
“பிந்தி அளிக்கப்படும் நீதியானது மறுக்கப்படும் நீதிக்கொப்பானது”
போர் நிறைவடைந்துவிட்டது. பாலாறும் தேனாறும் ஓடப்போவதாகவும் தங்கக்கிண்ணத்தைத் தாங்கி வந்து அள்ளி அள்ளிப் பருகக் கொடுக்கப் போவதாகவும் கூறி, தமிழ்மக்களின் பேராளர்களாகத் தம்மைத்தாமே கூறிக்கொண்டிருந்த தரப்பினர்களும் இணைந்து நல்லாட்சித் தேரினை இழுக்க வடக்கயிற்றின் முன்னால் நின்று, ஓதிய ஓதல்கள் தான் எத்தனை எத்தனை? படிப்புப் பட்டங்களை விடுங்கள்; பட்டறிவு என ஒன்று உள்ளதல்லவா? அது எங்கு போனதென்றுதான் தெரியவில்லை. அரசியற் தீர்வினை எட்ட முடியவில்லை. பல ஆண்டுக்கணக்கான தொடுவானம் போன்ற சிக்கல்; அதற்குக் காலங்கள் எடுக்கும், காலக்கெடுக்கள் நீண்ட வண்ணம் போய்க் கொண்டிருக்கின்றன எனக்கூறும் அரசியல் சணக்கியர்களின் நிலைகண்டு, சரி கல்லில் நாருரிக்க முடியாது நீங்கள் அரசியல் நாடகம் போடுகின்றீர்கள் எனத் தெரியும் என விடயம் தெரிந்தவர்கள் கொடுக்குக்குள் சிரித்து விட்டுப் போகலாம். ஆனால் மிக முதன்மையாகப் பேசப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் சிக்கல் ஏன் இன்னும் தீர்த்து வைக்கப்படவில்லை என்பதற்கான எந்தச் சரியான பதிலும் மென்வலு அரசிடமில்லை. சரி போகட்டும். ஆனால் அதை நம்புவதாகக் கூறிக்காலத்தினை மிக இதமாகக் கடத்தும் தமிழ் மக்களின் காவலர்கள் எனக்கூறிக்கொள்பவர்களிடம் அதற்கான பதில் இல்லாமலே இருப்பது தான் கடைந்தெடுத்த கயமைத்தனம் என எண்ண வேண்டியுள்ளது.
தமிழினத்திற்கெதிராகக் காலங்காலமாக மேற்கொள்ளப்படுகின்ற சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இனவாத நடவடிக்கைகளில் தமிழ் இளையோர்கள், முதியவர்கள், குடும்பப் பெண்கள் அவர்களுடன் குழந்தைகள் என அனைவருக்கும் பயங்கரவாதிகள் என்று முத்திரைகுத்தப்பட்டு, கைதுசெய்து தடுத்து வைத்து விசாரணை என்ற பெயரில் அவர்களைச் சித்திரவதைகளுக்கு உட்படுத்துதலும், இலங்கை மற்றும் சர்வதேச சட்ட விதிகள் எனச் சொல்லிக்கொள்ளும் விதிகளுக்கு அப்பாற்பட்டு, அவற்றிற்கு முரணான வகையில் அவர்களை நீண்ட காலங்களாகத் தடுத்து வைத்தலும், திட்டமிட்ட அடிப்படையில் இனவன்முறைகள் உருவாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட கொடூரங்களும் கடந்து வந்த காலங்களில் நிகழ்ந்து போயிருக்கின்றன.

வெலிக்கடைச் சிறைப்படுகொலைகள்,பிந்துனவல புனர்வாழ்வுப் படுகொலை போன்ற பாரிய இனப்படுகொலைகளுக்கு அப்பால், அங்கும் இங்கும் என்று பூசா, களுத்துறை, மகசின், மகர மற்றும் அனுராதபுரம் எனப் பல இடங்களில் இலக்கு வைக்கப்பட்ட பலர் கொலை செய்யப்பட்டார்கள். அந் நிகழ்வுகளுக்குச் சாட்சிகளோ தகுந்த விசாரணைகளோ இல்லாது குடும்பங்களிடம் உறவுகளை உடலங்களாகக் கையளிப்பதும், அச்சுறுத்தல், உயிராபத்துக்கள் என்பவற்றிற்கு அஞ்சிக் குடும்ப உறுப்பினர்கள் வாய்பொத்தி விடுவதும் தொடர்ச்சியாக நடந்து வந்தன. அரசினால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளானவை போர்க் காலத்தில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையாக உலகிற்கும் இனங்காட்டப்பட்டதனால் தமிழர்களின் நியாயங்கள் ஓரங்கட்டப்பட்டன. ஏனெனில் உலக வல்லாதிக்க அரசுகளின் பாணிகளின் எச்சங்கள் தான் இவை. மாந்த உரிமைகள் சாசனங்கள் வரைபவர்களும் நாமே! அதை மீறுபவர்களும் யாமே! மீறுபவர்களைக் காப்பற்றுவதும் நாமே! என ஒத்தோடும் ஒரு சூழலில் எமக்கு எப்படி நியாயங்கள் கிடைக்கும்?
ஆனால் திட்டமிட்ட கூட்டிணைவில் நிகழ்த்தப்பட்ட 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்னர், யுத்தம் முடிவுற்றதாகவும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதாகவும், வெற்றி விழாக்களை நடத்தி வந்த மகிந்த அரசும், நல்லாட்சி என்ற பெயரில், உலக வல்லாதிக்கங்களின் விருப்பத்திற்கமைவாக, ஆட்சிக்கட்டில் அமர்ந்துள்ள மைத்திரி-இரணில் தேனிலவு ஆட்சியிலும், தமிழ் அரசியல் கைதிகளை இன்னும் அடைத்து வைத்திருப்பதன் நோக்கம் என்னவெனத்தான் புரியவில்லை. ஏற்கனவே கைதாகி விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுதலும், கைதுசெய்து தடுத்து வைக்கப்படுதலும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படும் நிகழ்வுகளும் தொடரத்தான் செய்கின்றன. அத்தோடு சிறையிலிருக்கும் கைதிகளை அவ்வப்போது, திடீர் திடீரென அழைத்துச் சென்று விசாரிப்பதும், ஏனைய கைதிகளைப் பற்றிய தரவுகளைக் காட்டிக்கொடுத்தால் விடுவிப்பதாகவும் அல்லது தண்டணையைக் குறைப்பதாகவும் ஆசை வார்த்தை காட்டுவதும் அதற்கு உடன்படாதவர்களைத் துன்புறுத்துவதும் வெளியில் வராத இரகசியங்கள்.
இதற்கு, 1979ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில், 1982ம் ஆண்டில், கொண்டு வரப்பட்ட திருத்திய 10ம் இலக்கச் சட்டப் பிரிவிலுள்ள 15A (1)ன் கீழான “கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நாட்டின் பாதுகாப்புக் கருதிப் பாதுகாப்புச் செயலாளரின் கட்டளையின் நிமித்தம் மேலதிக விசாரணைக்குக் கொண்டு செல்லலாம்” என்ற விதியினடிப்படையில், இச்சட்டத்தினைத் தமக்கு வாய்ப்பாக வைத்துக் கொண்டு தெரிந்தெடுக்கப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவு (TID – 4ம் மாடி) மற்றும் பூசா சிறைச்சாலை ஆகியவற்றிற்குக் கொண்டு செல்லப்பட்டுத் தொடர் மீள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் ஏன் எதற்கு நடைபெறுகின்றன என்ற தகவல்கள் சட்டத்தரணிகளுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ தெரியவருவதில்லை. தொடர்ந்து தாங்கள் சித்திரவதைகளுக்கு உட்படுவதாகப் பாதிக்கப்பட்ட கைதிகளால் தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கொள்கை யாதெனில் இந்த அரசியல் கைதிகள் சிறைக்குள் சாவடைய வேண்டும்; அல்லது அகவை முதிர்ந்து நோய் வாய்ப்பட்டு நடைபிணங்களாய் வெளிவர வேண்டும் என்பதே. அதற்காகப் பல குயுக்திகளை மேற்கொள்ளுகிறார்கள். அண்மையில், தொடர்ந்து ஏழு ஆண்டுகளாகச் சிறையிருந்த ஒரு கைதியின் வழக்குகள் முடிவிற்கு வரும் தறுவாயில், சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட ஒரு கைதியின் வழக்குடன் இவரைத் தொடர்புபடுத்தி விட்டார்கள். இப்போது ஏனைய வழக்குகளில் விடுதலையான குறிப்பிட்ட நபர், அந்தப் புதுக் குற்றச்சாட்டிற்காக ஒத்திவைக்கப்பட்ட தண்டணையைப் பெற்று விடுதலையாகி உள்ளார். ஆனால் 2012 ம் ஆண்டு வவுனியா சிறையில் அடித்துக் கொலைசெய்யப்பட்டு மிகவும் பரபரப்பான நிகழ்வாகப் பேசப்பட்டுத் தகுந்த சான்றுகளானவை முன்வைக்கப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டும் அந்தக் கைதியின் கொலைக்கான நியாயம் கிடைக்கவில்லை. ஆனால் அவரின் வழக்கினை முன்னிறுத்தி இன்னொருவர் மீது வழக்குத் தொடரவும் தண்டணை வழங்கவும் முயலும் நீதித்துறையின் நீதி வழங்கலை என்னவென்றுரைப்பது? தவிர, கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மீதான வழக்குகளைத் தொடுத்து, வழக்குகளை நகர்த்துமளவிற்குச் சட்டமா அதிபர் திணைக்களத்திற்குப் போதிய சான்றுகள் இல்லாமல் இருக்கின்றன. பலர் ஏழு ஆண்டுகள் முதல் பதினைந்து ஆண்டுகள் வரையிலும் அவர்களின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் இருக்கும் சோகங்களைச் சந்தித்தவர்களாக இருக்கின்றனர்.
விடுதலை செய்து விட்டு மீள்கைது செய்யப்பட்ட ஒரு அரசியல் கைதியின் விடயத்தை இங்கு எடுத்துக்காட்டாகத் தொட்டுக் காட்ட வேண்டியுள்ளது. குறிப்பிட்ட அந்த நபர், முன்னர் கைதுசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் பூசாவிலும் ஓராண்டு மகசின் சிறையிலும் வைக்கப்பட்டிருந்தார். வழக்குத் தொடுக்கச் சான்றுகள் இல்லை என்ற அடிப்படையில் ஓராண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையானார். விடுதலையான நான்காம் மாதம் மீண்டும் கைதுசெய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் பூசாவிலும் தற்போது ஓராண்டு மகசினிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது எந்த வகையில் நியாயம்? முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க மீதான தாக்குதலில் ஈடுபட்டவர் எனச் சந்தேகிக்கப்பட்ட பெண், ஒரு கோவில் மண்டபத்தில் தங்கியிருந்ததாகக் கூறி, அக்கோவிலில் பணிசெய்த குருக்களையும் அவர் மனைவியையும் கைது செய்து, சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள். கேட்பவர்கள் காதுகளைக் கருகச்செய்யும் சித்திரவதைகள். அச்சித்திரவதைகள் சட்ட வைத்திய நிபுணராலும் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்மணி குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரின் கணவருக்கு முப்பது ஆண்டுகாலத் தண்டணை வழங்கப்பட்டுள்ளது. அவரின் வழக்கு தற்போது மேல் முறையீட்டு நீதிமன்றில் இருக்கின்றது.
அந்தப் பெண்மணி அனுபவித்த கொடுமைகளுக்கு யார் பொறுப்பு? அப்படியான வழக்குகளை நோக்கும்போது, தமிழ் இனத்தின் மீதான வெறியும், வெறுமனே அரசியல் நோக்கங்களும், பழி வாங்கும் எண்ணங்களுமே விஞ்சி விரவி இருக்கின்றன என்பது புலனாகும். எனவே சட்டம் ஓர் இருட்டறை என்பார்கள் ஆனால் சிறிலங்காவின் சட்டம் என்பது, தமிழர்களுக்குப் பாழ்பட்ட இருள் மண்டிய குகை என்றே கூறலாம் என்பதை மேற்கூறப்பட்ட நிகழ்வுகள் கட்டியங்கூறி நிற்கின்றன.

மிகப் பாதகமான சட்ட இறுக்கங்களைக் கொண்டு, தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலைகளில் அடைத்து வைத்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாது, அவர்களுக்குக் கொடுக்கும் நெருக்குவாரங்களும் தொல்லைகளும் எல்லைகள் இல்லாதது. பல்வேறு பயங்கரக் குற்றங்களைப் புரிந்து சிறைப்பட்டிருக்கும் சிங்களக் கைதிகளைத் தூண்டிவிட்டுத் தமிழ்க்கைதிகளைத் துன்புறுத்துவது, கொலை செய்வது, அச்சுறுத்துவது போன்ற செயற்பாடுகளையும் சிறை நிருவாகம் தொடர்ந்து செய்து வருகிறது. 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற வெலிக்கடைச் சிறைப்படுகொலைகள், 2012 அனுராதபுரத்தில் இடம்பெற்ற தாக்குதல் போன்ற கொலைகளில் சிங்களக் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்து வேறு சிறைகளுக்கு மாற்றப்படும் போதும், வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு அழைத்துச் சென்றுவரும் போதும், ஆடை களைவு செய்து சோதனையிடும் வழக்கத்தினைச் சிறை நிருவாகம் கொண்டிருப்பதானது, அரசியல் கைதிகளின் தன் மானத்தை உரசிப்பார்த்து, அவர்களை இழிவுபடுத்தும் செயல்களாகும். இதற்கெதிராகத் தமிழ்ச் சிறைக்கைதிகள் பட்டினிப் போரட்டங்கள் நடத்திக் களைத்துப் போய்விட்டனர்.
சிறிலங்கா அரசானது சர்வதேச பட்டயங்களில் கைச்சாத்திட்டுள்ளவாறு, தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் (ICCPR) ல் கூறப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமை, மருத்துவ சேவைகளை அணுகுவதற்கான உரிமை மற்றும் நீதியான விசாரணை கோருவதற்கான உரிமை முதலானவற்றினை மீறியே வருகின்றது. உரிய நேரத்தில் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படாமையாலும், அலட்சியங்களாலும் உள்ளேயே மாண்டு போனவர்கள் பலர். சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்டு, ஆண்டுக்கணக்காகத் தடுத்து வைத்து விசாரணை செய்யத் தம்மிடம் வலுவான சான்றுகள் இல்லாத போதும், அடைத்து வைத்து, சாகடிப்பதானது சிங்களத்தின் இனவாத கொலை வெறியினையையே பறைசாற்றி நிற்கிறது.
தவிர, அனைத்தும் முடிந்து விட்டன; பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டது; நல்லாட்சி கோலோச்சுகிறது; தமிழர் தரப்பினரும் சேர்ந்து கும்மியடிக்கின்றனர். ஆனால், ஏன் இன்னும் தமிழ் அரசியல் கைதிகளின் சிக்கல்கள் தீர்க்கப்படவில்லை? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த யாவரும் பயங்கரவாதிகள் என முத்திரையிடப்பட்டுள்ளார்கள் எனில், அரசுடன் சார்ந்து செயற்படுகின்ற சிலர் சுதந்திரமாகவும் ஒய்யாரமாகவும் நடமாடுவதற்கும், அரசியலில் ஈடுபடவும் இந்நாட்டின் பொறிமுறையின் இசைவு இருக்குமாயின், அப்பாவிகளான சாதாரணர்களுக்கு ஏன் இந்த மாறுபாடான நீதி? அதுவும் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகப்பட்டவர்கள் மீதான குற்றங்களை உறுதிபடுத்த முடியாமல், குற்றங்களைத் தேடி அலைந்து புதுக்குற்றங்களைக் கண்டுபிடித்து, பொருத்தி வழக்குத் தொடுக்கும் சூழ்ச்சி வேலைகளை ஏன் அரசு செய்ய வேண்டும்?

தம்மைத் தமிழ்மக்களின் பேராளர்கள் எனக் கூறும் தரப்பினரிடம், திடமான அரசியல் கோரிக்கைகளின்மையும், மக்களின் சிக்கல்களில் அழுத்தமான அக்கறை இன்மைகளுமே காரணங்கள் என இனங்காண முடிகிறது. அப்புக்காத்தர்கள் தான் அரசியல் உரிமைகள் பெற்றுத் தருவார்கள் என்ற மக்களின் மாயை நம்பிக்கையினை, வாக்குப் பிச்சைகளாகப் பெற்று, வாழும் இவர்கள் பேரின அரசுகளையும் விஞ்சி விடுகிறர்கள். அதி மேதகு சுமந்திரன் பெருந்தகையின் கூற்றுப் படி, சிறைகளில் இருபது ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்ட கைதிகள் யாருமில்லை என்பதே. இது முழு அபத்தமா அறியமையா எனத் தெரியவில்லை. ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டவர் மற்றும் முப்பத்தைந்து ஆண்டுகள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டவர் என மட்டக்களப்பைச் சேர்ந்த இருவர் இருபத்து நான்கு ஆண்டுகளாகச் சிறையிலிருக்கின்றனர். மத்திய வங்கி மீதான தாக்குதலில் தண்டணைக்குட்படுத்தப்பட்வர்கள் இருக்கின்றனர். அரசியல் நலன்கட்காக அப்பாவிகளின் கண்ணீருடன் வம்பு பேசும் அரசியல்வாதிகள் ஒரு புறம், கோவிலில் வழங்கும் இலவசப் பொங்கல், கடலை, அவல் போல் செயற்படும் தொண்டு நிறுவனங்களின் சட்ட உதவிகளின் ஏனோ தானோ என்ற மனப்பாங்கு மறுபுறும், வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை எனச் செயற்படும் பணம் பிடுங்கி அப்புக்காத்தர்கள் வேறொரு பக்கமாகப் போட்டுச், சிப்பிலியாட்டப்படும் தங்களின் எதிர்காலம் என்னவென அறியாத அன்றாடம் அனல் மேல் வாழும் வாழ்வைக் கொண்டிருக்கும் கைதிகளின் ஏக்கங்களுக்கு எப்போது தான் முடிவுகள்?
வட-கிழக்கு, கொழும்பு, மலையகத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளில், அறுபது தண்டணைக்கைதிகளும், முப்பத்திரண்டு விசாரணைக்கைதிகளும் என மொத்தம் தொண்ணூற்று இரண்டு கைதிகள், பூசா, கொழும்பு, வெலிக்கடை, மகசின், சிலாபம், வவுனியா மற்றும் போகம்பரை என சிறை வைக்கப்பட்டுள்ளனர். சரியான தரவுகளின் அடிப்படையில் நுணுக்கமான சட்ட அறிவுடன் தனித்தனியான அக்கறையுடன் அணுகினல் இச்சிக்கலானது தீர்க்கப்பட முடியாததொன்றல்ல. பட்டினிப் போராட்டம் நடத்தி வரும்போது அரசுக்கு இழுக்கும், தமக்கு அசிங்கமும் வரக்கூடாது என ஓடோடிச்சென்று பொய் வாக்குறுதிகளைக் கொடுத்துப் போராட்டங்களை நிறுத்திவிடும் அரசியல்வாதிகளிடம், அரசியல் கைதிகளைப் பற்றிய எந்த ஒரு அடிப்படைத் தரவுகளும் ஆவணங்களுமில்லை. எழுந்தமனதாக அறிக்கைகளை விட்டுக் கொண்டும் காலங்கடத்திக்கொண்டுமிருக்கின்றனர். இத்தனை ஆண்டுகளில் தாம் அரசியற் பேராளர்களாக இருக்கும் மாவட்டங்களில் எத்தனை அரசியல் கைதிகள் சிறை இருக்கின்றனர் என்ற விபரங்களைக் கூட அவர்கள் திரட்டி வைத்திருக்கவில்லை. மக்கள் பணியின் உயரிய அக்கறை இவ்வாறு தான் இருக்கிறது என்பதைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
போர் ஓய்விற்குப் பின்னர், எண்ணூற்று எண்பத்து மூன்றாக இருந்த அரசியல் கைதிகள் எந்த ஒரு அரசியல் பேச்சு வார்த்தைகளினாலும் குறைக்கப்படவில்லை. தனித்தனியான சட்ட நடவடிக்கைகள் மூலமே விடுவிக்கப்பட்டனர். புதிய ஆட்சி வந்த போது, இருநூற்று எழுபத்து மூன்றாக இருந்த கைதிகளின் எண்ணிக்கை தற்போது தொண்ணூற்று இரண்டாகக் குறைந்துள்ளது. ஆனால் முன்பை விடத் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் கிடுக்கிப்பிடிகள் அதிகரித்துள்ளன. ஒருவருக்கு நாட்டில் பல்வேறு இடங்களில் ஒன்று தெடக்கம் ஐந்து வழக்குகள் இருப்பதாக எடுத்துக் கொண்டால் ஏதாவது ஓரிடத்தில் வழக்கு முடிவுறுத்தலுக்கு வரும்போது ஏனைய இடங்களில், தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை மீள் வாங்கிக் கொள்ளும் இயல்பு காணப்பட்டது. ஆனால் தற்போது அப்படியல்லாது, அவ்வழக்குகளும் நடத்தப்பட்டேயாக வேண்டும் என்ற கொள்கை கடுமையாக்கப்பட்டுள்ளது எனின், இந்நல்லாட்சியின், பொல்லாத்தனத்தின் உள்ளார்ந்த திட்டம் என்னவாக இருக்கும் என ஐயங்கொள்ளத் தோன்றுகிறது. இவற்றையெல்லாம் புரியாமலா தமிழ்த்தரப்பினர் அரசியல் முட்டுக்கொடுக்கின்றனர் என வியப்பாகவும் திகைப்பாகவும் இருக்கின்றது.
வெயிலில் காய்பவனுக்கே நிழலின் அருமை தெரியும். அடுத்தவனின் கட்டுப்பாட்டில் அரைமணி நேரம் இருந்து சகிக்க முடியாது தவிப்பது தான் மாந்த மனம். ஆனால் ஆண்டுக்கணக்காக உறவகளைப் பிரிந்து, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருட்டில் வாழும் அரசியல் கைதிகளின் அவல வாழ்வு இனியும் தொடரக்கூடாது. பட்டினிப் போராட்டம், மனு அளிப்பது என எத்தனை ஆண்டுகளாக அவர்கள் போராடிப் போராடி வாழ்வா சாவா என வாழ்வது? இன்னும் எவ்வளவு காலந்தான் அவர்களின் குடும்பங்கள் பசி வயிற்றுக்கு வழியில்லாது தம் வாழ்வுதனைக் கண்ணீரில் மூழ்க வைப்பது? காலந்தாழ்த்தியளிக்கப்படும் நீதியானது நீதி மறுப்புக்கொப்பானது! இப்படிக் காலம் தாழ்த்தியதன் காரணமாகப் பல அப்பாவிகள் மாண்டு போன அவலக்கதைகள் ஏராளம்.
எனவே, கேடுகெட்ட இழுவை அரசியல் செய்யாது உரிமை அரசியல் செய்வதற்குத் தமிழர் தரப்பினர் முன் வரவேண்டும்! வட-கிழக்கு அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல தென்னிலங்கை சார்ந்த மலையகத்தைத் தூக்கி நிறுத்துவதாகக் கூறிக்கொள்பவர்களுக்கும் இது பொருந்தும். இத்தனை துன்பங்களுக்கும் காரணமான பயங்கரவாதத் தடைச்சட்டம் மீளெடுக்கப்பட வேண்டும் என்ற குரல் இப்போதெல்லாம் மங்கத்தொடங்கியுள்ளது. இனியும் காலங்கடத்தாது மக்கள் நலன் சார்ந்த அரசியலைச் செய்து, வாக்குப் பிச்சைக்காக வாயில் சொன்னதைச் செயல்களில் காட்டுங்கள். நீங்கள் வாக்குறுதி அளித்ததனால், உங்களை நம்பி மக்கள் வாக்களித்தார்கள். இந்த அரசும் வழமை போல் பழைய குட்டையில் ஊறிய மட்டை தான். அவர்கள் வழிக்கு வரமாட்டார்கள். அவர்களை எம்மால் நெறிப்படுத்த முடியாது என இயலாமையைத் தயைகூர்ந்து மக்களிடம் சொல்லி விடுங்கள். பாலுக்கும் காவல் என நடித்து, ஏதோ ஒரு காரணத்திற்றகாகப் பூனையின் நட்பை இழக்க முடியாத இயலாமையை, தயைகூர்ந்து திருவாய் மலர்ந்து உமிழ்ந்து விடுங்கள்.மெல்லவும் முடியாமலும் விழுங்கவும் முடியாமலும் தவிப்பதைத் தவிருங்கள். மக்கள் வேறு வழியைத் தேடிக்கொள்வர்கள். அரசியல் கைதிகள் விடயத்தில் மட்டுமல்ல, தமிழர்கள் எதிர்கொள்ளும் அனைத்துச் சிக்கல்களுக்கும் அது பொருந்தும். கடந்து போன வரலாறு தெரியாதவர்களல்ல நீங்கள், தம்புரா தூக்காத நாரதரர்களாக வெகு காலத்திற்கு உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது போகும் என்பதை ஈண்டு நினைவுறுத்த வேண்டியுள்ளது.
போட்டுள்ள நாய் வேடம் எலும்பு பொறுக்க மட்டுமல்ல குரைக்கவும் தான் என்பதை நாம் சொல்லியும் உங்கள் சிற்றறிவிற்கு எட்டாவிட்டால் உங்கள் மண்டைகளில் என்ன தான் இருக்கின்றது என நீங்களே தற்திறனாய்வு செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை!.
-கொற்றவை –
25-02-2017
Be the first to comment