
தமிழ் மீனவர்கள் என விளிக்கப்படுபவர்கள் யார்? அவர்களின் வரலாறும் அதனது தொன்மையும் எத்தன்மையிடத்து?
உலகில் பல இடங்களிலும் மாந்த இனம் நாகரிகம் அடைவதற்கு முன்பே தமிழர்கள் கடல்சார்ந்த அறிவைப் பெற்றவர்களாக இருந்ததுடன் கடலோடி உலகெங்கும் சென்று ஆழிசூழ் உலகைத் தமது ஆளுகைக்குள் வைத்திருந்திருக்கிறார்கள்.
காற்றின் வேகம், நீரோட்டம், காற்றின் திசை, கடலின் ஆழம் என்பனவற்றைக் கணித்து, கலங்கள் அமைத்துக் கடலோடியவர்கள் தமிழர்கள். கட்டுமரத்தில் தொடங்கி, பின்பு படகு, வள்ளம், தோணி, நாவாய் என கடற்கலங்களை அமைத்துக் கடல்சார் தொழினுட்பத்துறையில் உலகின் முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழர்களே.
கட்டுமரம் என்ற சொல்லிலிருந்தே Catamaran என்ற ஆங்கிலச் சொல் உருவானது. நாவாய் என்ற சொல்லிலிருந்தே Navy என்ற ஆங்கிலச் சொல் உருவானது. இவ்வாறாக, சப்பானிய மொழி, கொரிய மொழி அடங்கலாக உலகின் பலமொழிகளில் புழக்கத்திலிருக்கும் கடல்சார் தொழினுட்பச் சொற்களுக்கு மூலமாகத் தமிழ்ச்சொற்களே இருக்கின்றன. இவ்வாறு, உலகிற்குக் கடலறிவைச் சொல்லிக் கொடுத்த முன்னோடிகள் எமது தமிழ்க்கடலோடிகளே.
முசிறி, கொற்கை, பூம்புகார், குமரி, மாந்தை போன்ற வணிகத்துறைமுகங்கள் தமிழர்களின் பன்னெடுங்காலக் கடலாளுகைக்குத் தொல்லியற் தொன்மச் சான்றுகளாக அமைய, இலக்கிய மற்றும் வரலாற்றுச் சான்றுகளாகச் சங்கப் பாடல்கள் எங்கும் தமிழரின் கடலியல் சார்ந்த வரலாற்றுச் செய்திகள் மிகுந்து காணப்படுகின்றன.
எப்படிக் குறைத்துக் கணக்கிட்டாலும் 3500 ஆண்டுகளாவது பழமைவாய்ந்ததாக இருக்கும் தொல்காப்பியத்தில் தமிழர்களின் கடல் வாணிபம் “முந்நீர் வழக்கம்” என்ற சொற்றொடரால் குறிப்பிடப்படுகிறது. “நளியிரு முந்நீர் நாவாயோட்டி வளி தொழிலாண்ட உரவோன் உம்பல்” என கரிகாலனும் “கடல் மிறக்கோட்டிய செங்குட்டுவன்” எனச் செங்குட்டுவனும் சங்கப்பாடல்களில் சிறப்பிக்கப்படுகின்றனர். மேலும், 46 புலவர்கள் குறுந்தொகை நெய்தல் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.
இப்படியாக, முத்துக்குளித்தும் கடலோடியும் உலகாண்ட வரலாறு தமிழர்களின் நெய்தல் திணைச் சிறப்பிற்கானது. முழங்கு கடல் முத்துகள், சங்கு வளையல்கள், யானைத்தந்தம், மயிற்தோகை, மாணிக்கம், வாசனத் திரவியங்கள், மிளகு போன்ற விலைமதிப்புக் கூடிய பொருள்களைக் கொண்டு திரைகடலோடி உலகில் பெரு வணிகமாற்றி (யவனர்கள் எனப்படும் கிரேக்கர்கள் மற்றும் உரோமர்களோடும், பாரசீகர், எகிப்தியர் என்போரோடும்) தமிழர்களின் உலகாண்ட பெருமைக்கு அடித்தளமிட்டவர்கள் எங்கள் கடலோடிகளே.
இப்படியாக, முத்துக்குளித்தும், உப்பு விளைவித்தும், திரைகடலோடியும், பெருங்கடற்படை வீரர்களாயிருந்தும் தமிழர் வரலாற்றைச் சிறப்பித்த எமது முன்னோரின் வழிவந்தோர்களே இன்று தமிழ் மீனவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
விசயநகர வடுகர்கள், துளுக்கர்கள், போர்த்துக்கேயரைத் தொடர்ந்து வந்த ஐரோப்பியர்கள் போன்ற மாற்றார்களின் தமிழர் தாயகங்கள் மீதான வன்கவர்வினால், எமது இனம் அடிமைப்படுத்தப்பட்டதன் விளைவாக, அதுவரை தாம் செய்து வந்த கடல்சார் தொழில்களை முன்னெடுக்க முடியாமல் இரட்டைவரிச்சுமைக்குள் பாடாய்ப்படுத்தப்பட்ட எமது நெய்தல்நில மக்களே தமது சொந்த வரலாற்றுப் பெருமையில் பெருமளவிலிருந்து விலக்கிவைக்கப்பட்டு, மீனவர் என்ற சொல்லுக்குள் குறுக்கப்பட்டு விட்டனர். பன்னெடுங்காலமாக அவர்களாற்றிய கடல்வணிகமானது, மாற்றாரின் சட்டதிட்டங்களால் “கடல் கடத்தல்” என்று கொச்சைப்படுத்தப்பட்டது. கப்பல் கட்டும் தொழிலுக்குத் தடையும் போடப்பட்டது. முத்துக்குளிக்க வேண்டுமெனில் கிறித்தவமதத்தைத் தழுவவேண்டுமெனக் கட்டாயப்படுத்தப்பட்டது. இவ்வாறு, தமிழர்களின் வரலாற்றுப் பெருமைக்குப் பெரும்பங்களித்த நெய்தல் குடிகள் மீனவர் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் சுருக்கப்பட்டு விட்டனர்.
“ஆழியை ஆள்வோரே உலகாள்வோர்” என்பதற்கமைய கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை மேற்குலகினதும் கிழக்குலகினதும் பயண வழித்தடத்தில் இருக்கும் தமிழர் கடலில் நடுவம் அமைத்து இரு திக்கிலும் ஆளுகை செய்து வந்த தமிழர்களின் கடலாளுகையானது மாற்றாரின் வருகையினால் பொலிவிழந்ததனாலேயே இன்று எமது நெய்தல் குடிகளின் செழிப்பான வரலாறு “மீனவர்” என்ற துன்பச்சுமை வாழ்விற்குள் அடைபட்டுவிட்டது.
காலனியர்களிடமிருந்து தமிழீழ, தமிழக தேசங்களின் ஆட்சியதிகாரங்கள் முறையே சிங்கள பௌத்த பேரினவாதத்திடமும் இந்தியக்கொடுங்கோலர்களிடமும் கைமாற்றலான பின்பாக இந்திய, சிறிலங்கா எல்லைப் பிரிப்பிற்குள் இருநாட்டு எல்லைகளிற்குள் கடலாண்ட தமிழ்க்குடிகள் அடைபட்டனர். 1076 km கடலோரக் கோட்டினை நீளமாகக் கொண்டு தமிழ்நாடும், ஏறத்தாழ 700 km கடலோரக் கோட்டை நீளமாகக் கொண்டு தமிழீழமும் தமிழர்களின் இரு தேசங்களாக இருந்தும், தேச ஒடுக்குமுறைக்குத் தமிழர்தேசங்கள் ஆளாகியிருப்பதால், தமிழர் கடலும் கடற்கரையும் தமிழர் கடலோடிகளிடமிருந்து படிப்படியாகப் பறிக்கப்பட்டு வருகிறது. முதலாளித்துவச் சந்தைப் பொருளியலிற்கான உலகமயமான விநியோக வழியமைப்பிற்காகத் தமிழர்களின் கடலும் கடற்கரையும் ஆளும் அதிகார வர்க்கங்களின் நலன்கட்காகக் கொண்டுவரப்படும் கேடான திட்டங்களுக்காகச் சுரண்டப்பட்டு, நெய்தல் நிலத் தமிழர்கள் தமது வாழிட, தொழிலிடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறாக, தமிழக மற்றும் தமிழீழக் கடற்றொழிலாளர்களின் (மீனவர்கள்) தலைவிதியை உலக வல்லாண்மையாளர்களின் வட்டார முகவர்களான இந்திய அரசும் சிறிலங்கா அரசுமே தீர்மானிக்கின்றன. “தமிழ் மீனவர் சிக்கல்” என்ற விடயத்தின் ஊற்றுப் புள்ளியும் குவியப்புள்ளியும் இந்த அச்சிலிருந்தே நோக்கப்பட வேண்டும்.
“தமிழ் மீனவர் சிக்கல்” என்ற விடயம் எங்கிருந்து வெளிக்கிளம்புகிறது?
மேற்போந்த பத்திகளில் திடமாய்க் குறிப்பிட்டவாறு, தமிழர்தேசங்களின் ஆட்சியதிகாரம் மாற்றார்களிடம் செல்லும் வரையில், தமிழர் கடல் தமிழர் கைகளிலிருந்தது. முத்துக்குளித்தும், கடலோடியும் கடலினால் பெரு வணிகமாற்றிய தமிழர் கடலோடிகளின் கடலாளுகையானது முடக்கப்பட்டுக் காலனியர்களின் ஆட்சிக் காலத்தில் கடலோடிய தமிழர்கள் மீனவர்களாக, குறிப்பாக ஐந்திற்கும் பத்திற்கும் வயிற்றுப்பாட்டிற்காக உழைப்பவர்களாகக் குறுக்கப்பட்டனர். பிரித்தானியர்கள் இந்தியா, சிறிலங்கா என்ற நாடுகளை உருவாக்கி அவர்களின் அடிவருடிகளிடம் அவற்றின் ஆட்சியதிகாரங்களை 1940 களின் இறுதியில் கையளித்துவிட்டுச் சென்ற பின்பும் கூட, தமிழக மற்றும் தமிழீழ நெய்தல் நில மக்கள் கடலில் தமக்கான எல்லைக் கோடுகள் என்று எதனையும் வகுக்காமல் தமது மரபுவழியான கடற்போக்குவரவுகளைத் தமிழர் தேசங்களாம் தமிழ்நாடு மற்றும் தமிழீழத்திற்கு இடையில் மேற்கொள்ளவே செய்தனர். 1970 களின் இறுதிப்பகுதிவரை, யாழ் மாவிட்டபுரம் முருகன் கோவிலுக்குக் கோடியக்கரையிலிருந்து பூக்கள் வருவிக்கப்படுவதும் இராமேசுவரம் சிவன் கோவிலுக்கு நெடுந்தீவிலிருந்து பால் எடுத்துச் செல்லப்படுவதும், திரைப்படம் பார்க்கக் கடலால் தமிழீழத்திலிருந்து தமிழ்நாடு சென்று வருவதும் மற்றும் தடைகளைத் தாண்டி சிறு கடல் வணிகம் என கடவுச்சீட்டு நடைமுறைகள் பற்றியும் நாட்டின் எல்லைகள் குறித்தும் ஏறெடுத்தும் பார்க்காமல், தமிழர்களின் கடற்போக்குவரத்து தமிழர் கடலில் இருந்தே வந்துள்ளது.
1974 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தின் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியும், தமிழீழத்தை வன்கவர்ந்து வைத்திருக்கும் சிறிலங்காவின் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவு என்ற தமிழக, தமிழீழ கடற்றொழிலாளர்களின் தங்ககமானது, சிறிலங்கா அரசிடம் சிறிலங்கா-இந்தியா அரசுகளின் நட்புறவுத்தேவை கருதித் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது.

உண்மையில், கச்சதீவு தமிழர்களின் மண். பன்னெடுங்காலமாக, தமிழ் கடற்றொழிலாளர்கள் ஓய்வெடுத்துச் சென்ற மண் அது. வெள்ளையர்கள் நாட்டெல்லை வகுத்ததன் பின்பு, அதாவது இரு நாடுகளுக்குள் அகப்பட்ட பின்பும் கூட தமிழக, தமிழீழக் கடற்றொழிலாளர்களின் உறவுத்தளமாக கச்சதீவு இருந்து வந்துள்ளது. மன்னார்- இராமேசுவரத்திற்கு இடையிலான திருமண உறவுகள் விழாக்கோலம் பூண்ட இடமாகக் கச்சதீவிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயம் இருந்து வந்துள்ளது. தமிழக, தமிழீழக் கடற்றொழிலாளர்கள் தமது வலைகளை உலர்த்தவும், கிழிந்த வலைகளைச் சீர்செய்யவும், உண்டு உறங்கி ஓய்வெடுக்கவும் கச்சதீவையே தாய்மடியாகப் பயன்படுத்தினர். எனவே, கச்சதீவு என்ற தமிழர் நிலத்தை, அதிலும் குறிப்பாக தமிழக, தமிழீழக் கடற்றொழிலாளர்களின் நிலத்தை இன்னும் குறிப்பாகத் தமிழகம், தமிழீழம் என்ற தமிழர்களின் இரு தேசங்களிற்கிடையிலான உறவுப்பாலமான நிலத்தை, தமிழர்களின் கருத்தைச் சாக்குப் போக்கிற்குக் கூடக் கேட்காமல் சிறிலங்காவிற்குத் தாரைவார்த்ததைத் தொடர்ந்து, அதற்கெதிராகத் தமிழர்களின் எதிர்ப்புக் குரல்கள் வலுத்தன. இதனால், தமிழகக் கடற்றொழிலாளர்களுக்கு வலைகளை உலர்த்தல், ஓய்வெடுத்துச் செல்லல் போன்ற அவர்களின் மரபுரிமைக்குக் கச்சதீவைப் பயன்படுத்தும் உரிமையுண்டு எனவும், எனினும் அந்தப் பகுதியில் மீன்பிடிக்க (அதுவும் மரபுரிமையாகவே இருந்தது) இசைவில்லை எனக் குறிப்பிடும் ஒப்பந்தத் திருத்தம் 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. உண்மையில், தமிழர்களின் தாயகமண்ணான கச்சதீவைக் கேட்டுக் கேள்வியில்லாமல் இந்தியக் கொடுங்கோலர்கள் சிங்கள அரசிடம் தாரைவார்த்துக் கொடுத்தமையானது, தமிழ்த் தேசிய இனத்தின் அரசியலவலத்தையே கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால், தமிழக- இலங்கை மீனவர் சிக்கலென இன்று நாள்தோறும் ஊடகங்களிற் பேசப்படும் சிக்கலிற்கு அடிப்படைக் காரணம் “கச்சதீவு ஒப்பந்தம்” தான் எனச் சப்பைக் கட்டுக் கட்டுவது என்பது இதன் பின்னாலுள்ள பல பக்கச் சிக்கல்களைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் போக்கிலானதாகும்.
“தமிழக- இலங்கை மீனவர் சிக்கல்” எனச் சுட்டப்படும் சிக்கலின் ஊற்றுவாய் எது?

ஏலவே அழுத்திக் குறிப்பிட்டதன் படி, தமிழர் கடலில் தமிழர்கள் மரபுவழி உரிமையை கடல்மேல் கொண்டிருந்தார்கள். முத்துக்குளித்தும் கடல் வாணிபமாற்றியும் வந்த தமிழ்க் கடலோடிகள், காலனியர் ஆட்சியின் தடைச் சட்டங்களின் விளைவாக மீனவர்களாகக் குறுக்கப்பட்டதன் பின்பும், தமிழக, தமிழீழக் கடற்றொழிலாளர்கள் கோரமண்டலக் கடல் (சென்னை முதல் கோடியக்கரை வரையுள்ள 357.2 km நீளமுள்ள கடல்), பாக்குநீரிணை (கோடியக்கரை முதல் பாம்பன் வரையுள்ள 293.96 km நீளமான கடல்), மன்னார் வளைகுடா (பாம்பன் முதல் கன்னியாகுமரி வரையுள்ள 364.9 km நீளமான கடல்) மற்றும் மேற்குக்கரைக்கடல் (கன்னியாகுமரி முதல் நீரோடி வரையான 60 km நீளமான கடல்) போன்ற தமிழகக் கடற்பரப்பிலும், வங்கக்கடல் மற்றும் புத்தளம்-கற்பிட்டி வரையிலான கடற்பரப்பிலும் மரபார்ந்து கடற்றொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். மரபுவழி மீன்பிடி முறைகளைப் பயன்படுத்திக் கடற்றொழிலில் ஈடுபடும் வரை, மீன் வளங்கள் உட்பட எந்தக் கடல் வளங்களும் அழிக்கப்படாமல் பேண்தகவு நிலையில் இருந்தன. இதனால் கடல் வளமும் குன்றவில்லை. வளச் சுரண்டலுக்குத் தமது கடல் உள்ளாவதாக எந்தக் கடற்றொழிலாளர்களும் நினைக்கவுமில்லை. உண்டு, கைநனைத்து, உறவுகொண்டாடி கடற்றொழிலாளர்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் தமிழ்க் கடற்றொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் உதவியாகக் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் 1964 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய- நோர்வே மீன்பிடித் திட்டத்தின் கீழ் நவீன மீன்பிடிமுறை என்ற பெயரில் அதிக மீன்களை அள்ளியெடுக்கும் மீன்பிடிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. உண்மையில், கடல் வளத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் அக்கறைகொள்ளாமலும், பேண்தகவு மீன்பிடிமுறைகளில் காணப்பட்ட வளத்தைக் காக்கும் பண்புகளைக் கண்டுகொள்ளாமலும், இலாப வேட்டைக்காகக் கடல்வளங்களை முற்றாகப் பாதிக்கும் மீன்பிடிமுறைகளாகவே நோர்வேயினால் அறிமுகப்படுத்தப்பட்ட மீன்பிடிமுறைகள் இருந்தன. விளைவாக, அதுவரை மரபுவழி நெய்தல் குடிச் சமூகங்களால் மரபார்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த கடற்றொழிலானது, இலாபவெறியில் அலையும் தரகு முதலாளிகளினது தொழிலானது. இந்த இலாபவெறியைக் குறியாகக்கொண்ட முதலாளிகளுக்குக் கடல் வளம் பற்றிய எந்தவொரு பேண்தகவு எண்ணங்களும் இருக்காது என்பதால், கடல் வளங்களை முறையற்ற முறையில் அள்ளிச் சென்று பெரும் இலாபமீட்டும் மீன்பிடிமுறைகளைப் பயன்படுத்தலானார்கள். இதனால், தமிழகக் கடற்பரப்பின் கடல் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் மீன்களே இல்லாக் கடலாய் தமிழகக் கடற்பரப்புகள் ஆகிவிட்டன என்று சொல்லும் நிலைக்குத் தமிழகக் கடற்பரப்புகள் உள்ளாகின. மீன்கள் முட்டையிட்டு இனவிருத்திகொள்ளும் பாறை அடுக்குகள், படுக்கைகள், கல் என எல்லாவற்றையும் அடியில் போட்டுத் துலாவி எடுக்கும் நவீனம் என்ற பெயரில் வந்த கேடான மீன்பிடிமுறைகளால் இந்தியத் தரகு வணிகர்கள் இலாபமடைய, தமிழகக் கடல் மீன்வளமற்ற கடலாக மாறிப்போனது.


இப்படி இக்கட்டான நிலைக்குத் தமிழகக் கடல் சென்ற பின்பும், ஆளும் நடுவண், மாநில அரசுகள் இது பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல், தமது தரகு முதலாளி நண்பர்களுக்குக் கடலில் மீதமிருக்கும் வளங்களையும் அள்ளிச் செல்ல அனுமதி கொடுத்தது. இதனால் இலாபவெறி பிடித்த அந்த முதலாளிகளும் இரட்டைமடி, சுருக்குமடி போன்ற கடலின் ஆழத்திற்குச் சென்று அங்கிருக்கும் கல், மண் வரை அள்ளியெடுக்கக் கூடிய மீன்பிடி வலைகளை இழுவிசைப்படகுகளில் பொருத்திக் கடல்வளக் கொள்ளை செய்து பெரும் பணமீட்டினர். இதனால், தமிழகக் கடலில் மரபுவழி மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் மீன்வளத்தைப் பாதிக்காத வகையில் எந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மரபுவழிக் கடற்றொழிலாளர்கள் ஆகியோர் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி, இந்த நவீன மீன்பிடி இழுவிசைப்படகுகளிற்கெதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அவர்களின் கோரிக்கைகளுக்கு நடுவண் மற்றும் மாநில அரசுகள் செவிசாய்க்காமல் பாராமுகமாக இருந்ததால், வயிற்றுப்பாட்டிற்காக வேறுவழியின்றித் தமது சொந்தத் தொழிலான பாரம்பரிய மீன்பிடியைக் கைவிட்டு, வணிக முதலாளிகளுக்குச் சொந்தமான மீன்வளத்திற்குக் கேடுவிளைவிக்கும் மீன்பிடிமுறைகளில் ஈடுபடும் இழுவிசைப்படகுகளில் கூலித் தொழிலாளிகளாகப் பாரம்பரிய மீனவர்கள் மாறினர். ஏனையோர் கடலை விட்டு வேறு தொழில்களுக்குக் கூலித்தொழிலாளிகளாகச் சென்றுவிட்டனர். எனினும், மரபுவழியாகச் செய்த மீன்பிடித் தொழிலைக் கைவிடாத தமிழகக் கடற்றொழிலாளர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக, இழுவிசைப்படகுகள் கடற்கரையிலிருந்து 3 கடல் மைல்கள் தொலைவிற்கு அப்பால் மட்டுமே மீன்பிடியில் ஈடுபடலாம் என முறையாக நடைமுறைப்படுத்தப்படாத சட்டம் கண்துடைப்பிற்காகத் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டது. உண்மையில், இதுவொரு பெரிய தடையாக இழுவிசைப்படகு முதலாளிகளுக்கு இருக்கவில்லை. இவ்வாறு தமிழகக் கடல் வளங்களை எல்லாம் அழித்துவிட்டு, தமிழீழக் கடல் வளங்களை அள்ளித் தமிழீழக் கடற்பரப்பை இழுவிசைப் படகுகளின் உரிமையாளர்களின் வேட்டைக்காடாக மாற்ற இழுவிசைப் படகுகள் தமிழக எல்லை தாண்டித் தமிழீழக் கடற்பரப்பிற்குள் பெரும் எண்ணிக்கையில் (ஆயிரக் கணக்கில்) நுழையத் தொடங்கின. இங்கிருந்து தான் மீன்பிடிச் சிக்கல் பெருஞ்சிக்கலாக மாறுகிறது.
இந்த எல்லை தாண்டி மீன்பிடித்தல் என்ற சிக்கல் எவ்வகையில் தமிழக, ஈழ கடற்றொழிலாளர்களின் அன்றாட வாழ்வியற் சிக்கலாகவும், தமிழ்த்தேசிய அரசியலின் அரசியற் சிக்கலாகவும் மாறிப்போனது?
தமிழகக் கடற்பரப்பில் மீன்வளங்களைத் தனது இலாபவெறி வேட்டையால் அழித்த இழுவிசைப் படகுகள் தமிழீழக் கடற்பரப்பில் நுழைந்து இரட்டை வலை, சுருக்கு வலை போன்றவற்றைப் பயன்படுத்திக் கடலின் அடிவரை சென்று கல், மண் எனத் துலாவித்துடைத்து, அள்ளி தமிழீழக் கடற்பரப்பில் இருக்கும் மீன்களை எல்லாம் முறைகேடாக அள்ளிச் செல்லத் தொடங்கிவிட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் தமிழீழக் களமருத்துவப் பொருட்கள், உடைகள், துணிகள், எரிபொருள், எந்திர உதிரிப் பாகங்கள் என்பனவற்றைத் தமிழகக் கடற்றொழிலாளர்களே உயிரைப் பணயம் வைத்துக் கடலோடி வந்து தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கையளித்துவிட்டுச் செல்வார்கள்.
இவ்வாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான உயிர்ப்பான விநியோக வழியைத் தமிழகக் கடற்றொழிலாளர்களே ஏற்படுத்தியிருந்தனர். இந்த விநியோக வழியைத் தடுத்துத் தமிழீழத்தை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கவே, சிறிலங்காக் கடற்படை கண்காணிப்பிலீடுபட்டு, எல்லை தாண்டி வரும் படகுகளை நோக்கிச் சுடத் தொடங்கியது. இதில், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குக் கடலால் வழங்கல் உதவிசெய்து வந்த எத்தனையோ தமிழக உறவுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்துடன், எல்லை தாண்டி வரும் படகுகளில் இருப்பவர்களைச் சிறிலங்காக் கடற்படையானது தமது தமிழினப் பகையுணர்வு மேலீட்டால் கம்பிகளால் அடித்தும், துப்பாக்கிப் பிடிகளால் இடித்தும், குழாய்களால் அடித்தும் துன்புறுத்தியதோடு சுட்டுக்கொன்றும் அவர்களது படகுகளையும் மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்தினார்கள். உண்மையில், கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இதனைச் சிறிலங்காக் கடற்படை செய்யவில்லை. தமிழர்கள் மீதுள்ள வெறுப்புணர்வாலும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தேவையான வழங்கலைச் செய்யும் தமிழகக் கடற்றொழிலாளர்களை அச்சுறுத்துவதற்குமே இவ்வாறு சிங்களவெறியுடன் சிறிலங்காக் கடற்படை நடந்துகொள்ளத் தொடங்கியது. கடற்போர்களில் தமிழீழக் கடற்புலிகளிடம் சாவடி வாங்கிக்கட்டும் சிறிலங்காக் கடற்படையானது, தமிழகக் கடற்றொழிலாளர்களைத் தாக்குவதன் மூலம் தமது தமிழினவெறுப்பை உமிழ்ந்துகொண்டது. இதனைத் தமிழின வரலாற்றுப் பகையான இந்தியா தனது முழு ஒப்புதலோடு வேடிக்கை பார்த்தது.
மறவழித் தமிழீழ விடுதலைப் போராட்டம் முடக்கப்பட்டதன் பின்பாக, எல்லை தாண்டும் இழுவிசைப் படகுகளில் இருக்கும் கடற்றொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கூடிக்கொண்டே வந்திருக்கின்றன. மீன்கள் கூடுதலாக இருக்கும் பகுதிகளைச் செய்மதியின் உதவியுடன் அறிவிக்கும் கருவிகள் மூலம் அறிந்து அவ்விடங்களுக்குச் சென்று மீன்களை அள்ளிவருமாறு கட்டளையிடும் முதலாளிகளின் கட்டளைகளுக்கேற்பவே, அந்தப் பகுதிகளில் கடற்றொழில் கூலிகளாகச் செல்லும் தமிழர்கள் எல்லை தாண்டிச் சென்று முறைகேடான மீன்பிடிமுறைகளைப் பயன்படுத்தித் தமிழீழக் கடல் வளங்களை அழிக்கின்றனர். எல்லை தாண்டியதாகக் கைதாகும் மீனவர்கள் என்போர் இவர்களாகத் தான் இருக்கின்றனர். உண்மையில், இந்த இழுவிசைப் படகுகளின் வளக்கொள்ளையால் பாதிக்கப்பட்டுத் தமது சொந்த மரபுவழி நாட்டுப்படகுத் தொழிலைக் கைவிட்டு விட்டு, இழுவிசைப் படகுகளில் கூலியாகிவிட்டவர்களே இந்தப் படகுகளில் எல்லை தாண்டிய மீனவர்களாகச் சிறிலங்காக் கடற்படையால் கைதாகுவோரில் பெரும்பான்மையினர்.
இதைவிட, கடற்றொழில் கூலிகளாக இழுவிசைப் படகுகளில் வேலைக்குச் செல்வோரும், அதிக பாடுகளுடன் கரைதிரும்பினாலேதான் அதிக பணத்தைக் கூலியாகப் பெறமுடியுமென்ற அடிப்படையில் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிக்கின்றனர்.

தமிழீழக் கடற்றொழிலாளர்களைப் பொறுத்தவரையில், பாரிய இழுவிசைப் படகுகள் மூலம் மீன்பிடித்தொழிலில் குறிப்பிடும்படியாக ஈடுபடுவதில்லை. செயற்கை நாரிழைப்படகுகளிற்கு எந்திரம் பொருத்திக் குறிப்பிடுமளவிற்கு கடல் வளங்களைப் பாதிக்காதவாறான வலைகளைப் பயன்படுத்தி மரபுவழியிலிருந்து பெருமளவிற்கு மாறாத மீன்பிடி முறைகளையே இன்றுவரை தமிழீழக் கடற்பரப்பில் பயன்படுத்தி வருகின்றனர். தமிழகக் கடற்பரப்பில் முறையற்ற மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தியமையால் மீன்வளம் குன்றிப்போனதாலும், தமிழீழக் கடற்பரப்பில் முறையற்ற மீன்பிடிமுறைகளில் ஈடுபடும் வழக்கம் இல்லாததாலும் எல்லை தாண்டும் தேவையற்றவர்களாகத் தமிழீழக் கடற்றொழிலாளர்கள் தமிழீழக் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தமிழினப் படுகொலை மூலம் இந்திய மற்றும் சிங்கள பௌத்த பேரினவாதமனது உலக வல்லாண்மையாளார்களின் ஒத்துழைப்புடன் முடக்கியதன் பின்பாக (முள்ளிவாய்க்காலின் பின்பாக) முட்கம்பிவேலிக்குள் வாழ்வு, தடுப்பு, மறுவாழ்வு என்ற பெயரிலான சிறைவாழ்வு, உடைமை இழப்புகள், அவயங்கள் இழப்புகள் என எல்லாத்துன்பச் சுமைகளையும் சுமந்து பாரிய உடைமை அழிவுகளின் பின்பும், அதாவது அவர்கள் வாழ்ந்த வாழிடம், தொழில் செய்த படகுகள், வலைகள் என்பன முற்றாக அழிந்த பின்பும் மீண்டும் கடற்றொழிலுக்குத் தமிழீழக் கடற்றொழிலாளர்கள் வந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இனப்படுகொலையின் பின்பாகக் கடற்றொழிலாளர்கள் பலர் சுழியத்திலிருந்து தமது வாழ்வைத் தொடங்கியிருக்கிறார்கள். வங்கிக் கடன் பெற்றும், மிச்ச சொச்சமாகத் தமது வீட்டுப் பெண்களின் காதிலும் கழுத்திலும் மீதமிருந்த நகைகளை விற்றும் அடகுவைத்தும், கடன்பட்டும் படகினையும் மீன்பிடி வலையினையும் வாங்கித் தமது வாழ்வைச் சுழியத்திலிருந்து தொடங்கியிருக்கிறார்கள். இப்படியாகத் தமது கடலில் அவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது, எல்லை தாண்டி வரும் இழுவிசைப் படகுகள் தமிழீழக் கடற்றொழிலாளர்கள் கடன்பட்டு வாங்கிய வலைகளைத் தமது தவறான மீன்பிடிமுறைகளின் காரணமாக அறுத்தெறிவதுடன், அவர்கள் சாதாரண வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யும் போது, இழுவிசைப்படகுகளில் தமிழகக் கடற்பரப்பிலிருந்து எல்லை தாண்டி வருவோர் பயன்படுத்தும் இரட்டை மடிவலை, சுருக்கு மடிவலை போன்ற வலைகளைப் பயன்படுத்தி மீன்வளத்தை அடியோடு அழிக்கும் மீன்வளக்கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

இதனால், நல்ல மீன்வளமுடைய தமது கடலில் மீன்பிடிக்க முடியாமலும், கடன்பட்டு வாங்கித் தாம் தொழில் செய்யும் வலைகளைக் காப்பாற்ற முடியாமலும் தமிழீழக் கடற்றொழிலாளர்கள் பாடாய்ப்படுவதுடன், கடலை நம்பிக் கடன்பட்டு இனப்படுகொலையின் பின்பும் பொருண்மிய அடிப்படையில் மீண்டெழத் துடிக்கும் தமது முயற்சியில் ஏமாற்றமும் மனமுறிவும் அடைகின்றனர். இப்படியாகத் தமிழீழக் கடற்றொழிலாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து எல்லை தாண்டி வரும் இழுவிசைப் படகுகளின் தவறான மீன்பிடி முறைகளால் வாழ்விழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர்.

சுருங்கச் சொன்னால், எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் இழுவிசைப் படகுகளில் அடியும் உதையும் வாங்குவோர் அல்லது கைதாவோரில் 99% இனர் அந்தப் படகுகளில் கூலியாக வேலைசெய்ய வரும் ஏழ்மைப்பட்ட தமிழக உறவுகளே. அந்தப் படகு உரிமையாளர்கள் இலாபமீட்ட இவர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுவதும் கைதாவதும் தொடர்கின்றன. அத்துடன், தமிழகக் கடற்பரப்பில் மீன்வளங்களைத் துடைத்து அழித்துவிட்டுத் தமிழீழக் கடற்பரப்பையும் மீன்வளமற்றதாக்கி விட இலாபவெறி கொண்ட முதலாளிகளின் இழுவிசைப்படகுகள் தமிழக எல்லை தாண்டித் தமிழீழக் கடற்பரப்பிற்குள் நுழைவதால், எல்லாவற்றையும் இழந்த பின்பும் பட்ட கடனிலிருந்து தமது வாழ்வை மீட்கத் துடிக்கும் தமிழீழக் கடற்றொழிலாளர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். ஒட்டுமொத்தத்தில், தமிழ் கடற்றொழிலாளர்களின் அன்றாட வாழ்வியற் சிக்கலாகிவிட்டது இந்தத் “தமிழக- இலங்கை மீனவர் சிக்கல்” என விளிக்கப்படும் சிக்கல்.
மேலும், தமிழ்த்தேசிய இனத்தின் இரு தேசங்களாம் தமிழக, தமிழீழ தேசங்களின் கடற்றொழிலாளர்களிடத்தில் நிலவும் இந்தச் சிக்கலை நேர்மைத்திறம் கொண்டு அணுகாமல், எல்லோரும் தமிழர்கள் தானே எனச் சொல்லிப் பூசி மெழுகினால் இந்தச் சிக்கலை இந்தியா, சிறிலங்கா என்ற தமிழரினப் பகை அரசுகள் தமிழக, தமிழீழ மக்களைப் பிளவடையச் செய்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்துவார்கள். என்னதான், தெளிவான அணுகுமுறை தமிழ்த்தேசியர்களிடம் இருப்பினும், அரசதிகாரங்கள் இந்தியா மற்றும் சிறிலங்கா அரசுகளிடமே இருக்கின்றன. எனவே, அதிகாரமற்று ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் தமிழர்களின் விடுதலை அரசியலாம் தமிழ்த்தேசிய அரசியலின் நோக்குநிலையிலிருந்து இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியாமல், தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் பாரிய அரசியற் சிக்கலாக இன்னமும் தீர்க்கப்படாமல் இந்தச் சிக்கல் தொடர்கிறது.
“தமிழக- இலங்கை மீனவர் சிக்கல்” எனக் குறிப்பிடப்படும் இந்தச் சிக்கலைக் கையாளுவதில் இந்திய- சிறிலங்கா அரசுகளின் அணுகுமுறை எப்படியுள்ளது?
தமிழ்நாடு என்ற தமிழர்களின் தேசமானது, தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவால் சிறைப்பிடிக்கப்பட்டுத் தனது இறைமையினை இழந்து நிற்கிறது. தமிழீழம் என்ற தமிழர்களின் தேசமானது, சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசால் வன்கவரப்பட்டுத் தனது இறைமையைப் பறிகொடுத்து நிற்கிறது.
வரலாற்றில் தமிழரினப் பகையான இந்தியமானது, தமிழ்நாடு, தமிழீழம் என்ற தமிழர்களின் இரு தேசங்கள் விடுதலையடைவதை எப்பாடுபட்டேனும் என்ன விலைகொடுத்தேனும் தடுக்கும் முனைப்புக்கொண்டது. இவ்வாறாக, தமிழரினப்பகையில் இந்தியா, சிறிலங்கா என்ற கொடுங்கோல் அரசுகள் கூட்டுச் சூழ்ச்சியுடன் தமிழரின் தேசங்களை அழிக்கும் நோக்கில் செயற்படும். எனவே, தமிழ்நாடும் தமிழீழமும் தமிழ்த்தேசியக் கருத்தியலை நெஞ்சில் சுமந்து ஒடுக்குண்ட இரு தேசங்களின் தேச விடுதலை என்ற அடிப்படையிலும், தமிழர் என்ற ஓர்மைச் சிந்தையில் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வுடனும் விடுதலை வேண்டிப் போராடினால் இந்தியா, சிறிலங்கா என்பன சிதைந்தழியும் எனத் தமிழரினப்பகை அரசுகளான இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் நன்கு தெரியும். அதனால், தமிழ்நாடும் தமிழீழமும் ஒன்றுபட்டுத் தமிழர்களாகப் போராடுவதைத் தடுக்க, இரண்டு தமிழர் தேசங்களிற்குமிடையில் முரண்பாட்டைக் கூர்மைப்படுத்த அத்தனை சூழ்ச்சிகளையும் இந்தியா செய்யும். மேலும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீளெழுச்சியென்பது, தமிழ்நாட்டு மண்ணின் பின்தள உதவியின்றி நடக்காது என்பதனாலும், தமிழ்நாடு மற்றும் தமிழீழ தேசங்களிற்கிடையிலான தமிழர் கடலே தமிழர்களின் எழுச்சிக்கும் தமிழீழதேச நடைமுறையரசை நிறுவக் காரணமாகவும் அமைந்தது என்பதனாலும், தமிழர் கடலை ஒரு போர்ப்பதட்டம் நிறைந்த கெடுபிடியான பகுதியாக வைத்திருக்கவே இந்தியா மற்றும் சிறிலங்கா அரசுகள் விரும்புகின்றன. இதனாலேதான், இந்தச் சிக்கலைத் தீர்க்க இந்தியா முனையவில்லை. இந்தியக் கடற்படையானது எல்லைப் பகுதியில் கடற்கண்காணிப்பில் ஈடுபட்டாலே இந்த எல்லை தாண்டும் சிக்கலைத் தீர்க்க இயலும். ஆனால், இந்திய அரசானது வேண்டுமென்றே இந்த எல்லை தாண்டலை அனுமதித்து வேடிக்கை பார்க்கிறது. ஏனெனில், தமிழ்நாடு மற்றும் தமிழீழத்தை முரண்பாடுகொள்ளச் செய்ய இந்தச் சிக்கல் பயன்படுமென அது கணக்குப் போடுகிறது.
சிறிலங்கா அரசின் அடிவருடியான டக்ளசு தேவானந்தா என்பவர் சிறிலங்காவின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் இந்த முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகிறார். பாதிக்கப்பட்டு நிற்கும் தமிழீழக் கடற்றொழிலாளர்களைத் தமிழகக் கடற்றொழிலாளர்கள் மீது வெறுப்புக்கொள்ளச் செய்யும் வகையில் திசைமாற்றல் வேலையை அவர் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் டக்ளசுவின் ஆதரவு வளையத்திற்குள் வந்திருக்கும் சில கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர்கள், தமிழக மீனவர்கள் மீது வெறுப்பை உமிழும் வகையிலாக அடிப்போம், வெட்டுவோம் எனப் பேசி வருகின்றனர்.

உண்மையில் தமிழர்களின் கடலும் கடற்கரையும் சிங்கள மீனவர்களால் சிங்கள அரச படைகளின் முழு ஒத்துழைப்போடு வன்கவரப்படுகிறது. தென்தமிழீழத்தின் திருகோணமலை முதல் வாகரை வரையான கடலில் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் முன்னெப்போதுமில்லாதளவுக்குக் கூடுதலடைந்து காணப்படுகிறது. பருத்தித்துறை போன்ற இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைப்பது என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழர்களின் தாயகமண்ணை வன்கவரும் முயற்சிகள் தொடர்கின்றன. தமிழீழக் கடற்றொழிலாளர்கள் தமது கடலில் கடலட்டை பிடிக்கவும் சங்கு குளிக்கவும் அனுமதிக்கப்படாமல் சிறிலங்காக் கடற்படையால் தடைசெய்யப்படுகிறார்கள். ஆனால், அதற்கான அனுமதியை நிற மீன்கள் பிடிப்பது என்ற போர்வையில் வரும் சிங்கள மீனவர்களுக்குச் சிறிலங்காக் கடற்படை வழங்கிவருகிறது. அவர்களுக்கு உயிர்வாயுக் குடுவைகளும் (Oxygen Cylinder) வழங்கி வருகிறார்கள் சிறிலங்காக் கடற்படையினர்.
இப்படியான சிங்களவர்களின் தமிழர் கடல் மீதும் கடற்கரையின் மீதுமான வன்கவர்விற்கெதிராகத் தமிழீழக் கடற்றொழிலாளர்களும் மக்களும் போராடினால், அது தனக்குச் சங்கடமான சூழலை உருவாக்கும் என்பதாலே டக்ளசு தேவானந்தா தமிழக கற்றொழிலாளர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து சரியான அரசியற் தெளிவுக்குள் தமிழீழக் கடற்றொழிலாளர் அமைப்புகளின் தலைமைகள் வந்துவிடக் கூடாதென்ற நோக்கோடு சூழ்ச்சி செய்கிறார்.
தமிழக மண்ணிலிருந்து இந்தச் சிக்கல் தொடர்பாக எழும் கோரிக்கைகள் மற்றும் குரல்களின் பொருத்தப்பாடுகள் எத்தன்மையது?
கச்சதீவை இந்தியா திரும்பப்பெற்றால் எல்லாச் சிக்கலும் தீர்ந்துவிடும் என்றாற்போல கூறுகிறார்கள். முதலில், கச்சதீவு இந்தியாவின் அப்பன் வீட்டுச் சொத்தல்ல. அது தமிழ்க் கடற்றொழிலாளர்களின் மரபுச் சொத்து. இன்றளவில், தமிழக- தமிழீழ உறவுப்பாலமாக அது இருக்கிறது. அது தமிழர்களின் நிலம். எனினும், இன்று தமிழ்நாடானது இந்திய நாட்டெல்லைக்குள் அடைபட்டுக்கிடப்பதனால் கச்சதீவை இந்தியா திரும்பப்பெற்றுத் தனதாக்கினால், மீன்வளம் நிறைந்த கச்சதீவிற்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் இழுவிசைப்படகுகள் சென்று இரட்டை மடிவலை, சுருக்கு மடிவலை போன்ற கேடான மீன்பிடிமுறைகளைப் பயன்படுத்தி கல், மண் என கடலின் அடிவரை துலாவி மீன்பெருக்கத்திற்கே வாய்ப்பில்லாமல் வளச்சுரண்டல் செய்து சில ஆண்டுகளில் அந்தக் கடலின் மீன்வளமும் முற்றாக அழிக்கப்பட்டு விடும். அப்படியிருக்க இது எப்படித் தீர்வாகும்?
இலங்கைக் கடற்பரப்பில் 5 கடல்மைல்கள் தொலைவிற்கு உட்சென்று மீன்பிடிக்கும் உரிமத்தைத் தமிழ்நாட்டுக் கடற்றொழிலாளர்களுக்கு சிறிலங்கா அரசு வழங்க வேண்டுமென இந்தியா அழுத்தங்கொடுக்க வேண்டுமெனத் தமிழக அரசு கோரிக்கை வைக்கிறது. இந்தக் கோரிக்கை அடிப்படையற்றது என்பதுடன், கொஞ்சத் தொலைவிற்குச் சுரண்டவிடு என்று கேட்கும் அறமற்ற கோரிக்கையாகவே இருக்கின்றது. அப்துல்கலாமும் கிழமைக்கு 3 நாள்கள் சுரண்டவிடு என்ற வகையிலான கோரிக்கையை முன்வைத்தார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். அப்படி அனுமதித்தால், சில ஆண்டுகளில் அந்தக் கடலும் மீன்வளமற்ற கடலாக மாறும். எனின், இது எந்தவகையான தீர்வு?
மேலும், தமிழ்நாட்டிலிருந்து எழும் தமிழுணர்வுக் குரல்களோ வெறுமனே இந்தச் சிக்கலைப் பூசி மெழுகி சிங்களக் கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் என்ற கோணத்தில் மட்டும் பரப்புரை செய்கின்றனர். இதில், தமிழீழ மற்றும் தமிழகக் கடற்றொழிலாளர்களின் அன்றாடச் சிக்கல் என்னவெனவும், இவ்விடயத்தில் தமிழ்த்தேசிய அரசியலின் அரசியற் சிக்கல் என்னவெனவும் ஆய்ந்தறிந்து நேர்மையுடன் இந்தச் சிக்கலை அணுகும் திறம் உணர்ச்சிக் கூப்பாடு போடுபவர்களிடம் இல்லை. தமிழ்த்தேசியம் ஆட்சியதிகாரத்தில் இல்லாமல் தமிழர் தேசங்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதாலே இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியவில்லை என்பதையும் இங்கு உணரத் தவறக்கூடாது.
இந்தச் சிக்கலைத்தீர்க்க என்ன செய்ய வேண்டும்?
இந்தச் சிக்கலின் அடிப்படைக் காரணமே தவறான மீன்பிடிமுறைகளினைத் தமிழ்நாட்டினைத் தளமாகக் கொண்டியங்கும் தரகு முதலாளிகளின் இழுவிசைப்படகுகள் மேற்கொள்ளத் தொடங்கியமையே எனலாம். இரட்டை மடிவலை, சுருக்கு மடிவலை போன்ற வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் போது மீன்குஞ்சுகள், முட்டைகள், கடற்படுக்கைகள், கல் மற்றும் உயிர்ச்சூழல் என எல்லாவற்றையும் கடலின் அடிவரை சென்று துலாவி அள்ளிவருவதால் கடல் வளங்குன்றி மீன்வளமற்ற பகுதியாகக் கடல் மாறுகிறது. தமிழ்நாட்டுக் கடல் எல்லையின் மீன்வளத்தை அழித்துவிட்டு இழுவிசைப் படகுகள் தமிழீழக் கடற்பரப்பிற்குள் நுழைந்து, தமிழீழக் கடற்றொழிலாளர்களின் சிறுபடகுகளிலிருந்து மீன்பிடிக்கும் வலைகளை அறுத்தெறிந்தும் தமிழீழக் கடல் வளங்களை அழித்தும் வரும் தமிழக இழுவிசைப் படகுகளின் வளவேட்டை அடாவடி தொடர்வதே இந்தச் சிக்கலின் அடிப்படைக் காரணம்.
உண்மையில், தமிழர் கடலில் தமிழ்ப் பழங்குடிகளாம் தமிழக மற்றும் தமிழீழக் கடற்றொழிலாளர்களுக்கு மரபுவழித் தொழிலுரிமை உண்டு. எனின், மரபுவழி மீன்பிடி முறையில் மீன்பிடிக்கும் உரிமை தமிழர் கடலில் நாட்டு எல்லைகளுக்கு அப்பாலும் உண்டு. ஏனெனில், தனுஸ்கோடியிலிருந்து 5 ஆம் தீடை தாண்டினாலே இலங்கைக் கடற்பரப்பு என்று இன்று சொல்லப்படும் கடற்பரப்பு வந்துவிடும். இராமேஸ்வரத்திலிருந்து 16 கடல்மைல் தொலைவில் எல்லை உள்ளது. எனவே, கடலெல்லை இவ்வளவு அருகாமையில் இருப்பதால், நாட்டுப்படகைப் பயன்படுத்தி மரபுவழி மீன்பிடிமுறைகள் மூலம் மீன் பிடிக்க நாட்டெல்லை கடந்து மரபெல்லையைக் கணக்கிட்டு அனுமதி வழங்கலாம். அவ்வாறான மீன்பிடிமுறையால் இருநாட்டுக் கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், மரபுவழி முறையிலிருந்து விலகிய மீன்பிடிமுறைகளுக்கு அந்த மரபுவழி உரிமை கிடையாது.
அத்துடன், தமிழ்நாட்டு மாநில அரசினால் கட்டுப்படுத்தக் கூடிய இழுவிசைப்படகுகளே கடல்வளத்தைத் துடைத்தழிக்கும் மீன்பிடிமுறைகளில் ஈடுபடுகின்றன. தமிழக மரபுவழிக் கடற்றொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் சுருக்குமடி வலையை 2007 ஆம் ஆண்டு தமிழக அரசு தடைசெய்ததோடு அதனை 2018 இல் சென்னை உயர்நீதிமன்றம் உறுதியும் செய்தது. ஆனால், 25- 30 இலட்சம் பெறுமதியான இந்த வலைகளைத் தடைசெய்தால், இதில் முதலிட்ட முதலாளிகளும் தமக்கான தரகுகளும் பாதிக்கப்படும் என்பதால், தமிழக அரசு கண்துடைப்பிற்குச் சட்டமியற்றிவிட்டு அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இந்தத் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவோரைத் தமிழக அரசு கைதுசெய்து, இந்தக் கடல்வளக்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், மீன்வளத்தைக் குன்றச் செய்யும் தவறான மீன்பிடிமுறைகளை மேலும் பட்டியலிட்டு, அதனைத் தமிழ்நாடு அரசு தடைசெய்து அதனை நேர்மையாகவும் கண்டிப்புடனும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மீன்வளக் கொள்ளையில் ஈடுபடும் இழுவிசைப்படகுகளை ஆழ்கடல் மீன்பிடிக் கலங்களாக மாற்றி அவற்றைப் பன்னாட்டுக் கடல் எல்லைக்குள் நெடுந்தொலைவு சென்று மீன்பிடிக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். வங்கக் கடலில் அதாவது கோடியக்கரைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் வடகிழக்கில் 200 கடல்மைல் தொலைவில் “பெட்ரோ பாங்க்” என்ற பகுதியிலும் தூத்துக்குடிக்கும் கன்னியாக்குமரிக்கும் இடையில் அதாவது தனுஸ்கோடியிலிருந்து 250 கடல்மைல் தொலைவில் “வெட்ஜ் பாங்க்” எனும் பகுதியிலும் மீன்கள் கூடுதலாகக் கிடைக்கும்.
எனவே, இந்தக் கடலுக்கும் அப்பால் சென்று 30- 40 நாள்கள் கடலில் தங்கி பல இலட்சம் பெறுமதியான மீன்களைப் பிடித்துவரும் ஆழ்கடல் மீன்பிடிமுறைக்குத் தமிழ்க் கடற்றொழிலாளர்கள் பழக்கப்படுத்தப்பட வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிக் கலங்களாக இழுவிசைப் படகுகளை மாற்றும் நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டு வந்தாலும், மானியங்கள் வழங்குவதில் நிலவும் இழுத்தடிப்புகள், வங்கிக்கடன் வழங்குவதில் காட்டும் இழுத்தடிப்புகள், ஆழ்கடல் மீன்பிடி தொடர்பான அறிவின்மை மற்றும் இவற்றால் விளையும் தயக்கங்கள் என்பனவற்றால் இது இன்னமும் நடைமுறைக்கு வருவதாகத் தெரியவில்லை. இதனை உடனே நடைமுறைப்படுத்தி இழுவிசைப் படகுகளைப் பாக்குநீரிணைப் பகுதி உட்பட்ட தமிழர் கடலில் மீன்பிடிப்பதிலிருந்து தடுக்க வேண்டும்.
இவையே, இந்தச் சிக்கலிற்கான தீர்வாக இப்போதைக்கு அமையக் கூடியன.
-மறவன்-
2020- 11- 30
Be the first to comment