மாறுவேடப்போட்டி சேகுவேராக்களும் அவர்களது கனரக ஆயுதங்களான சமூக வலைத்தளங்களும் தமிழ்த்தேசியத்தின் சாபக்கேடுகள் – அருள்வேந்தன்

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியப் பரப்பில் நடந்தேறிய நிகழ்வுகளின் பதிவுகள் ஊடகங்களாலும் ஊடகர்களாலும் சமூக உணர்வுடன் முழுமையான நிகழ்வுகளாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும். ஆனால் தற்போதைய ஊடகங்களில் குறிப்பிட்ட நிகழ்வுகள் தொடர்பான கருத்துப்பகிர்வுகளும் நயவஞ்சகக் கருத்தூட்டல்களும் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக அரசியற் பதிவுகளை அரசியற் தெளிவில்லாத, போராட்டத்தின் நீண்ட நெடிய பக்கங்களை அறியாத, போராட்ட காலத்தில் பங்கேற்று அதனூடான பட்டறிவைப் பெற்றுக்கொள்ளாத, அதன் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாத, இனத்தின் அரசியல் குறித்த விடயங்களில் முடிவெடுக்கும் பாங்கு எதனை அடிப்படையாகக் கொண்டது என்பதனை அறவே அறியாத, விடயங்களைப் பகுத்துப்பார்த்து தகவல் திரட்டி, அவற்றை ஆய்வுக்குட்படுத்தி, விடயங்களை அணுகி, அவற்றைச் செம்மைப்படுத்தி, முடிவுக்கு வரும் வரையிலான ஆய்வுமுறையினைச் செம்மையாக்கி  அதன் மூலம் துலக்கமான முடிவினை அறிந்து, அதன் பின்னாலான அரசியல் காரணங்களை ஆய்வுக்குள்ளாக்கி அதனை மக்கள்திரளிடம் பொறுப்புணர்வோடும் அதே கணம் அரசியற் புரிதல்களுடனும் எடுத்துச்சென்று நடந்தேறுவன‌ குறித்து விழிப்பூட்டி, அதற்கான எதிர்வினையாற்றலை எப்படிச்செய்வது என்பது குறித்த கருத்தாக்கத்தையும் கருத்தூட்டத்தையும் ஏற்படுத்தவல்ல வகையினராய் ஒரு விடுதலை அமைப்பு எவ்வாறு விடயங்களை அணுகியும் அது குறித்து முடிவெடுத்தும் வந்துள்ளது என்பதனைச் சற்றேனும் அறியாத அல்லது அது குறித்த ஆழ்ந்த புரிதல்களை உள்வாங்க முடியாத பக்குவமற்ற இளைஞர் கூட்டங்கள் புகழடையும் வாஞ்சையுடன் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தமக்கிருக்கும் மனநிலைகளுக்கேற்றாற் போல சற்றேனும் தமது நிலைகுறித்த புரிதல்களில்லாமல் நகைப்பிற்கிடமான வகையில் ஆங்காங்கே ஓரிரு வரிகளாகப் பதிவிட்டு சமூகவலைத்தள‌ வாந்தியெடுப்பது தமிழர் அரசியலின் கருத்துவெளியைக் கோரமாகச் சீரழித்துள்ளது.

அமைதிக் காலத்தில் விட்டால் வெடித்துச் சாவேன் என்றாற்போல வீரப்பெருமை பேசும் பாசாங்கு இளைஞர் கூட்டம், போர் வெடிக்கும்போது தப்பிப் பிழைத்து, புலம்பெயர்ந்து வாழும்போது, ஊரில் நின்றிருந்தால் வெடித்துச் சிதறியிருப்போம் என்று மீண்டும் பாசாங்கு செய்து, தமது பொருண்மிய வளங்களையும் தமது குடும்ப நலன்களையும் பேணுவதை முதன்மைப் பணியாகக் கொண்டு (அதைக்கூட ஒழுங்காக செய்யும் ஆளுமையற்றவர்கள் என்பது வேறு விடயம்) மீதிப் போராட்டத்தை அலைபேசியிலும் இணையத்திலும் கட்டமைத்து உலகிற்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்வோம் என்று மாயமான் காட்டும் மந்தைக் கூட்டங்களாய் வலம் வருகையில், ஊரிலிருந்து எட்டாம் வகுப்பில் படிக்கையிலேயே ஒவ்வொரு பாடத்திற்கும் வீட்டிற்கு வந்து படிப்பிப்பதற்கு நான்கு வாத்திமார்களை வைத்துக் கல்வி கற்று, முடிந்தவரை தேர்வுக் கடவையைக் கடந்து பல்கலைக்கழக வாயிலில் புகும் வாழ்வினை அதியுச்ச இலக்காகக்கொண்டு வாழ்ந்து, அது ஓரளவு சரிப்பட்டுப்போக அல்லது முற்றாகக் குறைப்பட்டுப் போக பின்னர் மீதி வாழ்வில் தம்மைப்பற்றிப் பிறர் புகழ்ந்தும் பரபரப்பாகப் பேசுவதற்கும் என்னவெல்லாம் வழியென அங்கலாய்த்துத் திரிகையில் நீரோ மன்னன் கையில் அகப்பட்ட உரோம சாம்ராச்சியத்தின் ஆட்சி அதிகாரம் போல முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் வலிநிறைந்த பக்கங்களால் பார்க்குமிடமெல்லாம் குருதி வாடையும் சாவு அவலங்களும் கண்முன்னே வந்து குரூரப்படுத்தி நிற்க, அந்தத் துன்பப்பூட்டிலிருந்து வெளிவர முடியாமல் பேசா நிலையில் ஒரு விடுதலைப் போராட்டத்தின் பங்குதாரர்களான இயங்கு ஆற்றல்கள் முடமாகிப் போயிருக்க, ஏதோ கிடைத்த அரசியல் வழியாய் புகழடைய வாய்ப்புத்தேடும் இளைஞர்கள் பலர் இன்று மாறுவேடப் போட்டியில் பங்குபற்றும் சேகுவேராக்களாகப் பாத்திரமேற்றுக்கொண்டு அதனைக்கூட முழுமையாகச் செய்ய முடியாமல் அவ்வப்போது தமது பால் வரட்சிப் பதிவுகளையும் தனிமனித காழ்ப்புணர்வுகளையும் பதிவதனைத் தவிர்க்க முடியாமல் இன்னும் சேகுவேராக்களாக சமூகவலைத்தளங்களிற் தொடர்ந்தும் வலம் வர, புரட்சிகர ஆற்றல்களால் முன்னெடுத்து வழிநடத்தப்படும் ஒரு புரட்சிகர அரசியல் ஊடகமின்றி தமது அரசியல் நிலைப்பாடுகளை உரிய முறையில் அதன் தெளிந்த பாடங்களுடன் அறிந்து தெளிந்து அதனை எடுத்துச் செல்லவல்ல வகையின்றி எமது இனம் பல வகையான வரட்சிகளுடனும் வறுமைகளுடனும் இன்னும் அரசியல் வரட்சியும் வறுமையும் சேர்ந்து போற வழி தெரியாமல் சவக்குழிக்கு பட்டுப்பாதை அமைத்துப் போவதாய் இன்றைய அரசியல் நிலை இருக்கிறது.

சுமூக வலைத்தளங்களான புலனம், பகிரி, முகநூல், வலையொளி மற்றும் ருவிட்டர் போன்றவை கருத்தூடகங்களாக வேறு வழியின்றி ஊடகங்கள் போல ஆதிக்கம் செலுத்த, ஊடகர்களின் எண்ணிக்கையோ முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையாகப் பல்கிப் பெருகிவிட்டது. ஊடகர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட இந்த வீக்க‌ வளர்ச்சியானது இன்று தமிழர் அரசியல்வெளியை நகைப்புக்குரியதாக மட்டுமல்லாது, மூடர்கூடத்தின் ஒட்டுமொத்த உறைவிடமாக சமூக வலைத்தளங்கள் தமிழர் வாழ்வியலில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கிவிட்டன. விறுவிறுப்பும் கனைப்பும் சிரிப்பும் உணர்ச்சியுமாய் சிலவரிகள் பதியவல்ல புகழ்விரும்பிகள் எல்லாம் கருத்துருவாக்கிகளாக, எமது விடுதலைப்போராட்டத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் தமது வாழ்வியல் பக்கங்களாக வரித்துக்கொண்ட தகைமையாளர்களும் புலமையாளர்களும் புலனாய்வாளர்களும் இன்று செல்லாக்காசுகள் போல சமூகவலைத்தளப் பரபரப்பு இளைஞர் வட்டங்களால் ஆக்கப்பட்டு விட, பல சில்லறைகளோ இன்று தேசியத் தலைவர் அளவில் கௌரவம் சூட்டப்பட்டு அவர்கள் வருமான வழி பூத்துக் குலுங்க வழிசமைக்கப்பட்டுள்ளது.

மண்மீட்புப் போராட்டம் (உசாத்துணை கூகுள் படம்), நில அறுவடைக்கு வாரீர் (அடுத்தநாள் காலை எட்டுமணிக்கு அலுவலகத்தில் கையெழுத்து வைக்கவேண்டியிருப்பதால் அதற்கு முன்னர் அறுவடைப் போராட்டத்தை முடிக்க வேண்டும்) , வீர வணக்கம், போராளி, பகைவரை விரட்டுவோம் (முதன்மை எதிரி, அடுத்த நிலை எதிரி, அகமுரண், புற ஆற்றல், சேமிப்பு ஆற்றல் போன்ற அடிப்படை அரசியல் விடயங்களில் கூட தெளிவில்லாமல் பகைவர் யாரென்ற தெளிவற்று, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அழிந்தால் தமிழீழம் கிடைத்துவிடும், சம் சுமியை போட்டுவிட்டால் தமிழீழம் கையில் வரும் என்று ஞாயிற்றுக்கிழமை போராட்ட வீரர்கள் அனலாய் கிளம்புவார்கள்), நாங்கள் படையாக நிற்கின்றோம், போர் முரசு அறைகின்றோம், இளைஞர் படை புறப்பட்டு விட்டது (படையின் மொத்த எண்ணிக்கை பத்திலும் குறைவு),  தளபதிகள் (ஒரு நுளம்பு கூட அடித்திருக்கமாட்டார்கள்), நினைவேந்தற் கூட்டம் போன்ற போராட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்ட இச்சொல்லாடல்கள் இன்று அச்சொல்லாடல்களுக்குப் பின்னே, அந்தச் சொல்லாடல்களுக்காகச் சிந்திய வியர்வையும் பாய்ச்சிய குருதியும் செய்யப்பட்ட ஈகங்களும் கொடுக்கப்பட்ட அர்ப்பணிப்புகளும் அதன் வழியான உணர்வு வலிகளும் எதுவென உணராமல் அல்லது உணரத் தெரியாமல் இருக்கும் மேற்போந்த இளைஞர் வட்டங்கள் இன்று தம்மை அடையாளப்படுத்தத் தமது தற்குறி அரசியலை தேசியம் என்ற போர்வையின் மூலம் நாகரிக வடிவம் கொடுத்து, தமது தொடர் வாந்தியெடுப்புகளை தொடர்ந்தும் செய்து வருவதால் தக்க தரப்பினர் மனம் வாடி, வெந்து நொந்து சாத்தேடும் மனநிலைக்குப் போயே விடுகின்றனர். களநிலைகளை ஆராய்ந்ததில் ஞாயிற்றுக் கிழமைகளிலேயே அவர்களது கூட்டங்கள் சாத்தியமாகின்றது. மேலதிகக் கொடுப்பனவுகள் இருப்பின் அந்த ஞாயிற்றுக்கிழமைகளும் வேலை நாள்களாக மாற, அவர்களது சந்திப்புகள் சாத்தியமற்றுப் போய்விடுகின்றன.  

விடுதலைக்காகப் பங்களித்தவர்கள், சிறை மீண்டவர்கள், சிங்களப் பேரினவாதத்தால் மீண்டும் சிறைப்படுத்தப்பட வாய்ப்புள்ளவர்கள் அல்லது சிங்களத்தினால்  இலக்கு வைக்கப்பட்டும் கைதுகளில் அகப்படாமற் தம்மைத் தற்காத்துக்கொண்ட ஆளுமைகள், விடுதலையின் மீதிப்பக்கங்களை எழுத வல்லோர், அனைத்தையும் துறந்து தம்மை தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காக மீண்டும் அர்ப்பணிப்பதற்கு வழிதேடுவோரும் சாவுக்குப் போயும் சா வராமல் மீண்டும் சாவுக்குப் போய் வரலாறாவதற்கு வழிதேடிக்கொண்டிருப்போரில் சிலரேனும் இணையத்தைப் பயன்படுத்தக் கிடைக்கும் வாய்ப்புகள் மூலமாக தறிகெட்டுப் போகும் சில இளவட்டங்களினால் திசை மாறிப் போகும் அரசியல் பார்வைகள் அப்படியே கேவலமாகிப் போய்விடாமல் நெறிப்படுத்தவென சில பதிவுகளை இடுகையிலும் அவர்களைத் தம் புகைப்படம், பிறந்த தேதி, நிலையான முகவரி, தற்காலிக முகவரி போன்ற சிங்களப் புலனாய்வுத் துறைக்குத் தேவையான தகவல்களுடன் வராவிட்டால் அவர்கள் சிங்களப் புலனாய்வுத்துறையால் சிறைப்படுத்தப்பட்டு அனுபவிக்கும் கொடுமைகளை விஞ்சிவிட வல்லனவான இழிந்துரைப்புகளையும் ஏளனங்களையும் இந்தக் குறைப்புரிதலுடைய சமூகவலைத்தள இளைஞர்கள் செய்கின்றனர்.

போராட்டப் பங்களிப்பு வீதம் அதிகமான தென்தமிழீழத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் மக்களுடைய வாழ்நிலை, தமிழர் தாயக நிலங்களை மீட்டதில் அவர்களின் பங்களிப்பு, அவர்களின் தமிழ்த் தேசியத்தின் மீதான தீராக் காதல், கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, சத்துருக்கொண்டான், வீரமுனை, சித்தாண்டி, வந்தாறுமூலை, புனானை, வாகரை, புல்லுமலை, அட்டப்பள்ளம், தோணிதாட்ட மடு, புல்மோட்டை என நீளும் சிங்கள பௌத்த பேரினவாதத்தினதும் அதனது சூழ்ச்சிக்குப் பலியாகி, தமிழ்த்தேசியத்தைச் சிதைக்கவென கங்கணம் கட்டி நிற்கின்ற முஸ்லிம் அடிப்படைவாதத்தின் கோரத் தாண்டவங்களால் வகைதொகையின்றி கொன்றொழிக்கப்பட்ட மரபுக்கூறுகளிலேயே வீரம் விளைந்த எமது தென் தமிழீழ மக்களின் அரசியல் வேணவாக்களையும் அவர்களது நல்வாழ்வுக்கான அரசியல் அடித்தளங்களையும் அந்த மண்ணின் நிலையறிந்து அந்த மண்ணிலிருந்து சிந்திக்க முடியாத யாழ்ப்பாணக் குறுந்தேசியவாத, இன்னும் அதனுள் குறுந்தேசியவாத குட்டி முதலாளித்துவ தலைமைப்பீடங்களாகத் தம்மைப் பரப்புரை செய்வதில் அதிக ஆவலுடைய சில பிரதேச ஒன்றியங்கள் என சீரழிவு அரசியல் செய்யும் அரசியல் சாக்கடைகளால் உணரமுடியாமல் இணைய வழியில் தமது அறிவுக்கேற்றாற் போல சிலரால் பதியும் பதிவுகளை முதனிலைத் தரவுகளாகக் கொண்டு தாக்குதல் திட்டம் தீட்டி, அடுத்த நாள் காலையில் திங்கட்கிழமை வேலைக்கு போவதற்கும் சனிக்கிழமை வேலையின் மேலதிகக் கொடுப்பனவுகளுக்குப் பாதிப்பு வராதவாறும் வல்லிபுரத்தானின் அருள் வீசும் ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டு, மாறுவேட‌ப்போட்டிச் சேகுவேராக்கள் அதற்கு ஓயாத அலைகள் என பெயர் சூட்டாத குறை தவிர (இனிவரும் காலங்களில் அப்படியும் பெயர் வைக்கப்படலாம்) முழு அளவில் சமூகவலைத்தளப் பரப்புரைகளைச் செய்து மண்சட்டி சோறு சமைத்து, அதை மக்களுக்குக் கொடுப்பதாக முகநூலில் எழுதி, குரும்பையில் செய்த தேர்போல முகநூலில் பக்கத்தை உருவாக்கி ஊர்கூடித் தேரிழுக்க அழைப்பு விடும் போலிகள் தமது வர்க்கம் குறித்த எந்தப்பார்வையும் இல்லாமல், போராட்ட வரலாற்றில் போராடும் தரப்பானது அது தான் சார்ந்த வர்க்கம் எந்த வர்க்க நலனைச் சார்ந்தது என்ற பார்வையே போராட்டத் தலைமையின் உறுதியைத் தீர்மானிக்கவல்லது என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாது தமது நலன்களை மட்டுமே உள்ளூர உணரக்கூடிய அல்லது ஒலிக்கக்கூடிய இந்த மாறுவேடப்போட்டி சேகுவேராக்கள் ஏனைய தமிழர்தாயக நிலங்களை ஆங்காங்கே ஊறுகாய் போல தொட்டுச்சென்று, தமது தமிழ்த் தேசியம் குறித்த பார்வை முழுமையானது என்பது போல பாசாங்குகளைச் செய்கிறார்கள். மண்ணிற்காக மாண்டவர்களுக்காக நினைவேந்தற் சுடர்கள் ஒளிர்ந்த மண்ணில் இந்த முட்டாள்களால் இன்று ஒடுக்கும் சிங்களவர்களுக்கும் நினைவு நாள்கள். சமூக வலைத்தளத்தினால் விளைந்த சாபக்கேட்டில் மிகமோசமான விளைவு அது. உயிராகி எங்கள் மூச்சுகளாகி நின்றவர்களின் ஈகங்களுக்கு ஒரு சிங்களவனின் உயிர் சமப்படுமா? ஆனால் வலைத்தளங்கள் அதனைச் செய்திருக்கின்றன.

தமிழினத்தினுள் நீண்ட காலமாக சாதிய உளவியலினால் அடக்குண்டு ஒடுக்குண்டு கிடந்த எமது தமிழ்த்தேசியத்தின் தொன்மையை தமது மரபுகளில் தாங்கி நிற்கும் மக்களது நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையிலேயே தமிழ்த்தேசியம் அவர்கள் மீதான சாதிய‌ ஒடுக்குமுறைக்கும் ( சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கட்டமைக்கப்பட்ட அரச பயங்கரவாதத்தின் ஒடுக்குமுறையையும் சாதிய உளவியலில் விளைந்த ஆதிக்கத் திமிரின் ஏனையோர் மீதான அடக்குமுறையையும் சமன்செய்வது இங்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை) தீர்வு சொல்லக்கூடியதாய், தமிழ்த்தேசியம் உண்மையான உயிர்மை விடுதலைக் கருத்தியலாக‌ புரட்சிகர அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும். அதேபோல் அடையாள‌ அரசியலின் வழி பிளவாய் பிளவுபடுத்தும் பிரதேச அரிப்புகள் தமது நலன்களை வென்றெடுப்பதற்கு இடமளியாதவாறு தென்தமிழீழத்தின் அரசியல் வேணவாக்களும், வன்னிமண் சார்ந்த அரசியல் உணர்வுகளும் யாழ் மண்ணின் மக்களான‌ உழைக்கும் ஆற்றல்களின் நலன்களும் கேடாகாதவாறு, தமிழ்த்தேசியத்தின் பேரில் ஆதிக்க மனநிலை கொண்ட கீழின விலங்குகள் அண்டிப்பிழைப்பதற்கு வழிகோல, தமிழ்த்தேசியம் இடமளிக்காதவாறு அந்த உயிர்மைக் கருத்தியலானது புரட்சிகரமாய்க் கட்டியமைக்கப்பட வேண்டும்.

இவ்வளவு கால அழிவுக்குப் பின்னரும் இந்த விடுதலையை வென்றெடுக்கவல்ல ஆற்றல், இதுவரை செய்த ஈகங்களை ஏற்ற புரட்சிகர பாத்திரத்தையும் விஞ்சியதாக இன்னுமின்னும் நாங்கள் எமக்காக ஆகுதியானவர்களை எமது சிந்தையில் நிறுத்தி, இன்னுமின்னும் அதிகமாகவே அர்ப்பணிப்புகளைச் செய்து, எமது புரட்சிகரக் கடமையை ஆற்ற வேண்டியது எமது விடுதலைப்போராட்டம் சொல்லும் இயங்கியல் பாடமாகும்.

இப்படியான ஈகங்களையும் செய்யமுடியாத சூழலிலோ அல்லது அத்தகைய வர்க்கத்தின் பேராளர்களாகவோ இருப்போர், தமது செயல் வல்லமைக்கு ஏற்றாற் போல தமது நாவை அடக்கி வாசித்தலே அடிப்படை அறமாவதுடன் அதுவே அவர்களுக்கும் சிறந்தது. தமிழர்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்காகப் பலவாறான பிரித்தாளும் உத்தியைக் கையாளும் இந்திய, சிறீலங்கா மற்றும் பன்னாட்டு உளவு அமைப்புகளின் நேரடிச் செயற்பாட்டாளர்களாலேயே செய்ய முடியாதவற்றை தமது மடைமைத்தனத்தினால் செய்து கொண்டிருக்கும் புலியைப் பார்த்து சூடுபோட்டுக்கொண்ட இந்தப் பூனைகள் அந்த உளவு அமைப்புகளுக்குக் கிடைத்த கொடுப்பனவு வாங்காத வினைத்திறன் மிக்க பணியாளர்கள் என்றே கருதவேண்டியுள்ளது. இந்த விடயம் இவர்களுக்கும் தெரியாது; எந்த உளவு அமைப்புகளின் நிகழ்ச்சிநிரலுடன் பொருந்திப் போகிறார்களோ அவர்களுக்கும் தெரியாது. அவர்களுக்குத் தெரிய நேரில் இவர்களுக்கும் அவர்களுக்கும் ஒரு உறவு மலர்ந்து அதற்கு தாம் அவர்களைக் கையாள்கிறோம் என இவர்கள் சொல்ல வருவார்கள். அதனையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் இரண்டகம் இழைப்பவர்களாக இவர்களால் முத்திரை குத்தப்படுவர்.

தனிநபர்களை அவர்களது கருத்தியல் அடிப்படையிலான‌, அரசியல் பிறழ்வான அல்லது சமூகத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய நடிவடிக்கைகளுக்காக, தமிழ்த்தேசியத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய செயல்களுக்காக அவர்களைக் கண்டித்து, மெய்ந்நிலையை மக்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றி, பரட்சிகர கடமைகளைச் செய்வதற்குப் பதிலாக ஒருவரை அவரது பாலியல் பலவீனத்தால் மட்டுமே (வேறு எதுவும் தெரியாது) முடக்கலாம் என்ற அரசியல் வரட்சி சிந்தனையின் விளைவாக படுக்கையறைப் புலனாய்வு செய்து பார்ப்பது, அது முடியவில்லையெனில் தகவல் தொழினுட்ப உத்திகளைப் பயன்படுத்தி, சித்து விளையாட்டுக்களைச் செய்தேனும் பாலியல் பலவீன முத்திரை குத்தி முடக்குவது என்பதனையும் குடாரப்பு தரையிறக்க வெற்றி போல கொண்டாடும் இளவட்டங்கள் குடாரப்பு நாயகன் பால்ராஜ் அண்ணா அளவுக்கு தமது முகநூலில் கூட இருந்து வாந்தியெடுக்கவல்ல சிலரை சித்தரிப்பார்கள். இவ்வளவு இழிநிலையில் தமிழர் அரசியல்வெளி இருக்க, என்ன செய்யப்போகின்றோம் இந்த இழிநிலை போக்க என்று ஏங்கிய வண்ணம் ஒரு தரப்பினர் பேசாநிலையில் இருக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இப்படியொரு பேரவலமானது மாறுவேட‌ப் போட்டி சேகுவேராக்களால் நிகழ்த்தப்படுமெனத் தமிழர்கள் கனவிலும் கண்டிலோம். என்ன செய்வது இதற்காக? இந்த மண்ணிற்காகப் போராட வல்லவர்கள், அதற்காக முழுமையாகத் தம்மை அர்ப்பணிக்கக் கூடியவர்கள், எம்முடைய மண்சார்ந்த சிக்கல்களையும் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைகளையும் தெளிவாகப் புரிந்தவர்கள், இந்த மண்ணோடு இயைந்து மக்களுக்காக போராடுபவர்கள், மக்களோடு மக்களாக நின்று மக்கள் மயப்பட்ட புரட்சிகர விடுதலைப்போரிற்கு அணியமாகி, தமது புரட்சிகரக் கடமையை ஆற்றுவதற்கான கணம் வரும்வரை மாறுவேடப்போட்டி சேகுவேராக்களின் சலசலப்புக்கள் கொஞ்சம் அதிகமாகவே சில்லெடுக்கும் என்பது காலக்கொடுமை.

அருள்வேந்தன்

26-07-2017

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*