாது. இது மக்கள் மத்தியில் இன்னமும் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பது எங்களிற்குக் கவலை தான். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் நாம் மிகத் தீவிரமாக இருக்கின்றோம். 1971 ஆம் ஆண்டு நாடு முழுவதையும் கைப்பற்ற முயன்ற JVP யினர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். நான் அவர்களுடன் சிறையில் இருந்திருக்கிறேன். அவர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டுத் தற்போது அரசியல் நீரோட்டத்திலே பாராளுமன்றம் வரை சென்றிருக்கின்றபோது, விடுதலைப் புலிகளை மட்டும் பயங்கரவாதச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றி அதில் வழக்குகளைப் போட்டு அவர்களை இழுத்தடித்துக்கொண்டிருப்பதை ஏற்க முடியாது. நாங்கள் இது பற்றி எத்தனையோ தடவைகள் பேசினாலும், இந்த அரசாங்கத்துடன் இன்னும் தீவிரமாகப் பேசி திட்டவட்டமாக ஒரு முடிவைக் காண வேண்டும். நீதிமன்றங்களில் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கின்றோம். சர்வதேச நாடுகளுடன் இணைந்து நாங்கள் அதில் தீவிரமாக இயங்குகின்றோம். அது முதன்மையானது. இந்த இளைஞர்கள் நிச்சயமாக வெளியே கொண்டுவரப்பட வேண்டும். அவர்கள் பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும். தங்கள் குடும்பங்களோடும் மக்களோடும் அவர்கள் மகிழ்வோடு வாழ வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. இந்தப் பின்னணி நான் சிறையிலிருந்ததால் மட்டும் என்பதனால் அல்ல. எங்களுடைய காலத்திற்கும் இப்போது அவர்கள் இருக்கின்ற காலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. போராட்ட வடிவங்கள் கூட வேறானது. அதை நினைவுபடுத்துகையில் எனது மனம் கொந்தளிப்பாக இருக்கின்றது.

கேள்வி 3:

சாதிய, பிரதேசச் சிக்கல்களைக் கூர்மைப்படுத்துவதன் மூலம் அடிப்படை முரண்பாடுகளைக் கூர்மையாக்கி முதன்மை முரண்பாடான தேசிய இனச் சிக்கல் நோக்கிய வேலைத் திட்டங்களின் வலுவைக் குறைக்க சிலர் இப்போது முனைப்பாக வேலை செய்வதாகத் தெரிகிறது. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலங்களில் சாதிய ஒடுக்குமுறையைக் களைய “தீண்டாமை எதிர்ப்பு மாநாடு” போன்ற வேலைத்திட்டங்களில் தமிழரசுக் கட்சி ஈடுபட்டது. அதிலும் நிறையப் போதாமைகளும் முழு ஈடுபாடின்மையும் இருந்ததாகவும், யாழ்ப்பாணத்தில் இதற்கு எதிர்ப்பு இருந்ததால், திருகோணமலையிலிருந்தே இந்த வேலைத்திட்டம் தொடங்கியதாகவும் சொல்வதுண்டு. அதில் நீங்கள் வீடு வீடாகச் சென்று கழிப்பறைகளைத் தூய்மை செய்து கொடுத்து சாதிய ஒடுக்கல் சிந்தனைகளைத் தகர்க்க வேலை செய்ததாகக் கேள்விப்பட்டோம். மற்றும் நீங்கள் மலையகப் பகுதிகளுக்குச் சென்று எமது மக்களிடத்தில் வேலை செய்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். அது குறித்து உங்கள் நினைவுகளை மீட்க முடியுமா? சாதியம் மறுபடியும் தலைவிரித்தாடும் நிலையில், அதைக் கூர்மைப்படுத்தி எம்மைச் சிதைக்க வேலைகள் நடக்கும் இக்காலத்தில் உங்களைப் போன்றவர்கள் கூட பாராமுகமாக எந்த செயற்றிட்டமும் இல்லாமல் இருப்பதை எப்படிப் புரிந்துகொள்ளலாம்?

பதில்: மாவை ஐயா

முக்கியமான கேள்வி. சமூகவியல் அடிப்படையில் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். நான் முன்னரே குறிப்பிட்டதைப் போல, அதாவது பௌத்த பாடசாலைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அப்படிப் பௌத்த பாடசாலைகள் மூலம் அனுமதி கொடுத்து எமது சைவசமயத்திலிருந்து பௌத்தத்திற்கு மாற்றப்படுவது நடைபெறுகின்றது என்று சொல்லப்பட்ட புத்தூர், ஆவரங்கால், கோப்பாய் போன்ற பகுதிகளிற்கு நாங்கள் நேரடியாகச் சென்று அந்த மக்களைப் பார்த்தபோது அந்த மக்கள் ஒருவரும் பௌத்தத்திற்கு மாறியிருக்கவில்லை. ஆனால், அவர்களைப் பௌத்தத்திற்கு மாற்ற முயற்சித்தவர்கள் சாதியை ஒரு காரணமாகப் பயன்படுத்தினர். அப்படிப் பௌத்தத்திற்கு மாற்றுவதன் மூலம் அந்த மக்களிற்குச் சமத்துவம் வழங்குவதாகப் பரப்புரைகள் அந்தக் காலத்தில் நடந்தன. நாங்கள் அந்தப் பாடசாலைகளிற்குச் சென்றிருக்கிறோம். வீடுகளிற்குச் சென்றிருக்கிறோம். அங்கே சென்று பார்த்தால் அவர்கள் வீபூதி எல்லாம் பூசிக்கொண்டு அவர்கள் வாழுகின்ற குடிசைகளில் முருகன், பிள்ளையார் சிலைகள் எல்லாம் வைத்துக்கொண்டு இருந்ததை நாங்கள் பார்த்து இருக்கிறோம். அப்போது ஈழத்தமிழர் இளைஞர் இயக்கமாக நாங்கள் அந்த மக்களிடம் போய் “நீங்கள் மதம்மாற வேண்டாம். சாதி, சமய வேறுபாடுகளிற்கு முடிவு கட்ட எல்லோரும் போராடுவோம். நீங்கள் இப்படிச் செய்ய வேண்டாம்” என்று கூறிய போது, அதற்கு “நாங்கள் அப்படி மாறவில்லை” என அவர்கள் சொன்னார்கள். அந்த மக்களைப் பௌத்தத்திற்கு மாற்றினால் அவர்களிற்குச் சமத்துவம் கிடைக்கும் என்ற போலியான பரப்புரை லியகொல்ல அமைச்சராக இருந்த போது நடந்தது. அந்த பௌத்த சங்கத்தில் பொறுப்பாக இருந்த வைரமுத்து போன்றவர்கள் அந்த மக்களை மதம்மாற்ற எடுத்த முயற்சிகளுக்கு எதிராக நாங்கள் செயற்பட்டிருக்கிறோம். அவர்களுடைய சமத்துவத்திற்கு எதிராக அல்ல. அவர்களுடைய சமத்துவத்திற்காக அவர்களிடம் போய் வேலை செய்தோம். சாதி அடிப்படையில் அவர்களை மதம்மாற்றி பௌத்த பாடசாலைகளைத் தோற்றுவிக்கும் அந்த நடவடிக்கைகளை நாங்கள் எதிர்த்தோம். அதற்காக இயக்கங்கள் நடத்தியிருக்கிறோம். அதற்காக அப்போது பரம்சோதியின் தந்தையார் அவர்கள் கோப்பாயிலே, ஆவரங்காலிலே இருப்பவர்கள், திரு.கதிரவேற்பிள்ளை போன்றவர்கள் அவற்றிற்கெதிராக வழக்குகள் தாக்கல் செய்தார்கள். நாங்கள் இளைஞர்கள் இந்த பௌத்த பாடசாலைகளுக்கு எதிராகப் பல பரப்புரைகள் செய்து முன்னின்று பல நடவடிக்கைகள் எடுத்ததை நான் நினைவுபடுத்துகின்றேன். இந்த நேரத்தில் உங்களுடைய கேள்வி எங்கிருந்து பெற்றீர்கள் என சிந்தித்துப் பார்க்கின்றேன். நாங்கள் இளைஞர் அமைப்பினராக இருந்த காலத்தில் பின்தங்கிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லப்படும் வீடுகளிற்குச் சென்று கழிப்பறைகளைக் கட்டிக்கொடுத்து இருக்கிறோம். மலசல கூட வாளிகளை எடுக்கின்ற தொழிலில் அவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று நாங்களே அவற்றைப் போய் எடுத்துப் போராட்டங்கள் எங்கள் தமிழரசுக் கட்சி திரு.நவரத்தினம் அவர்களின் தலைமையில் சாவகச்சேரிப் பகுதியில் நடத்தியிருக்கின்றோம். எங்களது வீடுகளிற்கு வந்தபோது எங்களைத் திட்டினார்கள் (சிரிக்கின்றார்). இவற்றை நீங்கள் சுட்டிக்காட்டியபடியால் நான் இவற்றை நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கின்றேன். தந்தை செல்வா, திரு.அமிர்தலிங்கம் போன்றோரின் காலங்களில் இது குறித்து திரு.வன்னியசிங்கம் அவர்களை முதன்மையாகக் குறிப்பிடலாம். எங்களுடைய ஊரிலுள்ள மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்குள் பின்தங்கியவர்கள் சாதி குறைந்தவர்கள் என அடையாளங்காட்டி போகக் கூடாது என நடந்த வேலைகளிற்கெதிராக நாங்கள் போராடினோம். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலிற்கு முன்பாக திரு.தர்மலிங்கம் அவர்களுடன் நாங்கள் சென்ற மோட்டார் வண்டி கல்லெறிந்து தாக்கி உடைக்கப்பட்டது. முடிதிருத்தும் இடங்களில் சாதிப்பாகுபாடு இருக்கின்றது எனச் சொல்லி திரு.செனட்ராஜா அவர்கள் தாக்கல் செய்த நீதிமன்ற வழக்குகள் அவற்றுள் சில லண்டனிலுள்ள நீதிமன்றங்கள் வரைக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. அதற்கு எங்களுடைய கட்சி பங்களிப்புச் செய்தது.

அனைத்து இடங்களிலும் சமத்துவத்திற்காக நாங்கள் வேலை செய்தோம். சிகையலங்கரிப்பு நிலையங்களிலும் வேலை செய்தோம். அப்பொழுது நாங்கள் இளைஞர்களாக ஊர்வலங்கள் நடத்தி அந்த மக்களை அழைத்துக்கொண்டு கோயிலிற்கு உள்ளே போகின்ற முயற்சிகள் எல்லாம் செய்தோம்.

அப்போது நாங்கள் இளைஞராக இருந்த காலத்தில் தந்தை செல்வா காலத்தில் எடுத்த முயற்சிகள் காரணமாக தீண்டாமை ஒழிப்பிற்காக, சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக கிழக்கின் உகந்தையிலிருந்து பருத்தித்துறை வரைக்கும் ஒரு கிராமயாத்திரை அந்தக் காலத்தில் செய்தோம். அதில் பின்தங்கிய சமூக மக்களை அழைத்துக்கொண்டு அவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களோடு சேர்ந்து உணவருந்திச் செயற்பட்டிருக்கிறோம். அதில் இளைஞர்கள் கூடுதலானோர் பங்களித்து இருக்கிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் நான் பார்க்கின்றபோது, ஆயுதப்போர் நிகழ்ந்த காலத்தில் சாதியப் பாகுபாடுகள் அதிகமாக வெளிவரவில்லை. அனைத்துச் சமூகத்தினரும் வேறுபாடு இல்லாமல் ஆயுதபாணிகளாக விடுதலைக்காகப் போராடியிருக்கிறார்கள். அதை நாம் மறுக்க முடியாது. ஆனால், எங்களால் ஒரு சீர்திருத்தம்தான் எடுக்க முடிந்திருக்கின்றதே தவிர, சாதிய உணர்வுகள் முற்றாக அழிந்துவிட்டதென நான் சொல்லவரவில்லை. அது இப்பொழுதும் இருக்கத்தான் செய்கின்றது. அதை முழுமையாக மாற்றியமைக்கப் பலவித முயற்சிகள் எடுத்தேயாக வேண்டும்.  அவர்களிடத்திலும் நாங்கள் சமூகத்தில் பின்தங்கியிருக்கின்றோம் என்ற தாழ்வு மனப்பான்மை அகல வேண்டும். அவர்களது கிராமங்கள் இன்னமும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அவர்கள் காணியற்றவர்களாக, வீடற்றவர்களாக, தொழிலைத் தேடுவதில் தகுதியற்றவர்களாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு நாம் மாற்றுவழிகளைக் காண வேண்டும். நாங்கள் ஒரு விடுதலைக்காகப் போராடுபவர்கள் நிச்சயம் இந்தக்கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். விடுதலை என்ற பெயரில் சாதிகளை அடையாளங்காட்டிப் பிளவுபடுத்துவதற்கு நாங்கள் இடமளிக்கக் கூடாது. அவர்களுடைய எதிர்கால வாழ்வை, வாழ்வாதரத்தை, எல்லா இடங்களிலும் அவர்களுக்குள்ள சமத்துவத்தை நிலைநாட்டி அவர்களுடைய காணி இல்லாத, வீடில்லாத சிக்கல்களிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சனநாயக நீரோட்டத்தில் அவர்களுடைய பிரதிநிதித்துவம் சமத்துவமாக்கப்பட வேண்டும். சரியான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அப்படியாக நாங்கள் நினைப்பதும் செய்வதும் போதாமல் இருக்கின்றது என்பதை நான் நிச்சயமாக ஒத்துக்கொள்கின்றேன்.

எடுத்துக்காட்டாக, உடுப்பிட்டித் தொகுதியிலே, 1977 ஆம் ஆண்டு திரு.ராஜலிங்கம் அவர்களின் வெற்றிக்காக மிகத் தீவிரமாகச் செயற்பட்டிருக்கின்றோம். அப்போது காங்கிரசைச் சேர்ந்த திரு.சிவசிதம்பரம் அவர்கள் ஒரு வெற்றிவாய்ப்பைக் கொண்டிருந்தாலும் அவரை அந்த இடத்திலிருந்து நல்லூரிற்கு மாற்றிப் போட வைத்து, தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக அந்தக் காலத்திலிருந்த திரு.ஜெயக்கொடி அவர்களை அதில் போட்டியிடாமல் தவிர்க்கச் செய்து அந்தத் தொகுதியிலேயே திரு.ராஜலிங்கம் அவர்கள் வெற்றிபெறுவதற்காக நாங்கள் உழைத்திருக்கின்றோம். தந்தை செல்வா மறைந்த பின்னர் காங்கேசன்துறைத் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று எல்லோரும் தீர்மானித்து இருந்தார்கள். எங்களுடைய இளைஞர்கள் தீர்மானித்து இருந்தார்கள். காங்கிரசிற்கு 6 இடங்கள் தரப்பட வேண்டும் என்ற காங்கிரசிற்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையிலான போட்டா போட்டி இருந்தது. நாங்கள் அப்போது தீவிரமாகச் செயற்பட்ட காலமென்பதனால் நான் காங்கேசன்துறைத் தொகுதியில் நின்று இலகுவாக வெற்றி பெற்றிருக்கலாம். எனக்கு அப்போது 24, 25 வயதே. அப்போது வட்டுக்கோட்டையில் திரு.அமிர்தலிங்கம் தேர்தலில் நின்று தோல்வியடைந்து இருந்ததால், திரு.அமிர்தலிங்கம் அவர்களைக் காங்கேசன்துறைக்கு வருமாறு அழைத்தேன். தேர்தலில் வெற்றிபெறும் சந்தர்ப்பத்தை நான் அப்போதும் நாடவில்லை. நாங்கள் போராட்டப் பாதைக்குத் தான் அப்போதும் திரும்பியிருந்தோம். நான் இளைஞனாகக் காங்கேசன்துறைத் தொகுதியில் அந்த நேரம் வெற்றி பெற்றிருக்க முடியும். அப்படியிருந்தும் இந்த சாதி என்ற கொடுமைகளிற்கெதிராக நாங்கள் ஒரு தலைவரை உருவாக்குவதில் பல முயற்சிகள் எடுத்தோம். திரு.ராஜலிங்கம் அவர்கள் தமிழரசுக் கட்சியிலே மேற்சபைக்கு நியமிக்கப்பட்ட பொழுது, அவர் ஒரேயொரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் பொன்னம்பலம் அவர்கள் ஆதரவளிக்கவில்லை என்று சொன்னார்கள். ஆனால், அதை நாங்கள் மாற்றியமைத்து உடுப்பிட்டித் தொகுதியில் அவரை 10,000 இற்கும் அதிகமான வாக்குகளினாலே வெற்றிபெற வைத்தோம். அதில் இளைஞர்களாக நாங்கள் மிகத் தீவிரமாக வேலை செய்திருக்கின்றோம். அப்பொழுது சிவாஜிலிங்கம், திரு.துரைரட்ணம் அவர்களின் மைத்துனர் என இப்படிப் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் எங்களது தொகுதிகளில் கூட வேலை செய்யாமல் அவரின் வெற்றிக்காக வேலை செய்தோம். சில இடதுசாரிகள் கூட அந்த நேரத்தில் பொலிகண்டி போன்ற ஊர்களில் தங்களது வீடுகளுக்குள் திரு. ராஜலிங்கம் அவர்கள் வரக் கூடாது என்ற சொன்ன போது, அவரை அழைத்துக்கொண்டு சென்று வாக்குக் கேட்டு அவரை வெற்றியடையச் செய்ததில் இளைஞர்கள் நாம் மிகத் தீவிரமாக வேலை செய்தோம். இதனால் சாதி தீர்ந்துவிட்டது. பிரச்சனை இப்போது இல்லை என நான் ஏமாற்ற விரும்பவில்லை. இன்னும் அதிகமாக நாங்கள் வேலை செய்ய வேண்டும். அவர்களை அனைத்து இடங்களிலும் தொழிற்துறைகளில், வாழ்வாதாரத்தில், நிலம், வீடு போன்றவற்றில் முன்னிற்குக் கொண்டுவந்து நல்ல கல்வியறிவுள்ளவர்களாக மாற்றி ஏற்கனவே செய்த பழைய தொழில்களை விட்டுவிட்டுப் புதிய நவீன தொழில்களிற்குள் அவர்களை உட்படுத்தி அவர்களை அனைத்திலும் சமத்துவமானவர்களாக்க வேண்டிய தேவை எதிர்கால அரசியலில் எங்களுக்கு நிறைய இருக்கின்றது. அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் மிகவும் பங்களித்தார்கள். தமிழரசுக் கட்சி, கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று சனநாயக ரீதியாகவும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். ஆனபடியால், நாங்கள் விடுதலை என்கின்ற போது எங்கள் மத்தியில் இந்தச் சாதிப் பாகுபாடு, ஏற்றத்தாழ்வுகள், பிரதேசச் சிக்கல்கள் என்பனவற்றிற்கு எந்தவகையிலும் நாங்கள் இடமளிக்காது நாங்கள் அவர்களை சமமானவர்களாக, விடுதலை பெறும்போது மட்டுமல்ல, அடையும் விடுதலையை முழுமையாக அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பது தான் எமது கொள்கை.

கேள்வி 4:

தனித்தமிழீழம் கோரிய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து, அதற்கு மக்கள் ஆதரவு கோரி 1977 பொதுத்தேர்தலில் தமிழர்களின் ஒருமித்த ஆதரவினால் பெருவெற்றியீட்டி பாராளுமன்றம் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியேற்று, மாவட்ட அதிகார அவை என்ற அளவிற்குக் கீழிறங்கிப் போனதை எப்படிப் பார்க்கின்றீர்கள்? 6 ஆம் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வர, இனிமேல் பாராளுமன்ற அரசியல் வழியில் எதுவும் செய்ய முடியாது என்பதற்காக நாட்டை விட்டு இந்தியா சென்றீர்களா? ஆம் எனின் அந்தச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்போது என்ன மனத்துணிவில் இங்கு வந்து பாராளுமன்ற அரசியலில் இறங்கினீர்கள்?

பதில்: மாவை ஐயா

1976 ஆம் ஆண்டு அப்போது நான் சிறையில்தான் இருந்தேன். 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் எடுத்தபோது சிறையிலிருந்தே நான் அதனை ஆதரித்துக் கடிதம் அனுப்பியிருந்தேன். அந்தத் தீர்மானம் மிகச் சரியானது. அந்தத் தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியாகத் தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம் (ஆனால் அவர் அந்த மாநாட்டுக்கு வந்திருக்கவில்லை) மற்றும் மலையகத்துத் தலைவர் தொண்டமான் ஆகியோர் சேர்ந்து எடுத்திருந்தார்கள். அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் போது, இதற்கு ஈடான அரசியல் தீர்வு தமிழ்மக்களிற்குக் கிடைக்குமானால், அதனைப் பரிசீலிக்கத் தயாராக இருக்கின்றோம் என்று தந்தை செல்வா கூறினார். விடுதலைப் புலிகளும் அந்தத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு தான் போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். சர்வதேச சந்தர்ப்பங்கள் காரணமாக அவர்கள் ஒஸ்லோ வரைக்கும் சில மாற்றுத் திட்டங்களை ஆராய பேச்சுகளிற்குச் சென்ற வரலாறும் இருக்கின்றது. நான் நீண்டகாலமாகத் திரட்டிய விடயங்கள் அடங்கிய கோப்பினை எடுத்துப் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகளை எல்லாம் நான் பார்த்திருக்கின்றேன். அதற்காக அவர்கள் போராடியது வேறு அரசியலிற்காக அல்ல. அவர்கள் தமிழீழத்தை அமைப்பதற்காகவே போராடினார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி தந்தை செல்வா இறப்பதற்குச் சற்று முன்னர்தான் நான் சிறையிலிருந்து விடுதலையாகி வந்தேன். 1977 பொதுத் தேர்தலில் நாங்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதே பரப்புரைகளைச் செய்தோம். அந்தத் தீர்மானத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்று பரப்பினார்கள் என்பதற்காக திரு.அமிர்தலிங்கம், வி.என்.நவரத்தினம், துரைரட்ணம் ஆகியோர் கைது செய்யப்பட்டு Trial at Bar நீதிமன்றில் வழக்கு நடைபெற்றது. அப்போது தந்தை செல்வா அவர்களின் தலைமையில் நீலன் திருச்செல்வம் அவர்களின் தந்தையாரான திருச்செல்வம், புலநாயகம் போன்ற திறமையான வழக்கறிஞர்கள் எல்லோரும் அதில் வாதாடினார்கள்.

குற்றஞ்சுமத்தப்பட்டவர்களிற்கெதிராக அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றெல்லாம் குற்றஞ்சுமத்தித்தான் அந்த வழக்கு நடைபெற்றது. ஆனால், சட்டபூர்வமாக அதில் சொல்லப்பட்ட விடயம் என்னவென்றால், நாங்கள் நாட்டைப் பிரிப்பதற்கு அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவரவில்லை. நாங்கள் ஐரோப்பியரிடம் இழந்த சுதந்திரத்தை மீட்பதற்காகவே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தோம். எங்களுடைய போராட்டத்தின் இலக்கு அதுதான். இந்த நாட்டிற்கு ஐரோப்பியரிடம் இருந்து சுதந்திரம் கிடைக்கும் போது அது சிங்களவர்களின் கைக்குத் தான் சென்றது. தமிழர்களிற்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை. ஆகவே, அரசியல் அமைப்பு ரீதியாக தமிழர்களுடைய உரிமைகள் மறுக்கும் முகமாக 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புக் கொண்டுவரப்பட்ட போது அதில் எங்களின் சமஸ்டிக் கோரிக்கையைக் கூட அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 1972 ஆம் ஆண்டு சமஸ்டி அடிப்படையில் தான் நாங்கள் தீர்மானத்தை முன்மொழிந்து இருக்கின்றோம். அதற்குப் பின்னர் தான் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்குப் பின்னர் அந்த நீதிமன்றத்தில் மிகச் சிறந்த 67 வழக்கறிஞர்கள் அந்த வழக்கில் வாதாடினார்கள். தந்தை செல்வா ஒரு அரசியல் தலைவனாக மட்டுமல்ல மூத்த வழக்கறிஞராகவும் இருந்த நேரத்தில் ஜி.ஜி.பொன்னம்பலம், புலநாயகம், ரெங்கநாதன் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் எல்லோரும் அதில் வாதாடினார்கள். அப்பொழுது நாம் நாட்டைப் பிளவுபடுத்துவதற்காக அல்ல, தமிழர்களுக்கு தமிழ்த் தேசத்தின் மீதுள்ள ஆட்சி இறைமையை மீட்கவும் ஐரோப்பியரிடம் இழந்த சுதந்திரம் இலங்கைக்கு வழங்கப்பட்ட போது அது தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை, அதை நாம் நிலைநாட்டுவதற்காகவே என்பதே வழக்கின் வாதமாக எமது தரப்பில் இருந்தது.

அதுதான் வட்டுக்கோட்டைத் தீர்மானமாகவும் இருந்தது. அதற்குப் பிறகு பல கலவரங்கள் குறிப்பாக 1983 ஆம் ஆண்டு இனக் கலவரம் இப்படியாகத் தொடர்ச்சியான நிகழ்வுகளோடு இந்தியா அதில் தலையிட்டது. அந்த நேரத்தில் தான் திம்புக்கோட்பாடு என்பது உருவாக்கப்பட்டது. அப்பொழுது 1983 ஆம் ஆண்டு திரு.அமிர்தலிங்கம் அவர்கள் தலைமறைவாகி இந்தியாவுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. அப்பொழுதுதான் நாங்கள் சிறையிலிருந்து விடுதலை பெற்றிருந்தோம். அந்த நேரங்களில் சிறையிலும் வெளியிலும் பல கொலைகள் இடம்பெற்றமை, எங்களின் நிலங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டமை போன்ற காரணங்களால் நான் இந்தியாவிற்குச் செல்ல வேண்டி ஏற்பட்டது. (28 ஆண்டுகளிற்குப் பின்னர் நான் எனது சொந்த இடத்திற்கு வந்துள்ளேன். எங்களது நான்கு வீடுகளும் அழிக்கப்பட்ட பின்பு என்னுடைய பிள்ளைகளில் ஒருவர் பொறியியலாளராக இருப்பதால் அவரின் உதவியோடு இந்த வீட்டைக் கட்டி,,,, இன்னமும் கட்டுமானம் அரைகுறையாகத்தான் இருக்கிறது. இன்னமும் கட்டி முடிக்கவில்லை. இருப்பினும் அதுவல்ல இங்கே பிரச்சனை). கிட்டத்தட்ட இந்தியா தலையீடு செய்த காலத்தில் தான் எங்களுடைய தலைவர்களும் இந்தியாவுக்குச் சென்றிருந்தனர். நான் விடுதலை பெற்றதும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்து இங்கிருந்து “இராமானுயர்” என்ற கப்பலில் தான் இரகசியமாக இந்தியாவிற்கு என்னை அனுப்பினார்கள். அந்தளவுக்கு எங்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை அன்று இருந்தது. நான் இந்தியாவிற்குப் போய் அங்கு ஒளிந்திருக்கவில்லை.

அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டோம். 1989 ஆம் ஆண்டு திரும்ப இங்கே வந்திருந்தோம். அதற்குப் பின்னர் ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் முழுக்க முழுக்க இந்த நாட்டிலே தான் இருந்திருக்கின்றேன். ஆனபடியால் நாம் இந்தியாவிற்குத் தப்பியோடினோம் என்பது அர்த்தமற்ற கதை. நாங்கள் அங்கு அகதியாகத்தான் இருந்திருக்கிறோம். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இந்திராகாந்தியின் அரசாங்கம் பேச்சுக்கள் நடத்திய காலம். நாங்கள் பல சந்தர்ப்பங்களில் அதில் பங்குபற்றியிருக்கிறோம். அதற்குப் பின்னர் 1989 இல் தேர்தலிற்காக திரும்ப இங்கே வந்திருக்கின்றோம். அதிலே போட்டியிட்டிருக்கின்றோம். போர் நடந்துகொண்டிருந்த படியாலும், இந்தியத் தலையீட்டால் பல நெருக்கடிகள் இருந்ததாலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளும் தீவிரமடைந்திருந்த காரணத்தினால் அந்தத் தேர்தலில் மக்கள் அதிகமாக வாக்களித்திருக்கவில்லை. அதனால் அந்தத் தேர்தலில் நான் வெற்றிபெற்றிருக்கவில்லை. ஆனாலும் வெற்றிபெற்ற சந்தர்ப்பங்களில் நாங்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறோம். அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்ட பின்னர் அவருடைய இடத்திற்காக ஒக்டோபர் மாதம் முதன் முதலாகப் பாராளுமன்றம் சென்றிருந்தேன். நாங்கள் பாராளுமன்றப் பதவிக்காகவோ அல்லது பதவி தந்திருந்தால் தான் கட்சியில் சேருவோம் என்று சண்டையிட்டோ வந்தவர்கள் அல்ல. நாங்கள் சிறுவயதிலிருந்தே போராட்டப் பாதையில் வந்தவர்கள். பதவிகள் எதுவும் நான் கேட்டதில்லை. பாராளுமன்றம் சென்றிருக்கக் கூடிய 1977 ஆம் ஆண்டு கூட அதை விட்டு விட்டு நான் போராட்டப் பாதைக்குச் செல்வதுதான் சரியானது என்று முடிவெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டேன். அப்படியான வரலாற்றைக் கொண்டவரிடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கின்ற போது எனக்கு மனதில் பெரும் சுமையாகத் தான் இருந்தது. ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

இதைவிட எத்தனையோ தடவை நாங்கள் ஆணையிரவு இராணுவ முகாமில் கூட அடிவாங்கிய காயங்களும் இறந்துவிட்டோம் எனத் தூக்கியெறியப்பட நிகழ்வும் கூட…………. எனப்பல காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பலர் என்மீது அதிகம் மதிப்பைக்கொண்டிருந்தாலும், நடவடிக்கைகள் காரணமாக பலவிதமான பேச்சுகள், செயற்பாடுகள் காரணமாக எனது மனம் நிறையக் காயப்பட்டிருக்கிறது. அதைப் போல நான் நீங்கள் கேட்ட இந்தக் கேள்வியை நினைக்கவில்லை. ஆனபடியால், என்னுடைய பின்னணி இப்படித்தான் இருந்திருக்கின்றது. பாராளுமன்றப் பிரதிநிதியாக வந்ததன் பின்புதான் போராட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அப்பொழுது ஒரு பெரிய அவலம் நடந்தது. அப்பொழுதும், நான் பாராளுமன்றப் பிரதிநிதியாகப் பிரதிந்தித்துவப்படுத்தியிருக்கின்றேனே தவிர தப்பியோடியிருக்கவில்லை. இதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அதைவிட புலனாய்வுத்துறை, இராணுவம் போன்றவற்றால் எங்களது உயிர்கள் அதிகம் அச்சுறுத்தலில் இருந்த படியாலும் எங்களுடைய தலைவர்கள் இந்தியா சென்றிருந்த படியாலும் நான் சிறையால் வந்தவுடன் “இராமனுயர்” கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டேன். இதுதான் நடந்தது,

இப்பொழுது உங்களுடைய கேள்வியின் அத்திவாரம்,
தமிழீழம் பிரகடணப்படுத்தியதன் பிறகு அதாவது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குள் நிற்காமல் வேறு வேறு வழிகளிலும் நீங்கள் அரசியலில் ஈடுபடுகின்றீர்கள் என்று எம்மைக் கேட்பது முதன்மையான கேள்வி. எங்களது அரசியல் சிக்கல்களை திம்புக் கோட்பாட்டினை அடிப்படையாக வைத்து நாங்கள் பேசலாம். திம்புக் கோட்பாட்டிலே நான்கு அடிப்படைகள் உண்டு. நான் திம்புக் கோட்பாட்டில் நேரடியாகத் தொடர்புபட்டிருக்கவில்லை. அப்போது தான் நான் சிறை மீண்டு சென்றிருந்த காலம். அப்பொழுது LTTE, EPRLF, TELO, EROS, PLOTE மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என 6 அமைப்புகள் திம்புப் பேச்சுகளில் பங்குபற்றிய காலம். அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் எல்லோரும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திரு. அமிர்தலிங்கம் குறிப்பாக இந்திராகாந்தியுடன் எங்களது சுதந்திரத்தைப் பற்றி பேசி இருக்கிறார். விடுதலையைப் பற்றி பேசி இருக்கிறார்கள். அவை நாம் அறிந்த உண்மைகள் தான். அதை யாரும் மறுத்துவிட முடியாது. 1971 இல் பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசத்தை உருவாக்கியது போன்ற சந்தர்ப்பத்தை எல்லாம் அவர் இந்திராகாந்தியுடன் விவாதித்தார். வங்காளதேசம் உருவாகியபோது அதனை நாம் கொண்டாடியதாக நானும் திரு. அமிர்தலிங்கமும் விசாரிக்கப்பட்டோம். அப்படியாக நிகழ்வுகள் நடந்தன. அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தைக் கூட திரு. அமிர்தலிங்கம் இந்திராகந்தியிடம் கேட்டார். இந்திராகாந்தி மட்டுமல்ல காங்கிரசினர் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக அந்த நேரத்தில் இருந்து வந்தனர். இந்த ஆசியப் பிராந்தியத்தில் இந்து மாகடல் பகுதியில் இந்தியா அரசியல், பொருளாதார, சமூக பலத்தைக் கொண்டிருப்பதாகப் பல திட்டங்களை அவர்கள் கொண்டிருந்தார்கள். அதில் ஒன்று தான் பாகிஸ்தானிலிருந்து 1500 மைல்கள் தொலைவிலிருந்த வங்காளதேசம் தனிநாடாக்கப்பட்டமை.

அந்தக் காலத்தில் முஜிபிர் ரகுமான் அவர்களை நாங்கள் நேசித்தோம். அவரது இளைஞர் அமைப்பான “முக்திவாகினி” என்ற இயக்கத்துடன் கூட தொடர்பில் இருந்தோம். அந்தப் போராட்டத்தில் இந்திராகாந்தி எடுத்த மூலோபாயம் மற்றும் இலக்கை நாடி நின்று எடுத்த இராஜதந்திர நடவடிக்கைகள் என்பன அன்று எங்களுக்குப் பல பாடங்களைக் கற்றுத்தந்தன. அதைப் பற்றி விரிவாகச் சொன்னால் நீங்கள் அதனை ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கின்றேன். என்னுடைய புதிய சுதந்திரனில் அதைப் பற்றி எல்லாம் எழுதியிருக்கின்றேன். அதில் நாங்கள் கற்றுக்கொண்ட பாடத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் சிந்தித்தோம். ஐரிஸ் போராட்ட வரலாற்றை சிறையில் இருக்கும் போது நான் படித்தேன். அந்த நூலை மீள ஒப்புவிக்கும் அளவிற்குப் படித்துள்ளேன். விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒத்த மிகப்பெரும் போராட்டம் அது. வங்காளதேசப் போராட்டத்திற்கு முஜிபிர் ரகுமான் தலைமை தாங்கினார். இந்தியா முழுமையாக அதற்கு உதவியது. “முக்திவாகினி” என்ற இளைஞர் இயக்கத்தை அது உருவாக்கியிருந்தது. ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா மற்றும் பொதுவுடமை நாடான சீனா என்பன ஒரே அணியில் நின்று அந்த வங்காளதேச உருவாக்கத்திற்கு எதிராகச் செயற்பட்டார்கள். வங்காளதேசத்தை உருவாக்க இந்திராகாந்தி மிகப்பெரிய இராஜதந்திரத்தைக் கையாண்டிருந்தார். வங்காளதேசத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றால் பாதுகாப்புச் சபை வரைக்கும் ஆதரவு இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமாகப் படிக்க வேண்டிய அனுபவமாக இருந்தது. அது என்னவென்றால் அங்கே இளைஞர்கள் “முக்திவாகினி” என்ற அமைப்பில் போராடினார்கள். இந்திய இராணுவத்துடன் சேர்ந்து பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராகப் போராடினார்கள். பாகிஸ்தான் இராணுவத்திற்கு சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் உதவின.

ஏனென்றால் இந்தியாவின் பூகோள மேலாதிக்கத்தின் காரணமான சூழ்நிலைகள், தந்திரோபாயங்கள் தான் அவை. ஆனால் அடக்கியொடுக்கப்பட பாட்டாளி வர்க்க மக்களாக வங்காளதேச மக்கள் இருந்தார்கள். மேற்குப் பாகிஸ்தான் முதலாளித்துவக் கோட்பாட்டுடன் அமெரிக்காவுடன் சேர்ந்து வர்த்தக, வாணிபங்களில் ஏகாதிபத்திய உலகத்தோடு வேலை செய்தார்கள். அவர்களுடைய அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான 7 கோடிக்கும் மேற்பட்ட வங்காளதேச மக்களின் போராட்டத்தை இந்திராகாந்தி முழுமையாக ஆதரித்தார். அதேபோல, இராஜதந்திரக் காரணங்களும், பூகோள ரீதியான காரணங்களும் வியூகங்களும் அங்கே இருந்தன. அந்த வியூகத்தை வகுத்து வங்காளதேசத்தில் இருந்த பாகிஸ்தான் இராணுவத்தை எதிர்த்து அந்த இளைஞர் இயக்கமும் இந்திய இராணுவமும் போராடி வங்காளதேசத்தின் நகரம் வரை கைப்பற்றி இருந்தார்கள். 90,000 இராணுவ வீரர்களை கல்கத்தாக்குக் கொண்டு வந்திருந்தார்கள். அப்போது முஜிபுர் ரகுமான் சிறைப்பிடிக்கப்பட்டு மரணக் கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்ட போது, பூட்டோ அவர்கள் பலவிதமான நெருக்குதல்களின் விளைவாக அவரைத் தப்பவைத்து விட்டார். இதெல்லாம் நடந்த நிகழ்வுகள். அன்று படித்துக்கொண்ட பாடங்களில் நினைவிலிருப்பதைச் சொல்லுகின்றேன். வங்காளதேசை ஏற்றுக்கொள்ளாமல் சீனாவும் அமெரிக்காவும் பாதுகாப்புச் சபையிலே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். அப்போது இந்தியா ரஸ்யாவுடன் ஒரு நட்பு உடன்பாட்டில் இருந்தது. அப்போது ஈரான் அதனை ஆதரித்திருந்தது. ஆனால் ரஸ்யா பொதுவுடமை நாடு. சீனா தீவிரமான மாவோசேதுங் தலைமையிலான பொதுவுடமை நாடு. ஆனால் பூகோள அரசியல் வியூகங்களைப் பார்த்தால் அடக்கியொடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தைக் கொண்ட வங்காளதேசத்தின் விடுதலைக்கு எதிராக சீனா அமெரிக்காவுடன் சேர்ந்து பாதுகாப்புச் சபையிலே அல்லது நடைமுறை ரீதியாக இராணுவ ரீதியில் பாகிஸ்தானிற்கு ஆதரவாகத்தான் இருந்தது. இதில் உலக அரசியலை அப்போது நாங்கள் படிக்க வேண்டியிருந்தது. இந்திய இராணுவத்தை வங்காளதேசத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று பாதுகாப்புசபையில் பிரேரணையை அமெரிக்காவும் சீனாவும் கொண்டு வந்த போது ரஸ்யா “இரத்து” அதிகாரத்தைப் பயன்படுத்தியது. ரஸ்யாவே முதன் முதலில் வங்காளதேசத்தை அங்கீகரித்தது. நீங்கள் கேட்ட கேள்வியின் அர்த்தத்தை நாம் நிரூபிப்பதானால் இதை நீங்கள் படித்துக்கொள்ள வேண்டும். இப்படியான சந்தர்ப்பங்கள் மிக முக்கியமானவை.

இந்தியாவிற்குப் பின்னணியில் ரஸ்யா இருந்தது. இந்தியாவுடன் ரஸ்யா 20 ஆண்டுகால நட்புறவு உடன்படிக்கை ஒன்றைச் செய்து இருந்தது. அதில் ஈரானும் சேர்ந்து நின்றது. அவர்கள் வ‌ங்காளதேசத்தை அங்கீகரித்தார்கள். அதற்கு மறுபக்கத்திலே பூகோள அரசியலை நீங்கள் பார்க்கலாம். பொதுவுடமை நாடான சீனா ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் சேர்ந்து நின்று ஒடுக்கப்பட்ட வங்காளதேச மக்களின் விடுதலையை எதிர்த்தது. இதிலிருந்த படிப்பினைகள் என்ன? அப்போது தமிழீழம் குறித்து இந்திராகாந்தியிடம் பேசியபோது அவர் சொன்ன விடயம் என்னவெனில் நாங்கள் பல படிகள் கடந்தே அந்த நிலைக்கு வர வேண்டும் என்று. அதற்காக இந்தக்கொள்கையை யாரும் விட்டுக்கொடுத்துவிட்டார்கள் என்றில்லை. இப்பொழுது எங்களிற்கு ஒன்று தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் எமது இலக்கினை அடைய வேண்டுமானால், எங்களுடைய மக்கள் சுதந்திரமடைய வேண்டுமானால், வங்காளதேசத்திற்கு இருந்த நிலைமை கூட எங்களிற்குப் பொருத்தமாக இல்லை. வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து 1500 மைல்கள் தொலைவில் இருக்கிறது. இந்தியாவினுடைய எல்லைக்குள் இலட்சக் கணக்கான மக்கள் அகதிகளாக வந்திருக்கிறார்கள். இந்திராகாந்தி கொண்டிருந்த தத்துவங்கள், அரசியல் கோட்பாடுகள் ஆசியாவில் இந்தியாவின் வல்லாண்மையை நிரூபிப்பதற்கான தீர்மானங்கள் தான். அதன்படிதான் வங்காளதேச விடுதலைக்கு இந்தியா உதவியது. வெள்ளையர்களுக்கு எதிரான தென்னாபிரிக்காவின் விடுதலையினை முதன்முதலில் ஏற்றுக்கொண்டது இந்தியாவே.

சர்வதேச பூகோள அரசியல் நிலைமைகள் எங்களிற்குப் பொருத்தமாக இருக்கின்ற வரைக்கும் நாங்கள் அதைக் கைவிடாமல் பாதுகாத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரு எண்ணம் எம்மிடம் இருக்கின்றது. அதை நீங்கள் இப்பொழுது தெளிவாக உணர்ந்திருப்பீர்கள். ஒரு நாடு சுதந்திரம் பெற வேண்டுமானால் அதை நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். வங்காளதேசத்திற்கு இந்தியா படைகளை அனுப்பியிருந்தாலும் அதனை அங்கீகரித்தது ரஸ்யா. இப்போது ரஸ்யா, சீனா என்பனவும் எங்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றன. இன்னொரு விதமான பூகோள அரசியல் போட்டா போட்டிகள் இந்த நாட்டில் இடம்பெற்று வருவதை நாங்கள் பார்க்கின்ற பொழுது, எமது இலக்கினை அடைய நாங்கள் எவ்வளவு தூரம் சர்வதேச ரீதியில் தந்திரோபாயமாக, ராசதந்திரரீதியாக, பூகோளரீதியான விடயங்களை வென்றெடுக்கத்தக்க விதத்தில் செயற்பட வேண்டுமென்பதைச் சிந்திக்கிறோம். திம்புக் கோட்பாடுகள் எனும் போது அங்கே தமிழீழத்தை நாம் முன்னிறுத்தவில்லை. சில அடிப்படைக் கோட்பாடுகளான தேசம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்பவற்றைக்கொண்டு தான் அந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருந்தோம். தமிழீழம் என்ற கோரிக்கைக்குப் பின்னால் இந்த விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதிலிருந்து சர்வதேச, பூகோள அரசியல் தலையீடுகள், இந்தியாவின் தலையீடு என்பனவற்றால் தான் அதனைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்லச் சந்தர்ப்பங்கள் இல்லாமல் இருந்தது. பல நாடுகளின் தலையீடுகள் இருந்தன. தற்போது, அது ஐ.நா. மாந்த உரிமைப் பேரவைக்குக் கூடச் சென்று விட்டது.

2003 இல் மேற்கொண்ட ஒஸ்லோ பிரகடணத்தையும் நீங்கள் பார்க்கலாம். அந்தக் காலத்தில் அமெரிக்கா விடுதலைப் புலிகளைத் தடைசெய்து இருந்தது. இவ்வாறாகப் பல சர்வதேச அழுத்தங்கள் அந்தக் காலத்தில் இருந்தன. ஏனைய சர்வதேச நாடுகளும் நோர்வே ஊடாக அணுகு போக்கைச் செய்து விடுதலைப் புலிகள் போர்நிறுத்தத்தை அறிவித்ததும் ஒரு பேச்சுவார்த்தைக்கு நோர்வேக்கு அழைக்கப்பட்டார்கள். அப்பொழுது தான் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஸ்டிக் கட்டமைப்பில் தமிழர்தாயகப் பகுதியில் சுயாட்சி அடிப்படையில் அரசியல் தீர்வு வேண்டுமெனப் பேசப்பட்டது. அது நிறைவேறியிருந்தால் விடுதலைப் புலிகளின் பலம், பூகோள அரசியலில் நாங்கள் சாதிக்கக் கூடிய பலம் என்பன பெரிதாக இருந்திருக்கும். எங்களுடைய நிலைமை இன்று வேறானதாக இருந்திருக்கும். ஆனபடியால், அப்படியான சூழ்நிலை எங்களிற்கு ஏற்படும் வரையில் நாங்கள் அதனைக் கைவிட்டோம் என்று சொல்வதோ அல்லது நாங்கள் எங்களுடைய இலக்குகளைக் கைவிட்டோம் என்று சொல்வதோ பொருத்தமில்லை. அந்தச் சந்தர்ப்பம் மீண்டும் வரலாம். அப்போது அதை நாங்கள் மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

நான் முன்பு வங்காளதேசத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தேன். அதற்குப் பின்னரான அரசியல் சூழ்நிலையையும் நாங்கள் இப்பொழுது அடைந்திருக்கின்ற நிலைமையையும் பார்க்கின்ற பொழுது, ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் முன்னர் சிறிலங்கா இராணுவத்தைப் பாராட்டித் தீர்மானம் செய்த மனித உரிமைப் பேரவை தான் இந்த அரசிற்கு எதிராக 41 நாடுகளின் ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24,25 ஆம் தேதிகளில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக, போர்க்குற்றத்திற்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டு வரும் என்று தான் உடன்பட்டோம். ஆனால் அந்தப் போர்க்குற்றத் தீர்மானம் சபைக்குக் கொண்டு வந்தால், தங்கள் தங்கள் நாட்டில் அவை குறித்து வருமாக இருந்தால் அதனை ஆதரிக்க முடியாது எனப் பல நாடுகள் அதாவது 10 வரையிலான நாடுகள் அமெரிக்காவிடம் கூறியது. அப்படியான சூழ்நிலையில் தான் சில சொற்பதங்களை மாற்றிக் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது ரஸ்யா, சீனா போன்ற “இரத்து” அதிகாரம் கொண்ட நாடுகள் எதிர்த்தன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் எம்பக்கம் இருந்திருந்தாலும் போர்க்குற்றத்தை விசாரித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 24 வாக்குகளைப் பெற்று அதனை 2012 இல் கொண்டு வந்தது நாங்களும் அமெரிக்காவும் தான். இப்போது ரஸ்யா, சீனா, இலங்கை உட்பட 47 நாடுகள் ஆதரித்த தீர்மானம் வரைக்கும் நாங்கள் வந்திருக்கின்றோம்.

விடுதலைப் புலிகள் ஆயுதம் தூக்கிப் போராடி சர்வதேச சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட காலம் தான் தமிழர்களின் மிகப் பலமான காலம். ஆயுதம் தூக்கி விடுதலைப் புலிகள் போராடிப் பெற்ற பலமும் சனநாயகரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களுக்கு ஆதரவு கொடுத்தமையுமாக அமைந்த காலம் தான் அதிலும் தமிழர்களுக்கு மிகப்பலம் வாய்ந்த கலமாகக் கணிக்க முடியும். இப்பொழுது அதில் ஒரு பலத்தை இழந்துவிட்டோம் என்று தான் சொல்லுவேன். தோற்றுவிட்டோம் என்று ஒருகாலமும் அந்த வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன். அது இழக்கப்பட்ட சந்தர்ப்பமாக இருக்கலாம். இப்போது புலம்பெயர்ந்த எமது மக்கள் பல வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள். மற்றைய இனங்களில் அது குறைவாக இருக்கலாம். இலங்கைக்கு எதிராக அதாவது இலங்கையைக் கட்டுப்படுத்தி நடக்கக் கூடிய தந்திரோபாயங்கள் கொண்ட தீர்மானத்தை நிறைவேற்றி நடவடிக்கை எடுப்பதற்கான சர்வதேச சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்திருக்கின்றது. அதை நாங்கள் இழந்துபோகாமல் எங்களது இலக்குகளை நோக்கி எங்களது மண்ணை நாங்கள் ஆளுகின்ற சமஸ்டிக் கட்டமைப்பில்… எப்படி எமது மக்கள் 1976 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வாக்களித்தார்களோ……. அதே மக்கள் பல காலகட்டங்களைக் கடந்து வந்திருக்கிறார்கள். நாம் தேர்தல்களில் விடுதலைப் புலிகள் காலத்திலும் அவர்கள் இல்லாது போன இந்தக் காலத்திலும் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆகவே எங்களுடைய மக்களின் அங்கீகாரத்துடன் தான் நாம் இன்றைய அணுகு முறைகளைக் கடைப்பிடித்து வருகின்றோம்.

கேள்வி 5:

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் நிலை 1977 பொதுத்தேர்தலில் எவ்வாறு இருந்தது?

பதில்: மாவை ஐயா

அப்போது அகில இலங்கை தமிழ்க் காங்கிரசைச் சேர்ந்த விநாயகமூர்த்தி கூட்டணியாக எம்முடன் நின்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னிறுத்தி 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலே போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதற்கு மாறாக, குமார் பொன்னம்பலம் தனியாகப் பிரிந்து சென்று தேர்தலில் நின்றார்.

கேள்வி 6:

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது பாராளுமன்ற அரசியலையும் வினைத்திறனுடன் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நிகழ்ந்தது. அதன் உருவாக்கத்தின் போது எழுந்த முரண்பாடுகள், அதன் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்கள், முரண்பாடுகள் களையப்பட்ட விதம், விடுதலைப் புலிகளுடனான உறவு என்பன பற்றிக் கூறுங்கள். தமிழீழ நடைமுறை அரசை நீங்கள் பார்த்த விதம் பற்றிக் கூற முடியுமா? கூட்டமைப்பு சின்ன உருவாக்கத்தில் வீடு, சூரியன் பேசப்பட்டது போல சைக்கிளும் பேசப்பட்டதாமே. அந்த முரண்பாடுகள் களையப்பட்ட விதம் பற்றித் தெளிவுபடுத்துங்கள்.

பதில்: மாவை ஐயா

சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கியதாகச் சொல்கிறார்கள். அது உணர்வுபூர்வமான புரிந்துணர்வு. நான் செய்தேன். அவர் செய்தார். இவர் செய்தார் என இப்போது சிலர் சொல்கிறார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியாக 1976 இல் வட்டுக்கோட்டையில் மாநாடு நடத்தியபோது, திரு.தொண்டமான், தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம் (மாநாட்டிற்கு அவர் வரவில்லை. ஆனால் ஆதரவு தெரிவித்திருந்தார்) ஆகியோர் கூட்டணியின் தலைமைகளாக இருந்தார்கள். சிவசிதம்பரம் ஆகியோர் அதில் பெரும் பங்களித்திருந்தார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானமாகிய சுதந்திர தமிழீழம் என்பதை மலையகத்தில் இருப்பவராகத் தன்னால் சிங்களவர்கள் மத்தியில் இதனை முன்னெடுத்து அரசியல் செய்வதில் சிக்கல்கள் இருப்பதனால் தான் அதைப் பற்றிப் பேசாமல் ஆதரவளிப்பேன் எனச் சொல்லி 1977 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் தொண்டமான் செயற்பட்டார். ஜி.ஜி.பொன்னம்பலம் அந்த மாநாட்டில் கலந்துகொண்டவராகவில்லை. தமிழரசுக் கட்சிதான் அதில் கூடுதலான பங்கை வகித்திருக்கின்றது. காங்கிரஸ் கட்சியிலும் ஒரு பகுதியினர் எங்களோடு நின்றார்கள். விநாயகமூர்த்தி அவர்கள் அதில் தீவிரமாக எங்களுடன் செயற்பட்டார். அதற்குப் பின்னர் இளம் சமுதாயத்தில் கஜேந்திரகுமார் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த 4 கட்சிகளில் ஒன்றான‌ அகில இலங்கை தமிழ்க் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அவர் ஒரு சட்டத்தரணி. அரசியலில் ஒரு பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்டவர். அவர்கள் எல்லோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தபோது கொள்கைரீதியாக முரண்பாடு வந்தது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கஜேந்திரகுமார் அவர்கள் இறுதியாக எம்மிடம் கேட்டது என்னவென்றால் பத்மினி அவர்களுக்கும் செல்வராசா கஜேந்திரன் அவர்களுக்கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்பதே. நான் அல்லது எமது கட்சி கூறியது என்னவென்றால், விநாயகமூர்த்தி அவர்களுக்கும் கஜேந்திரகுமார் அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 4 கட்சிகளில் ஒரு கட்சியான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்ற முறையில் இரண்டு இடங்கள் தரலாம். இதற்கு மேல் உங்களுக்குத் தருவதில் பிரச்சனைகள் இருக்கின்றது என்பதே. கேட்டு விட்டுப் போனவர்கள் திரும்ப வரவில்லை. இதுவே நடந்தது. இப்போது கொள்கைகள் பற்றி பேசுவதென்பது…… பேசலாம். அதைப் பற்றி பிரச்சனையில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்த திரு.தொண்டமான் மற்றும் தந்தை செல்வா மறைந்த பின்பு, ஜி.ஜி.பொன்னம்பலமும் கூட்டங்களுக்குச் சமூகமளிக்காமல் இருக்க இந்தப் பின்னணியில் சிவசிதம்பரம் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரானார். அமிர்தலிங்கம் அப்போது செயலாளரானார். ஆனாலும் அமிர்தலிங்கம் அதில் முக்கியமானவராக இருந்தார். அவர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்திருந்தார். அவரும் அர்ப்பணிப்புள்ள ஒருவர் தான். அதனை யாரும் மறுக்க முடியாது. தமிழர் விடுதலைக் கூட்டணியில் அமிர்தலிங்கமும் அதன் பின்பு சிவசிதம்பரமும் மறைந்த பின்பு திரு. ஆனந்தசங்கரி கூட்டணியின் தலைவரானார். அவர் தலைவராக இருந்த பொழுது, அவருக்கும் அந்த நேரத்தில் கூட்டணியில் இருந்த பிரதிநிதிகளுக்குமிடையில் சில வகையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. அவர் தன்னை முன்னிலைப்படுத்திய அல்லது தனது சொந்தக் கருத்தபிப்பிராயங்களோடு வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார். அதற்கு மேல் அதனைப் பற்றி நாம் பேச வேண்டியதில்லை.

அந்தப் பின்னணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளோடு ஒரு புரிந்துணர்வோடு (ஒன்றாக என்று சொல்ல மாட்டேன்) அந்தத் தேர்தலைச் சந்தித்து 22 பாராளுமன்ற உறுப்பினர்களோடு நாம் பெருவெற்றியடைந்தோம்.

அந்நேரத்தில் விநாயகமூர்த்தி போன்றோர் தங்கள் தங்கள் கட்சிகளை முன்னிலைப்படுத்தவில்லை என விடுதலைப் புலிகளோடு பேசினார்கள். தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் கேட்பதுதான் சரியாகவிருக்கும் என திரு. பிரபாகரன் அவர்களும் ஒரு கருத்தைக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சர்வாதிகாரக் கருத்தாகச் சொல்லப்பட்டது என நாம் சொல்லவில்லை.  அவர்களுக்கிருந்த நம்பிக்கை அது. அவர்களது நம்பிக்கையால் தான் பலரும் இன்றும் அதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் சொல்லப்பட்ட நம்பிக்கை அது தான். தமிழரசுக் கட்சியின் செயலாளராக நான் அப்போது இருந்ததையும் அவர்கள் ஒரு முக்கியமானதாகக் கருதினார்கள். அதை நான் இப்போது பெருமையாகச் சொல்லத் தேவையில்லை.

தமிழரசுக் கட்சியானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கமாக இருந்த போது தனியாக வேலை செய்யாமல் தமிழர் விடுதலைக் கூட்டணியாகவே வேலை செய்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக வந்தபோது, உதய சூரியன் சின்னத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் அப்போது ஒரு நீதிமன்ற வழக்கு வந்தது. திரு. ஆனத்தசங்கரிக்கும் ஏனையோரிற்குமிடையில் அந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவதில் நீதிமன்ற வழக்கு நடந்தது. அதனால் அந்தச் சின்னத்தை விட்டு விட்டுத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டுப் பெரு வெற்றிகளைப் பெற்றிருக்கின்றோம். அதனால் தமிழரசுக் கட்சியின் சின்னத்தின் கீழ் பின்னர் எல்லோரும் வந்திருந்தார்கள். கஜேந்திரகுமார் உட்பட…. திரு. ஆனந்தசங்கரியும் உள்ளூராட்சித் தேர்தலிலே அந்தச் சின்னத்தில் போட்டியிட்டிருக்கின்றார். இவை காலத்தின் தேவைகருதி நடைபெற்றுக்கொண்டிருந்த விடயங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தினாலும் ஏனைய கட்சிகளோடு ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் அதற்கான உடன்பாட்டைக் கூட நாங்கள் எழுதியிருக்கின்றோம். தேர்தலில் தங்கள் தங்கள் கட்சிகளின் பலத்தை நிரூபிப்பது, தீர்மானமெடுப்பது என்பன சகஜமான விடயங்கள். அது ஒரு பெரிய விடயமல்ல. ஆகவே, நாங்கள் இப்படித்தான் இதுவரை இயங்கி வந்திருக்கின்றோம்.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்து நிலைமையை இப்போது அப்படியே கொண்டுசெல்ல முடியாது. அவர்கள் இருந்த காலத்தில் திம்புக் கோட்பாடு என்ற கொள்கைக்கான செயல் வடிவமாக ஒஸ்லோ உடன்படிக்கை செய்தனர். அந்த அடிப்படைகளைக் கொண்டு தான் ஒரு அரசியல் தீர்வு காண முயற்சிக்கின்றோம். சர்வதேச சமூகத்தின் வழிகாட்டலின் படி எங்களுடைய பங்களிப்புடன் தான் ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் வந்தது. அதிலிருந்து நாங்கள் திடீரென்று வெளியேறும் காலம் இருக்கவில்லை. 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேசினார். 24 வாக்குகள் எடுத்தால் தான் அதனை நிறைவேற்றலாம் என்ற சூழ்நிலை சர்வதேச அரசியலில் இருந்தது. ஒரு நாட்டைக் குறித்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தால் தாம் அதற்கு ஆதரவு தர முடியாது என்று பல நாடுகள் விவாதித்தன. ஆனபடியால், 2012 ஆம் ஆண்டு சில பதங்களை மாற்றி தீர்மானத்தைக் கொண்டுவருவதென முடிவெடுக்கப்பட்டது. சொற்பதங்கள் மாற்றப்படுவது பற்றி எங்களிற்குச் சொன்னபோது நாங்கள் மிகவும் மனவருத்தப்பட்டோம். ஆனால் எங்களிற்கு வேறு வழியிருக்கவில்லை. நாங்கள் மனித உரிமைப் பேரவையில் ஒரு உறுப்பும் அல்ல. நாங்கள் ஒரு நாட்டிலுள்ள கட்சி. ஒரு நாட்டு அந்தஸ்து எங்களுக்கு இல்லை. அந்த நாடுகளுக்குள்ளும் அமெரிக்கா அதனை முன்னெடுத்தபடியால் தான் அது வெற்றிபெறக் கூடியதாக இருந்தது. சில நிபந்தனைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. “நாங்கள் அந்தத் தீர்மானத்தை முன்னெடுக்கின்ற போது சிறிலங்கா அரசை வெற்றி பெற விடமாட்டோம். இதனை சிறிலங்கா அரசு தோற்கடிக்கும் சந்தர்ப்பத்திற்கு இடமளிக்க மாட்டோம்” என அமெரிக்கா எம்மிடம் கூறியது. அதனால் நாங்களும் அவர்களுக்குப் பின்னால் செல்ல வேண்டியவர்களாக இருந்தோம். நாங்களும் பலவற்றைப் பேசி இருக்கின்றோம். அவற்றைப் புரிந்துகொண்டு தான் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது பெறுமதி வாய்ந்தது. இன்னும் அதனை விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இருப்பவர்கள் சிலர் அந்தத் தீர்மானத்தை எதிர்த்தார்கள், எரித்தார்கள். அமெரிக்கா கொண்டு வந்த அந்தத் தீர்மானத்தை அவர்கள் எரித்தார்கள். இவர்கள் எல்லாம் எரித்துவிட்டார்கள் என்று நாமும் அப்படியான வகையில் ஈடுபட முடியாது. அந்தத் தீர்மானத்தை எதிர்த்ததற்குப் பின்னால் கஜேந்திரகுமாரும் இருந்தார். இப்படித் தான் சித்தாந்தரீதியாக, சர்வதேச வியூகங்கள் தொடர்பாக எங்களுடைய இலக்கினை அடைவதற்காக சர்வதேச சந்தர்ப்பத்தில் நாங்கள் வேலை செய்யும்போது அவர்கள் வேண்டுமென்று எதிர்த்தார்கள். இதுதான் உண்மை. ஆனபடியால், நாங்கள் அதிலிருந்து உடனே வெளியேற முடியாது.

பத்மினிக்கும் கஜேந்திரனுக்கும் வேட்பாளர் நியமனம் கொடுக்கவில்லை என்பது தான் காங்கிரஸ் வெளியேறுவதற்கு அடிப்படையான காரணமாக இருந்தது. பின்னர் அந்த எதிர்ப்போடு அவர்கள் வேறொரு நிகழ்ச்சிநிரலுக்குச் சென்றார்கள். இது தான் நடந்தது.

நாங்கள் சர்வதேச சமூகத்தோடு ஒன்றுபட்டுச் செயற்பட்டதால் தான் 2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் வந்தது. 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எல்லா நாடுகளும் ஏற்றுக்கொண்டன. இலங்கையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் இதற்குப் பங்களித்திருக்கிறோம். நாங்கள் இதிலிருந்து விடுபட்டிருக்கவில்லை. ஆனாலும் இன்றைக்கும் அதிலுள்ள பல தீர்மானங்களை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அதனால் சர்வதேச நாடுகளிடத்தில் இந்த அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் உண்டு. அல்குசைன் வெளியிட்ட அறிக்கை முக்கியமானது. அதற்குப் பின்னர் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் உயர் ஆணையராக இப்போது வந்திருப்பவர் வெளியிட்ட கருத்து இன்னும் தாக்கமானதாக இருக்கிறது. “இந்த அரசாங்கம் தீர்மானத்தில் சொல்லப்பட்டவையை நிறைவேற்றவில்லை. நாங்கள் ஒரு தவறை விட்டு விட்டோம் போல தெரிகிறது. அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற அறிக்கைகள் திருத்தியமைக்கப்பட வேண்டும்” என அவர் சொல்லியிருக்கிறார். இது ஒரு பெரிய விடயம். இரண்டாவதாக, போர்க்குற்றங்கள் தொடர்பில் ஒரு குழு இலங்கைக்கு வந்தபோது சனாதிபதி, பிரதமரைச் சந்தித்து விட்டு திரு. சம்பந்தன் அவர்களைச் சந்தித்தனர். “நீங்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் இதற்கு வெளியே தீர்மானம் எடுக்க வேண்டும்” என்று அந்தச் சந்திப்பில் சம்பந்தன் சொன்னார்.

இந்த உலக நாடுகளுடைய கருத்தை நாம் இலகுவாகத் தூக்கி வீச முடியாது. ஆனபடியால், சிறிலங்கா அரசு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றாது விட்டால், இலங்கையில் தமிழர்களுக்கு உகந்த ஒரு அரசியல் தீர்வை உருவாக்காது விட்டால், ஏனைய தமிழர்களுடைய சிக்கல்களுக்குத் தீர்வு தராவிட்டால் நாம் உறுதியாக மாற்றுத் தீர்மானத்தை எடுக்க வேண்டி வரும். உதாரணமாக, பான்கிமூன் யாழ்ப்பாணத்திற்கு வந்த போது யாழ் நூல் நிலையத்தில் நாம் அவரைச் சந்தித்தோம். கஜேந்திரகுமார் அப்போது இருக்கவில்லை. “இவ்வளவு சர்வதேச சந்தர்ப்பங்கள் இந்த நாட்டிற்குக் கிடைத்த போதும் இனப் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணவில்லை. இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக எங்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது. இந்த அரசு தொடர்ந்து எங்களை ஏமாற்றுமாக இருந்தால் வடக்கு-கிழக்கில் அரச நிருவாகம் நடைபெறுவதை ஒத்துழைக்காத நிருவாகம் நடைபெற விடாத தீர்மானத்திற்கு நாம் போக வேண்டியிருக்கும். அப்பொழுது நீங்கள் எங்களிற்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என்ற அடிக்கருத்தை அந்தச் சந்திப்பில் சம்பந்தன் பான்கிமூனிற்குச் சொன்னார். இன்றைக்கு நாம் அதைத்தான் எதிர்நோக்கியிருக்கிறோம். இந்த அரசாங்கத்தில் இப்பொழுது சனாதிபதி, பிரதமர் எல்லோரும் ஒன்றுபட்டு எமது இனப்பிரச்சனை தொடர்பில் பேசித் தீர்வுகாண முன்வராதுவிட்டால் நாம் நம்பிக்கையிழந்து…. அந்த நேரத்தில் நாம் எப்படித் தீர்மானம் எடுக்க வேண்டுமென்பது முக்கியமானது. எங்களது அரசியல் கட்சிகளுக்குள் கருத்து மோதல்கள் இல்லாமலிருக்கலாம். சரியான தகவல்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அப்படியொரு தீர்மானம் எடுக்க வேண்டிய சூழலில் அரசியல் கட்சிகள் மற்றும் வெளியிலிருப்போர் என எல்லோரும் ஒன்றுபட்டுத் தீர்மானம் எடுக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. சர்வதேச சமூகத்தினை இணைத்துச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அதன் படி நாங்கள் கட்டாயம் செல்ல வேண்டும். இவை தான் இப்போதுள்ள சிக்கல்கள். சர்வதேச சந்தர்ப்பங்கள் எங்களுக்குக் கிடைக்கும் போது அவற்றை விட்டு விட்டு நாங்கள் தனியாகச் செல்ல முடியாது. உங்கள் அறிவிற்கு நான் சொல்லலாம்………..

உதாரணமாக சர்வதேச சந்தர்ப்பத்தில் அவ்வளவு பலத்துடன் இருந்த விடுதலைப் புலிகள் கூட போரை நிறுத்தி விட்டு ஒஸ்லோ பிரகடன‌த்திற்கு வந்தார்கள். அந்த நேரத்தில் அமெரிக்கா விடுதலைப் புலிகளைத் தடை செய்திருந்தது. அந்த நேரத்தில் ரிச்சட் பௌச்சர் போன்றவர்கள் ஒரு மாநாட்டை நடத்தினார்கள். விடுதலைப் புலிகளைத் தடைசெய்திருந்தமையால் விடுதலைப் புலிகள் அழைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் சர்வதேச சமூகத்தின் பின்னணியில் நோர்வேயில் ஒரு உடன்பாட்டு அறிக்கை வெளியிடப்பட்டது, முன்வைக்கப்பட்டது. அதில் சமஸ்டிக் கட்டமைப்பில் உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் அதிகாரங்கள் முழுமையாகப் பகிர்ந்தளிக்கக் கூடிய ஒரு அரசியல் தீர்மானத்தைப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்பது தான் பேசப்பட்டிருந்தது. 1985 வரை கொள்கை மட்டும் பேசப்பட்டது. திம்புக் கோட்பாட்டில் அடிப்படைக் கொள்கைகள் மட்டுமே பேசப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் ஒஸ்லோவில் அதற்கு ஒரு வடிவம் கொடுக்கப்பட்டது. அதை அரசு நிறைவோடு ஏற்கவில்லை. விடுதலைப் புலிகளும் அதனை மேலும் முன்னெடுக்கவில்லை.

திரு. பிரபாகரன் அவர்களுடன் நேரடியாக இது பற்றி பேசியிருக்கின்றேன். நான் அதிக நேரம் முக்கியமாக அவருடன் பேசுகின்றவன். “நீங்கள் அந்த உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டால் கனடா சமஸ்டி நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளகச் சுயநிணய உரிமைக்கு நாம் உட்படுவோமாக இருந்தால், அது நிறைவேற்றப்படாதிருந்தால் வெளியக சுயநிர்ணய உரிமை எமக்கிருக்கும்” என நான் அப்போது அவரிடம் சொல்லியிருந்தேன். அன்ரன் பாலசிங்கமும் அதைத் தான் சொன்னார். கடைசியில் அவரும் அதிலிருந்து ஒதுக்கப்பட்டவராகவிருந்தார். ஆனபடியால், நிலைமைகளை மதிப்பீடு செய்து தான் நாம் அரசியலை முன்னெடுத்துச் செல்லலாம். கட்சிகள் தங்களுடைய பதவி, அதிகாரங்கள் குறித்து வெளியேறினார்களே தவிர அந்த வெளியேற்றம் எமது இனத்தின் விடுதலை நோக்கியதாக இருக்கவில்லை. அது அவர்களைச் சுற்றியதாகவே இருந்திருக்கிறது. அதை நான் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கேள்வி 7:

விடுதலைப்போராட்டத்தில் சுடுகலன்கள் பேசாநிலைக்கு வந்த காலத்தில் இறுதிநேர வெள்ளைக்கொடி விவகாரம், மூன்றாம் தரப்பு மேற்பார்வையில் சரணடைவு, போர் நிறுத்தம் போன்ற பேச்சுகளில் நீங்கள் என்ன பங்கு ஆற்றியிருக்கிறீர்கள்? அது தொடர்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் உங்கள் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அது குறித்து இதயத் தூய்மையுடன் பதிலளிப்பீர்களா?

பதில்: மாவை ஐயா

அவருடைய குற்றச்சாட்டுகள் உண்மையில் நடந்தவற்றுக்கு மாறானது. அவர் விட்ட தவறுகளும் பலது. ஆனால் எங்களைப் பற்றி அவர்கள் சொன்னதுக்கு நான் புதிய சுதந்திரனில் விளக்கம் கொடுத்திருக்கிறேன். அது என்னவென்றால் போர் நடைபெற்ற காலங்களில் எமது மக்களைப் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக உணவு, மருந்து கொடுப்பதற்காக ராஜபக்ச நிதியமைச்சராக வாற திட்டத்திற்கு பேசுகின்றபோது கூட நாங்கள் பாராளுமன்றத்துக்குள்ளேயே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறோம். போராட்டம் நடத்தியிருக்கிறோம். வெளிக்கு உணர்த்தியிருக்கின்றோம். இரண்டாவதாக போர்க்காலத்தில் போராளிகளுடன், அல்லது தலைவர்களுடன் நாங்கள் தொடர்பிலிருந்தோம். அவர்களுடைய நிலைமைகளை அறிந்து கொண்டிருந்தோம். இறுதிக்கட்டத்தில் நாங்கள் அறியமுடியாமல் போய்விட்டது. மன்னார் வரைக்கும் இலங்கை இராணுவம் முன்னேறி வந்த வரைக்கும் நன்கு தெரியும். இந்திய நாட்டினுடைய முக்கியமான அமைச்சராக இருந்த சிதம்பரம் அவர்கள் விடுதலைப்புலிகளுடன் ஒரு பேச்சுவார்த்தைக்கு…..; விடுதலைப்புலிகளையும் அரசாங்கத்தையும் ஒரு பேச்சுவார்த்தைக்கு அழைக்க ஒரு முயற்சி எடுத்திருந்தார். அது வெளிப்படையாக பின்பு தெரிய வந்தது. அவர் காரைக்காலிலே ஒருமுறை பேசுகின்றபோது விடயங்களை நல்ல தெளிவாகச் சொன்னார். அந்தநேரத்தில் உண்மையில் ராஜபக்ச தான் வெல்லுவேன் என்று நினைக்கவில்லை. அதில் இந்திய நாட்டில் திரு.சிதம்பரம் அவர்கள் எடுத்த நடவடிக்கை மட்டுமல்ல நெதர்லாந்து நாட்டினுடைய தூதுவர் ராஜபக்சவுடன் நல்ல நட்பாக இருந்தவர். அவர்கூட விடுதலைப் புலிகளுடைய இடங்களுக்குச் சென்று ராஜபக்சவினுடைய நிலைப்பாடுகளைச் சொல்லி பிரபாகரன் அவர்களையும் ராஜபக்சவையும் பேச வைப்பதற்கு முயற்சி எடுத்திருந்தார். ஆனால் அது கைகூடவில்லை என்பதனை நான் இப்போது சொல்லலாம். இரண்டாவது இந்திய நாட்டின் சார்பில் சிதம்பரம் அவர்கள் மன்னாருக்கு இராணுவம் முன்னேறி வருகின்ற நேரத்தில் போரை நிறுத்தி விடுதலைப்புலிகளையும் ராஜபக்சவினையும் பேச வைப்பதற்கு எடுத்த முயற்சியும் கைகூடி வரவில்லை. முயற்சிகள் எடுத்தமை உண்மையானது. அது எங்களுக்குத் தெரியும். இறுதியாக அந்தப் போர்க்காலங்களில் அங்கிருந்தும் எங்களுக்கு கிடைக்கின்ற தகவல்களை ஒட்டி பாராளுமன்றத்திலும் நாங்கள் ராஜதந்திரிகள் மட்டங்களிலும் நிச்சயமாக எல்லோரும் பேசி வந்திருக்கிறோம். நிலைமை மோசமாக இருக்கிறது. எனவே உடனடியாகப் போரை நிறுத்த வேண்டுமென்று சர்வதேச இராஜதந்திர ரீதியாக நாங்கள் செயற்பட்டோம். அப்படித்தான் நாங்கள் செயற்படலாம். ஆனால் ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகள் சார்பிலே தமிழ்ச்செல்வன் அப்போது இறுதிக்கட்டத்தில் உயிருடன் இல்லை. நாங்கள் இந்தியாவுடன் சென்று பேசி போரை நிறுத்தவேண்டுமென்று முயற்சி எடுத்தபொழுது நடேசன், புலித்தேவன் ஆகியோர் ஒரு செய்தியை எங்களிடம் சொன்னார்கள். அதாவது, இந்திய அரசாங்கத்துடன் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது என்ற கருத்தை எங்களிடம் சொல்லியிருந்தார்கள்.

அந்தச் சந்தர்ப்பத்தில் கஜேந்திரகுமாரும் எங்களுடன் இந்தியாவுக்கு வருவதாகத்தான் தீர்மானம் எடுத்திருந்தோம். இறுதியாக அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அவர் வராமல் விட்டுவிட்டார். நாங்கள் இந்தியா சென்றோம். அப்போது இந்தியாவில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் சிதம்பரம் அவர்கள் தோற்றுப்போனார் என்று கூட செய்திகள் வந்தன. அந்தக் காலகட்டத்தில் நாங்கள் போய் விடுதலைப்புலிகளினுடைய கருத்தையும் நாங்கள் மனதிலே கொண்டு யுத்த காலத்தினுடைய நிலைவரங்களையும் நாங்கள் அவதானித்துக்கொண்டு இந்தியாவுக்கு டெல்லிக்கு சென்று நாங்கள் அப்பொழுது அரசியல் தலைவர்களைச் சந்திக்காமல் தீர்வுகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய அதிகாரிகளை நாங்கள் சந்தித்து, செயலாளர்களைச் சந்தித்து நாங்கள் எங்களுடைய நிலைப்பாடுகளைச் சொல்லியிருந்தோம்.

அப்போது எங்களுக்கு பிரான்ஸ் தூதுவர் நெதர்லாந்து தூதுவர் பிரான்ஸ் மருத்துவர்கள் மூலம் எங்களுக்கு கிடைத்த செய்திகள் மிகக் குறிப்பாக அரசாங்க இராணுவத்தரப்பினர் கொத்துக்குண்டு என்ற சொல்லக்கூடிய cluster bombs, thermobaric bombs  நல்ல நினைவு இருக்கிறது. அடுத்தது phosphorus gas குண்டுகள்……இவற்றையெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நாங்கள் ஆவணமாக வைத்திருந்தோம். அதை நாங்கள் இந்தியாவிடம் சொல்லியிருக்கின்றோம்.  இராஜதந்திரிகள் அந்தத் தகவலை அறிந்திருந்தார்கள். நாங்கள் அவர்களிடம் சொல்லியிருந்தோம். இது மிக மோசமாக மக்களை அழித்துவிடக்கூடிய போரை, கொடூரமாக மக்களை அழித்துவிடக்கூடிய நிலைமைக்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்று நாங்கள் திட்டவட்டமாகச் சொல்லியிருந்தோம். யாரும் மறுக்கமுடியாது. அந்த நேரத்தில் நாங்கள் டெல்லியில் இறங்குகின்ற பொழுது நேரு மண்டபம் என்று நான் நினைக்கின்றேன். அங்கே எங்களுக்கு இந்திய வெளியுறவுத்துறையின் அனுசரணையோடு நாங்கள் ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தியிருந்தோம். 60 பேருக்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் அதில் குறிப்பாகச் சர்வதேசப் பத்திரிகையாளர்கள் அதிகமாகக் கூடியிருந்தார்கள். எங்களுடைய அந்த பத்திரிகை அறிக்கையை, அவர்களுடன் நாங்கள் அன்றைக்கு நாங்கள் பேசிய விடயங்கள் அன்றைக்கே வெளியே வந்திருந்தது. இது இரகசியமான விடயம் அல்ல. அதற்கு நாங்கள் cluster bombs, thermobaric bombs, phosphorus gas பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்களைச் சொல்லி இந்தப்போரை நிறுத்த சர்வதேசம் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரியிருந்தோம். இந்தியா தலையிட வேண்டும் என்ற அழைப்பை நாங்கள் பகிரங்கமாக விட்டிருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு கஜேந்திரகுமார் வந்திருக்கவில்லை. அவர்கள் நடேசன், புலித்தேவன் சொல்லுகிறார்கள் என்று விட்டுவிட்டார்.

ஆனால் நான் சொன்னேன் நான் எடுத்த முடிவு, நாங்கள் அங்கே போய் பேசுவோம் என்று தான் சொல்லியிருக்கின்றேன். அது கஜேந்திரகுமாருக்கும் நிச்சயமாக தெரியும். நடேசன், புலித்தேவன் ஆகியோர் அப்படி நினைத்தமைக்குக் காரணம் என்னவெனில் தமிழ்நாட்டிலிருந்த தலைவர்களுடைய உத்தரவாதம் மற்றும் அமெரிக்க பசுபிக் கொமாண்ட் முல்லைத்தீவில் அகதிகளுக்கு உதவியாக இருக்கும் என்ற பல செய்திகள் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கப்பட்ட அந்த சந்தர்ப்பத்தில் அந்த நம்பிக்கையுடன் தான் இந்த நெருக்கடியில் முனைப்புக் கொண்டதாக இருந்தது. அதை நாங்களும் அறிந்திருந்தோம். ஆனால் அந்த சம்பவங்கள் சாத்தியப்படாத நேரத்தில் தான் நாங்கள் அறிந்த செய்திகளின் படி, நாங்கள் அவர்களுடன் தொடர்பிலிருந்தமையால் அவர்கள் மிக நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றார்கள் என்பதனை நாங்கள் உணர்ந்திருந்தோம். அந்த நேரத்தில் தான் நாங்கள் இந்த உண்மையை டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பகிரங்கமாக அறிவித்திருந்தோம்.

அதுதான் நாங்கள் எடுத்த ஒரு பலம் வாய்ந்த சக்திமிக்க நடவடிக்கையாக இருந்தது. அதைவிட எங்களுடைய கையில் வேறு எதுவும் இருக்கவில்லை. அந்த நேரத்தில் தான் கஜேந்திரகுமார் அவர்கள் நாங்கள் இந்தியாவிலே இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் ஒரு முயற்சியில் இறங்கியிருந்தார்;. சரணடையிற முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதில் “அண்ணை நிலைமை மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது” என எனக்கு அவர் சொல்லியிருந்தார். நான் அப்போது திருச்சியில் இருந்தேன். நாங்கள் எப்படியாவது இதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று எங்களைக் கேட்டிருந்தார். ஆனபடியால் இந்தியாவில் அங்கே நாங்கள் பேச வேண்டியிருந்தது. உண்மையில் அதுதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்திய தூதுவர் பிரசாத்திடம் அவர் தொடர்புகொண்டிருந்தார். அங்கே மலேசியாவிலிருந்த கே.பி என்பவர் தான் ஒருபெரும் சாட்சியாக இருந்திருக்கிறார். அவர் எப்பிடி சொல்லப்போகின்றாரோ எனக்கு தெரியாது. ஆனால் கே.பி அதில் சம்மந்தப்பட்டிருக்கிறார். அன்று ஒருநாள் இரவு முழுவதும் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் நாங்கள் சிதம்பரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். கலைஞர் கருணாநிதியுடன் பேசி அரசாங்கத்தைத் தலையிட வைக்கவேண்டும் என்று முயற்சித்திருக்கிறோம். சிதம்பரம் அவர்களிடம் கலைஞர் அவர்கள் என்னுடன் பேசும்படி தொடர்பை ஏற்படுத்தியிருந்தார்.  நான் பிறகு சம்மந்தன் அவர்களை அங்கே சென்னையில் .அவரைத் தொடர்புபடுத்தி பேசுவதற்கு வைத்திருந்தேன். அப்பொழுது இந்த சரணடையிற பிரச்சினை கூட பேசப்பட்டது. அதற்காகத்தான் பேசப்பட்டது.  அதாவது கௌரவமாக சரணடைய வேண்டும் என்ற பேச்சுவார்த்தை. ஆனால் அந்த நிலைமையில் யார் தலையீடு செய்திருந்தார் என்றால் அது கஜேந்திரகுமார். அது பிழையென்று இப்பொழுது நாங்கள் கருதவில்லை. கஜேந்திரகுமார் தான் இந்திய தூதுவரோடு தொடர்பு கொண்டிருந்தார். திரு. சம்பந்தனோடு தொடர்புகொண்டு மற்றைய நாடுகளின் ஆதரவைப் பெற்றுத் தரும்படியும் மற்றைய நாடுகளுடன் பேச வேண்டும் என்றும் கேட்டிருந்தார். .அவரே பின்பு மின்னல் ரங்காவினுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கின்ற பொழுது நான் கூறிய ஒரு கூற்றைக்கொண்டு பதிலளித்திருக்கிறார். “ஆம் நான் பேசினேன் நான் முயற்சித்தனான் தான். சம்பந்தன் அவர்கள் சொன்ன அடிப்படையில் தான் நான் அமெரிக்க தூதுவரோடு, பிரிட்டிஸ் தூதுவரோடு எல்லாம் பேசினேன்” என்று கூட அந்த நிகழ்ச்சியில் கஜேந்திரகுமார் வெளிப்படுத்தியுள்ளார்.  அது பகிரங்கமாகச் சொல்லப்பட்ட விடயம். அதற்கு நாங்கள் அப்பொழுது எங்கள் மீது எதாவது குறை என்று பேசுவது உண்மைக்கு மாறான விடயம். கே.பி அவர்கள்….. நான் நினைக்கிறேன் அந்த இரவு கிட்டத்தட்ட 20 -25 தடவைகள் நானும் கஜேந்திரகுமாரும் பேசியிருக்கின்றோம். நானும் அவரும் அழுதனாங்கள் என்று கூட மின்னல் நிகழ்ச்சியிலே அவர் சொல்லியிருக்கிறார். சரணடைவதை எப்படியும் கௌரவமாக நடத்த வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பிரபாகரன் அப்படி சரணடைந்திருக்க மாட்டார் என்பது என்னுடைய நம்பிக்கை. ஆனால் ஏனையவர்கள் சரணடைவதைப் பற்றி பேசியிருக்கிறார்கள். யார் அதில் இருக்கிறார்கள். யார் அதில் இருக்கவில்லை என்று வருவதற்கு நான் இப்போது ஆயத்தமாக இல்லை. நான் அதிகமாக இந்தக் கேள்வியை என்னிடம் எழுப்புவர்கள் மீது பிரபாகரனைப் பற்றி கேள்வி கேட்கின்ற போது அவர் உயிருடன் இருந்தால் எனக்கு தொடர்பு இருந்திருக்கும் என்று தான் பதில் சொல்வேன். அவ்வளவு தான் என்னுடைய வார்த்தை. ஆனால் பல மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றது. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த இடத்தில் திரு.கஜேந்திரகுமார் அவர்கள் தொடர்புகொண்டிருந்தது பசில் ராஜபக்சவோடு. இரண்டு நாட்களாகப் பேசியிருக்கிறார்கள். ராஜப்பு ஜோசப் அவர்களும் பசில் ராஜபக்ச அவர்களும் கஜேந்திரகுமார் அவர்களும் கிளிநொச்சிக்கு போவதாகத் தீர்மானித்தார்கள். சரியான முறையில் கௌரவமாக சரணடைய வைக்கவேண்டும் என்பதற்காக. அதற்காக எங்களுடனும் அதைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அப்பொழுது இந்திய தூதுவராக இருந்த பிரசாத் அவர்கள் இதில் அவ்வளவு தூரம் உண்மையாகச் செயற்பட்டார் என்று சொல்ல முடியாது. அவருடன் நாங்களும் பேசினோம். அவர் அடுத்த நாள் காலையில் என்னுடன் பேசினார். 16ந் தேதி வரையில். மே மாதம் 16ந் தேதி 17ந் தேதி நடந்த சம்பவம் இது…… கலைஞர் கருணாநிதியுடன் பேசவேண்டும் என்று திரு. சம்பந்தன் அவர்கள் என்னிடம் கேட்டார். நான் பேசினேன். அவர் அப்போது தேர்தலில் வெற்றிபெற்று டெல்லியோடு பேசுவதற்கான கூட்டங்களில் இருந்தார். பிறகு சிதம்பரத்துடன் நாங்கள் பேசினோம். சிதம்பரம் தான் உதவுவதாகச் சொன்னார்.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் மற்றும் கௌரவமாகச் சரணடைய வேண்டும் என்ற விடயத்தில் தங்களுக்கு விடுதலைப்புலிகள் சார்பிலே ஒரு கடிதம் வேண்டுமென்று சிதம்பரம் எமக்குச் சொன்னார். கேபி அவர்கள் என்னுடன் தொடர்ச்சியாக விடியுமட்டும் பேசிக்கொண்டிருந்தவர். தொடர்ச்சியாக பேசியவர். நாங்கள் இதனைக் கூறிய போது அவர் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார். அதற்காகத் தான் சொன்னேன் பிரசாத் எவ்வளவு தூரம் நேர்மையாக நடந்திருக்கிறார் என்று எனக்கு சந்தேகம் இருக்கிறதென்று. கஜேந்திரகுமார் அவர்களுடன் அன்று முதல் நாள் மாலையிலிருந்து அவர் பேசாமல் விட்டிருக்கிறார். நான் திருப்பி எடுத்தபொழுது விடிய நான்கு மணிக்கு சொன்னார் அந்த கடிதம் தனக்கு பிந்தித்தான் கிடைத்ததென்று. சிலவேளை இருக்கலாம். அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை ஆகிவிட்டது. தேர்தல் முடிந்து வெற்றிகள் தோல்விகளைப் பற்றி செய்திகள் அறிவித்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் இது நடந்தது. இலங்கை அரசாங்கமும் அந்த நேரத்தைத் தெரிவு செய்திருக்கிறார்கள். இது எல்லாவற்றையும் நாங்கள் அறிந்திருந்தோம். விடுதலைப்புலிகள் ஏதோ ஒரு நம்பிக்கையோடு கடைசிவரைக்கும் ஈடுபட்டார்கள். மிகவும் துக்ககரமான சூழல். நிலைமை அப்படி சரணடைய வேண்டும் என்று ஏற்பட்ட நிலைமை தவிர்த்திருக்க முடியாததாக இருக்கலாம். அடுத்தது லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது அதுக்கு காரணம். அரசாங்கம் திட்டமிட்டு, இராணுவம் திட்டமிட்டு cluster bombs, thermobaric bombs, phosphorus gas போன்றவை பயன்படுத்தியமை தான் முக்கியமான காரணம். முகாம்களுக்குள் இருக்கிறவர்கள். No fire Zone என்ற பாதுகாப்பான வலயங்களுக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு அவர்கள் அதனை வீசியிருக்கிறார்கள்.  இதை எவரும் மறுக்க முடியாது. அப்படிச் செய்தார்களென்று இராஜதந்திரிகளிடத்திலே, நாடுகளிடத்திலே நாங்கள் வாதிட்டிருக்கிறோம். ஆனால் அந்த சரணடைய வேண்டும் என்ற விடயத்தில் இவ்வளவு விடயத்தையும் கே.பி அவர்களுடன் கஜேந்திரகுமாருடன் நாங்கள் பிறகு கருணாநிதியுடன் சிதம்பரத்துடன் அதை கௌரவமாக நடத்துவதற்கு பேசிக்கொண்டிருந்த நேரத்தில் பசில் ராஜபக்ச அன்றைக்கு மாலை வரை அவர் கஜேந்திரகுமார் அவர்களுக்கு சரியான பதிலைச் சொல்லவில்லை. கிளிநொச்சிக்குப் போகவேண்டும் என்ற செய்தியை அவர்கள் முன்னெடுக்கவில்லை. ஏனென்றால் நிலைமைகள் படுமோசமாக மாறிவிட்டது முல்லைத்தீவில். அவர் இறுதியாகக் கஜேந்திரகுமாருக்கு சொன்ன விடயம் ராஜபக்ச அண்ணன் வருகிறார். வந்ததுக்கு பிறகு தீர்மானிக்கலாம் என்று. அவர் வந்து விமானத்தில் இறங்கினவுடன் அவர் செய்த வேலை மண்ணில் முத்தமிட்டது. அது ஒரு நிலைமையில் அவர் ஏன் அப்படி செய்திருக்கிறார் என்று நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அவ்வளவு நெருக்கடிகள் அங்கே ஏற்பட்டு விட்டது. அந்த நிலைமையில் அதோடு அந்த முயற்சி நிறைவேறாமல் போய் விட்டது. அந்த முயற்சியை அதில் தொடர்பாடலில் இருந்த நேருவினுடைய மகன் சந்திரநேரு அவர்களுடன் தொலைபேசியில் skype இல் பேசிக்கொண்டிருந்த திரு. நடேசன் அவர்கள் அந்த செய்தியை பரிமாறிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திரு.சம்பந்தன் அவர்களிடமும் என்னுடனும் பேசிய சந்திரநேரு அவர்கள் அமெரிக்க, ஆபிரிக்க தரப்பினர், சுவிஸ் தரப்பினருடன் தொடர்புபடுத்தியிருக்கிறார்.  அந்தநேரத்திலே பசில் ராஜபக்சவினுடைய தரப்பில் சொல்லப்பட்டது என்னவெனில்……. அவர்களை இன்னொருவருடைய பெயர்….. அதனை நான் மறந்துவிட்டேன்…… சில போராளிகள் சரணடைந்தார்கள் என்றும் வெள்ளைக்கொடியை பிடித்துக்கொண்டு வாருங்கள் என்றும் அவர்கள் ஆலோசனை சொன்னதை சந்திரநேரு அவர்கள் நடேசன் அவர்களுக்கும் பலித்தேவன் அவர்களுக்கும் சொல்லியிருக்கின்றார். அப்படிச் சொல்லிவிட்டு இறுதியாக சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யார் தப்பியிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. உண்மையில் வெள்ளைக்கொடியைப் பிடித்துக்கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு அவர்கள் சுட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இறுதியான செய்தி. அந்த செய்தியை சந்திரநேரு எங்களுடன் தொடர்புபடுத்தி கதைத்துவிட்டு சம்பந்தன் அவர்களுடைய கருத்துப்படி அவர் அமெரிக்க தூதுவரிடத்தில், பிரிட்டிஷ் தூதுவரிடத்தில் சுவிஸ்சர்லாந்து தூதுவரிடத்தில் அதைப் போய் உரைத்திரைக்கிறார். அவர் அதை ஐ.நாவினுடைய அந்த விசாரணைக் குழுவிடத்தில் பதிவுசெய்திருக்கிறார். அது இரகசியமல்ல. அது இணையத்தளங்களில் வெளியே வந்துவிட்டது.

ஆனால் இதில் முக்கியமாக அதை செயற்படுத்தியிருக்க வேண்டியது திரு.கஜேந்திரகுமார் என நான் கூறிவிட்டேன். நான் அதை சொல்லிவிட்டேன் என்பதனால் தான் அவர் என்னைக் குறை கூறுகிறார். அவர் இல்லாத உண்மைகளுக்கு மாறான விடயங்களைத் தேர்தல் காலத்தில் பேசியபடியால் நான் இதனைச் சொன்னேன். “சரி சந்திரநேரு செய்த வேலையையாவது நீர் செய்திருக்கலாம் தானே” என்று நான் கஜேந்திரகுமாரிடம் கேட்டிருந்தேன். அதுதான் அந்த பிரச்சினைக்குரிய செய்தி. அதற்குமேல் நான் சொன்னேன். அவர் அம்மாவின் மேல் சத்தியம் செய்தபோது எனக்கு கவலையாக இருந்தது உண்மையில்….  நான் அதைப் பேசாமல் விட்டிருக்கலாம் என்று கூட யோசித்தேன்.  நான் இறுதியாக நல்லூர்க் கூட்டத்தில் பேசியபோது கூட நான் இனி அப்பிடி பேசவில்லை… நான் சொல்லமாட்டேன்.. என்று சொல்லியிருக்கிறேன்.  நாங்கள் இரவு முழுவதும் தொடர்பிலிருந்தவர்கள். இரண்டுபேரும் அழுதனாங்கள் உண்மையிலேயே. அதுதான் நடந்தது. ஏன் அவர் இப்படிச் சொல்லுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. எங்களுக்கு எதிராக அவர் சொன்ன விடயங்கள் அந்த அடிப்படையில் தான். அதை நான் உண்மையிலேயே கவலையோடு தான் பரிமாறிக்கொண்டிருந்தேன். அதுக்காக நான் அவரை இரண்டுபேரும் கண்ணீர் விட்ட கதையை நான் கதையாகச் சொல்லவோ குற்றமாகச் சொல்லவோ நான் ஆயத்தமாக இருக்கவில்லை. அதுதான் உண்மையானது. அவர் அதைச்செய்திருந்தால் சந்திரநேரு அவர்களை விட கஜேந்திரகுமார் அவர்கள் அந்த செய்தியை முன்னெடுத்திருந்தால் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக இருந்திருக்கும் என்பதுதான் எனது கருத்தாக இருக்கிறது.

கேள்வி 8:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பாக இருந்த பழம்பெரும் அரசியல் கட்சியான தமிழ் காங்கிரஸ் அதிலிருந்து வெளியேறியமை, அதைத் தொடர்நது கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்யுமாறு சுரேஸ் பிரேமச்சந்திரன் பாரிய அழுத்தங்களை கூட்டமைப்பு தலைமைகளுக்கு கொடுத்தமை, தமிழரசுக்கட்சி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் எதேச்சதிகாரத்துடன் செயற்படுகின்றது என்பது குறித்துதொடர்சியாகக் கூறப்படுவன பற்றித் தெளிவுபடுத்துங்கள்.  

பதில்: மாவை ஐயா

இப்பொழுது அந்தக் கேள்விகள் அதிகமாக இடம்பெறுவதில்லை. விடுதலைப் புலிகள் காலத்திலே தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று எல்லோரும் முடிவெடுத்துத் தேர்தலிலே வெற்றியீட்டி வந்திருக்கிறோம். அப்பொழுதெல்லாம் கூட்டமைப்பைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற கருத்து இருந்ததில்லை. பதியக் கூடாது என்று நாம் சொல்ல வரவில்லை. ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டு அதன் படி செயற்படுவோம் என்று நாம் இறுதியாக ஒரு தீர்மானம் எடுத்தோம். மாகாண சபையில் அல்லது இன்னொரு இடத்தில் பதவி வகிப்பவர்கள் பாரளுமன்றத் தேர்தலில் வேட்பாளார்களாக நியமிக்கப்படாமல் இருப்பது நல்லது என்று கூறி கடைசியாக நாம் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையைத் தயாரித்தோம். சிலர் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் தான் அதனைப் பிரேரித்திருந்தோம். அப்பொழுது அந்த உடன்படிக்கை கையெழுத்திடப்படாமல் இருந்தது. ஆனால் அதன்படி நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம். தமிழரசுக் கட்சிச் சின்னம் என்பதற்காக மட்டுமல்ல தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும் மக்கள் வாக்களித்து வருகிறார்கள். அதிலும் வெளிநாடுகளில் இருக்கும் எம்மவர்கள் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நாங்கள் அங்கே செல்லும்போது அவர்களது ஆதரவுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதனால் பதியாதமையைக் காரணமாகச் சொல்லுவது ஏன்? அப்படிப் பதியாத காலத்தில் மக்கள் பெருமளவில் வாக்களித்து நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். அதாவது தமிழரசுக் கட்சி ஒரு கட்சியாகவும் ஏனைய கட்சிகள் ஒன்றாகவும் கூடி முயற்சிகள் எடுத்ததையும் நாங்கள் அறிகிற பொழுது அது எங்களைத் தனிமைப்படுத்துவதாக இருந்துவிடக் கூடாது. ஒரு கட்சி அதில் விருப்பம் கொள்ளாது இருந்தால் நாம் கூட்டமைப்பைப் பதிவது சாத்தியமானதல்ல. ஆனால் அதற்கான புரிந்துணர்வுடன் நாம் செயற்படலாம் என்பதனை ஏற்றுக்கொண்டு தான் தேர்தல்களில் போட்டியிடுகிறோம். இப்போதும் புரிந்துணர்வு அடிப்படையில் செயற்படுவோம் என்று தான் சொல்கிறோம். இப்பொழுது சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியே சென்று முன்பு எங்களோடிருந்த காலத்தில் பெற்ற வாக்குகளை விட மிகக் குறைந்தளவு வாக்குகளைப் பெறும் நிலையை அடைந்திருக்கிறார். அவரைத் திட்டமிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கருத்து எம்மிடம் இருக்கவில்லை. இருக்கின்ற சூழ்நிலைகளை ஆராய்ந்து முடிவெடுக்கிறோம். தேசியப் பட்டியல் விடயங்களிலும் அப்படித்தான் செயற்படுகின்றோம். இணக்கமான உடன்பாடான நிலைமைகள் தொடருமாக இருந்திருந்தால் நாங்கள் தீர்வுகளைக் கண்டிருக்கலாம். அந்தத் தீர்வுகளுக்கு இடமில்லாமல் திரு.விக்கினேஸ்வரன் அவர்களைச் சந்தித்து (முன்பெல்லாம் அவரை விமர்சித்து மாவையாகிய நான் வர வேண்டும் என்று ஆதரவு தந்தவர்கள்) சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர்களுக்கு எதிராகச் செயற்பட்டு அவர்களைத் தோற்கடிக்க விக்கினேஸ்வரன் தலைவராக வர வேண்டும் என்று சொல்லி தன்னை சுரேஸ் பிரேமச்சந்திரன் இருமுறை சந்தித்துக் கேட்டுக் கொண்டதாக விக்கினேஸ்வரனே என்னிடம் தெரிவித்திருக்கிறார்.

அப்படியென்றால் எப்படி நாங்கள் இணைந்து ஒரு கட்சியில் வேலை செய்ய முடியும்? இதுதான் இடம்பெற்றிருக்கிறது. நாங்கள் எல்லோரும் ஒரு இணக்கத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதை நிராகரிக்கவில்லை. இப்பொழுது விக்கினேஸ்வரன் அவர்களுடன் கூட சேர்ந்து நிற்க முடியாமல் இருக்கின்றனர். உள்ளூராட்சித் தேர்தலில் ஆனந்தசங்கரியுடன் சேர்ந்து அந்தத் தேர்தலில் என்ன நிலையை அடைந்திருக்கிறார்கள் என்று தெரியும். இந்தத் தேர்தல் முறையில் எல்லோரும் வாக்குகளைப் பெற்றிருக்கலாம். அதை வைத்துக் கொண்டு எங்களைத் தோற்கடித்து விட்டதாக யாரும் சொல்ல முடியாது. 40 சபைகளிடத்தில் தனித்த பெரும்பான்மைக் கட்சியாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதும் இருக்கிறது. அவர்கள் ஒரு இடத்தில் கூட தலைவராக வர முடியவில்லை. வந்த சந்தர்ப்பங்களைக் காங்கிரஸ் கட்சியினர் இழந்திருக்கிறார்கள். இது தான் நிலைமை. அதற்காக நாம் தோற்றுவிடக் கூடாது என்றோ அல்லது தோற்க மாட்டோம் என்றோ அல்லது வெற்றி பெற மாட்டோம் என்றோ விவாதித்துக்கொண்டிருக்கவில்லை. உலகில் மக்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றவர்கள் தோற்றிருக்கிறார்கள். தோல்வியடைந்தவர்கள் வென்றிருக்கிறார்கள். இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமான விடயங்கள் தான். ஆனபடியால், நாம் இப்பொழுதும் கோட்பாட்டு அடிப்படையில், கொள்கை அடிப்படையில், ராஜதந்திர அடிப்படையில் ஒரு புரிந்துணர்வோடு வேலை செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறோம்.

கேள்வி 9:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியின் மேலாண்மை என்றதோடு, தமிழரசுக்கட்சிக்குள் சுமந்திரனின் மேலாண்மை உள்ளதாக செய்திகள் தொடர்ச்சியாக வருகின்றன. அரசியலமைப்பு உருவாக்க வழிகாட்டல் குழுவில் இருக்கும் இரண்டே இரண்டு தமிழ் அரசியல்வாதிகளாக சம்மந்தன் மற்றும் சுமந்திரன் இருக்கையில், மேற்கு நலன்கட்கு அருட்டப்பட்டவராக, மேற்கின் நிகழ்ச்சிநிரலில் சுமந்திரன் இயங்குகிறார் என்றும் ஊடகங்களில் பல சர்ச்சையான பேச்சுகளை அவர் பேசும்பொழுது, அவரது மேலாதிக்கத்தைத் தாண்டி, தமிழ்த்தேசிய அரசியலில் நெடுங்காலம் பாடுபட்டு சிறையும் கண்ட நீங்கள் தமிழ்மக்களின் மனங்களை வென்றெடுக்கும் வகையில் எந்த எதிர்வினையும் ஆற்றாமலிருப்பது, தமிழ்த் தேசியத்தை நெஞ்சில் சுமப்பவர்களுக்கு வருத்தமளிப்பதாக உள்ளது. இதைச் சரிசெய்ய நீங்கள் முனையவில்லையா?

 பதில்: மாவை ஐயா

வெளியிலிருந்து குற்றம் சுமத்துபவர்களின் பாணியில் நான் குற்றஞ் சுமத்தவில்லை என்பது சரி. சமந்திரன் தன்னுடைய சொந்தக் கருத்துகளையும் பல உண்மைகளையும் வெளியில் சொல்கின்ற பொழுது பத்திரிகைகளில் அவை புனைந்துரைக்கப்பட்டு அதில் உண்மையில்லாத செய்திகளைப் போட்டு அதைக் கட்டுரையாக்கி சுமந்திரனுக்கு எதிராக வெளியிடப்படுகிறது. அவர் ஒரு சிறந்த வழக்கறிஞராக, மொழியாற்றலுள்ளவராக இருக்கின்ற காரணாத்தினால் அவரை நாங்கள் பேச்சாளராக நியமித்திருந்தோம். அவர் தன்னுடைய கருத்துகளை முன்வைப்பதுதான் சில முரண்பாடுகளை உருவாக்கியிருக்கிறதே தவிர அவர் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் பிழையென்று யாரும் சொல்ல முடியாது. அதைப் பத்திரிகைகள் கையாண்டிருக்கிற விதமும் அவருக்கு எதிரானதாகத்தான் மாறி இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாம் வலிந்துதான் சுமந்திரனைக் கூட்டிக்கொண்டு வந்தோம். அவரும் திரு. கனகேஸ்வரன் ஆகியோர் அடங்கிய வழக்கறிஞர்கள் குழாமும் யாரும் ஈடுபடாத அளவுக்குப் பெரும் முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் ஒரு தேநீர் கூட யாரிடமும் வாங்கிக் குடித்தது கிடையாது. காணி விடுவிப்புத் தொடர்பான வழக்குகளில் திரு. சுமந்திரன் மற்றும் திரு.கனகேஸ்வரன் ஆகியோர் மிகத் திறமையாகச் செயற்பட்டிருக்கிறார்கள். என்னுடைய காணி வழக்குகளில் கூட அவர்கள் பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள். நிலங்களை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராகவும் இராணுவத்திற்கு எதிராகவும் மிக உயரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றில் வழக்காடியிருக்கிறார்கள். இன்றைக்கு 2176 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இருக்கின்றன. என்னுடைய நிலங்களை மீட்க வேண்டுமென்று அரசிற்கு எதிராக 2003 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கில் 2007 ஆம் ஆண்டு எமக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைவிட சாதாரணமாக மாணவர்களுடைய வழக்குகள், பட்டம் பெற்று வேலைவாய்ப்புப்பெற முடியாத 496 பேரின் வழக்குகள்…. எங்களுடைய கட்சி வழக்குகள்.. அப்படியான எத்தனையோ வழக்குகளில் அவர் ஒரு முன்னிலை வழக்கறிஞராகப் பல வழக்குகளில் வெற்றி பெற்றுத் தந்திருக்கிறார். அரசியலமைப்பு ரீதியாகவும் மிகச் சிறந்த முறையில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி இருக்கிறார். அப்படிப் பார்க்கின்ற போது குறிப்பாக, ……அண்மையில் தமிழரசுக்கட்சிக்கு எதிராகவும், கட்சி யாப்பிற்கு எதிராகவும், அப்போது அதன் செயலாளராகவிருந்த எனக்கெதிராகவும் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்றும் எங்களுடைய அரசியலுரிமையைப் பறிக்க வேண்டும் என்றும் கோரித் தொடுக்கப்பட்ட வழக்கில் கூட வழக்கறிஞர் திரு.கனகேஸ்வரன் சேர்ந்து மிகச் சிறந்த முறையில் உச்சநீதிமன்றத்தில் வாதாடி இருக்கிறார். அந்த வாதாட்டத்தின் மூலம் தமிழரசுக் கட்சியைத் தடை செய்யக் கூடாது என்றும் அவர்கள் கனடா நாட்டின் கியூபெக் மக்கள் தொடர்பான வழக்கில் கனடாவின் சமஸ்டி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகள் சரியானவை என்றும் இதனடிப்படையில் இனச் சிக்கலிற்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் தீர்ப்புக் கிடைத்தது. இலங்கையின் உச்ச நீதிமன்றம் இப்படியாகத் தீர்ப்பு வழங்கும் வகையில் எங்களுடைய இனத்திற்காக அவர் சிறப்பாக வாதாடி இருக்கிறார். இவரை நாங்கள் இலகுவாக விமர்சித்து………. விமர்சிப்பது பிழை அல்ல. தவறென்றால் தவறென்று நாங்கள் அவரிடம் பேசலாம். எது தவறு? எது சரி? அல்லது எப்படிப் பத்திரிகைகளிடத்தில் பேசலாம் என உரிய முறையில் சுட்டிக்காட்டி அவரோடு பேசி அவரை ஒரு வழிக்குக் கொண்டு வரலாம். அவர் அதற்கு மாறானவர் அல்ல. ஆனபடியால், இவ்வாறானவர்கள் தமிழரசுக் கட்சியில் இருந்தால் தங்களுடைய அந்தஸ்துக் குறைந்து விடும் என்று நினைக்கும் பொறாமைத்தனமானவர்களும் காழ்ப்புணர்ச்சியாளர்களும் இருக்கிறார்கள். உண்மையாகவே தவறுகள் ஏற்பட்டால் எங்களுடைய கட்சியின் உயர்மட்டக் குழுவால், அரசியற் குழுவால் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நாங்கள் அவரை நேரடியாக வைத்துக் கொண்டு பேசி அவரைத் திருத்தியெடுக்கலாம். அவர்களை இழக்கக் கூடாது என்பது தான்…… எப்படிச் சர்வதேசத்துடன் நாங்கள் இணைந்து செல்பவர்கள் இருக்க….. நாம் சர்வதேசத்துடன் இணைந்து செல்கிறோமோ… அதேபோல இப்படியான ஆற்றலுடையோர்களும் எங்களுடைய கட்சியில் இருந்து வேலை செய்ய வேண்டும். திருத்த வேண்டுமானால் திருத்தலாம்….. வழிநடத்த வேண்டுமானால் வழிநடத்தலாம்……..அப்படியானவர்களும் பயன்பட வேண்டும் என்பது தான் எங்கள் கருத்தாக இருக்கிறது.

நூற்றுக்கு நூறு புனிதமானவர்கள், சரியானவர்கள் என நாம் யாரையும் குறிப்பிட்டுப் பேச முடியாது. அப்படிப் பேச வேண்டிய அவசியமும் கிடையாது. தவறுகள் இருக்கும். செய்வது எல்லாம் சரி எனவும் நாம் வாதிட வரவில்லை. ஆனபடியால் இப்படியாக நாம் பேசுவதை விட, அப்படிப்பட்ட சிறந்த வழக்கறிஞர்கள், சட்ட அறிஞர்கள், அரசியலமைப்புத் தொடர்பில் அறிவுள்ளவர்கள், ஆற்றல்களுடையவர்கள் போன்றோர் எமது கட்சியில் இருந்து வேலை செய்ய வேண்டும். என்ற ஒரு அணுகுமுறையைத் தான் நாம் கொண்டிருக்கிறோம். ஆனபடியால், குற்றங்களைச் சொன்னால் நாம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். அது எங்கள் கடமை.

கேள்வி 10:

வடமாகாண அவையின் முதல்வருக்கான கடந்த தேர்தலில் உங்களையே வேட்பாளராக்க எல்லோரும் விரும்பியதாகவும் உங்களைப் போன்ற பின்னணி கொண்டவர்கள் முதல்வராவதை இந்தியா விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. விக்கினேஸ்வரன் எப்படித் தெரிவாகினார்? அந்தத் தெரிவு மடமைத்தனம் என்று நீங்கள் இன்று நினைக்கிறீர்களா?

மடமைத்தனம் என்றில்லை. அது நான் எடுத்த தீர்மானம். சிறிலங்காவின் அரசியலமைப்பிற்கெதிராகவும் தமிழீழம் கோரியும் நான் காசியானந்தன் போன்றோர் மட்டக்களப்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்ட போது அந்த இடத்தில் கைதுசெய்யப்பட்டு எங்கள் மீது தமிழீழம் கோரியதாக வழக்குத் தொடுக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்படாமல் நீண்டகாலம் சிறையில் இருந்தோம். அப்போது நீதிபதி இடமாற்றலுக்குள்ளாகி மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக விக்கினேஸ்வரன் அவர்கள் பதவியேற்ற அன்றே எமக்குப் பிணை வழங்கினார். அந்த வழக்கை விசாரித்து மாவை சேனாதிராசா மற்றும் காசியானந்தன் போன்றோருக்கு பிணை வழங்கியதன் பின்னர் தான் எமது அரசியலைப் படிக்கத் தான் ஆரம்பித்ததாக விக்கினேஸ்வரன் அவர்களே வெளிப்படையாக அறிக்கை விட்டிருந்தார். அதனால் எமது பிரச்சனைகளை உணர்ந்த ஒருவராக அவர் இருப்பார் என்று நினைத்துத் தான் அவரை வேட்பாளராக்கச் சந்தர்ப்பம் கிடைத்தபோது நாங்களும் ஏற்றுக்கொண்டிருந்தோம். ஏற்றுக்கொண்டது பிழையென நான் நினைக்கவில்லை.

அப்பொழுது, நீங்கள் குறிப்பிட்டவாறு…. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகள் திரு.ஆனந்தசங்கரி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்று கூடி மாவை சேனாதிராசா ஆகிய என்னை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என முடிவெடுத்தனர். நாம் விக்கினேஸ்வரனைத் தெரிவு செய்த பின்னரும் நாம் செய்தது பிழை எனப் பலர் என்னைக் கடிந்து கொண்டார்கள். எங்களது தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவானது அன்று சிறப்பாக அழைக்கப்பட்டோர் அடங்கலான 126 பேர் கூடியிருந்த அவையில் நான் ஒருவனே விக்கினேஸ்வரனைத் தெரிவு செய்யுமாறு வாதாடினேன். அன்று கூடியவர்களில் ஒருவர் கூட விக்கினேஸ்வரனை ஆதரிக்கவில்லை. எங்களுடைய தமிழரசுக் கட்சி மத்திய குழுவினரிடத்திலும் எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் வர வேண்டுமெனத் தீர்மானித்தவர்களிடத்தில் நான் இவ்வாறு வாதாடியமைக்கான அடிப்படைக் காரணம் என்னவெனின், நான் ஒரு போராட்டப் பாதையில் வாழ்ந்தவன். இந்தப் பதவிகளுக்காகச் செயற்பட்டவன் இல்லை. அது எனக்கு முக்கியமானதாக இருக்கவில்லை. ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் எமது மக்கள் அடக்கியொடுக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு எமது மக்களை வரச்சொல்லி அங்கு வைத்துத் தடைசெய்யப்பட்ட Cluster Bombs, Themobaric Bombs, Phosporus gas போன்றவற்றைப் பயன்படுத்தி எமது மக்களைக் கொன்றொழித்த பின் இராணுவ அடக்குமுறையில் இனப் பிரச்சனை தீர்க்கப்படாமல் எங்களை அடக்கியொடுக்குவதற்கு எதிராக ஜனநாயக முறையில் நாம் போராட வேண்டும் என்று சொல்லி 2014 ஆம் ஆண்டு நடந்த தமிழரசுக் கட்சி மாநாட்டில் நான் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு ஆற்றிய தலைமை உரையில் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்திருந்தேன். எனவே போராட்டப் பாதையில் நான் வந்தவன் என்பதால், அனைவரையும் அழைத்து ராஜபக்ச அரசிற்கெதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதுதான் சிறந்த முடிவாக இருந்தபடியால், விக்கினேஸ்வரன் போன்ற நீதியரசராக இருந்த ஒருவர் அவர் சிங்கள மக்களோடும் உறவாக இருந்தவரென்றதால் அவர் முதல்வராக வந்தால் எங்களது மக்களுக்கு உதவியாக இருப்பார், எங்களுக்கும் அரசியல் ரீதியாக உதவியாக இருப்பார் மற்றும் எங்களுடைய மக்களின் கண்ணீரைத் துடைப்பார் என்றெல்லாம் நாங்கள் கூட்ட மேடைகளில் பேசினோம். அந்த எண்ணத்தில் தான் நான் அவரைத் தெரிவுசெய்யச் சொன்னேன். நான் விருப்பப்பட்டிருந்தால் போராட்டப் பாதைக்குப் பதிலாக இலகுவாக முதல்வராகும் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். நான் அந்த நிலைக்கு வராததற்கும் நல்லெண்ணம் இருந்தது. நான் போராட்டப் பாதையின் பின்னணியில் வந்தவன் என்ற முறையில் அரசிற்கு எதிராகப் போராட, அந்தப் பொறுப்பை ஏற்காமல் விக்கினேஸ்வரனைத் தேர்ந்தெடுக்க உதவியாகவிருந்தேன்.

மட்டக்களப்பில் நீதிபதியாக அறிமுகமான அவரோடு பலமுறை சந்தித்தும் இருக்கிறேன். அந்த நல்லெண்ணத்தோடு தான் அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவியாக இருந்தேன். எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் விக்கினேஸ்வரனைத் தேர்ந்தெடுத்த பின்பும் மாவை அண்ணன் தான் எங்களுடைய வேட்பாளர் என வெளிப்படையாகச் சொல்லியிருந்தார்கள். இதையெல்லாம் கடந்து நாங்கள் தேர்தல்களில் வேலை செய்வதை விட மிகத் தீவிரமாக வேலை செய்து அவர் வெற்றி பெறுவதற்காக உழைத்திருக்கிறோம். அவர் அப்படி வெற்றி பெற்றதன் பின்னர், நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் என்றோ அல்லது இந்தத் தேர்தலில் மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டுமென்றோ ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் “வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து வாக்களியுங்கள்” என்று சொன்ன அந்த வார்த்தைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எமக்கு எதிராகச் செயற்பட்ட நிலைப்பாட்டைக் காட்டுகிறது. எமக்கு எதிராகத் தான் அவர் அந்தத் தேர்தலில் வேலை செய்திருக்கிறார் என நாம் உணர்ந்து கொண்டோம். அதற்கான காரணத்தை நாம் உடனடியாக அறிந்திருக்கவில்லை. இரண்டாவது முறையும் நாம் தேர்தலில் பெரு வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனாலும் அவர் எங்களுடன் இணைந்து ஒன்றாக வேலை செய்பவராக இருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பக்கமாகவும் மாகாண சபை இன்னொரு பக்கமாகவும் தன்னிச்சையாகவும் அந்த மாகாண சபையை விக்கினேஸ்வரன் இயங்க வைத்திருக்கிறார்.

அதனால் எங்களுடைய மக்களிற்குச் செய்ய வேண்டிய பலவற்றை எம்மால் செய்ய முடியாமல் போய்விட்டது. அவருக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்த போது அவருக்கு எதிராகவே மாகாண சபையில் ஒரு நிலைப்பாடு வந்தது. அதில் அப்படிச் செய்ய வேண்டாமென மதகுருமார்களை நாடித் தடுத்து நிறுத்தியிருக்கிறோம். அவ்வாறிருந்த போதிலும், என்னிடம் அவர் இதைப் பற்றி பேசியபொழுது, நான் சொன்னேன்………. “நீங்கள் வேறாகச் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். தன்னிச்சையாக நடந்து கொண்டிருக்கிறீர்கள். நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நீங்கள், எங்களுடைய தலைமை என ஒன்றுபட்டு எடுக்கின்ற தீர்மானத்தின் அடிப்படையில் நீங்கள் செல்ல வேண்டும். மாகாண சபைத் தேர்தலிலே, பாராளுமன்றத் தேர்தலிலே முன்வைத்த தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் அதனை முன்னெடுப்பதற்கான உபாயங்களைச் செய்ய நீங்களும் ஒன்றுபட்டு உழையுங்கள்” என்று கூறிய போது, நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்து முடிவுகண்ட நேரத்திலும் அதற்கிடையிலும் என்னோடு அதற்கு ஒத்துக்கொண்டார். நீங்களே அதனைப் பத்திரிகைகளுக்குச் சொல்லுங்கள் எனவும் அவரே என்னிடம் சொன்னார். ஆனாலும் அவர் தன்னிச்சையாக முடிவெடுத்து உள்ளூராட்சித் தேர்தல்களிலும் எங்களிற்கு ஆதரவாக இருக்கவில்லை.

எதிராகச் செயற்பட்டார். எதிரான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்தார். எங்கள் மக்கள் மத்தியில் இத்தனை குழப்பங்கள், பிளவுகள் என்பனவற்றைச் செய்து மக்கள் பேரவை என்ற ஒன்றையும் தோற்றுவித்து தமிழரசுக் கட்சிக்குச் சம்பந்தப்படாமல் தன்னிச்சையாக அவர் செயற்படுவது தான் இன்றைய குழப்ப நிலைமைக்குக் காரணமாக இருக்கின்றது. ஒன்றுபட்ட நிலைமையைக் குழப்பிய சூழ்நிலையாக நாம் இதனைக் கருதுகின்றோம். நான் அந்தச் சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் வேட்பாளர் என்ற பொறுப்பை ஏற்காமல் விட்ட பிழையால் தான் இத்தனை குழப்பங்கள் நடக்கின்றன என மற்றையவர்கள் மனம் வருந்தி என்னைக் குற்றஞ் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நானும் அந்தப் பிழைக்குக் காரணமாக இருக்கிறேன் என்று எண்ணுகின்ற நிலையில் இருக்கிறேன்.

நான் விட்ட பிழையால்தான் மாகாண சபை இப்படிப் போகின்றது என்று சொல்கிறார்கள். மாகாண சபை செயலற்ற முறையில் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றாமல் மக்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யாமல் சிறந்த உயர்ந்த மனிதர்களைக் கொண்டு இந்த மாகண சபை சரியாகச் செயற்படவில்லை மற்றும் வாக்குகள் சிதறுண்டமைக்கு மாகாண சபை தான் காரணம். அவர் ஒத்துழைத்து வேலை செய்திருந்தால் நாம் பெரு வெற்றியீட்டியிருக்கலாம். அவர் நீதியரசர் என்ற பொறுப்பில் இருந்த காரணத்தினாலும் எங்களுடைய வேட்பாளராகத் தமிழரசுக் கட்சிச் சின்னத்திலே போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்ற காரணத்தினாலும் தமிழரசுக் கட்சிக்காரரும் எதிரணியிலிருப்பவர்களும் தமிழரசுக் கட்சிக்கு எதிராகச் செயற்பட அவர் முக்கியமானவராக இருக்கிறார். அதனால் தான் என்னைக் குற்றஞ் சுமத்துகிறார்கள். “நீங்கள் தானே உங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை அவருக்கு விட்டுக் கொடுத்தீர்கள்” என்று சொல்கிறார்கள். என்னுடைய போராட்டப் பாதையில் ராஜபக்ச அரசிற்கு எதிராகப் போராட்டம் நான் நடத்த வேண்டுமென்ற முடிவாலே நான் விக்கினேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக வரவேற்றதற்கு முக்கிய காரணம். அவர் உயர்ந்த கல்விமானாகவும் நீதியரசராகவும் இருந்தபடியால் அவர் மக்களுக்காக எங்களோடு ஒத்துழைத்து அணி சேர்ந்து நடப்பார் என்று தான் நான் முன்னர் நினைத்தேன். ஆனால் அவர் தன்னிச்சையாக நடந்து கொண்டிருக்கிறார். இது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனபடியால், அதற்கான பொறுப்பை நான் ஏற்க வேண்டியவனாக இருக்கிறேன். தனியாக சம்பந்தனைக் குற்றஞ் சுமத்தி நான் அதிலிருந்து விடுபட ஆயத்தமாக இல்லை. எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவின்படி தான் நாம் நடந்துகொண்டிருக்கிறோம். அதனுடைய விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனபடியால், இவ்வளவு தவறுகளையும் இழைத்து மக்கள் மத்தியில் பிளவுகளும் விமர்சனங்களும் வருகின்ற நிலைக்கு முதலமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மறுபடியும் நாங்கள் அவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கக் கூடிய ஏதுக்கள் இல்லையென்றும் சுமந்திரன் வெளிப்படையாக ஒரு கருத்தை முன்வைத்து விட்டார். “நான் இரண்டு ஆண்டுகளுக்கு முதலமைச்சராக இருக்கிறேன். பின்னர் தம்பி மாவை அந்தப் பொறுப்பை ஏற்கட்டும்” என்று ஒரு கருத்தின் முன்மொழிவாக அவரே முன்பு சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பலர் என்னிடம் கேள்வியெழுப்பத் தொடங்கினர். ஆனால் 2 ஆண்டுகளின் பின்னர் பொறுப்பேற்க நான் விரும்பியது கிடையாது. அந்த மாகாண சபையை ஆதரித்துத் தான் நாம் நின்றோம். சுமந்திரன் சொன்னது உண்மை தான். அதனால் பத்திரிகையாளர்கள் என்னை விட்ட பாடில்லை. அப்படியென்றார்கள் இந்தப் பொறுப்பை நீங்கள் ஏற்பீர்களா? இம்முறை போட்டியிடுவீர்களா? என்று என்னிடம் கேட்டபோது நான் அதற்கு ஒரு கருத்தைச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அது என்னவென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்பு என்னைத் தீர்மானித்த போது நான் ஏற்காமல் விட்டிருந்தேன். இம்முறை அவர்கள் என்னை முன்னிலைப்படுத்தினால் அந்தப் பொறுப்பை ஏற்கவேண்டியிருக்கின்றது என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதுதான் நிகழ்ந்திருக்கிறதே தவிர, முதலமைச்சர் பொறுப்பு வேண்டுமென்றோ அல்லது ஒற்றுமைக்குப் பங்கமாக இருந்து செயற்படப் போகின்றேன் என்றோ பொருள் அல்ல. அப்படியோரு நிலை வந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்மானத்தை எடுக்கும். அவர்கள் நான் தான் நிற்க வேண்டுமென்றால், நான் அதற்குச் சரிசொல்லி மக்களை வழிநடத்த ஆயத்தமாக இருக்கிறேன். மாகாண சபையை வழிநடத்திச் சரியான முறையில் செயற்பட ஒத்துழைப்பை வழங்குவேன் என்று உறுதியாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.

கேள்வி 11:

தமிழ்த் தேசிய இன விடுதலைக்கு ஊறுவிளைவிக்கிறார்கள் என்று வெளிப்படையாக எந்நாளும் குற்றஞ்சாட்டப்படாத தமிழரசுக் கட்சிக்காரராக நீங்கள் இருக்கின்றீர்கள். உங்களைப் போன்றவர்களின் அரசியல் கூட இன்று இளையோர்களிடத்தில் வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. அதுபற்றி மீளாய்வு செய்தீர்களா?

பதில்: மாவை ஐயா

என்மீது அவர்கள் வெறுப்புக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் என்னைத் தனிமைப்படுத்திப் பேச ஆயத்தமாக இல்லை. சென்ற ஜனாதிபதித் தேர்தலில் மிகப் பெரும் நம்பிக்கையோடு மிகப் பெருமளவில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். எங்களுடைய தமிழ்மக்கள், முஸ்லிம்மக்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் வாக்களித்தபடியால் தான் ஜனாதிபதி இந்த வெற்றியைப் பெறக் கூடியதாக இருந்தது. இல்லையென்றால் வெற்றியைப் பெற்றிருக்க மாட்டார். அதற்கு நாங்களும் காரணமாக இருக்கிறோம். எங்களுக்கிருக்கிற அதே சலிப்பு, அதே விமர்சனம் மக்கள் மத்தியில் அதை கோபம் என்று கூட சொல்லுவேன்……இருக்கிறது………

அந்த 2 1/2 ஆண்டுகளில் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்படவில்லை. இன்னும் பெருமளவான நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. அதேபோல ஏனைய பிரச்சனைகளுக்கும் இந்த அரசாங்கம் பொருளாதார ரீதியாகவோ அல்லது எங்களது போரினால் அழிந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதிலோ அல்லது வேலைவாய்ப்புகள் வழங்குவதிலேயோ இந்த அரசாங்கம் எங்களுக்கு எந்த வெற்றியையும் பெற்றுத்தரவில்லை. அதில் நாம் வெற்றி பெறவில்லை. இந்தக் காரணங்களால் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு விமர்சனங்கள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த விமர்சனங்கள் என்மீதும் ஏற்படுத்தப்படுமானால் நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன். அவை தான் ஜனநாயகரீதியாக நாங்கள் செயற்படுவதற்கான அடிப்படைகளாக இருக்கின்றன. ஆனபடியால், எங்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றங்கள் அல்லது விமர்சனங்களை ஏற்று அதை மாற்றியமைத்து கட்சியில் மீண்டும் இளைஞர்களை அதிகமாக இணைத்து ஒரு இளம் இரத்தத்தைப் பாய்ச்சி எங்களுடைய பொறுப்புகளிலிருந்தும் அடுத்த சந்ததிக்குக் கட்சியை வழிநடத்துவதற்கு இடங்கொடுத்து நடப்பதுதான் எதிர்காலத்தில் நாங்கள் எங்கள் இனத்தை ஒன்றுபடுத்திச் செயற்படுவதற்கான, இளைய சமுதாயத்தை இணைத்துச் செல்வதற்கான ஒரு மார்க்கமாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்.

இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் தான், இளைஞர்கள் தேர்தல்களிலே எங்களுக்குச் சாதகமாகச் செயற்பட்டால் தான் நாங்கள் எங்களுடைய இனத்தின் வெற்றியை நோக்கிப் போகலாம். அதனை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். விமர்சனங்களை நாங்கள் வரவேற்கின்றோம். உண்மைகளை நாங்கள் வரவேற்க வேண்டும். பொய்களைக் கட்டியெழுப்பியும் புனைந்துரைகளைக் கட்டியெழுப்பியும் எங்களைத் தோற்கடிக்க வேண்டுமென்று தென்னிலங்கையில் இருக்கின்ற எமக்கு எதிரான சக்திகள் அல்லது நாங்கள் அதாவது எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கண்டுவிடக் கூடாது என்று வேலை செய்பவர்களோடு நாங்கள் அணிசேர முடியாது. அதற்கு நாங்கள் ஈடுகொடுத்து நாம் மீண்டும் சீர்குலைந்து இருக்கின்ற, பிளவுபட்டிருக்கின்ற எங்கள் மக்களை மீண்டும் ஒன்றாகக் கட்டியெழுப்புவதில் நாங்கள் பங்களிப்பைச் செய்வதுதான் இன்று எமக்கிருக்கின்ற பின்னடைவைத் தவிர்த்து கட்சியை மீளக் கட்டியமைத்து மக்களை ஒன்றுபடுத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடித்து முன்னெடுத்துச் செல்வதுதான் எங்களுக்கு இருக்கின்ற ஒரு கோட்பாடாக அல்லது வழியாக இருக்குமென்று நம்பி அதனடிப்படையில் நாம் இப்போது செல்ல ஆரம்பித்து இருக்கிறோம். அதை நாங்கள் மக்களுடைய நம்பிக்கையைப் பெறக்கூடியதாக, இளைஞர்களுடைய நம்பிக்கையைப் பெறக்கூடியதாக நாங்கள் எங்களை மாற்றியமைத்து அவர்களுக்கு ஏற்ப நாங்கள் எங்கள் மக்களையும் இந்தக் கட்சியையும் வழிநடத்துவோம் என்று திட்டவட்டமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி 12:

தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறிப்போக்கு இனிவரும் காலங்களில் எவ்வாறு அமையும்? தமிழ்நாட்டில் முகிழ்த்துவரும் தமிழ்த்தேசிய உணர்வு உலகளாவிய அடிப்படையிலும் ஈழ விடுதலையிலும் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: மாவை ஐயா

நாங்கள் அந்த விடயத்தைப் பற்றி தீவிரமாக ஒரு தீர்மானத்தை எடுக்கின்ற ஒரு சந்தர்ப்பம் உருவாகி வருகின்றது என்று நான் நினைக்கின்றேன். இந்த அரசாங்கம் இந்த மூன்று ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய விடயங்களில் தோல்வி கண்டுவிட்டது. அவர்கள் இப்போது ஜனாதிபதி ஒரு பக்கமாகவும் பிரதமர் ஒரு பக்கமுமாக எங்களுடைய மக்களின் நம்பிக்கைகளுக்கு உண்மையாக இல்லாமல் தங்களுடைய கட்சிகளையும் தங்களையும் பலப்படுத்துகின்ற போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள். ஆனபடியால், தமிழ்மக்கள் மத்தியிலும் எங்கள் மத்தியிலும் சிங்களவர்கள் எதிர்காலத்திலும் எங்கள் இனப்பிரச்சனையைத் தீர்க்க உதவுவார்களா அல்லது நம்பிக்கையை ஏற்படுத்துவார்களா? அல்லது பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை கிடைக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்குமா? என்பன தொடர்பாக எங்களிடமே பல கேள்விகள் எழுந்திருக்கிறன. இந்த நிலைமையில் இன்று எதுவும் நடைபெறவில்லை என வாதாடுவதற்கு நாம் வரவில்லை. உதாரணமாக, பல இடங்களில், குறிப்பாக வலி வடக்கில் கணிசமான நிலங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. அதேபோல், திருகோணமலையில் சம்பூரில் நிலங்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் விடுவித்ததை விட இன்னும் அதிகமான நிலங்கள் இராணுவத்தினரின் கைகளில் இருப்பதனால் தான் போராட்டங்கள் நடத்த வேண்டிய நிலைமை இருக்கிறது. அரசாங்கத்திடம் நாம் அதைப் பற்றி திட்டவட்டமாகப் பேசி ஒரு முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.

முதலாவதாக, இனப் பிரச்சனைத் தீர்வில் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்ற விடயங்களில் நாங்கள் முழுமையாகத் திருப்திகொண்டவர்களாக இல்லை. எங்களுடைய மக்கள் திருப்திப்படுகின்ற அளவுக்கு நாங்கள் அதனைச் சிபாரிசு செய்யவும் இல்லை. ஆனால் சில முன்னேற்றங்கள் இருக்கின்றன. அதிகாரத்தை முழுமையாகப் பகிர வேண்டும். ஒரு சமஸ்டிக் கட்டமைப்பில் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு ஈடாக ஒரு அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்ற அரசின் தன்மை பற்றி குறிப்பிடப்பட்ட விடயங்களில் நாங்கள் கவனத்தைச் செலுத்தலாம். அது முழுமையாக ஏற்பட்டு விட்டது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் தென்னிலங்கையில் ராஜபக்ச அரசு இம்முறை உள்ளூராட்சித் தேர்தலின் போது குறிப்பிட்டது என்னவென்றால், இந்த இடைக்கால அறிக்கையிலே குறிப்பிட்ட “ஒருமித்தநாடு” என்று அரசின் தன்மையைக் குறிப்பிடுகின்ற பதம் ஒரு சமஸ்டியைத் தான் குறிக்கிறது. அது நாட்டைப் பிளவுபடுத்தப் போகின்றது என அவர்கள் பரப்புரை செய்கிறார்கள். எங்கள் தரப்பிலே எங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்து வருபவர்களும் 2012 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எரித்தவர்களும், அதே அணியினரின் வெளிநாட்டில் சில சக்திகளும் இந்த இடைக்கால அறிக்கையின் சாரம்சத்தை நாங்கள் நிராகரிக்க வேண்டுமென்று சொல்கிறார்கள்.

முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார். தென்னிலங்கையில் இதனால் நாடு பிளவுபடப் போகின்றது என ஒரு பக்கத்திலும் இந்த அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென்று சொல்கின்ற நம்மவர்கள் இன்னொரு பக்கமுமாக இருக்கின்ற சூழலில் தான் இடைக்கால அறிக்கை முன்கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதில் முழுமையாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்பதும் பகிரப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறக்கூடாது அல்லது மீளப்பெற முடியாது என்ற அடித்தளக் கருத்தும் அங்கே சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு சமஸ்டிக் கட்டமைப்பில் முழுமையாக அதிகாரங்கள் பகிரப்பட்டு இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அந்த அடிநோக்கம் அதில் செறிவாக இருக்கிறது. இந்த நிலைமையில் தான் நாங்கள் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற வேண்டும். அந்த இடத்தில் அரசு இன்றைக்கு ஜனாதிபதியும் பிரதமரும் பிளவுபட்டிருப்பதால் எங்களுக்கு ஒரு ஐயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அரசாங்கத்தினால் பிரேரணைகள் கொண்டுவரப்படுகின்ற பொழுது இந்த அரசாங்கத்தை நாங்கள் அரசியல் தீர்வு ஒன்றில் 2/3 பெரும்பான்மையை நிரூபிக்க இணங்கச் செய்யலாம் என்ற அடிப்படையில் தான் இந்தத் தீர்மானங்களை நாம் எடுக்கின்றோம். அரசிற்கு ஆதரவாக நாம் வாக்களித்திருக்கிறோம். அப்பொழுது ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக இருந்த காலத்தில் நாங்கள் அவ்வாறு ஈடுபட்டிருக்கிறோம். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது அங்கும் ஒர் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை. அப்படி அரசாங்கம் விரும்பியிருந்தாலும் நாங்கள் அதை ஏற்கவில்லை. அதுவ‌ல்ல எங்களுடைய இலக்கு. நாங்கள் எதிர்த் தரப்பிலே இருந்து நியாயமான விடயங்களில் ஆதரவைக் கொடுத்து 2/3 பெரும்பான்மை பாராளுமன்றத்திலே ஒரு அரசியல் தீர்வு வருகின்ற பொழுது கிடைக்கக் கூடிய அந்தப் பலத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டுமென்ற அடிப்படையில்தான் நாங்கள் வாக்களித்து வந்திருக்கிறோம். தனிப்பட்ட முறையில் ஒரு அரசின் எல்லா நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஆதரவாக வாக்களிக்கவில்லை. இப்போது அனைத்து இடங்களிலும் ஏமாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு கேள்விக்குறி ஏற்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், 2/3 பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் பெறக்கூடிய வகையில் எங்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒரு அரசியல் தீர்வு சமஸ்டிக் கட்டமைப்பில் முழுமையாகப் பகிரப்பட்ட அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஏதோவொரு வகையில் நாங்கள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. வடக்கு-கிழக்கை எப்படி இணைப்பது என்பது அல்லது அந்த இலக்கினை அடையக் கூடிய வகையில் இந்த அரசியல் அமைப்பூடாக அதற்கான தீர்வுத் திட்டத்தினை நிறைவேற்றினால் தான் நாங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அந்த இலக்கை அடைய வேண்டுமானல் எமது தமிழ்மக்களின் திருப்தியோடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருப்தியோடும் எங்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய மூன்று அடிப்படைகளில் … தெளிவாகச் சொல்லப்போனால் சமஸ்டிக் கட்டமைப்பில் முழுமையாக அதிகாரங்கள் மாகாணங்களுக்குக் கையளிக்கின்ற அடிப்படையில் வடக்கு-கிழக்கை இணைக்கக் கூடிய பிரேரணை உள்ள அடிப்படையில் நாங்கள் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கு எடுக்கின்ற முயற்சிகளுக்கு அது இடைக்கால அறிக்கையாக வருகின்றபொழுது 2/3 பெரும்பான்மையால் ஒரு அரசியல் தீர்வு உருவாகியிருக்கிற பொழுது பாராளுமன்றத்திலே அது வாக்களிக்கப்பட வேண்டும். நிறைவேற்றப்பட வேண்டும்…. அதை நோக்கித் தான் நாம் செல்ல முயற்சிக்கின்றோம். அதற்கான நம்பிக்கைகளின் மத்தியிலும் ஏமாற்றங்களின் மத்தியிலும் எதிர்த்தரப்பிலே கூட அரசாங்கத்துடனும் நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஏனெனில், அரசியலமைப்பை உருவாக்கி அது எங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2/3 பெரும்பான்மையால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு நாங்களும் ஒத்துழைக்க வேண்டும். அதற்காக ஜனாதிபதியிடத்திலும் பிரதமரிடத்திலும் ஏனைய கட்சிகளிடத்திலும் ஜே.வி.பி யிடத்திலும் கூட நாங்கள் சில இணக்கங்களைக் காணுகின்றோம். அதன் மூலமாக சிறந்த அரசியல் தீர்வு பாராளுமன்றத்திலே வருகின்ற பொழுது 2/3 பெரும்பான்மையால் அது நிறைவேற்றப்படுமானால் அதே பலத்தோடு மக்கள் மத்தியிலும் ஒரு கருத்துக் கணிப்பு வருகின்ற பொழுது நாங்கள் வெற்றி பெற முடியும். அதற்குச் சருவதேசமும் முழுமையான ஆதரவைத் தரும் என்ற நம்பிக்கையில் தான் நாம் எப்பொழுதும் எங்களுடைய தீர்மானங்களை எடுத்து வந்திருக்கிறோம். இதற்கு எதிராக இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் ஐ.தே.க கட்சியும் இந்த எண்ணத்திற்கு மாறாகப் போகுமானால் அல்லது நடைமுறையில் அவர்கள் எங்களுக்கு உதவியாக இல்லாவிட்டால், நிலங்கள் விடுவிப்பது போன்ற எமது அன்றாடப் பிரச்சனைகளில் எங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதில் இந்த அரசாங்கம் எங்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றுமாக இருந்தால்………. நான் நினைக்கிறேன் இந்த ஆண்டிற்குள் தமிழரசுக் கட்சி மாநாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநாடு என்பன அடுத்த 2 மாதங்களில் வர இருக்கின்றன. அதற்கு முன்னர் நாங்கள் ஒரு கால எல்லையை நிர்ணயித்து இந்த அரசாங்கத்தை எங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் எங்களுடைய முழு முயற்சிகளையும் சருவதேசத்தையும் இந்த முயற்சிகளில் ஈடுபடுத்திக்கொண்டு எடுக்கும் முயற்சிகள் என்பன……அதில் நாம் வெற்றி பெற்றால் அல்லது வெற்றிபெற முடியாவிடில் நாங்கள் எங்களது பாதையை மற்றும் வழிகளை அல்லது இந்த அரசாங்கத்தை ஆதரிப்பதா இல்லையா என்ற விடயத்தை நாங்கள் சருவதேசத்தோடு இணைந்து எடுக்கக் கூடிய அணுகுமுறையில் தான் எங்களுடைய மூலோபாயங்களைத் தீர்மானித்து வருகின்றோம்.

இதுதான் நாம் இப்போது செய்யக் கூடியதாக இருக்கின்றது. அதே நேரத்தில் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தை நாம் வீணாக ஆதரிப்போம் என்று யாரும் நம்பத் தேவையில்லை. .. நினைக்கத் தேவையில்லை. நாம் திட்டவட்டமான ஒரு நிலைக்கு வந்திருக்கிறோம். தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய காலகட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம். அதற்காக தமிழரசுக் கட்சி மாநாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாநாடும் ஒழுங்கு செய்வதற்கு ஆயத்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இன்னும் 2 மாதங்களில் நாம் வலுவான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருக்கும். அது சர்வதேச சமூகத்துடன் இணைந்த தீர்மானமாக இருக்கும். அதனைத் தொடர்ந்து நாம் போராட வேண்டுமா? அரசாங்கத்திலிருந்து தவிர்த்து ஆதரவைக் கொடுக்காமல் போராட்டத்தை நடத்த வேண்டுமா? என என்ன அணுகுமுறையை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை மிக விரைவில் நாங்கள் தீர்மானிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அந்தப் பாதையில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

உங்களது நேரத்தை ஒதுக்கி மிக நீண்ட நேர்காணலைத் தந்தமைக்கு மிக்க நன்றி. இறுதியாக, நாம் கேட்ட கேள்விகளுக்குள் உள்ளடங்காமல் நீங்கள் கூற விரும்பும் விடயங்கள் ஏதாவது இருந்தால் கூறுங்கள்?

பதில்: மாவை ஐயா

நான் மிகத் தெளிவாக எங்களுடைய விடயங்களைப் பற்றி பேசி இருக்கிறேன். ஆனால், இராஜதந்திரம் என்பது…. மூலோபாயம் என்பது… சருவதேச சந்தர்ப்பம் என்பது.. எங்களுக்கு மிக முக்கியமானவை. ஏனென்றால் நாங்கள் இந்த நாட்டில் ஒரு அரசு அமைக்கின்ற கட்சி அல்ல. எங்களுடைய மக்களுடைய இன விடுதலைக்காக வடக்கு-கிழக்கு இணைந்த எங்களுடைய தாயகத்தில் எங்களை நாங்களே ஆளுகின்ற கொள்கையைக் கொண்டு தான் ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம். அது சமஸ்டிக் கட்டமைப்பில், உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்மானம் அமைய வேண்டும். அதற்கு விசுவாசமாகத் தான் நாம் எம்மை அர்ப்பணிக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இந்த நாட்டிலே இனப்பிரச்சனை தீர்ந்துவிடக் கூடாது என்றும் எங்களுக்கு எந்த வெற்றியும் கிடைத்து விடக்கூடாது என்று நினைப்பவர்கள் குழப்பங்களை முன்னெடுத்து வருவது எங்களுக்கு மிகவும் வேதனையாக அல்லது வெறுப்பாக இருக்கிறது. இருந்தாலும், நாங்கள் தமிழ்மக்களுடைய தலைமைப் பொறுப்பிலிருக்கின்ற படியால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாக இருக்கின்ற படியால் மிகப் பொறுமையோடும், மிக நிதானத்தோடும், மிகக் கவனத்தோடும் உலக சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தித் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்பதையும் எங்களுடைய இனம் வெற்றிபெற வேண்டும். தனிப்பட்ட மனிதர்கள் அல்ல….. எங்களுடைய மண் வெற்றி பெற வேண்டும். எங்கள் மக்கள் மீண்டும் விடுதலையைப் பெற்று சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் எங்களுடைய சிந்தனைகள் முழுவதும் இருக்கின்றது என்பதையும் அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் இருப்போம் என்பதைக் கூறிக்கொண்டு நான் விடைபெற்றுக் கொள்கின்றேன்.

முற்றும்

நேர்காணலை முழுமையாக ஒலிவடிவில் கேட்க: இங்கே அழுத்தவும் 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*