விளைதிறனுடனும் வினைத்திறனுடனும் செயற்பட்டு வென்றெடுத்தேயாக வேண்டிய ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – தம்பியன் தமிழீழம்

கடந்த பத்திகளில், ஈழத்தமிழரின் கனதியான கடந்த காலத்தின் மிகத் தெளிந்த பக்குவமான பாடத்தை மீட்டிப் பார்த்தமையாலும் நிகழ்கால நிகழ்வுகளினைப் பகுப்பாய்ந்து பார்த்தமையாலும் கிடைத்த தெளிவின் பாற்பட்டு ஒரு திறனாய்வுக் கண்ணோட்டத்தில் விடயங்களை அணுகி, ஈழத்தமிழரின் எதிர்காலம் குறித்த வரலாற்றினையாவது எமக்கானதாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கான அறிவூட்டல் சிந்தைகளை நாம் உள்வாங்கி எமது இன விடுதலையை நோக்கி எமது விளைதிறனான செயற்பாடுகளை முனைப்புறுத்துவதை நோக்காகக்கொண்டு இப்பத்தியைத் தொடர்வோம்.

நாம் யார் என்பது குறித்த தெளிவின் பாற்பட்டு ஒரு சிந்தைத் தளத்தை விரிவாக்கம் செய்து அதனால் ஏற்படும் கருத்துருவாக்கங்களை விடுதலை நோக்கியதாகச் செப்பனிட்டு அதற்கியைந்ததான மூல உத்திகளையும் செயற்பாட்டு உத்திகளையும் வரையறுத்து அதன் வழியான விளைதிறனான செயற்றிட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதே எதிர்காலம் குறித்துத் திட்டமிடும் ஒரு ஒருங்கு சிந்தையின் அடித்தளப் படிமுறையாகும்.

ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுவழி உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும் என வரையறுக்கப்படுவதற்கு அச்சொட்டான எடுத்துக்காட்டாக இலங்கைத்தீவில் தமிழ்த் தேசிய தேசிய இனமானது தேசமாக அரசியற் கட்டுறுதி பெற்று வாழ்கிறது.

தனது அரசியல், பொருண்மியம், பண்பாடு போன்றவற்றைத் தானே தீர்மானித்துக்கொள்ள வல்ல தன்னாட்சி உரிமைக்குத் தேசங்களாக வரலாற்று வளர்ச்சிபெற்ற‌ தேசிய இனங்கள் உரித்தானவை என்பது உலக ஒழுங்கில் ஏட்டளவில் சட்டப்பெறுதியுடன் குறித்து வைக்கப்பட்டுள்ள பாலபாடமாகும்.

எனினும் ஈழத்தில் தமிழர்கள் தேசமாக வரலாற்றுவழி வளர்ச்சிபெற்ற தேசிய இனமென ஏற்றுக்கொள்ளாமல், அவர்களின் தன்னாட்சி உரிமையை மறுதலித்து சிறுபான்மை என்கின்ற அரசியற் பெறுதி அறவேயற்ற சொல்லாடலிற்குள் அடக்கி ஒருமைப்பாடு போன்ற வல்லாதிக்கங்களுக்கும் அரச பயங்கரவாதத்திற்கும் இசைவாக ஒத்தோடும்  சொற்குழப்பங்களுக்குள் தமிழர்களின் அரசியலை அடக்கிவிடுவதான எத்தனிப்புகள் தான் ஈழத்தமிழர்களுக்கு எதிரான அரசியற் கருத்துருவாக்கங்களாகவும் கருத்துநிலைகளாகவும் விரிந்து தமிழ்த் தேசிய அரசியலின் கழுத்தில் சுற்றிய சுருக்காக மேலும் இறுகியவண்ணம் உள்ளது.

ஒவ்வொரு தேசிய இன இயக்கத்தின் போக்கும் தேசமாக வளர்ந்து தேச அரசமைக்கும் திசையிலானதாகும் என்ற உண்மை எல்லோராலும் ஏதோவொரு வரலாற்றுக் காலகட்டத்தில் ஏற்றுக்கொண்டேயாக நேரும்.

எனவே ஈழத்தமிழர்களின் அரசியல் இனிமேல், தமிழ்த் தேசிய இனம் என்ற சரியான அடையாளப்படுத்தலுடனும் அதனது உயிர்மையானது தமிழ்த் தேசியம் என்ற விடுதலைக் கருத்தியலின் வழி இயைந்ததாகவும் உலகத் தமிழர் கோட்பாட்டால் இவ்வுலகில் பாதுக்காக்கப்படுவதுமானதாக நிலைநிறுத்தப்பட்டாக வேண்டும்.

இதன் வழி ஈழத்தமிழர்களின் அரசியலானது கோட்பாட்டாக்கம் பெறுவது தான், தமிழ்மக்களின் தேசிய இனச்சிக்கலை தேசமொன்றின் மீதான ஒடுக்கல்களாகவும் அதற்கெதிரான போராட்டங்களை தன்னாட்சி அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக ஏதிலிகள் சிக்கலாகவும் எல்லோரிடமும் இரக்கத்தை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கின்ற ஒரு சமூகத்தின் மீதான கழிவிரக்கமாகவும் குறுக்குகின்ற  அரசியல் வரட்சியை இல்லாதொழித்துத் தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் தனது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள ஈழத்தமிழர்களுக்கு இருக்கும் ஒரே வழி.

அதனால், சிறிலங்கா அரசபயங்கரவாதமும் அதற்கு வலுச்சேர்த்து ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்குட்படுத்தி, இனச்சுத்திகரிப்பை இன்னமும் தொடருவதற்கு இசைவாக ஒத்துழைப்பும் வழங்கி வரும் உலக வல்லாண்மையாளர்களின் நரபலி சூழ்ச்சிகளும் ஈழத் தமிழர்களைத் தேசமாக வரலாற்று வளர்ச்சிபெற்ற ஒரு மரபுவழித் தேசிய இனமென்ற மெய்நிலையிலிருந்து எப்படியாவது சிதைத்தழித்து விட வேண்டுமென்று கங்கணங்கட்டிச் செயற்படுவதன் மூலம் உலகமயமாக்கலின் சந்தைக் கோட்பாட்டினுள் தமிழ்த் தேசிய இனத்தைக் கரைத்துவிட்டு அதன் தேசிய இன அரசியலை இல்லாதொழிக்க எல்லாத் தளங்களிலும் எல்லாவழிகளிலும் முனைப்புடன்  செயலாற்றுகின்றன.

உலக வல்லாண்மையாளர்களின் வணிக நலன்களும் அதனூடான வல்லாதிக்கக் கனவுகளும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் மகாவம்சம் போன்ற வரலாற்றுப் பேழை வடிவில் இருக்கும் புரட்டுகளின் பாற்பட்ட‌ மனநிலையும் ஒருமித்து நின்று அதிகாரங்களின் உளவு அமைப்புகள் மூலம் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்கள் ஒரு மரபுவழித் தேசிய இனமாக இருப்பதற்கான ஒவ்வொரு அடிப்படைகளையும் இல்லாதொழிக்க நுண்மையாகத் திட்டமிட்டுத் தொடர்ச்சியாக செயலாற்றி வருகின்றன.

நிலப்பறிப்புகள் மூலமும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலமும் தமிழர் நிலங்கள் வன்கவரப்படுகின்றன‌. தமிழர்களின் வாழ்விடத் தொடர்ச்சியைச் சிதைக்கும் நோக்குடன் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. தமிழர்களின் நிலங்கள் பல் தேசிய நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்படுவதன் மூலமும் தமிழர்களின் தாயகமானது மாற்றாரின் மூலதனத்திற்குத் திறந்துவிடப்பட்டிருப்பதன் மூலமும் சிறிலங்கா அரச ஒத்துழைப்புடனான பொருண்மியத் திட்டங்கள் மூலமாகவும் தமிழர்களின் பொருண்மியப் பண்பாடு சிதைத்தழிக்கப்பட்டு தமிழர் தாயகத்தின் பொருண்மியம் தமிழர் கைகளிலிருந்து முற்றாக அகற்றப்பட்டவாறு ஈழத் தமிழர்களின் தேசிய இன வேர்கள் பிடுங்கியெறியப்பட்ட வண்ணம் உள்ளன. இதனால் தமிழர்களின் பொருண்மியம் ஆர்முடுக்கும் வேகத்தில் தமிழர்களின் கைகளிலிருந்து பறிபோய்க் கொண்டிருப்பதனுடன் உற்பத்தியற்று சிங்கள தேசத்தினதும் பல்தேசிய நிறுவனங்களினதும் பொருட்களைக் கூவி விற்கும் தரகு வணிகமாகத் தமிழர்களின் பொருண்மிய வாழ்வானது பாரியளவிற்கு இழிநிலை மாற்றங்கண்டு வருகிறது. அத்துடன் தமிழர்களின் நுகர்வுப் பண்பாடானது கேள்வியற்று மாற்றாரின் நுகர்வுப் பண்பாட்டை உள்வாங்குவதாக உள்ளது. இதற்குப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பெருங்காரணமாக இருக்கின்றனர்.

இந்த இழிநிலை தொடர்ந்தால், பொருண்மிய அடிப்படையில் மாற்றாரில் முற்று முழுதாகத் தங்கியிருக்கும் நிலை ஈழத்தமிழர்களுக்கு ஏற்படும். “பொருண்மியமே அனைத்தையும் தீர்மானிக்கவல்ல‌ அரசியலையும் தீர்மானிக்கும்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் ஒவ்வொரு அசைவும் மாற்றார்களால் தீர்மானிக்கப்படும் நிலை உருவாகும். ஓருலகச் சந்தைச் சிந்தையில் தேசிய இனங்கள் கரைந்து போகுமென்ற உலக‌மயமாக்கலின் கோட்பாடு உலகில் வியாபித்து இருக்கையில், உலகமயமாக்கலுடன் நேரடி முரண்நிலையை இப்போதைக்கு உருவாக்காமல், எமது மண்ணின் பொருண்மியத்தைக் கட்டியெழுப்பி போராட்டத்தைத் தக்கவைத்து, விடுதலையை வென்றெடுக்கும் வழிமுறையை உருவாக்க வல்லதாக உலகத் தமிழர் கோட்பாடு செயற்பட வல்லது. இந்த உலக வல்லாண்மையாளர்களின் வணிகவெறியை முறியடித்து எமது இனத்தைக் காத்துக்கொள்ள உலகமெல்லாம் பரந்து விரிந்துவாழும் தமிழர்கள் ஒரு வணிக ஆற்றலாக‌ இயங்காற்றலைப் பெற்று வணிகமாற்ற முன்வந்தேயாக வேண்டும்.

ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்திலுள்ள அக முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்வதுடன் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக அடையாள வேறுபாடுகளை வலியுறுத்தவும் புதிய வேறுபாடுகளைப் புகுத்தவும் தம்மாலான அத்தனை சூழ்ச்சிகளையும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவும் உலக வல்லாண்மையாளர்களின் உளவு அமைப்புகளும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உளவு அமைப்புகளும் தொடர்ந்து செய்து வருகின்றன. இதனால் சாதி, சமய, பிரதேச வேறுபாடற்ற ஒரு முற்போக்குச் சமூகமாக எம்மைக் கட்டுறுதி செய்து விடுதலை நோக்கிப் பயணித்தால் மட்டுமே நாம் இந்த மாற்றாரின் சூழ்ச்சிகளைத் தகர்த்தெறிந்து ஒருமுகப்படுத்திய இலக்கை நோக்கிக் கோணலின்றிப் பயணிக்க முடியும்.  இதற்கான சிந்தை மாற்றத்தை ஏற்படுத்தி அதனை வழக்கத்திற்குக் கொண்டுவரத்தக்கதான வேலைத்திட்டங்களை நாம் நன்கு திட்டமிட்டுச் செயற்படுத்தியேயாக வேண்டும். பழைமைவாதப் போலி மயக்கங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க அறிவார்ந்து ஆய்ந்து உண்மைகளை உணர்த்தவல்ல முற்போக்கு மாற்றங்கள் நோக்கிய வழிவகைகளை நாம் கண்டறிய வேண்டும்.

அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளினதும் இந்தியாவினதும் நயவஞ்சகத் திட்டம் மூலமாக நோர்வே அரசின் பக்கத்துணையுடன் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தமானது அமைதிப் பேச்சுகள் என்ற தமிழர்களின் விடுதலை மீதான பொறியினை, தமிழர்களின் அரசியல் வெற்றி போல பரப்புரை செய்தமை போலவும், இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் இனப்படுகொலைப் பங்காளியான அமெரிக்காவினால் சிறிலங்கா அரசு இனச்சுத்திகரிப்பைச் செய்யும் கால இடைவெளியாகவும் தனக்கேற்றாற் போன்ற ஆட்சிமாற்றத்தினை சிறிலங்காவில் ஏற்படுத்துவதற்குத் தேவையான வாய்ப்பாகவும் ஐ.நா வின் மாந்த உரிமைகள் ஆணையகத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஐ.நாவின் தீர்மானம் போலவும், தமிழரிற்கான விடியல் போலவும் சித்தரித்தது போன்ற கண்-மண் தெரியாத கதை விடல்களே தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஊடகங்களில் வெளிவருகின்ற சூழமைவில், உண்மைக்குப் புறம்பான போலி நம்பிக்கைகளில் மக்களை மிதக்க வைத்து அவர்களை உண்மையான விடுதலையை நோக்கிப் பயணிக்க முடியாத முடவர்களாக மாற்றும் இழிநிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்காம‌ல் இருத்தலைப் போன்ற கேடு வேறு எதிலும் இருக்காது. இதற்கு நம்பகுத்தகுந்த நேர்த்தியான ஊடகங்களின் வருகை இன்றியமையாதது. அத்துடன், பொறுப்பற்றதும் கேடான‌ வேலைகளுக்கு உடந்தையாக இருப்பதுமான நெறிபிறழ்ந்த ஊடகங்கள் மீது அழுத்தங்களை ஏற்படுத்திப் போலிக் கருத்தூட்டங்களிலிருந்து மக்களைக் காக்க வல்லதான அழுத்தக் குழாமாகவும் சிந்தனைக் குழாமாகவும் செயற்பட வல்ல ஆளுமை ஈழத்தமிழர்களின் அரசியல் வெளியில் உருவாக வேண்டும்.

இன்று தேர்தல் அரசியற் கட்சிகளின் கொள்கைகள் மற்றும் செயற்றிறன் பற்றிய மதிப்பீடுகளே தமிழ்த் தேசிய அரசியல் குறித்தான பேசு பொருளாக இழிநிலை அடைந்து இருப்பதுடன் இனப்படுகொலைப் பங்காளிகளான ஒடுக்குமுறை அரசுகளிடம் காத்திருந்து கையேந்தி அவர்களின் கழிவிரக்கத்தைப் பெறத் துடிக்கும் கேவலமான வேலைகளைத் தமிழர்களின் தேசியம் குறித்த பன்னாட்டு அரசியல் நகர்வுகள் எனப் பொருட்படுத்தும் திருகுதாளங்களே தமிழர்களின் அரசியலில் நடைபெற்று வருவதால், தமிழ்மக்கள் மீளாத்துன்பத்தில் மூழ்கிவிடப் போகின்றார்கள். இந்த இழிநிலையிலிருந்து வெளிவர தமிழ்த் தேசியத்தை நோக்கியதான புரட்சிகரமான செயற்பாடுகளானவை தேர்தல் அரசியலிற்கு வெளியில் நிற்கும் இயக்கச் செயற்பாடுகளால் முன்னெடுக்கப்பட்டேயாக வேண்டும். அன்றேல், தமிழ்த் தேசியமானது அதனது அடிப்படைகளை இழந்து எமது இனத்தில் உட்பகைகளைத் தூண்டும் தேர்தல் அரசியற் போக்கிற்கான‌ மதிப்பீட்டு அளவுகோலாகப் பொருட்பட்டு விடும் அவலமே நீடிக்கும்.  எனவே தமிழ்த் தேசியம் நோக்கியதான புரட்சிகர இயக்கச் செயற்பாடுகளே களத்திலும் புலத்திலும் தேவையான அரசியற் செயற்பாடுகளாகும்.

வகைதொகையின்றித் தமிழர்கள் தமது தாயக நிலங்களில் கொன்றொழிக்கப்பட்டமையாலும், அவர்களின் உடைமைகள் அழித்தொழிக்கப்பட்டமையாலும், தொடரும் புலப்பெயர்வுகளாலும் தமிழர்களின் குடித்தொகையானது ஈழமண்ணில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. போரில் 90,000 பேர் கைம்பெண்கள் ஆக்கப்பட்டதாலும், பல ஆயிரம் பேர் முடமாக்கப்பட்டதாலும் மருத்துவமனைகளில் தமிழர்களின் குடித்தொகை அதிகரிப்பு விகிதத்தை அதிகரிக்காமல் செய்வதற்குக் கடைப்பிடிக்கப்படும் மிகவும் நுண்மையான சூழ்ச்சி நடவடிக்கைகளாலும் தமிழர்களது இன விழுக்காடானது இலங்கைத்தீவில் மிகவும் குறைந்து வருவதுடன் தமிழர் தமது தாயக நிலத்திலேயே நாளடைவில் எண்ணிக்கைச் சிறுபான்மையினராக மாறப்போகும் அவலம் நடந்தேறப்போகின்றது.

தொலைநோக்குடனான முதலீடுகளை எமது மண்ணில் செய்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் புலப்பெயர்வுகளையும் வறுமையினால் வாழாதிருப்பவர்களையும் பெருமளவிற்குக் குறைக்கலாம். இதற்குரிய வேலைத்திட்டங்களை புலம்பெயர் தமிழர் சிந்தைத்திறனுடன் ஒரு கூட்டு உழைப்பாக, திரட்டு மூலதனத்தின் வாயிலாக ஏற்படுத்த வேண்டும். இப்படியான அடிப்படை விடயங்களை நிறைவு செய்யக்கூடிய முதலீட்டு வாய்ப்புகளையும் தகைமையாளர் குழாம்களையும் உருவாக்குவதன் மூலம் ஆய்ந்தறிந்து கொள்ள வேண்டும். இதைவிடுத்து, தற்போதைய சூழலில் பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் முதலிடுவது போல் திருமண மண்டபங்கள் கட்டுவதனால், அந்த முதலீடு எவ்வகையில் தமிழினத்துக்கும் அதனை முதலிட்டவருக்கும் பயன்படும் என்று சிந்தித்துத் தெளியாமல் இருப்பது கவலைக்குரியதாக உள்ளது. அத்துடன், தமிழினத்தின் குடித்தொகை அதிகரிப்புக் குறித்தான காலத்தின் தேவையைக் குடும்பங்களுக்கு எடுத்தியம்பி, அதனைத் தடுக்க மருத்துவமனைகளில் கையாளப்படும் நுண்மையான நாசகாரச் செயற்பாடுகளை அம்பலப்படுத்தி, அதனைத் தகர்த்து தமிழ் மக்களின் குடித்தொகை அதிகரிப்பை மேற்கொள்ள வல்ல அத்தனை நிகழ்தகவான‌ செயற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

வழிபாடுகள் முதல் வைபவங்கள் ஈறான விடயங்களில், அத்தனை மடைமைத்தனங்களையும் அறிவியற்கொவ்வாத மூடப் பழக்கவழக்கங்களையும் கேள்விக்குட்படுத்தாமல் இறுகப்பற்றி அவற்றையே ஈற்றில் தாம் கட்டிக்காத்து வரும் பண்பாடுகளாக ஏற்று பிற்போக்குத்தனங்களின் உச்சத்தில் நின்று, தமிழர்களின் சான்றாண்மை அடிப்படையில் விளைந்த தமிழ்ப் பண்பாட்டினதும் ஒரு தேசிய இனத்தின் இருப்பாக அதன் இயக்கு ஆற்றலையும் அறியாது ஈற்றில் பண்டங்களை நுகரும் பிண்டங்களாகத் தமிழர்கள் மாறிக்கொண்டிருக்கும் பேரவலம் பரந்து விரிந்து வாழும் தமிழர்களின் வாழ்வில் தங்குதடையின்றி நடந்தேறி வருகின்றது. இந்துத்துவமயப்பட்ட தமிழர்களின் மெய்யியலையும் தமிழர்களின் தொன்மையையும் மீட்டுருவாக்கம் செய்து ஒவ்வொரு தமிழர்களின் வீட்டுப்படிக்கட்டிற்கும் எடுத்துச் செல்ல வேண்டிய கடினமானதும் கட்டாயமானதுமான பணியை அறிஞர் குழாம் மற்றும் செயற்திட்டக் குழு போன்றவற்றை அமைத்து முன்னெடுத்துச் செல்வதன் மூலம் செயற்படுத்த‌ வேண்டும். உலகத் தமிழர் கோட்பாட்டு இயக்கங்களை செயற்றிறன் மிக்கதாக்கத் தேவையான அனைத்துப் பங்களிப்பையும் தமிழ்நாடு மற்றும் தமிழீழ‌ தமிழ்த் தேசிய மக்கள் செய்து, வெளிமாயைகளால் தாம் காவுகொள்ளப்படாதிருக்க கூட்டிணைவுடன் செயலாற்ற வேண்டும். பிற்போக்குத்தனங்கள் வரம்பற்று நடைமுறைப்படுத்தப்படும் வைபவங்கள் மற்றும் களியாட்ட விழாக்களை, அரசியல் விழிப்பூட்டும் முற்போக்கு விழாக்களாக மாற்றி மக்களை அரசியற்படுத்தி ஒருமுகப்படுத்தும் வாய்ப்புக்களாகப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கடமையை ஆற்ற மக்களை விழிப்பூட்டியேயாக வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ நடைமுறையரசை இயக்கிய போது, செயற்றிறனும் இயங்கு ஆற்றலும் பெற்றிருந்த கட்டமைப்புகள் மூலம், எந்தவொரு வேலைத்திட்டத்தினையும் வெற்றியடையச் செய்ய இயலுமானதாக இருந்தது, அல்லது இயலுமானதாக இருந்திருக்கும். சிறிலங்கா அரச பயங்கரவாதத்தையும் அதனுடன் சேர்ந்த பன்னாட்டுக் கூட்டுக்கொலையாளி அரசுகளையும் பலமுனையில் எதிர்த்து நின்றவாறே விடுதலைப் புலிகள் ஏற்படுத்திய மாற்றங்கள் கனத்த பெறுதியானவை. எனினும், அவர்கள் போர்க்கருவிகளைப் பேசாநிலைக்குக் கொண்டு வரும்போது விட்டுச் சென்ற அத்தனை விடயங்களும் இன்னும் முன்னெடுக்கப்படாமல் அப்படியே இருக்கின்றன. அத்துடன் காலவோட்டத்தில் இன்னும் பல செயற்பட்டேயாக வேண்டிய தளங்கள் உரிய வலுவுடன் முயற்சிக்கப்படாமல் அப்படியே இருக்கின்றன. அப்படி முயன்று வேலை செய்ய வேண்டியவர்களோ எந்தவொரு கட்டுறுதியான கட்டமைப்பை ஏற்படுத்தாமலும் அதற்கான செயற்திட்டத்துடன் செயலில் இறங்காமலும் இன்னமும் பரப்புரைப் பீரங்கிகளாகவே வலம்வர முயல்கின்றனர். இவர்கள் விடுதலை நெருப்பு இன்னமும் தமது நெஞ்சில் கனன்று கொண்டிருப்பதாகச் சொல்கின்றனர். ஆனால் அவர்கள் சிக்கல்களை நுணுகிப் பார்த்துத் தமது வளங்களை மீள ஒருங்கமைத்துப் புரட்சிகர சூழ்நிலைகளை உருவாக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விடுவார்கள் என்பது போல் தோன்றவில்லை. அத்துடன், போராளிகளாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு குழுவாதங்களிலும் குழுமோதல்களிலும் ஈடுபடுகின்றமையானது, போராளிகள் எந்த அளவில் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதையும் அவர்களது இலட்சியப்பார்வை எந்த மட்டம் வரையிலும் உள்ளதென்பதையும் மீளாய்வுக்குட்படுத்தி மீள் ஒருங்கமைப்புச் செய்யவேண்டிய தேவையை உணர்த்தி நிற்கின்றது. பல்லாயிரக் கணக்கான மக்களையும் போராளிகளையும் இழந்து தமிழினம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள் தலைமையில் உருவாக்கிக் கொண்ட அதன் இயங்கு ஆற்றல் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஒரு துரும்பைத் தானும் அசைக்க முடியாத கையறு நிலைக்கு வந்து விட்டது என்பதே உண்மை.

இன உணர்வானது ஈழப் போராட்ட வெற்றிக்கு மறவழிப் போராட்டத்தை முதன்மை வடிவமாக வளர்த்தெடுத்தது. ஆனால், அழிவின் பின்னர் மீள் எழுவதற்கு “இன உணர்வு” மட்டுமே போதுமானதாகவிருக்கவில்லை. புதிய விடயங்களை ஆய்ந்து அறிந்து கொள்வதில் கூர்மையும் ஆர்வமுமுள்ள இளைய தலைமுறையின் சமூக, அரசியல், பொருண்மியம் குறித்தான நுணுகிப்பார்த்தலும் அதிலிருந்து வரும் தெளிவின்பாற்பட்டு செயலாற்ற வெளிவரும் உறுதியும் எழுச்சியுமே விடுதலைப் போராட்டத்தினை அதன் தேக்கநிலை சிதைத்து செயல் வீச்சுப் பெறச் செய்யும் என்பதைக் கடந்த 7 ஆண்டுகால பட்டறிவு இடித்துரைக்கின்றது. இளைய தலைமுறையினை அரசியற்படுத்தும் வழிவகைகளை மண்ணில் நிலைத்திருக்கும் இராணுவ அடக்குமுறைகளையும் மேவித் தேட வேண்டியிருக்கின்றது. இதற்கான வழிவகைகளை நன்கு திட்டமிட்டுச் செயலாற்ற வல்ல சிந்தைக் குழாம் முழுநேரமாகச் செயற்பட வேண்டியுள்ளது. இல்லையெனில் இயங்காற்றல் அற்ற இனமாகத் தமிழினம் மாறிவிடும் பேரவலம் வரலாற்றில் நடந்தேறிவிடும்.

வர்க்க பேதமற்று, தேசிய இனமொன்றின் அழிவு நிகழ்த்தப்படும்போது அழிப்பவனின் வர்க்க நிலைப்பாடுபற்றி ஆராய்ந்து, இரண்டு இனங்களும் இணைந்து வர்க்கப் புரட்சியை முன்னெடுத்தலே சரியான வழிமுறையென்று வரலாற்று இயங்கியலிற்கு முரணான குழப்பகரமான சிந்தையானது உலகப்புரட்சியாளர்களின் படங்களுடனும் போலிப் புரட்சிகர முழக்கங்களுடனும் இளையதலைமுறையிடம் எடுத்துச் செல்லப்படுகின்றன. இப்படியான வரலாற்று இயங்கியலிற்கு முரணான குழப்பங்களானவை அவர்களை மண் சார்ந்த உயிர்மைக் கருத்தியலான‌ தமிழ்த்தேசியத்தின்பாற் போய் விடாதவாறு திசை திருப்புகின்றன. அவர்களை மண்ணிற்குப் பொருந்தாத தமிழர்களின் வாழ்நிலைக்குப் பொருந்தாத மேற்குலகக் கருத்தியல் உற்பத்தியை நுகரச் செய்து, அவர்களை மண் சார்ந்த சிந்தையின் பால் ஈர்க்கப்படாமல் இருக்கும் கைங்கரியம் நடந்தேறிய வண்ணம் உள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைக் கருத்தியலை எள்ளி நகையாடுவதே புரட்சிகரச் செயற்பாடு என்பது போல் இவர்களுக்கு நஞ்சாகக் கருத்துக்கள் ஊட்டப்படுகின்றது. உளவமைப்புகளும் இவர்களைப் பயன்படுத்தித் தமிழ்த் தேசிய ஓர்மையைச் சிதைக்க வல்ல வழிகாட்டல்களையும் வளங்களையும் வழங்கி வருகின்றன. இந்தக் கற்பனாவாதக் குழப்பங்கள் மூலம் தமிழ்த் தேசியக் கருத்தியலின் மெய்நிலை திரிக்கப்படுதலை இளையோரிடத்தில் தடுத்து நிறுத்தவல்ல கருத்தியல் ஆளுமையைச் செலுத்த வேண்டிய தேவை தமிழ்த் தேசியத்திற்கு உண்டு.

இன உணர்வுள்ள இளைய தலைமுறையினர்களில் சிலர் சிறுதொகைப் பணங்களைச் சேகரித்துத் தமது தொடர்பாடல் அமைப்பின் வரையறைக்குட்பட்டு உதவி தேவைப்படுபவர்களைத் தேர்ந்தெடுத்து, உதவியளித்து வருகின்றனர். உண்மையில் ஒரு முறையான நிதிக்கட்டமைப்பையும் சரியான தகவல் சேர்ப்புக்களையும் விளைதிறனான பொருண்மியத் திட்டமிடல்களையும் ஒருங்கமைத்துப் பாரியளவில் அதனைக் கட்டுறுதியாகக் கட்டமைக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமான சிறு பண உதவிகளைச் செய்யும் போது அசைவுகளையும் உழைப்புகளையும் அதிகம் செலுத்துவார்களே தவிர அதன் விளைவு இம்மியளவு தேறிய தாக்கத்தையே எமது சமூகத்தில் ஏற்படுத்தவல்லதாக இருக்கும். எனவே, செயலாளுமைமிக்க முழுமைவாய்ந்த கட்டமைப்புகளை ஏற்படுத்தாவிட்டால், எமது சமூகத்தில் சில நல்லெண்ணம் கொண்டவர்களின் அசைவுகளும் அலைச்சல்களும் அதிகமாக இருக்குமே தவிர, சமூகத்தின் மீது குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவிலான தேறிய பெறுதியான விளைதிறன் மிக்க தாக்கங்கள் நடந்தேறா. “சைனர்ஜி” (Synergy Concept) என்னும் முகவாண்மைக் கோட்பாடான 1+1> 2 என்பதற்கமைய கூட்டுழைப்பின் பயனாக வரும் கூட்டுறவுக் கோட்பாடும் கூட்டிணைந்த வலுமிக்க அமைப்புகளாக அணியமாதலுமே எமது சமூகத்தில் பெறுதிமிக்க விளைதிறனான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்பதை உணர்ந்து செயற்பட்டாக வேண்டும்.

ஒரு விடுதலைப் போராட்டம் வீச்சடைவதற்குப் பின்னணிக் காரணங்களும் உடனடிக் காரணங்களும் உறுதியாக இருக்கும். பின்னணிக் காரணங்களின் தொகுப்பாக ஈழத்தமிழரின் இதுகால வரையிலுமான வரலாறு சான்றாக இருக்க உடனடிக் காரணங்களிற்கான தேவையை வரலாறு ஒளிவுமறைவின்றி உணர்த்தப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. எனினும் இந்தியாவினதும் பன்னாட்டு வல்லாண்மையாளர்களினதும் இழிவான சூழ்ச்சிகளைத் தகர்க்க‌ எமக்கு உவப்பான காலம் வரும்வரை நாம் பொறுமையோடு செயற்பட வேண்டிய இயக்க வழிமுறையை நாம் மறந்தும் மறக்கக் கூடாது. ஏனெனில், தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்து வரும் தமிழ்த் தேசிய உணர்வின் வெளிப்பாடு இந்திய அடக்குமுறை அரச பயங்கரவாதத்தின் கொட்டத்தை அடக்காமல் வரலாறு ஓய்ந்துவிடப் போவதில்லை என்பது திண்ணம். புறக்காரணிகளின் தாக்கம் அகக்காரணிகளின் வழியாகவே செயற்படும் என்பதனால், புறக்காரணங்களின் மாறுதல்களுக்கான சூழ்நிலைக்கு அகக்காரணங்களே அடிப்படையாயிருக்கின்றது.

எனவே ஈழத்தமிழர்கள் தமது இயங்காற்றலை அனைத்துத் தளங்களிலும் மீட்டுருவாக்கம் செய்து மேலும் வலுப்படுத்தியாக வேண்டியதே சிறிதேனும் காலந்தாழ்த்திவிட முடியாத உடனடித் தேவையாக இருக்கின்றது. அதனைச் செய்தால் தான், புதிய தென்பும் ஆர்வமும் செயலிற் குதிக்கும் உணர்வும் நிறைந்த போராட்ட வடிவங்கள் தளிர்விடத் தொடங்கும். ஏனெனில், எதுவானாலும் நமது அடிமை விலங்கை நாமே தான் போராடி உடைத்தெறிய வேண்டும்.

தனது மண்ணிற்காக தன் உயிரை எந்த நேரத்திலும் அர்ப்பணிக்க அணியமாக‌ இருப்பதனைத் தமிழ்த் தேசியத்தின் மீதான உண்மையான பற்றுறுதி என வரலாற்றில் இடம்பிடிக்கச் செய்த தமிழின வரலாற்றின் மீதிப் பக்கங்களைத் தமிழர் தமக்கானதாக்க வேண்டும் என்று வரலாறே காத்துக்கிடக்கின்றது.

தம்பியன் தமிழீழம்

2017-01-14

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*