திட்டமிடப்பட்டுத் திசை மாற்றப்படும் தமிழர்களின் சிந்தைகள் – கதிர்

மாந்தர்களின் சிந்தைகளை அல்லது பார்வையைத் திசை திருப்பிவிட்டு அவர்களைச் சுற்றி அவர்களால் ஊகிக்க முடியாத அளவுக்கு மாற்றங்களைச் செய்ய முடியும் என்று உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன‌. ஆங்கிலத்தில் இதை Inattentional Blindness என்று சொல்கிறார்கள். இது பற்றிய மேலதிக தகவல்களைத் தேடிப் படியுங்கள்.

விடுதலைப்புலிகள் ஆட்சிப் புலத்தில் இருந்த வரையில் தமிழீழம் ஒன்றே தமிழருக்கான தீர்வு என்ற நிலைப்பாட்டில் இருந்த மக்களுக்கு சமஷ்டி, சமஷ்டிக் கரு, மாகாண அதிகாரம், ஒரு நாடு இருதேசம் போன்ற குழப்பகரமான எண்ணக் கருத்துகளைச் சிங்கள அரசும் தமிழீழ விடுதலையை விரும்பாதோரும் வெவ்வேறு வடிவங்களில் விதைத்து வருவது மட்டுமல்லாது இந்தக் குழப்பகரமான‌ அரசியல் எண்ணக்கருத்துக்குள் “எதிர்காலத்தில் மீண்டும் தமிழீழத்தை நோக்கி மக்களை ஒன்று திரட்ட வாய்ப்பாக‌ அமையும்” என்பது போன்றதான அப்பட்டமான பொய்களை உண்மை போல மக்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

6ம் திருத்தச்சட்டம் குறித்து வாய்திறக்க வக்கற்ற அரசியல்வாதிகளும் தமிழ்த் தேசியம் பேசுவதாகக் காட்டிக் கொள்ளும் சில அமைப்புகளும் எதற்கும் பயனற்ற 20ம் திருத்தச்சட்டம் குறித்து மேடைப் பேச்சுகளையும் கூட்டங்களையும் அறிக்ககளையும் உருவாக்கி மக்களைத் திசை திருப்புகின்றனர். தமிழ் மக்களின் இறையாண்மையையும் தன்னாட்சி உரிமையையும் மறுக்கும் 6ம் திருத்தச்சட்டத்தின் நீட்சியே 20ம் திருத்தச்சட்டம் என்ற உண்மையை எந்தவொரு அரசியல்வாதியும் மக்களிடத்தில் வெளிப்படையாகப் பேச அணியமாக‌ இல்லை என்பதை எப்படிப்பட்ட அரசியலாகக் கருதிவிட முடியும்?

6ம் திருத்தச்சட்டம் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேசவில்லை; தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அழித்துவிட்டுத் தங்களைப் பதவிக்குக் கொண்டுவந்தால் தமிழின விடுதலையை வென்றெடுத்துக் காட்டுவோம் என்று பரப்புரை செய்யும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியும் பேசவில்லை. தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் “நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்” என்ற புலம்பெயர் அமைப்பின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சுமந்திரன் மற்றும் சம்மந்தர் மீது 2013 இல் வழக்குத் தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ள போது, அந்த வழக்கின் அடிநாதமான 6ம் திருத்தச்சட்டம் குறித்து வாய்திறக்காமல் நாடாளுமன்ற வாக்குப் பொறுக்கும் தமது அரசியலால் தமிழர்களின் உரிமைகளை வென்றிட‌ முடியும் என்று கஜேந்திரகுமார் தலைமையிலான அணி தொடர்ச்சியாகப் பேசி வருவது மக்களை ஏமாற்றும் செயலே. 20ம் திருத்தச் சட்டத்தைப் பேசுபொருளாக்கிவிட்டுத் தமிழ்மக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் மோசமான 6ம் திருத்தச்சட்டத்தின் ஆபத்தைத் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளிடம் இருந்து மறைப்பது திட்டமிடப்பட்ட செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.

அது போக, வடகிழக்கில் திட்டமிடப்பட்டுக் குடியேற்றப்படும் சிங்கள முஸ்லீம் குடியேற்றங்கள், அளவுக்கு மீறிய பௌத்த விகாரைகள், பள்ளிவாசல்கள் குறித்துக் கூடிய கவனஞ் செலுத்தாமல் 20ம் திருத்தச்சட்டம் குறித்தும் சிறிலங்காவின் மைத்திரி ரணில் அரசு குறித்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் சமகாலச் சிக்கல்கள் குறித்தும் தமிழ் ஊடகங்கள் தொடர்ச்சியாகச் செய்திகள் வெளியிட்டுவருவதும் தமிழ் மக்களின் பேராளர்களாகத் தம்மைத்தாமே சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகளும் தமிழர் தாயகம் குறித்த சிக்கல்களுக்கு முதன்மையளிக்காமல் முற்று முழுதாக அரசியல் சீர்திருத்தம் குறித்து முதன்மை கொடுப்பதும் மக்களின் சிந்தைகளைத் திசை மாற்றும் செயலாகவே கருதவேண்டியுள்ளது.

அம்பாறையில் தமிழர்களின் நிலங்களில் புத்தரைக் கொண்டுவந்து வைக்கிறார்கள் அதற்குத் தமிழ் மக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தவுடன் உடனடியாக மட்டக்களப்பில் தமிழர்களுக்கு ஆதரவாகப் பௌத்த தேரர்கள் குரல் கொடுத்து இஸ்லாமியர்களின் அத்துமீறிய நில வன்கவர்வை எதிர்க்கிறார்கள். உடனடியாகவே பௌத்த தேர்களின் வன்கவர்வு மறைக்கப்பட்டு அவர்கள் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் போன்றதான நிழலுரு சமூக ஊடகங்களில் கட்டப்படுகிறது. தவிர, நாவற்குழியில் சிங்களக் குடியேற்றம் வலுப்படுத்தப்பட்டு அங்கு வடக்கிற்கான முதலாவது தாது கோபுரத்துடனான பௌத்த விகாரையின் கட்டுமானம் விரைபுபடுத்தப்படுகிறது. இந்தத் திட்டமிடப்பட்ட அத்துமீறிய சிங்களமயமாக்கலை மக்களைத் திரட்டி எதிர்க்க வக்கற்ற வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன், தன் மீதான மக்களின் வெறுப்புணர்வு அதிகரிக்க முன்பு தன்னை நல்லவர் என்று காட்டிக் கொள்வதற்காகச் சில அமைச்சர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தது மட்டுமல்லாது அந்த ஒழுக்காற்று நடவடிக்கையால் தனது பதவிக்கும் ஆபத்து என்பது போன்றதான நிழலுருவை உருவாக்கி, பின்னர் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் பள்ளிக்கூடங்களைக் கூட நிறுத்தித் தனக்காக கர்த்தாலை மேற்கொள்ள இசைவளித்தார். இதன் மூலம் நாவற்குழி சிங்கள மயமாக்கல் பேசுபொருளின்றி மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டது மட்டுமன்றி நீதிமன்ற இசைவையும் பெற்றுவிட்டது.

விகாரைகள் கட்டுவதற்கு நீதிமன்று இசைவு கொடுத்தாலும் எந்தவொரு கட்டுமானத்தை மேற்கொள்ள முதலும் அந்தச் சுற்றுச் சூழல் மற்றும் சமூகத்தின் கருத்துகள் குறித்துக் கவனஞ் செலுத்தப்படல் வேண்டும் என்ற வாதத்தைக் கூட விக்னேஸ்வரன் வைக்கவில்லை. இவை அனைத்தும் எதேச்சையாக நடந்தவை கிடையாது.

விடுதலைப்புலிகள் ஆட்சிப் புலத்தில் இருந்த காலத்தில் யாழ்ப்பாணம் சிறிலங்காவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. போரோய்வுக் காலத்தில் கூட சிறிலங்காவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அந்தக் காலப்பகுதிகளில் சட்டத்தின் மூலம் சாத்தியப்படாதவை இப்போது எப்படிச் சாத்தியமாகின்றன?

தமிழீழ விடுதலையை நேசிக்கும் மக்கள் அனைவரும் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். சுமந்திரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஒன்றுதான். அவர்கள் இருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களே தவிர 6ம் திருத்தச் சட்டத்தை எதிர்க்கத் திராணியற்ற அல்லது எதிர்க்க விரும்பாத சாதாரண அரசியல்வாதிகள். அவர்களின் நோக்கமெல்லாம் சிறிலங்கா நாடாளுமன்ற இருக்கையே தவிர தமிழின விடுதலையல்ல.

நாடாளுமன்ற அரசியல் மூலம் சிறிதளவேனும் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும் எனில் 6ம் திருத்தச்சட்டம் அகற்றப்பட வேண்டும். 6ம் திருத்தச் சட்டம் குறித்துப் பேசாமல் எந்தவொரு அரசியல்வாதியும் சிறிலங்கா நாடாளுமன்ற அரசியலால் தமிழர்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று பேசினால் அது தமிழீழ விடுதலை குறித்த தமிழ் மக்களின் எண்ணங்களைத் திசை திருப்பி அதன் மூலம் ஏதோ பெரு நலன் அடையக் காத்திருக்கிறார்கள் என்றே பொருள்.

கதிர்

07 – 10 -2017

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*