சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தல் நிலைவரங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் -சேதுராசா-

நடைபெற இருக்கும் சிறிலங்காவின் எட்டாவது சனாதிபதித் தேர்தல் குறித்துப் பேசுவதிலேயே ஊடகர்களும் அரசியல் நோக்கர்களும் தமது கூடுதலான நேரத்தைச் செலவிடுவதனூடாகத் தமிழ் மக்களையும் அவ்வாறான உரையாடல்களில் ஆர்வமடையச் செய்து வருகின்றனர். உண்மையில் சிங்களதேசம் தனது சனாதிபதியைத் தெரிவு செய்வதில் காட்டும் ஆர்வத்திற்கு ஈடான ஆர்வத்தைத் தமிழர்தேசம் சனாதிபதித் தேர்தல் பற்றிய உரையாடல்களில் காட்டுவதன் காரணம் என்ன என்பது குறித்த புரிதல்கள் தேவை. உண்மையில், தமிழர் தரப்பில் வாக்குப் பொறுக்கும் அரசியலாளர்கள் சனாதிபதித் தேர்தலின் பின்பாக நடைபெறவிருக்கும் மாகாண அவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகத் தம்மை அணியப்படுத்திக்கொள்ளும் வேலைகளிலே மும்முரமாக இறங்க வேண்டிய காலமாகவே இந்த சனாதிபதித் தேர்தலையொட்டிய சிறிலங்காவின் தேர்தல் திருவிழாக் காலத்தைப் பார்க்கின்றனர். அதற்கப்பால், சனாதிபதித் தேர்தல் குறித்து என்ன முடிவெடுப்பது என்பது குறித்து அமெரிக்காவின் கட்டளைக்குச் சுமந்திரனும், இந்தியாவின் பொன்வாக்கிற்குப் பிரேமானந்த சீடன் விக்கியும், இதற்குள்ளால் சுழிச்சு ஏதாவது ஒன்றைச் சொல்லி கொள்கைக் குன்றாகக் காட்டி எப்படியேனும் தனது குடும்பச் சொத்தாம் அகில இலங்கை தமிழ்க் கங்கிரசை முன்னிலைப்படுத்த இந்தச் சூழ்நிலையை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து தனது தாயின் கட்டளைக்குக் கசேந்திரகுமாரும், யார் ஆட்சிக்கு வந்தால் யாரை வைத்து எவ்வாறான உடன்படிக்கைகளுக்கு வரலாம் எனப் புலம்பெயர்ந்த வணிகர்களும் அவர் தம் ஊடகங்களும் காத்திருப்பதோடு, ராஜபக்ச குடும்பம் வந்தால் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பிப் பணமீட்டலாம் என ஆட்கடத்தல் முகவர்களும், அப்படி நேரில் வழக்குகளை வெளிநாட்டுச் சட்டவாளர்களுக்குப் பிடித்துக்கொடுத்துத் தரகு வாங்கும் வேலை செய்துகொண்டு தம்மைச் சட்டவாளர்கள் என ஊரை ஏமாற்றும் தரகர்களும், ராஜபக்ச குடும்பம் வந்தால் நிலுவையிலுள்ள அரசியல் தஞ்சம் கோரும் வழக்குகளில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுக் குடியுரிமை கிடைத்துவிட்டால் ஐயப்பனைக் காண கேரளா போகலாம் அல்லது வீட்டாரைக் கூப்பிட்டு சுற்றுலா போகலாம் போன்ற கனவுகளுடன் குடியுரிமைக்காகக் காத்திருப்போரும் என ஒவ்வொரு தரப்பும் தத்தமது மாற்றேட்டுச் சட்டத்திலிருந்து இந்த நடைபெறவிருக்கும் சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தல் குறித்த விடயங்களை நோக்குகின்றனர்.

அத்துடன் ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வர நேர்ந்தால் தமிழரைப் பகடைக் காயாக வைத்து ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு அழுத்தங்களைக் கொடுத்துத் தன்வயப்படுத்தும் முயற்சியை மேற்குலகு செய்யும் போது அதனைத் தமது அரசியல் வெற்றி என மிகவும் பாமரத்தனமாக நம்பும் ஐந்தறிவர்களும் அல்லது அதை அரசியல் வெற்றியாகக் காட்டி ஜெனிவாத் திருவிழாவில் தமிழர்களை நம்பிக்கைகொள்ளச் செய்து உளமகிழ்வடையும் ஏமாற்றுப் புரட்டர்களும் ராஜபக்ச ஆட்சி வராதா எனக் காத்துக்கிடக்கின்றனர்.

இந்திய நரபலியாளர்களினது முழுமையான திட்டமிடல் மற்றும் நெறிப்படுத்தலிலும் மேற்குலகின் முழு ஒத்துழைப்பிலும் சீனா, பாகித்தான் போன்ற நாடுகளின் போர்ப்பொருண்மியமீட்டும்  முனைப்பிலும் சிறிலங்கா அரசால் தமிழர்களை வகை தொகையின்றிக் கொன்று குவித்து தமிழர்களிற்கு காப்பரணாக நின்ற புலிகளின் தலைமையிலான தமிழர்களின் மறவழிப் போராட்டத்தை அழித்த பின்பு சிங்கள மக்களில் பலரால் தூக்கிக்கொண்டாடப்பட்ட மகிந்த ராஜபக்சவின் ராஜபக்ச குடும்பத்தில் எவரேனும் இனிமேல் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதியாக வரக் கூடாது என்ற நோக்கே மேற்குலகிடம் இருக்கிறது. ஏனெனில், தமிழினக்கொலைக்குப் பின்பான மீள்கட்டுமானப் பணிகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமே மகிந்த ராஜபக்ச முதலிடம் கொடுத்ததோடு போரின் பின்பாக அமெரிக்க நலனிக்கிசைவாக நிறைவேற்றுவதாகக் கொடுத்த உறுதிமொழிகள் பலவற்றினை மகிந்த அரசு வேண்டுமென்று கிடப்பில் போட்டு அமெரிக்கத் தலைமையிலான மேற்குலகிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.

எனவே ராஜபக்ச குடும்பத்தில் ஒரு ஆளுமை மீண்டும் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதியாக வரக்கூடாது என்பதனை முதன்மை நோக்காகக் கொண்டு மேற்குலகின் வழிகாட்டலில் 19 ஆம் திருத்தச் சட்டம் வரையப்பட்டு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்பாக சிங்களதேசம் எதிர்கொள்ளும் முதலாவது தேர்தலாக இந்த எட்டாவது சனாதிபதித் தேர்தல் அமையவிருக்கிறது. 2 தடவை மட்டுமே ஒருவர் சனாதிபதியாக இருக்கலாம் எனச் சட்டத்திருத்தம் செய்ததன் மூலம் மகிந்தவுக்கும், இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் சிறிலங்காவின் சனாதிபதியாக முடியாது எனச் சட்டத்திருத்தம் செய்ததன் மூலம் கோத்தபாய மற்றும் பசிலுக்கும், மற்றும் 35 அகவைக்குட்பட்டவர் சனாதிபதியாக வர முடியாது எனச் சட்டத்திருத்தம் செய்ததன் மூலம் நாமலுக்கும் என 19 ஆம் திருத்தச் சட்டம் ராஜபக்ச குடும்பத்திலிருந்து மீண்டும் ஒருவர் சனாதிபதியாகாமல் பார்த்துக்கொள்ளும் நோக்குடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

எனவே, கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமையைத் தூக்கி எறிந்தவுடன் தலையைச் சொறிந்து விட்டுப் பல்லிளிக்கும் நிலையில் அமெரிக்காவும் அதனது கட்டுப்பாட்டிலிருக்கும் மேற்குலகும் இருக்காது என்பதை விளங்கப் பெரிய அரசியல் அறிவு தேவைப்படாது.  ஊடகர் லசந்த கொலை, கீர்த் நோயர் கடத்தல், மிக் போரூர்தி முறைகேடு, “Avant Garde” விடயம், அரச உடைமைகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக நிலுவையில் இருப்பதும் தொடர்ச்சியான உசாவலில் இருப்பதுமான FCID தொடுத்த வழக்குகள் என கோத்தாபாயவின் சனாதிபதிக் கனவு முயற்சிக்குக் கூரிய ஆப்படித்து நிறுத்தும் வித்தைகள் மேற்குலகிடம் போதுமானளவு உண்டு.

19 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம்  நாடாளுமன்றப் பதவிக்காலம் நாலரை ஆண்டுகள் முடிவடைந்த பின்பே சனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என்றான பின்பு சனாதிபதியின் நிறைவேற்றதிகாரம் என்பது பெருமளவில் கேள்வுக்குள்ளாகியதுடன் சனாதிபதியின் பதவிக்காலமும் 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு சனாதிபதியின் அதிகார வரம்பும் பெருமளவில் 19 ஆம் திருத்தச் சட்டத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாலும் 2 தடவைக்கு மேல் சனாதிபதியாக வர முடியாதென்ற நிலை 19 ஆம் திருத்தச் சட்டத்தினால் ஆனதினாலும் 19 ஆவது திருத்தச் சட்டப்படி தனது மகன் சனாதிபதியாகும் அகவைக்கு வரவில்லையென்பதாலும் இந்தச் சனாதிபதித் தேர்தலை தனக்கான வாழ்வா சாவா போராட்டமாக மகிந்த ராஜபக்ச நோக்கவில்லை என்பதே உண்மை. கோத்தாபயவின் சனாதிபதி வேட்பாளர் கனவு தகர்க்கப்படும் போது தினேஸ் குணவர்த்தனவையோ அல்லது சிரந்தியையோ முன்னிறுத்தும் தெரிவுகள் மகிந்தவுக்கு இருக்கும் போது தனது மனைவி சிரந்தியை சனாதிபதி வேட்பாளராக்கும் முடிவையே மகிந்த மேற்கொள்வர்; மண்ணைக் கவ்வுவார் எனச் சொல்லலாம். 19 ஆம் திருத்தச் சட்டத்தின் பின்பாக சனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டு பிரதமரின் அதிகார வரம்பு உயர்த்தப்பட்ட நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு வெற்றியீட்டிப் பிரதமராகும் எண்ணமே மகிந்த ராஜபக்சவிடம் உண்டு.

நிலைமை இவ்வாறிருக்க, எந்தவொரு அரசறிவாளரினதும் கணிப்புகளிற்கு அப்பாற்பட்ட முடிவுகளை எடுக்கும் சிந்தனைச் சித்தனும் அரசறிவாளர்களினை வியப்பிற்கு உள்ளாக்கிவிட்டு உளவியலாய்வாள‌ர்களின் மூளைகளைக் கசக்கிப் புளிய வைத்துள்ள சிறிலங்காவின் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தற்போதைய நகர்வுகளைக் கூர்ந்து பார்ப்பதிலிருந்து சிறிலங்காவின் உலக அரசியலை நோக்கலாம்.

Millennium Challenge Corporation (MCC) என்ற அமெரிக்க நிறுவனம் 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக இலங்கைக்கு வழங்கவிருக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் சனாதிபதி மைத்திரிபால தவிர்த்து வருகின்றார். ஒருவேளை இந்த சனாதிபதி கையெழுத்திடாவிட்டால் அடுத்த சனாதிபதி கையெழுத்திடுவார் என சிறிலங்காவின் நிதியமைச்சரும் அவரது 40 ஆண்டுகள் அரசியல் வாழ்வின் நிறைவையொட்டிக் கொண்டாடப்பட்ட விழாவிற்கு அமெரிக்காவிலிருந்து நேரில் வருகை தந்த ஐ.நா வுக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த சமந்தா பவர் என்பவரினால் பாராட்டி வாழ்த்தப்படும் அளவுக்கு அமெரிக்காவிற்கு மிக நெருக்கமானவருமான மங்கள சமரவீர தெரிவித்தார்.

இசுலாமிய அடிப்படைவாதிகளினால் உயிர்த்த‌ ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்பாக நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவிற்கும் சிறிலங்காவிற்குமான இராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட மைத்திரிபால சிறிசேன மறுத்து வருகிறார்.

லெப். ஜெனரல் சவேந்திரசில்வாவினை இராணுவத் தளபதியாக நியமித்தமை அமெரிக்காவிற்கும் சிறிலங்காவிற்குமிடையிலான இராணுவ ஒத்துழைப்பையும் அமெரிக்காவின் சிறிலங்கா மீதான முதலீட்டையும் பாதிக்கும் எனக் கடுந்தொனியில் அமெரிக்காவின் இராசாங்க திணைக்கள அதிகாரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலே சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களிலிருந்து சிறிலங்காவின் சனாதிபதி மைத்திரி அமெரிக்காவுடன் நேரெதிர் நிலையிலிருந்து முரண்படுகிறார் என்பது துலாம்பரமாகிறது. அத்துடன் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் தேதியன்று அரசியலமைப்பிற்கு முரணாக, சூழ்ச்சியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினைத் தூக்கிவிட்டு அடாத்தாக மகிந்த ராஜபக்ச பிரதமராகியமையைப் பற்றிய தெளிவும் இங்கே தேவைப்படுகிறது.

பொருண்மிய வளர்ச்சி தொடர்பான அனைத்து விடயங்களையும் ரணிலே கடந்த ஆட்சியில் கையாண்டிருந்த நிலையில் இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் பலதும் நடப்பு ஆட்சியில் இழுத்தடிக்கப்பட்டே வந்தன. இதைத் தொடர்ந்து ரணிலை இந்தியாவுக்கு அழைத்த மோடி இந்தியாவின் திட்டங்கள் இழுத்தடிக்கப்படுவது தொடர்பில் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.     இதனால் தன்னால் சிங்கள மக்களிடத்தில் துட்டகாமினி ஆக்கப்பட்ட மகிந்தவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர இந்தியாவின் ஆளும்வர்க்கங்கள் முடிவு செய்ததன் விளைவாகவே மோடி அரசில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சுப்பிரமணிய சுவாமி என்ற பெயர் பெற்ற அரசியல் மற்றும் பல முறைகேடான வேலைகளுக்கான முகவர் நேரில் சிறிலங்கா சென்று மகிந்த ராயபக்சவைச் சந்தித்து தனது “Virat Hindustan Sangam” என்ற அமைப்பின் வாயிலாக மகிந்தவை இந்தியாவுக்கு அழைத்து மோடி உட்பட்ட மிக முதன்மையானோருடனான சந்திப்புகள் மகிந்தவிற்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. அத்துடன் மகிந்தவுடனான இந்தியாவின் ஒட்டான உறவு பல வடிவங்களில் வெளிப்படலாயின. “இந்தியா எமது நெருங்கிய உறவினன். சீனா எமது நீண்ட கால நண்பன்” என்று இந்தியாவில் வைத்துத் தனது கொள்கையை வெளிப்படையாக மகிந்த ராயபக்ச அறிவித்தார். எனவே, இந்த நிகழ்வின் பின்பாகவே விரைவு நகர்வாக 2018-10-26 அன்று ரணிலைத் தூக்கிவிட்டு மகிந்தவைப் பிரதமராக்கிய இந்தியாவின் முயற்சி வெறும் 50 நாட்களில் மேற்குலகின் முயற்சியால் அவர்களது சிறிலங்காவின் முகவர்கள் மூலம் முறியடிக்கப்பட்டு இந்தியாவின் மூக்கு மீண்டும் ஒரு தடவை சிறிலங்காவில் உடைக்கப்பட்டது.  இதிலிருந்து மேற்கூறிய மைத்திரியின் வெளிப்படையான அமெரிக்க எதிர் நடவடிக்கைகள் இந்தியாவின் வழிகாட்டலில் தான் நடைபெறுகிறது என்பது நிகழ்கால அரசியலைச் சரியாக நோக்குபவர்களுக்குத் தெரியும்.

உண்மையில், இருதுருவ உலக ஒழுங்கின் போது சோவியத் ரசியாவின் பக்கம் சார்ந்திருந்த இந்தியாவுக்குத் திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் கடுஞ்சினத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அதைத் தடுக்கும் முகமாகவே இந்தியா விரைந்து செயற்பட்டு இந்தியா- சிறிலங்கா ஒப்பந்தத்தை ஏற்படுத்தி சிறிலங்கா மீதான தனது மேலாதிக்கத்தை உறுதி செய்து கொண்டது. பின்னர் சோவியத் உடைந்து ஒருதுருவ உலகப் போக்கு அமெரிக்கா தலைமையில் 1991 இன் பின்னர் ஏற்பட்டதைத் தொடர்ந்து மெதுமெதுவாக அமெரிக்கா பக்கம் சாய்ந்து சென்ற இந்தியாவின் வெளியுறவுப் போக்கு காங்கிரசின் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணுவாற்றல் ஒப்பந்தத்தின் (India United States Civil Nuclear Agreement) பின்பாக இந்தியா அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான அடியாளாகவும் அடிவருடியாகவும் உலக அரசியலில் இந்தியா செயற்பட்டது. அமெரிக்காவின் வல்லாண்மையில் அதிர்வுகள் ஏற்படும் படியான மாற்றங்கள் உலகளவில் நடந்துவருவதால் அமெரிக்காவின் கண்ணசைவில் முடிவெடுக்கும் கட்டத்தைப் பலநாடுகள் தாண்டி வருகின்றன. உக்ரேன் விடயத்தில் சறுக்கிய அமெரிக்கா பின்னர் சிரியா விடயத்திலும் சறுக்கிய பின்பு தற்போது ஈரான் விடயத்தில் வாய்ச்சொல் வீரனாகவும் வடகொரிய விடயத்தில் பட்டும் படாமலும் செயற்படுவது அமெரிக்காவின் வல்லாண்மை ஒருதுருவ உலகப்போக்கை மேலும் எவ்வளவு காலத்திற்கு உறுதிசெய்யப் போதுமானது என்ற ஐயுறவு உலக அரசியலில் ஏற்பட்டு விட்டது.

இந்த நிலைமையாலும் மற்றும் RSS என்ற பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பா.ச.க ஆட்சிக்கு வந்த பின்பாக புராண மயக்கத்திலும் சாணாக்கியன் கால சிந்தனைக்கும் இந்தியா பின்தள்ளிப் போய்விட்டதையும் இதனால் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களே தாம் கற்றவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஜெய்ராம் சொன்னால் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா வல்லரசாகும் என்ற சிரிப்பூட்டும் நிலையில் இந்தியா இருக்கிறது.

இதனால் இந்தியா பாரிய பொருண்மிய நெருக்கடிக்குள் மீள முடியாதவாறு சென்று கொண்டிருக்கிறது. அண்மையில் இந்தியாவின் நிதியமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவுமிருந்த சிதம்பரம் கைதாகிய முறை சில உலக அரசியல் செய்திகளையும் சொல்லத் தவறவில்லை.

பா.சிதம்பரம் உலக வங்கிக் குழுமத்தில் உலக வங்கியின் நிதி ஒதுக்கீடுகள் குறித்து வழியூட்டல் கருத்துகள் சொல்லக் கூடிய பதவியில் இருந்தவர். 2007 இல் இவர் உலக வங்கிக் குழுமக் கூட்டத்தில் வாசிங்டனில் ஆற்றிய உரையைக் கண்டு உலக வங்கியின் தலைவர் Zoellick “சிதம்பரம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, பன்னாட்டு பொருண்மிய கட்டமைப்பிற்கே பெரும்பங்காற்றியுள்ளார்” என்று கூறியதாக சிலாகிப்பார்கள். அப்படியாக, பா.சிதம்பரம் உலக வங்கிக் குழுமம் மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் (IMF) போன்ற உலக அரசியலைத் தீர்மானிக்கும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகளில் பதவி வகித்துப் பங்காற்றியவர். இப்படியானவர்களின் பாதுகாப்பினை உலகின் எந்தப் பாகத்திலும் உறுதிப்படுத்தும் வேலையை அமெரிக்காவின் வெளியகப் புலனாய்வு நிறுவனமான CIA செய்வதாகச் சொல்லப்படுகிறது. எனவே இதெல்லாம் கணக்கிலெடுக்கப்படாமல் சிதம்பரம் கைதுசெய்யப்பட்ட முறையிலிருந்து இந்தியா புராண காலத்திற்குப் போய்விட்டது என்பது தெரிகிறது. இது இந்தியா துண்டு துண்டாகச் சிதறுவதை வேண்டி நிற்கும் தேசிய இனங்களிற்கு மகிழ்வான செய்தி தான்.

இந்திய எதிர்ப்புணர்வைத் தீவிரமாகக் கொண்டிருந்த பிரேமதாசாவினை சனாதிபதி வேட்பாளராக்கக் கூடாதென அன்றைய இந்தியத் தூதுவர் டிக்சிட் ஜே.ஆர். ஜெயவர்த்தனவிற்குக் கட்டளையிட்டும் அது கணக்கெடுக்கப்படாமல் பிரேமதாசாவே சனாதிபதி வேட்பாளராகி சனாதிபதியுமாகி ஈற்றில் இந்தியாவை ஓட விட்டதில் ஓர் காரணியாகவும் இருந்தார். மேலும் உயிர்த்த‌ ஞாயிறு தாக்குதலின் பின்னர் அமெரிக்காவின் FBI உளவு நிறுவனமும் அமெரிக்க இராணுவ வருகையின் முனைப்பும் அமெரிக்கா ஏற்படுத்த முனையும் SOFA (Status of Forces Agreement) என்ற உடன்படிக்கையும் கிட்டத்தட்ட ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தை சிறிலங்காவில் ஏற்படுத்துவது போன்ற நிலையை அடைந்துள்ளதாக இப்போதைக்கு ஓரளவுக்குச் சொல்ல இயலுகிறது. இந்த நிலையானது 1987 இல் அமெரிக்க-இந்திய- சிறிலங்கா அரசியல் நிலையை ஓரளவுக்கு ஒத்துள்ளது. 2018-10-26 அன்று பிரதமராகக் கொண்டு வந்த மகிந்தவையும் 50 நாள்களுக்கு மேலாக இந்தியாவால் தக்க வைக்க முடியவில்லை. நிலைமைகள் இவ்வாறிருக்கவே, சிறிலங்காவில் சனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே இதில் இந்தியா ராஜபக்ச தரப்பை சனாதிபதியாக்குவதில் உறுதியாக முடிவெடுத்து வேலைகளில் இறங்கும் என்பதை நூற்றுக்கு நூற்றுக் கூறு உறுதியாகச் சொல்லலாம்.

கோத்தபாய சனாதிபதி வேட்பாளராக முடியாதவாறு முட்டுக்கட்டை இறுக்கப்பட்டு சிரந்தி ராஜபக்ச வேட்பாளர் ஆகும் நிலை வரும். எது எப்படியோ ராஜபக்ச தரப்பின் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை சனாதிபதிபதியாக்க முடியுமா என்பதைக் குறித்து நோக்குவதற்கு சில அரசியற் சூழல்களை நினைவூட்டல் தகும். “நாம் சிறிலங்காவில் பயங்கரவாதத்தை அழித்து விட்டோம். நான் சனாதிபதியாகினால் பன்னாட்டுப் பயங்கரவாதத்தையும் அழிப்போம்” என கோத்தபாய அண்மையில் பேசியதிலிருந்து அவர் முசுலிம்களுக்கு அச்சமூட்டுவதாகவும் உண்மையில் முசுலீம்களுக்கெதிராக வெறுப்புடன் செயலாற்றும் சித்தத்துடனே உள்ளார் என்பது பழைய நிகழ்வுகளை வைத்து முசுலீம்கள் நன்கறிவர். தமிழர்களின் வாக்கு வங்கியைப் பொறுத்தளவில் (மலையகத் தமிழர்கள் அடங்கலாக), சனாதிபதித் தேர்தல் என்று வரும் போது UNP இற்கு வாக்களித்துப் பழக்கப்பட்டவர்கள் என்பதோடு ராஜபக்ச தரப்பைத் தமிழர்களைக் கொன்றொழித்த கொலைகாரக் கூட்டமாகப் பார்க்கும் மனநிலையே தமிழர்களிடம் உள்ளது. எனவே யார் சொல்லியும் தமிழ் மக்களின் வாக்குகள் ராஜபக்ச தரப்பிற்குப் போகும் நிலை பெருமளவுக்கு இராது. எனவே தமிழர்கள் மற்றும் முசுலீம்களது வாக்குகளைப் புறக்கணிக்கத்தக்க அளவிலேயே வாங்கக் கூடிய நிலையிலிருக்கும் ராஜபக்ச தரப்பு முற்றாக சிங்கள மக்களின் வாக்கு வங்கியிலேயே தங்கியுள்ளது. ஒட்டுமொத்த சிங்களவர்களில் 70% ஆனோர் வாக்களித்தாலே சிறிலங்காவில் 50% வாக்குப் பலமாக அது இருக்கும். இந்த நிலையில் தமிழர், முசுலீம்களின் வாக்கு வங்கியை அடைய முடியாத ராஜபக்ச தரப்பும் அதனை ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டு வர விரும்பும் தரப்பும் தலையைப் பிய்த்தபடி பல சூழ்ச்சிகளைத் திட்டமிடவே செய்யும்.

சனாதிபதியாகத் தெரிவாக வேண்டுமெனின் 50% வாக்குகளைப் பெற வேண்டும். இது இரு கட்சிப் போட்டி முறை நிலவும் போது ஐயுறவின்றி நிகழக் கூடியது. ஆனால் மூன்றாவது அணியொன்று ஒரு சுயேட்சை போன்றில்லாமல் ஒரு வலுவான‌ அணியாகக் கட்டியெழுப்பப்பட்டு ஒரு 10% வாக்குகள் உடைத்தெடுக்கப்பட்டால், முதன்மைப் போட்டியாளர்களிற்கிடையில் மிகப் பெருமளவு வாக்கு வேறுபாடு நிகழாத போது முதன்மைப் போட்டியாளர்கள் இருவரும் 50% வாக்குகள் பெற்று சனாதிபதியாக முடியாத நிலை உருவாகும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் தோல்வி உறுதியான மூன்றாவது அணிக்கு வாக்களித்தோரின் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணப்பட்டு அதனையும் இரு முதன்மைப் போட்டியாளர்களினதும் வாக்குகளில் முறையே சேர்த்து வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர். சிறிலங்காவின் தேர்தல் வரலாற்றில் இதுவரை இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு சனாதிபதி தேர்வுசெய்யப்பட்ட நிலை ஏற்படவில்லை என்பதை இங்கு சுட்டலாம்.

இந்த முறை JVP தனது தலைமையில் ஒரு மூன்றாவது அணியமைத்து அதன் வேட்பாளராகத் தனது தற்போதைய தலைவரான அனுரகுமார திசாநாயக்கவைக் களமிறக்கியுள்ளது. உண்மையில் தனது கட்சியின் தன்முனைப்பில் தனது செல்வாக்கைக் கூட்டிக்கொள்ளும் உத்தியாகவும் தனது பெயரால் ஒரு கொந்தளிப்பை உருவாக்கவும் JVP நடைபெறவிருக்கும் சனாதிபதித் தேர்தலில் பங்கேற்கவிருக்கிறது. கடந்த 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 4.87% வாக்கு வங்கியும் 2018 உள்ளூராட்சித் தேர்தலில் 5.75% வாக்கு வங்கியும் வைத்திருக்கும் JVP இன் வாக்கு வங்கி ஓரளவு உறுதியானதே. இதனுடன் ராஜபக்ச தரப்பிற்குக் கிடைக்கும் தடுமாறும் (Floating Vote Bank) வாக்குகளில் ஒரு பகுதியும் UNP இற்குக் கிடைக்கும் தடுமாறும் வாக்கு வங்கியின் ஒரு பகுதியும் JVP இற்குக் கிடைக்கலாம்.

தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 4.62% வாக்கு வங்கியையும் பின்னர் 2018 உள்ளூராட்சித் தேர்தலில் 2.73% வாக்குப் பலத்தையே ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் வாக்குகளோடு ஒப்பிடுகையில் பெற்றுள்ளது. எனவே, 5.75% வாக்கு வங்கி வைத்திருக்கும் JVP இனால் இந்த சனாதிபதித் தேர்தலில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்திலும் குறைவான தாக்கத்தையே தமிழர்தேசம் தனக்குள் ஒற்றுமையுடன் தனித்து வேட்பாளரை நிறுத்தி எதிர்கொண்டால் கூட ஏற்படுத்த முடியும் என்ற சூழலே நிலவுகிறது.

ஏன் இதனைச் சொல்ல நேர்கிறதென்றால், புவிசார் அரசியலை இந்தியக்கொள்கை வகுப்பாளர்களுக்கு (அவர் கொள்கை வகுப்பாளர்கள் என நம்பி பேசுவது அடிமட்ட உளவுத்துறை அதிகாரிகள் தான் என்பது வேறு கதை) புரியவைத்து தமிழீழத்தின் புவிசார் மூலோபாய அமைவிடத்தை (Geostrategic Location) அவர்களுக்குப் புரிய வைத்து தமிழீழம் பெற்றுத்தருவதற்காக இந்தியாவில் தான் தங்கியிருப்பதாக பிறருக்குச் சொல்லிச் சொல்லி அதையே தானும் நம்பிவிட்ட உளநிலையில் இருக்கும் மு.திருநாவுக்கரசு என்ற முன்னாள் ஆய்வாளரும் பின்னாளில் இந்தியப் பித்தம் பிடித்துச் சித்தம் கலங்கியவர் தமிழர்கள் எப்படிச் சிறிலங்காவின் சனாதிபதியைத் தீர்மானிக்கலாம் எனவும் ஒரு வழியைச் சொல்லியிருப்பதாகவும் அவர் கூறிய அந்த உத்தியின் உள்ளார்ந்த விடயத்தை எடுத்து இந்த முறை சனாதிபதித் தேர்தலில்  அந்த உத்தியைப் பயன்படுத்துவதென்றால் தமிழ் மக்கள் JVP இற்கு வாக்களிக்க வேண்டுமாம். பின்பு தமிழ் மக்கள் இரண்டாவது விருப்பை யாருக்கு அளிக்கிறார்களோ அவர் தான் சனாதிபதியாக வருவாராம் என்றும் தமிழ் மக்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கை தாம் அளிப்பதற்கான பேரம்பேசலில் முதன்மையான இரண்டு தேசியக் கட்சிகளுடன் ஈடுபட வேண்டும் என பத்தியாளர் நிலாந்தன் கூறியுள்ளார். (திருநாவுக்கரசின் சூத்திரம் யாதெனில் தமிழ்மக்கள் தனித்து ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டுமாம். அப்பிடி நிறுத்திவிட்டால் இரண்டு சிங்கள தேசியக் கட்சிகளும் 50% பெறாதாம். அதனால் தமிழ்மக்களின் இரண்டாவது விருப்புவாக்குகள் எண்ணப்பட்டுத் தமிழர்தானாம் சிறிலங்காவின் சனாதிபதியைத் தெரிவு செய்வார். உண்மையில் தமிழர் தனித்து நின்றால் UNP இற்கு போகும் வாக்குகள் தடுக்கப்பட்டு மிக எளிதாக ராஜபக்ச தரப்பு சிங்கள ஆதரவுடன் தேர்தலில் வெல்லும். வேறெதுவும் நடக்காது) கேளுங்கள்….தமிழ் மக்கள் JVP இற்கு வாக்குச் செலுத்திவிட்டு தமது இரண்டாவது விருப்பு வாக்கை வழங்குவதற்காக முதன்மையான இரு கட்சிகளுடன் பேரம் பேச வேண்டுமாம் (சிரிக்காதீர்கள்…. தமிழர்களின் இரண்டாவது விருப்பு வாக்கு யாருக்கெனப் பேரம் பேசுவோம். சரியா?). இப்படி நிலாந்தன் கூறுவதனால் வியப்படைய ஏதுமில்லை. ஏனெனில் அவர் ஏலவே விக்கினேசுவரனின் ஊதுகுழலாக இருந்தார் என்பதிலிருந்து அவரின் ஆய்வறிவின் வரம்பையும் இந்திய நலன்கட்காக‌ ஒத்தூதும் குள்ளநரித்தனத்தையும் விளங்கிக்கொண்டிருக்கலாம். உண்மையில் நிலாந்தன் தனது கட்டுரையில் கிளுக் கிளுக் காட்டி விட்டுக் கடைசியாகத் தமிழ்மக்கள் JVP இற்கு வாக்களிக்கலாம் என்று மு.திருநாவுக்கரசின் சூத்திரத்தை உய்த்தறிந்து ஒரு பெறுதிச் சூத்திரத்தைப் பெற்றுச் சொல்வதாகச் சொல்கிறார். உண்மையில் அவர் வந்து நிற்கும் இடமெதுவெனில் எக்காலத்திலும் ராஜபக்ச தரப்பிற்கு வாக்களிக்க அணித்தமாக இல்லாத பெரும்பான்மையான தமிழர்களின் வாக்குகள் UNP இற்குச் செல்லாமல் பார்த்துக்கொள்வதன் மூலம் ராஜபக்ச தரப்பிற்கு சனாதிபதியாகும் வாய்ப்பைக் கூட்டும் இந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்றுவது தானன்றி வேறெதுவுமில்லை.

நிலாந்தன் பூச்சுற்றுவது போல ஒட்டுமொத்த தமிழ் மக்கள் JVP இற்கு வாக்களித்துவிட்டு எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து தமது இரண்டாவது விருப்பு வாக்கை இரண்டு பெரும் கட்சிகளில் ஒன்றுக்கு (தமிழ் மக்களைப் பொறுத்தவரை அது UNP என்று நேரடியாகச் சொல்லலாம்) அளித்தாலும் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணும் நிலை சிறிலங்காவின் வரலாற்றில் முதன்முதலாகத் தோன்றினாலும், அதனையும் JVP இற்கு வாக்களித்த சிங்களவர்களே தீர்மானிப்பார்கள் ஏனெனில் அவர்களுக்கு தற்போது 5.75% வாக்குகள் ஓரளவு நிலையாக உண்டு. JVP இலிருப்பவர்கள் சிங்களக் கடும்போக்குவாதிகள். ஆகவே, அவர்களின் இரண்டாவது விருப்பத்தெரிவு ராஜபக்ச தரப்பாகத்தான் இருக்கும். எனில், இப்பிடிப் பூச்சுற்றியாவது ஒரு வழியாக ராஜபக்ச தரப்பைக் கொண்டுவர வழி சொல்கிறாரா திருவாளர் நிலாந்தன்? தமிழ்மக்களிற்கு அரசியல்வாதிகள் பற்றி மட்டும் விழிப்பை ஏற்படுத்தினால் போதாது. இப்படியான பத்தி எழுத்தாளர்கள் தொடர்பிலும் அவர்கள் நாசூக்காக யாரின் நலன்கட்காகச் செயற்படுபவர்கள் என்பது தொடர்பிலும் தமிழ்மக்களிற்கு விழிப்பூட்ட வேண்டும். ஏனெனில் இவர்கள் அவர்களிலும் பேரிடரானவர்கள்.

தமிழர்தேசம் தனக்கான அரசியலை முன்னெடுக்காமல் சிங்களதேசத்தின் வன்வளைப்பில் சிக்குண்டு இருக்கும் போது, ராஜபக்ச தரப்பின் வருகை தமிழர்தேசத்தில் தமிழர்களின் இயல்பான அசைவுகளைக் கூடக் கட்டுப்படுத்தும் நெருக்கடிகளை இறுக்கும். தமிழர்கள் ஒன்றாகிக் கூடி அரசியல் பேசுவது கூடத் தடைப்படும். தமிழர்களிடத்தில் எந்தவொரு விடுதலைப் போராட்ட முனைப்பும் இல்லாத காலத்தில் அப்படியானதொரு நெருக்கடி வர நேரில் தமிழர்கள் நாட்டை விட்டுப் புலம்பெயரவே செய்வர். இது எக்காலத்திலும் தமிழர்களுக்கு மீண்டெழ வழியில்லாத பின்னடைவாகிவிடும்.

சரி விடுங்கள். ராஜபக்ச தரப்பு சனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்புத் துளியளவும் இல்லை. தமிழர்களினதும் முசுலீம்களினதும் வாக்குகள் அந்த தரப்பிற்கு போக வாய்ப்பில்லையென்றான பின்னர் ராஜபக்ச தரப்பு சிங்கள் மக்களின் வாக்குகளில் 65- 70 % வாக்குகளைப் பெற்றால் மட்டுமே வெற்றி என்ற நிலையிலிருக்கும். மேற்குலக நாடுகளின் தூதரகங்களும் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடகங்களும் சிங்கள மக்களிடத்தில் (நடுத்தர மேற்தட்டு மற்றும் மேற்தட்டு) ராஜபக்ச தரப்பிற்கு எதிராகப் பரப்புரை செய்வார்கள். மேற்கிலிருந்து பெருமளவு பணமும் இறங்கும். எனவே, இந்த சனாதிபதித் தேர்தலிலும் ராஜபக்ச தரப்பு வெல்லத் துளியளவு வாய்ப்பும் இல்லை. நாம் தமிழர்தேசத்தின் விடுதலை அரசியல் குறித்துப் பேச வேண்டியுள்ளது. பேசுவோம்.

-சேதுராசா-

2019-09-01

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*