தாயக மண்ணில் புலிகளை அடிமைகளாக்கியது யார்? – கதிர்

முள்ளிவாய்க்காலில் சிங்கள மற்றும் பன்னாட்டு அரசுகள் தமிழினத்தின் மீதான இனவ‌ழிப்பை நடத்தி முடித்த கையோடு புலம்பெயர் அமைப்புகள் தங்களுக்குள் முட்டிமோதிக் கட்டமைப்புகளைச் சிதைத்தது மட்டுமல்லாது சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் கைக்கூலிகளாகவும் மாறியிருக்கின்றனர் என்பதைப் பல தரப்பட்ட நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ளலாம்.

விடுதலைப் போராட்டங்களானவை எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வரும் போது அதன் பின்னரான காலப்பகுதியையும் மறப்போராட்டத்தில் பங்கெடுத்த போராளிகளின் எதிர்கால நலன் குறித்த விடயங்களாஇயும் மிக நேர்த்தியாகக் கையாள வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை நேரடியாகக் களத்தில் நின்று போராடிக் கொண்டிருந்தமையால் கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வந்ததன் பின்னரான போராளிகளின் நலன் குறித்த பொறுப்பைப் புலம்பெயர் அமைப்புகளிடமே வழங்கியிருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் எவ்வாறு போராளிகள் புறக்கணிக்கப்பட்டு இராணுவப் பண்ணைகளில் அடிமைகளாக வேலை செய்யும் அளவிற்குத் தள்ளப்பட்டனர்?

விடுதலைப்புலிகள் அமைப்பானது தொலைநோக்குச் சிந்தையில், போராளிகள் மற்றும் மக்கள் நலன் உட்கட்டுமானப் பணிக்காகப் பெருமளவிலான பொருண்மியச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தனர். போர் உச்சக்கட்டமாக‌ இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் கூட தமிழீழ உட்கட்டுமானப் பணிக்கும் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்திற்குமான பொருண்மியக் கட்டுமானத்தை மிக நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வந்ததன் பின்னரான காலப்பகுதியில் மாவீரர் போராளி குடும்பநலன் காப்பகங்கள் சிதைவுற்றுப் போனதற்கு, புலம்பெயர் அமைப்புகள் தன்னிச்சையாகக் கட்சிசார் அரசியலில் ஊறிக் கிடப்பதும் இந்தியக் கைக்கூலிகளாக மாறிப் போனதும்தான் காரணம்.

“கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வந்ததன் பின்னர் தலைமையின் கட்டளைக்கு இணங்கக் குடும்பங்களோடு இணைந்து சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளை எதிர்காலத்தில் இராணுவப் பண்ணைகளிலும் சிறிலங்கா இராணுவத்தின் தொழிற்பேட்டைகளிலும் அடிமைகளாக வைத்திருத்தல்” என்ற சிங்கள அரசின் நோக்கமானது இன்று நேற்று உருவாகியது அல்ல. 2010 காலப் பகுதிகளிலேயே சரணடைந்த போராளிகளை ஊதியமின்றி வேலைவாங்கியது சிங்கள அரசு. அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிகாரி ரொபேட் பிளேக் 2011 காலப்பகுதியில் வடக்கிலிருக்கும் சிறிலங்கா இராணுவப் பண்ணைகளைப் பார்வையிட்டமை அனைவருக்கும் தெரிந்தவொன்று.

கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வந்ததன் பின்னர், புலம்பெயர் அமைப்புகளின் பொறுப்பற்ற செயலாலும் தன்னிச்சையான அதிகாரப் போட்டியாலும்தான் போராளிகளின் எதிர்காலமும் போராளி மாவீரர் குடும்பங்களின் எதிரகாலமும் தாயகத்தில் கேள்விக்குறியாகியது என்பதுதான் உண்மை. சிறிலங்காவின் தேர்தல் காலத்தில் தாங்கள் விரும்பும் தமிழ்க் கட்சிகளின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகக் கோடிக் கணக்கில் அரசியல் கட்சிகளுக்குச் செலவு செய்யும் புலம்பெயர் அமைப்புகள் அந்தப் பணத்தில் தமிழீழத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் பண்ணைகளை உருவாக்கிப் போராளிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருந்தால் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே அந்தப் பண்ணைகளை அடுத்த கட்டத்திற்குப் போராளிகள் நகர்த்தியிருப்பார்கள்.

வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையில் இன்று வடகிழக்கில் பெருமளவு பகுதியை இராணுவப் பண்ணைகளே செய்கின்றன. அங்கு அடிமைகளாக வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் பொருண்மிய அடிப்படையில் பெரிதும் பின்தங்கி இருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் போராளிகளும் மாவீரர் குடும்ப உறுப்பினர்களுமே. நிலைமை இப்படியிருக்கப் பொருண்மிய அடிப்படையில் மிகவும் செழிப்பாக இருக்கக் கூடிய அரசியல்வாதிகளைக் குறிப்பாக கஜேந்திரகுமார் அணி, விக்கினேசுவரன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு அழைத்து விழா எடுப்பதற்குப் பெருமளவில் பணத்தை விரயமாக்குகின்றன புலம்பெயர் அமைப்புகள். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் ஒன்றும் செய்வதில்லை என்றால், புலம்பெயர் அமைப்புகளால் பெரிதும் விரும்பப்படும் கஜேந்திரகுமார், விக்கினேசுவரன் அணி மூலமாவது முதலீடுகளைச் செய்து வடகிழக்கில் பண்ணைகளை உருவாக்குங்கள் என்று கேட்டால் “அவங்களுக்குத் தொழில் ஒன்றை தொடங்கி ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி நிர்வகிக்க கூடிய ஆளுமை இல்லை” என்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காய்த் தமது இளமைக்கால வாழ்வைத் தொலைத்து, இன விடுதலைக்காய் களமாடி, உடல் உறுப்புகளை இழந்த போராளிகள் இன்று சிறிலங்கா இராணுவப் பண்ணைகளில் அடிமைத்தனமான வேலை செய்து தமது எதிர்காலத்தைக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயச் சூழலை உருவாக்கிய புலம்பெயர் அமைப்புகளானவை போராளிகளின் நலனில் அக்கறை கொள்ளாது தாம் விரும்பும் அரசியல் கட்சிகளின் அரசியல் அதிகாரத்திற்காகப் பண விரையம் செய்கின்றமையானது தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இழைத்த மாபெரும் இரண்டகமாகும். தனித்தனியாகப் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் செய்வதாகச் சொல்கிறார்கள். அவை வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால், அதுவே உறுதியான தீர்வாக அமையாது. தமிழீழத்தின் அத்தனை மாவட்டங்களிலும் போராளிகளை மையமாக வைத்து உற்பத்தித் துறையில் முதலீடுகள் செய்யப்படல் வேண்டும். அதன் பிற்பாடு அதை அடுத்த தளத்திற்கு முன்னேற்றும் பணியைப் போராளிகள் செய்வார்கள். அதற்குரிய பண்பும் ஆளுமையும் போராளிகளிடம் உள்ளது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அத்தனை கட்டமைப்புகளையும் துடைத்தழிப்புச் செய்வதில் மிக ஆழமாக வேலை செய்யும் இந்திய உளவுத்துறையோடு இன்று புலம்பெயர் அமைப்புகள் தொடர்பில் உள்ளனர். சிலர் தாங்கள் இந்தியாவோடு வேலை செய்கிறோம் என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள். சரணடைந்த புலிகளை சமூகத்தில் இருந்து ஒதுக்கி, அவர்களை உளவியலாக‌ நலிவடையச் செய்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் இந்தத் தமிழ்ச் சமூகத்தின் மீதும் வெறுப்பை உண்டாக்குவதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதும் நம்பிக்கையின்மையை உருவாக்கும் சிங்களத்தினதும் இந்தியத்தினதும் நோக்கத்தை, பொருண்மிய அடிப்படையில் வலுவாக இருக்கும் புலம்பெயர் அமைப்புகள் கச்சிதமாகச் செய்வதாகவே தெரிகிறது. குறிப்பிட்ட ஒரு சாராரின் தனிப்பட்ட அதிகார நோக்கத்திற்காக ஒட்டுமொத்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலத்தைச் சிதைக்கும் இரண்டகச் செயலைக் காலம் பதிவு செய்துகொண்டுதான் இருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி நடத்தப்படும் நிகழ்வுகளில், தமிழீழம் என்றால் என்ன? அதன் விடுதலை ஏன் தேவை? அதற்கு நாம் எவ்வாறு பங்களிக்க வேண்டும்? என்பது குறித்து ஒரு இருபது நிமிடங்கள் கூடக் கூட்டங்கள் நடைபெறுவதில்லை. மாறாக, கொத்துரொட்டி விற்பனை செய்தல், தமிழீழச் சின்னங்களை விற்பனை செய்தல் என வியாபார அமைப்புகளாக மாறி நிற்கின்றன‌ புலம்பெயர் கட்டமைப்புகள்.

ஒரு உண்மை நிகழ்வொன்றை இங்கு சொல்லியே ஆகவேண்டும்!

கடந்த ஆண்டு ஐரோப்பா நாடொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஒரு அமைப்பின் அந்த நாட்டுப் பொறுப்பாளரைச் சந்தித்து மிக முதன்மையான ஆவணமொன்றைக் கொடுத்து அதை மக்களிடம் கொண்டு செல்வதற்காக நண்பர் ஒருவர் சென்றிருந்தார். பொறுப்பாளரைச் சந்தித்துக் குறிப்பிட்ட ஆவணத்தை நண்பர் கொடுக்க அந்தப் பொறுப்பாளரோ அதைச் சுருட்டி அடுப்படியில் வைத்துவிட்டுக் கொத்துப் போடுவதில் மும்மரமா இருந்ததாக நண்பர் வருத்தப்பட்டார். அதைவிட பகடி என்வென்றால், வெளிநாடுகளில் விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படும்  வோக்கி டோக்கிகளைப் (Walkie Talkie) பயன்படுத்தி நிகழ்வு நடைபெறும் இடங்களில் எங்கெங்கு கொத்து ரொட்டியைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்டளைகளை வழங்குகிறாராம். ஆனால் அதை ஏதோ களமுனையில் நின்று சண்டைக்குக் கட்டளையிடுவது போன்ற‌ ஒரு தோரணையில் செய்வதைப் பார்த்தால் எங்கள் புலம்பெயர் அமைப்புகளின் வங்குரோத்து விளங்குகிறது என்று கடிந்து கொண்டார் நண்பர். புலம்பெயர் மக்கள் ஒன்று கூடி நிற்கும் இடத்தில் தமிழீழ விடுதலைக்கான அரசியல் கருத்துருவாக்கத்தை உருவாக்குவதையும் விட கொத்துரொட்டி விற்பனைக்குத் தான் அதிகம் முதன்மை கொடுப்பதாகவும் அதை ஏதோ விடுதலைப் புலிகளே செய்வது போல் காட்டுவது அருவருப்பான விடயம் என்று கடிந்து கொண்டார் அந்த நண்பர்.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் கருவியேந்திய மறவழிப்போராட்டம் பேசாநிலைக்கு வந்ததன் பின்னர் முழுப் பொறுப்பையும் புலம்பெயர் அமைப்புகளை நம்பி ஒப்படைத்துவிட்டு வீரச்சாவடைந்த, சரணடைந்த, விழுப்புண்ணடைந்த, சிறைசென்ற போராளிகளுக்கும் அவர்களின் குடும்பங்களிற்கும் இந்தப் புலம்பெயர் அமைப்புகள் என்ன சொல்லப் போகின்றன? 

கதிர்

17-03-2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*