
தமிழீழ நடைமுறை அரசானது தமிழினவழிப்பு மூலம் முற்றாக அழிக்கப்பட்டதன் பின்பான சூழலில், தமிழர்கள் தமிழினவழிப்பிற்கு உறுதுணையாக நின்று அதனை முன்னெடுத்த தரப்புகளின் தயவிற்காகக் காத்திருக்கப் பழக்கப்பட்டார்கள். உலக வல்லாண்மையாளர்களின் சந்தை நலன்கட்காக உருவாக்கப்பட்ட பன்னாட்டுப் பொறிமுறைகளினூடாக உலக வல்லாண்மையாளர்களின் சந்தை நலன்கட்காக இனவழிப்பிற்குள்ளான மக்கட்கு அறத்தீர்வொன்று கிடைக்கும் என்று தமிழர்களை ஏமாற்றியதில் புலம், களம் எனத் தமிழர்களின் அரசியற் பரப்பில் தமது அதிகார, அடையாள இருப்புகட்காகக் குறுக்க மறுக்க ஓடித்திரியும் பலருக்குப் பங்குண்டு. தமிழர்கட்கு இழைக்கப்பட்டது இனவழிப்பு (Genocide) என்று தமிழர்கள் கூறும்போது அதனைப் போர்க்குற்றங்கள் (War Crimes) என்றும், அதுவும் இறுதிப்போரில் இருதரப்பாலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் (War Crimes committed by both parties at the final stage of the war) என்றும், மேலும் குறுக்கலாக அதனை மாந்த உரிமைகள் மீறல் (Human Rights Violation) என்றும், அதையும் இரு தரப்பாலும் இறுதிக்கட்டப் போரில் இழைக்கப்பட்ட மாந்த உரிமை மீறல் (Human Rights Violations committed by both parties) என்றும் அதனையும் மேலும் நீர்த்துப்போகச் செய்யும் முகமாக வகுப்புவாத வன்முறை (Communal Violence) என்றும் கூறி அதனைச் சிங்கள பௌத்தர்கள் இசுலாமியர்கட்கு எதிராக நிகழ்த்திய மதக் கலவரத்துடன் (Religious Unrest) சமன்செய்து இனவழிப்பை ஒரு வகுப்புவாதம், கலவரம் என்றளவில் நீர்த்துப்போகச் செய்தமையைத் தவிர்த்து ஐ.நா.மாந்த உரிமைகள் கூட்டத்தொடரிற்குக் காவடி எடுத்துச் சென்று எதனையும் அடைய முடியவில்லை என்று தமிழ்மக்கள் உணரத்தலைப்பட்டமையின் விளைவாகவே, தமது அன்றாடச் சிக்கல்கட்காகப் போராடத் தொடங்கி, அதனை மண்ணுரிமைப் போராட்டமாக விரிபுபடுத்தி, அதனைத் தமிழர்தேசத்தின் விடுதலை அரசியற் போராட்டமாக முன்னெடுக்கும் நிலையை நோக்கித் தமிழர்கள் முனைப்புடன் நகர்கிறார்கள்.
இதைக்கண்டு பொறுக்காத உலக வல்லாண்மையாளர்கள் தமது தொண்டு நிறுவனங்கள் மூலமும், தூதரகத் தொடர்புகள் மூலமும், தமது எச்சைகட்காகக் காத்திருக்கும் ஊடக அடிவருடிகள் மூலமும், ஈழத்தின் பெயரை வைத்துக்கொண்டு தமது நாடுகளில் தமது முகவர்களாக அமைப்பு நடத்துபவர்கள் மூலமும் மீண்டும் ஐக்கிய நாடுகளின் மாந்தவுரிமைப் பொறிமுறைகள் மீது நம்பிக்கைகொள்ளச் செய்து தமிழர்களை வெளியாருக்காகக் காத்திருக்கும் அபலைகளாகவும், சிறிலங்கா அரசுடனான தமது பேரம்பேசல்கட்கான ஒரு சிறு அழுத்தக் குழுவாகவும், போராட்டங்கள் மூலம் தமக்கான அமைதிச் சந்தைக்குக் கேடுசெய்யாத பொம்மைகளாகவும் மீண்டும் மாற்றிவிடுவதில் கங்கணங்கட்டி நிற்கிறார்கள். ஐக்கிய நாடுகளின் மாந்த உரிமைகள் ஆணையகம் என்பது செயலுறுத்தும் வலுவற்ற ஒரு கண்துடைப்பு நிறுவனம் என்று அதன் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டுத் தமிழினவழிப்புத் தொடர்பில் ஐ.நா. மாந்த உரிமைகள் ஆணையகம் நடந்துகொண்ட முறையில் மனமுறிவுடன் பதவிநிறைவு பெற்றார்.
2015 இல் மாந்த உரிமைகள் கூட்டத்தொடரில் முன்வைத்த தீர்மானத்தை நல்லிணக்க அரசென்ற பெயரில் மேற்குலகிற்கு மிக மிக உவப்பான ஆட்சிசெய்த மைத்திரி-ரணில் தலைமையிலான சிறிலங்கா அரசானது, அந்தத் தீர்மானத்தை உவந்து ஏற்று அதில் கையெழுத்தும் போட்டுக் கொண்டார்கள். அந்த அளவிற்கு அது சிறிலங்காவினை மகிழ்வித்த தீர்மானம். ஆனால், அதைக்கூட ஏற்க முடியாதென தற்போதைய அநுரகுமார தலைமையிலான சிறிலங்கா அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளது. கலப்புப்பொறிமுறை என்ற பெயரிலோ வேறு எந்த வழிகளிலோ நீதிவழங்கும் பொறிமுறைகளில் வெளித்தலையீட்டைக் கோரினால், அது உள்நாட்டில் தாம் எடுக்கும் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்ற தமிழர்களை மிரட்டும் செய்தியையும் ஐக்கிய நாடுகள் மாந்த உரிமைகள் உயர் ஆணையர் வால்கர் டர்க்கிற்குத் தெரிவித்த சிறிலங்காவின் வெளியலுவல்கள் அமைச்சர் விஜித கேரத், வால்கர் டர்க்கை இலங்கைத்தீவிற்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.

1999 இல் கிருசாந்தி குமாரசாமி படுகொலைக் குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச என்பவனின் வாக்குமூலத்துடனும் அடையாளங்காட்டலுடனும் தோண்டப்பட்ட செம்மணிப் புதைகுழி பின்வந்த நாள்களில் போரைக் காரணங்காட்டி நிறுத்தப்பட்டிருந்தும், அதன் நீட்சியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிந்துப்பாத்திச் சுடுகாட்டில் வெளிப்பட்ட செம்மணிப் புதைகுழிகளிற்கு நீதிகேட்டு மக்கள் போராடத் தொடங்கி, தமிழ்நாட்டிலும் அத்தகைய எதிரொலிப் போராட்டங்கள் நடைபெறும் நேரத்திலே தான், மீண்டும் இத்தகைய போராட்டங்களை வெளியாரின் தயவிற்கான கையேந்தல்களாகவும் இறைஞ்சுதலாகவும் மாற்றும் அரசியல் நீக்கத்தை வால்கர் டர்க்கின் இலங்கை வருகையை முன்னிட்டு எதிர்ப்புரட்சியாளர்கள் செய்ய முனைந்திருக்கிறார்கள்.
அணையா விளக்கென்று பெயரிட்டுத் தொடங்கிய போராட்டமானது தமிழர்தேசத்தின் விடுதலைக்கான திரட்சியை நோக்கிப் பயணிக்காமல் வால்கர் டர்க்கிடம் இறைஞ்சுவதுடனும் அவரைக் கொன்றொழிக்கப்பட்ட எமது மக்களின் நினைவுக்கல்லிற்குப் பூப்போட வைப்பதுடனும் அணைத்துவிடப்பட்டது. மன்னார் மாந்தப் புதைகுழிகள், கொக்குத்தொடுவாய் மாந்தப் புதைகுழிகள் என்பன தோண்டிய பின்பும் திசைதிருப்பப்பட்டாயிற்று. களுவாஞ்சிக்குடி, கிளிநொச்சி கணேசபுரம் ஆகிய இடங்களில் வெளிவந்த மாந்தப் புதைகுழிகள் தோண்டப்படாமலே திசைதிருப்பப்பட்டாயிற்று. இந்நிலையில், ஐ.நாவின் செயலுறுத்தும் வலுவற்ற கண்துடைப்பு ஆணையகமான மாந்த உரிமைகள் ஆணையகத்தின் (UNHRC) பார்வைக்கு எடுத்துச் செல்வதையே போராட்டத்தின் நோக்காகக் கருதிச் செயற்படுவதனை எப்படிப் பொறுத்துக்கொள்வதென்று தெரியவில்லை.
அநுர தலைமையிலான சிறிலங்கா அரசானது ஐ.நா. மாந்த உரிமைகள் ஆணையகமும் அப்போதைய சிறிலங்கா அரசும் இணைந்து மாந்த உரிமைக் கூட்டத்தொடரில் கொண்டுவந்த தீர்மானத்தைக் கூட ஏற்கமறுத்து மேற்குக்குத் தாம் அடங்கவில்லை என்பது போல் ஒரு போலித் தோற்றத்தைக் காட்டியது. ஆனால், அநுர தலைமையிலான அரசானது பன்னாட்டு நாணய நிதியத்தினால் (IMF) வலியுறுத்தப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களை (Structural Adjustments) அப்படியே ஏற்று மேற்குலகின் சந்தைக் கோட்பாட்டிற்கு ஒத்தோடும் அடிவருடியாகச் செயற்பட்டுப் பன்னாட்டு நாணய நிதியத்தின் தயவில் நாட்டினை இயக்குகின்றது. எனவே, இங்கே ஐ.நா. மாந்த உரிமைகள் விடயம் எல்லாம் வெறுமனே கண்துடைப்பென்பதையும் தமது சந்தை நலன்கட்கு உவப்பாக நடக்க மறுக்கும் ஆட்சியாளர்களை மிரட்டவும் அத்தகைய ஆட்சியாளர்கட்குச் சேறடிக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது என்பதில் ஒடுக்கும் ஆட்சியாளர்கள் தெளிவாக இருக்கின்றனர்; போராடும் மக்களைத் தான் இது தொடர்பில் ஏமாற்றுகின்றனர்.
எனினும் தமிழ்மக்கள் தொடர்ந்தும் போராடத் தொடங்கியிருக்கின்றனர். தமிழ்த்தேசியத்தின் பெயரால் தேர்தல் அரசியல் செய்வோரும், தொண்டுநிறுவனம் போல இயங்கும் சிவில் சமூக அமைப்புகளும் மக்களுடன் போராட்டத்தில் இணைந்து தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். போராட்டங்கட்கு வருபவர்களைக் கேவலப்படுத்துவது எமது நோக்கன்று. போராட்டங்களிற்கு வருவதில் ஈடுபாடு காட்டும் தமிழ்த்தேசிய முன்னணியினரை நாம் ஏற்கின்றோம். ஆனால், மக்களின் அந்தப் போராட்டங்களைத் தமது வாக்கரசியலிற்காக அறுவடை செய்யும் போக்குக் குறித்தும், போராட்டக் களங்களில் தாம் மட்டுமே பெயரெடுக்க வேண்டுமென்ற குறுகிய போக்கையும் அதன் விளைவாகப் போராட்டங்களில் ஏனையோரின் பங்கேற்புக் குறைவதையுமே நாம் எச்சரிக்கையுடன் சுட்டுகின்றோம். அதேவேளை, நீதிமன்றில் சட்டப் போராட்டங்களை மேற்கொள்வதில் தனது தொழில்சார் தகைமையைப் பயன்படுத்தும் சுமந்திரனின் சட்டப் புலமையையும் நீதிமன்றில் முன்னெடுக்க வேண்டிய பணிகளை அவர் முன்னெடுப்பதையும் வரவேற்கின்றோம். ஆனால், தமிழர்களின் அரசியற் சிக்கல்களைச் சட்டச் சிக்கல்களாகக் குறுக்கி, மக்கள்மயப்பட்ட அரசியற் போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கும் உந்துதலைக் குறைத்து அவற்றைச் சட்டப் போராட்டம் மூலம் தாம் வென்று காட்டுவதாக மக்களை நம்பவைத்து அவர்களைப் போராட்டக் களத்திலிருந்து அயன்மைப்படுத்தும் சுமந்திரனின் போக்கையே நாம் எச்சரிக்கையுடன் கண்டிக்கின்றோம்.
ஒற்றையாட்சிச் சிறிலங்காவின் அரசியலமைப்பை ஏற்று நாடாளுமன்றம் சென்று 6 ஆம் திருத்தச் சட்டமென்ற வாய்ப்பூட்டுச் சட்டத்தின் படி உறுதிமொழியேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், அத்தகைய நாடாளுமன்ற அரசியலில் வாய்ப்புத்தேடி அலைபவர்களும் தமிழ்த்தேசிய அரசியல் என்ற விடுதலை அரசியலை முன்கொண்டு செல்ல இயலாதோர் என்பதனை மக்கள் ஐயந்திரிபறப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வல்ல தக்க தலைமை தமிழர்களிடம் தற்போது இல்லை என்பதிலும் தமிழர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
எனவே, போராட்டங்களில் பங்கெடுப்பவர்களைக் குழுப்பிரிக்காமல், அவர்கட்கு அரசியற்கட்சிச் சாயங்களைப் பூசாமல், தோழமையுணர்வுடன் அணுக வேண்டும். மக்கட்கான எந்தப் போராட்டக் களமும் இன்னொரு போராட்டக் களத்தை மடைமாற்றாது; மாறாக, ஒரு போராட்டம் இன்னொரு போராட்டத்தினைப் பேசுபொருளாக்கவும் அதற்கு ஊக்கத்தைக் கொடுக்கவுமே பயன்படும் என்பதைப் போராடும் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். மன்னாரில், செம்மணியில், தையிட்டியில், மயிலத்தமடுவில், வெருகலில் என மக்கள் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். அன்றாடச் சிக்கலிற்கெதிரான இந்தப் போராட்டங்கள் மண்ணுரிமைப் போராட்டங்களாகவும் தமிழ்த்தேசிய எழுச்சிப் போராட்டங்களாகவும் வீறெழுச்சி கொள்கின்றன. இத்தகைய போராட்டக் களங்கள் தமிழர்கட்குத் தலைமை தாங்கும் புரட்சிகர ஆற்றலாளர்களை உறுதியாக அடையாளங்காட்டும். மக்கள் போராட்டக் களங்களிலே புரட்சிகர விடுதலை அமைப்பு உருவாகட்டும். அதற்கான புரட்சிகரத் தலைமையையும் போராட்டக் களங்களே அடையாளங் காட்டட்டும். தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் போராட்டங்களை வழிநடத்தட்டும். நாம் உறுதியுடன் போராடுவோம். ஒவ்வொரு போராட்டக் களங்களையும் அறிந்துகொள்வோம். தமிழர்தாயகமெங்கிலும் நடந்தேறும் மக்கள் போராட்டத்தில் பங்காளர்களாவோம்!!!!
மன்னார் காற்றாலைத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் கருநிலப் பாதுகாப்புப் போராட்டம்

3.45 MW திறன் வலுவுள்ள 30 காற்றாலைக் கோபுரங்களானவை Denmark Vesta Asia Pacific என்ற டென்மார்க் நிறுவனத்தினால் நிறுவப்பட்டது. அதாவது இந்த 30 காற்றாலைக் கோபுரங்களினதும் மொத்த மின்பிறப்பாக்கும் வலு 103 MW திறன் வலு ஆகும். 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இலங்கை மின்சார அவையினால் (CEB) அமைக்கப்பட்ட இத்திட்டத்திற்கான செலவில் கணிசமான பகுதி ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) முதலீட்டிலேயே செலவிடப்பட்டது. மன்னாரின் கடலோரத்தின் வழியே 12.5 கிலோமீற்றர் நீளத்திற்கு இந்த 30 காற்றாலைக் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டமானது “கட்டம்- 1” என்றே கூறப்பட்டது. “தம்பபவனி” எனப் பெயரிடப்பட்ட இந்தக் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை 2020.12.08 அன்று அப்போதைய முதன்மை அமைச்சர் (பிரதமர்) மகிந்த ராஜபக்ச திறந்து வைக்க, அன்று முதல் “காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தின் கட்டம்- 1” ஆனது செயற்பாட்டிற்கு வந்தது.
இந்தத் திட்டம் செயற்பாட்டுக்கு வருமுன்பே இந்தத் திட்டத்தின் மீது ஐயுறவும் இந்தத் திட்டத்தின் விளைவுகள் குறித்த எச்சரிக்கையுணர்வும் மன்னார் மக்கட்கு ஏற்பட்டது. காற்றாலை மின்னுற்பத்திக்கு உகந்ததெனக் காற்றின் ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்ட இடங்களில் ஐந்தாவது இடத்திலேயே மன்னார் இருந்தது. அப்படியிருக்க, இந்தத் திட்டத்தினைத் தமிழர்தாயக நிலமான மன்னாரிற்குக் கொண்டுவந்தமை தொடர்பில் தமிழர்கட்கு வலுத்த ஐயம் ஏற்பட்டது. மன்னார் மாவட்டமானது சூழலியல் உணர்திறன் கொண்ட பகுதியென இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்கனவே மன்னார் மாவட்டத்தைப் பட்டியற்படுத்தியிருந்தமையையும், மன்னாரானது பருவகால மாற்றங்களிற்குப் புலம்பெயரும் பறவைகளின் விருப்பிடமாக இருக்கின்றமையையும், வங்காலையில் முதன்மையான பறவைகள் சரணாலயம் இருக்கின்றமையையும் கண்டுகொள்ளாமல் இத்திட்டத்தினைச் சிறிலங்கா அரசானது தமிழர் தாயகநிலப்பரப்பான மன்னாரில் திணித்தது.
இந்தத் திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (Environmental Impact Assessment) மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் என்பவற்றை ஆய்ந்த ரொகான் பெத்தியகொட என்ற உயிர்ப்பல்வகைமை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு உலகளவில் அறியப்பட்ட அறிவியல் ஆய்வாளர், இந்த அறிக்கைகள் நம்பகத் தகுந்தவையாகவில்லை என்றும் அதன் உள்ளடக்கம் எழுதப்பட்ட முறையில் திரிபுகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். இவ்வாறாக, இந்த விடயங்களில் விழிப்புற்ற மன்னார் மக்கள் இத்திட்டம் செயற்பாட்டிற்கு வருமுன்பே எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடலானார்கள். இருந்தபோதும், காற்றாலை மின்னுற்பத்தி என்ற புதுப்பிக்கத்தக்க (Renewable) ஆற்றல்வளம் தொடர்பான திட்டத்தை எதிர்ப்பது முட்டாள்த்தனமானது என்றும் இந்தத் திட்டமானது 20 ஆண்டுகளில் 20 பில்லியன் லீற்றர் டீசல் எரிபொருட் பயன்பாட்டைக் குறைத்துவிடுமென்றும் பரப்புரைகளை மேற்கொண்டவாறு இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.
இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் வழமைக்கு மாறான புதிய புதிய சிக்கல்களை மன்னார் மக்கள் எதிர்கொண்டனர். 90 மீற்றருக்கும் கூடுதலான உயரமுடைய காற்றாலைக் கோபுரங்களையும் 65 மீற்றர் வரையிலான நீளங்கொண்ட சுழலிகளை/ இறக்கைகளை எடுத்து வருவதற்கும், இந்தக் கட்டுமானத்திற்குத் தேவையான இதர பொருள்களை எடுத்துவருவதற்குமெனப் போடப்பட்ட சாலைகளால் நீர்வடிகாலமைப்புகள் பாதிக்கப்பட்டு, வழமைக்கு மாறான வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டு, மன்னாரின் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை உருவானது. ஆயிரக் கணக்கான புலம்பெயர் பறவைகளின் பறப்பு வழித்தடத்தில் சுழலும் பாரிய இறக்கைகளில் அடிபட்டுப் பறவைகள் இறந்தமையினால், மன்னாரின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு வலுச்சேர்க்கவல்ல பறவைகள் வருகையானது அருகத் தொடங்கி மன்னாரின் உயிர்ப்பல்வகைமையில் தீடிர் மாற்றங்கள் ஏற்பட்டன.
நிலத்திற்குக் கீழாகப் புதைக்கப்படும் பகுதியையும் சேர்த்து அண்ணளவாக 100 மீற்றர் உயரமுடைய கோபுரங்களை மன்னார் மண்ணில் நிறுத்துவதற்குப் போடப்பட்ட ஆழமான அடித்தளத்திற்காக (Pile Foundation) 25 அடி ஆழத்திற்குப் பாரிய குழிகளை ஏற்படுத்தினார்கள். பேசாலையில் தரமான குடிப்பதற்கேற்ற நிலத்தடிநீர் 15 அடி ஆழத்திற்கு முன்னரே கிடைத்துவிடும். அந்தப் பகுதியில் நிலத்தடி நீரிற்காக 15 அடிக்கு மேல் யாரும் ஆழப்படுத்தியதில்லை. அப்படியிருக்கக் கடற்கரையோரத்தில் 25 அடி ஆழத்தில் இடப்பட்ட ஆழ்துளைகளால் உவர்நீர் நிலத்தடி நீரில் மிகுவாகக் கலந்துவிடும் இடர்நிலவுகிறது. இதுவரை பேசாலையில் தரமான நிலத்தடி நீர் கிடைத்த பகுதிகளிலுள்ள நீரில் உவர்ப்பு ஏற்படத் தொடங்கியிருக்கின்றது.
அத்துடன் வழமைக்கு மாறாகக் கரைவலைத் தொழிலில் மீன்படும் (மீன்பிடியின் அளவு) அளவு சடுதியாகக் குறைந்துள்ளமை தொடர்பில் கடற்றொழிலை நம்பியிருக்கும் மக்கள் முறைப்பாடுகளை மேற்கொண்டு, “அதுபற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்ற பதிலை மட்டும் பெற்றிருக்கிறார்கள். ஆழமான அடித்தளத்தை (Pile Foundation) அமைக்கும் ஆழ்துளை செலுத்திகளினதும் மற்றும் அதிக அதிர்வை ஏற்படுத்தும் கருவிகளினதும் செலுத்திகளினதும் பயன்பாட்டால் ஏற்பட்ட மிகுவான அதிர்வுகளால் மீன்கள் கடற்கரையிலிருந்து தொலைவிற்குச் சென்றிருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அத்துடன், 65 மீற்றர் நீளமான பாரிய இறக்கைகள் காற்றினைக் கிழிக்கும் இரைச்சலான ஒலியால் இரவு நேரங்களில் பிள்ளைகள் கற்றலில் ஈடுபடமுடியாமலும், முதியோர்கள் உறங்க முடியாமலும் இடர்ப்படுகின்றனர். இந்தக் காற்றாலைகள் அமைந்துள்ள இடத்திலிருந்து 300 மீற்றர் சுற்றுவட்டத்தில் மக்கள் வாழ முடியாத நிலையே காணப்படுகின்றது. இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் இரவு நேரங்களில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக அப்பாலிருக்கும் உறவினர் வீடுகளிற்குப் பிள்ளைகளை அனுப்பி வைக்கும் அளவிற்குக் காற்றாலைச் சுழலிகளின் காற்றைக் கிழிக்கும் இரைச்சல் எரிச்சலூட்டுவதாக இருக்கின்றது.
1 காற்றாலைக் கோபுரத்தினை அமைப்பதற்கும் அதன் காற்றுப் பிடிப்பினைப் போதுமான ஆற்றல்வளத்திற்குப் பயன்படுத்தவுமென 70 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. எனில், 30 காற்றாலைக் கோபுரங்களை நிறுவ ஈராயிரத்திர்கும் மேற்பட்ட நிலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேவைக்காகப் பெற்றுக்கொண்ட தனியார் நிலங்களிற்கும் முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை. அத்துடன் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளையும் இயற்கைப் பேரிடர்களையும் எதிர்கொண்ட இப்பகுதி மக்களிடம் முறையான நிலவுறுதிச் சான்றுகளும் இப்படியாக நிலத்தை இழக்கும் மக்களிடம் இல்லாமையால் அவர்கள் இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்வதிலும் இடரினை எதிர்கொள்கின்றனர்.
அதேவேளை, காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் என்ற போர்வையில் வளமிக்க மணல் அகழ்வும் நடைபெறுவதாக மன்னார் மக்கள் கூறுகின்றனர். இரவுநேரங்களில், பாரவூர்திகளில் மணல் ஏற்றிச் செல்லப்படுவதைத் தாம் கண்ணுற்றனர் என மன்னார் மக்கள் கூறுகின்றனர். இல்மனைட் என்ற கனிமவளமானது மன்னார் மண்ணில் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இல்மனைட் கனிமவளமானது மன்னார் மண்ணில் காணப்படுவதாக அவுத்திரேலியாவைச் சேர்ந்த கனிமவள ஆய்வு மற்றும் அகழ்வு நிறுவனமொன்று மன்னாரிற்கு நேரில் வந்து களவாய்வினை மேற்கொண்டு செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், அந்த அவுத்திரேலிய நிறுவனமானது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையையும் சிறிலங்கா அரசிடம் கையளித்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. எனவே, இத்தகைய கனிமவள மணல் அகழ்வும் காற்றாலைத் திட்டத்தின் போர்வையில் நடைபெறுகின்றதா எனத் தமிழர்கள் ஐயுறவுறுகிறார்கள். அத்துடன், கடலோரத்தில் நடந்த இந்தக் கட்டுமானப் பணிகளால் மண்ணரிப்பும் ஏற்பட்டுள்ளமை தெரிய வருகின்றது. எனவே, இந்தத் திட்டத்தின் பாதிப்புகளை மன்னார் மண்ணின் மக்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள். இலங்கையின் நாடளவிய மின்தேவைக்கான மின்வலையில் (grid) மன்னாரின் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை இணைப்பதற்கு மன்னார் மக்கள் தமது வாழ்நிலைகளைக் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கின்றது.
வெறும் 1,996 சதுர கிலோமீற்றர் பரப்பளவையுடைய மன்னார் மாவட்டத்தில் அதுவும் சூழலியல் உணர்திறன் மிகுந்த பகுதியில் 3.45 திறன்வலு கொண்ட 30 காற்றாலைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டதன், அதாவது 100 MW திறன்வலுக் கொண்ட காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டதன் உடனடி இடர்களை மன்னார் மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சிறிலங்கா அரசு பேரிடியான செய்திக்குண்டைத் தமிழர்களின் தலையில் போட்டது. அதாவது, இந்தக் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தின் கட்டம் – 2 இனை Adani Green Energy SL Limited என்ற இந்திய ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த அதானி என்ற பெருமுதலீட்டாளனுக்குக் கொடுத்தது. மன்னாரில் 250 MW திறன்வலுக் கொண்ட காற்றாலை மின்னுற்பத்தி ஆற்றலையும் பூநகரியில் 100 MW திறன்வலுக்கொண்ட மின்னுற்பத்தி ஆற்றலையும் நிறுவும் திட்டமாகவே இந்தக் கட்டம்- 2 என்ற காற்றலை மின்னுற்பத்தித் திட்டம் அதானியிடம் ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்காக 442 மில்லியன் அமெரிக்க டொலர்களை அதானி முதலிடுகிறார். இந்த ஒப்பந்தத்தில் 20 ஆண்டுகளிற்கு மின்சாரத்தை அதானியின் நிறுவனத்திடமிருந்து சிறிலங்கா அரசு 1 மின்னலகிற்கு (1 kwh) 0.0826 அமெரிக்க டொலர்கள் செலுத்திப் பெற்றுக்கொள்வதாக உடன்பட்டிருக்கின்றது. அதாவது பன்னாட்டுச் சந்தையில் காற்றாலை மூலம் பெறப்படும் மின்னிற்காகச் செலுத்தப்படும் மின்னலகொன்றிற்கான செலவிலும் பார்க்க இது 70% கூடுதலான தொகையாகும். இலங்கையில் உள்ள உள்ளூர் நிறுவனங்களே அதானி கூறிய விலையின் பாதி விலையில் காற்றாலையால் மின்னுற்பத்தி செய்து தரும் இயலுமையைக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்க, விலைமனுக்கோராமல் அதானியிடம் இந்தத் திட்டம் தாரை வார்க்கப்பட்டதில் இந்தியாவின் புவிசார் நலன்களும் அந்த நலன்கட்கு இசைந்து இந்திய அடிவருடியாகச் செயற்படும் சிறிலங்கா அரசின் கொள்கை வகுப்புகளுமே காரணங்களன்றி வேறெதுவுமில்லை. அதானியின் வணிக நிறுவனத்துடன் சிறிலங்கா அரசு செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தை இருநாடுகளின் அரசுகளிற்கிடையிலான ஒப்பந்தம் இதுவென அப்போதைய வெளி அலுவல்கள் அமைச்சராகவிருந்த அலி சப்ரி பச்சைப் பொய்யைக் கூறியிருந்தாலும் கோட்பாட்டளவில் இந்தியாவின் ஆளும் அதிகார வர்க்கங்களான அதானி, அம்பானியின் நலன்கட்காக இயங்கும் அரசே இந்திய அரசென்ற அளவில் அதானியுடனான ஒப்பந்தத்தை இந்திய அரசுடனான ஒப்பந்தமென நாம் புரிந்துகொள்வதில் தவறில்லை. இப்படியாக விலைமனுக் கோராமல் அதானியிடம் இத்திட்டத்தினைக் கையளித்தமை தொடர்பில் காத்திரமான கேள்விகளை நாடாளுமன்றிலும் மக்கள் மன்றிலும் எழுப்பாமல் இருந்த எதிர்க்கட்சி, தமிழர் தரப்புகள், மற்றும் ஏனைய தரப்புகள், ஊடகர்கள் என அனைவரும் இந்தியத் தூதரகத்தின் எச்சைகட்கும் கட்டளைகட்கும் பணிந்து பழக்கப்பட்டவர்கள் என்பதனை இவ்விடம் நாம் மனங்கொள்ளலாம்.
அதானியால் முன்னெடுக்கப்படும் இந்தக் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தின் கட்டம் – 2 இல் 5.45 MW திறன்வலுக் கொண்ட 52 காற்றாலைக் கோபுரங்கள் (மொத்தமாக 270.4 MW திறன்வலு) மன்னாரிலும் 20 காற்றாலைக் கோபுரங்கள் (அண்ணளவாக 100 MW திறன்வலு) பூநகரியிலும் அமைக்கப்படவுள்ளன. இந்தக் காற்றாலைக் கோபுரங்களின் உயரம் 120 மீற்றரிலும் கூடுதலானதாக இருப்பதுடன் சுழலிகள்/ இறக்கைகள் ஒவ்வொன்றும் 85 மீற்றர் அளவினதாக இருக்கப்போகின்றது. கட்டம் ஒன்றில் மான்னாரில் அமைக்கப்பட்ட 3.45 MW திறன்வலுக் கொண்ட 30 காற்றாலைக் கோபுரங்கள் மன்னாரில் அமைக்கப்பட்டமையால் மக்கள் எதிர்கொண்டு வரும் பாதிப்புகள் குறித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைக் கிஞ்சித்தும் கணக்கிலெடுக்காமல் 5.52 MW திறன்வலுக் கொண்ட 52 பாரிய காற்றாலைக் கோபுரங்களை மன்னாரில் அமைப்பதற்கான திட்டத்தைக் கட்டம்- 2 என்ற பெயரில் அதானியிடம் ரணில் தலைமையிலான அரசு கையளித்தமையானது பேரினவாத சிறிலங்கா அரசினதும் இந்தியா என்ற வன்கவர்வாளனினதும் தமிழர்தாயகம் மீதான வன்கவர்வென்பதைத் தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்கிறார்கள்.
எனவே, அதானியால் முன்னெடுக்கப்படத் தொடங்கியிருக்கும் இந்தத் திட்டத்தின் கட்டம்- 2 ஆனது மன்னார் மண்ணின் மக்கட்கு அவர்கள் ஏலவே எதிர்கொள்ளும் பாதிப்புகளைக் காட்டிலும் பன்மடங்கு பாதிப்பினை ஏற்படுத்தப் போகின்றது என்ற மெய்நிலையைப் புரிந்துகொண்ட மக்கள் 2023 ஆம் ஆண்டிலிருந்து தீவிரமாகத் தொடர் களப்போராட்டங்களிலும் சட்டப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதானியினது வணிகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் பன்னாட்டளவில் திட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்குக் கையூட்டு வழங்கல் அடங்கலான ஊழல்களில் ஈடுபடுகின்றனர் என அமெரிக்கா குற்றஞ்சுமத்திச் சட்ட நடவடிக்கைகளில் இறங்கியமை பரவலான செய்தியாகியது. உலக வல்லாண்மையாளர்கள் அவ்வப்போது தமது சந்தை நலன்கட்காகத் தம்மிடையே பிடுங்குப்பாடுகளில் ஈடுபடுவதை யாவரும் நன்கறிவர் என்றாலும், இந்தச் செய்தி அதானியிடம் காற்றாலைத் திட்டத்தின் கட்டம் – 2 இனை வழங்கிய முறை குறித்துப் பேசுவதற்கான ஒரு வெளியை அமெரிக்க நலன்களை நேரடியாகப் பட்டெறியும் மேற்குலகத் தூதரகங்களின் தயவில் இயங்கும் ஊடகங்கள் ஏற்படுத்தின. இந்நிலையில், ஆட்சிப்பீடமேறிய அனுரகுமார திசநாயக்க இந்தத் திட்டத்தின் கட்டண ஒப்பந்தம் (Tariff Agreement) இல்லாமலாக்கப்பட்டு மீளாய்வு செய்யப்படும் என 2025 ஆம் ஆண்டு சனவரி மாதம் அறிவித்திருந்தார்.
அதானிக்கு வழங்கப்பட்ட இந்தத் திட்டத்தை அநுரகுமார இல்லாதாக்கப் போவதாகச் சொல்லவில்லை. அதில் கூறப்பட்ட கட்டண ஒப்பந்தத்தை இல்லாதாக்கி, மீளாய்வு செய்து புதிய கட்டண ஒப்பந்தத்தை ஏற்படுத்தப்போவதே அந்த அறிவிப்பின் செய்தி. ஆனால், மேற்கிற்கும் இந்தியாவிற்கும் தலையாட்டி ஆட்சிப்பீடமேறிய அனுரவைப் புரட்சிக்காரனாகக் காட்ட ஏங்கும் எதிர்ப்புரட்சிப் புரட்டர்கள் அநுரகுமார அதானியை விரட்டும் அளவிற்குத் துணிச்சல்காரனெனக் கதைவிட்டுத் தமிழ்மக்கட்குச் சிரிப்புக் காட்டினர். கட்டண ஒப்பந்தத்தினை மாற்றி நயத்தின் (இலாபம்) விழுக்காட்டைக் குறைக்க விரும்பாத அதானியின் நிறுவனம் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறுவதாக 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அறிவித்தது. ஆனால், அதானியின் இந்த அறிவிப்பானது பேரம்பேசலில் நயன்மை பெறுவதற்கான உத்தியென்பது விபரமறிந்தவர்கட்கு எளிதில் விளங்குமொன்றே.
அந்த அறிவிப்பிற்கு மறுப்புத் தெரிவிக்காமல் திரைமறைவில் இத்திட்டம் தொடர்பில் நடைபெற்ற உயர் மட்ட வணிகப்பேச்சுகள் முடிவிற்கு வந்து மீண்டும் தங்கு தடையில்லாமல் அதானியின் நிறுவனமானது இத்திட்டத்தின் கட்டம் -2 இன் கட்டுமானப் பணிகட்கான தொடக்கப் பணிகளில் வெளிப்படையாக ஈடுபடத் தொடங்கியது. இதனால், சினமடைந்த தமிழர்கள், குறிப்பாக மன்னார் மண்ணின் மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தத் தொடங்கினார்கள். கட்டுமானப் பொருள்களை ஏற்றிவந்த ஊர்திகளை இடைமறித்துப் போராடினார்கள். நீதிமன்றும் அரசும் தலையிட்டு அத்தகைய ஊர்திகளை மீட்டுக்கொடுத்தது. தமிழர்தாயகப் பரப்பான மன்னாரில் நடைபெறும் இந்தத் திட்டத்திணிப்பையும், வளக்கொள்ளையையும், தமிழர் மண்ணை வந்தேறி வணிக நிறுவனங்களின் வேட்டைக் காடாக்கும் சூழ்ச்சியையும் கண்டு தமிழர் தாயகமெங்கும் போராட்டங்களை முன்னெடுக்கும் முனைப்பிற்குத் தமிழர்கள் வருமளவிற்கு மன்னார் மண்ணின் மக்கள் தொடர்ச்சியாகப் போராடுகின்றார்கள். இந்தப் போராட்டமானது செம்மணி, தையிட்டி விகாரை, மயிலத்தமடு, வெருகல் “வட்டவான் தொல்லியல் நிலையம்” போல தமிழ்த்தேசியத்தன்மை வாய்ந்ததென்பதைப் புரிந்துகொண்ட அநுர தலைமையிலான ஒடுக்கும் சிறிலங்கா அரசானது இந்தப் போராட்டங்களை மடைமாற்றும் நோக்கோடு இந்தத் திட்டத்தைத் தற்காலிகமாக 1 மாதகாலத்திற்கு ஒத்திவைப்பதாகக் கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்தது. கென்யாவில் அதானி முன்னெடுத்த இதேபோன்ற திட்டமானது முழுமையாக நிறுத்தப்பட்டு அதானி விரட்டப்பட்டுள்ளார். வங்காளதேசத்திலும் அதானியின் இத்தகைய திட்டத்தில் கட்டணச் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் தெரிந்துகொண்ட தமிழர்கள் தமது தாயகநிலத்தில் இந்த இந்தியாவின் ஆளும் வரக்கத்தினனாகிய அதானியால் முன்னெடுக்கப்படும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் முடிவாகவே இருக்கின்றனர்.
தையிட்டித் திஸ்ச மகா விகாரை
யாழ்ப்பாணத்தின் வலிவடக்குப் பகுதி மக்கள் 1990 இன் தொடக்கத்திலேயே தமது மண்ணை விட்டு ஏதிலிகளாக அலையத் தலைப்பட்டார்கள். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக நீண்டகாலமாகத் தமது ஊரிற்குச் செல்ல முடியாத நிலையில் இருந்த மக்கள் வலி வடக்கு மக்களே. நீண்டகால ஏதிலி வாழ்வானது வலி வடக்கு மக்களை ஏனையோரைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் புலம்பெயரச் செய்தது. உயர் பாதுகாப்பு வலயம் (High Security Zone) என்ற போர்வையில் சிறிலங்காப் படையினரால் வன்கவரப்பட்ட வலி வடக்குத் தமிழர் நிலப்பரப்பானது சிறிலங்காப் படையினரைத் தவிர வேரு யாரும் உலவ இயலாத பகுதியாகவே சிங்கள இராணுவமயமாக்கலிற்கு உள்ளாகியிருந்தது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் தமிழீழ நடைமுறை அரசானது ஒடுக்கும் சிறிலங்கா அரசின் உலக ஒத்துழைப்புடனான தமிழினவழிப்புப் போரில் முழுமையாகச் செயலிழக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழர் தாயக நிலப்பரப்புகளும் சிறிலங்கா அரசின் ஆளுகைக்குள் ஒடுக்கப்பட்ட பின்பும் கூட நீண்டகாலத்திற்கு விடுவிக்கப்படாமல் இருந்த தையிட்டிப் பகுதியில் திஸ்ச மகா விகாரை என்று கூறப்படும் சர்ச்சைக்குரிய இந்த விகாரை கட்டப்பட்டுள்ள இடமானது 2015 ஆம் ஆண்டிலேயே மக்களின் நடமாட்டத்திற்குத் திறந்துவிடப்பட்டது.

பௌத்தமானது தமிழ்நாட்டிலிருந்தே இலங்கைத்தீவிற்குள் நுழைந்தது என்பதற்கான சான்றாகவே சங்கமித்தை வெள்ளரசு மரக்கிளையைக் காங்கேசன்துறைவழியாகக் கொண்டு வந்த கதை அமைந்துள்ளது. கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் பௌத்தம் செழித்து வளர்ந்திருந்தது. காஞ்சிபுரம், நாகப்பட்டினம், மதுரை போன்ற இடங்களில் பௌத்தம் செழிப்புற்று மக்களிடத்தில் வளர்ந்திருந்தது. தமிழின் ஐம்பெருங் காப்பியங்களும் தமிழ்நாட்டில் பௌத்தம் வளர்வெய்தி இருந்தமைக்குச் சான்றாகவிருக்கின்றன. மணிமேகலை என்ற காப்பியமானது முழுக்க முழுக்கப் பௌத்த காப்பியமாகவே உள்ளது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த பௌத்தமானது தமிழரின் வாழிடத் தொடர்ச்சியாகவிருந்த இலங்கைத்தீவிற்குள்ளும் அதே காலப்பகுதியில், அதாவது காக்கைவண்ணதீசன் (தேவநம்பியதீசன்) இலங்கைத்தீவில் அரசாட்சி செய்த கி.மு.247 இல் நுழைந்தது. தீசன் என்ற பெயரானது தமிழ்நாட்டின் கீழடித் தொல்லாய்வுகளில் காணக்கிடைக்கின்றமையால் அது தமிழர்களின் பெயரே என்பதையும் காக்கைவண்ணதீசனும் தமிழனே என்பதையும் கீழடி மெய்ப்பிக்கின்றது. பௌத்தம் கி.மு 3 இல் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களின் இலங்கைத்தீவிற்குள்ளும் நுழைந்திருந்தாலும் கி.பி 1 ஆம் நூற்றாண்டிருந்து கி.பி 7 ஆம் நூற்றாண்டு வரையே தமிழ்நாட்டில் செழிப்புற்று இருந்தது. அதே காலப்பகுதியில் தான் இலங்கைத்தீவிலும் பௌத்தம் செழிப்புற்று வளர்ந்தது. தமிழர்களே பௌத்தத்தை வளர்த்தனர். ஒரு மெய்யியலை வளர்க்கும் ஆற்றலானது தமிழ்மொழிக்கே அன்று இருந்தது.
11 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் தமிழ்நாட்டில் எழுதப்பட்ட வீரசோழியம் என்ற நூலை அடியொற்றியே சிங்களமொழிக்குப் பின்வந்த நூற்றாண்டுகளில் இலக்கணம் எழுதப்பட்டது. அதுவரை, பாளி மொழியினையே இன்றைய சிங்கள பௌத்தர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழிபாடுகளில் பயன்படுத்தினர். எனவே, தமிழ்மொழியும் தமிழர்களுமே முழுக்க முழுக்கப் பௌத்தத்தை வளர்த்தனர். தமிழ்நாட்டில் பௌத்தம் செழித்தமைக்கான சான்றுகள் போலவே, ஈழத்தில் தமிழர் தாயகப்பகுதிகளில் காணக்கிடைக்கும் பௌத்த எச்சங்களும் தமிழ்ப் பௌத்த எச்சங்களே. இந்தப் பின்னணியில் தையிட்டி, காங்கேசன் துறைப்பகுதியில் பழைய காலத்தில் அமைந்திருந்த பௌத்த வழிபாட்டுத்தலமானது தமிழர்களின் மரபுடைமையே. முதலாவது தமிழ்த் தம்ம பாடசாலை அமைக்கப்பட்ட இடம் அதுவே என பௌத்த மதகுருமார்களும் சிங்கள அமைச்சர்களும் வெளிப்படையாகப் பேசி வருகின்றமையானது அவர்களின் வாயாலே அத்தகையே பௌத்த அடையாளங்களானவை தமிழர்களின் அடையாளங்களென ஏற்காமல் ஏற்கும் உண்மைகளாகின்றன. ஆனால், அந்தப் பௌத்த வழிபாட்டிடமானது எங்கிருந்தது என்பது தெளிவாக அறியக்கிடைக்கவில்லை. அதற்குத் “திஸ்ச மகா விகாரை” என யார் பெயரிட்டார்கள்? அல்லது அப்படியொரு குறிப்பை அத்தகைய பெயரில் யார் பதிவிட்டார்கள் எனவும் அறியக்கிடைக்கவில்லை. அப்படியிருக்க, 16 தமிழ்க் குடும்பங்களின் உடைமையான 100 பரப்பு (8 ஏக்கர்) பரப்பளவுள்ள தனியார் நிலத்தைச் சிறிலங்காப் படையினர் வன்கவர்ந்தமையைப் பயன்படுத்தி அந்த நிலத்தை “திஸ்ச மகா விகாரை” அமைந்திருந்த நிலமெனப் பொய் புனைந்து அதில் சட்டத்திற்குப் புறம்பாக விகாரை அமைக்கும் பணிகளை சிறிலங்காப்படையினரும் பௌத்த பிக்குகளும் ஒடுக்கும் சிறிலங்கா அரசின் முழு ஒத்துழைப்புடன் கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் முன்னெடுக்கத் தொடங்கினர்.
கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் இந்த விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாலும், அந்த விகாரை கட்டப்படும் இடத்தைச் சுற்றி மறைப்புகளை ஏற்படுத்திவிட்டு அந்த விகாரை கட்டப்பட்டதாலும் மண்ணின் மக்களிற்கு இவ்வாறான விகாரை அமைக்கும் பணிகள் தொடர்பில் தொடக்கத்தில் எதுவும் தெரியவரவில்லை. தமிழர்களின் தனியார் நிலங்களை வன்கவர்ந்து சட்டத்திற்குப் புறம்பாக அமைக்கப்பட்ட இந்த விகாரையை அகற்றக்கோரி 2023 ஆம் ஆண்டு முதல் அந்தக் குறிப்பிட்ட காணி உரிமையாளர்களுடன் இணைந்து மக்கள் போராடி வருகின்றனர். பௌத்தத்தின் பெயரில் தமிழர்களின் நிலங்கள் வன்கவரப்படுவது தொடர்பில் அங்கு வழிபாட்டிற்கு அழைத்து வரப்படும் சிங்கள மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கில் ஒவ்வொரு முழுநிலவு நாள்களிலும் அந்தச் சட்டத்திற்குப் புறம்பான விகாரையைச் சுற்றி நின்று மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், 2025.06.10 அன்று நடந்த பொசன் முழுநிலவு வழிபாட்டு நிகழ்விற்காக ஆயிரக் கணக்கில் சிங்கள மக்கள் பௌத்த குருமாராலும் சிறிலங்காப் படையினராலும் கொண்டு வந்து குவிக்கப்பட்ட போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட போரிடும் தமிழ்மக்கள் அச்சுறுத்தி மிரட்டப்பட்டார்கள். நீர்த்தாரைகளை மக்கள் மீது பாய்ச்சிப் போராடும் தமிழ்மக்களை விரட்டும் நோக்கில் அத்தகைய சிறிலங்கா காவற்றுறையினரின் வண்டியும் அங்கு வந்திருந்தது. போராடும் தமிழ்மக்களை விரட்டிவிட்டுத் தமிழர்களின் நிலங்களை வன்கவர்ந்து கட்டிய பௌத்த விகாரையை வழிபட சிறிலங்கா அரச ஒத்துழைப்புடன் சிங்கள மக்கள் ஆயிரக்கணக்கில் வரவழைக்கப்படும் தமிழினவழிப்பு நடவடிக்கைகளே தையிட்டி விகாரை விடயத்தில் இன்றும் தொடர்கின்றன.
நயினார்தீவில் உள்ள நாகதீப என்ற விகாரையைப் பொறுப்பாள்கை செய்யும் நவதகல பதுமகீர்த்தி திஸ்ச நாயக்க தேரர் என்ற சிங்கள பௌத்த மதகுருவின் பொறுப்பாள்கையின் கீழே தையிட்டியில் சட்டத்திற்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரையும் வருகின்றது. தமிழ்மக்களினுடைய தனியார் காணிகளை வன்கவர்ந்து அடாத்தாக அங்ஙனம் விகாரை கட்டுவது ஏற்புடையதல்ல என இந்தத் தேரர் கருத்துத் தெரிவித்தமையால், அவரிடமிருந்து வேறொரு இனவாதம் முற்றிய பிக்குவின் கையில் இந்த விகாரையின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் தனியார் நிலத்தை வன்கவர்ந்து சட்டத்திற்குப் புறம்பாக அமைக்கப்பட்ட இந்த விகாரை அமைந்துள்ள காணியைக் காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அவ்வாறாக நிலங்களை உரிமையாளர்களான தமிழர்களிடம் கையளிக்க முடியாதென்றும், வன்கவரப்பட்ட இந்த 8 ஏக்கர் நிலத்திற்கு மேலதிகமாகச் சுற்றியுள்ள 6 ஏக்கர் நிலத்தையும் வன்கவர்ந்து சைத்தியம், புத்த மெதுரா, தியான மண்டபம் மற்றும் பூங்கா என்பன அமைக்கப்பட வேண்டுமென்றும் சிங்கள பௌத்த இனவாதக் கூச்சலைச் சிறிலங்காவின் பௌத்த மகா சங்கம் அறிக்கையாக வெளியிட்டது.
சிறிலங்காவின் தற்போதைய கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஜே.வி.பியினர் சார்பாகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதன் புரட்சிகரத் தலைமையையும் கொச்சையாகப் பேசிவந்தவருமான இராமலிங்கம் சந்திரசேகர் என்ற பேரினவாத ஒத்தோடியானவர் தையிட்டி விகாரை விடயத்தை இப்படியே நீடிக்க விட இயலாதென்றும் சட்டத்திற்குப் புறம்பாக விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்கட்கு மாற்று நிலங்கள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறுவதோடு, வேதநாயகம் என்ற தற்போதைய வட மாகாண ஆளுநர் என்ற பேரினவாதச் சிறிலங்கா அரசின் ஒத்தோடி முகவரும் அத்தகைய மாற்றுக் காணி வழங்கும் செயற்பாட்டை முனைப்புறுத்துகின்றார். தமிழர் நிலங்களைச் சிறிலங்காப் படையினர் வன்கவர்ந்து புத்த சாசன அமைச்சினது ஒத்துழைப்புடன் விகாரை என்ற பெயரில் தமிழர்தாயகத்தில் முன்னெடுக்கும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் (Structural Genocide) செயற்பாட்டைத் தனியார் காணி உரிமைச் சிக்கலாகக் குறுக்குவதில் சிங்கள அரச ஒத்தோடிகளான இந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் ஆளுநர் வேதநாயகமும் முன்னிற்கின்றனர். இந்தச் சூழ்ச்சிகள் தமிழர்களிடம் எடுபடாது எனத் தமிழர்கள் சூளுரைக்கும் நேரமிது. இது ஒடுக்கும் சிங்களதேசத்தின் தமிழர்தேசம் மீதான கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்பின் தொடர்ச்சியென்பதை மனங்கொண்டு, தமிழர்கள் பாரிய போராட்டக் களமாகத் தையிட்டி விகாரை விடயத்தை மனங்கொண்டு வீறுகொண்டு விடுதலைக்காகப் போராட வேண்டும்.
மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் நில உரிமைச் சிக்கல்
தமிழர்தாயகப் பகுதியான மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் தமிழர்களின் நிலங்களை வன்கவர்ந்து உருவாக்கப்பட்ட பொலநறுவை மாவட்டத்திற்குமான எல்லைப்பகுதியில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உரித்தான ஊரே மயிலத்தமடு ஆகும். மயிலத்தமடு என்ற எழில்மிகு தமிழர்களின் ஊரானது மட்டக்களப்பு நகரிலிருந்து 60 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. வனப்பகுதியாக இருக்கும் இந்தப் பகுதியானது பலநூறு ஆண்டுகளாகக் கால்நடை வளர்ப்பாளர்களாக இருக்கும் தமிழர்களின் கால்நடைகளை மேய்க்கும் மேய்ச்சல் நிலமாக இருக்கின்றது. ஆயிரம் ஏக்கர்களிற்கு மேற்பட்ட பரப்பளவையுடைய இந்த மேய்ச்சல் நிலமானது 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக உள்ளது. இந்நிலையில் எல்லை மாவட்டமான பொலநறுவை மாவட்டத்திலிருந்து சிங்களவர்கள் சிறிலங்கா அரச படைகளினது ஒத்துழைப்போடு மயிலத்தமடுவிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வளங்களைக் களவாடுவதோடு அந்தப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை அமைத்து வேளாண்மையிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

தமிழர்க்கு உடைமையான மேய்ச்சல் நிலத்தில் அத்துமீறி வேளாண்மை செய்ய வந்திருக்கும் சிங்களக் குடியேறிகள் தமிழர்கள் கால்நடைகளை மேய்க்கும் மேய்ச்சல் நிலங்களிற்குக் கிருமிநாசினிகளைத் தெளிப்பதன் மூலம் அங்கு மேச்சலிற்கு வரும் தமிழர்களின் கால்நடைகளைக் கொல்கின்றனர். மின்சாரவேலிகளை அமைத்துக் கால்நடைகளை மின்னினால் தாக்கிக் கொல்கின்றனர். அத்துமீறிய இந்த சிங்களக் காடையர்கள் கூரிய கருவிகளால் அடித்தும், வெட்டியும், வெடிவைத்தும் தமிழர்களின் உடைமைகளான கால்நடைகளைக் கொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இன்றுவரை இவ்வாறாக ஈராயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் சிங்களக் குடியேறிகளால் கொல்லப்பட்டுள்ளன. தமிழர்களினைப் பொருண்மிய அடிப்படையில் வலுவீனப்படுத்தி அந்த இடத்தை விட்டு வெளியேறச் செய்யும் இந்த சிங்கள இனவாதச் செயற்பாட்டைத் தமிழினவழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே அதன் உள்ளார்ந்த பொருளில் தமிழர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
இந்நிலையில், சிறிலங்காவின் தமிழினவழிப்பின் தொடர்ச்சியாகவிருக்கும் மயிலத்தமடு மேய்ச்சல் நிலச் சிக்கலை வேறுதிசையில் மடைமாற்றும் முகமாகக் கிழக்கு மாகாண ஆளுநராகவிருந்த செந்தில் தொண்டமான் எனும் சிங்கள அடிவருடி இதில் இனச்சிக்கலோ அல்லது இனவழிப்புச் சிக்கலோ இல்லையென்றும்; இது வேளாண்மை செய்வோருக்கும் கால்நடை வளர்ப்போருக்குமான சிக்கல் என்று கூறி வந்தார். இந்நிலையில் நீதிமன்றினை அணுகிச் சட்டப் போராட்டத்தின் மூலம் மயிலத்தமடு மேய்ச்சல் நிலங்களில் அத்துமீறிய குடியேற்றக்காரர்களை அகற்றுமாறு கூறும் நீதிமன்றக் கட்டளை பிறப்பிக்கப்படும் சிறிலங்காவின் காவற்றுறையினர் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்.
மேலும், மேய்ச்சல் நிலமாக 3025 கெக்டெயர் ஏக்கர் நிலமானது மகாவலி அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்படும் என ரணில் தலைமையிலான சிறிலங்கா அரசு வாக்குறுதியளித்தும் அதனை மகாவலி அபிவிருத்தி அவை கண்டுகொள்ளவில்லை. இப்போது சிறிலங்காப் படையினர் இந்தப் பகுதியில் காவலரண் அமைத்து மயிலத்தமடுவிற்குள் நுழைபவர்களின் விபரங்களைப் பதிவுசெய்து வருகின்றனர். சிங்களவர்களைக் கூடுதலாக இந்தப் பகுதிக்குள் நுழையவிடும் நடைமுறையாகவே சிறிலங்காப் படையினரின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழ் ஊடகர்களுக்கு நுழைவு மறுக்கப்படுகின்றது. அங்குள்ள எமது மக்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். ஆனாலும், மக்கள் தொடர்ச்சியாகப் போராடுகின்றனர். ஈராண்டுகள் கடந்தும் மயிலத்தமடுவில் நடைபெறும் இந்த மேய்ச்சல் நில உரிமைக்காக அந்த மண்ணின் மக்கள் கால்நடை வளர்ப்பாளர்களுடன் இணைந்து சுழற்சி முறையில் போராடி வருகின்றனர். சிறிலங்கா அரசின் கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்பின் தொடர்ச்சியாக இந்த மயிலத்தமடுச் சிக்கலைப் போராட்டக் களமாக்கி அந்த மண்ணின் மக்களின் மண்ணுரிமையை மீட்பதோடு தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களமாக அங்கு முன்னின்று போராடத் தமிழர்கள் அணியமாக வேண்டிய நேரமிது.
தொடரும் கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்பு நடவடிக்கைகள்

தொன்மைக்கும் வனப்பிற்கும் பெயர்பெற்ற பழந்தமிழ் ஊரான வெருகலிலுள்ள வட்டவான் என்ற சிற்றூர்ப் பகுதியில் “வட்டவான் தொல்லியற் பகுதி” எனப் பெயர்ப் பலகையிடப்பட்டு ஊர் மக்கள் அந்தப் பகுதிக்குச் செல்வது அநுர தலைமையிலான அரசு பதவியேற்றுச் சிறிது காலத்தில் தடுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அமைச்சு, புத்தசாசன அமைச்சு, சிறிலங்காவின் முப்படைகள், பெருந்தெருக்கள் அமைச்சு என சிறிலங்காவின் அத்தனை அரச கட்டமைப்புகளும் பங்கெடுத்தே கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்பு நடந்தேறுகின்றது என்றாலும் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினவழிப்பானது தமிழரின் வரலாற்றை எழுதுதலிற்கு என்றென்றும் ஊறுவிளைத்துத் தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் நுண்ணிய நோக்கம் கொண்டது. தொல்லியல் என்றாலே அதன் வன்கவர்வின் அடையாளமாக அங்கே புத்தர் நிறுவப்பட்டு விடுவார்; பின்னர் சிங்கள பௌத்த விகாரை அமைக்கப்படும்; சிங்களக் குடியேற்றங்கள் அரச ஒத்துழைப்போடு நடந்தேறும். தமிழீழத்தின் தலைநகராம் திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா வெந்நீரூற்று, திரியாய், குச்சவெளி கரடிமலைப் பிள்ளையார், செம்பிமலைக் கோவில், மூதூர் 64 ஆம் கட்டை, வெருகல் கல்லடிமலை நீலியம்மன் கோவில் வளாகம் எனத் தொடரும் தொல்லியல் திணைக்களத்தாலும் இதர சிறிலங்கா அரச நிறுவனங்களாலும் முன்னெடுக்கப்படும் வன்கவர்வு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே வெருகல் வட்டவானிலும் தமிழர்நிலமானது வன்கவரப்பட்டுத் தமிழர்களின் வரலாறானது திரிபுசெய்யப்படப் போகின்றது எனப் புரிந்துகொண்ட மண்ணின் மக்கள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கிவிட்டனர். இந்தத் தமிழினவழிப்பிற்கெதிராகத் தமிழர்கள் அனைவரும் அணிதிரள வேண்டிய நேரமிது.
ஏலவே, திருகோணமலையில் அயல் மாவட்டமான முல்லைத்தீவில் குருந்தூர்மலைச் சிவன் கோவில், நீராவியடி விநாயகர் கோவில் போன்ற பகுதிகளில் நடந்தேறிக்கொண்டிருந்த வன்கவர்வுகட்கு எதிராகப் போராடிய பட்டறிவுகளுடன் இன்னமும் வீரியத்துடன் வெருகல் வட்டவானில் தமிழர்கள் போராட்டக் களத்தைத் திறக்க வேண்டும்.
மக்கள் போராடத் தொடங்கிவிட்டார்கள்; விடுதலைக்குக் குறுக்கு வழியேதும் கிடையாது; வீறெழுச்சி கொள்ளும் மக்கள் போராட்டங்களே விடுதலையைப் பெற்றுத்தரப் போகின்றது. நாம் தொடர்ந்து போராடுவோம்!
-முத்துச்செழியன்-
2025.09.14
Be the first to comment