புலம்பெயர்ந்தோரின் செயற்பாடுகளும் தமிழீழ மீட்புக்கான அரசியலும் இடைவெட்டுவதன் நிகழ்தகவு சுழியமா? – மான்விழி

காலனியக் கல்வி பெற்றுத் தமது காலனிய எசமானர்களின் நல்ல பணியாளர்களாகி எசமானர்களின் நாடு வரை சென்று பணியாற்றிப் பொருளீட்டல் என்பது கல்வித்துறையில் பெற்ற உச்ச அடைவெனச் சிந்திக்கும் காலனியடிமை மனநிலையின் தொடர்ச்சியாக புலம்பெயர்ந்தோர், உடலுழைப்பை ஊரிற் செலுத்துவது மான இழுக்கென்று சிந்திக்கும் சிந்தையில் பிராமணத்தன்மை கொண்டவர்கள் சொந்த மண்ணில் உடலுழைப்பைச் செலுத்தாது வெளிநாடு சென்று பொருளீட்டலாம் என முடிவெடுத்துப் புலம்பெயர்ந்தோர், தமிழர்களின் மீதான இனவன்முறைகளின் தொடர்ச்சியால் தமது உயர் நடுத்தரக் குடும்ப வாழ்க்கை இலங்கைத்தீவில் பாதுகாப்பற்றதெனவுணர்ந்து தமது காலனிய எசமானர்களின் நாடுகளிற்குப் புலம்பெயர்ந்தோர், விடுதலைப் போராட்ட எழுச்சியால் அதில் பங்களிக்கத் தமது பிள்ளைகள் சென்றுவிடுவார்களோ என்ற பீதியில் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிப் பணமீட்டும் எந்திரங்களாக்க முடிவெடுத்த பெற்றார் மற்றும் உடன் பிறந்தவர்களின் முடிவுகளால் புலம்பெயர்ந்தோர், போராட்ட காலத்தில் இராணுவ அடக்குமுறைக்குள் இருந்து எதிர்கொண்ட அச்சுறுத்தல்களால் வேறு வழியின்றிப் புலம்பெயர்ந்தோர் (மிகச் சொற்ப அளவிலானோர்), விடுதலை இயக்கங்களிற்கிடையேயும் உள்ளேயும் ஏற்பட்ட அகமுரண்களினால் தொடர்ந்து தமது மண்ணில் வாழ முடியாத இறுக்கத்தின் விளைவாகப் புலம்பெயர்ந்தோர், போராட்டத்தில் பங்களிப்பதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகப் புலம்பெயர்ந்தோர், பெரிய வீடு கட்டி மகிழுந்து வாங்கி உடன்பிறந்த தமக்கை தங்கைகளுக்குக் கோடிக்கணக்கில் சீர்வரிசை செய்து தனது மனைவிக்கு அதிகரித்த எடையில் தாலிக்கொடி மாட்டி கொழும்பில் தொடர்மாடியில் அகவை முதிர்ந்த பெற்றாரை வாழவைத்துப் (ஒரு வித வதை) பார்க்கும் இலக்குகளுடன் பொருளீட்டப் புலம்பெயர்ந்தோர், இனவழிப்புப் போரில் உயிர்தப்பிய பின்பான மீதி வாழ்வை முன்னெடுக்க பாதுகாப்பு மற்றும் பொருளீட்டல் என்ற இரு காரணிகளையும் மனதிலிருத்திய சிந்தையில் கிடைத்த ஒரே தெரிவு புலம்பெயர்வதென முடிவெடுத்ததன் விளைவினால் புலம்பெயர்ந்தோர் மற்றும் ஏன் புலம்பெயர்கின்றோம் எனத் தெரியாமலே புலம்பெயர்ந்தோர் என்று புலம்பெயர்ந்தோரை வகைப் பிரித்தாலும் பொருளியல் காரணங்களிற்காகப் புலம்பெயர்ந்தோரே இதில் மிக மிக அதிகளவினோர் என்பது தான் உண்மை. என்றாவது ஒருநாள் எமது மண்ணிற்குத் திரும்பிச் செல்ல மாட்டோமா என்ற கனவில் எத்தனை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்று அவர்களின் நெஞ்சில் கைவைத்துச் சொல்லச் சொல்லுங்களேன் பார்க்கலாம். தாயகம் திரும்பும் வாழ்வியல் திட்டம் அவர்களில் எத்தனை பேரிடம் இருக்கின்றது எனச் சொல்லச் சொல்லுங்களேன் பார்க்கலாம். இதிலிருந்து பொருளியல் காரணங்களே புலம்பெயர்ந்தோரில் பெரும்பான்மையானோர் புலம்பெயர்ந்ததற்கான காரணங்களில் முதன்மைக் காரணமாகவிருந்தது என உறுதியாகக் கூறலாம்.

விடுதலைப் போராட்டத்தின் தொடக்க‌ காலங்களில் புலம்பெயர்ந்தவர்கள் தமது வதிவிட உரிமையைப் பெறுவதற்கான தமது அரசியற் தஞ்சக் கோரிக்கைகளில் புலிப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள்தான் தாம் புலம்பெயர்ந்த காரணமெனத் தமது இனத்தின் நல்வாழ்விற்காகத் தமது இளமைகளைச் சருகாக்கி ஒப்பற்ற ஈகங்களைச் செய்து வந்த தமிழர்களின் விடுதலை இயக்கத்தைத் தூற்றிக் கோரிக்கைப் படிவங்களில் நிரப்பிக் குடியுரிமை பெறத் தொடங்கினர். எனினும் விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிமிகு காலத்தில் ஈட்டிய வெற்றிகளின் தொடர்ச்சியாகப் போராட்ட அமைப்பில் நம்பிக்கை கொண்டு அதற்குத் தாமாக வந்து நிதியளித்தோர் மிகச்சிலருளர். தாயக மண்ணில் தமது உடன்பிறந்தாரும் மக்களும் உயிர்களை ஈகம் செய்து விடுதலைக்காகப் போராட தாம் இங்கு வந்து வசதியாக வாழ்கின்றோம் என்ற குற்றவுணர்வு பொருளீட்டல் வேட்கைக்கு அடுத்த படியில் நின்று வாட்ட, போராட்டத்திற்குப் பங்களிக்க முன்வந்த குறிப்பிடத்தக்களவானோர் புலம்பெயர்ந்தவர்களில் உளர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஊரில் உறவுகள் வாழ்வதால், நன்கு கட்டமைக்கப்பட்ட விடுதலை அமைப்பின் நிதித் திரட்டல் கட்டமைப்புகளைப் பகைத்துக் கொண்டால் தாம் ஊர் செல்ல நேரில் ஏதேனும் சிக்கல்கள் வரலாம் எனக் கணித்துப் போராட்டத்திற்கான நிதித் திரட்டலுக்கு ஒத்துழைத்தவர்கள் பலர். புலிக்காய்ச்சல் மிகுதியால் உளறத் தொடங்கியதையே தமது அரசியல் மொழியாகத் தொடர்ந்த உளநோயாளர்கள் வெகு சிலர். இவ்வாறாகப் புலம்பெயர்ந்தவர்களிற்கும் போராட்ட அமைப்பிற்கும் மறவழிப் போராட்டத்திற்குமான உறவுநிலைகளைத் தரம் பிரிக்கலாம். எனினும், எமது இனம் இனழிப்பிற்குள்ளாகி வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட இறுதிப் போர்க்காலத்தில் வெளிவந்த செய்திகளால் உளம் நொந்து நெஞ்சு பதற ஆற்றாமையால் எங்கோ ஓரிடத்தில் எல்லோருக்குள்ளும் இருக்கும் இனவுணர்வு தட்டியெழுப்பப்படத் தெருவிற்கு வந்து எம்மின மக்களைக் காப்பாற்ற வேண்டிப் புலம்பெயர்ந்தவர்கள் அழுது வடித்தமையை யாருக்கும் போக்குச் சொல்லிக் கணக்கெடுக்காமல் விட முடியாது. அவர்கள் இனப்படுகொலைச் சிற்பிகளையும், இனப்படுகொலையின் வடிவமைப்பாளர்களையும் இனப்படுகொலைக்கு முதலிட்டவர்களையும் மீட்பாளர்களாகக் கருதி மன்றாடிய அரசியலறிவிலித்தன்மையை மட்டுந்தான் அதில் குறைகூற முடியும்.

விடுதலைப் போராட்ட அமைப்பின் விரிவாக்கமும் அதனது வலையமைப்பும் பெருத்துவிட்டதன் பின்பான பண்புநிலை மாற்றம் என்பது புலம்பெயர்ந்த எமது போராட்ட அமைப்புச் செயற்பாட்டாளர்களிடத்தில் எவ்வாறு இருந்தது என்பதைக் கூர்மையாகக் கணக்கிட்டுச் சில மாற்றங்களைச் செய்யாமல் விட்ட தவறுகளின் தொடர்ச்சியானது ஒரு குறிப்பிட்ட பிரதேச மற்றும் குறுங்குழுக் கும்பல்களிடம் போராட்டச் சொத்துகள் பற்றிய விடயங்கள் போரின் பின்பான காலத்தில் சென்று மாயமாக மறைந்துவிட்ட இன்னலுக்கு வழிகோலிவிட்டது.

மறவழிப் போராட்டம் முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் பேசாநிலைக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து ஒரு மூச்சுக் கூட விடமுடியாத சூழல் தாயக மண்ணில் நிலவுகையில் விடுதலைப் போராட்டம் குறித்த மீதி முன்னெடுப்புகளை எப்படி மேற்கொள்வது என்று திறனாய்ந்து முடிவெடுத்துச் செயலாற்ற வேண்டிய புலம்பெயர் அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் இனவழிப்பை வடிவமைத்து அதற்கு முதலிட்டு முன்னின்று வழிகாட்டித் தமிழர்களை அழித்த ஏகாதிபத்திய மற்றும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியக் கொடுங்கோல் பேயரசுகளிடம் போய் மண்டியிட்டு அவர்களின் தயவில் தமிழீழத்தைப் பெற்றுத் தருவதாகப் புறப்பட்டு ஒட்டுமொத்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் கேவலப்படுத்தியதோடு தாமும் ஏகாதிபத்திய, இந்தியப் பேயரசுகளின் முகவர்களாகித் தமிழர்களை ஏமாற்றலானார்கள்.

தக்க தலைமையை இழந்துவிட்டு நட்டாற்றில் அரசியல் ஏதிலிகளாக முடமாக்கப்பட்டு நின்ற தமிழீழ மக்களின் ஆற்றாத நிலைமையைப் பயன்படுத்தித் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலையைத் தமது வசதிக்கேற்பப் போர்க்குற்றமென்றளவில் சுருக்கி அதைக் கொண்டு சிறிலங்கா அரசை மிரட்டி போரின் பின்பான மீள் கட்டுமானங்களில் தமக்கான முதலீட்டு வாய்ப்பும் ஒப்பந்தங்களும் நல்ல வருவாயில் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு அதாவது சிறிலங்கா மீதான தமது மேலாண்மையை உறுதிப்படுத்திக்கொள்ள தமிழர்கள் பன்னாட்டளவில் அரசியல் பகடைக்காய்களாக்கப்பட, இந்தச் செயற்றிட்டத்தின் முகவர்களாகப் புலம்பெயர் அமைப்புகளில் பெரும்பாலானோர் மாறிவிட்டனர்.

மேற்குலகு தனக்குவப்பான ஆட்சி மாற்றத்தைத் தமிழர்களை வைத்து 2015 இல் ஏற்படுத்தியமைக்குத் தமிழர்களின் தேர்தல் அரசியல் தலைமைகளின் கையறு நிலை மட்டுமே காரணமென்றில்லை. நீண்ட நெடுங்காலமாக ஏகாதிபத்திய எதிர்ப்பை எந்தவொரு செயற்றிட்டத்திலும் உள்வாங்கிப் புரட்சிகரமாகச் செயற்படுவதை மருந்துக்கும் ஏற்காத அதன் காலனியடிமைப் புத்தியும் ஏய்த்துப் பிழைக்கும் வர்க்கப் பண்பும் காரணமென்பதைச் சுட்டாமல் கடக்க முடியாது. இதில் எந்தவொரு அரசியற் கட்சியும் புறநடையல்ல‌ என்பதை இன்னும் தடிப்பாகக் கோடிட்டுக் காட்ட வேண்டும். இப்படியாக ஆட்சி மாற்றத்தின் பின்பு நல்லிணக்கம் என்ற போர்வையில் மேற்குலக, இந்திய நலன் பேணுவதோடு பன்னாட்டளவில் ஏற்பட்ட அவப்பெயரை அகற்றித் தன்னை மீள்கட்டமைத்துக் கொள்ளும் வேலையை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் செய்து வரும் போது அதற்கான கால நீட்டிப்பிற்காக அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்ற ஏமாற்று வித்தையும் ஒருசேர நடைபெற்றது. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் படிம‌ வளர்ச்சிப்போக்கைப் புரிந்தவர்கள் எவருக்கும் தெரிந்தவைதான் தமிழர்களுக்கு ஒரு பொரியைத்தானும் தீர்வாகச் சிங்களம் வழங்காதென்பது. ஆனால் மறப்போராட்டத்தால்தான் விடுதலைக்கான வேலைத்திட்டத்தை நகர்த்த முடியுமென்று உறுதியாக நம்புகிற மேதகு. பிரபாகரன் அவர்களைத் தலைவராக ஏற்று உறுதியேற்றவர்களுக்கு மறப்போராட்டத்தை சிறிலங்காவின் பொருண்மிய இலக்குகளின் மீது தொடுக்கும் பொருண்மியப் போரை முன்னெடுக்கவும், சிங்கள அரச நிருவாகங்களை முடக்கவல்ல மறவழி ஒத்துழையாப் போரை முன்னெடுக்கவும், தமிழர்களின் மீது இனப்படுகொலையை முன்னின்று நடத்திய சிங்கள அரச இயந்திரக் கட்டமைப்பில் வெடிப்புகளை ஏற்படுத்தவல்ல இலக்குகள் மீதான தாக்குதல்களை நடத்துவதற்கான ஒழுங்குபடுத்தல்கள், தாக்குதலிற்குத் தேவையான முன்னேற்பாடுகள், நகர்த்தல்கள் என்பவற்றிற்கான அடிப்படைத் தளக் கட்டமைப்புகளைச் செய்வதற்கும் வாய்ப்பான நல்ல இயங்கு சூழலும் இறுக்க நடைமுறைகளின்றிச் சிறிலங்காவின் எந்தப் புள்ளிக்கும் நகர்வதற்கும் நகர்த்துவதற்குமான நல்லதொரு அரிய வாய்ப்பும் 1980 களுக்குப் பின்பு அமைந்த காலம் இதுவே (2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்பு) என விடயமறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக ஈகங்களைச் செய்ய விரும்பாமல் மனம்மாறிப் போய் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து தமது செயலற்ற தன்மையையும் தாம் ஏற்ற உறுதிமொழிகளையும் மறந்து அல்லது துறந்து சம்பந்தன்+ சுமந்திரனால் தான் தமிழீழம் கிடைக்காது போகப் போகின்றது என்று பழியை அந்த வாக்குப் பொறுக்கும் கூட்டத்திடம் போட்டுவிட்டுத் தாம் தப்பித்துக் கொண்டனர்; தமது கடமைகளில் இருந்து தவறியும் கொண்டனர். கோடான கோடி பணத்திற்குச் சொந்தக்காரரான தனது குடும்பக் கட்சியான அகில இலங்கைத் தமிழ் காங்கிரசினை மீண்டும் நிலைநிறுத்த இந்தச் சூழலைப் பயன்படுத்தலாம் என முடிவெடுத்த கயேந்திரகுமார் கூட்டமைப்பின் தவறுகளை மட்டுமே மூலதனமாகக்கொண்டு அரசியல் செய்வதோடு சிங்கள பௌத்த பேரினவாதம் மீதான எந்தவொரு எதிர்ப்பு அரசியலுக்கும் தலைமை தாங்காமல் சம்பந்தன்+சுமந்திரனைத் திட்டித் தீர்ப்பதை அரசியலாக்கிக் கொண்டு இயங்க‌, அவரின் வழிதொடரும் புலம்பெயர்ந்தோர்கள் பலர் சம்பந்தன் + சுமந்திரனைத் திட்டித்தீர்ப்பதைத் தமது முதன்மை வேலைத்திட்டமாகக் கொள்வதோடு சிங்கள பௌத்த பேரினவாதத்தை மறந்து போனார்கள்.

கயேந்திரகுமாரை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு செல்வதைத் தமது அரசியல் வேலைத் திட்டமாகக் கொண்டு செயற்பட்ட மறை கழன்ற அரசியலை முன்னெடுத்தவர்கள் இந்திய அடிமை விக்கினேசுவரனுக்காகவும் கயேந்திரகுமாருக்காகவும் சமூகவலைத்தளங்களிலும் அலைபேசியிலும் சூடான பரப்புரைகள் செய்வதைத் தாண்டி புழுதியில் குதிரை போலத் தெரியும் கயேந்திரகுமாருக்காகப் (புழுதி அடங்கினால் தெரியும் அவர் கழுதையா? குதிரையா? என) பண உதவிகளும் செய்தார்கள். இவர்களின் உரையாடல்களையும் பதிவுகளையும் எடுத்துப் பார்த்தால் அவற்றுள் 99% ஆனவை சிங்கள பௌத்த பேரினவாதத்தை மறந்த பதிவுகளாக அதாவது சம்பந்தன்+ சுமந்திரனைத் திட்டித் தீர்ப்பதன் மூலம் கயேந்திரகுமாருக்கு வாய்ப்புத் தேடுபவையாகவே இருக்கும். இதற்கு விஞ்சியவாறு தமிழ்த் தேசியத்தின் பெயரால் இழிநிலை அரசியல் செய்ய முடியுமா?

பொய்களையும், புரட்டுகளையும் மறை கழன்ற வேலைகளையும் விடுத்துப் புலம்பெயர்ந்தோர்களாக சிங்கள பௌத்த பேரினவாத அரச பயங்கரவாதத்திற்கு எப்படி நெருக்கடிகளைக் கொடுத்து அதனைப் பன்னாட்டளவில் முடக்கித் தமிழீழம் நோக்கிய அரசியலை முன்னெடுக்கலாம் என்ற தேடலும் விடுதலைக்காகப் போரிடும் இனங்களின் உலக வரலாற்றுப் புரிதலும் போதிய ஆய்வுமுறைகளும் இல்லாமல் இப்படி இழிநிலை அரசியல் செய்வதிலிருந்து அவர்களை மீட்டுப் புலம்பெயர்ந்தவர்களின் அரசியற் செயற்பாடுகளை விளைதிறனுடன் தமிழீழம் நோக்கி நகர்த்த என்ன செய்ய வேண்டும் என்பதை நோக்குவோம்.

பொருண்மியரீதியாக

Boycotts

பன்னாட்டளவில் சிறிலங்கா அரசிற்கு எதிரான புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். தொடக்கத்தில் இது குறித்த செயல் முனைப்புகளில் ஆர்வங்காட்டப்பட்டு இருந்தாலும், சம்பந்தன்+சுமந்திரனைத் திட்டுவதை வேலைத்திட்டமாகக் கொண்ட பின்பு இவற்றில் கவனங் கலைக்கப்பட்டமையை நோக்கலாம்.

இந்தப் பன்னாட்டளவிலான புறக்கணிப்புப் போராட்ட வரலாற்றைப் பார்ப்போமானால்,

தென்னாபிரிக்காவின் ஒடுக்குமுறை வெள்ளை நிறவெறி அரசிற்கெதிரான போராட்டங்களின் போது, நிறவெறி வெள்ளை ஆட்சியின் கல்வி, ஆய்வு, அரசியல், பண்பாடு, பொருண்மியம் என எல்லாத் துறைகளையும் பன்னாட்டளவில் புறக்கணிக்கக் கூறி மாபெரும் போராட்டங்கள் உலகளாவிய பல அமைப்புகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டதால் தென்னாபிரிக்காவின் நிறவெறி அரசு மிகப் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தமை தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கெதிரான விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு முதன்மைக் காரணமாக அமைந்தது.

சுடுகலன்கள் மூலமும் வேறு அரசியற் போராட்டங்கள் மூலமும் இஸ்ரேலினை வெற்றிகொள்ள முடியாத நிலையில் இருந்த பாலத்தீனம் பன்னாட்டளவில் இஸ்ரேலினை நெருக்கடிக்குள்ளாக்க இஸ்ரேலுக்கு எதிரான BDS (Boycott, Divestment & Sanctions) என்ற புறக்கணிப்புப் போராட்ட இயக்கத்தை 2005 ஆம் ஆண்டில் பன்னாட்டளவில் உருவாக்கியது. இஸ்ரேலுக்குப் போகும் பணம் பாலத்தீனியர்களை ஒடுக்குவதற்கும் கொன்று குவிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது என்று எடுத்தியம்பி பன்னாட்டளவில் இஸ்ரேலினைத் தனிமைப்படுத்துவதை நோக்காகக்கொண்டு இஸ்ரேலியப் பொருட்களைப் புறக்கணிப்பதோடு கல்வி, பண்பாடு, விளையாட்டு என எல்லாத் துறைகளிலும் இஸ்ரேலைப் புறக்கணிக்கக் கோரி நற்பு ஆற்றல்களைத் தேடி இந்த அமைப்பு வேண்டுகோள்களை முன்வைக்கின்றது.

பாலத்தீனர்கள் வாழும் பகுதிகள் மீது இஸ்ரேல் எப்போதெல்லாம் நரபலியாட்டத்தைச் செய்கின்றதோ அப்போதெல்லாம் அதை மறைக்க இஸ்ரேலியக் கலைஞர்களும் அறிவியலாளர்களும் எல்லா நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இஸ்ரேல் மீது நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்துதல் நடைபெறுவதால் கல்வி, கலை, விளையாட்டு என எல்லாத் துறைகளிலும் இஸ்ரேலைப் புறக்கணிக்க இந்த அமைப்பு வேண்டுகின்றது.

இப்படிப் பாலத்தீனர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாகப் பல இணையவழி விற்பனைப் பட்டியலில் இருந்து இஸ்ரேலியப் பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன‌.

HP, Barclays மற்றும் Viola போன்ற இஸ்ரேலிய நிறுவனங்களிற்கு எதிராக 18 இலட்சம் பேர் இணையவழி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

SodaStream International Ltd என்ற இஸ்ரேலிய நிறுவனத்தினைப் புறக்கணிக்குமாறு உலகளவில் மேற்கொண்ட பரப்புரையால் அதன் விற்பனை 40% இனால் குறைந்திருக்கின்றது.

(ஆனால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் சிறிலங்காவின் பொருள்கள் இல்லாமல் இருக்கவே மாட்டார்கள் என்ற கணக்கில் அந்தப் பொருள்களைத் தேடித் தேடி நுகர்வதோடு, அவற்றை இறக்குமதி செய்தும் நுகர்ந்து சிறிலங்காவிற்கு நல்ல வருவாயைத் தேடிக் கொடுப்பதோடு இன்னுமொரு படி மேற்சென்று தமது அப்பன் வழியில் உற்பத்தி செய்தது போல அவற்றைத் தமது பொருள்கள் எனப் பெருமைப்படுத்திச் சொல்லி மற்றையவர்களையும் நுகர வைப்பார்கள். சந்திரிக்கா காலத்திலே நிகழ்ந்த தமிழர் மீதான அத்தனை படுகொலைகளையும் உலகம் மறக்கச் செய்து “இனப்படுகொலை சிறிலங்கா” என்பதற்குப் பதிலாக “சிறிலங்கா கிரிக்கெட்” என உலகளவில் சிறிலங்காவைப் பெருமைப்படுத்திக்கொள்வதில் ஈடுபாடு காட்டி சிறிலங்கா கிரிக்கெட் அணியின் வெறித்தனமான இரசிகர்களாக இருந்துகொண்டு விளையாட்டை அரசியலாக்காதீர்கள் என்று அடிப்படை அறிவியலிற்கே புறம்பாக சிறிலங்காவின் விளையாட்டு அரசியலுக்கு உலகளவில் பங்களித்த ஈழத்தமிழர்களின் அரசியல் பேதைமையை நினைத்தால் பாலத்தீனச் சிறுவர்கள் கூட அருவருப்படைவார்கள்)

Divestment

சிறிலங்காவில் முதலீடுகளைச் செய்து சிறிலங்காவின் பொருண்மிய வளர்ச்சிக்கும் அதன் அரச இயந்திரத்தின் வலுவடைதலுக்கும் காரணமாக இருக்கும் பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் அரசுகளை சிறிலங்காவில் முதலிடுவதைத் தவிர்க்குமாறு கோர வேண்டும்.

இப்படிப் பாலத்தீனர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக இஸ்ரேலின் Viola நிறுவனம் உலகளவில் 26 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தங்களை இழந்துள்ளது.

Mekorot என்ற நீர் மேலாண்மை நிறுவனமானது ஆர்ஜன்டினாவில் 170 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தை இழந்தது.

(ஆனால், சிறிலங்காவின் கொழும்பு நகரில் தொடர்மாடிக் குடியிருப்புகளில் அதிகம் முதலிடுபவர்கள் ஈழத் தமிழர்களே. இதற்கு இனவுணர்வும் அரசியல் தெளிவும் இன்மை மட்டுமே காரணமாகாது. அடிப்படைப் பொருளியல் அறிவின்மையும் தான் காரணம். சிறிலங்காவில் முதலிட்டு நல்ல வருவாயை சிங்களத்திற்கு ஈட்டிக்கொடுப்பதில் ஈழத்தமிழர்கள் பின்நிற்பதில்லை)

Sanctions

சிறிலங்கா அரசின் பேராளர்களும், சிறிலங்கா அரசை வலுவூட்டுபவையும், வலுவூட்டுபவர்களும் உலகின் எப்பாகத்திற்குச் செல்லினும் பாரிய அழுத்தங்களைச் சந்திப்பதோடு சிறிலங்கா சார்ந்த எந்த நிறுவனங்களும் உலகவளவில் இயங்குவதை பல அமைப்புகளின் ஆதரவு அழுத்தங்களோடு முடக்கிச் சிறிலங்காவை உலகில் தனிமைப்படுத்த வேண்டும்.

இப்படிப் பாலத்தீனர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக…………….

டென்மார்க்கில் உள்ள பெரிய வங்கிகளில் ஒன்றான Danske Bank ஆனது Hapoalim என்ற இஸ்ரேலிய வங்கியினைத் தடைசெய்துள்ளது.

அயர்லாந்தின் ஆசிரியர் சங்கமானது இஸ்ரேலைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.

2011 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்காவின் பல்கலைக்கழகமானது இஸ்ரேலின் பல்கலைக்கழகத்துடனான உறவை முறித்துக்கொண்டது.

உலகளவில் புகழ்பெற்ற பல திரைநட்சத்திரங்கள் இஸ்ரேலினைப் புறக்கணிக்கக் கோரி மேடைகளில் பேசி வருகின்றார்கள்.

70 இலட்சம் மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிட்டன் தேசிய மாணவர் சங்கம் BDS இயக்கத்தினை ஆதரித்து வருகின்றது.   

தென்னாபிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் BDS இயக்கத்தினை ஆதரிக்கிறது.

ஸ்கொட்லாந்து, துருக்கி, பொலிவியா போன்ற நாடுகள் இந்த BDS இயக்கத்திற்கு முழு ஆதரவையும் நல்கி வருகின்றனர்.

6 நோபல் பரிசு பெற்றவர்கள் அடங்கலான உலகப்புகழ் பெற்ற நூற்றிற்கு மேற்பட்டோர் இஸ்ரேலியப் பொருள்களைப் புறக்கணிக்குமாறு கோருகின்றனர்.

இஸ்ரேலின் நரபலி சியோனிசக் கொள்கையை அடியொற்றியே தான் சிறிலங்கா அரசு தமிழர்களின் நிலங்களை வன்கவர்ந்து தமிழர்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை மேற்கொண்டு வருகிறது என்பதைத் தெளிவுபடுத்தித் தமிழீழ விடுதலை நோக்கி ஒரு அமைப்பாக இதே வேலைத்திட்டத்தை முன்னெடுத்தால், இப்படியான BDS இயக்கத்தின் வேலைத்திட்டங்களிற்கு ஆதரவளித்து உலகளவில் இஸ்ரேலினைத் தனிமைப்படுத்தும் நாடுகள் உலகளவில் சிறிலங்கா அரசினைத் தனிமைப்படுத்துவதற்கும் ஆதரவளிக்க வேண்டி வரும்.

தமிழர்களின் தாயகப் பகுதியில் முதலிடுவதன் மூலம் எமது தமிழ் இளையோர்களிற்கு வேலை வாய்ப்புகளை வழங்கி அவர்கள் பொருளியல் தேவைக்காகப் புலம்பெயர்வது தவிர்க்கப்பட்டு எமது தாயக நிலப்பகுதியில் எமது ஆளணி வளத்தைத் தக்க வைக்க வேண்டும். (சரியான முதலீட்டுத் தெரிவில்லாமல் திருமண மண்டபம் கட்டுவது தான் முதலீடு என இருந்தால் மண்ணில் இருக்கின்ற மிச்சம் மீதிப்பேரும் மண்ணை விட்டுப் பொருளீட்டுவதற்காகப் புலம்பெயரவே நேரும்)

ஏழ்மையில் தமது நிலங்களை எமது மக்கள் விற்க நேருகையில் மாற்றார் அதனை வாங்கினால் எமது தாயக மண்ணில் சத்தஞ் சந்தடி இல்லாமல் இன்னோர் வகை வல்வளைப்பிற்கே இட்டுச் செல்லும்.  எனவே அப்படியான சூழல்களில் இப்படியான தகவல்களை அறிந்து புலம்பெயர்ந்த எம்மவர்களே அதனை வாங்கி மாற்றாரின் நுழைவுகளைத் தடுக்க வேண்டும். பாலத்தீனர் யாராவது நிலங்களை விற்கப்போவதாகத் தகவல் கசிந்தவுடனேயே அதனை ஐரோப்பாவில் வாழும் யூதர்களின் சியோனிச தலைமைக்குத் தெரியப்படுத்தவென ஒரு இரகசிய உளவமைப்பையே சியோனிச யூதர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர். தகவல் வந்த மறுகணமே அதனை வாங்குபவர் வாங்குவதற்கு அணியமாகிவிடுவார். யூதர்கள் பாலத்தீனர்களின் தாயக மண்ணை வன்கவர‌ மேற்கொண்ட இப்படியான நடவடிக்கைகள் மூலம் நாம் எமது மண்ணை மாற்றாரின் வன்கவர்விலிருந்து காப்பாற்றுவதற்குப் பயன்படுத்த வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் இப்படியான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

தமிழீழ மண்ணில் உற்பத்திப் பொருண்மியத்தை அதிகரித்து அந்த உற்பத்திகளுக்குப் புலம்பெயர்ந்து தாம் வாழும் நாடுகளில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இனப்படுகொலைக்குள்ளாகிய பின்பும் தமது இருப்பைத் தமது மண்ணில் தக்க வைக்க முனையும் தமிழர்களின் உற்பத்தியை வாங்கும் முகமான தெளிவூட்டல்களையும் பரப்புரைகளையும் உலகளவில் மாந்த நேயத்தை விரும்பும் சமூகத்தின் மத்தியில் செய்வதன் மூலம் தமிழீழ மண்ணிலிருந்தான உற்பத்திகளுக்கு உலகச் சந்தைகளில் போதிய இடம்பெற்றுத் தர வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

உலகளவில் நட்பாற்றல்களைத் தேடுவது குறித்து,

விடுதலைக்காகப் போராடிய நாடுகள், தமது தேசிய இன விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கின்ற எம்மைப்போன்ற தேசிய இனங்கள், நாலாம் உலக நாடுகள் மற்றும் விடுதலைப் போராட்டத்தின் மூலம் விடுதலை பெற்ற நாடுகள் என்பனவற்றுடன் நட்பாற்றல்களை வளர்த்து உலகளவில் ஒருங்கு வேலைத்திட்டத்தை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

பண்பாட்டு அடிப்படையில்,

உணவு, உடை, உறையுள், கல்வி, பொழுதுபோக்கு என அனைத்திலும் மேற்குலகின் தாராளவாத நுகர்வுமுறைகளை உள்வாங்கி அதற்கு அடிமையுமாகி அப்படியான குறைச் சிந்தையின் விளைவிலான நுகர்வு முறைகளைத் தாம் விடுமுறைக்கு தமிழீழ மண்னிற்குச் செல்லும் போது அங்கும் பரப்பித் தமிழீழ மக்களை மிகை நுகர்வுப் பண்பாட்டிற்குள் தள்ளி மாற்றார்களின் பொருளியலடிமைகளாக தமிழீழ மக்களைத் தொடர்ச்சியாக வைத்திருக்கும் செயற்பாடுகளிலிருந்து புலம்பெயர் தமிழர்கள் விடுபட்டுத் தமிழீழ மண்ணின் உற்பத்திகளுக்குச் சந்தை வழங்குமாறு தமது நுகர்வுப் பண்பாட்டை மாற்ற முன்வருவதோடு தற்சார்புத் தன்னிறைவுப் பொருண்மியம் தமிழீழ மண்ணில் ஏற்படுவதை நோக்கிச் செயற்படவும் முன்வர வேண்டும்.

குழுக் கும்பல் உளநோயிலிருந்து விடுபட்டுச் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தை உலகளவில் பாரிய நெருக்கடிக்குள்ளாக்கி அதனைத் தனிமைப்படுத்தி தமிழீழ விடுதலையை முன்னகர்த்தப் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது ஆற்றல் வளங்களை வீண் விரையம் செய்யாமல் எப்படி வினைத்திறனுடன் பயன்படுத்தலாம் என்றும் எல்லோரும் வேலைப் பகிர்வின் மூலம் ஒவ்வொரு வேலைத்திட்டத்தினைக் கையிலெடுத்து நான் பெரிது நீ பெரிது என்று நில்லாமல் இலக்கு நோக்கித் தெளிவாக எப்படிப் பயணிக்கலாம் எனவும் வழிகாட்டல் வரைபுடன் நாம் இன்னுமொரு பத்தியில் உரையாடுவோம்.

-மான்விழி-

2018-07-16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*