
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அடைய முடியாத அரசியல் இலக்கை தன்னை பாராளுமன்றம் அனுப்பினால் அடைந்து காட்டுவேன் என்பது மிக மோசமான பொய்த்தனமான அரசியல். தமிழருக்கான அரசியல் தீர்விற்கு கூட்டாட்சி (சமஷ்டி) பற்றிப் பேசி சிங்களத்திடம் அவமானப்பட்ட பின்னர், கூட்டாட்சித் தீர்வைச் சிங்களம் தராது என்று தெரிந்த பின்னர்தான் செல்வா “தமிழீழம் தான் தமிழருக்கான தீர்வு” என்ற தீர்மானத்தை வட்டுக்கோட்டையில் பேரறிவிப்புச் செய்தார். ஆனால் இன்று அகில இலங்கை காங்கிரசானது சமஷ்டிதான் தமிழருக்கான இறுதித் தீர்வென்றும் அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தடையாக இருப்பதாகவும் வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்கிறார்கள்.
சட்டத்தரணிகளாலும் அரசியலை கல்வி முறையாகக் கற்றவர்களாலும் நிறைந்து கிடக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணி மிக நாசுக்காக துறைசார் கலைச்சொற்களால் அரசியலைப்பேசித் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நோக்கத்தைத் திசை திருப்பும் அல்லது அதன் புனிதத்தைச் சிதைக்கும் வேலைகளைத் தொலைநோக்கற்ற சில புலம்பெயர் அமைப்புகளின் பொருண்மிய உதவிகளுடன் செய்து கொண்டிருக்கின்றனர்.
தேசிய விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழினத்தின் போராட்டங்களை வார்த்தை ஜாலங்களால் திசைமாற்ற முடியும் என கனவு கண்டுகொண்டிருக்கிறது எதிரித் தரப்பு. சமாதான கால வேலைத்திட்டங்களில் பங்கெடுத்த எரிக்சொல்கையும் முதல் தாங்கள் தான் மாற்றம் என்று சொல்லிக் கொண்டு அரசியல் செய்யும் அகில இலங்கை காங்கிரஸ் கட்சி வரை, வார்த்தை ஜால விடையாட்டுகளால் தமிழீழ விடுதலைப்போராட்டம் பற்றிய எண்ணக் கருத்துக்களை சிதைக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது காலம் கடந்து விளங்கிக் கொண்டிருப்பதாகப் தீவிர அரசியல் ஈடுபாட்டாளர்கள் பலர் சுட்டிக் காட்டியமையையடுத்து இந்த கட்டுரையை விரிவாக எழுதக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது தமிழர்கள் பிரிந்து செல்ல உரித்துடையவர்கள் என்பதற்கான மிக ஆழமான தார்பரியத்துடனும், சொற்களிற் சுருக்க முடியாத ஒப்பற்ற ஈகங்களாலும் கட்டியெழுப்பப்பட்டது. ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் தங்களை ஆகுதியாக்கி, இலட்சக்கணக்கிலான மக்கள் தங்கள் உயிர்களையும் உடைமைகளையும் பறிகொடுத்து குருதியும் சதையுமாக நடந்து கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, தமது பாராளுமன்ற அரசியலுக்காக சொற்களால் திசைமாற்றும் மிகக் கேவலமான அரசியலை பல அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கின்றனர். இந்தத் தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டிற்கு ஒத்து ஊதுவதாய்ப்போல் சில புலம்பெயர் அமைப்புகளும் புதிதாக இனப்பற்றுக் கொண்ட சில புத்திசீவிகளும் இன்னும் சில வெளிநாட்டுப் பேராளர்களும் அறிக்கைகள் மற்றும் செய்திகளை வெளியிட்டுவருகின்றனர்.
2009ம் ஆண்டிலிருந்து இன்றுவரை இந்தத் தரப்புகள் வெளியிட்ட கருத்துகள் மற்றும் உத்தியோகபூர்வ அறிக்கைகளை நிரற்படுத்தி ஆய்வுசெய்வோமானால் தமிழீழ விடுதலைப்போராட்டம் குறித்து குறிப்பிட்ட தரப்புகளின் நிலைப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
அண்மையில் அவுஸ்ரேலியா சென்று அங்குள்ள வானொலி ஊடகம் ஒன்றிற்குக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அளித்த பேட்டியானது அவர்சார்ந்த அரசியல் மற்றும் நோக்கத்தைத் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது. நீண்டநேரமாக இடம் பெற்ற கஜேந்திரகுமாரின் உரையாடலின் சாரம்சமானது “தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆயுதப்போராட்டத்தை உலக நாடுகள் அழிக்கக் காரணம் சீனாவின் இலங்கை மீதான ஈடுபாடு. அதாவது புலிகளுக்கு எதிரான போரிற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவுதல் என்ற பெயரில் சீனாவின் செல்வாக்கு சிறிலங்காவில் அதிகரித்துவந்தது. எனவே தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை அழித்துவிட்டால் சீனாவின் சிறிலங்கா மீதான செல்வாக்குக் குறைந்துவிடும். அதேநேரத்தில் இந்திய மற்றும் மேற்குலகச் செல்வாக்கை இலங்கையில் அதிகரிக்க முடியும். இந்த நோக்கத்திற்காகத் தான் உலகமே இணைந்து புலிகளை அழித்தது. இதனால் 2009 ற்கு பின்னர் சிறிலங்காவில் இந்திய மற்றும் மேற்குலக நாடுகளின் செல்வாக்கும் கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. இந்த நேரத்தில் தமிழர்கள் அரசியற் போராட்டங்களை அதிகரித்தால் பேரம்பேசும் ஆற்றலாக உருவெடுக்கலாம்”
இந்தத் தொனிப்பொருளில்தான் கஜேந்திரகுமாரின் உரையாடல் இருந்தது. மேற்குறிப்பிட்ட கருத்தை மக்களிடத்தில் விதைப்பதற்கு ஏராளமான துறைசார் கலைச்சொற்களைப் பயன்படுத்தி மணிக்கணக்கில் பேசியிருந்தார். அவர் பேசிய கருத்துகளின் மூலம் நாசுக்காக என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
- ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழர் தரப்பு பேரம்பேசும் ஆற்றலாக இருந்ததில்லை.
- இந்திய மற்றும் மேற்குலக நாடுகள் தமிழீழத் தீர்வை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. எனவே “சமஷ்டி” என்ற வார்த்தையை கொண்ட மாற்றுத் தீர்வை நோக்கித்தான் இனித் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
- இந்திய மற்றும் மேற்குலக நலன்கட்காகத் தமிழர்கள் தங்கள் சுயாட்சி உரிமையைக் கைவிட வேண்டும்.
- புலிகளுக்கு உலக அரசியலே தெரிந்திருக்கவில்லை எனக்குத்தான் தெரியும்.
மேலே குறிப்பிட்டுள்ள கருத்தியலை 2009ற்கு பிறகு பலமுறை பல்வேறுபட்ட வார்த்தைஜாலங்கள் மூலம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாராளுமன்ற அரசியல் மூலம் தமிழர்கள் பேரம்பேசும் ஆற்றலாக வளர்ந்து உரிமையை வென்றெடுக்க முடியுமெனின் செல்வா காலத்திலேயே தமிழருக்கான அரசியற்தீர்வு கிடைத்திருக்கும். பல்வேறுபட்ட துறைசார் நிபுணர்களால் மிகக் கவனமாக ஆய்வுகள் மேற்கொண்டு தமிழீழக் கட்டுமானத்தின் மாதிரியை உருவாக்கி நடைமுறைத் தமிழீழத் தனியரசமைத்த புலிகளுக்குப் பேரம்பேசும் அரசியல் தெரிந்திருக்கவில்லை என்ற தொனியில் நாசுக்காகக் கருத்துகளை விதைத்துவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இழி செயலானது வரலாற்றில் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்தபடி தமது தன்னல அரசியலைச் செய்துகொண்டிருக்கும் கருத்த ஆடுகளின் அரசியலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மூலதனமாக்கி அதன் மூலம் தன்னை பாராளுமன்ற அரசியலுக்குள் நுழைக்கத் திட்டம் போடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் “எல்லாப் புலிகளும் இறந்துவிடவில்லை” என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். தமிழீழ கட்டுமானங்களையும் அதன் கட்டமைப்புகளையும் உருவாக்கிய விடுதலைப்புலிகளின் துறைசார் நிபுணர்களில் ஏராளமானவர்கள் பேசாநிலையில் தான் இருக்கிறார்களே தவிர பேச்சிழந்து போகவில்லை.
தமிழத்தேசியக் கூட்டமைப்பை எதிர்த்தலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஊடகங்களில் பழித்தலுமே இன விடுதலைக்கான புரட்சி என்பது போல் தன்னைச் சுற்றியுள்ள சிறார்களை திசைமாற்றிவிட்டிருக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். பாராளுமன்ற அரசியலைச் செய்வதற்காக யார் யாரை வேண்டுமென்றாலும் தூற்றியும் பழித்தும் கொள்ளலாம். ஆனால் எந்தவொரு சூழலிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இளையோர்களிடமிருந்து திசைதிருப்பும் வேலைத்திட்டத்தை எவர் முன்னெடுத்தாலும் அதைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள இயலாது.
இளையோர்களே!
அரசியற் கட்சிகளுக்காக முழக்கம் எழுப்புவதையும் கேலி செய்வதையும் நிறுத்துங்கள். உண்மையில் தமிழீழ விடுதலைமேல் பற்றிருந்தால் ஊடகங்களை எப்படிப் புரிந்து கொள்வது? அரசியல்வாதிகளின் நோக்கம் என்னவென்பது பற்றிச் சிந்தியுங்கள். “அரசியற் போராட்டங்கள் செய்வதன் மூலம் தமிழர்கள் பேரம்பேசும் சக்தியாக வளரலாம்” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்வதன் பொருள் “முப்பது ஆண்டுகால ஆயுதப்போராட்டம் பயனற்றது, புலிகளுக்கு அரசியல் தெரியாது” என்பதே என்பதை விளங்கிக் கொள்வதற்கு வகுப்பெடுக்க முடியாது. இது அரசியற் புரிதலின் மூலம் ஏற்படவேண்டிய ஒன்று.

வெறுமனே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை எதிர்ப்பதும் விடுதலைப்புலிகளின் ஒப்பற்ற ஈகங்களைப் பெருமையாகப் பேசிக் கொள்வது மாத்திரமே தமிழீழ விடுதலைக்காக உழைப்பது என்று உங்களில் பலர் பழக்கப்படுத்தப்படுகிறீர்கள். தங்களைப் புரட்சியாளர்கள் போல் காட்டிக் கொள்பவர்களின் நோக்கங்களையும் புரிந்துகொள்ளக் கூடிய தெளிவுடன் நீங்கள் இருக்க வேண்டும்.
புலிகளின் பொருண்மியக் கட்டமைப்புகளைக் கையகப்படுத்தியவர்கள், புலிகளின் மீது அவதூறுகளைப் பரப்புவதில் மும்மரமாக ஈடுபட்டவர்கள், தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் இருந்து தம்மை அயன்மைப்படுத்தி நின்றவர்கள் எல்லாம் இன்று தங்களை அறிவுடைமையாளர்களாகவும், சான்றோர்களாகவும் இனப்பற்றுக் கொண்டவர்களாகவும் காட்டிக் கொள்கிறார்கள். வார்ததைஜாலங்கள் மூலம் தங்களை பேரறிவாளிகளாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். “அவன் சொன்னா சரியாத்தான் இருக்கும்” என்பது போன்றதான நிழலுருவை உருவாக்கித் தமிழீழ விடுதலைப்போராட்டம் மீதான எதிர்மறைக் கருத்துகளைத் தமிழ் மக்களிடத்தில் திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மீண்டும் ஒரு கருத்தை நினைவிற்கொள்ளுமாறு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன். “பாராளுமன்ற அரசியலைச் செய்வதற்காக யார் யாரை வேண்டுமென்றாலும் தூற்றியும் பழித்தும் கொள்ளலாம். ஆனால் எந்தவொரு சூழலிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இளையோர்களிடமிருந்து திசைதிருப்பும் வேலைத்திட்டத்தை எவர் முன்னெடுத்தாலும் அதைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள இயலாது”
கதிர்
19-08-2017
Be the first to comment