தமிழ்த்தேசியத்தின் திசைவழி சிந்தைகொள்ளும் போக்கிற்கு உரமிட்ட முத்துக்குமாரின் தழல் ஈகம் – -முத்துச்செழியன் –

தழல் ஈகி கு.முத்துக்குமார் அவர்கள் ஈகம் மிகு போராட்டத்திற் தன்னைத் தீக்கிரையாக்கி இன்றுடன் (2026.01.29) 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஈகங்களை மதிப்பிடுவது என்பது ஒரு ஈகத்தைச் சுட்டி இன்னோர் ஈகத்தைக் குறைத்து நிரற்படுத்துவது என்பதல்ல; மாறாக அந்த ஈகமானது மக்களிடத்தில் ஏற்படுத்திய அல்லது ஏற்படுத்தியிருக்க வேண்டிய தாக்கம் என்னவென்பதும் அந்த ஈகம் வேண்டிநின்ற விடுதலைப் பயணத்தின் திசைவழி எந்தளவிற்கு விடுதலை வேண்டி நின்ற மக்கட்கு ஊக்கத்தைக் கொடுத்தது என்பதும் அந்த ஈகமானது எப்படிப்பட்ட தேக்க நிலையிலிருந்து நம்பிக்கைக்கீற்றுடன் வரலாற்றின் எழுச்சிப்போக்கில் பாய்ச்சலை நிகழ்த்தியது என்பதும் ஈகம் தொடர்பான மதிப்பீடாக அமைவது வருந்தலைமுறையினருக்கான வரலாற்றுக் கற்கையாக அமையும். எனவே, ஈகி முத்துக்குமார் அவர்கள் தமிழினவழிப்பிலிருந்து ஈழத்தமிழரைக் காப்பாற்றத் தன்னைத் தீக்கிரையாக்க வேண்டுமென்ற அரசியல் முடிவை எடுக்கத் தூண்டிய அரசியற் சூழமைவை நாம் தெரிந்து தெளிந்துகொண்டால் மட்டுமே முத்துக்குமாரின் ஈகமானது தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்படுத்திய பாய்ச்சலையும் அவர் எம்மிடம் விட்டுச்சென்ற கடமைகளையும் நாம் புரிந்துகொள்ள இயலும்.

தமிழீழத் தனியரசு என்ற தமிழீழதேச அரசமைக்கும் மக்கள்மயப்பட்ட‌ விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழித்தொழிக்க வேண்டுமென்றால் அதை ஒரு இனவழிப்பின் மூலமாக மட்டுமே ஆற்றிட இயலுமென உலக வல்லாண்மையாளர்கள் நன்கறிவர். அத்துடன், ஓயாத அலைகள் 1,2,3 என தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையிலான தமிழர்களின் போரியல் வெற்றிகளை ஆய்வுசெய்த உலக வல்லாண்மையாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை வலிமையை முறியடித்துப் போரியல் வெற்றியீட்டுவதென்பது சிறிலங்காவின் படைத்துறைக்கு இயலாதவொன்று என்பதை உறுதிசெய்திருந்தார்கள். சிறிலங்கா அரசும் உலக வல்லாண்மையாளர்களும் இதனை நன்கறிவர். எனவே, தமிழினவழிப்பை நிகழ்த்துவதென்பது உலக வல்லாண்மையாளர்களினால் முடிவுசெய்யப்பட்டுத் தமிழினவழிப்பிற்கான கூட்டுத்திட்டம் தீட்டப்பட்டது.

தமது முதலீடுகட்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தல், தமது முதலீடுகட்கான தாராளமயத் திறந்த‌ சந்தை வாய்ப்புகளைப் புதிதாக உருவாக்கிக்கொள்ளல், உலகந்தழுவிச் சந்தைப் பொருண்மியம் ஆற்றிடத் தடையாய் இருக்கக் கூடிய புரட்சிகர முனைப்புகளை முற்றிலும் ஒழித்தல் என உலக வல்லாண்மையாளர்களின் சந்தை நலன்கட்காகத் தமிழீழதேச அரசமைக்கும் விடுதலைப் போராட்டத்தை முற்றிலும் அழித்தொழிப்பதென உலக வல்லாண்மையாளர்கள் முடிவுசெய்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது முப்படைகளைக் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட படைவலுவுடன் இருப்பதையும், அந்த இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பொருண்மிய இலக்குகள் மீதான துல்லியமான தாக்குதல்களையும், கரந்துறைப் போரியல் மற்றும் மரபுவழிப் போரியலை ஒருசேர முன்னெடுக்கும் ஆற்றலையும், அதன் உலகளாவிய வலைப்பின்னல்களையும் கருத்திற்கொண்ட உலக வல்லாண்மையாளர்கட்குத் தமிழீழ விடுதலைப் போராட்டமானது இனிமேலும் தொடர்ந்தால் தமிழீழத் தனியரசு அமைவது வரலாற்றின் போக்கில் தவிர்க்க முடியாததாகிவிடும் என்பதோடு தேச ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடும் ஏனைய தேசிய இன விடுதலைப் போராட்டங்கட்கும் அது ஊக்கத்தைக் கொடுத்துத் தமது சந்தைப் பொருண்மிய நலன்கட்குக் கேடாக அமைந்துவிடும் என்பது தெளிவாகப் புரிந்துபோக‌, தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதற்குத் தலைமை தாங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அழிக்க வேண்டுமென்பதில் குறியாய் இருந்தார்கள். வட்டார வல்லாண்மையாளன் என்ற வகையில் இந்தியாவிற்கும் மற்றைய உலக வல்லாண்மையாளர்கட்கு இருக்கும் அதே சந்தை நலன் தொடர்பான நிலைப்பாடு இருப்பினும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதிலும் தமிழினவழிப்பை மேற்கொள்வதிலும் இந்தியா மேற்கொண்ட‌ முனைப்பு என்பது ஒடுக்கும் சிங்கள அரசினது தமிழினவழிப்புச் செயற்பாடுகளையும் விஞ்சியது என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.

சனாதன வைதீகம், சமற்கிருதம், பாரதம் என்ற ஆரிய இனமேலாண்மையை உள்ளீடாகக் கொண்ட இந்து, இந்தி, இந்தியா என்ற அடிப்படையில் தேசிய இனங்களைச் சிறைப்படுத்திக் காலனியத்தின் விளைவாகக் கட்டப்பட்ட தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா என்ற சந்தையானது அதன் இருப்பிலேயே தமிழினப் பகைமை உணர்வு கொண்டது. தமிழர்கட்கென்று இறைமையுள்ள நாடு அமைந்துவிட்டால் தமிழர்களின் மொழியியல், தொல்லியல், மெய்யியல், அறிவியல் வரலாறுகள் உலக அரங்கில் வெளிப்பட்டு நின்று உலகின் நாகரீக வளர்ச்சிக்குத் தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பு உலகமறிந்தவொன்றாகினால், திருடியும், திரிபுசெய்தும், பொய்புனைந்தும், கேலிக்கிடமான முறையில் கட்டமைத்த தமது வரலாறு உலகரங்கில் மறுக்கப்பட்டுத் தமது ஆரிய இனமேலாண்மையும் பிராமணிய நலன்களும் கேடுறும் என ஆரிய பிராமணியமும், இப்படியாகத் தேசிய இனங்களைச் சிறைப்படுத்திக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தியா என்ற சந்தையில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபடும் தமது நலன்கள் பாதிப்புறும் என இந்திய ஆளும்வர்க்கங்களும் அச்சமடைகின்றன. அத்துடன் தெற்காசியாவில் தேசிய இனவிடுதலைப் போராட்டமொன்று தனது இலக்கை அடைந்தால், அது இந்திய நிலத்துண்டம் அடங்கலான தெற்காசியா முழுவதிலும் உள்ள தேசிய இனங்கட்கு விடுதலை நோக்கிப் பயணித்துத் தேச அரசமைக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும் எனவும், அப்படி நேர்ந்தால் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா என்ற சந்தையின் இருப்பானது வரலாற்றின் ஓட்டத்திற் கேள்விக்குறியாகிவிடும் எனவும் இந்தியக் கொள்கைவகுப்புக் கொள்ளையர்கள் அச்சமடைவதால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எப்பாடுபட்டேனும் துடைத்தழிக்க வேண்டுமென இந்தியா கங்கணங்கட்டிச் செயற்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற புரட்சிகர இயக்கத்தினை முற்றாக அழித்தொழிப்பதென்றால் அது போர்க்கள முனைகளில் பெறும் வெற்றிகளால் மட்டுமே நிகழ்த்திவிட இயலாதென்பதை நன்கறிந்த உலக வல்லாண்மையாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்துவிட உலக நாடுகள் பலவற்றின் ஒத்துழைப்போடும் பங்களிப்போடும் தமிழினவழிப்புத் திட்டத்தினைத் தீட்டினார்கள். உலக நாடுகளில் விடுதலைப் புலிகளைத் தடைசெய்வதன் மூலம் புலிகளின் நிதி மற்றும் கொள்வனவு வலையமைப்பை முடக்குதல், புலிகளின் கடல் நடமாட்டங்களைக் கண்காணித்துப் புலிகளின் போர்க் கருவிகள் கொள்வனவை முடக்குதல், விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடிக்கக் கூடிய போர்க் கருவிகளைத் தங்குதடையின்றிச் சிறிலங்காவிற்கு வழங்குவது, சிறிலங்காப் படையினருக்குப் போர்ப் பயிற்சி கொடுப்பது, உளவு பார்த்துக் கொடுப்பது, தமிழினவழிப்பு மூலமே விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாக அழித்தொழிக்க இயலுமென்பதால் தமிழினவழிப்புக் குறித்து உலக மக்கள் அறிந்திடா வண்ணம் செய்தித் தடைகளை ஏற்படுத்துவது, தமிழினவழிப்புப் போரைப் பயங்கரவாதத்திற்கு எதிரான போரெனப் பொய்ப் பரப்புரையை உலகளவில் மேற்கொள்வது, தமிழினவழிப்பைக் கண்டு உலகத்தமிழர்கள் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாழும் ஆறரைக் கோடி தமிழர்கள் கொதித்தெழுந்து போராடாமல் தடுப்பதற்கான மடைமாற்றச் சூழ்ச்சிகளைச் செய்வது என ஒவ்வொன்றையும் கருத்திலெடுத்து உலக நாடுகள் பலவற்றின் ஒத்துழைப்போடும் பங்குபற்றலுடனுமே தமிழினவழிப்புத் திட்டமிடப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டது.

போர்ப்பொருண்மியமீட்டும் நோக்கோடு சீனா, பாகிஸ்தான், உக்ரேன், இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகள் தமிழினவழிப்பில் சிறிலங்காவுடன் துணைநின்றனர். ஆனால், ஒட்டுமொத்த உலகின் ஒத்துழைப்பையும் தமிழினவழிப்பிற்குப் பெற்றுக்கொடுத்து அதனைத் திட்டமிட்டு நடத்தி முடித்ததில் முதன்மைப் பங்காற்றியது மேற்குலக இந்தியக் கூட்டுச் சூழ்ச்சியே என்பதை மறந்துவிடலாகாது. எல்லாவற்றிற்கும் மேற்சென்று போராட்டக் களம் வரை நேர்நின்று தமிழினவழிப்புச் சூழ்ச்சியை அரங்கேற்றியது இந்தியாவே. மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் “இந்தியாவின் போரையே நாம் செய்தோம்” என இந்தியாவில் வைத்தே பலமுறை ஊடகங்களிற் தமது கருத்தாகப் பதிவுசெய்திருக்கின்றனர். எனவே, தமிழினவழிப்பில் முதன்மைப் பங்காற்றியது இந்தியாவே என்பது ஐயந்திரிபறத் துலக்கமானதொன்று. ஆனால், டெல்கியின் கங்காணிகளாகவிருந்து அன்றைய தமிழ்நாட்டின் ஆட்சிப்பீடமானது தமிழினவழிப்பில் ஆற்றிய பங்கெடுப்புக் குறித்து நன்கு அறிந்துகொள்வதென்பது தழல் ஈகி முத்துக்குமாரின் சாவுக்குக் காரணமான அரசியற் சூழமைவையும் தமிழ்நாட்டில் அரங்கேறிய இரண்டகங்களையும் தெரிந்து தெளியத் தேவையானவை.

சிறிலங்காவினால் தமிழீழம் மீது மேற்கொள்ளப்படும் பொருண்மியத் தடைகளும் பொருண்மிய முற்றுகைகளும் போர்க்காலத்தில் மேன்மேலும் தீவிரப்படுத்தப்படுவது வழமை. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான எரிபொருள், களமருத்துவப் பொருள்கள் மற்றும் மக்கட்கு இன்றியமையாத் தேவைகளாகவுள்ள அடிப்படைப் பொருள்கள் ஆகியன தமிழ்நாட்டிலிருந்தே கடல்வழியாகத் தமிழீழத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து இத்தகைய பொருள்களைக் கடல்வழியாக எடுத்துச் சென்று புலிகளிடம் கையளிப்பவர்கள் தமிழகக் கடலோடிகளே. எனவே, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின் தளமாக நின்று இவ்வாறு பொருள்களை எடுத்துச் செல்ல உதவும் கடலோடிகள், படகோட்டிகள், படகு உரிமையாளர்கள் ஆகியோரை கருணாநிதி 2006.05.13 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற நாள் முதல் போதைக்கடத்தல் வழக்குகளைப் போலியாகப் புனைந்து கைதுசெய்து நீண்டகாலம் சிறையில் அடைத்தார். 2006 ஆம் ஆண்டு சூலை மாதம் நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்குகின்ற வேளையில் விடுதலைப் புலிகட்குக் கடல்வழியாகப் பொருள்களை எடுத்துச் சென்ற கடலோடிகள் பலர் பொய் வழக்குகளில் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இது தமிழினவழிப்பிற்கு உலக வல்லாண்மையாளர்கள் தீட்டிய திட்டத்தில் இடம்பெறுகின்றதொன்று. இதனைக் கருணாநிதி அவர்களே முழு ஈடுபாட்டுடன் நடைமுறையில் நிறைவேற்றித் தமிழினவழிப்பில் பங்கெடுத்தார்.

போரில் விழுப்புண்ணடைந்த போராளிகளும் குண்டுத்தாக்குதல்கட்கு இலக்காகிக் காயமடைந்த மக்களும் தமிழ்நாட்டிற்குச் சென்றபோது அவர்களைப் பிடித்துக் கருணாநிதியின் காவல்துறை சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தியது. குருதி வெள்ளத்தில் கிடந்த ஈழத்தமிழர்களின் உயிர்களைக் காக்கத் தமிழ்நாட்டிலிருந்து குருதி அடைக்கப்பட்ட பைகள் ஈழத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, அதைப் பறித்துக் காலில் போட்டுப் பிதுக்கியது கருணாநிதியின் காவல்துறை. ஏதிலிகளாக வந்த ஈழத்தமிழர்களைக் கூடச் சிறப்புமுகாம் எனும் சித்திரவதை முகாமில் அடைத்துக் கொடுமைப்படுத்தியது கருணாநிதி அரசு.

ஆனாலும் தமிழினவழிப்பில் கருணாநிதியின் தமிழக அரசும் பங்கெடுக்கின்றது என்ற ஐயுறவு தமிழர்களில் பெரும்பாலோனோருக்கு ஏற்படாத வண்ணம் கேளிக்கைகளிலும், கூசிழிவான தொலைக்காட்சித் தொடர்களிலும் மக்கள் மூழ்கியிருந்தனர். ஆனாலும், தமிழீழ விடுதலையை நேசிப்பவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பற்றுக்கொண்டவர்கள், தமிழினவுணர்வாளர்கள் போன்றோர் தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த செய்திகளை அறிந்த வண்ணமே இருந்தனர். 2006 ஆம் ஆண்டு தென்தமிழீழத்தில் மாவிலாற்றில் தொடங்கிய நான்காம் கட்ட ஈழப்போரில் சம்பூர், வாகரை, குடும்மியான்மலை (தொப்பிக்கல) என ஒவ்வொரு தமிழர் நிலமும் உலக வல்லாண்மையாளர்களின் முழு ஒத்துழைப்புடனும் ஊட்டத்துடனும் சிறிலங்காப் படையினரால் பறித்தெடுக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு சூலை மாதம் தென்தமிழீழம் முற்றாக வன்கவர்விற்குள்ளானது. இருப்பினும் விடுதலைப் புலிகளின் கடந்தகாலப் போரியல் நுட்பங்களை அறிந்த தமிழ்நாட்டிலுள்ள தமிழீழப் பற்றாளார்கள் தென்தமிழீழம் முற்றாகப் பறிபோனமையை புலிகளின் தந்திரோபாயப் பின்வாங்கல் (Tactical Withdrawal) என்று உறுதியாக நம்பியதால் கலக்கமேதுமடையாமல் புலிகளின் களமுனை வெற்றிகளுக்காகக் காத்திருந்தனர்.

ஆனாலும், 2007 ஆம் ஆண்டின் இறுதியில் மன்னாரினை நோக்கிப் பாரிய சூட்டுவலுவுடன் சிறிலங்காப் படையினர் முன்னேறி வருகின்றனர்; கடலில் போர்க்கருவிகளை ஏற்றிவந்த புலிகளின் கப்பல்கள் மேற்குலக இந்தியக் கூட்டுச் சூழ்ச்சியால் அழிக்கப்படுவது தொடர் நிகழ்வாகின்றது; தொடர்ந்தும் பாரிய பின்னடைவுகள்; என வெளிவந்துகொண்டிருந்த செய்திகள் தமிழீழப் பற்றுக்கொண்ட தமிழ்நாட்டுத் தமிழுணர்வாளர்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தின. 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் போர் உச்சமடையத் தொடங்கியதுடன் சிறிலங்காப் படையினரின் கண்மூடித்தனமான வான்குண்டுத் தாக்குதல்கள் மற்றும் எறிகணை வீச்சுகள் தீவிரமடையத் தொடங்கின. கிளிநொச்சியை நோக்கிச் சிறிலங்காப் படையினர் முன்னேறி வரும்போது கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்டனர். குருதிவெள்ளத்தில் தமிழ்க் குழந்தைகள் உயிரிழந்து கிடக்கும் செய்திகளும் புகைப்படங்களும் வெளிவரத் தொடங்கின. எனவே, புலிகளின் களமுனை வெற்றிகள் குறித்துக் காத்துக் கிடப்பது இனியும் முறையன்று என்ற புரிதலும் தமிழினப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தத் தாம் ஏதேனும் பங்களித்தாக வேண்டுமென்ற உணர்வும் தமிழ்நாட்டிலுள்ள தமிழீழப் பற்றாளர்களிடம் வலுப்பெற்றது.

விளைவாக, ஈழத்தில் போரைத் தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாட்டு அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்து அங்கங்கு அடையாளப் போராட்டங்களும், ஈழத்தில் நடந்தேறுகின்ற தமிழினவழிப்புக் குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களும் தமிழ்நாட்டிலிக்கும் தமிழீழப் பற்றாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தப் போராட்டங்கள் குறித்து ஒன்றிய, மாநில அரசுகளின் பாராமுகமானது தமிழுணர்வாளர்களிடத்தில் வெறுப்பை ஏற்படுத்தியதோடு, ஈழத்தில் தமிழினவழிப்பில் ஒடுக்கும் டெல்கியின் முதன்மைப் பங்கு குறித்தும் அதனுடன் ஒத்தூதி டெல்கியின் கங்காணிகளாகவிருந்து ஈழத்தில் தமிழினவழிப்பிற் பங்கெடுக்கும் கருணாநிதியின் தலைமையிலான‌ தமிழ்நாட்டு அரசின் இரண்டகங்கள் குறித்தும் தமிழ் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டுமென்ற தேவையை உணர்ந்து சில புரட்சிகரமாகச் சிந்தைகொள்ளும் தமிழ்நாட்டு மாணவர்கள் அங்ஙனம் செயலாற்றவும் போராடவும் தலைப்பட்டார்கள்.

தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அத்தகைய போராட்டங்களால் தானும் தனது அரசியலும் அம்பலப்பட்டுப் போய்விடுமென்று அஞ்சிய கருணாநிதி அவர்கள் 2008.10.14 அன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அதில் இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தித் தமிழ்மக்களின் உயிர்களைக் காக்க இந்திய ஒன்றிய அரசானது சிறிலங்கா அரசிற்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டுமென்றும், அப்படிப் போர்நிறுத்தம் ஏற்படாவிட்டால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழர்களின் நாடாளுமன்றப் பேராளர்களாகவிருக்கின்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவிவிலகுவர் என்றும், அதற்குப் பதினான்கு நாள்கள் காலக்கெடு வழங்குவதாகவும் கூறி அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் அறிவிப்புச் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் எழுந்த போராட்டங்களால் ஏற்பட்ட அழுத்தங்கட்கு அடிபணிந்தாவது ஈழத்தில் தமிழினவழிப்பைத் தடுக்கக் கருணாநிதி நடவடிக்கை எடுக்கிறார் என்றே அன்றைய சூழலில் தமிழ்நாட்டு அரசியல் ஆர்வலர்கள் நம்பினர்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட 14 நாள்கள் என்ற காலக்கெடு முடிவதற்கு 2 நாள்கள் முன்பாக, அதாவது 2008.10.26 அன்று சென்னை சென்ற‌ இந்திய ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி அவர்கள் கருணாநிதியுடன் சந்திப்பினை மேற்கொண்டு பேசிய பின்பாக “இந்திய ஒன்றிய அரசு இலங்கையில் போரை நிறுத்த உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்பதால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிவிலக வேண்டியதில்லை” என்று கூறி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் கருணாநிதி முட்டாள்களாக்கினார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மாற்றங்கள் செய்வதென்றால் அது அனைத்துக் கட்சிகளையும் கூட்டியே செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கருணாநிதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நகைப்பிற்கிடமானதாக்கி விட்டு டெல்கியின் கங்காணியாகவும் அடிவருடியாகவும் பிரணாப் முகர்ஜியுடன் கூடிக்குலாவி டெல்கியின் சூழ்ச்சிகளைத் தமிழ்நாட்டில் அரங்கேற்றினார். இதனால் ஏமாற்றமடைந்த கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் என்பன கருணாநிதியை நம்பவே முடியாது என்பதில் தெளிவடைந்ததோடு அடுத்த கட்டமாகப் பாரிய போராட்டங்களைக் கட்டமைப்பதன் மூலமே தமிழினவழிப்பில் பங்கெடுக்கும் இந்தியாவிற்குப் பாரிய அழுத்தத்தைக் கொடுத்துத் தமிழினவழிப்பைத் தடுத்து நிறுத்தலாமென முடிவுசெய்கின்றார்கள். விளைவாக, 2008.11.25 அன்று இந்திய ஒன்றிய அரசின் அலுவலகங்கட்கு முன்பாகப் பாரிய மறியல் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளையோர்களும் பங்கெடுத்து உணர்வெழுச்சியுடன் முழக்கங்களை எழுப்பினர். இத்தகைய பாரிய போராட்டங்களினால் தான் அம்பலப்படப் போவதாக அஞ்சிய கருணாநிதி அனைத்துக் கட்சி முடிவுகளை மட்டுமல்ல; அனைத்துக் கட்சிகளையும் மதிக்காமல் தனது தோழமைக் கட்சிகளை மட்டும் அழைத்துக்கொண்டு டெல்கிக்குக் காவடியெடுத்தார்.

அங்கு சென்ற கருணாநிதி டெல்கியில் ஆட்சியிலிருந்த காங்கிரசுக் கட்சியின் தலைமையுடன் இணைந்து கூட்டுச் சூழ்ச்சித் திட்டங்களைத் தீட்டினார். தமிழ்நாட்டு மக்களை எப்படி ஏமாற்றி அவர்களின் போராட்டங்களை மடைமாற்றுவதென்பதே கருணாநிதியின் சூழ்ச்சித் திட்டத்தின் உள்ளீடு. ஈழத்தில் புலிகள் இயக்கத்தைத் தாம் தடம் தெரியாமல் அழிப்பது உறுதியான ஒன்றென்றும் அப்போது தமிழர்கள் வகைதொகையின்றி உயிரிழக்கத்தான் செய்வார்கள் என்றும் அத்தகைய மாந்தப் பேரழிவுகளைக் கண்டு தமிழ்நாடு கொதித்தெழுந்து டெல்கிக்கு அழுத்தங்கொடாதவாறு தமிழ்நாட்டு மக்களை வைத்து மடைமாற்று அரசியலை முன்னெடுக்கும் படியும் காங்கிரசுக் கட்சியின் தலைமையானது கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டது. எனவே, தமிழினவழிப்பினை விரைவுபடுத்தவும், தமிழினவழிப்பிற்கெதிராக ஏதேனும் பன்னாட்டளவில் அழுத்தங்கள் உருவானால் அதிலிருந்து சிறிலங்காவைக் காப்பாற்றவும், தமிழினவழிப்புப் போரின் பின்னரான மீள்கட்டுமான ஒப்பந்தங்களிலும் ஏனைய வணிக ஒப்பந்தங்களிலும் இந்திய ஆளும் அதிகார வர்க்கங்கட்கான பங்குபிரிப்புப் பற்றியும் பேசுவதற்காகப் பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்லும்போது, முகர்ஜின் அந்தப் பயணத்தைக் கருணாநிதியின் அழுத்தத்தின் விளைவிலான பயணமென்றும் அத்தகைய பயணத்தின் நோக்கமே ஈழத்தில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தித் தமிழர்களின் உயிர்களைக் காப்பதுதானெனக் கருணாநிதி மடைமாற்று அரசியலை முன்னெடுத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டுத் தமிழர்களையும் முட்டாள்களாக்கி ஈழத்தில் தமிழினவழிப்பை உறுதிசெய்வது என்பதுவே காங்கிரசுத் தலைமையுடன் கருணாநிதியும் அவரது தோழமைக் கட்சிகளும் போட்டுக் கொண்ட சூழ்ச்சித் திட்டத்தின் உள்ளீடு.

2009.01.02 அன்று தமிழீழத்தின் பொறுப்பாளுகைத் தலைநகராகிய கிளிநொச்சி முழுமையாகச் சிறிலங்காப் படையினரின் வன்கவர்விற்குள்ளானது. தொடர்ந்து பாரிய சூட்டுவலுவுடனும் உலகின் ஒத்துழைப்புடனும் முன்னேறிய சிறிலங்காப் படையினர் 2009.01.09 அன்று போரியல் முதன்மைவாய்ந்த ஆனையிரவையும் வன்கவர்ந்து சிங்கள இனவெறிக் கூச்சலுடன் 2009.01.10 அன்று இரணைமடுவிலிருந்து வட்டக்கச்சி நோக்கித் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களைக் கண்மூடித்தனமாக மக்கள் குடியிருப்புகள் மீது மேற்கொண்டவாறு தமிழர்கள் குருதி வெள்ளத்திற் கிடக்கத் தமிழர்களின் மண்ணை வன்கவர்ந்தவாறு முன்னேறிக் கொண்டிருந்தனர். விசுவமடு, புளியம்பொக்கனை, புதுக்குடியிருப்புப் பகுதிகளில் சிறிலங்காப் படையினரின் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுகளாலும் மக்கள் குடியிருப்புகளைக் குறிவைத்த வான்குண்டுத் தாக்குதல்களாலும் குழந்தைகள், முதியோர், பெண்கள் எனத் தெருவெங்கும் உடல் உறுப்புகள் துண்டாடப்பட்டு உயிரழந்த பிணக்குவியல்கள் கிடக்கின்றன. இவ்வேளை, ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படும் வரை, தாம் சாகும்வரை பட்டினிப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கூறிப் பட்டினிப் போராட்டத்தை 2009.01.15 அன்று தொடங்கிய தொல்.திருமாவளவன் அவர்கள் தான் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுவதால் போர்நிறுத்தம் ஏற்படப்போவதில்லை என்றும் தான் பட்டினி கிடப்பதைக் கண்டு பொறுக்காமல் தனது கட்சித் தொண்டர்கள் குறிப்பாகப் பெண்கள் தமது உயிரை மாய்த்துவிடப் போகும் மனநிலையில் இருப்பதால் அவர்களின் உயிர்களைக் காப்பாற்றும் பொருட்டும் பட்டினிப் போராட்டத்தைத் தான் கைவிடப்போவதாகப் போராட்டம் தொடங்கி நான்காவது நாளே தனது போராட்டத்தைக் கைவிட்டார். கருணாநிதி அம்பலப்பட்டுப் போவதைத் தடுக்கவே திருமாவளவன் கருணாநிதியின் கடைக்கண்ணசைவில் அங்ஙனம் பட்டினிப் போராட்டத்தை நடத்தினார் என்பதும் மடைமாற்று அரசியலில் திருமாவளவனும் உடந்தையாக இருந்தார் என்பதும் பின்வந்த நாள்களில் அறியக் கிடைத்தது.

தொடர்ந்தும் ஈழத்தில் தமிழர்களின் சாக்குரலும் அவலக்குரலும் முத்துக்குமார் போன்ற அறவுணர்வு மேலிட்ட தமிழர்களின் காதில் கேட்டுக்கொண்டேயிருந்தன‌. போர்த் தவிர்ப்புப் பகுதி (No Fire Zone) என அறிவுப்புச் செய்துவிட்டு அந்தப் பகுதிக்குள் மக்களைச் செல்லுமாறு கூறிய சிறிலங்கா அரசு அந்தப் போர்த் தவிர்ப்புப் பகுதியில் வைத்துத் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றது. போர்த்தவிர்ப்புப் பகுதி என்பதே தமிழர்களைக் கொல்லும் கொலைக்களமென்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்கிறார்கள். 2009.01.22 அன்று வல்லிபுனம் பள்ளிக்கூடத்தில் இயங்கிய முல்லைத்தீவு மருத்துவமனை மீது சிறிலங்காப் படையினர் தாக்குதல் நடத்தி மாந்தப் பேரவலத்தை ஏற்படுத்தினார்கள். விசுவமடு, தேராவில், தேவிபுரம், உடையார்கட்டு எனத் தெருவெங்கும் எறிகணைத் தாக்குதல்களும் வான்குண்டுத் தாக்குதல்களும் கண்மூடித்தனமாக நரபலிச் சிங்கள இன்வெறிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட‌ன. உறுப்புகளை இழந்த, குற்றியிராய்க் கிடந்த‌ மற்றும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த‌ மக்களை ஏற்றிச் செல்லும் ஊர்திகளும் நோயாளி காவு வண்டிகளும் எறிகணைத் தாக்குதல்கட்கு உள்ளாகித் தமிழினப் படுகொலைகள் நடந்தேறிக் கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் பார்த்துப் பொறுத்துக்கொள்ள முடியாமல் 2009.01.23 அன்று லயலா கல்லூரி மாணவர்கள் கொதித்தெழுந்து போராடத் தொடங்கினர். ஈழத்தில் தமிழினப் படுகொலைகளை உடனடியாகத் தடுத்துநிறுத்துமாறு கோரி 2009.01.24 அன்று டெல்லியில் தமிழ் மாணவர்களும் வழக்கறிஞர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். போர்த்தவிர்ப்புப் பகுதியென அறிவிக்கப்பட்ட சுதந்திரபுரம், உடையார்கட்டு, தேராவில் பகுதிகளில் 2009.01.25 அன்று நாள்முழுவதும் சிறிலங்காப் படையினரால் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் உடல் சிதறிப் பலியாகிக் கொண்டிருந்தனர்; ஆயிரக் கணக்கான மக்கள் குருதிவெள்ளத்தில் குற்றுயிராய்க் கிடந்தனர். 2009.01.26 அன்று சிறிலங்காப் படையினர் தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட நரபலிவெறியாட்டத் தாக்குதலில் பரந்தன்சாலையில் வல்லிபுனத்திற்கும் மூங்கிலாறிற்கும் இடையில் ஒரு 3 கிலோமீற்றர் நீளத்திற்குத் தமிழர்கள் பிணங்கள் சிதறிக் கிடக்கும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இப்படியாகத் தமிழினவழிப்புக் குறித்த செய்திகளானவை தமிழ்நாட்டு மற்றும் உலகத் தமிழர்களிடம் சொல்லொணாத் துன்பத்தையும் கொதிப்புணர்வையும் ஏற்படுத்தியிருந்த வேளையில், காங்கிரசுத் தலைமையும் கருணாநிதியும் இழைத்த கூட்டுச் சூழ்ச்சியின் அடிப்படையில், நிலைமைகளை மடைமாற்றித் தமிழ்நாட்டுத் தமிழர்களை முட்டாள்களாக்கி ஈழத்தமிழர்களைத் தமிழினவழிப்புச் செய்யவும் இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தின் நலன்கட்கான பேரம்பேசலுக்காகவும் இந்திய ஒன்றிய அரசின் அன்றைய வெளியலுவல்கள் அமைச்சரான பிரணாப் முகர்ஜி 2009.01.27 அன்று சிறிலங்கா சென்றார். சனவரி 27 ஆம் தேதி என்பது உலக இனப்படுகொலை நாளாகப் பேரறிவுப்புச் செய்யப்பட்டிருக்கையில், அத்தகைய நாளிலேயே பிரணாப் முகர்ஜி சிறிலங்கா சென்றார். உலகில் இனிமேல் இனப்படுகொலைகள் நடந்தேறக் கூடாது என நினைவுகூரும் நாளில் தமிழினவழிப்பை விரைவுபடுத்தும் உதவிகளைச் சிறிலங்கா அரசிற்கு நல்கிடப் பிரணாப் முகர்ஜி சிறிலங்கா சென்றார். அந்தவேளை, சிறிலங்காப் படையினருக்குப் பயிற்சி கொடுத்து, உளவுபார்த்துக் கொடுத்து, போர்க்கருவிகள் மற்றும் கண்காணிப்புக் கருவிகளை வழங்கி இந்திய அரசானது தமிழினவழிப்பில் சிறிலங்கா அரசுடன் உடன்நிற்கிறது என்ற தெளிவு தமிழ்நாட்டு இளையோர்களிடம் ஏற்படத் தொடங்கியதால் பிரணாப் முகர்ஜி கொழும்பு சென்ற அன்று ஈரோடு வழியாகத் தொடருந்துத் தளத்தில் கொண்டுவரப்பட்ட பீரங்கி ஊர்தியை (tank) இடைமறித்து உணர்வெழுச்சிகொண்ட தமிழிளையோர்கள் அணியொன்று தடுத்து நிறுத்தியது. உண்மையில், அந்தக் குறித்த பீரங்கி ஊர்தி சிறிலங்கா செல்லவில்லையென்றாலும் தமிழினவழிப்பில் இந்தியாவின் பங்கு குறித்து அந்த இளைஞரணி தெரிந்துதெளிந்ததன் எதிரொலியாகவே அங்ஙனம் இந்தியப் படையினரின் பீரங்கி ஊர்தி வழிமறிக்கப்பட்டது என்பதை நாம் ஈண்டு நோக்க வேண்டும்.

அதுவரை தமிழினவுணர்வாளர்களும் தமிழீழப் பற்றாளர்களுமே தமிழினவழிப்பை நிறுத்தக் கோரிப் போராடி வந்தனர். தமிழினவழிப்புக் குறித்த செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் போது அது குறித்துப் பாராமுகமாகவிருந்தால் தமது முற்போக்குச் சாயம் வெளுத்துப்போய்விடும் என்ற அச்சத்தில் சில ஆங்கில ஊடகநிறுவனங்களைச் சேர்ந்த ஊடகர்களின் ஒன்றுகூடலுடன் அடையாள அரசியலை முனைப்புறுத்தும் முகமாக லசந்த விக்கிரமதுங்க என்ற சிறிலங்கா அரசால் படுகொலைசெய்யப்பட்ட‌ சிங்கள இனத்தைச் சேர்ந்த ஊடகர் உட்பட கொல்லப்பட்ட ஊடகர் அனைவருக்கும் நீதி வேண்டி சென்னைச் செய்தியாளர்கள் கழகத்தில் 200 ஊடகர்கள் சேர்ந்து 2009.01.28 அன்று அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தவேளையில், வெறும் 250 சதுரகிலோமீற்றர் பரப்பளவிற்குள் 3,00,000 தமிழ்மக்கள் சிங்களப் படையினரின் முற்றுகைக்குள்ளாகி எந்த வேளையிலும் கொல்லப்படலாம் என்ற நிலையில் இருந்தனர். செந்தளிர் சிறுவர் இல்லத்தின் மீது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் சிறுமிகள் உடல் சிதறிப் பலியான செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. வரலாறு காணாத மாந்தப் பேரவலத்தில் தமிழினவழிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் தம்மை ஈகம் செய்தேனும் ஈழத்தில் தமிழினவழிப்பைத் தடுத்து நிறுத்திட வேண்டுமென்று மாணவர்கள் பரவலாகப் போராடிக் கொண்டிருந்தனர். சாகும்வரை பட்டினிப் போராட்டத்தில் ஏழாவது நாளாக ஈடுபட்டுக்கொண்டிருந்த செங்கல்பட்டுச் சட்டக்கல்லூரி மாணவர்கள் வலுவந்தமாகக் கருணாநிதி அரசின் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுப் போராட்டத்தைக் கைவிடும்படி மிரட்டப்பட்டார்கள். சேலம் சட்டக் கல்லூரி மாணவர்களும் சாகும்வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவர்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் பரவலாக மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். கோபிச்செட்டிப் பாளையத்தில் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சென்னையில் இந்தியப் படையினரின் படைத்தலைமையகம் முன்னால் மாணவர்களும் இளையோர்களும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதான் முத்துக்குமார் தழல் ஈகம் செய்வதற்கு முந்தைய நாளான 2009.01.28 அன்று நிலவிய சூழல். பிரணாப் முகர்ஜி சிறிலங்கா அரசுடன் தமிழினவழிப்புச் சூழ்ச்சியிலும் அதன் பின்பான ஒப்பந்தங்களில் இந்திய ஆளும்வர்க்கத்தினருக்கான பங்கு பிரிப்புப் பற்றிய பேச்சுகளிலும் ஈடுபடும்போது, அதுகண்டு பொறுக்க முடியாமல் தமிழ்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் இப்படியாகத்தான் கொதித்தெழுந்தனர்.

போராடும் மாணவர்களையும் இளையோரையும் அரசியற்படுத்த முத்துக்குமார் எழுதிய தனது இறுதிமடலில் முத்துக்குமாரின் இறுதி நாள்களில் நிகழ்ந்தேறிய அரசியல் நிகழ்வுகளின் தாக்கங்கள் வெளிப்பட்டு நிற்கின்றன. “நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவர்” என அறிக்கைவிட்டுக் கருணாநிதி தொடக்கி வைத்த நாடகத்தையும், மக்களை எதிர்கொள்ள அஞ்சிக் கருணாநிதி மருத்துவமனையில் ஓடி ஒளிந்தமையையும் முத்துக்குமாரின் இறுதி மடல் அம்பலப்படுத்தியது. தமிழ்மொழி மேற்கொண்ட தீராப்பற்றினால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்தேறிய ஈகங்களின் அடைவுகளைத் திருடித் தி.மு.க கும்பல் ஆட்சியிலேறிய பின்னர் டெல்கியின் கங்காணிகளாகியமை பற்றி விளக்கியதுடன் அங்ஙனம் மாணவர்களின் ஈகங்களைத் திருடி தி.மு.க கும்பல் மீண்டுமொருமுறை அதிகாரவெறியாட இடமளிக்க வேண்டாம் என்று எச்சரித்ததுடன் ஒரு புதிய அரசியல் செல்நெறியை மாணவர்கள் உருவாக்கித் தமிழ்த்தேசிய உணர்வுடன் பயணித்துத் தமிழர்களின் வாழ்வியலில் விடியலை ஏற்படுத்துமாறு முத்துக்குமார் அந்த இறுதிமடலில் உரிமையுடன் கேட்டுக்கொண்டார். 

தமிழர்கள் தமிழ்த்தேசிய எழுச்சிகொண்டு ஒன்றுபட்டுப் போராடும்போது சாதிய மோதல்களை ஏற்படுத்தி, அதனை மேலும் கூர்மைப்படுத்திப் போராடும் மாணவர்களைக் குழுப்பிரிக்கும் சூழ்ச்சியைக் கருணாநிதியும் அவரது டெல்கித் தலைமையும் உளவுப் பிரிவுகள் மூலம் செய்வார்கள் என முத்துக்குமார் அங்ஙனம் தனது இறுதிமடலில் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த மோதலை மேற்கோள் காட்டிப் போராடும் மாணவர்களின் சிந்தையில் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தினார். இந்தியப் படையினரின் பாலியல் முறைகேடுகளையும் இழிவான செயல்களையும் அம்பலப்படுத்த ஹைட்டியில் அமைதிப்பணிக்குச் சென்ற இந்தியப் படையினரின் பாலியல் முறைகேடுகட்காக இந்தியப் படையினர் அடித்துத் துரத்தப்பட்ட நிகழ்வை மேற்கோள் காட்டி இந்தியாவின் இழிவான பக்கங்களை வெளிப்படுத்துவதன் மூலம் இந்திய மயக்கத்திலும் இந்தியப் பற்றிலும் மண்டிக்கிடந்த இளையோர்களை அந்த மாயையிலிருந்து மீட்டெடுக்கத் தனது இறுதி மடலை முத்துக்குமார் பயன்படுத்தி இருக்கிறார்.

இந்தியாவில் ஒடுக்குண்டிருக்கும் தேசிய இனங்களைத் தமிழ்த்தேசிய இனம் தனது உண்மையான நட்பு ஆற்றல்கள் எனப் புரிந்துகொண்டு அரசியலை முன்னெடுத்து ஒடுக்கும் இந்திய அரசிடம் இருந்து விடுதலை பெற முடியுமென்ற உணர்வைத் தனது மட்டுப்படுத்தப்பட்ட சொற்களினூடாக இளையோர்களிடத்தில் ஏற்படுத்தினார் முத்துக்குமார். அத்துடன் இந்துத்துவ அரம்பர்கள் தமிழ்நாட்டிற் காலூன்றத் துடிக்கும் இடர்நிலை குறித்துத் தனது இறுதிமடலினூடாக முத்துக்குமார் எச்சரித்திருக்கிறார். மனுக்கொடுப்பதன் மூலம் ஒடுக்கும் அதிகாரங்களின் மனமாற்றத்திற்காகக் காத்திருக்கும் ஏமாளிகளாக அழிந்துபோகாமல் போராட்டங்களைத் தீவிரப்படுத்துமாறு தனது இறுதிமடலின் மூலம் போராடும் மாணவர்கட்கு முத்துக்குமார் அறிவுரை கூறியிருக்கிறார்.

தனது தழல் ஈகத்தால் மாபெரும் உணர்வெழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டுத் தமிழினவழிப்பிற்கெதிராகப் போராட்டங்கள் தீவிரமும் முனைப்பும் அடைவதைத் தடுக்கத் தனது உடலை எப்படியாவது உடனே அடக்கம் செய்யக் கருணாநிதியின் அரசு உறுதியாக முயலும் என்பதை நன்கறிந்த முத்துக்குமார் அவர்கள் தனது உடலை மாணவர்கள் கைப்பற்றித் தனது எரிந்த உடலை வைத்து மக்களை எழுச்சிகொள்ளச் செய்யுமாறு வேண்டியிருந்தார். அவரது தழல் ஈகத்தின் நோக்கமே தனது உடலை வைத்து மக்களை விழிப்புறச் செய்து தமிழினவழிப்பிற்கெதிராக வீறெழுச்சியுடன் போராடச் செய்வதே. ஆனால், அத்தகைய எழுச்சி நடந்தேறாமல் தடுக்கப் பாடாற்றியது கருணாநிதி மட்டுமல்ல அன்றைய தமிழ்நாட்டிலிருந்த‌ ஈழ ஆதரவுத் தலைவர்களும் தான் என்பது முத்துக்குமாரின் தழல் ஈகம் நடந்தேறிய அடுத்த சில மணிநேரங்களில் அம்பலப்பட்டது. “சனிப்பிணம் தனிப் போகாது” என்று கூறிய பழ நெடுமாறன் அடுத்தநாளே முத்துக்குமாரின் உடலை அடக்கஞ் செய்யச் சூழ்ச்சி செய்தார். பா.ம.க இராமதாசும் “பிணத்தை வைத்து அரசியல் செய்வது நல்லதல்ல” என்று கூறித் தன்பங்கிற்கு முத்துக்குமாரின் தழல் ஈகத்தை மண்ணாக்க முயன்றார். தொல்.திருமாவளவனோ தனது தொண்டர்களை ஏவிவிட்டு முத்துக்குமாரின் தழல் ஈகத்தை நெஞ்சிற் சுமந்து முத்துக்குமாரின் கனவை நனவாக்கும் வேட்கையில் போராடிய மாணவர்களையும் இளையோரையும் அடித்து விரட்டிக் கருணாநிதிக்கு அடியாள் வேலை பார்க்கும் அரம்பனாக மாறினார். முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் பேரெழுச்சியாக மாறாதிருப்பதற்காக மக்கள் நடமாட்ட‌மற்ற பகுதியால் உடலை எடுத்துச் செல்லுமாறு தனது கட்சி அரம்பர்களை வைத்து இழிசெயல் செய்தார் தொல்.திருமாவளவன். முத்துக்குமாரின் இறுதி நிகழ்வில் திரண்டிருந்த மாணவர்களின் போராட்டக் களத்தைத் தனது உணர்ச்சிப் பேச்சுகளால் கைப்பற்றி முத்துக்குமாரின் தழல் ஈகத்தில் தனது அரசியலைச் செய்ய முயன்று வைகோ அவர்களும் மூக்குடைபட்டார்.  

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கெதிராக‌ எண்ணிலடங்காத சேட்டைகளைச் செய்த தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் நரபலிவெறியாட்டத்தின் மீதான தமிழர்களின் அறச்சீற்றமே ராசீவ்காந்தி என்ற கீழினப் பாசிச வெறியன் மீது பாய்ந்த புலிகளின் தற்கொடைத் தாக்குதல் என்ற புரிதல் தற்போது தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த்தேசியக் கருத்தியலை நெஞ்சிற் சுமக்கும் இளையோர்களிடத்தில் ஏற்பட்டுள்ளமையையும் இவ்விடம் சுட்டுதல் தகும். “ராஜீவ் கொலை என்பது குற்றமல்ல; தமிழினப் பகையாம் இந்தியாவிற்கெதிரான தமிழர்களின் அறச்சீற்றம்” என்ற புரிதல் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் ஏற்பட்டுவிடாமல் வெறும் உணர்ச்சிக் கூப்பாடுகளை மட்டும் வைத்து இந்தியத்திற்குத் திரைமறைவில் ஒத்துழைத்த அன்றைய ஈழ ஆதரவு நாடகர்கள் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் அம்பலப்பட்டுப் போனமையாலே இத்தகைய பார்வை மாற்றம் தமிழ்நாட்டு இளையோர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.

இந்தவேளையில், போர்த்தவிர்ப்புப் பகுதியென்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் செறிவாகக் குழுமியிருக்குமிடங்களில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட‌ கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களில் தமிழர்கள் உடல்சிதறிப் பலியாகிக்கொண்டிருந்தனர். குற்றுயிராய்க் கிடப்பவர்களைக் கூட மருத்துவமனைகட்குக் கொண்டுசேர்க்க முடியாதளவிற்குத் தெருவெங்கும் எறிகணைகளை சிறிலங்காப் படையினர் வீசியதோடு மருத்துவமனைகளைக் குறிவைத்துத் தாக்குதல்களை மேற்கொண்டது. தெருவெங்கும் பிணக்குவியல்கள்; அடக்கம் செய்யக் கூட வழியில்லாது தெருவெங்கும் தமிழர் பிணக்குவியல். இந்தச் செய்திகளைப் பார்ப்பவர் எவராயினும் அவர்களால் உண்ணவோ உறங்கவோ முடியாது.  முத்துக்குமாரின் தழல் ஈகம் நடைபெற்ற நாளிலிருந்து 2009.03.23 வரையான காலப்பகுதியில் 14 தமிழ்நாட்டவர்கள் ஈழத்தில் தமிழினவழிப்பைத் தடுத்துநிறுத்தக் கோரி உயிரீகம் செய்துள்ளனர்.  

தமிழ்நாட்டில் நிலைமை இப்படியிருக்கையில், தேர்தல் அண்மிக்கின்ற அந்தக் காலப்பகுதியில் கருணாநிதி டெல்கியின் கங்காணியாகவிருந்து ஈழத்தில் தமிழினவழிப்பில் பங்கெடுத்தமை குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணமேயிருந்தன. இதனால் தனது ஆட்சி பறிபோய்விடும் என்றும் ஆட்சி பறிபோனால் தனது தரகுமுதலாளிக் குடும்பம் அடித்த கொள்ளைகளுக்குத் தீகார் சிறையில் காலம் முழுவதும் தனது குடும்பத்தோடு களி திண்ண நேருமெனவும் அச்சப்பட்ட கருணாநிதி தமிழர்களை ஏமாளியாக்கித் தன்மீதுள்ள வெறுப்பை இல்லாது செய்ய உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார். ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படும் வரையில் தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறி 2009.04.27 அன்று அண்ணா நினைவிடத்தில் காலை உணவிற்கும் மதிய உணவிற்குமிடையில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து ஒட்டுமொத்த தமிழர்களையும் கருணாநிதி எள்ளிநகையாடினார்.

காலையில் தொடங்கிய கருணாநிதியின் உண்ணாவிரத நாடகமானது 11 மணியளவில் ப.சிதம்பரத்துடன் அலைபேசியில் கருணாநிதி சிரித்துச் சிரித்துப் பேசியதுடன் முடிவிற்கு வந்தது. மதிய உணவிற்கு முன்பே போராட்டத்தைக் கருணாநிதி கைவிட்டுவிட்டு ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றினார். கருணாநிதி இந்த நாடகத்தை ஆடிய அன்று மாலையே ஆயிரக் கணக்கில் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். உண்மையில், அதன் பின்பே முன்னெப்போதும் இல்லாதளவிற்குத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். தேர்தலின் முன்பாகப் போரை முடிப்பதற்காக இந்தியாவின் வழிகாட்டலில் வேதிக்குண்டுகள் வரை ஈழத்தில் அதன் பின்பே தீவிரமாக வீசப்பட்டன. அதைத் தான் மழைவிட்டும் தூவானம் நிற்கவில்லை என்றார் கருணாநிதி. 2009.05.18 அன்று முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிவுக்கு வந்தது. 1,46,679 மக்கள் கொன்றொழிக்கப்பட்ட பின்னர் 3 இலட்சம் மக்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டனர். முள்வேலிக்குள் சிறைப்படுத்தப்பட்ட மக்கள் சிறிலங்காப் படையினரால் காணாமலாக்கப்பட்டனர். முள்வேலிக்குள் அகப்பட்ட பெண்கள் மீது பாலியல் வன்புணர்வுகளும் நடந்தன. ஐ.நா வை முற்றுகையிட்டுப் புலம்பெயர்ந்த தமிழர்கள் இனவழிப்பிற்கு நீதி வேண்டிப் போராடிக் கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாமல் பன்னாட்டு விசாரணை கோரிய முன்னெடுப்புகளைக் கண்துடைப்பிற்கேனும் ஐ.நா மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவியது. ராஜபக்சவின் அரசு மீதான அழுத்தம் அதிகமாகிய வண்ணம் இருந்தது.

இத்தனை இரண்டகங்களைத் தமிழர்கட்கு இழைத்த பின்பும் தனது ஈழத்தமிழர் மீதான வன்மத்தைக் கருணாநிதி கைவிடவில்லை. 83 அகவை முதிர்ந்த நோய்வாய்ப்பட்ட பார்வதி அம்மா (தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார்) தமிழ்நாட்டிற்கு மருத்துவத்திற்காக 2010.04.14 அன்று வந்தபோது அவரைத் தமிழ்நாட்டில் கால் வைக்க விடாமல் வந்த வானூர்தியில் திருப்பி அனுப்பினார். தமிழினவழிப்பிற்கு நீதிகோரி உலகெல்லாம் போராட்டங்கள் வெடித்த போது, தமிழினவழிப்பிற்கு நீதிகோரிய கூட்டங்களும், ஒன்றுகூடல்களும் உலகெங்கும் வீரியமாக நடைபெற்ற போது அவற்றை மடைமாற்றுவதற்காகத் தமிழினவழிப்பில் பங்காளியாகவிருந்த கருணாநிதி செம்மொழி மாநாட்டைப் பெரும் பொருட்செலவுடன் கேளிக்கைக்காக நடத்தினார். தமிழினவழிப்பில் பங்காளியாக இருந்துவிட்டுத் தமிழிற்கு விழா எடுக்கும் நாடகக்காரனான‌ “மானாட மயிலாட” புகழ் கருணாநிதி அவர்கள் வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான், வாலி போன்ற பாணபத்திர ஓணாண்டிகளை வைத்துத் தன் புகழ் (கருணாநிதி புகழ்) பாடுவதை முழு வேலையாகக் கொண்டு அந்தச் செம்மொழி மாநாட்டை 2010 சூன் மாதம் நடத்தினார். தமிழிற்குச் செம்மொழி மாநாடு நடத்திவிட்டு அதில் சிறப்பு விருந்தினர்களாகப் பிரணாப் முகர்ஜி மற்றும் ப.சிதம்பரம் ஆகிய தமிழினவழிப்புக் குற்றவாளிகளை அழைத்து அந்த மாநாட்டில் கூடிய தமிழுணர்வாளர்களைக் கருணாநிதி புண்படுத்தினார். மார்க்சியத் திறனாய்வைத் தனது புலமைமரபாகக் கொண்டிருப்பதாகத் தன்னை அடையாளப்படுத்தும் ஈழத்தைச் சேர்ந்த தமிழறிஞர் சிவத்தம்பி அவர்களைச் செம்மொழி மாநாட்டில் வைத்துச் சிறப்புச் செய்து சிவத்தம்பி வாயால் தன்னைத் “தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதி” என வாயாரப் பலமுறை சொல்ல வைத்து தனது இழிசெயலையும் சூழ்ச்சியையும் கருணாநிதி தொடர்ந்தார்.

தமிழறிஞர் சிவத்தம்பி அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ்த்தேசியம் குறித்தும் தடுமாற்றமான கருத்துகளை முன்னர் தெரிவித்திருந்தாலும் விடுதலைப் புலிகள் வலுவாக இருந்த காலத்தில் தனது ஓய்விற்குப் பின்னர் தனது கருத்துநிலைகளை மாற்றிக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுப் பயணித்திருந்தாலும் அவர் என்றைக்கும் நம்பகத்தன்மையானவராக இருந்ததில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டியிருக்கின்றது. தொல்காப்பியத்தின் காலத்தையும் ஐம்பெருங்காப்பியங்களின் காலத்தையும் குறைத்துக் கருத்திட்ட தவறுகளைப் புலமைச் சூழலில் சிவத்தம்பி இழைத்தமையைக் காட்டிலும் மிகவும் இழிவான தவறாக அவர் செம்மொழி மாநாட்டில் வைத்துத் “தமிழினத் தலைவரே!” எனக் கருணாநிதியை விளித்தமையைக் குறிப்பிடலாம். உலகத் தமிழர்களால் தமிழினத் தலைவரெனப் புரட்சியாளர் பிரபாகரன் அழைக்கப்படுவதைக் கண்டு காழ்ப்புக் கொண்ட சூழ்ச்சிக்காரனும் ஒழுக்கக்கேடனுமான கருணாநிதி அவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கொன்ற தமிழினவழிப்புப் போரில் பங்கெடுத்துவிட்டு, ஒர் ஈழத்தைச் சேர்ந்த தமிழறிஞரான சிவத்தம்பி அவர்களின் வாயாலே வாயாரத் தன்னை “தமிழினத் தலைவரே!” என விளிக்க வைத்தமையை உலகத்தமிழர்கள் ஒரு போதும் வரலாற்றிற் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இதற்குத் துணைபோன சிவத்தம்பியும் தமிழர் மனங்களில் ஆழமான வடுவை ஏற்படுத்தியவரே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தழல் ஈகி முத்துக்குமார் அவர்கள் தழல் ஈகம் செய்த காலத்தைய அரசியற் சூழல் குறித்தும் முத்துக்குமாரின் ஈகம் வேண்டிநின்ற தமிழ்த்தேசிய அரசியலை முன்கொண்டு செல்லவிடாமல் அதை மடைமாற்றம் செய்த ஒடுக்குமுறையாளர்கள் குறித்தும், அடையாள அரசியல் அரம்பர்கள் குறித்தும் எதிர்ப்புரட்சிப் பிற்போக்காளர்கள் குறித்தும் இங்கே ஐயந்திரிபற எடுத்துரைத்துள்ளோம்.

தமிழ்த்தேசியத்தின் திசைவழி சிந்தைகொள்ளும் போக்கிற்கு உரமிட்ட முத்துக்குமாரின் தழல் ஈகத்தினை நெஞ்சிற்தாங்கித் தமிழர்தேசங்கள் தேச அரசமைக்கும் வரலாற்று வழியில் புரட்சிகரமாகப் பயணிப்பதே தழல் ஈகி முத்துக்குமாருக்கு நாம் செய்யும் உண்மையான வீரவணக்கமாகும்.

-முத்துச்செழியன் –

2026.01.29

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*