புரட்சிகர மக்களைக் கட்சியாகப் பிரிக்கும் பேரினவாதிகளின் திட்டம் – துலாத்தன்

“தமிழர்கள்” “தமிழர்கள் அல்லாதோர்” என்ற தமிழ்த்தேசிய சிந்தையுடன் இயங்க வேண்டிய தமிழ்மக்களை “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பார்” “சைக்கிள்காரர்” “ஈபிடிபி” “விஜயகலா ஆக்கள்” “அங்கயன் ஆக்கள்” என்று பலதரப்பட்ட குழுக்களாகப் பிளவடைய‌ வைப்பதில் சிங்கள மற்றும் தமிழ்த் தேசியத்தை விரும்பாத கூட்டங்கள் முழுநேரமாக வேலை செய்கின்றன.

சிறிய வரலாற்றுச் சுருக்கத்துடன் பதிவின் தலைப்பின் விடயத்தை விரிவாக பார்க்கலாம்.

“அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஜி.ஜி பொன்னம்பலத்தின் ஆதரவுடன் இலட்சக் கணக்கிலான மலையகத் தமிழ்மக்களின் குடியுரிமையைப் பறித்த சிங்கள‌ அரசு, மலையகத் தமிழ்மக்களின் குடியுரிமையைப் பறித்ததன் மூலம் தமிழ் மக்களின் வலுவைப் பெருமளவில் குறைத்தது.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் வரலாற்று இரண்டகத்திற்குப் பின்னர் பெரும்பாலான தமிழ்மக்கள் தமிழரசுக் கட்சியின் பின்னால் அணி திரண்டனர். யாழ்ப்பாணப் பணக்கார மேட்டுக் குடியினரில் பெரும்பாலானோர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் பக்கமும் ஏனைய தமிழ்மக்கள் தமிழரசுக் கட்சியின் கூட்டணிகளோடும் இணைந்தது செயற்பட்டனர். காலப்போக்கில் தமிழரசுக் கட்சியின் கூட்டணி ஆற்றலே “தமிழீழத் தனி அரசு” என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இதன் பின்னர் தமிழ்மக்கள் ஒரே அரசியல் தலைமையின் கீழ் அணிதிரளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர் என்று கூடச் சொல்லலாம்.

தொடர்ச்சியாக, காலப்போக்கில் இந்த அரசியல் தலைமைகளும் அரசியல் செய்யும் வழிமுறைகளை மாற்றிக் கொண்டமையால் இளையோர்கள் மறவழிப் போராட்டத்திற்கு உந்தப்பட்டனர். ஏராளமான போராளிக் குழுக்கள் உருவாகினாலும், மக்கள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற அமைப்பைத் தமது விடுதலைப் போராட்டத்தைக் கொண்டு நடத்தக் கூடிய சரியான அமைப்பாக அடையாளங்கண்டு புலிகளின் பின்னால் அணி திரண்டனர். எந்தச் சமரசமும் இல்லாமல் தமிழீழ விடுதலையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எல்லாக் கட்டுமானங்களையும், எதிர்காலத் திட்டங்களையும் வகுத்துப் போராடிய புலிகளை, பேரினவாதிகள் உலக நாடுகள் பலவற்றினதும் உதவியுடனும் முழு ஒத்துழைப்புடனும் தோற்கடித்தனர்.”

விடுதலைப் புலிகள் தலைமையிலான தமிழர்களின் மறவழிப் போராட்டமானது தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ்மக்களின் புரட்சிகர விடுதலை அரசியலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லவிடாமல் தடுப்பதற்கு, விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களைக் கட்சிகளாகக் கூறு போடுவதே சிறந்தது என்று புரிந்து கொண்ட சிங்கள அரசு, இந்திய வல்லாதிக்கத்தின் உதவியுடன் தமிழ் மக்களிடையில் “போட்டி அரசியல்” “காழ்ப்புணர்வு அரசியல்” “இரண்டக அரசியல்” போன்ற வகையறா அரசியல்களைத் திணித்திருக்கிறது.

ஒருவர் மற்றவரை “துரோகி” என்பதும் “தமிழினத்திற்கு எதிரானவன்” என்ற தொனிப் பொருளிலும் அரசியலை விதைத்து அதில் எழக்கூடிய ஐயங்களால் தமிழ் மக்களை கட்சி அடிப்படையில் கூறு போடும் அரசியலை உருவாக்கியிருக்கிறன‌ சிங்கள மற்றும் இந்திய அரசுகள்.

இலங்கைத்தீவில் தமிழ்மக்களின் எண்ணிக்கையைக் குறைத்து எண்ணிக்கை அடிப்படையில் வலுவைக் குறைக்க உதவிய “மலைய மக்களின் குடியுரிமைப் பறிப்புக்கு” உடன்நின்ற‌ “அகில இலங்கைத் தமிழ் காங்கிரசும்” புலிகளின் துணையுடனும் வழிகாட்டலிலும் உருவாக்கப்பட்ட “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்”, தமிழர் தாயகப் பகுதியில் தங்களைப் பெரும் தமிழ்த்தேசியக் கட்சிகளாக காட்டிக் கொண்டாலும் சிறிலங்காவின் தென்னிலங்கைக் கட்சிகள், தென்னிலங்கைக் கட்சிகளுடன் இயங்கும் வடகிழக்கு தமிழ்க் கட்சிகளும் மக்களின் கணிசமான ஆதரவுடன் செயற்பட்டுவருகின்றன.

அரசியற் கட்சிகளின் அரச கட்டமைப்புக்குள் உள்ள செயற்பாட்டு எல்லை

சிறிலங்காவில் அரசியல் கட்சிகள் அரசியலாகச் செயற்படக் கூடிய எல்லை மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றே. தேர்தல் அரசியலுக்கூடாகத் தமிழ்மக்களின் விடுதலையை வென்றெடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போதுதான் போராளிக் குழுக்கள் உருவாகி மறவழிப் போராட்டமாக எழுச்சிபெற்றது.

மறவழிப் போராட்ட அமைப்புகளின் கட்டுமானமும் அரசியல் கட்சிகளின் கட்டுமானமும் வெவ்வேறானவை. மறவழிப் போராட்ட அமைப்பினால் போர் நிறுத்தத்தை உருவாக்கி அந்தக் காலப்பகுதியில் அரசியல் செய்ய முடியும். ஆனால் அரசியல் கட்சியால் மறவழிப் போராட்டம் போன்றதான அரசியலைச் செய்ய முடியாது. மறவழிப் போராட்ட விடுதலை அமைப்புகளால் கூட போர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் அரசுடன் பேச்சுவார்த்தையையோ அரசியல் பேச்சுக்களையோ செய்ய முடியாது.

இப்படிப்பட்ட கள நிலைமையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இல்லாதிருப்பின் நாங்கள் நாட்டைப் பிடித்துவிடுவோம் என்று பேசுவது கவர்ச்சிகரமானதாக இருக்கலாம். ஆனால், அது நடைமுறையில் செய்துமுடிக்கக் கூடியதொன்றல்ல‌. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் இடத்தில் எந்த அரசியல் கட்சி இருந்தாலும் இதையேதான் செய்யப்போகிறது.

தமிழ்மக்களுக்குப் பரப்பப்படும் கவர்ச்சிகர மாயை அரசியல்

போராடும் மக்கள் நிலத்தில் அமர்ந்திருக்க வேடிக்கை பார்க்கப்போன அரசியல்வாதிகள் கதிரையில் இருக்கின்றனர்.

“இவே இல்லாமல் அவே இருந்திருந்தால்” என்ற கவர்ச்சிப் பரப்புரைகளைச் செய்வதன் மூலம் மக்களைக் கூறுபோட முடியும் என்ற உளவியற் போர் தமிழ் \மக்கள் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

“அவே துரோகிகள் நாங்கள் இருந்திருந்தால் இப்ப இதைச் செய்திருப்பம்” என்ற தொனியில் உணர்ச்சிகரமாக சொல்லம்புகள் விடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசு இனப்படுகொலையை முடித்து 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் வரையிலும் சிறிலங்கா அரசின் நாடாளுமன்றக் கொடுப்பினைகளால் இன்புற்றவர்களே.

2009ம் ஆண்டு மே 18 ஐ வெற்றி விழாவாகச் சிங்கள அரசு அறிவித்தபோது, சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்துத் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூடத் துறக்க அணியமாக இல்லாதிருந்தவர்கள்தான் இன்று தங்களை ஈகிகளாகவும் புரட்சிகர அரசியலைச் செய்ய வந்திருப்பவர்களாகவும் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியலானது தமிழர்களின் விடுதலை அரசியலுக்கு முரணானது. எனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியலுக்கு மாற்று ஆற்றலாகப் புரட்சிகரமான மக்கள் அமைப்புகள்தான் உருவாக்கப்படல் வேண்டும். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இணக்க அரசியலுக்கு மாற்றீடாக, இனவ‌ழிப்புக்குப் பிறகும் சிறிலங்கா நாடாளுமன்றப் பதவிகளை துறக்க அணியமாக‌ இல்லாதிருந்து, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி மீண்டும் தனது குடும்பக் கட்சியான “அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்” கட்சி சார்பாகத் தேர்தலில் நின்று மக்களால் தோற்கடிக்கப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காட்டுவதைத் தமிழ்த்தேசிய விடுதலையை விரும்பாதோரின் நிகழ்ச்சிநிரலாகவே பார்க்கவேண்டியுள்ளது.

தமிழ்மக்களின் விடுதலை அரசியலை முன்னெடுப்பதற்கும் சிங்கள அரசின் மீது அழுத்தத்தை உருவாக்கக் கூடிய மக்கள் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ சிறிலங்காவின் அரசியல் கட்டமைப்புக்குள் உறுப்பினர்களாகவோ இருக்க வேண்டிய தேவையில்லை.

 “நாங்கள் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால்” என்று சொல்பவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? குண்டைக் கட்டிக் கொண்டு இராணுவ முகாம் மீது பாய்ந்தா இருப்பார்கள்?  2009 மே 18 முதல் 2010 நாடாளுமன்றத் தேர்தல்வரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக அரசாங்கத்தில் சலுகைகளைச் சுவைத்தவர்கள் மக்களுக்காக என்ன போராட்டம் செய்தார்கள்? நாடாளுமன்றச் சலுகைகளைச் சுவைத்த‌போது வராத உணர்ச்சிகரமான சிந்தைகள் இப்போது ஏன் வருகின்றன? நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து செய்யக்கூடிய வேலைகளின் அளவுகள் தெரியாதவர்களா இவர்கள்?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக‌ “அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்” (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) என்ற கட்சியைக் காட்டி உருவாக்கப்படும் மாயையானது மிக மோசமான நோக்கம் கொண்டது.

தொடக்க‌த்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தமிழரசுக் கட்சி) மீது நம்பிக்கையிழந்த இளையோர்கள் மறவழிப் போராட்டத்தை நோக்கி நகர்ந்தது போல் இனி உருவாகாமல் இருக்க வேண்டுமெனில் கவர்ச்சிகரமான, அதே நேரத்தில் உப்புச் சப்பற்ற, அரசியல் மாற்று ஒன்று இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கவர்ச்சிகரமான அரசியல் மாற்றாக கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவைக் காட்டுவதற்குத்தான் தமிழர் விடுதலைக்கு எதிரானவர்கள் முழு மூச்சாக வேலை செய்கின்றனர் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

என்ன செய்யலாம்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியற் போக்கானது (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அதை மாத்திரம் தான் செய்ய முடியும்) தமிழர்களின் விடுதலை அரசியலுக்கு முரணானது. எனவே மக்கள் மயப்படுத்தப்பட்ட விடுதலை அரசியல் அமைப்பு உருவாக்கப்படல் வேண்டும். அந்தப் புரட்சிர அமைப்பானது வெறுமனே உணர்ச்சிகளால் கட்டமைக்கப்படாமல் தீவிரமாகவும் அறிவார்ந்தும் தமிழ்த் தேசியக் கருத்துருவாக்கத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தக் கூடிய செயற்பாட்டு அமைப்பாக உருவாதல் வேண்டும்.

மாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாகக் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அணியைக் காட்டுவது தமிழர் தாயகத்தில் தென்னிலங்கைக் கட்சிகளின் செயற்பாட்டை அதிகரிக்கவே உதவும்.

தமிழர்கள் எப்போதும் தேசிய இனம். “சிறுபான்மையினர்” என்ற சொல்லாடல் முற்றிலும் தவறான ஒன்று.

சிறிலங்காவில் “சிங்களவர்கள்” “தமிழர்கள்” என்ற இரண்டு தேசிய இனங்கள் இரண்டு தேசங்களாக‌ இருக்கின்றன. இந்த இனங்களுக்கிடையில் முரண்பாடு நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தொடர்கின்றது. தமிழ்த் தேசிய இனத்தை நில மற்றும் பண்பாட்டு அடிப்படையில் சிங்கள தேசிய இனம் நசுக்கத் தொடங்கும்போது இன முரண்பாடு போராக வெடித்து இன்று இந்த நிலைமையில் வந்து நிற்கிறது என்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அமைதியாக இருக்கும் இன்றைய நிலை எப்போது வேண்டுமென்றாலும் பிறிதொரு வடிவத்தை எடுக்கலாம். அப்படியான நிலையொன்று வரும்போது தமிழ்மக்கள் கட்சியாகப் பிளவுபட்டு நிற்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே தம்மை தமிழ்த் தேசியர்களாகக் காட்டிக்கொள்ளும் எல்லாக் கட்சிகளும்  மக்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைந்து தமது அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

 தமக்கிடையே ஒருவர் இன்னொருவரைத் “தமிழினத் துரோகி” என்று சொல்வதற்குச் சிறிலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

சிறிலங்காவின் அரசியல் அமைப்பிற்கு முரண்பட்டுத் தமிழீழ தேசிய விடுதலை அரசியலை முன்னெடுக்கும் போது அங்கு யாராவது இரண்டகம் இழைத்தால் மாத்திரமே “துரோகி” என்று சாடுவதற்கான முழுத் தகுதியும் கிடைக்கும். அதைவிடுத்து இருவருமே சிறிலங்கா அரசின் அரசியலமைப்பிற்கு உட்பட்டே அரசியலைச் செய்து கொண்டு ஒருவர் இன்னொருவர் மீது பழி போட்டு, தமிழர்கள் தங்களுக்குள் அடிபடுகிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க நினைப்பவர்கள் தமிழ்த் தேசிய விடுதலைக்கு எதிரானவர்களுடன் இணைந்து செயற்படுகிறார்கள் என்றே நோக்கப்பட வேண்டும்.

துலாத்தன்

12-03-2017

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*