
– முத்துச்செழியன்-
தன்னுடைய முனைப்புகட்கு நாடாளுமன்றத்தில் தேவையான ஒத்துழைப்புக் கிடைக்காவிடில் நாடாளுமன்றத்தைக் கலைக்கவும், தனக்கு உவப்பான நீதியரசர்கள் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கவும், நாட்டு நிலைமை தன்னுடைய அதிகாரத்திற்கும் ஆட்சி நலன்கட்கும் கேடாகும் போது அவசரகாலச் சட்டத்தைக் கொண்டுவந்து காட்டாட்சி புரியவும், ஒடுக்குமுறையாட்சியை முழு அளவில் ஏற்படுத்தவும், முப்படைகளையும் தனது கட்டளைக்குள் வைத்திருந்து நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் குத்தகைக்கு எடுக்கவும், தமிழர்கள் மீது நரபலிவெறியாடிய கொடியவர்களை சட்டம் தண்டித்தாலும் அதனையும் மீறித் தன்விருப்பில் விடுதலை செய்யவும், விரும்பிய நேரத்தில் நாடாளுமன்றக் கூட்டங்களைக் கூட்டவும், கலைக்கவும், நாடுகளுடன் ஒப்பந்தங்கள் என்ற போர்வையில் குறிப்பாகத் தமிழ்மக்களின் தாயகநிலங்களையும் வளங்களையும் வெளியாரின் வேட்டைக்காடாக்கவும் என நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஒடுக்கும் சிறிலங்காவின் சனாதிபதியைத் தேர்வு செய்யும் தேர்தலின் முடிவுகள் பற்றி ஒடுக்கப்படும் தமிழர்தேசம் அக்கறைகொள்ளவோ அல்லது அலட்டிக்கொள்ளவோ வேண்டியதில்லை. ஏனெனில், சிறிலங்காவின் சிங்கள பௌத்த பேரினவாத அரசு என்பது தேர்தல்கள் மூலம் மாற்றப்படக் கூடியதொன்றல்ல; தேர்தல்கள் மூலம் அரசாங்கங்கள் மட்டுமே மாறுகின்றனவே தவிர அரசு மாறுவதில்லை. அப்படியிருக்க, ஒடுக்கும் சிங்களதேசத்தின் நிறைவேற்று அதிகாரங்கொண்ட அதிபராக எவரொருவர் வந்தாலும் தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரச எந்திரத்தினாற் தானியங்கியாக மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் (Structural genocide) தடுத்துவிடப் போவதில்லை; மாறாக ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் சிங்கள பௌத்த நாடாக்கும் நிகழ்ச்சிநிரலை முன்கொண்டு செல்வதன் மூலம் சிங்கள பௌத்த பேரினவாதத்தை மனங்குளிரச் செய்து மீண்டுமொரு தடவை ஆட்சிக்கட்டிலில் ஏறிவிடுவதையே தமது முதன்மை நோக்காகக்கொண்டு சிறிலங்காவின் சனாதிபதிகள் இதுகாறும் செயலாற்றி வந்திருக்கிறார்கள்.
நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி முறைமையை உருவாக்கி அதன் மூலம் சனாதிபதியாகப் பதவியேற்ற ஜே.ஆர் ஜெயவர்த்தன “ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர அனைத்தையும் செய்யக்கூடிய அதிகாரம் நிறைவேற்று அதிகாரங்கொண்ட எனது சனாதிபதிப் பதவிக்கு உண்டு” என்று கூறி இறுமாந்தார். எனவே, ஒடுக்கும் சிறிலங்கா தேசத்திற்கு இவ்வாறான அனைத்து அதிகாரங்களையும் கொண்ட தலைவரைத் தேர்வு செய்வது தொடர்பில் ஒடுக்கப்படும் தமிழர்தேசம் ஏன் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் தமிழர்தேசத்தவர்களிடம் இயல்பாக ஏற்படக்கூடிய அரசியலுணர்வே. சிறிலங்கா தேசத்தின் சனாதிபதியாகப் பதவியேற்பவர்கள் அனைவரும் மகாவம்சத்தின் துட்டகெமுனுக்களாகவே வாழ விரும்புவர் என்ற எச்சரிக்கையுணர்வு ஒடுக்கப்படும் தமிழர்தேசத்தவர்கட்கு இயல்பாக எழவேண்டிய அரசியல் உணர்வாகும். கவுதம புத்தரே சிறிலங்காவின் சனாதிபதியானாலும் மகாவம்சம் சித்தரிக்கும் துட்டகெமுனுவாகவே பாத்திரமேற்பார் என்ற தெளிவை சுமந்திரன் போன்ற அரசியலுணர்வும் விடுதலையுணர்வும் குன்றியோரிற்கும் அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டிய அவலநிலையில் தமிழர்தேசத்தின் அரசியற்பரப்புக் கட்டாந்தரையாகக் கிடக்கின்றது.
முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்ட சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழர்களின் மீதான இனப்படுகொலையுடன் தமிழர்தேசத்தின் நடைமுறை அரசானது (De facto state) முற்றாக அழித்தொழிக்கப்பட்டதன் பின்பாக, அதாவது தமிழர்தேசமானது சிங்களதேசத்தால் முற்றாக வன்கவரப்பட்டதன் பின்பாக, நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் ராஜபக்ச குடும்பமானது ஆட்சிக் கட்டிலில் ஏறுவதைத்தடுக்கும் நோக்கிலேயே தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர். தமிழரை இனவழிப்புச் செய்து தமிழர்களை நட்டாற்றில் விட்ட சிறிலங்காதேசத்தின் தமிழர்களின் மீதான இனவழிப்புப் போரிற்கு அரசியல் மற்றும் இராணுவத் தலைமை தாங்கியதாகப் போர்வெற்றி மமதையில் மென்மேலும் சிங்கள பௌத்த வெறியாட்டமாடிய ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்கு வரவிடுவதில்லை என்ற நோக்கில் தமிழினவழிப்புப் போரை முன்னின்று நடத்திய இராணுவத் தளபதியாகவிருந்த சரத்பொன்சேகாவிற்கு 2010 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களித்தனர். உண்மையில், அரசியற் சூழ்ச்சியில் சரத் பொன்சேகாவை வென்ற ராஜபக்ச குடும்பத்தால் “தமிழர்மீது வன்மமும் தீராப்பகையும் வெறுப்புணர்வும் யாரிற்கு அதிகம்?” என ஒரு போட்டி சரத் பொன்சேகாவுடன் வைத்திருந்தால் அவரை வென்றிருக்கவியலாது. அப்படியிருக்க, ராஜபக்சக்களை மட்டுமே தமது இனப்பகைவர்களாக நோக்கும் பாங்கு தமிழர்கட்கு எப்படி ஏற்பட்டது?
தமிழர்களின் நிலங்களை வன்கவர “ஜெயசிகுறு” என்ற இனவழிப்புப் படைநடவடிக்கையை சிறிலங்கா அரசு பாரிய வலுவுடன் முன்னெடுத்தபோது தமிழர்தேசம் புலிகளின் புரட்சிகரத் தலைமையின் வழிகாட்டலில் அந்தப் படைநடவடிக்கையை முறியடித்ததோடு மட்டுமல்லாது இழந்த தமிழர்தாயக நிலங்களையும் மீட்டெடுத்தவாறு, சிறீலங்காவின் அரச பயங்கரவாத எந்திரத்தை அடித்துத் தகர்த்து ஆழக்கீறித் தீயிலிட்டு சிங்களக் கொட்டத்தை முடக்கிப்போட்டு, தமிழர்களை இனி இராணுவ வழியில் ஒடுக்கிவிட இயலாது என்றும் மாறாக அத்தகைய இராணுவ வழிமுறை மூலமான சிறிலங்காவின் முயற்சியானது ஈற்றில் சிறிலங்கா அரசையே தகர்த்துவிடும் என்ற வரலாற்றுச் செய்தியைப் புத்தாயிரமாண்டின் தொடக்கத்தில் தமிழர்தேசமானது மறவழியில் சிறிலங்கா தேசத்திற்கும் உலகின் வல்லாண்மையாளர்கட்கும் உணர்த்தியது. தமிழர்தேசத்தின் போர்க்கள முனைகளில் தமிழரின் தீரத்தைக் காட்டியதோடு மட்டுமல்லாது, தொடர்ச்சியாக சிறிலங்காவின் பொருண்மிய இலக்குகளின் மீதான தாக்குதல்களைத் தொடுத்துத் தமிழர்தேசத்தை ஒடுக்கும் சிங்களதேசத்தால் இனிமேலும் ஒடுக்கிட இயலாதவாறு சிறிலங்காவின் பொருண்மியவலுவும் தமிழர்தேசத்தின் தற்கொடைகளாற் தகர்த்து எறியப்பட்டது. சிறிலங்காவின் மீதான பொருண்மியப் போரில் உச்சந்தொட்டதான கட்டுநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம் மீதான தாக்குதலின் மூலம் ஒடுக்கும் சிறிலங்காவானது மேலும் ஒரு நாடாக நீடிக்க முடியாத முடக்கநிலைக்கு வந்தது. இதனால், சிறிலங்காவில் முதலிட்டால் முதலீடுகட்குப் பாதுகாப்பில்லை; சிறிலங்காவின் துறைமுகங்கட்குச் செல்லும் கப்பல்கட்கான காப்புறுதிக் கட்டணங்கள் விண்ணைத் தொட்டன; சுற்றுலாத்துறை முழுமையாக முடங்கியது; போர்ச் செல்வீனங்களைத் தாக்குப்பிடிக்க இயலாத நிலை; என சிறிலங்கா தன்னை இனிமேலும் இறைமையுள்ள ஒரு நாடாகத் தொடர முடியாத நிலையேற்பட்டுத் தமிழீழத் தனியரசை அமைக்கும் தறுவாயில் தமிழர்தேசம் வந்துநின்ற போது தான் ரணில் விக்கிரமசிங்க என்ற இனக்கொலையாளி மேற்குலக வல்லாண்மையாளர்களினதும் இந்தியாவினதும் முழு ஒத்துழைப்பைப் பெற்று , போரில் வெற்றிகொள்ளப்பட முடியாத தமிழர்தேசத்தைப் பேச்சுக்கு அழைத்துப் பன்னாட்டுச் சூழ்ச்சிவலைக்குள் அகப்பட வைத்துத் தமிழர்தேசத்தை வலுக்குன்றச் செய்வதோடு, அதன் தொடர்ச்சியாகத் தமிழர்தேசத்தின் இருப்பையே அழித்துவிடலாமெனக் கங்கணங்கட்டிச் செயற்பட்டார்.

1987 இல் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாண அவையின் இடைக்கால நிருவாக அலகிற்குத் (Interim Administration) தலைமையாகத் திருகோணமலையைச் சேர்ந்த பத்மநாதனைப் புலிகள் இயக்கம் பரிந்துரைத்தபோது, ரணிலின் மாமனாகிய அன்றைய சனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா வேண்டுமென்றே வடக்கினைச் சேர்ந்த சிவஞானத்தைத் தேர்வு செய்தார். ஏனெனில், கிழக்கினைத் தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைமையானது ஓரவஞ்சனையோடு நடத்துகின்றது என்ற மன உணர்வைக் கிழக்கு மக்கட்கு (தென்தமிழீழ மக்கட்கு) ஏற்படுத்தும் நோக்கத்திலேயே ஜே.ஆர் அவ்வாறு செய்தார். மாமனின் வழியில் வந்த மருமகன் ரணிலும் கருணாவினைப் பயன்படுத்திக் கிழக்கினைப் பிளந்து தமிழர்தாயகக் கோட்பாட்டைப் பொருளற்றதாகச் செய்யும் சூழ்ச்சியை அமைதிப்பேச்சுக் காலத்தைப் பயன்படுத்தி அரங்கேற்றினார். கருணாவைப் பிளந்தாரே தவிர தமிழர்தாயகக் கோட்பாடு எனும் தமிழர்தேசத்தின் நிலவுகையை ரணிலாலே அல்லது அவனது மாமனாகிய குள்ளநரியாலோ அழிக்க இயலவில்லை என்பதை நாம் மனங்கொள்வோம்.

தமிழினவழிப்பில் உச்சந்தொட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்பாக இந்தியா சென்ற மகிந்த ராஜபக்சவும் அதன் பின்பாக 2019 இல் தான் சனாதிபதியாகிய பின்னர் இந்தியாவிற்குச் சென்ற மகிந்தவின் தம்பி கோத்தாபய ராஜபக்சவும் “இந்தியாவின் போரையே நாம் செய்தோம்” என்று கூறித் தமிழினவழிப்பில் முதன்மைப் பங்கெடுத்தது இந்தியாவே என்பதை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆனால், இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் “எனது (ஜே.ஆர்) போரையே இந்தியா செய்கின்றது” என்று கூறி ஜெயவர்த்தன தன்னைச் சிங்களச் சாணாக்கியனாகப் பறைசாற்றினான். இவ்வாறு, சிறிலங்காவின் வரலாற்றில் சிங்களச் சாணாக்கியனாகப் பார்க்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன இறந்தபோது அன்றைய சனாதிபதி கூட 4 வரி இரங்கற் செய்தியை இரண்டு நாள்கள் கழித்தே வேண்டாவெறுப்பாக வெளியிட்டிருந்தார், அரச விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை; ஜே.ஆர் தனது அரசியற் பயணத்தைத் தொடங்கிய கொழும்பு மாநகர அவை கூட ஒரு இரங்கற் கூட்டத்தை நடத்தவில்லை. இன்றைய நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு வந்து சனாதிபதியாகப் பதவியேற்ற ஜே.ஆரின் நிலையே இதுதான். கடந்த தேர்தலில் சிங்களதேசத்தால் அடியொட்ட வெறுத்தொதுக்கப்பட்ட ரணில் கோத்தாபாய வெளியேற வேண்டிய சூழலில் ராஜபக்ச குடும்பத்தின் பின்பலத்தையும் மேற்குலகின் முழு ஒத்துழைப்பையும் பெற்று அரசியலமைப்பின் 40 ஆவது சரத்தைப் பயன்படுத்தி சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதியானார்.
வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தும் வக்கற்றுப்போனதாக சிறிலங்கா வெளிப்படையாக அறிவித்த பின்பாகத் தொடங்கப்பட்ட கடன் மறுசீரமைப்புத் (debt restructuring) தொடர்பான பேச்சுகள் இன்னுமொரு முடிவையும் எட்டாததால், வட்டியுடன் செலுத்த வேண்டிய விண்ணை முட்டும் கடன்களைத் தற்காலிகமாகச் செலுத்தத் தேவையில்லாத காலப்பகுதியில் ரணில் பதவியில் இருப்பதால் கிடைக்கும் ஆறுதலான நிலைமைகளாலும், இந்திய மேலாதிக்கக் கனவுடன் இந்தியா அள்ளிக்கொடுத்த 4.5 பில்லியன் அமெரிக்க டொலரினாலும் ரணிலினால் கொந்தளிப்பற்ற பொருளியற் சூழலை இதுகாறும் ஓரளவு பேணமுடிந்தமையினால், நாட்டைப் பொருளியற் சிக்கலிலிருந்து மீட்கத் தகுதியான மீட்பராகத் தன்னைக் காட்டிக்கொள்ள ரணிலிற்கு இயலுகிறது. இறக்குமதியைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தல் போன்ற சில செயற்கையான வழிவகைகளைப் பயன்படுத்திப் பணபதிப்பைக் கூட்டிக்காட்டும் பாசாங்குத்தனத்தை ரணில் செய்து வருகின்றமை அவரின் தேர்தல்காலப் பரப்புரை நோக்கிலானது என்று அடித்துக் கூறலாம். எவ்வளவு பாசாங்கு செய்தாலும், நிமிர்த்த முடியாத பொருண்மியச் சரிவினை சீர்செய்ய வழியின்றி 15% இலிருந்த மதிப்புக் கூட்டு வரியினை 18% ஆக ரணில் அண்மையில் அதிகரித்திருக்கிறார். கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் முடிவு எட்டப்பட்டு மீண்டும் கடன் செலுத்தும் கடப்பாட்டிற்குள் சிறிலங்கா வரும்போது, பாரிய பொருண்மிய நெருக்கடிக்குள் சிறிலங்கா தள்ளப்படும் என்பதே உண்மையான நிலை. ஆனால், பொருண்மிய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ட மீட்பரெனப் பாசாங்கு செய்துகொண்டும், மொட்டுக் கட்சியில் பெரும்பான்மையின் உடனிருப்பைத் தக்கவைத்துக் கொண்டும், சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்களைத் தன்னிடம் கட்சிதாவ வைத்தும், மேற்குலக மற்றும் இந்தியத் தூதரகங்களுடன் தனக்கிருக்கும் நெருங்கிய உறவைப் பயன்படுத்தியும் எப்படியாவது சனாதிபதித் தேர்தலில் வென்றிட வேண்டும் என்ற முனைப்பில் ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார்.
எனவே, ரணிலிற்கு அரசியற் படுக்கைப் புண் வந்துவிட்டது. அந்தப் புண்ணிலிருந்து பிணநாற்றமும் ஊற்றெடுக்கத் தொடங்கிவிட்டது. அந்தப் பிணநாற்றத்தை மேற்குலக மற்றும் இந்திய நறுமணங்களைப் பூசி மறைக்கப் பார்க்கிறார். ஆனால், பிணநாற்றமும் வெளிநாட்டு நறுமணங்களும் சேர்ந்து பிணநாற்றத்தைக் காட்டிலும் தாங்கிக்கொள்ளவியலாத வாடை ரணிலிலிருந்து உருவாகிறது. நாற்றமெடுக்கும் அந்த வாடையை முகர்ந்து மகிழும் அரியவகை அரசியல் விலங்குகளாக டக்ளஸ், பிள்ளையான், அங்கஜன் போன்றோர் இந்தத் தேர்தல் காலத்தில் வெளிப்பட்டு நிற்கிறார்கள். என்னதான் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினாலும் ஈற்றில் மாமனைப் போலவே மருமகன் ரணிலும் அரசியல் ஏடுகளில் தேடியும் கிடைக்காத ஏதிலிப் பொருளாக இந்தத் தேர்தலுடன் மாறப் போகின்றார். நடக்கட்டும்…. தமிழினவழிப்பிற்கான பன்னாட்டு ஏற்பாடுகளைச் செய்து நாடமைக்கும் தறுவாயில் இருந்த தமிழர்தேசத்தை தமிழினவழிப்பு மூலம் நட்டாற்றில் விடுவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது ரணிலே. அப்படியிருக்க, ராஜபக்சக்களை மட்டுமே தமது இனப்பகைவர்களாக நோக்கும் பாங்கு தமிழர்கட்கு எப்படி ஏற்பட்டது? தமிழினப்படுகொலையை முன்னின்று நடத்தியவர்கள், அதற்கு உயர்மட்டப் பங்களித்தவர்கள், அதற்குத் தலைமை தாங்கியவர்கள், அதற்கு அடித்தளப் பங்களித்தவர்கள் என அனைவர் மீதும் வஞ்சினம் கொள்ளாமல் மட்டுமன்றி அவர்களுடன் உறவாடவும், அவர்கட்கு வக்கற்றுப் போய் வாக்களிக்கவும் அணியமாகும் தமிழினம் ராஜபக்சக்கள் மீது மட்டுமே தம் வஞ்சினத்தைத் தேக்கி வைப்பது எவ்வாறு என்பதற்கு விடைகாண வேண்டும்.

தமிழர்களின் தாயகநிலத்தைக் கூறுபோடுவதன் மூலம் தமிழர்தேசத்தின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குவதற்காக வடக்கு – கிழக்கைப் பிரிக்க வழக்குத் தாக்கல் செய்தமை, புலிகளுடனான அமைதிப்பேச்சுக்களைத் தொடராமல் முழு அளவிளான போர் தொடங்கப்படும் என்று உறுதியளிப்பவர்களுக்கே தமது ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தமை, தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதில் அமெரிக்காவின் பங்களிப்பிற்கு வாழ்த்துத் தெரிவிக்க அமெரிக்கத் தூதரகம் சென்றமை (தமிழர்களை அழிப்பதற்கு ஏகாதிபத்தியத்துடனும் உறவாடுவோம் என்ற கொள்கையையுடைய அரிய வகை இடதுசாரிகள்), தமிழினவழிப்புப் போரின் பரப்புரைப் படையாகச் செயற்பட்டமை, மலையகத் தமிழர்களை இந்திய விரிவாக்கக் கைக்கூலிகள் என்று சிங்கள மக்களிடத்தில் கருத்தேற்றம் செய்தமை, இலங்கைத்தீவில் இனச்சிக்கல் என்ற ஒன்றிருப்பதாக எந்நிலைவரினும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அடம்பிடித்தல் என ஜே.வி.பியின் கடந்தகால வெறித்தனமான சிங்கள பேரினவாத நிலைப்பாட்டை தமிழ் மக்கள் அனைவரும் நன்கறிவர்.
தமிழினவழிப்புப் போரானது நடைபெற்ற காலத்தில் போரை முன்னெடுக்கும் சிங்களத் தரப்பிற்கு எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்காமல் (தனது தனிப்பட்ட தேர்தல் அரசியல் நலன்கட்காகக் கூட அழுத்தங்களைக் கொடுக்காமல்) தமிழினவழிப்பிற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தவர் சஜித் பிரேமதாச என்பதை யாரும் மறந்துவிடலாகாது. ஆட்சிக்கட்டிலில் ஏறாத ஒரு சிங்களத் தலைவர் தமிழினவழிப்பிற்கு எவ்வளவு தொலைவிற்குப் பங்களிக்கவியலுமோ அந்தளவிற்கு சஜித் பிரேமதாச பங்களித்துள்ளார். ஆனாலும், தமிழர்களின் நயன்மையான (legitimate) வஞ்சினம் ராஜபக்ச குடும்பத்தின் மீது மட்டுமே மட்டுப்பட்டுப் போனது ஏன் என்பது பற்றி நாம் தெரிந்து தெளிய வேண்டும்.
தொழிற்சங்க, மாந்த உரிமைத் தளத்தில் தான் இருந்த இளமைக் காலத்தில் தமிழர்களுடன் நெருங்கிப் பழகிய மகிந்தவிற்கு இந்தியா செல்லும் வரை புலிகளை அழிக்க வேண்டும் என்ற எண்ணமும் அழிக்க முடியும் என்ற நம்பிக்கையும் கனவிலும் இருந்திருக்கவில்லை. இந்தப் போரினை முன்னெடுக்க முழு உலகத்தையும் பயன்படுத்தப் போகும் வரைபு வரை இந்தியாவின் தலைமை ஒருங்கிணைப்பிலேயே நடந்தது. தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்ததால் துட்டகாகெமுனு என்ற மகாவம்சப் புரட்டின் தலைமகனின் தரநிலை மகிந்த ராயபக்சவுக்குக் கிடைத்து விட, அவன் ஒரு பாசிச வெறி பிடித்த தமிழினக்கொல்லியாகத் தனது முழுநேரப் பணியைத் தொடர்ந்தான். ஆனால், போரின் பின்பான மீள்கட்டுமானப் பணி ஒப்பந்தங்கள் போரிற்காகக் கடுமையாகப் பங்களித்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்கு அதிகம் கிடைக்கவில்லை. மாறாக, அத்தனை ஒப்பந்தங்களும் இந்தியாவுக்கே சென்றன. வணிகக் கணக்கில் நன்மையில்லை என இந்திய நிறுவனங்கள் கழித்துவிட்ட ஒப்பந்தங்களே உண்மையில் சீனாவிற்கு வழங்கப்பட்டன. “துறைமுகம், விமானநிலையம், நெடுஞ்சாலை என அத்தனை ஒப்பந்தங்களையும் நான் முதலில் இந்தியாவிற்கே வழங்கினேன். அவற்றுள் இந்தியா ஏற்காதவற்றை மட்டும் தான் சீனாவிற்குக் கொடுத்தோம். ஏனெனில் அப்படியான ஒப்பந்தங்களை சீனாவே ஏற்கக்கூடியது” என்று மகிந்த மிகத் தெளிவாகப் பலமுறை இந்திய ஊடகங்களிற்கான செவ்வியில் கூறியுள்ளார். போரின் பின்பான மீள்கட்டுமான ஒப்பந்தங்களில் இந்திய, சீன நிறுவனங்களே அதிக நன்மையடைந்தன. எனவே மேற்குலகு தனக்குவப்பான ஆட்சியான UNP இன் ஆட்சியைக் கொண்டு வரும் நோக்கில் உலகரங்கில் மகிந்தவின் ஆட்சியை நெருக்கடிக்கு உட்படுத்த தமிழர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தியது. அதற்கு பொன்சேகாவையும் பயன்படுத்திப் பார்த்தது. இன்னும் என்னென்னவோ எல்லாம் செய்து பார்த்தது. ஆனால், மேற்கின் இந்த முயற்சிக்கு 2014 இன் நடுப்பகுதி வரை ஒப்புதலளிக்காமல் மகிந்த ராயபக்சவுடன் ஒட்டியுறவாடியே வந்தது இந்தியா. ஆனால், மேற்குலகின் தூதரகங்கள் மகிந்தவின் ஆட்சியை மாற்றத் தீயாய் வேலை செய்த போது, தனது கையை மீறி மேற்குலகினால் ஒரு ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தனது மூக்குடைந்து விடும் என்று பெரிதும் அஞ்சிய இந்தியாவானது, சீன நீர்மூழ்கிக் கப்பல் ஆபிரிக்காவுக்கான தனது வழமையான ஆண்டுப் பயணத்தின் போது வழமைக்கு மாறாக கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுச் சென்றதுடன் மேற்கு இழுத்த ஆட்சிமாற்றம் என்ற தேரின் வடக் கயிற்றில் ஓடிப்போய்த் தொட்டுத் தானும் தேர் இழுத்ததாகப் பாசாங்கு காட்டியதையும் தாண்டி தான் தான் தேரை இழுத்ததாகத் தனது பகுதியில் தனது மேலாண்மையைக் காட்ட, மேற்குப் பெற்ற குழந்தைக்குத் தான் அப்பனாக நின்றது இந்தியா. இவ்வாறாக, சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசின் மீது தமிழர்கட்கு நீடித்திருக்க வேண்டிய தமிழர்களின் நயன்மையான வஞ்சினமானது வெறுமனே ராஜபக்ச குடும்பத்தின் மீது மட்டுமானதாக மட்டுப்படுத்தப்பட்டமைக்குப் பின்னால் மேற்குலகத் தூதரகங்களின் குலையடிப்புகள் உண்டு. மகிந்தவை மிரட்டியோ அல்லது ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியோ தமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ள இனவழிப்பிற்குள்ளான தமிழர்தேசத்தின் வெஞ்சினமானது மேற்குலகிற்குப் பயன்பட்டது. இவ்வாறாகத் தமிழர்களைப் பகடைக்காய்களாக்குவதில் முன்னின்று உழைத்த தரகராகச் சுமந்திரன் காணப்படுகின்றார்.
எனவே, இனிமேலும் எடுப்பார் கைப்பிள்ளைகளாக அயலாரின் நலன்கட்கான அரசியலைச் செய்யாது தமிழர்கள் ஒடுக்கும் சிங்களதேசத்துடன் முற்றாகப் பகைமைகொள்ள வேண்டியதும், சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குட்பட்டு 6 ஆம் திருத்தச் சட்டமூலமான வாய்ப்பூட்டையும் போட்டு விட்டு தேர்தல் அரசியலில் சல்லாபிப்பதை விடுத்து விடுதலை அரசியல் முனைப்புடன் முன்னகர வேண்டியதும், தமிழர்தேசத்தின் நிலவுகைக்குத் தவிர்க்க முடியாதனவாகின்றன. சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசினால் முற்றாக இனவழிப்பிற்குள்ளாகியிருக்கும் போது, தமிழர்தேசமானது மீண்டும் சிங்களதேசத்துடன் எந்த அடிப்படையிலும் இணைந்துவாழ இயலாது என்பதை ஆறறிவுள்ள அனைவரும் நன்குணர்வர். இனவழிப்பிற்குள்ளான தேசத்தின் மீது வெறெந்தத் தீர்வு குறித்தும் நம்பிக்கைகொள்ளுமாறு அழுத்தங்கொடுக்கப்படுவதென்பதும் ஒரு இனவழிப்பு நடவடிக்கையே.
எமது நிலைப்பாடு
அந்தவகையில், இனவழிப்பிற்குள்ளான தமிழர்தேசத்திற்கும் ஒடுக்கும் சிங்களதேசத்திற்குமிடையில் எந்த ஒட்டுமில்லை உறவுமில்லை என்பதில் தமிழர்தேசம் உறுதியாக இருக்க வேண்டும். எனவே, ஒடுக்கும் சிங்களதேசமானது தனக்கான மீயுயர் அதிகாரங்கொண்ட தலைவரைத் தேடும் சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலைத் தமிழ்மக்கள் புறக்கணிப்பதன் மூலம் இதுகால வரையிலும் அறிவிலித்தனமாக ராஜபக்ச குடும்பத்தின் மீது மட்டுமே மட்டுப்பட்டுக் கிடந்த (2009 இன் பின்னர்) தமிழர்களின் வஞ்சினத்தை ஒடுக்கும் சிங்களதேசத்தின் அரச எந்திரத்தின் மீதான வஞ்சினமாக அரசியற்கட்டுறுதி பெறச் செய்து, அதன் மூலம் தமிழர்தேசமானது தனது விடுதலை அரசியலை நோக்கி அணியமாக வேண்டும். எனவே, சிங்களதேசத்தின் அரச தலைவரைத் தெரிவுசெய்யும் தேர்தலைத் தமிழர்தாயகத்தில் தமிழர்தேசம் புறக்கணிக்க வேண்டும்.
எனில், தமிழ்த்தேசியச் சிந்தனைப் பள்ளியாகச் செயற்படும் “காகம்” இணையமானது தேர்தலைப் புறக்கணிப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்த கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் உடன்நிற்கின்றதா என்ற வினா எழுவது நடைமுறை அரசியலில் இயல்பானது. உண்மையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் எமக்கும் எந்த வாய்க்கால் தகராறும் இல்லை. தமிழ்த்தேசியம் என்னும் விடுதலைக் கருத்தியலில் உறுதியான நிலைப்பாட்டோடு பயணிக்கும் அறிவர்குழாம் என்ற வகையில் சிறிலங்காவின் அரசியலமைப்பிற்குட்பட்டுத் தேர்தல் அரசியலில் நின்று வாக்குப் பொறுக்கும் அரசியற் கட்சிகட்கும் எமக்கும் நடைமுறையில் முரண்பாடுகள் மேலிட்டேயிருக்கும் என்பதை மக்கள் மனங்கொள்ள வேண்டும்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் குறித்த எமது மதிப்பீடுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவுசெய்யுமாறு கோரும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பதிவுசெய்யப்படாத ஒரு கட்சியேயாகும். “அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்” என்ற பதிவில் இருக்கும் கஜேந்திரகுமாரின் குடும்பக் கட்சியானது தேர்தல் அரசியலில் தமிழ்த்தேசியப் பூச்சுப் பூசி மக்களை ஏமாற்றவே “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி” என்ற பெயரைப் பதிவு செய்யாமல் பயன்படுத்தி வருகின்றது.
தேர்தல் அரசியலில் தமிழ்மக்கள் பிளவடையாமல் ஓரணியில் நிற்கும் வரலாற்று வாய்ப்பாகச் சுடுகலனின் முனையில் வைத்து உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது 2009 இன் பின்பாகச் செய்த கையாலாகத்தனமான அரசியல் மீது விடுதலை வேட்கை கொண்ட தமிழிளையோர்கள் வெறுப்படைந்த போது, அதாவது வெளியாரின் நலன்கட்கான தேர்தல் அரசியல் மீது வெறுப்புக்கொண்ட இளையோர்கள் விடுதலை அரசியல் மீது உந்தித் தள்ளப்படும் அரசியற் புறச்சூழல் நிலவியபோது, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்ற தனது குடும்பக் கட்சியைப் பயன்படுத்தி “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி” என்ற முலாம்பூசி விடுதலைவேட்கை கொண்ட தமிழிளையோரை மீண்டும் வாக்குப் பொறுக்கும் தேர்தல் அரசியலின் பக்கம் முடக்கிவைத்த அரசியற் சிறுமையைக் கஜேந்திரகுமார் செய்திருக்கிறார்.
தமிழ்த்தேசிய நிலைப்பாடு கொண்டவர்களின் வாக்குகளே தன்னுடைய கட்சிக்கானவை என்பதால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைத்துத் தனது வாக்கு வங்கியைக் கஜேந்திரகுமார் கட்டலானார். இதனால், சிங்கள பேரினவாத அரசின் ஒத்தோடிகளும் சிங்கள பேரினவாதக் கட்சிகளும் பொதுவில் தமிழர் தாயகத்தில், குறிப்பாக வடக்கில், பாரியளவில் தேர்தல் அரசியலில் வளர்ந்து வந்தார்கள். தன்னுடைய வாக்கு வங்கிக்காகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் திட்டுவதையே முழுநேர வேலையாகத் தொடர்ந்த கஜேந்திரகுமார் சிங்கள ஒத்தோடிகள் தமிழர் தாயகத்தில் வாக்கரசியல் மூலம் நிலைபெறுவதற்கு இடமளித்து விட்டார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் வலுக்குன்றச் செய்து தனது குடும்பக் கட்சியை வளர்ப்பது என்ற ஒற்றைச் சிந்தனையில் தான் ஓரளவு உறுதியாகவிருக்கும் இந்திய எதிர்ப்பு என்ற நயன்மையான அரசியல் நிலைப்பாட்டைக்கூட மனங்கொள்ளாமல், விக்கினேஸ்வரன் என்ற இந்திய அடிவருடையை அரவணைத்து “தலைவரின் (மேதகு பிரபாகரன்) மூச்சு; விக்கியின் பேச்சு” என்று பதாகை ஏந்தி முழக்கமிட்டுப் பாரிய அரசியற் தவறைக் கஜேந்திரகுமார் இழைத்தார்.
தமிழீழ விடுதலைக்காக மறவழியில் போராடிய போராளிகள் போராட்டத்தில் இணைந்தமைக்கான காரணம் என்னவென கூறியமை, மாவீரர்நாள் தொடர்பில் சுற்றிநின்ற சூழ்ச்சியாளரின் கதைகட்கு எடுபட்டுப் போனமை, மற்றும் கஜேந்திரகுமாரின் வர்க்கநிலைப்பட்ட மனநிலை வெளிப்பட்ட பேச்சுகள் எனப் பலவற்றில் முரண்பட்டு நிற்கும் நாம், வாக்குப் பொறுக்கும் தேர்தல் அரசியலில் இருப்பவர்களில் இந்திய வல்லூறின் அடிவருடியாகாமல் ஓரளவு நின்றுபிடிக்கும் ஒரு கட்சியின் தலைவராகக் கஜேந்திரகுமார் மீது ஒரேயொரு நேர்மறையான திறனாய்வையும் கொண்டிருக்கின்றோம்.
வாக்குப் பொறுக்கும் அரசியலில் இருக்கும் ஒருவர் எந்த நலன்கட்காக இந்த முடிவை எடுத்திருப்பார் என்பதில் எச்சரிக்கையுணர்வும் விழிப்பும் கொண்டிருக்கும் நாம், தேர்தலைப் புறக்கணிப்பது என்று அவர் தலைமையிலான கட்சி எடுத்திருக்கும் முடிவானது தமிழ்த்தேசியம் எனும் விடுதலைக் கருத்தியலின் வழி சிந்தைகொள்ளும் போது எடுக்கும் முடிவுடன் ஒத்திசைகிறது என்பதால் “தேர்தல் புறக்கணிப்பு” என்ற அவர்களின் பரப்புரையுடன் இந்த விடயத்தில் மட்டும் நாமும் உடன் நிற்போம் என இப்பத்தி வாயிலாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
தமிழ்ப் பொதுவேட்பாளர்

இந்த நிலையில் தவிர்த்துவிட்டுப் போக முடியாத கோமாளிக் கூத்து ஒன்றும் நடக்கின்றது. அந்தக் கூத்தின் பெயர் “தமிழ்ப் பொது வேட்பாளர்” ஆகும். ஆனால், இந்தக் கோமாளிக் கூத்தானது கோமாளியை வைத்து ஆடவில்லை; மாறாக அரியநேத்திரன் எனும் ஒரு “அப்பாவியை” வைத்து இந்தக் கூத்து ஆடப்படுகின்றது.
சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தல் தொடர்பாக செய்திகள் வந்தபோது அனுரகுமார, சஜித், ரணில் ஆகியோரே முன்னிலை பெறக்கூடிய வேட்பாளர்களாக அடையாளங் காணப்பட்டார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து இந்தியப் படைகளிற்குப் பாரிய இழப்பைக் கொடுத்து (4000 இந்திய இராணுவத்தினர் 720 நாள்களாகத் தொடர்ந்த போரில் பலி) இந்தியாவின் வியட்னாமாகத் தமிழீழ மண்ணைத் தமிழீழ விடுதலைப் புலிகள் புரட்சிகரமாக மாற்றியதைப் போலவே தெற்கில் ஜே.வி.பி ஆனது இந்தியாவிற்கு எதிராக மிகத் தீவிரமாகப் போராடி இந்தியாவிற்குத் தலையிடியைக் கொடுத்தது என இந்தியாவின் இராசதந்திரிகளில் ஒருவரான குர்ஜித்சிங் அண்மையில் ஒரு நேர்காணலின் போது கருத்துத் தெரிவித்திருந்தார். என்னதான், காலமும் சூழலும் மாற்றினாலும், புவிசார் அரசியலின் அடிப்படை உண்மைகள் (geopolitical realities)இந்திய எதிர்ப்பை முன்னெடுக்க முடியாத சூழலை ஜே.வி.பி இற்கு ஏற்படுத்தினாலும், ஜே.வி.பி ஆட்சிக்கு வருவதை இந்தியா விரும்பாது என்பதோடு மட்டுமல்லாமல் வெறுக்கவும் செய்யும் என்பது யாவரும் அறிந்ததே.
அத்துடன், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான நாள் முதலே அதனைப் புறக்கணித்து வந்த அப்போதைய தலைமை அமைச்சர் (Prime Minister) ரணசிங்க பிரேமதாச, பின்னர் தான் சனாதிபதியாக வந்ததும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை நடத்தி இந்திய வல்லூறினை இலங்கைத்தீவை விட்டு விரட்டினார். இதனால், தந்தையுடனான கசப்புணர்வால் தனயனையும் இந்தியா மனதார ஏற்கும் நிலையில் இருக்காது என்பது புரிந்துகொள்ளக் கூடியதொன்றே. அத்துடன், கருத்துக் கணிப்புகளெல்லாம் ஜே.வி.பி யின் வெற்றியை ஓரளவு உறுதிசெய்ய பதறிப்போன இந்தியா வேறு வழியில்லாமல் ஜே.வி.யினரை டெல்கிக்கு அழைத்து உயர்மட்டப் பேச்சுகளில் ஈடுபட்டது. அதுபோலவே, சஜித் பிரேமதாசவையும் டெல்கிக்கு அழைத்த போதும் சஜித் அங்கு செல்லவில்லை. இது இந்தியாவிற்குச் சினத்தை ஏற்படுத்தியிருந்தாலும், சனாதிபதித் தேர்தல் முடியும் வரை வெளிநாடுகட்குப் பயணம் செய்வது சஜித்தின் ஆரூடத்தின் (சோதிடக் குறிப்பு) படி உகந்ததல்ல என ஒரு ஆரூடர் கூறிய பேச்சைக் கேட்டே சஜித் இந்தியாவிற்குப் பயணிக்கவில்லை என்று தெரிந்த பின்பே இந்தியா ஓரளவு ஆறுதல் அடைந்தது. மேற்குடன் முரண்டுபிடித்துக் கொண்டு தன்னுடன் மட்டுமே ஒட்டியிருக்கக் கூடிய தன்னுடைய தமிழினக்கொலைக் கூட்டாளியான ராஜபக்ச குடும்பம் இனி ஆட்சிப்பீடமேறும் வாய்ப்பு அறவேயில்லை என்று தெரிந்துபோன இந்தியா வேறுவழியில்லாமல் மேற்கிற்கு உவப்பானவரும் தனக்கு ஓரளவு உவப்பானவருமான ரணிலின் பக்கம் சாயத் தொடங்கியது. மும்முனைப் போட்டியாக நடைபெறும் சனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகள் முடிவெடுக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்பது யாவரும் அறிந்ததே. முன்னர் ரணில் ராஜபக்சக்களின் மொட்டுக் கட்சியின் சார்பாகக் களமிறக்கப்படுவார் என வலுவாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரிற்குத் தமிழர்களின் வாக்குகள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் சனாதிபதித் தேர்தலில் ரணிலிற்கு வாக்களிப்பதை வழக்கமாக வைத்திருந்த தமிழர்களின் வாக்குகள் ரணிலிற்குக் கிடைக்காமல் போவதோடு சஜித் பிரேமதாசவிற்குக் கிடைத்துவிட்டால் சஜித்தின் வெற்றி வாய்ப்பு அதிகமாகும் என்பதால், ரணிலிற்குக் கிடைக்க வாய்ப்பில்லாத தமிழர்களின் வாக்குகளை சஜித்திற்கும் செல்லவிடாமல் செய்யும் ஏற்பாடாகவே “பொதுவேட்பாளர்” என்ற விடயம் இந்திய வல்லூறின் கைகாட்டலில் தொடக்கத்தில் களமிறக்கப்பட்டது.
முன்னாள் அரசியல் ஆய்வாளரும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக இந்திய வல்லூறின் ஒத்தோடியாகவும் இயங்கும் தகிடுதத்தி மு. திருநாவுக்கரசு இந்தியாவால் ஒடுக்கப்படும் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டு ஈழ இந்திய நட்புறவுக் கழகம் என்ற ஒரு அமைப்பை இந்திய உளவுத்துறையின் துணையோடு நடத்தி வருகின்றார். இந்த மு.திருநாவுக்கரசு தான் “தமிழ்ப் பொதுவேட்பாளர்” என்ற கருத்தியலின் மூலவர் எனக் கட்டுரையாளர் நிலாந்தன் அவர்கள் கட்டுப்பாடில்லாமல் கருத்துத் தெரிவித்துவிட்டார். அவர் தெரிவித்த கருத்தானது தமிழ்ப்பொது வேட்பாளரின் ஊற்றுவாய் எதுவென எளிதாய்ப் புரிந்துகொள்ள எம் மக்கட்கு உதவிற்று.
சோதிலிங்கம் என்ற இன்னுமொரு கட்டுரையாளர் இந்தியாவுடன் சல்லாபிப்பதை மறைத்துத் தன்னை ஒரு அரசியல் ஆசிரியராகவே வெளிப்படுத்தி வருபவர். அவரின் அண்ணன் மகன் இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராகி இந்துத்துவ அரசியலைச் செய்து வருவதால் இந்தியத்தின் ஆங்கில நாளேடு ஒன்றில் பணிபுரிகின்றார். சோதிலிங்கம் இந்தியா செல்லும் போது அவர் எங்கு தங்கிநிற்கிறார்; யாருடன் எல்லாம் சல்லாபிக்கின்றார் என்ற விடயங்களை நாம் வெளிப்படுத்துவதற்கு அணியமாகவே இருக்கிறோம். தமிழ்த்தேசிய இனவிடுதலைக்காகத் தான் எழுதியதாகக் கூறும் நூற்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதகரத்திற்கு எடுத்துச் சென்று கொடுத்து அவர்களிடம் வாழ்த்துப் பெற்று, ஒட்டி நின்று எடுத்த புகைப்படத்தையும் பொதுவெளியில் போட்டுப் புகழடையும் குறும்புக்காரராகவே சோதிலிங்கம் இருக்கிறார்.
இந்திய வல்லூறினை நக்கிப் பிழைப்பதைத் தவிரத் தமிழர்கட்கு வேறுவழியில்லை என்று வகுப்பெடுக்கும் ஜதீந்திரா என்ற ஊடகர் இந்தப் பொதுவேட்பாளர் அணிக்காக முன்னின்று உழைக்கிறார். இந்த ஜதீந்திராவின் ஆற்றலிற்கு மீறி “வியொன்” போன்ற இந்திய மேலாண்மைக்கான ஊடகங்கள் ஜதீந்திராவினைத் தமது தொடர்பாளராக்கி அவரது தகுதிக்கு மீறிய ஊடகவெளிச்சத்தினைக் கொடுத்து வருகின்றன. ஜதீந்திரா இந்தியாவின் அடிவருடி என்பது எல்லோரும் அறிந்த விடயம் தான்.
அடுத்ததாக, கோவணத்தைக் கூடக் காவி நிறத்திற்தான் கட்டுவேன் என்று அடம்பிடித்து ஆர்.எஸ்.எஸ் மூடர்கட்கே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்திய மறவன்புலவு சச்சி அவர்கள் இந்தப் பொதுவேட்பாளர் அணியில் இடம்பெற்றிருக்கிறார். “சிவசேனா” என்ற இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் அரம்பர்களின் துணை அமைப்பை ஈழமண்ணில் நடத்தி இந்தியச் சூழ்ச்சிகட்குத் தமிழர் மண்ணில் தளமமைத்துக் கொடுக்கும் மறவன்புலவு சச்சிதானந்தத்துடன் கட்டுரையாளர் நிலாந்தனும் பொதுவேட்பாளரிற்காக இழைத்துக் களைத்து வேலை செய்கின்றார். செய்யட்டும்…. தமிழ்மக்களிடம் அம்பலப்படட்டும்….
சுரேஸ் பிரேமச்சந்திரன் என்பவர் கூட்டமைப்பில் இருந்த காலத்தில் தேர்தலில் வெற்றியீட்ட முடியாமல் தேசியப் பட்டியல் மூலம் தன்னை நாடாளுமன்றம் அனுப்புமாறு கெஞ்சியும், மிரட்டியும் பார்த்து ஈற்றில் வேறு வழியின்றி கூட்டமைப்பை விட்டு வெளியேறிவிட்டுக் கொள்கை விளக்கமளித்துத் தமிழர்களை ஏமாற்றும் பதவிப்பித்தன் என்பதை எம் மக்கள் மனங்கொள்ள வேண்டும்.
சித்தார்த்தன் யாரென்று அவர் முன்னர் பயணித்த புலிகள் அமைப்பிற்கும் புரியவில்லை; அவர் பின்னர் இணைந்து பயணித்த உமா மகேஸ்வரன் அவர்கட்கும் புரியவில்லை; கூடவே சுற்றித்திரிந்த உலகத்தையே தின்னக்கூடிய கிருஷ்ணாவிற்கும் புரியவில்லை; இன்றுவரை சித்தாத்தனின் சித்து விளையாட்டுகள் யாதென யாருமறியவியலவுமில்லை; அவரும் இந்தப் பொதுவேட்பாளர் அணியில் நிற்கிறார்.
ரெலோ இயக்கத்தின் அரசியல் நிலைப்பாடு யாதென அறிவோர் செல்வம் இந்தியாவின் செல்லம் என்பதைப் புரிந்துகொள்வார்கள். இன்னும் விபரமறியாத, விளக்கமில்லாத, வெள்ளந்தித்தனங்கொண்ட பலரும் இந்தப் “பொதுவேட்பாளர்” அணியில் இருக்கிறார்கள். அத்துடன் இந்திய வல்லூறைத் தொழுது திரியும் சில்வண்டுகளும், டெல்கிக்குப் போகும் அன்னக்காவடிகளும் இந்த அணியில் இடம்பிடித்திருக்கிறார்கள். எனவே “தமிழ்ப்பொது வேட்பாளர்” என்ற அணியின் ஊற்றுவாய் நாக்பூரிலும் டெல்கியிலும் தான் இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்வது எளிதானதே.
அனுர, சஜித், ரணில் என்ற மூவரில் ரணில் சிறிலங்காவில் ஆட்சிப்பீடமேறுவதையே இந்தியா விரும்புகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. ரணில் மொட்டுக் கட்சியினால் இறுதி நேரத்தில் கழற்றிவிடப்பட்டாலும், ராஜபக்சவின் அரவணைப்பில் சனாதிபதியாகிய ரணிலிற்கு வாக்களிக்கத் தமிழ்மக்கள் அணியமாகவில்லை என்பதோடு சிங்கள மக்களிடத்தில் ரணிலினால் இந்தத் தேர்தலில் செல்வாக்குப் பெற இயலவில்லை. எனவே, நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு ரணிலிற்குத் துளியேனுமில்லை என்று புரிந்துகொண்ட இந்தியாவானது அனுர வெல்லவே கூடாது என்ற முடிவில் இருப்பதால், வேறுவழியின்றி, சஜித் பிரேமதாசவைக் கையாளும் மனநிலைக்கு வந்துவிட்டது. அதாவது, மனதில் ரணிலை வைத்துக்கொண்டு சஜித்திற்குக் கண்ணடிக்கும் நிலையில் இந்தியா நிற்கின்றது. எனவே, இப்போது டெல்கியில் உருவாகிய தமிழ்ப் பொதுவேட்பாளரிற்கான தேவை இந்தியாவிற்கு இல்லாமல் போகின்றது. அதனாலே தான், தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கவிருக்கும் இரண்டாவது விருப்பத்தேர்வு வாக்கை சஜித்திற்கோ அல்லது ரணிலிற்கோ இடுமாறு பொதுவேட்பாளர் அணியுடன் பின்கதவு வழியால் பேச்சுகள் நடைபெறுகின்றன. பொதுவேட்பாளர் அணியை உருவாக்குமாறு பணித்த இந்திய உளவு அதிகாரி இன்றைய நிலையில் செய்வதறியாது திகைத்துத்தான் நிற்பார் என உறுதியாகக் கூறலாம்.
அண்டை நாடுகளில் செருப்படி வாங்கும் இந்தியாவின் அயலக உறவு
அண்டை நாடுகளைத் தனது மாநிலம் போல ஒடுக்க முயன்ற இந்திய வல்லூறிற்குப் போகுமிடமெல்லாம் செருப்படி விழுகின்றது. இந்திய அடிவருடியென வங்காளதேச மக்களால் வெறுத்தொதுக்கப்பட்ட வங்காளதேசத்தின் தலைமை அமைச்சராகவிருந்த (Prime Minister) இந்தியாவிற்கு உவப்பான சேக் கசீனா மக்கள் போராட்டத்தால் இந்தியாவிற்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
வெறும் 5 இலட்சத்திலும் சற்றுக் கூடுதலான மக்கள்தொகை கொண்ட மாலைதீவில் 2023 வரை அதிபராகவிருந்த இப்ராகிம் மொகமட் சோலி அவர்கள் இந்தியாவின் அடிவருடி என மாலைதீவு மக்களால் இழிவுபடுத்தப்பட்டு ஆட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கிறார். தற்போது சீனச்சார்பினரான மொகமட் மொய்சு மாலைதீவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் காலக்கெடு விதித்து மாலைதீவு மண்ணில் முகாமிட்டிருந்த இந்திய இராணுவத்தை இந்தியாவிற்கு விரட்டியிருக்கிறார்.

கௌதம புத்தர் பிறந்தது இன்றைய நேபாளத்தில் என்பது வரலாற்று உண்மையாகவிருக்க, ஐ.நா வில் இந்தியாவின் தலைமை அமைச்சர் மோடி பேசும்போது புத்தர் இந்தியாவில் பிறந்ததாகக் கூறியதைத் தொடர்ந்து நேபாளத்தில் இந்தியாவின் மேலாதிக்கத்திற்கு எதிரான கருத்துகள் பரவலடையத் தொடங்கியிருக்கின்றது. லிபுலேக், கல்பானி, லிம்பியதுரா போன்ற இந்தியா உரிமைகூறி வைத்திருக்கும் இடங்களையும் தனது வரைபடத்தில் உள்ளடக்கி நேபாளமானது தனது புதிய வரைபடத்தை அண்மையில் வெளியிட்டுள்ளது. கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கில் இந்தியாவின் நேபாள எல்லையை மூடிவிட்டால் நேபாளமே முடங்கிவிடுமென இந்தியா மிரட்டும் போது, தமக்கு வடக்கில் சீனாவுடன் பாரிய எல்லை இருப்பதாகக் கூறி நேபாளம் பதிலிற்கு இந்தியாவை மிரட்டுகிறது. “நிலப்பரப்பிலோ அல்லது மக்கள்தொகையிலோ யாரும் பெரிய நாடாக இருக்கலாம். ஆனால், ஒரு தேசத்தின் இறையாண்மை என்பது பெரிது, சிறிது என்பதில் தங்கியில்லை. இந்தியாவின் இறையாண்மையைக்குச் சமனானதே நேபாளத்தின் இறையாண்மை” என நேபாளத்தின் தலைமை அமைச்சர் கே.பி.சர்மா அண்மையில் அழுத்தமாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். நேபாளத்தை இன்னுமொரு சிக்குமாக்கும் இந்தியாவின் முயற்சி பலிக்காது என்றும் இந்தியாவின் பெரியண்ணை மனப்பாங்கு நேபாள விடயத்தில் எடுபடாது என்றும் நேபாளத்திலிருந்து கண்டனக் குரல்கள் இந்தியாவிற்கு எதிராக எழுகின்றன.
வல்லரசுக் கனவிலிருப்பதாகக் கூறும் இந்தியாவிற்குத் தெற்காசியப் பிராந்தியத்திலேயே செருப்படி விழுவதைக் கண்ணுற்றுக் கொஞ்சம் அடக்கி வாசிக்கத் தொடங்கியிருக்கிறது இந்தியா. தன்னை அனுமான் என நினைத்துச் சுற்றித் திரியும் வெளி அலுவல்கள் அமைச்சர் ஜெய்சங்கரும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அரம்பன் அஜித் டோவாலும் அண்மைக்காலமாக வெளிக்காட்டும் உடல்மொழியில் கொஞ்சம் அடக்கம் தெரிகின்றது. அண்மையில் கொழும்பிற்கு வந்திருந்த அஜித் டோவால் அனைத்து சனாதிபதி வேட்பாளர்களையும் சந்தித்துப் பேசித் தாம் யாருடன் சாயவில்லை என்றும் யார் ஆட்சிப்பீடமேறினாலும் இணைந்து வேலை செய்வோம் என்றும் கூறி அண்டை நாடுகளுடனான உறவில் எல்லைமீறி ஆடித்திருந்த இந்தியா தற்போது தற்காப்பு நிலையை எடுத்திருப்பதை தனது நடத்தைகளால் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழர் தரப்புடன் பேசிய அஜித் டோவால் “தமிழர்கள் ஓரணியில் ஒருமித்த நிலைப்பாட்டுடன் இருப்பது தான் பலம்” என்று கூறியிருக்கிறார். தற்போது இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராகவிருக்கும் அஜித் டோவால் போன்ற உளவுத்துறை அரம்பர்கள் சொன்ன கூற்றை ஒரு அரசியற் தலைவரின் கூற்றுப்போல வெள்ளந்தித்தனமாக நோக்கக் கூடாது. “தமிழர்கள் ஓரணியில் ஒருமித்த நிலைப்பாட்டுடன் இருப்பது தான் பலம்” என்று அஜித் டோவால் சொன்ன கூற்றைக் குறிவிலக்கிப் (decode)புரிந்துகொள்ள வேண்டும். அதாவது “முடிந்தால் ஓரணியில் ஒருமித்த நிலைப்பாட்டுடன் வாருங்கள் பார்க்கலாம்” என்று தமிழர்களைப் பார்த்து எள்ளல் செய்ததாகவே இந்தக் கூற்றைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவானது தமிழர்களை ஒற்றுமையாகும் படி கூறுகின்றதென்றால் அது தமிழர்களைச் சில்லுச் சில்லாக உடைத்துக்கொண்டிருக்கின்றது என்று பொருள். தமிழின விடுதலையின் முதன்மைப் பகையாம் இந்திய வல்லூறின் திட்டங்களையும் சூழ்ச்சிகளையும் அறிந்து அதனை முறியடிக்க வேண்டியது தமிழர்களின் கடமையல்லவா?
ஒடுக்கும் சிங்களதேசம் தனது தலைவரைத் தெரிவுசெய்யும் சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலைத் தமிழர் மண்ணில் தமிழர்தேசமானது புறக்கணிப்பதோடு, இந்தத் தேர்தற் புறக்கணிப்பானது, ஒடுக்குண்டிருக்கும் தமிழர்தேசம் ஒடுக்கும் சிங்களதேசத்தை எஞ்ஞான்றும் புறக்கணித்து அடிமைத்தளையறுத்துத் தமிழர்தேச அரசமைக்கும் (Tamilnation State) வரலாற்றுப் பயணமாக விரிவுபடுத்தப்பட வேண்டுமென்று தமிழீழ மக்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
-காக்கை-
2024-09.17
Be the first to comment