விக்கிரமபாகு கருணாரத்தினவின் மறைவையொட்டி எம்மனங்களில் நிலைக்கும் தமிழீழ விடுதலையின் பங்காளராகிய‌ சிங்களத் தோழர்களைப் பற்றி மீட்டுக்கொள்வோமாக‌ ! -முத்துச்செழியன்-

இலங்கைத்தீவில் தமிழர்தேசம், சிங்களதேசம் என்ற இரு தேசங்களின் நிலவுகையைக் கருத்திலெடுக்காமல் தமது மேலாதிக்க நிருவாக நலன்கட்காக 1833 ஆம் ஆண்டு இலங்கைத்தீவை ஒற்றையாட்சிக்கு உட்படுத்திய பிரித்தானிய வல்லாண்மையாளர் (imperialist), இலங்கைத்தீவிற்கு விடுதலையளிப்பது என்ற போர்வையில் நவகாலனியத்திற்கு (neocolonialism) உட்படுத்திவிட்டு, 1948 இல் இலங்கைத்தீவை விட்டு வெளியேறும்போது, ஒற்றையாட்சியின் ஆட்சியதிகாரத்தைச் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் கையளித்துவிட்டுச் சென்றபோது தமிழர்தேசமானது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நேரடி ஒடுக்குமுறைக்கு உள்ளானது. தொடக்கத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தினதாகவிருந்த தமிழர் மீதான ஒடுக்குமுறையானது பின்னர் ஒட்டுமொத்த சிங்களதேசத்தின் ஒப்புதலினூடான தமிழர்களின் மீதான ஒடுக்குமுறையாக 1960 களில் கேவலங்கொண்டது.

ஆனாலும், ஒடுக்கும் சிங்கள தேசத்திற்கும் ஒடுக்கப்படும் தமிழர் தேசத்திற்குமிடையிலான இனப்பகைமை முற்றியபோதும், தமிழர்தேச அரசு (Tamil Nation State) அமைக்கும் விடுதலைப் போராட்டமானது தமிழரிடத்தில் வீறுகொண்டெழுந்தபோதும், தமிழினவழிப்பு மூலம் தமிழர்தேச அரசமைக்கும் வரலாற்றுப்போக்கைச் சிங்களம் தள்ளிப்போட்டபோதும், தமிழருடன் கைகோர்த்துத் தமிழர்தேசத்தின் குரல்களாக மாறிப்போன சிங்களத் தோழர்கள் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு நல்கிய பங்களிப்புகளானவை எஞ்ஞான்றும் தமிழர் நினைவுகளில் நன்றியுடன் நிலைத்துநிற்க வேண்டியவை என்பதை விக்கிரமபாகு கருணாரத்தின அவர்களின் மறைவின் துயரில் இருக்கும் இந்நேரத்தில் அழுத்தமாகப் பதிவுசெய்ய விரும்புகின்றோம்.

தமிழரின் உரிமைப் போராட்டத்திற்காகப் பாடாற்றிய சிங்களத் தோழர்களைத் தரம் பிரிப்பது எமது நோக்கமன்று என்றாலும், தமிழர்களின் விடுதலைக்காக அவர்கள் எந்தக் கருத்தியற் தளத்திலிருந்து, எந்த எல்லை வரை, எந்த அடிப்படையில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துடன் உடன் நின்றார்கள் என்பதைப் பற்றிய புரிதல் விடுதலைக்காகப் போராடும் தமிழர் தரப்பிற்குத் தேவையானது என்பதால், சிங்களத் தோழர்கள் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் எங்ஙனம் பங்கெடுத்தார்கள் என்பதைத் தனித்தனியாக விளக்குவதை இப்பத்தி நோக்காகக் கொண்டுள்ளது.

கருத்தியலடிப்படையில் சிங்களத் தோழர்கள் தமிழர்தேசத்தின் தேசிய இனச்சிக்கலை அணுகுமாற்றைப் பின்வருமாறு வகைப்பிரிக்கலாம்.

  • தமிழர்கள் தமது தன்னாட்சியுரிமை அடிப்படையில் தமிழர்தேச அரசு அமைப்பதுதான் இலங்கைத்தீவில் தமிழ்த்தேசிய இனம் உளதாயிருக்க ஒரேவழி என ஏற்று உடன் நிற்கும் தோழர்கள்
  • தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தன்னாட்சி உரிமை என்பன ஏற்றுக்கொள்ளப்பட்டு இலங்கைத்தீவில் தமிழர்கள் உரிமை பெற்று வாழ வேண்டும் என்ற அடிப்படையில் குரல் கொடுக்கும் தோழர்கள்
  • தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை உறுதிசெய்து மகாவம்ச மனநிலையைத் தோலுரித்துக் காட்டுவதன் மூலம் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடிப்படைகளை ஆட்டங்காணச் செய்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நயன்மையை (legitimacy) உலகறியச் செய்யும் தோழர்கள்
  • தமிழர் தாயகத்தின் வரலாற்றுத் தொன்மையை ஏற்கவோ மறுக்கவோ முன்வராமல், நவகாலனியச் சூழலில் தேசிய இனங்களின் உரிமைச் சிக்கல் என்ற கோணத்தில் தமிழர்கட்காகக் குரல்கொடுக்கும் தோழர்கள்
  • இலங்கைத்தீவில் தமிழர்கள் பாகுபாடுகட்குட்படாமல் சிங்களவர்களைப் போல சமவுரிமை பெற்று சிங்களவர்களுடன் இணைந்து வாழ வழியமைக்க வேண்டுமென்ற முனைப்புக்கொண்ட தோழர்கள்
  • சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் தமிழர்கள் இனவன்முறைகட்கு ஆளாவதைக் கண்டு மனம் நொந்து மாந்த உரிமைச் சிக்கலாக (தமிழ்த் தேசிய இனச்சிக்கலாகக் கருதாமல்) இலங்கைத்தீவில் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அணுகும் தோழர்கள்
  • சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் தமிழர்கட்கு இழைக்கப்படும் இன்னல்களைக் கண்ணுற்று அதனால் மனம் வெந்து மாந்தநேயக் கண்ணோட்டத்தில் தமிழர்களின் நல்வாழ்வுக்காகக் குரல்கொடுக்கும் தோழர்கள்

செயற்பாட்டு அடிப்படையில் சிங்களத் தோழர்கள் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் பாடாற்றியமாற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்;

  • தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை ஏற்றுக்கொண்டு, போராட்ட வழிமுறையிலோ அல்லது கருத்தியலிலோ எந்தவொரு கருத்துவேறுபாடும் தமிழரின் விடுதலைப் போராட்ட அமைப்புடன் கொள்ளாது, தம்மாலியன்ற வரை தமது பங்களிப்பை வழங்கும் தோழர்கள் (விடுதலைப் புலிகள் அமைப்பின் நிகழ்ச்சிநிரலுடன் தம்மை இணைப்பவர்கள்)
  • ஒடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரச எந்திரத்தை நலிவடையச் செய்தலும் வலுக்குன்றச் செய்தலுமே ஒடுக்கப்படும் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்திற்குச் சிங்களத் தோழர்களாக தாம் செய்ய வேண்டிய உண்மையான பங்களிப்பு என்ற புரிதலில் செயற்படும் தோழர்கள் [சிங்களக் கொட்டி (புலிகள்) இந்த வகைக்குள் அடங்குவர்]. இவர்கள் விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சிநிரலுடன் முரண்படாமல், ஆனால் தமக்கேயுரிய அமைப்பு வடிவத்திற்குள் நின்று செயற்படுபவர்கள் ஆவர்.
  • தமிழீழ விடுதலைப் போராட்ட நயன்மையை உலகறியச் செய்வதற்காகப் பாடாற்றுபவர்கள் (international lobbying)
  • தாம் சார்ந்த உலகளாவிய வலைப்பின்னல்களைக் கொண்ட மாந்த உரிமை அமைப்புகளின் பேராளர்களாகவிருந்து ஒடுக்கப்படும் தமிழர்களின் சிக்கல்களை மாந்த உரிமைக்குரலில் ஒலிக்கும் தோழர்கள். இவர்கள் பொதுவில் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பற்றிப் பொதுவெளியிற் கருத்துச் சொல்ல விரும்பாதவர்கள்
  • தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதோ அல்லது தமிழர்களின் மறவழிப் போராட்டம் மீதோ எந்தவொரு கருத்தையும் கூற விரும்பாமல், தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் நயன்மையை வெளிப்படுத்தத் தமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி எழுதவும் பேசவும் செய்யும் தோழர்கள்

வேறுபட்ட தளங்களிலும் வேறுபட்ட அளவுகளிலும் இவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் உடன்நின்ற சிங்களத் தோழர்களின் பங்களிப்பை இப்பத்தியின் வாயிலாக எண்ணிப் பார்ப்போமாக1

விக்கிரமபாகு கருணாரத்தின‌ (1943- 2024)

2024.07.25 அன்று மறைந்த விக்கிரமபாகு கருணாரத்தின‌ அவர்கள் தாம் அரசியலில் குதித்த நாள்முதலே, அதாவது 1970 களின் தொடக்கத்திலிருந்து தனது இறுதிமூச்சு வரை, தொய்வின்றித் தொடர்ச்சியாகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் உடன்நின்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியற் பட்டத்தை முதல் வகுப்பில் பெற்ற இவர் இலண்டன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை நிறைவுசெய்து, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பதவியேற்றார். இலங்கையின் பாரிய இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாசக் கட்சியின் (LSSP) தீவிர செயற்பாட்டாளராகவிருந்த இவர் அக்கட்சியின் நடுவண் குழுவிற்குத் (Central Committee) தெரிவுசெய்யப்படும் நிலையிலிருந்த போது, லங்கா சம சமாசக் கட்சியானது சிறிமாவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் நாடாளுமன்ற வாய்ப்புவாதக் கூட்டணிக்குச் செல்வதைக் கண்டித்துக் கருத்துத் தெரிவித்தமையால் இவர் அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. முன்னாள் இடதுசாரியும் பின்னாளில் மகிந்தவுடன் ஒட்டியுறவாடி ஒட்டுண்ணியாகிப் போனவருமான அந்நாளில் பெரிதும் மதிக்கப்பட்ட வாசுதேவ நாணயக்காரவுடன் இணைந்து 1977 இல் நவ சம சமாசக் கட்சியினை முனைவர் விக்கிரமபாகு கருணாரத்தின அவர்கள் நிறுவினார். ஜே.ஆர். ஜெயவர்த்தனவை எதிர்த்துக் கண்டியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1978 இல் கைதான முனைவர் விக்கிரமபாகு அவர்களினைப் பேராதனைப் பல்கலைக்கழகமானது அவர் வகித்து வந்த விரிவுரையாளர் பதவியிலிருந்து இடைநீக்கியது (தாம் வகிக்கும் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒடுக்குமுறைகளைக் கண்டுங்காணமலும் இருக்கும் மிகைத்தன்னலங் கொண்ட தமிழர்கள் இந்தச் செய்தியை மனங்கொண்டு உங்கள் தரத்தைத் தெரிந்து தெளிக‌).

சிறையிலிருந்து வெளியே வந்த விக்கிரமபாகு அவர்களைப் பேராதனைப் பல்கலைக்கழகமானது தொடர்ந்து வஞ்சித்து அவர் மீளப் பதவியேற்பதற்குத் தடைபோட்டது. எதுபற்றியும் கவலைகொள்ளாமல், ஜே.ஆர். தலைமையிலான சிங்கள அரசானது தமிழர்கட்கெதிராகத் திட்டமிட்டு நடத்தி வந்த இனவழிப்பு நடவடிக்கைகட்கெதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்தும் போராடியும் வந்தமையால், சிங்கள பேரினவாதச் சேற்றில் முக்குளிக்கும் ஜே.வி.பி அமைப்பினர் விக்கிரமபாகு அவர்களைக் கொல்லும் நோக்கில் அவர்மீது கொலைவெறித் தாக்குதலை 1988 ஆம் ஆண்டு நடத்தியது. சிங்கள இடதுசாரிகளின் குட்டிக்கரணங்களால் புதிய சனநாயக முன்னணி (NDF), புதிய இடதுசாரிகள் முன்னணி (NLF) என அமைப்புகளை மாற்ற வேண்டிய சூழமைவிற்குள் அகப்பட்டிருந்தாலும், முனைவர் விக்கிரமபாகு கருணாரத்தின அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகக் குரல்கொடுப்பதையும் போராடுவதையும் ஒரு சிறுகால இடைவெளிக்குக் கூட ஒத்திவைக்காமல் தனது முதன்மையான அரசியலாகவே முன்னெடுத்து வந்தார். தென்னிலங்கையிலும் தலைநகர் கொழும்பிலும் தமிழர்கள் கடத்தப்படும்போதும் காணாமலாக்கப்படும் போதும் தெருவில் நின்று அதனை எதிர்த்துக் களமாடி உலகின் கண்முன் தமிழர்கட்கெதிராக நடப்பனவற்றை வெளிக்கொண்டுவருவதில் முன்னரங்கில் நின்று உழைத்தவர் விக்கிரமபாகு அவர்களே. மகிந்த இராஜபக்ச ஆட்சியில் தமிழர்கட்கெதிரான இனவழிப்பு வன்முறைகள் உச்சம் பெற்றிருந்த வேளையில், இந்த இனவழிப்புப் போரை எப்படியாவது தடுத்துநிறுத்தித் தமிழர்களை இனவழிப்பிலிருந்து காத்திட வேண்டுமென்ற ஓர்மத்துடன் ஓய்வொழிச்சலின்றி விக்கிரமபாகு அவர்கள் பாடாற்றினார்.

உலகின் ஐந்து நிலத்துண்டங்களிலிருந்தும் (continents) வருகை தந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட அரசியல் அமைப்புகளும் கட்சிகளும் பங்குபற்றிய நெதர்லாந்தின் அம்ஸ்ரடங்கில் 2009 பெப்ரவரி மாதம் நடந்த மாநாட்டில் அரும்பாடுபட்டு “சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொள்ளும் போரை உடனடியாக நிறுத்தித் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுகளில் ஈடுபட்டு தமிழர் தாயகத்தில் ஒரு இடைக்காலத் தமிழரசு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்ற பேரறிவிப்பை மேற்கொண்டு, அதனை அங்கு கூடியிருந்தவர்களை ஏற்குமாறு செய்தார் விக்கிரமபாகு கருணாரத்தின அவர்கள். போரை உடனடியாக நிறுத்தி வகைதொகையின்றிக் கொல்லப்படும் தமிழர்களைக் காப்பாற்ற தவியாய்த் தவித்த போது இவர் எடுத்த முயற்சிகளின் கனதியை நாம் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். போரின் இறுதிக்கட்டங்களில் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளராகவிருந்த பா.நடேசன் அவர்கள் இளமைக் காலத்திலிருந்தே இவருடன் நட்பிலிருந்தமையால் (இருவரும் ஒரே அமைப்பில் இடதுசாரிகளாகப் பயணித்தவர்கள்) விடுதலைப் புலிகளின் அரசியற்துறையினருடன் மேலும் நெருக்கமான உறவை இவர் கொண்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறையினர் இறுதி மணித்துளிகள் வரை நேரடியாகத் தொடர்பிலிருந்தவர்களில் விக்கிரமபாகு அவர்கள் முதன்மையான இடத்திலிருந்தார்.

தமிழர்கள் மீதான இறுதிக்கட்ட இனவழிப்புப்போரில் முப்படைத் தளபதியாக இருந்த மகிந்த இராஜபக்சவும், இராணுவத் தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவும் சிறிலங்காவின் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற‌ அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்கியபோது, அதாவது இந்தியாவின் நலன்கட்கு வேண்டியவராக இந்தியாவால் விரும்பப்பட்ட மகிந்தவும், மேற்குலகின் நலன்கட்கு உகந்தவரென மேற்குலகால் விரும்பப்பட்ட சரத் பொன்சேகாவும் சனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய போது, இரண்டு தரப்பையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமெனக் கோரிக் களமிறங்கிய முனைவர் விக்கிரமபாகு கருணாரத்தின அவர்கள் வெறும் 7055 (0.07%) வாக்குகளை மட்டுமே பெற்றார். இத்தேர்தலில், தனக்குக் கிடைக்க வாய்ப்பில்லாத தமிழர்களின் வாக்குகள் தன்னைத் தோற்கடிக்க வாய்ப்புள்ள சரத் பொன்சேகாவிற்குப் போய்விடக் கூடாது என்பதற்காக மகிந்தவால் பொருள் மற்றும் புகழாசை காட்டிக் களமிறக்கப்பட்ட சிவாஜிலிங்கம் அவர்கள் விக்கிரமபாகு கருணாரத்தினவைக் (புதிய இடதுசாரி முன்னணி) காட்டிலும் சற்றுக் கூடுதலான வாக்குகளைப் பெற்றார் என்பதையும் இவ்விடத்தில் சுட்டுவது பொருத்தமானது என்று எண்ணுகிறோம். நடைபெறவிருக்கும் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்தப்போவதாக மல்லுக்கட்டுவோரின் பின்னணியில் ஏதேனும் சூழ்ச்சிகளிருக்குமோ என்பதையறிய இந்தச் செய்தி தமிழர்கட்குத் தேவைப்படலாம் என்பதை மனங்கொண்டு இச்செய்தியை இங்கு சுட்டுகின்றோம். தமிழர்கட்காக ஓய்வொழிச்சலின்றிப் போராடிய முனைவர் விக்கிரமபாகு கருணாரத்தினவிற்கு வாக்களிக்காமல் போனது தமிழர்களின் நன்றிகெட்டதனம் என்று யாரும் தவறாக எண்ணங்கொள்ளக்கூடாது. யார் சிறிலங்காவின் அதிபராக வந்துவிடக் கூடாது என்பதை மனங்கொண்டு வாக்களிக்கும் வழக்கமே தமிழர்களிடம் காணப்படும் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பிலான அணுகுமுறையென்பதை இவ்விடம் ஈண்டு நோக்குமாறு வலியுறுத்துகிறோம்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் தீவிரமாக உடன்நின்ற சிங்களத் தோழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தே தமது பங்களிப்புகளை வழங்கியபோது, அதேயளவு தீவிரத்துடன் போராடிய முனைவர் விக்கிரமபாகு கருணாரத்தின அவர்கள் சிறிலங்காவை விட்டு வெளியேறாமல் அங்கிருந்தவாறே தமிழர்கட்காகப் போராடியமையானது அவரை மற்றைய தோழர்களிடமிருந்து துருத்திக் காட்டுகின்றது. அத்துடன், தமிழர்தாயகத்தின் வரலாற்றுத் தொன்மையை நிறுவிட எந்நேரமும் அணியமாகவிருந்த விக்கிரமபாகு அவர்கள் மகாவம்சப் புனைவுபுரட்டுகளைத் தனது அறிவியல் மற்றும் வரலாற்று அறிவால் எள்ளிநகையாடியதோடு, தமிழ்ப் பௌத்தர்களின் (Demala Baudhayo) வரலாற்றினைப் பற்றி விரிவாகப் பேசி சிங்கள பௌத்த அரசின் இனவழிப்பு நிறுவனங்களான பௌத்தசாசன அமைச்சு, தொல்லியற்றுறை போன்றவற்றிற்குத் தீராத தலையிடியைக் கொடுத்தார். இலங்கைத்தீவின் மூத்த குடிகள் தமிழர்களே என்பதைத் தான் நிறுவுவதாகவும் தன்னுடன் பொதுவெளியில் வாதுரைக்க வருமாறும் சிங்கள பௌத்த பேரினவாத வரலாற்றாசிரியர்கட்கு முனைவர் விக்கிரமபாகு கருணாரத்தின அவர்கள் விடுத்த அறைகூவலை ஏற்று வாதுரைக்க அந்த சிங்கள பௌத்த பேரினவாதப் புரட்டர்கள் கடைசிவரை துணிவுடன் முன்வரவேயில்லை என்பதைச் சுட்டுவதன் மூலம் ஒடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு விக்கிரமபாகு அவர்கள் எந்தளவிற்குத் தொல்லையாக இருந்திருப்பார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். Chris Slee, மருத்துவப் பேராசிரியர் பிரைன் செனவிரத்ன ஆகியோருடன் இணைந்து முனைவர் விக்கிரமபாகு கருணாரத்தின அவர்கள் எழுதிய “The Tamil Freedom Struggle in Sri Lanka” என்ற நூல் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றை உலகத்தார் அறிந்துகொள்ள மிகவும் பயனுள்ள நூலாகும் என்பதை இங்கு நன்றியுடன் மனங்கொள்கின்றோம்.

மருத்துவர் பிரைன் செனவிரத்தின‌ (1932- )

சிறிலங்காவின் இரண்டு முதன்மை அமைச்சர்கள் (Prime Minister) மற்றும் அதிபர் (President) உருவாகிய பண்டாரநாயக்க குடும்பத்தைச் சேர்ந்தவரே மருத்துவர் பிரைன் செனவிரத்தின. இவர் பண்டாரநாயக்க குடும்பத்துடன் நெருங்கிய குருதியுறவு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இளமைப் பருவத்திலேயே இடதுசாரிக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட இவர் மலையகத் தமிழர்களின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்ட போது அதை எதிர்த்துப் போராட்டக் களங்களில் குதித்தார். 1956 இல் இவரது தந்தைவழி நெருங்கிய உறவினனான அப்போதைய சிறிலங்காவின் முதன்மை அமைச்சர் பண்டார நாயக்கவினால் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது இலண்டன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றுகொண்டிருந்த இவர் தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்துக் கடுமையாகப் போராடிவந்ததுடன், இலண்டன் வந்த பண்டார நாயக்க உறவின் நிமித்தம் இவரைச் சந்திக்கக் கேட்டபோது, தமிழர்கட்கு எதிராக இனவெறியாட்டம் ஆடும் பண்டாரநாயக்கவை உறவின் நிமித்தமும் தான் சந்திக்க மாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்தார்.

1972 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறைப் பேராசிரியராகப் பதவியேற்ற இவர் தமிழர்கட்கெதிரான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இனவழிப்பு நடவடிக்கைகளைக் கருத்தியற் தளத்திலும் மக்கள் போராட்டக் களத்திலும் நின்று எதிர்த்துவந்தமையால் தொடர்ச்சியாக ஒடுக்கும் அரசுடன் ஒத்தோடுபவர்களால் வஞ்சிக்கப்பட்டு வந்தார். எனவே, இதன் மேலும் சிறிலங்காவில் வாழ்வது அவரிற்கு உயிரச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும் என்பதால் 1976 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்து அங்கு குயின்லாந்துப் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் பொதுமருத்துவ நிபுணராகவும் கடமையாற்றி வந்தார். 1976 இல் அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னர் அவர் நாடு திரும்பக் கூடிய சூழல் அவரிற்கு ஏற்படவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மாற்றங்களினூடாகத் தமிழர்கள் தம் சிக்கல்கள் தீரும் என்ற உளவியலில் தமிழ்மக்கள் ஒருபோதும் இருக்கக் கூடாது என்பதில் தமிழர்கள் முதலில் தெளிவுற வேண்டும் என்பதையும் தமிழீழ விடுதலையே தமிழர்கட்கான தீர்வு என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டுமெனவும் எல்லாத் தரப்புத் தமிழர்கட்கும் மருத்துவர் பிரைன் அவர்கள் அறிவுறுத்தி வந்தார். சிறிலங்காவானது சிங்கள பௌத்த நாடு என்று சிங்களவர்கள் நம்புவதே தமிழர்கள் மீதான இனவழிப்பிற்குக் காரணம் என்றும் ஈற்றில் அது சிங்களவர்கள் தமக்குத்தாமே தோண்டும் சவக்குழியாக அமைந்துவிடும் என்றும் சிங்கள மக்கட்கு இவர் இடித்துரைத்து வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பற்றி ஏற்றியோ போற்றியோ எந்தவொரு கருத்துகளையும் குறிப்பிடத்தக்க அளவில் பகிராத மருத்துவர் பிரைன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல; மாறாக ஒடுக்கும் அரசிற்கெதிராகப் போராடும் போராளிகள் என்று உலகெங்கும் பரப்புரை செய்து வந்தார். இறுதிக்கட்ட தமிழினவழிப்பு உச்சம்பெற்ற வேளையில் தனது முதுமையையும் கணக்கெடுக்காமல் உலகெங்கும் அலைந்து திரிந்து மாநாடுகள், கூட்டத்தொடர்கள், பல்கலைக்கழக நிகழ்வுகள் என அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி ஒடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் இனவழிப்பைப் பற்றியும் அதிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றுவது உலகின் கடமை என்றும் அனைத்துலக மட்டத்தில் பரப்புரை (international lobbying) செய்தார்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் தமிழீழதேசமானது சிங்கள அரசால் முற்றிலுமாக வன்கவரப்பட்ட பின்பான சூழலில், தனது அகவை முதிர்வையும் பொருட்படுத்தாது முன்னையதிலும் விரைவுடன் செயலாற்றி வந்தார். அதாவது, இலங்கைத்தீவில் தமிழர்கட்கு நடந்தது இனவழிப்பே என்றும் அதற்குத் தீர்வாக தமிழர்களிடத்தில் தமிழீழம் கோரிப் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் தனது உரைகள் மூலமும் எழுத்துகள் மூலமும் கோரி வந்தார். தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நயன்மை, தமிழர் மீதான சிங்களத்தின் இனவழிப்பு என்பவை தொடர்பில் 60 இற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளதோடு உலகரங்கில் இதுதொடர்பில் பல கருத்துரைகளையும் நிகழ்த்தியுள்ளார். இறுதிநேரத்தில் எப்படியாவது தமிழர்கள் மீதான போரை நிறுத்திவிட வேண்டுமென்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளைத் தமிழினம் ஒருபோதும் மறக்கக்கூடாது. இவர் அவுஸ்திரேலிய தமிழ்க்காங்கிரசின் பணிப்பாளராக இருந்தவர் என்பதோடு பின்னர் நாடுகடந்த தமிழீழ அரசில் அதிகாரமிக்க பதவியிலுமிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டு நாடுகடத்தப்படவிருக்கும் தமிழ் ஏதிலிகளை நாடுகடத்தவிடாது அவுஸ்திரேலிய மாந்த உரிமைச் செயற்பாட்டாளர்களையும் ஒருங்கிணைத்துப் போராடுவதில் இவர் முன்னின்று உழைத்தார். தமிழர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை வெளிப்படுத்தும் “சனல் 4” ஆவணப்படத்தை உலகெங்கிலும் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் முன்னின்று உழைத்தவர் மருத்துவர் பிரைன் செனவிரத்தின என்பதை நாம் மறந்துவிடலாகாது.

“The 1983 Massacre – Unanswered Questions”, “Human Rights Violations in Sri Lanka” (இது சிறிலங்காவால் தடைசெய்யப்பட்ட நூல்), “Rape of Tamil Women, Men And Children By Sri Lankan Armed Forces and Their Collaborators”, “UN Human Rights Council Fails to Address the Humanitarian Disaster in the Tamil North and East of Sri Lanka” ஆகிய நூற்கள் இவரால் எழுதப்பட்டவற்றுள் முதன்மையானவை என்பதுடன் இந்த நூற்கள் தமிழரின் விடுதலைப் போராட்ட நயன்மையை உலகறியச் செய்ய இன்றும் எமக்குக் கருவிகளாகப் பயன்படத்தக்க மிகப்பெறுதியான ஆவணத் தொகுப்புகள் என்பதை நாம் நன்றியுடன் மனங்கொள்கின்றோம்.

லியனல் ஃபோபகே

லியனல் ஃபோபகே ஜே.வி.பி அமைப்பில் இணைந்து போராடியவாறே இலங்கையில் தனது பொறியியற் பட்டப்படிப்பை நிறைவுசெய்தவர். 10 ஆண்டுகளிற்கு மேலாக ஜே.வி.பி யின் நடுவண் குழுவில் (Central Committee) இடம்பெற்றிருந்ததோடு 1971 இல் ஜே.வி.பி யினர் மேற்கொண்ட கருவிவழிக் கிளர்ச்சியைத் தொடர்ந்து அதன் தலைவர் ரோகண விஜேயவீரவுடன் சேர்ந்து லியனல் ஃபோபகேயும் 6 ஆண்டுகள் சிறைப்பட்டார். பின்னர் 1979- 1984 காலப்பகுதியில் ஜே.வி.பி யின் பொதுச்செயலாளராக இவர் இருந்தார். தமிழர்தேசத்தின் தன்னாட்சியுரிமையிலான விடுதலைப் போராட்டத்தை ஜே.வி.யினர் சிங்கள இனவாத நோக்கில் அணுகியமை, உழைக்கும் தோட்டத் தொழிலாளர்களான மலையகத் தமிழர்களை இந்திய விரிவாக்கத்தின் பகுதியாக நோக்கியமை, தமிழரினை இனப்பகைமையுடன் நோக்கும் ஜே.வி.பி யினரின் பேரினவாதப் போக்கு என்பவற்றைப் பார்த்துச் சகித்துக்கொள்ளாமல் ஜே.வி.பி யின் தலைமையுடன் இது தொடர்பில் வாதுரைத்தும் கண்டித்தும் தன்னாலியன்ற வரை போராடி விட்டு 1984 இல் ஜே.வி.பி அமைப்பை விட்டு விலகினார். பின்பு அவரிற்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல்களிலிருந்து தப்பித்து அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நயன்மையை விளக்கித் தெரிவித்து வரும் கருத்துகளால் அவுஸ்திரேலியாவிலும் தான் சிங்கள பேரினவாத அரசின் கைக்கூலிகளால் அச்சுறுத்தலிற்கு ஆளாகி வருவதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை மறுத்துரைக்கும் மகாவம்சப் புரட்டர்கட்குத் தனது நேர்காணல்கள் மூலம் பதிலளித்த இவர், “புலிகள் நாட்டை அழித்துவிட்டனர்” என்ற புலிகளின் மீதான குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் போது “ஜே.வி.பி யினர் தான் நாட்டைச் சீரழித்திருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நோக்கம் தமிழர் தாயகத்தை மீட்டெடுத்துத் தமிழர்தேச அரசமைப்பதே தவிர இலங்கையைச் சீரழிப்பதல்ல” என்று ஜே.வி.பி யின் முன்னாள் பொதுச்செயலாளராகக் கூறிவருகிறார். தமிழர்களின் தன்னாட்சி அடிப்படையிலான விடுதலைப் போராட்டத்தின் நயன்மையை ஏற்காமலும் தமிழரின் விடுதலைப் போராட்டத்துடன் உடன்நிற்காமலும், தமிழர் தொடர்பில் சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாட்டை ஜே.வி.பி எடுத்ததால் தனது பொதுச்செயலாளர் பதவியைத் தூக்கிப் போட்டுவிட்டு வெளியேறிய லியனல் ஃபோபகே அவர்கள் வர்க்கப் புரட்சிசெய்ய முன்வரும் புரட்சியாளர்கட்குத் தேசிய இனச் சிக்கல் குறித்து எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று தனது செயற்பாட்டால் தகுந்த பாடம் புகட்டியுள்ளார் என்பதை நாம் ஈண்டு நோக்க வேண்டும். ஆனாலும், முதுமையின் தளர்ச்சியாலும், புரட்சிகளின் மீது நம்பிக்கை இழந்தவராகவும், இலங்கைத்தீவின் ஒற்றையாட்சிக்குள் தமிழரிற்குத் தன்னாட்சி உரிமை வேண்டுமெனக் குழப்பமாக இவர் அண்மைக்காலமாகப் பேசி வருவது கவலை தருகிறது.

தார்சி வித்தாச்சி (1921- 1993)

சிங்கள மற்றும் ஆங்கிலத்தில் எழுத்துவன்மையுள்ள தார்சி வித்தாச்சி என்ற சிங்கள ஊடகர்  தமிழர் மீது சிங்கள பௌத்த பேரினவாதத்தால் 1958 இல் மேற்கொள்ளப்பட்ட இனவன்முறை குறித்து “Emergency 58” என்ற நூலை எழுதினார். உலகப்புகழ் பெற்ற செய்தி ஊடகங்களில் தொடர்ச்சியாக எழுதிவந்த புகழ்பெற்ற ஊடகரான இவர் இந்த நூலை எழுதியதால் இந்நூல் உலகக் கவனத்தை ஈர்த்தது. தொழினுட்பங்களும் செய்தி ஊடகங்களும் பெரிதாக வளர்ச்சியடையாத அக்காலத்தில் தமிழர்கட்கெதிராக மேற்கொள்ளப்பட்ட சிங்களத்தின் அத்தனை நரபலி வெறியாட்டங்களையும் ஒளி ஆவணங்கட்கு ஒப்பாக எழுத்தில் ஆவணப்படுத்திய ஒரு வரலாற்றுக் கடமையாகவே அவர் எழுதிய இந்த நூல் அமைந்தது. தமிழ்க் கர்ப்பிணித் தாய்மாரின் வயிற்றைக் கிழித்து வயிற்றிலிருந்த குழந்தையுடன் சேர்த்துக் கொலை செய்தமை, தமிழ்த்தாய்மார்களின் கைக்குழந்தைகளைப் பறித்து எண்ணெய்த் தாச்சியிலும் தாரினிலும் வீசிக் கொன்றமை, தோட்டத் தொழிலாளர்களான மலையகத் தமிழர்களைக் கரும்புத் தோட்டத்திற்குள் விரட்டிவிட்டு அத்தோட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு யாரும் தப்பிவிடாத படி பார்த்துக் கொண்டமை, தமிழ்ச் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை கூட்டுப் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டமை, தமிழர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொன்றமை, தமிழர்களின் உடைமைகளைத் தீக்கிரையாக்கியமை, தமிழர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்தமை என சிங்கள பௌத்த பேரினவாதத்தினால் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட தமிழர்மீதான இனவழிப்பு இனவன்முறையை மிகவும் துல்லியமாகப் பதிவுசெய்த நூலாக இவர் எழுதிய “Emergency 58” என்ற நூல் அமைந்தது.

மாந்தகுலத்தில் பிறந்தார் இப்படியெல்லாம் செய்வார்களா என நம்ப மறுக்கும் சிங்களத்தின் இந்த நரபலி வெறியாட்டங்களைத் தமிழர் ஒருவர் பதிவுசெய்திருந்தால் அதனை மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக உலகத்தார் எண்ணியிருக்கலாம். ஆனால், ஒரு சிங்கள ஊடகராக எந்தவொரு கோணலுமின்றி நேர்மைத்திடத்துடன் தமிழர்கட்கெதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளையும் அவற்றின் தீவிரத்தையும் தனது எழுத்துகளால் உலகத்தார் கண்முன் நிறுத்தித் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நயன்மையை உலகம் உணரக் காரணமாகிய தார்சி வித்தாச்சியின் இந்தப் பங்களிப்பை வரலாறு நெடுகிலும் தமிழினம் மனங்கொள்ளும்.

அட்ரியன் விஜயமானே

இலங்கையின் நிருவாக சேவைகளில் உயர்ந்த பதவிகளை வகித்தவரும் புலமையாளருமான அட்ரியன் விஜயமானே தமிழர்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாதத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகள் குறித்து Tamil Nation, Hot Spring ஆகிய செய்தியேடுகளில் தொடர்ச்சியாக எழுதி வந்தார். “War and Peace in Post Colonial Ceylon (1948- 1991) என்ற நூலில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழர்கட்கெதிராக சிங்கள பேரினவாதிகள் மேற்கொண்ட இனவழிப்பு நடவடிக்கைகளை முறையாக அட்ரியன் விஜயமானே ஆங்கில மொழியில் ஆவணப்படுத்தியுள்ளார். வேளாண் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் போன்ற சிங்கள பௌத்த பேரினவாத அரச எந்திரத்தின் நிறுவனங்களானவை எங்ஙனம் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களை வன்கவர்ந்து சிங்கள பௌத்த மேலாதிக்க வெறியுடன் நடந்து கொண்டன என்பதை விளக்குமாறு டி.எஸ் சேனநாயக்கா வேளாண் அமைச்சராகவிருந்த காலத்தில் நடந்தனவற்றிலிருந்து தொடங்கி அத்தனை இனவன்கவர்வு நிகழ்வுகளையும் இந்நூலில் இவர் ஆவணப்படுத்தியுள்ளார். அநாகரிக தர்மபாலாவின் கிட்லர் பாணிக் கட்டுக்கதைகளே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடிப்படையென்பதையும் அட்ரியன் தோலுரித்துக் காட்டியுள்ளார்.

சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் மட்டுமன்றி சிங்களதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களின் மனங்களிலும் தமிழர்கட்கெதிரான இனவெறி ஊறிக்கிடக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளும் அட்ரியன் அவர்கள் தமது அரசு தமிழர்களை வஞ்சிப்பது தமது நலன்கட்காகவே என சிங்கள மக்கள் எண்ணுகிறார்கள் என வெளிப்படையாகத் துணிந்து கூறியிருக்கிறார். இனச் சிக்கலிற்குத் தீர்வாகக் கூட்டாட்சி (federal) என்ற சொல்லை எடுத்தாலே, அதைப் பற்றிப் பேசுபவர்கள் தேசப்பற்று அற்றவர்கள் என்று சிந்திக்குமாறு பெரும்பாலான சிங்களப் பொதுமக்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என அட்ரியன் ஒளிவுமறைவின்றி நேர்மைத்திடத்துடன் சிங்களதேசத்தின் நடைமுறையை வெளிப்படுத்தினார்.

வான்குண்டுத் தாக்குதல்களை ஜே.வி.பி கிளர்ச்சியின் போது சிறிலங்கா படையினர் மேற்கொள்ளவில்லை என்பதைக் குறிப்பிட்டு, தமிழர்கள் மீது வான்குண்டுத் தாக்குதல்களை நிகழ்த்துவதன் மூலம் தமிழீழம் தனிநாடு என்பதை சிறிலங்காப் படையினர் பேரறிவிப்புச் செய்து விட்டனர் என்று எழுதியவர் அட்ரியன் அவர்கள். “பிரபாகரனும் அவரது கொலைகாரக் கூட்டமும் தான் தனிநாடு கேட்கிறது” என்று சிங்களதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பரப்புரையை முறியடிக்கும் விதமாக “வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஒட்டுமொத்த தமிழ்மக்களும் பொதுவாக்கெடுப்பைப் பயன்படுத்தி அளித்த ஆணைதான் தனிநாட்டுக் கோரிக்கை என்றும், அந்த தமிழ்மக்கள் ஆணைக்குச் செயல்வடிவம் கொடுப்பவர் தான் பிரபாகரன்” என்று அழுத்தமாகப் பதிவுசெய்தவர் அட்ரியன் விஜயமானே என்பதைத் தமிழ்மக்கள் மறக்க மாட்டார்கள்.

குமாரி ஜெயவர்த்தன‌

கொழும்பில் தனது பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து விட்டு இலண்டனிலுள்ள பொருண்மியப் பள்ளியில் பொருளியலில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு பின்னர் 1958 இல் சட்டப்படிப்பையும் நிறைவுசெய்து 1964 இல் தனது முனைவர் ஆய்வுப்பட்டத்தையும் பெற்றார். பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1969 ஆம் ஆண்டு அரசறிவியல் விரிவுரையாளராகப் பதவியேற்றுப் பின்னர் பேராசியராகத் தன் பணி தொடர்ந்தார். இடதுசாரி அரசியல் மரபில் வளர்ந்த இவர் பின்வந்த காலங்களில் புரட்சிகரப் பெண்ணியக் கருத்தியல் வளர்ச்சியில் பாடாற்றினார். எந்தவொரு உவத்தல் காய்தலுமின்றி 1883- 1983 காலப் பகுதியில் நடந்தேறிய நிகழ்வுகளைப் பதிவுசெய்யுமாறு “Ethnic And Class Conflict in Sri Lanka” என்ற நூலை குமாரி ஜெயவர்த்தன எழுதினார். தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் தொடர்பாக, குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து, குமாரி ஜெயவர்த்தன அவர்கள் எப்படியான பார்வையைக் கொண்டிருந்தார் என்று அறியக் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு கல்வியாளராகவும் புலமையாளராகவும் எந்தவொரு பக்கச்சார்புமின்றிப் பொருத்தமான ஆய்வுமுறைமைகளைப் பயன்படுத்தி அவர் ஆய்ந்தெழுதிய இந்த நூலானது சிங்கள பௌத்தவாதமானது எப்படி பேரினவாதமாகி, சிங்களதேசத்தின் பெரும்பான்மையினரிடத்தில் ஒரு கூட்டுளவியலாக உருவெடுத்தது என்பதை இந்த நூலில் அவர் தெளிவாக விளக்குகின்றார். ஒடுக்கும் சிங்களதேசத்தின் தமிழர்தேசம் மீதான ஒடுக்குமுறையை வரலாற்றில் நிகழ்ந்தேறியவற்றின் அரசியலை ஆய்வுசெய்ததன் மூலம் தெளிவாக நிறுவியர் பேராசிரியர் குமாரி ஜெயவர்த்தன என அடித்துக் கூறலாம்.

இலங்கையின் தொடக்ககால தொழிற்சங்கவாதியான ஏ.ஈ. குணசிங்க என்பவர் எவ்வாறு இனவாதியாக மாறிப்போய் தோட்டத் தொழிலாளர்களான மலையகத் தமிழர்கள் மீது வன்மங்கொண்டு செயற்பட்டார் என்பதில் தொடங்கி இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியின் திரிபுவாத கருத்தியல்களால் ஐக்கிய சோசலிசக் கட்சியெனவும் பின் அதிலிருந்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியென்று பிரிந்தாலும் தோட்டத் தொழிலாளரான மலையகத் தமிழர் விடயத்திலும் ஈழத்தமிழர் விடயத்திலும் 1950 களின் இறுதிவரை நேர்மையான முடிவுகளையே பெரும்பாலான இடதுசாரிகள் எடுத்தனராயினும் 1965 இல் சிறிமாவின் சிங்கள பேரினவாத அரசியலிடம் சரணடைந்த பின்னர், அனைத்து வர்க்கங்களையும் சேர்ந்த சிங்கள மக்கள் சிங்கள பௌத்தரல்லாதவர்களை, குறிப்பாக தமிழர்களை, பகைமையுணர்வுடனே நோக்கி வந்தனர் என ஆணித்தரமாகப் பதிவுசெய்வதன் மூலம் தான் சார்ந்த சிங்கள இடதுசாரிகளும் 1960 களின் பின்னர் தமிழினப் பகைமையைத் தமது அரசியலிற்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை ஐயந்திரிபற குமாரி ஜெயவர்த்தன அவர்கள் தெளிவுபடுத்துகிறார்.

மலையகத் தமிழர்களினை ஆடு மாடுகளைப் பிரிப்பது போல் பிரித்துக்கொண்ட சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டமை, முதலாவது குடியரசு அரசியலமைப்பு மூலம் பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுத்தமை, நாட்டின் பெயரை இது சிங்கள நாடு எனப் பேரறிவுச் செய்வதற்கு உடந்தையாக இருந்தமை, சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு என சோழ்பரி அரசியலமைப்பில் இருந்த சரத்துகளைக் கூட நீக்க உதவியமை, இன்னும் குறிப்பாகச் சொன்னால் கொல்வின் ஆர்.டி.சில்வா என்ற முதுபெரும் இடதுசாரித் தலைவர் அரசியலமைப்பு அலுவல்கள் அமைச்சராக இருந்து கொண்டுவரப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பே தமிழர்களை அவர்களது தாயக மண்ணிலேயே இரண்டாந்தரக் குடிமக்களாக்கியமை போன்ற அத்தனை விடயங்களிலும் சிங்கள பௌத்த பேரினவெறியர்களாகி நிலைப்பாடு எடுத்து அவற்றை நிறைவேற்ற  என்.எம்.பெரேரா போன்ற ரொட்ஸ்கிய திரிபுவாத இடதுசாரிகள் மட்டுமல்ல கொல்வின் ஆ.டி.சில்வா போன்ற போல்ஸ்விக் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்ட இடதுசாரிகளும் உடந்தையாக இருந்தனர் என்பதைக் கூறி வர்க்கவேறுபாடின்றி பெரும்பாலும் (ஒரு சில புறநடைகளைத் தவிர்த்து) சிங்களதேசத்தவர்கள் தமிழர்களை ஒடுக்குவதில் ஒடுக்கும் அரசுடன் உடன்பட்டு நின்றனர் என்பதைக் குமாரி ஜெயவர்த்தன தனது நூலில் உறுதிபடத் தெரிவிக்கின்றார்.

1883 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரையான நூறாண்டு காலப்பகுதியில் சிங்கள பௌத்த பேரினவாதமானது எப்படியாக வன்மப் படிம வளர்ச்சி எய்தியது என்பதை அரசியல், பொருண்மிய, குமுகாய அறிவியல் அடிப்படையிலான ஆய்வு மூலம் தெற்றெனத் தெரிவிக்கும் குமாரி ஜெயவர்த்தனவின் இந்த நூலானது தமிழர்களின் உரிமைப் போராட்ட நயன்மையை உலகறியச் செய்தவொரு புலமை சார்ந்த நூல் என்பதை நாம் இங்கு பதிவுசெய்கின்றோம்.

விராஜ் மென்டிஸ்

விராஜ் மென்டிஸ் அவர்கள் 1984 ஆம் ஆண்டிலிருந்தே தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் உடனிருந்து வருகிறார். ஜேர்மன் பிரமனிலுள்ள பன்னாட்டு மாந்த உரிமைகள் அமையம் ஒன்றினைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதற்குத் தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் இருவேறுபட்ட கருத்திற்கிடமின்றி ஏற்றுக்கொண்டு பயணிப்பவராவார். தமிழினவழிப்பின் பின்பாக தமிழரிற்குக் கிடைக்கக் கூடிய நயன்மையான தீர்வு தமிழீழத்தை அடைவது மட்டுமே என்பதில் இவர் மாறுபடாத கருத்துக் கொண்டவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பன்னாட்டளவில் முடக்கித் தனிமைப்படுத்துவதன் மூலம் தமிழீழ விடுதலைக்குத் தலைமைதாங்கி தமிழீழ நடைமுறை அரசை நடத்திய விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்துத் தமிழினவழிப்பை நிகழ்த்தும் நோக்குடன் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியமானது 2006 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்த போது அதை எதிர்த்து அரசியல் அடிப்படையிலும் சட்ட அடிப்படையிலும் தொடர்ந்து போராடி வருபவர்களில் விராஜ் மென்டிஸ் முதன்மையானவராவார்.

சுவிஸ் அரசானது முன்னாள் விடுதலைப் புலிகளைக் கைது செய்தபோது அதை எதிர்த்து இவர் தீவிரமாகப் போராடினார். “விடுதலைப் புலிகள் குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைப்பு அல்ல‌; மாறாக தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதை முதன்மை நோக்காகக் கொண்ட விடுதலை அமைப்பு” என்று சுவிசின் உச்ச நீதிமன்றமானது 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளித்ததற்குப் பின்னால் விராஜ் மென்டிசின் கடுமையான உழைப்பு இருக்கிறது. “டேவிட் கமரூனுடன் தேனீர் அருந்துவதைப் பாரிய அடைவாகக் கொள்பவது நகைப்பிற்கிடமானது. உங்களால் அவர்களை மாற்ற முடியாது. மாறாக, மேற்குலகின் அதிகார நடுவங்கள் தான் தமிழர்களை ஏமாற்றி, திசைமாற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து விலகச் செய்யும்” என்று இடித்துரைப்பதன் மூலம் மேற்குலகின் சூழ்ச்சிக்குத் தமிழர் பலியாகக் கூடாது என்று தமிழர்களிடத்தில் எச்சரிக்கை உணர்வை விராஜ் மென்டிஸ் ஏற்படுத்தி வந்தார். ஐரோப்பாவில் தமிழ் ஏதிலிகளையும் தமிழீழ விடுதலைக்குப் பங்காற்றுபவர்களையும் சிறிலங்காவிற்கு நாடுகடத்த அந்தந்த நாடுகளால் எடுக்கப்படும் முயற்சிகட்கெதிராகப் போராடி அம்முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதில் முன்னின்று பாடாற்றும் விராஜ் மென்டிஸ் மீது புலம்பெயர்ந்த தமிழர்கள் அளவற்ற மதிப்பும் பற்றும் வைத்திருக்கின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதன் தலைமையையும் கருத்து மாறுபாடின்றி நேசிக்கும் நல்லதொரு சிங்களத் தோழராக, போராடும் தோழனாக எம்முடன் இன்னமும் உறுதியாகப் பயணிக்கும் விராஜ் மென்டிசின் உழைப்பைத் தமிழர் என்றும் மனங்கொள்ள வேண்டும்.

ஃபாசன அபேவர்த்தன‌

ஃபாசன அபேவர்த்தன அவர்கள் சிறந்த ஊடகர், எழுத்தாளர், முற்போக்காளர், களப்போராளி என பலவாறு அறியப்பட்ட தமிழர்களின் உற்ற சிங்களத் தோழன் ஆவார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியற்றுறையினரால் வெளியிடப்பட்ட “Dedunne” (வானவில்) என்ற பெயரில் சிங்களத்தில் வெளியிடப்பட்ட திங்களிதழின் தொடர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் முதுகெலும்பாக ஃபாசன அபேவர்த்தன இருந்தார். இந்தத் திங்களிதழிலே விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அவர்கள் தொடர்ச்சியாகச் சிங்கள மொழியில் கட்டுரைகள் எழுதி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தினரால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட “மானுடத்தின் தமிழ்க் கூடல்” என்ற மகுடத்தினைக் கொண்ட ஒன்றுகூடலினால் ஈர்க்கப்பட்ட ஃபாசன அவர்கள் கொழும்பில் அத்தகையதொரு ஒன்றுகூடலை “சிங்கள – தமிழ் கலைக்கூடல்” என்ற பெயரில் ஒழுங்கு செய்தார். 2003 ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் ஒக்டோபர் மாத இறுதியில் 2 நாட்கள் நடந்த இந்த ஒன்றுகூடலிற்குத் தமிழரின் தன்னாட்சியுரிமையை ஏற்றுத் தமிழர்தேசம் விடுதலைபெற வேண்டுமென்ற எண்ணங்கொண்ட சிங்கள கல்வியாளர்கள், முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உடன்நின்ற தமிழ்க் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களும் அழைக்கப்பட்டு மிகவும் நேர்த்தியாக “சிங்கள – தமிழ் கலைக்கூடல்” என்ற ஒன்றுகூடல் ஃபாசன அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதனால், ஃபாசனவை சிங்களக் கொட்டி (சிங்களப் புலி) என முத்திரை குத்தி அந்த ஒன்றுகூடலை நிகழவிடாமல் செய்ய சிங்கள பேரினவெறிக் கடும்போக்காளர்கள் தொடர்ச்சியாகக் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தனர். எல்லாத் தடைகளையும் தாண்டி சிறப்புற ஃபாசன அவர்களால் இந்த ஒன்றுகூடல் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் போது நிகழ்விடத்திற்குள் புகுந்த இருநூறிற்கும் கூடுதலான சிங்கள பேரினவெறிக் காடையர்கள் (சிஹல உறுமய, ஜே.வி.பி யினர், பௌத்த பிக்குகள் ஆகியோரே இவர்களில் அதிகமானோர்) ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர்கள் மீது, குறிப்பாக தமிழீழத்திலிருந்து வருகை தந்து அந்த ஒன்றுகூடலில் பங்கெடுத்தவர்கள் மீது, கொலைவெறித் தாக்குதல் நடத்த முயற்சித்த போது, தமிழர்கள் மீது அடிபட விடாமல் குறுக்கே பாய்ந்து தாக்க வந்தவர்கள் மீது எதிர்த்தாக்குதல் புரிந்து சிங்களக் காடையர்களை ஃபாசன அவர்கள் விரட்டியடித்தார். இந்தத் தற்காப்பு எதிர்த்தாக்குதலில் ஃபாசனவின் சிங்கள ஊடக நண்பர்கள் இருவரும் ஏனைய 4 சிங்களத் தோழர்களும் காயமடைந்தனர். இதன்போது குருதிவழிந்த நிலையில் நின்ற ஃபாசன அவர்கள் அந்த ஒன்றுகூடலில் உரையாற்றும்போது “சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறை அரசிற்கு எதிராக விடுதலை வேண்டிப் போராடும் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காகக் குருதி சிந்தியமையை நான் என் வாழ்நாளின் பெருமையான, மகிழ்வான விடயமாகக் கொள்வேன்” என்று உணர்ச்சி மேலிடக் கூறினார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதற்குத் தலைமைதாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அளவற்று நேசித்த ஃபாசன அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்ட நயன்மையை சிங்கள மக்களிடம் எடுத்துச் செல்லும் படியாகத் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வந்தார். “ஹிரு” என்ற அவரால் நடத்தப்பட்ட கிழமை இதழை இதற்காகவே பயன்படுத்தியும் வந்தார். இதனால், தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல்களையும் சட்டச் சிக்கல்களையும் எதிர்கொண்ட ஃபாசன அவர்கள் உயிர்தப்பி 2006 ஆம் ஆண்டில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து அரசியற் தஞ்சம் பெற்றார்.

இறுதிப்போரில் சிறிலங்கா அரச படைகள் இழைத்த இனவழிப்பு நோக்கிலான போர்க்குற்றக் காணொளிகளை தனது ஊடக வலையமைப்பு மற்றும் சிங்களத் தொடர்புகள் மூலம் பெற்று முதன்முதலில் அவற்றை வெளிப்படுத்தி உலகறியச் செய்தவர் ஃபாசன அவர்களே. உலகத்தை உலுக்கிப்போட்ட “சனல் 4” வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படத்தில் வெளியிடப்பட்ட பெரும்பாலான காணொளிகளானவை ஃபாசன அவர்களின் இடைவிடாத முயற்சிகளால் கிடைக்கப்பெற்றவையே என்பதைத் தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழீழத்தில் நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும் இனப்படுகொலையே என சான்றுகளை முன்வைத்து மக்கள் தீர்ப்பாயங்களில் ஃபாசன அவர்கள் பேசி வந்தார்.

தற்போது “இலங்கையில் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (‍JDS)” என்ற அமைப்பை நடத்தி வரும் ஃபாசன அவர்கள் ஒரு ஊடகராகத் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ளாமல், ஊடகச் செயற்பாடுகளைத் தனது செயற்பாடுகளின் (activism) ஒரு துணைப் பகுதியாக‌க் கருதித் தொடர்ந்தும் முற்போக்காகத் துணிச்சலுடன் செயற்பட்டு வருகிறார். இன்றும் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள், ஊடகர்கள் ஆகியோருக்கு சிங்கள அரச பயங்கரவாதத்தால் ஏதேனும் இடர்நேரின் முன்வந்து முழுமூச்சுடன் உடன்நிற்கும் சிங்களத் தோழனாகவே ஃபாசன அவர்கள் இருக்கிறார். புலிகளிற்கெதிராகப் பன்னாட்டளவில் பரப்பப்படும் அவதூறுகட்கெதிராகச் சான்றுகளுடன் பேசிவரும் ஃபாசன அவர்கள் தமிழீழ விடுதலைக் கள‌த்தில் ஒரு புலியாகவே தமிழர்களுடன் உடன்நிற்பார் என்பதைத் தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

யூட் லால் பர்னான்டோ

யூட் லால் பர்னான்டோ அவர்கள் அயர்லாந்து டப்ளினில் உள்ள திருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். அத்துடன், மோதலுக்குப் பிந்தைய நயன்மைக்கான (Post- conflict Justice) நடுவத்தின் பணிப்பாளராகவும் யூட் அவர்கள் கடமையாற்றுகின்றார். தானிருக்கும் கல்விப்புலத்தாலும் முற்போக்காளர்களின் தொடர்பாலும் தனக்கென இருக்கும் தொடர்பு வலைப்பின்னல்களைப் பயன்படுத்தி உலகெங்கும் தமிழீழ விடுதலைக்காக ஆதரவு திரட்டுவதில் இவர் முன்னின்று உழைக்கின்றார். ஈழத்தில் தமிழர்கட்கு நடந்தது இனப்படுகொலையே என்றும் அந்த இனப்படுகொலையில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் எங்ஙனம் முதன்மைப் பங்காற்றின‌ என்பதையும் வாய்க்கும் இடங்களிலெல்லாம் எழுதியும் பேசியும் வருபவர். ஈழத்தில் தமிழர்கட்கு நடந்தது இனப்படுகொலையே என்பதைச் சான்றுகளுடன் ஜேர்மன் மற்றும் டப்ளினில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயங்களில் முன்வைக்கும் பணியில் யூட் அவர்களே அயராது உழைத்தார்.

விடுதலைக்காகப் போராடிய மற்றும் போராடும் இலத்தீன் அமெரிக்க நாடுகட்குப் பயணம் செய்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவுத் தளத்தை உலகளவில் வலுப்படுத்தும் முனைப்பிலே யூட் அவர்கள் அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகின்றார். இலங்கைத்தீவில் தமிழர்தேசம் ஒடுக்கப்பட்டுக் கிடப்பதற்கான அடிப்படைக் காரணமே பிரித்தானியக் காலனியர்கள் தான் என்றும் நவகாலனியச் சூழலில் தேசிய இனச்சிக்கல்கள் எவ்வாறு உலக வல்லாண்மையாளர்களால் கையாளப்படுகின்றது என்பதையும் தொடர்ச்சியாக யூட் அவர்கள் அறிவுத்தளத்தில் விளக்கி வருகிறார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கெதிராகப் பரப்பப்படும் புரட்டுகளைக் கல்விப்புலத்திலும் கருத்தியற்தளத்திலும் மறுப்பதில் யூட் அவர்கள் முதன்மையான பங்கு வகிக்கின்றார். உலக வல்லாண்மையாளர்களால் தமிழர்கள் சூழ்ச்சியாக எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகின்றார்கள் என்பதை சான்றுகளுடனும் உலகியல் எடுத்துக் காட்டுகளுடனும் விளக்குவதில் யூட்டின் பங்கு முகாமையானது. குறிப்பாகக் கூறுவதென்றால், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக தமிழர்களின் அரசியலானது வெளியாருக்காகக் காத்திருக்கப் பழக்கப்பட்ட சூழமைவில், கண்மூடித்தனமாக ஐ.நா வின் தீர்மானங்களையும் அறிக்கைகளையும் தமிழர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து நின்றபோது, மேற்குலகினாலும் ஐ.நா. போன்ற அமைப்புகளாலும் தமிழர்கட்கு ஆகப்போவது எதுவுமில்லையென்றும் மாறாக தமிழர்கள் இந்த அமைப்புகளால் மேலும் எவ்வாறு வஞ்சிக்கப்படப் போகின்றார்கள் என்றும் தெற்றெனத் தமிழர்கட்கு விளக்குவதில் யூட் அவர்கள் முன்னின்று உழைத்தார்.

உலகெங்கும் ஈழத் தமிழர்கட்கு நட்பு ஆற்றல்களை ஏற்படுத்தப் பாடாற்றும் யூட் அவர்கள் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கட்கான நட்பாற்றல்களைக் கண்டடைவது தொடர்பில் சரியான நிலைப்பாட்டை இன்னமும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழ்த்தேசிய இனத்தவர் என்ற தொப்புள் கொடி உறவினால் மட்டுமன்று இந்தியா என்ற தேசங்களினதும் தேசிய இனங்களினதும் சிறைக்கூடத்தில் ஒடுக்குண்டு இருக்கும் தேசம் என்ற அடிப்படையிலும், வரலாற்றாலும், அரசியலாலும், உணர்வாலும், மொழியாலும் ஈழத்தமிழர்களுடன் ஒன்றுபட்டு நிற்கும் நட்பாற்றல் என்ற பார்வை யூட் அவர்களிடம் இல்லை என்ற‌ மனக்குறை எம்மிடம் இல்லாமல் இல்லை. அத்துடன் ஈழத்தின் இனவழிப்பில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் பங்களிப்பை நுணுக்கமாகத் தோலுரித்துக் காட்டும் யூட் அவர்கள் தமிழீழ இனவழிப்பில் முதன்மைப் பங்கெடுத்த டெல்கியின் இனவழிப்புப் பங்களிப்புப் பற்றி அதிகம் பேசுவதில்லை என்ற மனக்குறையும் எம்மிடம் இல்லாமலில்லை. தமிழ்நாடு மற்றும் ஒடுக்கும் இந்திய அரசு போன்ற விடயங்களில் யூட் அவர்கள் பார்வை மாற்றங்கொண்டு தமிழீழ விடுதலைக்காக மேன்மேலும் உழைப்பார் என்று நாம் நம்புகின்றோம்.

யூட் அவர்கள் தொகுத்த‌ Faith in the Face of Militarization; Indigenous, Feminist, and Interreligious Voices என்ற நூலானது உலகெங்கும் ஒடுக்குமுறைகட்கெதிராகப் போராடும் மக்களுடன் தமிழர்கள் தம்மை இணைத்துக்கொண்டு உலகளவில் அரசியற் பலத்தினை எவ்வாறு பெறலாம் என்ற சிந்தையைத் தமிழர்களிடத்தில் ஏற்படுத்தும் என்பதோடு உலக அரசியலில் தமிழர்கள் தமது பார்வையை அகலப்படுத்துவதற்கு இந்நூலானது பெருந்துணை புரியும் என்று நாம் உறுதிபடக் கூறுகின்றோம். அத்துடன் கல்வியாளர்கள் எங்ஙனம் செயற்பாட்டுத் தளங்களிலும் களங்காணவியலும் என்பதைத் தெற்றெனத் தெளிவுபடுத்தும் வகையில் அவ்வாறான செயல் முனைப்பிலுள்ள கல்வியாளர்களினால் எழுதப்பட்ட கட்டுரைகளே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூலை வாசிப்பதன் மூலம் ஈழத்துக் கல்வியாளர்கள் தம்மைத் தற்திறனாய்வு செய்துகொள்ளலாம் என்பதை இங்கு சுட்ட விரும்புகின்றோம்.

பேராசிரியர் சுச்சரித்த கம்லத் (1934 – 2013)

பேராசிரியர் சுச்சரித்த கம்லத் அவர்கள் சிங்களமொழி, சிங்கள இலக்கியம், மொழியியல், மெய்யியல் ஆகிய துறைகளில் கல்விப்புலமை கொண்டவர் என்பதோடு பன்மொழி ஆய்வாற்றல் கொண்டவராகவும் திகழ்ந்தார். 1980 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் முன்னின்று உழைத்ததால் ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கத்தால் பழிவாங்கப்பட்டுத் தான் வகித்து வந்த பேராசிரியர் பதவியை இழந்தார். 15 ஆண்டுகளாகப் பேராசிரியர் பதவியை இழந்திருந்த இவருக்குச் சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் மீண்டும் பேராசிரியராகப் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டாலும், பல்கலைக்கழகக் கல்விமுறையின் மீதும் பாடத்திட்டங்களின் மீதும் எதிர்மறைக் கருத்துக்கொண்டு அவற்றினைக் கடுமையாகச் சாடியதோடு, தன்விருப்பில் பதவி விலகினார். தாம் கொண்ட கொள்கைகட்காக எந்நேரமும் பதிவிகளைத் தூக்கிப்போட அணியமாக இருக்கும் பேராசிரியர் சச்சரித்த கம்லத் போன்றவர்களின் கொள்கைப் பற்றானது எம்முடைய தமிழ்க் கல்வியாளர்கட்குத் தேவையான செய்தியைக் கூறுகின்றது என்பதை இவ்விடத்திற் பதிவுசெய்ய விரும்புகின்றோம்.

“தமிழர்கட்காகச் சாகும் வரை குரல் கொடுப்பேன்” என்று கூறுவதோடு மட்டுமல்லாது அறிவுத்தளத்திலும் அரசியற்தளத்திலும் ஒரு கல்வியாளராகவும் புலமையாளராகவும் அவரது குரல் அவரது இறுதிமூச்சு வரை தமிழர்கட்காக ஒலித்துக்கொண்டே இருந்தது. தமிழ்மொழியின் வரலாற்றுத் தொன்மையை சிங்களவர்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் தனது ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்திய பேராசிரியர் சுச்சரித்த அவர்கள் “வீரசோழியம்” என்ற தமிழ் நூலே சிங்களமொழிக்கு இலக்கணம் வகுத்துக்கொடுத்தது என்று தனது ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியதன் மூலம் சிங்கள வரலாற்றுப் புரட்டர்களின் உச்சியில் ஓங்கி அடித்தார். அத்துடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிக்குகளே இலங்கையில் பௌத்தம் பரவவும் வளர்வெய்தவும் பங்காற்றினார்கள் என்றும் தெள்ளத் தெளிவாக இவர் தனது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்திக் கூறினார். சிங்கள பௌத்த பேரினவாத வரலாற்றுப் புரட்டைக் கல்விப்புலத்திலும் புலமைப்புலத்திலும் தோலுரித்ததில் பேராசிரியர் சுச்சரித்த கம்லத் அவர்களின் பங்களிப்பானது எஞ்ஞான்றும் நினைவிற்கொள்ளப்பட வேண்டும். தொடரும் சிங்களத்தின் வரலாற்றுப் புரட்டுகளைத் தோலுரிக்க பேராசிரியர் அவர்களின் ஆய்வுகளும் எழுத்துகளும் எமக்குப் பெரிதும் பயன்படும் என்பதை நாம் இங்கு ஈண்டு நோக்க வேண்டும்.

மேலும்……

“ஹரய” என்ற சிங்கள அரசியற் செய்தியேட்டின் ஆசிரியரான ரணத் குமாரசிங்க, இயக்குநர் தர்மசிறி பண்டாரநாயக்க போன்றவர்களும் தமிழர்களின் தன்னாட்சியுரிமைக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தனர். அத்துடன் லசந்த கொல்லப்பட்டதன் பின்பாக “சண்டே லீடர்” ஏட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிரடெரிக்கா ஜான்ஸ் அவர்களும் தமிழினப்படுகொலையை மேற்கொண்ட சிங்களத் தரப்பின் ஊழல்களையும் தமிழர்கட்கு இழைத்த கொடூரங்களையும் தனது எழுத்துகள் மூலம் தொடர்ச்சியாக வெளிப்படுத்தித் தமிழினவழிப்பைச் சிங்களத்தின் வெற்றியாகக் காட்டும் பேரினவாத அரசியற்போக்கிற்குத் தடையாக இருந்தார்.

தமிழர்தாயகம் மற்றும் தமிழரின் தன்னாட்சி உரிமையை ஏற்ற தீர்வே இலங்கையில் தேசிய இனச்சிக்கலிற்கான தீர்வென ஐக்கிய சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளரான சிறிதுங்க ஜெயசூரிய என்பவர் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்குவதென இடதுசாரிகள் ஒன்றிணைந்து கூட்டணியாக முடிவெடுத்த போது, தமிழரின் தன்னாட்சியுரிமையை ஏற்றலே தேசிய இனச்சிக்கலிற்குத் தீர்வெனத் தேர்தல் அறிக்கையிற் குறிப்பிடுவதற்கு முன்னிலைச் சோசலிசக் கட்சி உட்பட்ட ஏனைய இடதுசாரிக் கட்சிகள் மறுத்தபோது, எந்தவொரு விட்டுக்கொடுப்புமின்றி அந்த இடதுக் கூட்டணியிலிருந்து சிறிதுங்க ஜெயசூரிய வெளியேறினார். அதாவது, சிங்களவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தமிழரின் தன்னாட்சியுரிமை விடயத்தில் மெத்தனப் போக்குடன் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணங்கொண்ட சிறிதுங்க ஜெயசூரிய அவர்கள் சிறிலங்காவின் தமிழர்தாயகம் மீதான வன்கவர்வுகட்கு எதிரான போராட்டங்களில் முன்வந்து பங்கெடுப்பவர் என்பதையும் நாம் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

முனைவர் நிமல்கா பர்னான்டோ, சுனிலா அபேயசேகர போன்ற போன்ற மாந்த உரிமைத் தளத்திற் செயற்படுபவர்களும் தமிழர்கட்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகட்கெதிராகக் குரல்கொடுப்பவர்கள் என்றாலும், அந்தக் குரல்கள் அரசியற் தளத்தில் ஒலிக்காமல் மாந்த உரிமைத் தளத்திலே தான் ஒலித்தன என்பதை இங்கு சுட்டும் அதேவேளை, மாந்த உரிமைத் தளத்திலாவது தமிழர்கட்காகக் குரல்கொடுத்தவர்கள் என்றளவில் அவர்கள் மீதும் தமிழர்கட்கு ஓரளவு மதிப்புண்டு.

சிங்ககக் கொட்டி (சிங்களப் புலி)

தமிழர்தேசத்தை ஒடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசானது உண்மையில் சிங்கள உழைக்கும் மக்கட்கும் எதிரானது என்ற அரசியற் புரிதல் கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிங்களத் தோழர்கள் தாம் ஒரு அமைப்பாகத் திரண்டு ஒடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரச எந்திரத்தைத் தகர்ப்பதன் மூலம் சிங்கள உழைக்கும் மக்களினையும் தேச ஒடுக்குமுறைக்குட்பட்டிருக்கும் தமிழர்தேசத்தையும் விடுதலையடையச் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் மறவழியில் போராடுவது என்று முனைப்புக் கொண்டனர். அந்த வகையில் தமிழர்தேச அரசமைக்க ஒடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசிற்கு எதிராகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை வல்லமையுள்ள நட்பாற்றலாக (natural ally) அவர்கள் கருதித் தமக்கான மறவழிப் பயிற்சிகளை வழங்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமைதிப்பேச்சுக் காலத்தில் அணுகினர்.

இவ்வாறாக அந்தத் தோழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினரால் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்ட இராணுவப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டு சிங்களதேசம் திரும்பினர். உலக வல்லாண்மையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழர்தேசத்தை ஒடுக்கும் சிங்கள பேரினவாத அரசானது அடிப்படையில் சிங்கள உழைக்கும் மக்கட்கும் எதிரானது என்ற தெளிவுடன் சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மறவழிப்போராட்டத்தில் ஈடுபடச் சென்ற அந்தத் தோழர்களில் சரத், ஜானக‌ உட்பட பலர் காட்டிக்கொடுப்புகளால் கைதாகிச் சிறைப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளையே தமது உண்மையான நட்பாற்றலாகக் கொண்டிருந்த “சிங்களக் கொட்டிகளை” (அவ்வாறே அவர்களைச் சிங்கள அரசு அடையாளப்படுத்தியது) தமிழீழ விடுதலைப் புலிகள் தமது செயற்பாடுகட்காகப் பயன்படுத்தவில்லை; மாறாக கொள்கையடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசிற்கு எதிராகப் போராட முனைபவர்கள் என்ற அடிப்படையிலேயே அவர்கட்கு இராணுவப் பயிற்சி வழங்குவதென விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது என்பதனை நாம் ஈண்டு நோக்க வேண்டும். தமிழீழம் மலர வேண்டுமென்பதை அந்தத் தோழர்கள் முழுமனதுடன் விரும்பினார்கள் என்பதையும் அதற்காகப் பாடாற்றுவதற்கு அவர்கள் எந்நேரமும் அணியமாகவிருந்தார்கள் என்பதையும் நாம் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

தமிழீழ மக்கட்காகத் தம்மாலியன்ற அளவில் பாடாற்ற முன்வந்த சிங்களத் தோழர்களை நன்றியுடன் மனங்கொள்வோமாக.

-முத்துச்செழியன்-

2024- 07- 28

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*