ஈழத்தமிழரின் கனதியான கடந்தகாலம் – தம்பியன் தமிழீழம்

வரலாறென்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு இயக்கம் என்பதால் எமது அரசியல் பற்றித் தொடர் மீட்டல்கள் செய்தேயாக வேண்டியுள்ளது. எப்போதும் எதையுமே தொடக்கத்தில் இருந்து சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். எனினும், ஈழத்தமிழரின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தமிழ்த் தேசியத்திற்கான வரலாற்றுக் கடமையானது அடுத்த தலைமுறையினரின் கைகளுக்குச் சென்றுவிட்டதான வரலாற்று இயங்கியலை உவத்தல் காய்தலின்றி நோக்கும் திடத்துடன், ஈழத்தமிழரின் கடந்தகாலம் பற்றி ஒரு சுருக்கெழுத்துடன், கடந்த வரலாற்றின் மிகத் தெளிந்த பாடத்தை மீட்டுப்பார்த்தலை இப்பத்தி முதற்கண்ணாகக் கொள்கின்றது.

வரலாற்றுக் காலந்தொட்டு இலங்கைத்தீவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சிங்களவர்களும் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் தமிழர்களும் வாழ்ந்து, ஆட்சி புரிந்து வருகின்றனர். தமக்கேயுரிய இன, மொழி, மத பண்பாட்டு அடிப்படையில் தமிழர்கள் உயரிய நெறியுடன் தமது மண்ணில் அறவாழ்வு நடத்தி வந்தனர். ஐரோப்பியரின் வன்கவர்வுடன் தமிழரின் வாழ்விடத் தொடர்ச்சி கணக்கெடுக்கப்படாமல் அவர்களின் நிருவாக வசதிக்கேற்றாற் போல ஆட்சிமுறைமை மாற்றமடைந்தது. சிங்கள தேசமானது அநாகரிகதர்மபால போன்றோரால் ஒரு அரசியற் சமூகமாகத் தன்னை வெற்றிகரமாகக் கட்டியமைக்கும் வரை, கொழும்புவாழ் தமிழ் மேட்டுக் குடிகள் அவர்களின் நலன்கட்காகத் தமிழரின் அரசியலைக் குத்தகைக்கு எடுத்து அதன் மூலம் அதிகார நயங்களை அடைந்து வந்தனர். சிங்கள தேசியவாதமானது அரசியற்கட்டுறுதி பெறத் தொடங்கியதன் நேரடித்தாக்கத்தை இந்தக் கொழும்புவாழ் மேட்டுக்குடிகள் உணரத் தலைப்படும்வரை, தமிழர் தேசத்தின் நிலவுகையைப் பற்றியும் அதன் ஆட்சியதிகாரத்தைப் பற்றியும் சிந்தையில் நிறுத்தாமல், அதிகாரத்தில் பங்கு கேட்கும் அவர்களின் மேட்டுக்குடி ஆதிக்கப் போக்குத் தொடர்ந்த வண்ணமே இருந்தது.

சிங்கள தேசியத்தின் எழுச்சியால் தமது அதிகார அரசியல் ஆட்டம் காணுவதை உணர்ந்த கொழும்புவாழ் தமிழ் மேட்டுக்குடிகளின் பேராளர்களில் ஒருவரான சேர். பொன்.அருணாசலம், அவர்களது வர்க்க நலன்கட்காகவேனும் 1920 இல் தமிழர்தேசியவாத எழுச்சியைத் தமது அரசியலாக்க முனைந்தார். 1920 இல் அவர் காலமாக அந்தத் தேசியவாத எழுச்சியும் தேக்க நிலைக்கு வந்துவிட்டது.

 1947 இல் ஆங்கிலேயர் இலங்கைக்குப் பெயரளவிலான‌ சுதந்திரத்தை வழங்கிவிட்டுப் போகும் நோக்கில் வடிவமைத்த சோல்பரி அரசியலமைப்பானது சிங்கள மேலாதிக்கத்திற்கு எவ்வளவு எத்துணை ஆழமாக அடித்தளமிடுகின்றது என்று கோடிட்டுக் காட்டி முழுமூச்சாக எதிர்த்து 50- 50 பிரதிநிதித்துவம் கேட்ட ஜி.ஜி. பொன்னம்பலம் பின் இளகுநிலை ஒத்துழைப்பு என்பதாகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இலங்கையின் முதற்பிரதமராகப் பதவியேற்ற டி.எஸ் சேனநாயக்காவுக்குத் தன‌து ஆதரவை வழங்கி அவரது அமைச்சரவையில் 1948 இல் அமைச்சுப் பதவியையும் பெற்று முழுத் தமிழர்களையும் முட்டாள்களாக்கினார்.

இலங்கைக்குப் பெயரளவிலான‌ சுதந்திரம் கிடைத்ததும் முதற்கட்டத் தமிழினப்பகை நடவடிக்கையாக மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறிப்பதன் மூலம் இலங்கைத்தீவில் தமிழர்களின் இன விழுக்காட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் டி.எஸ் சேனநாயக்காவின் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவழித்து ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் நீக்க முடியாத கறையை ஜி.ஜி.பொன்னம்பலம் என்ற கொழும்புவாழ் மேட்டுக்குடி அரசியல்வாதி ஏற்படுத்தினார். இதனால் வெட்கமும் அவமானமும் சீற்றமுமுற்ற தமிழ் அரசியற் தலைமைகள் 1949 இல் பின்னாளில் தமிழரசுக் கட்சி என்று பெயர்மாற்றத்திற்குட்பட்ட சமஷ்டிக் கட்சியைத் (Federal Party) தந்தை செல்வா தலைமையில் தொடங்கினார்கள்.

1952 இல் திருகோணமலையில் மாநாட்டைக் கூட்டிய தந்தை செல்வா தலைமையிலான தமிழ் அரசியற் தலைமைகள் தமிழர்கட்கான கூட்டாட்சி (சமஷ்டி) அரசுமுறையையும் அதற்கான தமிழரின் தலைநகராகத் திருகோணமலையையும் அறிவித்துத் தீர்மானம் இயற்றியதுடன் தமிழர்தேசமானது தனது வாழிடத்தொடர்ச்சியை அரசியல் வடிவத்திற்குக் கொண்டு வந்து, தமிழ்த்தேசிய அரசியலிற்கு அடித்தளமிட்டனர்.

1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் எஸ்.டபிள்யு .ஆர். டி. பண்டாரநாயக்காவால் கொண்டு வரப்பட்ட அவலத்தை எதிர்த்து காலிமுகத்திடலில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தலைவர்களின் மீது சிங்களக் காடையர்களின் வன்முறையைச் சிங்கள அரசு ஏவியதோடு மட்டும் நின்றுவிடாது, கல்லோயாக் குடியேற்றத் திட்டம் என்ற சிங்களமயமாக்கல் திட்டச் செயற்பரப்பில் இங்கினியாகலை என்ற இடத்தில் வாழ்ந்த 150 தமிழர்கள் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டதோடு, பதவியாவில் 400 தமிழ்க் குடும்பங்கள் உயிருடன் வெட்டித் துரத்தப்பட்டார்கள். இவ்வாறு மிகவும் கோரமாகத் தமிழினவழிப்பு நடவடிக்கைகளானவை சிங்கள‌ அரசினால் அரங்கேற்றப்படுகையில், 1956 இல் பண்டா–செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜே.ஆர். ஜெயவர்த்தன கண்டி நோக்கி நடைப்பயணம் சென்று ஏற்கனவே கொதித்துப் போயிருந்த சிங்கள இனவெறிக்கு மேலும் சூடேற்றினார்.

நிலவியல் அமைவிட‌ அடிப்படையிலும் வரலாற்று அடிப்படையிலும் தமிழ் – சிங்கள ஆட்சியுரிமைப் பகுதிகளிற்கிடையிலான எல்லைகளாக அமைந்திருந்த நிலப்பகுதிகளை அச்சாகக்கொண்டு தமிழர் நிலங்களை வன்கவரும் திட்டமான கல்லோயாத் திட்டத்தை டி.எஸ் சேனநாயக்கா தொடங்கி வைக்க, அதனை அவரின் பின்வந்த ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளரும் மெத்தக் கவனத்துடனும் மொத்த இனவெறியுடனும் எடுத்துச் சென்று தமிழர்தாயக நிலங்களை வன்கவர்ந்து அவற்றைச் சிங்களப் பகுதிகளுடன் இணைத்து, புதிதாக சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.

1970 இல் சிங்கள இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து சிறிமா ஐக்கிய முன்னணி அரசு அமைத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததைத் தொடர்ந்து, கல்வியில் தரப்படுத்தலை அறிமுகப்படுத்திக் கல்வியில் தமிழர்களின் மேலாண்மையைத் தகர்ப்பதற்கு முழுமுனைப்புடன் சிறிமாவின் சிங்கள அரசு செயலாற்ற, இதனால் கொதித்துப் போன தமிழ் இளையோர்கள் 1970 இல் தமிழ் மாணவர் பேரவையை நிறுவினர். அதைத் தொடர்ந்து 1972 இல் முதலாம் குடியரசு அரசியலமைப்பைக் கொண்டுவந்து அதில் சோல்பரியில் குறிப்பிட்டிருந்த சிறுபான்மையினரின் பாதுகாப்புத் தொடர்பான 29 ஆவது சரத்தையும் நீக்கி, சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உவப்பான அரசியலமைப்பை உருவாக்கி சிலோன் என்ற பெயரை சிங்கள வெறியைத் தூண்டும் வகையிலான சிறிலங்கா என்ற பெயராக மாற்றம் செய்து தமிழர் தமக்கான தன்னாட்சித் தேசத்தை அமைக்க வேண்டிய தேவையைப் பெரும்பாலும் எல்லாத் தமிழர் மனங்களிலும் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையிலான சிங்கள அரசு உணரச் செய்தது.

 தமிழினம் தனது சொந்த மண்ணில் தடயம் இல்லாமல் சிதைத்தழிக்கப்படப் போகும் பேரவலத்தை உணர்ந்த தமிழ்த் தலைமைகள், 1972 இல் திருகோணமலையில் மாநாட்டைக் கூட்டி தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை நிறுவினர். தொடர்ச்சியாகத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் ஆதரவில் தமிழர் இளையோர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

1974 இல் தனிநாயகம் அடிகளாரின் ஒருங்கிணைப்பில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது. மாநாட்டின் இறுதி நாளில் சிங்கள இனவெறி அரசு, அங்கு கூடியிருந்தோர் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கொலை வெறிக் குண்டாந்தடியடி நடத்தியது. இந்தக் கோர நிகழ்வுடன், கருவியேந்திய‌ மறவழிப்போரே தமிழினத்தை சிங்களப் பேரினவாதக் கொலைவெறி அரசிலிருந்து காப்பாற்ற எஞ்சியிருக்கும் கடைசி வழி எனத் தமிழ் இளையோர்களும் மனச்சான்றுள்ள‌ மக்களும் உணரத் தலைப்பட்டனர். இதன் விளைவாக, தமிழ் இளையோர் பேரவையிலிருந்து ரெலோ என்ற விடுதலைப் போராட்ட இயக்கம் உருவானது. தொடர்ச்சியாகப் புதிய தமிழ்ப் புலிகள் என்ற மறவழி விடுதலைப் போராட்ட‌ இயக்கத்தை மேதகு. பிரபாகரன் அவர்கள் நிறுவினார். இலண்டனில் கல்வியைத் தொடர்ந்த முற்போக்குப் பார்வை கொண்ட இளையோரும் ஒன்றுகூடி ஈழப் புரட்சிகர அமைப்பாளர் (EROS) எனும் அமைப்பை உருவாக்கி தமது செயற்பாடுகளை 1975 களில் ஈழ மண்ணை நோக்கி நகர்த்தினர். 1976-05-05 அன்று புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றம் செய்தார் அதன் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள். இவ்வாறு தமிழரின் அறப் போராட்டங்கள் சிங்கள இனவெறியில் இருந்து தமிழரைக் காப்பாற்றாது என்று தூலாம்பரமாகி விடத் தமிழ் இளையோர்கள் மறப்போரிற்கான செயற்றிட்டங்களில் இறங்கி விட்டார்கள். சிங்களத்தின் பிடிக்குள் சிக்கக்கூடாது என்ற திடத்துடன் தமிழ் மாணவர் பேரவையைச் சேர்ந்த சிவகுமார் சயனைட் அருந்தி 1974-07- 05 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தமிழரின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் விடுதலைபெற்ற‌, இறைமையுடைய, சமயச்சார்பற்ற, சமதர்ம தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்கலும், இலங்கைத்தீவில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாதது என 1976-05–14 அன்று வட்டுக்கோட்டையில் தீர்மானம் இயற்றி தமிழீழக் கோரிக்கையைத் தமிழ் அரசியற் தலைவர்கள் முன்வைத்தார்கள். இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தமது செயலாக்க உறுதிமொழியாக வரிந்த தமிழ் இளையோர்களின் மறவழி விடுதலை இயக்கங்கள் தாயகத்தையும் தமிழ்நாட்டையும் தளமாகப் பயன்படுத்தி, கிடைத்தவற்றைக் கொண்டு தம்மைக் கட்டியமைத்தார்கள்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் பேரறிவிப்புச் செய்யப்பட்ட‌ தனியரசுக் கோரிக்கைக்கான மக்களாதரவைக் காட்டுவதற்காகவே தாம் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் பங்கேற்பதாகக்  கூறிக்கொண்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம், அந்தத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை ஈட்டி சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரான பின்பு, ஜே.ஆர் ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை 1981 இல் ஏற்றுக்கொண்டு தமிழீழத் தனியரசு நோக்கி முன்னேறிய ஈழத்தமிழர் அரசியலை பொறுப்புணர்வில்லாமல் பின்தள்ளி தமிழ்த்தேசிய விடுதலைப் பயணத்தில் ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்தினார்.

    ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர த‌ன்னால் எதுவும் செய்ய முடியும் என்றளவில் 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பை ஏற்படுத்தி அனைத்து அதிகாரமும் படைத்த சிங்கள அரச தலைவராகப் பதவியேற்ற ஜே.ஆர். ஜெயவர்த்தன தமிழினவ‌ழிப்பை அனைத்துத் தளங்களிலும் ஆர்முடுக்கி விட்டார். அதைத் தொடர்ந்து, 1979 இல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிறைவேற்றி, அப்பாவித் தமிழ் இளையோர்களை வகைதொகையின்றி விசாரணையில்லாமல் சிறையிலடைத்தார். தொடர்ந்து 1981 இல் தமிழரின் அறிவியற் சொத்தாகவும் வரலாற்று ஆவணக் காப்பகமாகவும் திகழ்ந்த யாழ் நூலகத்தை அதில் இருந்த 95,000 இற்கும் மேற்பட்ட‌ கிடைத்தற்கரிய நூல்களுடனும் ஓலைச் சுவடிகளுடனும் சேர்த்து ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான சிங்கள அரசு திட்டமிட்டு எரித்துச் சாம்பலாக்கியது. இவற்றால் கொதிப்படைந்த தமிழ் இளையோர்கள் தமது மறவழிப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி சிங்கள அரச படைகளை எதிர்த்துப் போராடினர். இதன் தொடர்ச்சியாக 1983 இல் யாழ் திருநெல்வேலியில் வைத்துத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்களின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற புலிகளின் அதிரடித் தாக்குதலில் சிங்களப் படையினர் 13 பேர் கொல்லப்பட்டதைக் காரணங்காட்டி இலங்கைத்தீவெங்கிலும் 1983 ஆடி மாதம் தமிழர் மீது இனவழிப்பு வன்முறை சிங்கள அரசினால் நன்கு திட்டமிடப்பட்டு ஏவிவிடப்பட்டது. இதில் 2000 க்கு மேற்பட்ட தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட, பல பெண்கள் வன்புணர்விற்குட்பட, குழந்தைகள் கொதிக்கும் எண்ணைய்த் தாச்சியில் போடப்பட, பல மில்லியன் தமிழர்களின் உடைமைகள் அழிக்கப்பட, 1 இலட்சம் பேர் சொந்த நாட்டில் ஏதிலிகளாக, 40,000 பேர் கடல் கடந்து ஏதிலிகளாகினர்.

இதையடுத்து, அரசியலமைப்புச் சட்டத்தின் 6 ஆவது சரத்துப்படி சிறிலங்காவின் ஐக்கியத்தையும் நிலபுல‌ ஒருமைப்பாட்டையும் ஏற்று உறுதிமொழி வழங்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நாடாளுமன்றப் பதவிகளை இழக்க நேரும் என்றாக, அதனை நிராகரித்து விட்டுத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் இந்தியாவிற்குத் தஞ்சம் புகுந்தனர். மறவழிப் புரட்சிகர இயக்கங்களின் ஒன்றிணைந்த செயற்பாடு தமிழீழ மீட்சிக்குத் தேவையென்பதை உணர்ந்து ஈழத் தேசிய விடுதலை முன்னணி (ENLF) என்ற அமைப்பை 1985 இல் மறவழிப் போராட்டத் தலைமைகள் உருவாக்கினர்.

சிங்கள அரசினால் நன்கு திட்டமிடப்பட்டுத் தமிழர்தாயக நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட‌ சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கப் போராளிகள் மேற்கொண்ட பதில் நடவடிக்கைகளிற்கு அஞ்சி போராளி இயக்கங்களுடன் பேசுவதற்கு சிறிலங்கா அரசு உடன்பட‌, இந்தியாவின் ஏற்பாட்டில் போராளி இயக்கங்களும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரும் இணைந்து சிங்கள அரசுடன் 1985 யூன் மாதம் திம்புவில் பேச்சுகளை நடத்தின. இதில் தமிழர்களை ஒரு தேசிய இனமாகவே ஏற்க மறுத்த சிங்கள அரசானது திம்புவில் நடந்த பேச்சுகளைப் பொருளற்றதாக்கியது.

1976 இலிருந்து லெபனானில் விடுதலைப் போராளிகள் பயிற்சிபெறத் தொடங்கியிருந்தாலும், பெருமளவான இளைஞர்களுக்கு 1986 வரையில் இந்தியா அதன் உளவு அமைப்பான றோ வின் கண்காணிப்பில் பயிற்சியை வழங்கியது. இந்திய மேலாதிக்கக் கனவின் உச்சத்தில் நின்று தேசிய இனங்களினதும் தேசமாக வளர்ந்த தேசிய இனங்களினதும் விடுதலையை அடியொட்ட வெறுக்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் உளவு அமைப்பின் நரித்தனங்களின் நரபலி வேட்டையிலிருந்து தம்மைக் காக்கத் தவறிய விடுதலை அமைப்புகள் இந்தியாவின் நயவஞ்சக வலையில் வீழ்ந்து அதன் கூலிப்படையாகி ஈற்றில் தமிழின விரோத நடவடிக்கைகளில் இறங்கியமை தமிழரின் வாழ்வியல் வலியைப் பன்மடங்கு துயர் நிறைந்ததாக்கியது. இந்தியாவின் மேலாதிக்க நலன்கட்காகத் தமிழர் பகடைக்காயாக்கப் படுகின்றனர் என்ற தெளிவின் அடிப்படையில் நின்று இந்தியாவை எதிர்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பு, இந்தியாவின் கூலிகளாகியும் மக்கள் விரோதிகளாயும் ஊழிற் பெருவலியாய் சோரம் போன அமைப்புகளைத் தடைசெய்து களத்தை விட்டு அகற்றியது.

தமிழீழ தாயகத்தில் தனித்து நின்று மக்களோடு மக்களாகப் போராடும் விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் “விடுதலை நடவடிக்கை” (Operation Liberation) என்ற பெயரில் வடமாரட்சியை நோக்கி ஜே.ஆர். தலைமையிலான சிங்கள அரச படை 1987 ஆம் ஆண்டு மே மாதம் படையெடுத்தது. பட்டினிபோட்டுப் பணிய வைக்க நினைத்த சிங்கள அரசுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பாடம் கற்பித்தனர். 1987-07-04 அன்று “பூமாலை நடவடிக்கை” என்ற பெயரில் இலங்கைத்தீவு மீதான தமது மேலாண்மையை உறுதிசெய்வதற்காக‌ இந்தியாவானது தமிழ் மக்களிற்கு உணவுப் பொட்டலங்களை வானிலிருந்து விண்ணூர்திகள் மூலமாக‌ வழங்கியது. கடைசியாக கரும்புலி கப்டன் மில்லர் நெல்லியடிப் படைத்தளம் மீது 1987-07-05 அன்று நடத்திய தற்கொடைத் தாக்குதலுடன் கிலி கொண்ட ஜே.ஆர் தலைமையிலான சிங்கள அரசு இலங்கை– இந்திய ஒப்பந்தத்திற்கு உடன்பட்டு அதன் மூலம் தமிழரின் தமிழீழக் கோரிக்கையைத் தவிடு பொடியாக்கக் களத்தில் இறங்கியது.

1987-07-29 அன்று இலங்கை–இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஈழத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த ஒப்பந்தத்தில் தமிழர்கள் ஒரு தரப்பாகவேனும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இந்திய மேலாதிக்க விரிவுக் கனவுடன் ராஜீவ் காந்தியும் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழிக்கும் நோக்குடன் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

ஒப்பந்தம் கைச்சாத்திட்டு அடுத்த நாளே இந்திய வல்லாதிக்க அரசுப் படை இந்திய அமைதிப் படை எனும் பெயரில் தமிழீழ மண்ணில் காலடி எடுத்து வைத்தது. இந்தியாவின் வருகையால் ஏற்பட்ட ஆபத்தை நன்குணர்ந்த மேதகு பிரபாகரன் அவர்கள் 1987-08-04 அன்று சுதுமலையில் மக்களைச் சந்தித்து வரலாற்றுப் புகழ்மிக்க பேரறிவிப்பைச் செய்தார். “போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் தமிழீழம் மீட்கும் எமது போராட்ட இலட்சியத்தில் மாற்றம் இல்லை” எனத் தமிழ் மக்களிற்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் உறுதியளித்தார். கடலில் பயணம் செய்த தளபதிகள் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட‌ 12 வேங்கைகளை 1987-08-13 அன்று ஒப்பந்தத்தை கணக்கெடுக்காமல் சிறிலங்கா கடற்படை கைதுசெய்ய, இந்தியாவும் ஒப்பந்தத்தின் படியான தனது பொறுப்புகளைத் தட்டிக்கழித்து மெத்தனப் போக்குடன் இந்தக் கைதை வேடிக்கை பார்த்திருக்க‌, அவர்கள் குப்பி கடித்து தாம் வரிந்த இலட்சியத்தின் படி வீர காவியமானார்கள். தொடர்ந்து சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தமிழின விரோத நடவடிக்கைகள் இடம்பெற்ற வண்ணம் இருக்க, ஐந்து விடயங்கள் அடங்கிய‌ கோரிக்கையை முன்வைத்து யாழ். அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்த லெப்.கேணல் திலீபன் 1987-09-26 முதல் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் 265 மணிநேரம் உண்ணாநோன்பிருந்து “மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலை வெளிப்பாட்டுடன் ஈகச் செம்மல் ஆனார்.

விடுதலைப் புலிகளைப் பணிய வைக்க முடியாது என்று புரிந்துகொண்ட இந்தியப் படை 1987-10-10 அன்று விடுதலைப் புலிகளிற்கெதிராக முழுஅளவிலான போரைப் பேரறிவிப்புச் செய்து தமிழரிற்கெதிரான போரினை நடத்தியது. ஈழமுரசு, முரசொலி, நிதர்சனம் போன்ற ஊடகங்களை அடித்தொழித்துத் தனது தமிழர்கள் மீதான வன்கொடுமை பற்றிய செய்திகள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டது இந்தியக் கொலை வெறிப் படை. மக்களுடன் மக்களாக நின்று தீரத்துடன் போராடிய விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிப் பெரு நிலப்பரப்பை நோக்கி நகர்ந்தனர்.

1988 இல் தேர்தல் நடத்தி வரதராஜப் பெருமாலை முதலமைச்சராக்கிய இந்தியா, தனக்கு கூலிப்படையாக இருப்பதற்கு தமிழீழ இராணுவம் என்ற பெயரில் ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கி தமிழின விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முனைந்தது. ரணசிங்க பிரேமதாச சிங்கள அரச தலைவராக‌ 1989 சனவரி மாதம் பதவியேற்றதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளினுடன் பேச்சுகளை நடத்தி இந்தியப் படையை இலங்கையை விட்டு அகற்ற முனைப்புடன் செயற்பட்டார். இந்தியாவின் ஆட்சிக் கட்டிலில் ஏற்பட்ட மாற்றத்தாலும், உலகின் 4 ஆவது வலுவான இராணுவமானது, தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் மயப்பட்ட போராட்டத்தினால் வாங்கிய அடியாலும் 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இந்தியப்படை தமிழினம் மீதான தனது கொலைவெறியாட்டத்தை ஆடிவிட்டு இலங்கைத்தீவை விட்டகன்றது. இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்குப் பதிலடியாக வரலாறு 1991-05-21 அன்று ராஜீவ்காந்தி சாவு என்ற செய்தியாக தமிழ் மண்ணில் வைத்துப் பதிந்தது.

இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை இந்தியா தடை செய்ய, தமது வலுவான‌ தளமான தமிழ்நாட்டை இழந்து தமிழ் மக்களின் மறவழிப் போராட்டமானது எவரின் உதவியுமின்றித் தனித்து விடப்பட்டது. பின்னர், 1990-07-10 அன்று முஸ்லிம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டமைமையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள காவல்துறைக்கும் ஏற்பட்ட முறுகல் வடக்குக் கிழக்கு எங்கும் விரிவடைந்து இரண்டாம் கட்ட ஈழப்போராக வெடித்தது. தென்தமிழீழத்தில் 1990 களில் வகைதொகையின்றி தமிழர்கள் கொத்துக் கொத்தாக வெட்டப்பட்டும் சுடப்பட்டும் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டும் கொல்லப்பட்டதுடன், தமிழர் தம் நிலங்களிலிருந்தும் பிடுங்கியெறியப்பட்டார்கள். சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையுடன் முஸ்லிம்களை அதிகமாகக் கொண்ட ஊர்காவற்படையும் இணைந்து தமிழர்களை கொன்றொழித்துக் அவர்களது வாழ்விடங்களை வன்கவரும் தமிழினவழிப்பு நடவடிக்கைகளானவை தென்தமிழீழத்தில் தொடர்ந்தன. கல்முனை, திராய்க்கேனி, வீரமுனை, வந்தாறுமூலை, சத்துருக்கொண்டான், கொக்கட்டிச்சோலை, மயிலந்தனை, பள்ளியவாடி, வண்ணாத்தியாறு, புனாணை, புல்மோட்டை என தமிழினவழிப்புப் படுகொலைகள் சிங்கள அரச படுகொலைகளால் மேற்கொள்ளப்பட்டன.

1994-08-19 அன்று ஆட்சிக்கட்டில் ஏறிய நாயக்கச் சூழ்ச்சியின் வாரிசான சந்திரிக்கா அம்மையார் தன்னைச் சமாதனப் புறாபோல் பாசாங்கு செய்து 1994 ஒக்டோபரில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை நடத்தி 6 மாதமாக எந்தவித முன்னேற்றமும் இன்றி அமைதிப் பேச்சுகளை இழுத்தடித்துப் பாரிய போரிற்கான ஒழுங்குகளைச் செய்தார். “ரிவிரச” என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு யாழ் குடாநாட்டை விடுதலைப் புலிகளிடம் இருந்து சிறிலங்காவின் அரசபடைகள் கைப்பற்ற‌, விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து இளையோர்களும் பெரும்பாலான மக்களும் வன்னிப் பெருநிலப்பரப்பை நோக்கி நகர்ந்தனர்.  1996-07-18 அன்று முல்லைத்தீவு இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் ஓயாத அலைகள்– 1 என்று பெயரிட்ட அதிரடி நடவடிக்கை மூலம் கைப்பற்ற, அதற்குப் பதிலடி தருவதாக நினைத்துக் கொண்டு சந்திரிக்காவின் சிங்களப் படைகள் சத்ஜெய என பெயரிட்ட இராணுவ வன்கவர்வு நடவடிக்கை மூலம் பரந்தனையும் கிளிநொச்சியின் சில பகுதிகளையும் கைப்பற்றியது. பின் வன்னியை வ‌ன்வளைப்புச் செய்ய ஜெயசிக்குறு என்ற பெயரிட்டு 1997-05-13 அன்று சிறிலங்காப் படைகள் தொடங்கிய இராணுவ நடவடிக்கை, விடுதலைப் புலிகளின் வீரஞ்செறிந்த முறியடிப்புத் தாக்குதல்களால் ஏற்பட்ட இழப்புகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 1998-12-04 அன்றுடன் முடிவுக்கு வந்தது.

ஓயாத அலைகள்– 2 என்று பெயரிட்டு 40 மணி நேர உக்கிர தாக்குதல் மூலம் கிளிநொச்சியை மீட்ட விடுதலைப் புலிகள் ஓயாத அலைகள்– 2 என்று பெயரிட்ட மண்மீட்பு நடவடிக்கையில் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, அம்பலகாமம், மாங்குளம் போன்ற இராணுவ முகாங்களைத் தாக்கி அழித்தனர். சிங்கள அரச படைகள் 2 1/2 ஆண்டுகளாக‌ சத்ஜெய, ஜெயசிக்குறு, ரணகோச என பெயரிட்டு நடத்திய கொலை வெறி இராணுவ நடவடிக்கைகளில் வன்கவரப்பட்ட‌ நிலங்களைச் சில நாள்களில் மீட்டெடுத்து, தமிழரின் மறத்தினை வன்னி மண்ணில் வைத்து உலகிற்குக் காட்டினார்கள் விடுதலைப் புலிகள். தொடர்ந்து 2000-05-26 அன்று ஆனையிறவுப் பெரும் இராணுவத்தளம் மீது போர் தொடுத்த புலிகள் 2000-06-23 அன்று ஆனையிறவை மீட்டெடுத்தனர். விடுதலைப் புலிகளின் போரியல் வேகத்தைக் கண்டு பீதியுற்ற வல்லாதிக்க உலகு, அமைதிப் பேச்சுகள் என்ற போர்வையில் சூழ்ச்சியாலும் மிரட்டலாலும் தமிழரின் விடுதலைப் போரை முடக்கிவிடும் கணக்குடன் அமெரிக்காவின் இன்னொருமுகமான நோர்வே மூலம் விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழீழம் வந்தது. உலகிற்கு நல்லெண்ணத்தைக் காட்டும் இராசதந்திர முனைப்பாக விடுதலைப் புலிகள் ஒருதலையாக‌ப் போர் நிறுத்தம் செய்தனர். எனினும் 12,000 சிங்கள இராணுவத்துடன் 2001-08-25 அன்று “அக்கினிகோலா” என்ற இராணுவ நடவடிக்கையை ஆனையிறவைக் கைப்பற்றும் நோக்குடன் தொடங்க, அந்த முயற்சி விடுதலைப் புலிகளின் வீரஞ்செறிந்த முறியடிப்புத் தாக்குதல்களால் தவிடுபொடியாக்கப்பட்டது. தொடர்ந்து 2001-07-24 அன்று கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தைத் தகர்த்த விடுதலைப் புலிகள் 500 கோடி பெறுமதியான‌ பொருண்மிய அழிவை ஒடுக்கும் சிங்களதேசத்திற்கு ஏற்படுத்திச் சிங்களக் கொட்டத்தை முடக்கிப் போட்டனர். இதனால் கிலியுற்ற நரித்தனம்மிக்க மேற்குலக அடிவருடியான‌ ரணில் 2001-12-05 அன்று நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிப் பிரதமராகிய பின்பு, நோர்வேயின் பக்கத்துணையுடன் 2002-02-22 அன்று விடுதலைப் புலிகளுடன் அமைதி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.

தொடர்ந்து 2002-04-10 அன்று அனைத்துலக ஊடகவியலாளர்கள் சந்திப்பைச் செய்த விடுதலைப் புலிகளின் தலைவர், அந்தச் சந்திப்பில் விடுதலைப் புலிகளின் கொள்கையுறுதியை உலகிற்குப் பறைசாற்றினார். அப்படியே, 2002 நவம்பரில் பாங்கொக்கில் அமைதிப் பேச்சுகள் தொடங்க, அதைத் தொடர்ந்து ஒஸ்லோவில் நடந்த உதவி வழங்கும் மாநாட்டில் 7 கோடி அமெரிக்க டொலர்களை வளர்ச்சித் திட்டங்கள் என்ற போர்வையில் தமிழர்தாயக நிலைப்பரப்பில் முதலிடுவதன் மூலம், தமிழரின் விடுதலைக் கனவை மழுங்கடிக்க உலகம் முனைந்தது.

 2003 நவம்பரில் தன்னாட்சி அதிகார அவையை விடுதலைப் புலிகள் கோரி நிற்க, 2004-02-07 அன்று தனது நிறைவேற்று சனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்தார் சந்திரிக்கா அம்மையார். 2004-12-26 அன்று ஏற்பட்ட‌ ஆழிப்பேரலை அவலத்தைத் தொடர்ந்து 2005 நவம்பரில் சிங்கள இனவெறிக் கும்பலாகிவிட்ட ஜே.வி.பி உடனும் தீவிர சிங்கள இனவெறிக் கட்சிகளுடனும் கூட்டு வைத்து சந்திரிக்கா மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி மகிந்த ராஜபக்சவை அரசுத் தலைவராக்கினார்.

இதைத் தொடர்ந்து, இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்பட்ட‌ 13 ஆவது திருத்தச் சட்டமும் 1987 இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் படி இணைக்கப்பட்ட வடக்கு– கிழக்கு இணைப்பும் செல்லுபடியாகாது என ஜே.வி.பி உச்சநீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்து அதில் வெற்றி கண்டது. தமிழர்தாயகத்தில் முழு அளவிலான தமிழினவழிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிட்டவாறே மகிந்த ராஜபக்ச புலிகளுடன் பேசவென நோர்வேயின் உதவியை நாடினார். 2006 பெப்ரவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஜெனிவாவில் நடந்த இப்பேச்சுக‌ள் மூடிய “ஏ-9” நெடுஞ்சாலையைத் திறக்க மறுத்த மகிந்தவால் வழமைபோல தோல்வியைத் தழுவ, தமிழர் தாயகத்தை முற்றாக வ‌ன்வளைத்து ஒரு இனவழிப்புப் போரை மேற்கொள்ளக் கங்கணங்கட்டிச் செயற்பட்ட மகிந்த ராஜபக்சவின் இனவெறிச் சிங்கள அரச இயந்திரத்தையும் அதன் இராணுவத்தையும் தாங்கிப்பிடித்து, உடன்நின்று உந்தித் தள்ளும் நாடுகளாக இந்தியா, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள், சீனா, பாகிஸ்தான், ரஸ்யா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளிட்ட நாடுகள் கூட்டாகத் தமிழினவழிப்புப் போரில் பங்கெடுக்க‌, தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். 2006-08-28 அன்று மாவிலாற்றில் போரைத் தொடங்கிய‌ மகிந்தவின் சிங்கள அரச படைகள், வகை தொகையின்றி மக்களைக் கொன்றவாறு உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் தமிழர் தாயகத்தை வன்கவர்ந்து தமிழின அழிப்பு என்ற விடயத்தில் கங்கணம் கட்டிச் செயற்பட்டு வந்தது.

 மகிந்த அரச தலைவராகிய பின்னர் திருகோணமலைப் படுகொலைகள், அல்லைப்பிட்டி, பேசாலை தேவாலயம், மூதூர், செஞ்சோலை, வாகரை, தாண்டிக்குளம், இலுப்பைக்கடவை, முரசுமோட்டை, முல்லைத்தீவு, தருமபுரம் மருத்துவமனை, புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், உடையார்கட்டு மருத்துவமனை, மூங்கிலாறு, மாத்தளன், புதுமாத்தளன், தேவிபுரம், வள்ளிபுனம், ஆனந்தபுரம், இரணைப்பாலை, அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளியவளை போன்ற இடங்களில் சுட்டும் வான் குண்டுத்தாக்குதல்களாலும், எறிகணைகளாலும் பாரிய தொடர்ச்சியான படுகொலைகளை சிங்கள அரசு செய்து தமிழர்களை இனவழிப்புக்குள்ளாக்கி வந்தது.

தமிழீழத் தனியரசு என்ற கொள்கையில் சற்றேனும் பின்வாங்காமல், எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாமல், வரிகளில் வரித்து விட முடியாத ஈகங்களைச் செய்து தீரத்துடன் போராடி உலகையே வியக்க வைத்த தமிழர்களின் திகில் நிறைந்த மறவழிப்போர் 2009-05-18 அன்றுட‌ன் பேசாநிலைக்கு வந்த துன்பம் தமிழ்த்தேசிய விடுதலைப் பயணாத்தில் தேக்கநிலையை ஏற்படுத்திவிட‌, தமிழினம் நட்டாற்றில் அரசியல் ஏதிலிகளாகத் தவிக்கும் நிலை ஈழத்தமிழரின் வாழ்வியலாகிப் போய்விட்டது. கடந்தகால கசப்பான வரலாற்றின் தொடர்ச்சியாக நிகழ்காலமாகிப் போன மீதி மீட்டலை 2009-05-18 ஆம் நாளின் பின்னரான மணித்துளிகளிலிருந்து செய்யலாம் என்ற உறுதியுடன் “ஈழத் தமிழரின் நிகழ்காலம்” என்ற தலைப்பிட்டு அடுத்த பத்தியைத் தொடருவோமாக.

தம்பியன் தமிழீழம்

31-12-2016

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*